Showing posts with label SUPER SUBBU (2026)- தெலுங்கு/தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் (. Show all posts
Showing posts with label SUPER SUBBU (2026)- தெலுங்கு/தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் (. Show all posts

Wednesday, August 05, 2026

SUPER SUBBU (2026)- தெலுங்கு/தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் (காமெடி டிராமா) @நெட் பிளிக்ஸ்


முண்டாசுப்பட்டி மாதிரி ஒரு பட்டிக்காட்டில் முந்தானை முடிச்சு கே பாக்யராஜ் மாதிரி ஒரு வாத்தியார் மக்கு ஜனங்களுக்கு பாலியல் கல்வி கற்பிக்க வேண்டிய சூழல் வந்தால் அவர் எப்படி சமாளிப்பார்?என்ற காமெடிக்கதைக்கருவில் தான் இந்த வெப் சீரிஸ் சொல்லப்பட்டிருக்கிறது.


மொத்தம் 7 எபிசோடுகள் ,ஒவ்வொரு எபிசோடும் 45 நிமிடங்கள் முதல் 55  நிமிடங்கள் வரை,ஆக மொத்தம் அஞ்சே கால் மணி நேரம் இருந்தால் ஒரே சிட்டிங்கில் பார்த்து விடலாம்.இது நெட் பிளிக்ஸ் தளத்தில் தமிழ் டப்பிங் கில் கிடைக்கிறது

தெலுங்கில் வெளிவரும் முதல் வெப் சீரிஸ் இது.அமேசான் பிரைம் தளத்தில் வந்த புகழ் பெற்ற பஞ்சாயத் வெப் சீரிஸ்க்கு இணையான காமெடி வெப் சீரிஸ் இது.

ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகன் அதிர்ஷ்டம் இல்லாதவராக இருக்கிறான்.அவன் நினைத்த எதுவும் நடப்பதில்லை லேப் அசிஸெண்ட் ஆக தற்காலிக அரசுப்பணியில் இருக்கிறான்.அவனுக்கு ஒரு காதலி உண்டு.

தனது பணி நிரந்தரம் ஆக வேண்டும் எனில் ஒரு கிராமத்துக்கு பாலியல் கல்வி கற்பிக்கும் ஆசிரியராகப்போக வேண்டும்.

அது எந்த மாதிரி கிராமம்னா இதற்கு முன் பாலியல் கல்வி கற்பிக்க வந்த ஆளை உயிரோடு கொளுத்திய முரட்டு முட்டாள் கூட்டம் இருக்கும் ஊர்.

நாயகன் அந்த ஊருக்குக்கிளம்பும்போதே நாயகி தடுக்கிறாள்.இப்படி நம் இருவருக்கும் இடையே இடை வெளி வந்தால் நம் காதல் கை கூடாது என்கிறாள் 

அதை மீறி நாயகன் கிராமத்துக்குப்போகிறான்.அங்கே சந்திக்கும் மனிதர்கள் ,இரு நாயகிகள் ,பிரச்சனைகளை எப்படி சமாளித்தான் என்பதைக்காமெடியாக சொல்லி இருக்கிறார்கள்.

நாயகனாக சுந்தீப் கிஷன் ஒற்றை மனிதராகத்தன் தோளில் மொத்த  வெப் சீரிசையும் தாங்கி நிற்கிறார்.காமெடி இவருக்கு நன்றாக வருகிறது.

நாயகனின் அப்பாவாக முரளி சர்மா செய்யும் அலப்பறைகள் அருமை.நாயகன் சிறுவனாக இருக்கும்போது அப்பாவிடம் எப்படி எல்லாம் மாட்டுகிறான் என்ற போர்ஷன் கலக்கல் ரகம்.

நாயகியாக மானசா சவுத் ரி கண்ணியமான தோற்றத்தில் வருகிறார். ஆனால் இவருக்கு அதிக வாய்ப்பில்லை.

கிராமத்தில் இன்னொரு நாயகியாக மிதிலா பால்கர் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்து இருக்கிறார்.ஆடிஷன் சீனில் இவரது நடிப்பு  டாப் கிளாஸ்.

கெட்டப் ஸ்ரீனு காமெடியனாக வந்து கலகலப்பூட்டுகிறார்.

பாலியல் தொழிலாளியாக வரும் பெண் ,மர்மமான காதல் பிளாஸ்பேக் கதை கொண்ட பெண் இருவரும் அபார அழகிகள் ,ஆனால் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை.

டெக்னிக்கல் டீம் கச்சிதம்.ஒளிப்பதிவு ,இசை,எடிட்டிங் ,ஆர்ட் டைரக்சன் அனைத்தும் ஓக்கே ரகம்.

கதை ,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் மல்லிக் ராம்.



சபாஷ் டைரக்டர்

1 யாராவது நாயகனிடம் கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல் கேள்வி கேட்டவர்களையே அந்த பதிலை சொல்ல வைக்கும் சாமார்த்தியம் அருமை
2 கே பாக்யராஜ் பாணியில் ஜனரஞ்சகமான ,நாகரீகமான டபுள் மீனிங் காமெடி ரசிக்க வைக்கிறது

3 நேர் கொண்ட பார்வை படத்தில்  வரும் புகழ் பெற்ற வசனமான நோ மீன்ஸ் நோ என்பதன் முக்கியத்துவத்தை கிராமத்துப்பெண்களுக்கு நாயகன் கற்பிக்க வீட்டில் அவரவர் கணவன்மார்கள் அணுகும்போது அவர்கள் நோ சொல்ல அவர்கள் பஞ்சாயத்தைக்கூட்டுவது காமெடிக்கலக்கல்.
4  கிராமத்தில் நெட் ஒர்க் வேலை செய்யாததால் பனைமரத்துக்கு ஏணி போட்டு ஏறி அங்கே இருந்து போன் பேச 50 ரூபா வசூல் நடக்கும் காட்சி அருமை.
,5 சினிமா சான்சுக்காகக்காத்திருக்கும் நாயகி ஆடிஷனில் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்த இயக்குநர் உட்பட மொத்த யூனிட்டும் பிரமிப்படையும் காட்சி. செம.
6 உயரக்குறைவான ஊர் நாட்டாமை யாரிடம் பேசுவதாக இருந்தாலும் அடியாள் ஒரு சேர் போட அதன்மேல் ஏறிப்பேசுவது வெடிச்சிரிப்பு.
7 நாயகனின் அப்பா ஒரு மேடைப்பேச்சில் அவர் பாட்டுக்கு என்னென்னமோ பேச அது காண்டம் பாக்கெட்டுக்கான பிரமோஷன் என்பது தெரிய வரும்போது தான் பேசியதை நினைத்துப்பார்த்து ,புது அர்த்தம் வருவதைக்கண்டு திகைப்பது கலக்கல் காமெடி டிராக்.


லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 டிவி யில் கிளாமரான டூயட் சாங்க் ஓடிக்கொண்டிருக்க நாயகனின் அப்பா டி வி யை ஆப் பண்ண ரிமோட்டைத்தேட ,மொத்தக்குடும்பமும் ரிமோட்டைத்தேடி ஓடுவது என்ன லாஜிக்?ரிமோட் இல்லாவிட்டால் டிவி யை ஆப் பண்ணவே முடியாதா?

2 நாயகி ஐ டி யில் பணி புரிகிறார்.நாயகன் கிராமத்தில் பணி புரிகிறார்.இருவரும் என்ன டைமில் போனில் பேசலாம் என்பதை முதலிலேயே பேசி சைத்துக்கொண்டால் பிரச்சனை ஓவர்.இவர் பேசுன்போது அவர் பிசி என்பதாகவும்,அவர் பேச முயலும்போது நெட் ஒர்க் கிடைக்கவில்லை என்பதாகவும் சமாளிப்பு எதற்கு?

3 போனில் பேச முடியாததால் இருவருக்கும் பிரேக்கப் வருவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.வாட்சப்பில் வாய்ஸ் மெசேஜ்  மூலம் அவரவர் நேரம் கிடைக்கும்போது பரஸ்பரம் அனுப்பிக்கொள்ளலாமே?



ரசித்த வசனங்கள்

1  க்ரோசின் மாத்திரை எதுக்குக்கொண்டு வந்திருக்கே?

நீங்கதானே கெரோசின் (ஆயில்) கேட்டீங்க?

2  டேய் நிறுத்துங்கடா


இவங்க எல்லாரும் உன் வாரிசுகளா?

ஆம்
அப்போ நிறுத்த வேண்டியது அவங்க இல்லை,நீ தான்.


3 என்ன வேணும் ?

லீவ் வேணும்.
4 காது வலிக்கு மருந்து போட்டு காதே கேட்காம போச்சாம்

5 Mood வந்த குதிரை முட்டி முட்டி சுவத்தை ஓட்டை போட்டுச்சாம்

6 வாழ்வதற்காக செய்யும் வேலையில் தப்புக்கண்டு பிடிச்சா எப்படி?

7 நோ லீவ். ப்ளீஸ் லீவ் ( தயவு செஞ்சு போயிடு)

ஓ,தாங்க்யூ சார்.லீவ் தந்ததுக்கு.

8 ஆடிஷன் வரனுமா? ரீல்ஸ் ஓக்கே இல்லையா?
நடிக்கத்தெரியாட்டிக்கூடப்பரவாயில்லை.ரீல்ஸ் போடத்தெரிஞ்சாப்போதும்.


அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்.  18+ ( காட்சி ரீதியாக ஏ இல்லை.வசனங்களில் 18+ உண்டு)



சி பி எஸ் பைனல் கமெண்ட் -  கே பாக்யராஜ் பாணி திரைக்கதையை ரசிப்பவர்களுக்கு,காமெடி மெலோ டிராமா பார்ப்பவர்களுக்குப்பிடிக்கும்.ரேட்டிங் 3/5