Saturday, May 16, 2026

சட்டென்று மாறுது வானிலை (2026)-தமிழ்- சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் க்ரைம் திரில்லர்)

 



விஜய் நடித்த சர்கார்,ரஜினி நடித்த தர்பார் ஆகிய படங்களில்

ஏ ஆர் முருகதாசிடம் உதவி இயக்குநர் ஆகப்பணி புரிந்த  பாபு விஜய் இயக்கும் முதல் படம் இது.                 


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் அம்மா, அப்பா இல்லாத அனாதை.தன் நண்பர்களுடன் தான் வசித்து வருகிறார்.ஐ டி பீல்டில் பணி புரிபவர்.

நாயகி ஆளும் கட்சி மந்திரியின் மகள்.நாயகியின் அப்பா தன் மகளை தன் கட்சியில் உயர் பதவியில் இருப்பவருக்கு இரண்டாம் தாரமாகத்திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் இருக்கிறார்.

நாயகன் தமிழ் சினிமா வழக்கப்படி நாயகியைக்கண்டதும் காதலித்து மூன்றே சந்திப்புகளில் நாயகியின் மனம் கவர்ந்து அவரையே திருமணமும் செய்து கொள்கிறார்.

வில்லன் மிகப்பெரிய ரிசார்ட்ஸ் ,ஹோட்டல்ஸ் எல்லாம் நடத்தி வருபவர்.பெரும்புள்ளி.அங்கே தங்க வரும் ஹனிமூன் ஜோடிகளின் அந்தரங்கத்தை வீடியோ எடுத்து அதை சில டார்க் வெப்சைட்களுக்கு விற்று அதன் மூலம் வருமானம் பார்ப்பவர்.

வில்லனின் பிடியில் நாயகன் ,நாயகி இருவரும் மாட்டிக்கொள்ள அதில் இருந்து எப்படி விடுபடுகிறார்கள்?உலகத்துக்கு வில்லனை எப்படி அடையாளம் காட்டுகிறார்கள் என்பது தான் கதை.


நாயகன் ஆக ஜெய்.அமைதியான நடிப்பு.ஆனால் இவர் முழுக்க முழுக்க நடிகர் விஜயின் பாணியில் நடிப்பது ஏனோ?இவருடைய பாணியிலேயே நடித்திருக்கலாம்.ஒரு சீன் ,ரெண்டு சீன் என்றால் பரவாயில்லை.ஒவ்வொரு சீனிலுமா?


மற்றபடி காதல் காட்சிகளிலும் ,செண்ட்டிமெண்ட் சீன்களிலும் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் .

நாயகி ஆக மீனாட்சி கோவிந்த ராஜன் கிளாமரை நம்பிய அளவு நடிப்பை நம்பவில்லை.இந்தக்கதைக்குத்தேவைக்கு மேல் கிளாமர் காட்டி இருக்கிறார்.நாயகனுடன் ஆன கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

அப்பா மீதான கோபம், முன்னாள் காதலன் மீது வெறுப்பு,நாயகன் மீது அன்பு என கலவையான உணர்வுகளை இன்னமும் நன்கு வெளிப்படுத்தி இருக்கலாம்.

யோகிபாபு வில்லத்தனம் ,காமெடியன் ,கேரக்டர் ஆர்டிஸ்ட் என மூன்று விதமான நடிப்பை வழங்கி இருக்கிறார். அவர் செய்யும் டபுள் மீனிங் காமெடி எடுபடவில்லை.கவுண்டமணி பாணியில் ஆதித்யா கதிரை நடிகர் செந்தில் ஆக பாவித்து அடிக்கும் சீன்கள் எரிச்சல்.சொந்தமாக யோசித்துக்காமெடி டிராக் அமைக்காமல் இப்படி கவுண்டமணி செந்தில் காமெடி டிராக்கைக்காப்பி அடிப்பது ஏனோ?


வில்லன் ஆக கருடா ராம் கச்சிதம்.சத்யன் ,ஸ்ரீமன் ,சரவண சுப்பையா  போன்றோரும் நடிப்பில் குறை வைக்க வில்லை.


ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம் நாதன் ஒரு ரொமாண்டிக் மூவியை எப்படிக்கலர்புல்லாகத்தரவேண்டும் என்ற வித்தை  அறிந்திருக்கிறார்.நாயகிக்கான க்ளோசப் ஷாட்கள் கவிதை.


இசை கிரிஷ் கே கோபால கிருஷ்ணன்.எல்லாப்பாடல்களும் கேட்கும்படி இருக்கிறது.டைட்டில் வரிப்பாட்டு செம ஹிட் ஆகும்.பின்னணி இசை கச்சிதம்.

டார்லிங்க் ரிச்சர்ட்சன் நின் எடிட்டிங்கில் பின் பாதி திரைக்கதை தொய்வு.

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் பாபு விஜய்.


இவர் ஒரு விஜய் ரசிகர் போல.படம் முழுக்க விஜய் ரெப்ரன்ஸ் தான்.

சபாஷ்  டைரக்டர்


1 தங்கள் பாலியல் வீடியோ வெளியானதால் அதிர்ந்த ஒரு ஜோடி தற்கொலை செய்வதாகக்காட்டி பிரச்சனையின் வீரியத்தைப்பதிவு செய்த விதம்

2 பல ஹோட்டல்கள் வைத்திருக்கும் வில்லன் 50% ஆபர் என சொல்லி இளம் ஜோடிகளை வர வைத்து வீடியோ எடுத்து அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிப்பது ஆச்சரியமான புதுத்தகவல்

3 ரசிக்க வைக்கும் விதத்தில் படத்தில் பல இடங்களில் வசனம் கவனம் பெறுகிறது.

  ரசித்த  வசனங்கள் 


1 நாம் மனசார ஒரு விஷயத்தை விரும்பினால், நாம் கேட்கும் விஷயம் நியாயமாய் இருந்தால் அந்த பிரபஞசமே நாம் கேட்டதை நம்ம கிட்டே கொண்டு வந்து சேர்க்கும்

2 நாமெல்லாம் பி என் டபிள்யூ காரைப்பார்க்க ஆசைபடலாம்,ஆனா அதில் ஏறி உட்கார்ந்து ஓட்டனும்னு ஆசைப்படக்கூடாது.

3 ப்ரோ காபி ?

ப்ரோ காபி நான் குடிக்க மாட்டேன்,ப்ரூ காபி தான் குடிப்பேன்.

4 மேரேஜ் பண்றது நல்ல விஷயம் தான் ,அதைக்கரெக்டா மேனேஜ் பண்ணனும் ,இல்லைன்னா லைபே டேமேஜ் ஆகிடும்



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 இது ரொமாண்டிக் மூவியா?,சைக்கோ கில்லர் மூவியா?சஸ்பென்ஸ் திரில்லர் மூவியா?என இயக்குநரே குழம்பி இருக்கிறார்.நம்மையும் குழப்பி இருக்கிறார்.

2 முதல் பாதி தெளிவான திரைக்கதை அமைந்த அளவுக்கு பின் பாதி திரைக்கதை வேகம் அமையவில்லை.

3 நாயகியைத்திருமணம் செய்ய முயற்சிக்கும் அரசியல்வாதி கேரக்டர் பின் பாதி திரைக்கதையில் காணாமல் போனது ஏனோ? 

4 நாயகனின் பிளாஸ்பேக் சம்பவம்,அனாதை இல்லப்பராமரிப்பாளரின் கதை எல்லாமே படத்தின் மெயின் கதைக்கு சம்பந்தமும் இல்லை.தேவையும் இல்லை.

5 நாயகன் சிறு வயதில் மனநலம் சம்பந்தப்பட்ட சிகிச்சை மேற்கொண்டவன் என்பதால் வேலையை இழப்பது நம்ப முடியவில்லை.

6 நாயகியின் முன்னாள் காதலன் நாயகியின் சொத்துக்காக அவளை விடாமல் துரத்துகிறான்  ,ஆனால் விவாகரத்துப்பத்திரத்தில் கையெழுத்துப்போட நாயகனுக்குப்பெரிய தொகை தரத்தயாராக இருக்கிறான்.இது எப்படி?நாயகியின் லோன் விஷயங்களை யும் க்ளியர் செய்கிறான்.லாஜிக்கே இல்லை.

7 அப்பாவுக்கும் ,மகளுக்கும் ஆகாது எனில் மகளுக்கே சொத்து கிடைக்காது.ஆனால் நாயகியின் சொத்தை அபகரிக்க ஒருவன் திட்டம் போடுவது அபத்தம்

8 காமெடியன் யோகிபாபு நாயகனுக்கு உதவுகிறார்.துரோகம் செய்கிறார்,ஏமாற்றுகிறார்,ஆனால் நாயகனிடன்  நோ ரீ ஆக்சன்.


9 ஒரு அமைச்சரால் தன் பதவி அதிகாரத்தைப்பயன்படுத்திக்காணாமல் போன மகளைக்கண்டு பிடிக்க முடியாதா? 

10 யோகிபாபு திருமணம் ஆன தன் ஆபீஸ் கொலீக்கைக்கலாய்ப்பதாய் வரும் காமெடி டிராக் எல்லாம் 1980 களிலேயே வந்து விட்டது.

11 திரைக்கதையில் ஏகப்பட்ட ஜம்ப்.கதை மாறி மாறி கிளைக்கதைகளில் பயணிப்பது அயர்ச்சி

12 பின் பாதிப்படத்தில் ரெடி டேக் ஆக்சன் என்று சொன்னது போல் பல ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்ஸ் செயற்கையான ,நாடகத்தனமான நடிப்பை வழங்கி உள்ளனர்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். 18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜெய் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம்.சராசரி தரத்துக்கும் குறைவான படம்.ரேட்டிங்க். 2 /5