Thursday, May 03, 2012

எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்தநாள் சிறப்பு பதிவு ( ஒரு சிறுகதை, சுஜாதா ஃபோட்டோ ஆல்பம்)





எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்தநாள் இன்று... இதையொட்டிய ஒரு நினைவு புகைப்படத் தொகுப்பு+ எனக்குப்பிடித்த ஒரு சிறுகதை


அழகியலையும்  அறிவியலையும் குழைத்த பேனாக்காரரின் ஆல்பத்தில் இருந்து சில சுவாரஸ்ய தருணங்களைப் பகிர்ந்து கொள்கிறார் திருமதி சுஜாதா ரங்கராஜன்...



ஒரு லட்சம் புத்தகங்கள் - சுஜாதா  ( சிறுகதை)

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்! – மகாகவி


WELCOME TO DELEGATES OF BHARATHI INTERNATIONAL


நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் துணியில் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வாயிலில் ஆடின. தலைப்பாகைக்காரரின் படம் கீழே துடித்துக்கொண்டு இருந்தது. அருகே பல வண்ணக் கொடிகள் சஞ்சலித்துக்கொண்டு இருந்தன. டாக்டர் நல்லுசாமி கண்ணாடிக் கதவைத் திறப்பதற்கு முன் சேவகன் திறந்து புன்னகைத்தான்.

 உள்ளே குளிர்பதனம் செய்யப்பட்ட அரங்கில் கம்பளத்தில் தமிழ் அறிஞர்கள் நிறைந்து இருந்தார்கள். புதுக் கவிஞர் கேக் கடித்துக்கொண்டு இருந்தார். சாகித்திய அகாதமி சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு இருந்தார். பரிபாடல் சோபாவில் உட்கார்ந்துகொண்டு தொடை மேல் காகிதம் வைத்துக் கடிதம் எழுதிக்கொண்டு இருந்தார். உரையாடலில் தமிழ் உலவியது.


” ‘தமிழ்நாட்டிலே சாஸ்திரங்கள் இல்லை. உண்மையான சாஸ்திரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்துவிட்டு, தமிழ்நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்!’ – இதைச் சொன்னது யாரு, சொல்லுங்க பார்க்கலாம்?”


“பேரறிஞர் அண்ணாங்களா?”


“இல்லைங்க. பார்ப்பனரான சுப்பிரமணிய பாரதி. ‘காற்று’னு வசன கவிதை படிச்சுப் பாருங்க.”


“அவரு எல்லாவிதத்திலும் புரட்சியாளருங்க. ஆயிரத்துத் தொளாயிரத்துப் பத்து இருபதுகளில் ஒரு பார்ப்பனர் இந்த மாதிரி சொல்றதுக்கு எத்தனை தைரியம் வேணும்!”


டாக்டர் நல்லுசாமி அவர்களை அணுக “வாங்க, வாங்க, வாழ்த்துக்கள்!”


“எதுக்கு?” என்றார் டாக்டர்.

“அ! தெரியாத மாதிரி கேக்கறீங்க.”


“உண்மையிலேயே தெரியாதுங்க.” தெரியும்.


“பாரதி பல்கலைக்கழகத்துக்கு உங்களைத்தான் துணைவேந்தராப் போடப்போறாங்களாம்.”


“ஓ… அதுவா? எத்தனையோ பேர்களில் என் பேரும் இருக்குது.”


“இல்ல. நீங்கதான்னு சொல்றாங்க. அமைச்சர் உங்களைக் கவனிக்கத்தான் இன்னிக்கு உங்க கூட்டத்துக்கே வராருன்னு சொல்றாங்க.”


“சேச்சே! அமைச்சருக்குப் பாரதி மேல அப்படி ஒரு ஈடுபாடுங்க.”


“உங்களைவிட்டா பொருத்தமா வேற யாருங்க?”


“எதோ பாக்கலாம். அதெல்லாம் அவ்வளவு சுலபம் இல்லைங்க. அரசியல் வேற கலக்குது…” டாக்டர் நல்லுசாமி அவர்களை விட்டு விலக,


“வள்ளுவர் சொல்லியிருக்காரு…

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’னு.


இப்ப யாருங்க பாப்பான்? யாரும் கிடையாதுங்க. அந்த அர்த்தத்தில்தான் பாரதி சொல்லி இருக்காரு.”


ரிசப்ஷனில் அவர் தன் அறைச் சாவியை வாங்கிக்கொள்ளும்போது அந்தப் பெண், “சார் யூ ஹவ் எ மெசேஜ்” என்று புறாக் கூட்டில் இருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொடுத்தாள்.


‘செல்வரத்தினம் மூன்று முறை உங்களுக்காக போன் செய்தார்’. நல்லுசாமிக்குச் சற்றுக் குழப்பமாக இருந்தது. யார் இந்த செல்வரத்தினம்? புரியவில்லை. “தேங்க்ஸ்!” என்று அவளைப் பார்த்தபோது “யூ ஆர் வெல்கம்” என்று புன்னகைத்தபோது அவள் உடுத்தியிருந்த சன்ன ஸாரி டாக்டர் அவர்களைப் படுத்தியது. தன் வாழ்நாளிலேயே முதன்முதலாக மனைவியை (டாக்டர் மணிமேகலை) விட்டு வந்திருக்கிறார். இந்தப் புன்னகையில் நிச்சயம் வரவேற்பு இருந்தது!


‘கூடிப் பிரியாமலே – ஓரிராவெல்லாம்
கொஞ்சிக் குலவியங்கே
ஆடி விளையாடியே – உன்றன் மேனியை
ஆயிரங்கோடி முறை நாடித் தழுவி…’


“டாக்டர், வணக்கம்!”




“ஓ, பெருமாள்! வாங்க, எங்க இருக்கீங்க இப்ப?”


“உத்கல்ல! புதுசா டமில் செக்ஷன் ஆரம்பிச்சு இருக்காங்க…”


“உத்கல் எங்க இருக்குது?”

பக்கத்தில் பச்சைக் கண்களுடன் ஒரு பெண்பிள்ளை இவர்களைப் பார்த்துச் சிரித்து ஹலோ என்று சொல்ல, டாக்டர் பெருமாள் அறிமுகப்படுத்திவைத்தார்.


“இது வந்து கத்தரினா. ரஷ்யாவுல இருந்து பாரதி ஆராய்ச்சி பண்ண வந்திருக்காங்க. திஸ் இஸ் டாக்டர் நல்லுசாமி!”


“ஆ, ஐஸ்ஸீ!” என்று பெண்மணி அவர் கையைப் பற்றிக் குலுக்கினாள். சற்று வலித்தது. டிராக்டர் ஓட்டும் பெண்பிள்ளைபோல் ஏராளமாக இருந்தாள். வல்லி இடையில்லை, ஓங்கி முன்னிற்கும் மார்பையும் சரியாக மூடாமல் ததும்பினாள்.


“யூர் ரீடிங் பேப்பர், ஆர்ன்ட் யூ?”


“நோ… ஐம் பிரிஸைடிங்! மத்தியானம்… ஆஃப்டர் நூன். யூ நோ டாமில்?”


“யெஸ்! கான்ட் ஸ்பீக்!”


“இந்தம்மா பாரதியை வறுமைல ஏன் வாட விட்டாங்க தமிழங்கன்னு கேக்குது!”


“அவர் காலத்துத் தமிழங்க அவர் பெருமையை உணரலை…”


“டாக்டர்! உங்களுக்குத் துணைவேந்தர் ஆயிருச்சாமே?”


“சேச்சே! இன்னும் எதும் தீர்மானிக்கலைப்பா.”


“ஆயிட்டுதுன்னுதான் சொல்றாங்க. உங்களைத்தான் நம்பியிருக்கேன். என்னை உத்கல்ல இருந்து எப்படியாவது ரீடராக் கொண்டு வந்துருங்க. சப்பாத்திச் சாப்பாடு. சூடு அதிகமா… என்னுடைய பைல்ஸுக்கு ஒப்புக்கலை!”


“பாக்கலாங்க, முதல்ல ஆகட்டும்.” செல்வரத்தினம்…


 எங்கயோ கேட்ட மாதிரி பேராக இருக்கிறதே? ரஷ்யியைப் பார்த்து மறுபடி புன்னகைத்துவிட்டு, டாக்டர் மெத்தென்ற மாடிப்படிகளில் ஏறும்போது உற்சாகமாகத்தான் சென்றார்.


 மணிமேகலைக்குச் செய்தி சொல்ல வேண்டும். அவளுக்குத்தான் சந்தோஷமாக இருக்கும். சே! அதற்குள் எத்தனை கோட்டைகள்!


மெஸனைன்னைத் தாண்டியதும் இங்கிருந்தே மாநாட்டு முதல் ஹால் தெரிந்தது. அதன் வாசல் ஏர்கண்டிஷனுக்கு அடைத்திருந்ததால் உள்ளே பேச்சு கேட்கவில்லை. அவ்வப்போது உள்ளே இருந்து டெலிகேட் ஒருவர் டாய்லெட் போகவோ அல்லது முந்திரிப் பருப்பு கேக்குடன் தயாராக இருந்த காபி சாப்பிடவோ கதவைத் திறந்தபோது, “அவன் சர்வதேசக் கவிஞன்! பிஜி மக்களுக்காக இங்கிருந்து கண்ணீர் வடித்தான்.



‘மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாள்’ என்று ரஷ்யப் புரட்சியைப்பற்றிப் பாடினான். அவனன்றோ…” என்று மாநாடு கசிந்தது. பல பேர் டாக்டரை வணங்கினார்கள். பரிச்சயம் இல்லா முகங்கள். எல்லோருக்கும் தெரிந்திருக்கும். துணைவேந்தர் என்றால் சும்மாவா?


 அமைச்சர் அதற்குத்தான் பிற்பகல் கூட்டத்துக்கு வருகிறார். என்னைக் கணிக்கத்தான்! நல்லுசாமிக்கு உள்ளுக்குள் புல்லரித்தது. திறமைப்படி கொடுக்க வேண்டுமானால் அவருக்குத்தான் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அவரைக் காட்டிலும் பாரதி கவிதைகளில் பரிச்சயம் உள்ளவர் யாரும் கிடையாது. ‘பாரதி கவிதைகளில் சமத்துவம்’ என்று டாக்டர் பட்டத்துக்கு அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை இன்னும் ஒரு மைல் கல்!


மத்தியானக் கூட்டம் தொடங்க இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. ஆனால், திறமை மட்டும் போதாதே. அறைக்குச் சென்று சற்று ஓய்வு எடுத்துக்கொண்டுவரலாம். முதலில் மணிமேகலைக்குத் தொலைபேசி மூலம் விவரம் தெரிவித்துவிடலாம்.


டாக்டர் லேசாக,

‘காதல் செய்தும் பெறும்பல இன்பம்,
கள்ளில் இன்பம், கலைகளில் இன்பம்,
பூதலத்தினை ஆள்வதில் இன்பம்…’


என்று பாடிக்கொண்டே அறைக் கதவில் சாவியைப் பொருத்தும்போது, அறை வாசலில் நின்றுகொண்டு இருந்தவனைக் கவனித்தார்.


“வணக்கம் ஐயா!”

“வணக்கம்! நீங்க..?”

இருபத்தைந்து சொல்லலாம். ஒல்லியாக இருந்தான். உக்கிரமான கண்களுக்குக் கீழ் அவன் வயசுக்குச் சற்று அவசரமான நிழல்கள். தோளில் பை மாட்டியிருந்தான். அதில் விழாவின் சிறப்பு மலர் எட்டிப் பார்த்துக்கொண்டு இருந்தது.


“கண்டு கன காலம்” என்றான். டாக்டர் அவனைத் தன் ஞாபக செல்களில் தேடினார்.


எங்கோ பார்த்திருக்கிறோம் மையமாக. “வாங்க! எப்ப வந்தீங்க?”


“இஞ்சாலையா?”


இப்போது ஞாபகம் வந்துவிட்டது. சிலோன்! இவனைச் சிங்களத்தில் பார்த்திருக்கிறோம்.


“நீங்கதானா, செல்வரத்தினம்?”


“ஐயாவுக்கு நினைப்பு உண்டு. யாழ்ப்பாணத்தில் சந்திச்சிருக்கோம்.”


இப்போது முழுவதும் ஞாபகம் வந்துவிட்டது. இவன் வீட்டில் யாழ்ப்பாண உலகத் தமிழ் மகாநாட்டின்போது டாக்டர் இரண்டு நாள் தங்கியிருக்கிறார்.


“எங்க வந்தீங்க?”


“சும்மாதானாக்கம். இடைசுகம் விசாரிச்சுக் கொண்டு போவமெண்டு வந்தனாக்கம்!” மனசுக்குள் மொழி பெயர்த்துக்கொள்ள வேண்டியிருந்த அவன் தமிழ் சற்று நிரடியது. இருந்தும், “வாங்க! உள்ள வாங்க” என்றார்.


அறைக்குள் ஆஷ்டிரே தேடினான். டாக்டர் அவனுக்கு நாற்காலி காட்ட அதில் விழுந்தான்.


“விழாவில் எண்ட பேச்சும் உண்டு” என்றான்.


“அப்படியா! சந்தோஷம். விழாவுல கலந்துக்கறதுக்காக வந்தீங்களா சிலோன்ல இருந்து?”


“ஆமாம்.”

“ரொம்பப் பொருத்தம். சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்னு மகாகவி சொன்னதுக்கு ஏற்ப…”


இப்போது அவனை முழுவதும் ஞாபகம் வந்துவிட்டது. யாழ்ப்பாணம் மாநாட்டில் இவன் குடும்பமே தமிழில் ஈடுபாடுகொண்டு அவர்கள் வீட்டில் இவருக்கு விருந்து வைத்ததும், இவன் தங்கை இனிமையான குரலில் ‘நெஞ்சில் உரமுமின்றி’ பாடியதும் நினைவுக்கு வந்தது. அந்தப் பெண் பெயர் என்ன..?
“உக்காருங்க… ஊர்ல எல்லாரும் சௌக்கியமுங்களா?”


“ஊர்ல யாரும் இல்லீங்க.”


“அப்படியா? அவங்களும் வந்திருக்காங்களா? உங்க தங்கச்சி வந்திருக்குதோ?”

“தங்கச்சி இல்லைங்க” என்றான். அவன் கண்களில் பளபளப்பு ஏற்பட்டது.

“என்ன சொல்றீங்க?”

“எண்ட தங்கச்சி, அப்பா, அம்மா எல்லாரும் இறந்துட்டாங்க.”


“அடப்பாவமே! எப்ப? எப்படி?”


“ஆகஸ்ட் கலகத்துலதாங்க!”


“ஐயையோ! எப்படி இறந்து போனாங்க?”


“தெருவுல வெச்சு… வேண்டாங்க! விவரம் வேண்டாங்க… நான் ஒருத்தன்தான் தப்பிச்சேன். அதுவும் தற்செயல்.”


டாக்டர் மௌனமாக இருந்தார். எப்படி ஆறுதல் சொல்வது? அவன் சிரமப்பட்டுக் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கும்போது, எது சொன்னாலும் பிரவாகம் துவங்கிவிடும் என்று தோன்றியது. இருந்தும் ஏதோ பேச வேண்டிய அவசியத்தில்,


“ஏதாவது சாப்பிடறீங்களா?”


“கோப்பி” என்றான்.


“இத்தனை நடந்திருக்குனு நினைக்கவே இல்லை! அதும் நமக்குத் தெரிஞ்சவங்க. நாம பழகினவங்க இதுல பலியா இருக்காங்கன்னா ரத்தம் கொதிக்குது…”


“அதைப் பத்தி இப்பப் பேச வேண்டாங்க. நான் வந்தது வேற விசயத்துக்காக.”


“சொல்லுங்க. உங்களுக்கு எந்த விதத்துல என்ன உதவி தேவையா இருக்குது?”


“நிகழ்ந்தது எல்லாம் தமிழ் நாட்டுல முழுவதும் தெரியாதுண்டுதான் தோணுது. யாழ்ப்பாணம் பொது நூலகத்துல இருந்த ஒரு லட்சம் தமிழ்ப் புத்தகங்களை போலீஸ்காரங்களே எரிச்சாங்க. அது தெரியுமோ உங்களுக்கு?”


“அப்படியா?”


“அருமையான புத்தகங்கள்! பாரதியாரே சொந்தச் செலவில் பதிப்பித்த ‘ஸ்வதேச கீதங்கள்’ 1908-லயோ என்னவோ வெளியிட்டது. ‘இதன் விலை ரெண்டணா’ண்டு போட்டு இருந்தது. ஆறுமுக நாவலருடைய முதல் எடிஷன்கள் எல்லாம் இருந்தது. 1899-ல் வெளியிட்ட சிங்காரவேலு முதலியாருடைய அபிதான சிந்தாமணி முதல் பிரதி! லட்சம் புத்தகங்கள்னா எத்தனை தமிழ் வார்த்தைகள்! எண்ணிப் பாருங்க. அத்தனையும் தெருவுல எரிச்சாங்க.”


“அடடா!”


“அதை நான் சொல்ல விரும்பறேன். அப்புறம் நான் இந்தியாவுக்கு வந்து பதினஞ்சு நாளா தமிழ்நாட்டில் பார்த்த சில விஷயங்களையும் சொல்ல விரும்பறேன்.”


“எங்க சொல்ல விரும்பறீங்க?”


“இன்றைய கூட்டத்தில்தான்!”

“இன்றைய கூட்டம் பாரதி பற்றியதாச்சே!”


“பாரதி பெல்ஜியம் நாட்டுக்காகவும் பிஜி தீவினருக்கும் அனுதாபப்பட்ட சர்வதேசக் கவிஞன். ருஷ்யப் புரட்சியை வாழ்த்தினவன்! இன்றைக்கு இருந்திருந்தா, சிங்களத் தமிழர்களுக்காக உருகியிருக்க மாட்டானா?”

“கட்டாயம்… கட்டாயம்…”

“அதைத்தாங்க சொல்லப்போறேன்!”

“அதுக்கு இந்த மேடை சரியில்லைங்களே!”


“இந்த மேடைதான் மிகச் சரியானது. தமிழ் பயிலும் எல்லா நாட்டவர்களும் வந்திருக்காங்க. தமிழக அமைச்சர் வரார். சர்வதேச ஆராய்ச்சியாளர்கள், அனைத்திந்தியத் தமிழறிஞர்கள் எல்லாரும் வர்ற இந்த மேடையில எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கத்தான் துக்கத்தையும் மறந்து வந்திருக்கிறேன்!”


டாக்டர் சற்றே கவலையுடன், “குறிப்பா என்ன சொல்லப்போறீங்க?” என்றார்.


“சிங்களத் தமிழர்களைத் தமிழகம் நடத்தற விதத்தையும் பார்த்தேன். அதையும் சொல்லப் போறேன்.”


“புரியலீங்க.”


“ஐயா! நான் வந்து பதினைந்து தினம் ஆச்சு. முதல்ல மண்டபம் டிரான்ஸிற் காம்ப்புக்குப் போனேன். இலங்கையைத் துறந்து இங்க வந்த தமிழர்கள் என்ன செய்யறாங்க, அவங்களை எப்படி ‘றீட்’ (treat) பண்ணறாங்கன்னு பாக்கிறதுக்கு. ராமேஸ்வரம் வந்து சேர்ந்த உடனே அவங்களைத் தமிழகம் எப்படி வரவேற்குது தெரியுமோ?



 டிரான்ஸிற்றர் வெச்சிருக்கியா? றேப் றிக்கார்டர் கொண்டுவந்திருக்கியா?
தங்கத் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்துட்டோமிண்டு கண்ணில கனவுகளை வெச்சுக்கிட்டு வந்தவங்களுக்கு எல்லாம் ரெண்டே மணி நேரத்துல கலைஞ்சுபோயிருதுங்க, அந்த காம்ப்பைப் பார்த்ததும். சிறைக் கைதிங்க பரவாயில்லை! சன்னல் இல்லாத ஓட்டு வீடு. பிரிட்டிஷ் காலத்துல க்வாரன்டைன் காம்ப்பா இருந்ததை இன்னும் மாற்றாம வெச்சிருக்காங்க. இரண்டு ரூமுக்குப் பத்து பேற்றை அடைச்சு வெச்சிருக்காங்க. அவங்களுக்கு ஆளுக்கு இரண்டு வாரத்துக்கு எட்டு ரூபா உபகாரப் பணம். ஆறாயிரம் ரூபா சர்க்கார் கடன் கொடுக்குதுனு பேரு. எல்லாம் அப்ளிகேசனாத்தான் இருக்குது. ஆறு மாதம் காத்திருந்தாலும் லஞ்சம் இல்லாம வராது. இவங்க உடமைகளை, கொண்டு வந்த அற்பப் பணத்தை ஏமாற்றிப் பறிக்க எண்ணூறு பேர். சிலோன் ரூபாய்க்கு எழுபத்து மூணு பைசா கொடுக்கணும்.

 கிடைக்கிறது நாப்பத்தஞ்சுதான். எல்லாரும் திரும்பிப் போயிரலாம், அந்த நரகமே மேல்னு சொல்றாங்க. திரும்பச் சேர்த்துக்க மாட்டாங்க! போக முடியாது.


1964 வரைக்கும் இலங்கையைத்தான் தாயகம்னு நினைச்சுக்கிட்டு இருந்தாங்க. திடீர்னு ‘இது உன் தாயகம் இல்லை, தமிழ்நாட்டுக்குப் போ’னு அழையாத விருந்தாளிங்களா பேப்பரை மாற்றிக் கொடுத்துட்டு கப்பலில் அனுப்பிச்சிட்டாங்க. எதுங்க இவங்க தாயகம்? அங்க பொறந்து வளந்து ஆளாகி, ஒரே நாளில எல்லாம் கவரப்பட்டு, இங்கயும் இல்லாம அங்கயும் இல்லாம இவங்களைப் பந்தாடிக்கிட்டு இருக்காங்க. இது ஒரு சர்வதேசப் பிரச்னை இல்லையா?”


“எல்லாம் சரிதாங்க. இதை நீங்க சொல்ல வேண்டிய மேடையைப் பத்தித்தான் எனக்கு…”


“வேற எங்கங்க சொல்ல முடியும்? அரசியல் வாதிங்ககிட்டயா? ஏ.டி.எம்.கே-காரங்க, ‘இதுக்குத்தான் நாங்க தமிழகம் பூரா கதவடைப்பு செஞ்சமே’ங்கறாங்க! டி.எம்.கே, ‘இதுக்குத்தான் நாங்களும் தமிழகம் பூராக் கதவடைப்பு செஞ்சமே’ங்கறாங்க!”


“இல்லை. இதைத் தமிழ்ப் பத்திரிகைகளில் ஒரு கட்டுரை மாதிரி எழுதலாமே நீங்க…”


“சொல்றேங்க! எல்லாப் பத்திரிகையையும் போய்ப் பார்த்தேன். விகடன்ல சொன்னாங்க; நாங்க அட்டைப் படமே கண்ணீர்த் துளியா ஒரு இஷ்யூல போட்டாச்சேன்னாங்க. குமுதம் ஆளுங்களைச் சந்திக்கவே முடியலை. குங்குமத்துல கேட்டா, விகடன்ல வந்துருச்சேன்னாங்க. ராணியில இதைப்பத்தித்தான் கட்டுரைத் தொடர்ல நாங்களே எழுதிட்டு இருக்கமேன்னாங்க…”


“நீங்க என்ன எழுதறதா சொன்னீங்க?”


“அந்தப் புத்தகங்களை எரிச்சதைப்பற்றித்தாங்க! ஒரு லட்சம் புத்தகங்க! அத்தனை வார்த்தைகளும் எரிஞ்சுபோய், ராத்திரி பூரா வெளிச்சமா இருந்ததை! ஒருத்தர் மட்டும் சொன்னாரு எழுதுங்கனு… ஆனா, அப்படியே உங்க தங்கச்சி றேப்பையும் எழுதுங்க…

 அவங்க கலர் ட்ரான்ஸ்பரன்ஸி இருந்தா கொடுங்க, அட்டையில போடுவோம்… கொஞ்சம் ஹ்யூமன் இன்ட்ரஸ்ட் இருக்கும்னாருங்க! அவர் பேர் சொல்ல விரும்பலை. எனக்கு என் சொந்த சோகத்தை எழுத விருப்பம் இல்லை.


 அவளை என் கண் எதிரிலேயே துகிலுரிச்சாங்க! முதல்ல பக்கத்து வீட்ல சிங்களக் குடும்பத்தில்தாங்க அடைக்கலம் கொடுத்தாங்க. நாள் பூரா கக்கூஸ்ல ஒளிஞ்சிக்கிட்டு இருந்தது! அவங்க உயிருக்கே ஆபத்து வந்திரும்போல நிலையில பின்பக்கமா ஓடிப்போயிருச்சுங்க.


 சந்துலவெச்சுப் பிடிச்சுத் தெருவுல… நடுத் தெருவுல… என் கண் முன்னாலயே! கண் முன்னாலயே…” அவன் இப்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதான்.


“ரொம்பப் பரிதாபங்க.”


கொஞ்ச நேரம் அழுதுவிட்டு “எனக்கு இதைச் சொல்லி அனுதாபம் தேடிக்க விருப்பம் இல்லைங்க. இந்த மாதிரி வன்முறைங்க உங்க ஊர்லயும் நிறைய நடக்குது. இங்கயும் றேப்புக்குப் பஞ்சம் இல்லை. ஆனா, அந்தப் புத்தகங்களை எரிச்சது, அது என்னவோ ஒரு சரித்திர சம்பவமாத்தான் எனக்குத் தெரியுது. அந்த நெருப்புல இருந்த வெறுப்பு நிச்சயம் சர்வதேசக் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டியதுங்க…”


 சட்டையில் முழங்கைப் பகுதியில் தன் முகத்தைச் சரியாகத் துடைத்துக்கொண்டு, “எனக்கு ஒரு நாட்டு ‘குடிமகன்’கிறது யாருங்கறதைப் பற்றி ஆதாரமா சந்தேகங்கள் வருதுங்க. சிங்களவர்கள் தமிழர்கள் இரண்டு பேரும் இந்தியாவுல இருந்து வந்தவங்க. அவங்க வங்காளம் ஒரிஸ்ஸாவில் இருந்து வந்த ஆரியர்களாம். நாங்க ஒண்ட வந்த கள்ளத் தோணிங்களாம். சக்கிலியங்களாம்! இதைஎல்லாம் சொல்ல வேண்டாம்? ஆறு லட்சம் பேர் எங்க போவோங்க? என்ன செய்வோங்க? இதெல்லாம் சொல்ல வேண்டாமா?”


டாக்டர் மூக்கைச் சொறிந்துகொண்டார்: “இவ்வளவு விவரமாச் சொல்ல வேண்டாங்க. ஏன்னா, இது இலக்கியக் கூட்டம். இதில் அரசியலை நுழைக்கிறது நல்லால்லை. ஒண்ணு செய்யுங்க…”


“அரசியல் இல்லைங்க, மனித உரிமைப் பிரச்னை இல்லையா?


‘சொந்தச் சகோதரர்கள்

துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடீ-கிளியே!
செம்மை மறந்தாரடீ!’னு
பாரதி பாடலையா? இலங்கைத் தமிழர்களைச் சகோதரர்கள்னுதானே நீங்க எல்லாரும் சொல்றீங்க?”


“அதுவும் ஒரு விதத்துல வாஸ்தவம்தான். இருந்தாலும்…”


“எனக்கு இதைவிட்டா வேற வாய்ப்புக் கிடையாதுங்க. ரத்தினாபுரத்துல நடந்ததைச் சொன்னா, கண்ல ரத்தம் வரும். அதெல்லாம் நான் சொல்லப்போறது இல்லை. ஒரு லட்சம் புத்தகங்களை எரிச்சாங்க. அதுக்குப் பதில் ஒரே ஒரு புத்தகத்தை மேடையில எரிக்கப்போறேன்!”


“என்ன புத்தகம்?” என்றார் கவலையோடு.


“இந்த மாநாட்டு மலரை!”


“எதுக்குங்க அதெல்லாம்..?”


“பாரதி சொன்ன எதையும் செய்யாம ஏர் கண்டிசன் ஹோட்டல்ல சாக்லேட் கேக் சாப்ட்டுக்கிட்டு மாநாடு போடறது எனக்கு என்னவோ பேத்தலாப் படுது. அதனோட சிகரம்தான் இந்த வெளியீடு. இதை மேடையில எரிச்சுட்டு, பாரதி சொன்னதை நடைமுறையில் செய்து காண்பிங்கனு சொல்லப்போறேன். ‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’னு அவன் சொன்னது கான்க்ரீட் பாலம் இல்லை.


முதல்ல மனப்பாலம் அமைங்க! அப்பதான் பளிச்சுனு எல்லார் மனசிலயும் பதியும். நேரமாயிடுச்சுங்க. ரெண்டு மணிக்குல்ல கூட்டம்?” அவன் எழுந்து வணங்கிவிட்டுச் சென்றான். ‘செல்வரத்தினம்…’


டாக்டர் அவன் போன திக்கைத் திகைப்பில் பார்த்துக்கொண்டு இருந்தார். சற்று நேரம் யோசித்தார். நிகழ்ச்சி நிரலைப் பார்த்தார். இரண்டாவதாகப் பேசுவது ‘செல்வரத்தினம், ஸ்ரீலங்கா’ என்றிருந்தது. யோசித்தார். நாய்க்குட்டி போல் இருந்த டெலிபோனை எடுத்தார். மதுரைக்கு டிரங்க்கால் போட்டார். “பீப்பி கால். டாக்டர் மணிமேகலை…”



பத்து நிமிஷத்தில் கால் வந்தது.


“மணி! நாந்தான்.”


“என்ன, விசாரிச்சீங்களா? கிடைச்சிருச்சா?”


“ஏறக்குறைய கிடைச்ச மாதிரிதான். செக்ரெட்டரியேட்லயே விசாரிச்சுட்டேன். அமைச்சர் கையெழுத்து ஒண்ணுதான் பாக்கியாம்.”


“அப்ப இனிப்பு செய்துர வேண்டியதுதான். இந்தக் கணத்துல உங்க கூட இருக்க…”


“மணி! ஒரு சின்ன சிக்கல்…”


“என்னது… அருணாசலம் மறுபடி பாயறாரா?”


“அதில்லை மணி! இன்னிக்குக் கூட்டத்துல அமைச்சர் வராரு. எனக்கு முன்னால ஒரு சிலோன்காரன் பேசறதா இருக்கு. நாம யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ் மகாநாட்டுல சந்திச்சிருக்கோம். அவன் பேசறான்.”


“பேசட்டுமே, உங்களுக்கு என்ன?”


“அதில்லை மணிமேகலை. அவன் சமீபத்திய கலகத்துல ரொம்ப இழந்து போய் ஒரு வெறுப்புல இருக்கான். ஏறக்குறைய தீவிரவாதியாக் கிறுக்குப் புடிச்ச பயலா இருக்கான்.”


“என்ன செய்யப்போறான்?”


“யாழ்ப்பாணத்துல லட்சம் புத்தகங்களை எரிச்சாங்களாம். அதுக்குப் பதிலா மேடையில விழா மலரை எரிச்சுக் காட்டப்போறேங்கறான். கேக்கறதுக்கே விரசமா இருக்குது. எனக்கு என்னடான்னா, கூட்டத்துல கலாட்டா ஆகி, எங்கயாவது எனக்குச் சந்தர்ப்பம் வர்றதுக்குள் கலைஞ்சு போச்சுன்னா, அமைச்சர் வந்து…”


“த்ரீ மினிட்ஸ் ப்ளீஸ்!”


“எக்ஸ்டென்ஷன் பண்ணுங்க.”


“என்ன, கேக்குதா?”


“கேக்குது… கேக்குது. இத பாருங்க. உங்க பேச்சை இன்னிக்கு அமைச்சர் கேக்க வேண்டியது ரொம்ப முக்கியம். நீங்க முன்னாடி பேசிடுங்களேன்.”


“எப்படி? நிகழ்ச்சி நிரல்ல மாறுதல் செய்யணுமே! தலைமை தாங்கறதால, இறுதியுரைன்னா நானு?”


கொஞ்ச நேரம் மதுரை யோசித்தது.


“என்ன செய்யச் சொல்றீங்க?”


“எப்படியாவது உங்க அண்ணன்கிட்ட அவசரமா போன் பண்ணிச் சொல்லிடு…


“அதைத்தான் நானும் யோசிச்சுக்கிட்டு இருந்தேன்… வெச்சுருங்க.”


“எப்படியாவது…”


“வெச்சிருங்கன்னு சொன்னனில்லையா? அதிக நேரம் இல்லை. ஒரு டிமாண்ட் கால் போட்டுர்றேன்.”


“சரி மணிமேகலை!”


“கவலைப்படாதீங்க. பேச்சு நல்லா பேசுங்க. கிடைச்சா மாதிரிதான்னு அண்ணனும் சொல்லியிருக்காரு. அமைச்சர் உங்க பேச்சைக் கேட்டுட்டாப் போதும்னாரு…”


டெலிபோனை வைத்துவிட்டு டாக்டர் சற்றுத் திருப்தியுடன் எழுந்தார். மணிமேகலை செய்து காட்டிவிடுவாள். இவ்வளவு செய்யக் கூடியவள் இது என்ன? இப்போதே அவள் விரல்கள் தொலைபேசியில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும். அவள் சக்தி!


வாழ்வு பெருக்கும் மதியே சக்தி
மாநிலம் காக்கும் மதியே சக்தி
தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி
சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி


இரண்டு மணிக்குக் கூட்டம் துவங்கியது. எதிரே ஹால் நிரம்பியிருந்தது. வெள்ளைக்கார முகங்கள் முதல் வரிசையில் பளிச்சென்று தெரிந்தன. பட்டுப்புடவை உடுத்திய நங்கை மைக்கைத் தொட்டுப் பார்த்துவிட்டு ‘எண்ணிய முடிதல் வேண்டும், நல்லதே எண்ணல் வேண்டும்


…’ என்று இனிமையாகப் பாடினாள். மேடையில் பேச இருப்பவர்கள் வரிசையில் ஓரத்தில் செல்வரத்தினம் உட்கார்ந்து இருந்தான். டாக்டரைப் பார்த்துப் புத்தகத்தை உயர்த்திக் காட்டினான். கவலையாக இருந்தது. என்ன! ஒன்றுமே செய்ய முடியவில்லையா? இரு இரு பார்க்கலாம். அமைச்சர் இன்னும் வரவில்லை.


எல்லோரும் வாயிலையே பார்த்துக்கொண்டு இருக்க, வரவேற்புரைஞர்

, “தலைவர் அவர்களே! உலகெங்கிலும் இருந்து வந்திருக்கும் தங்கத் தமிழர்களே!” என்று துவங்க, சலசலப்பு தொடர, அமைச்சர் அங்கும் இங்கும் வணங்கிக்கொண்டு நடுவில் நடந்து வந்தார். டாக்டரைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டுத் தன் இருக்கையில் உட்கார்ந்துகொண்டு, உடனே தன் முழுக்கைச் சட்டையை உருவி கடிகாரம் பார்த்தார். டாக்டர் அருகில்தான் உட்கார்ந்திருந்தார்.


இப்போது கேட்கலாமா? இது சந்தர்ப்பமா? இல்லை… இல்லை. அவர் கேட்கும் வரை காத்திருப்போம்.


பின்னால் பார்த்தார். இன்னும் இருந்தான். கவலை சற்று அதிகமாகியது.


“முதற்கண் பிஜி தீவில் இருந்து வந்திருக்கும் ஜார்ஜ் மார்த்தாண்டம் அவர்கள் பேசுவார்” என்று அறிவித்துவிட்டு உட்கார்ந்தார்.


“ரெஸ்பெக்டட் அண்ட் ஹானரபிள் மினிஸ்டர் அண்ட் ஃபெலோ டெலிகேட்ஸ்! ஐ’ம் எ தர்ட் ஜெனரேஷன் டமிலியன் அண்ட் ஐ’ம் ஸாரி ஐ’ம் நாட் ஏபிள் டு ஸ்பீக் இன் டமில். பட் தி கிரேட் ஸுப்ரமண்ய பாரதி…”


டாக்டர் தன்னை அறியாமல் பின்னால் பார்க்க… போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு காகிதத்தைப் பின் வரிசை ஓரத்தில் இருந்தவரிடம் காட்டி ஏதோ கேட்க, அவர் செல்வரத்தினத்தைக் காட்ட, இன்ஸ்பெக்டர் செல்வரத்தினத்தின் பின் நழுவி வந்து தாழ்ந்த குரலில் ஏதோ சொல்ல, செல்வரத்தினம் கலவரத்துடன் உடனே எழுந்து அவருடன் செல்வதைப் பார்த்தார்.


பெரிதாக மூச்சுவிட்டுக்கொண்டார். மணிமேகலை மணிமேகலைதான்! ஒரு மணி நேரத்தில் சாதித்துவிட்டாள். அவருக்குள் புன்னகை ஒன்று மலர்ந்தது.


“அடுத்துப் பேசவிருந்த ஸ்ரீலங்காவைச் சேர்ந்த திரு.செல்வரத்தினம் அவர்களை மேடையில் காணாததால், சோவியத் நாட்டைச் சேர்ந்த கத்தரீனா ஐவனோவாவை அழைக்கிறேன்…”


தினமணி நாளிதழில் மறுதினம் செய்தி வந்திருந்தது:


டாக்டர் நல்லுசாமி தன் தலைமை உரையின்போது, “‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’ என்று பாரதி சொன்னது கான்க்ரீட் பாலத்தை அல்ல; மனப் பாலத்தை…” என்றார். அமைச்சர் தன் உரையில் உள்ள புதிதாகத் துவக்கப்போகும் பாரதி பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் நல்லுசாமி துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிற செய்தியை அறிவித்தார்.



செல்வரத்தினத்தின் விசா ரத்து செய்யப்பட்டு இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் தாய்நாடு திரும்பிச் செல்லும்படி, கட்டளையிடப்பட்ட செய்தி நாளிதழ்கள் எதிலும் வரவில்லை!

pic.twitter.com/SL1zYGvh

 டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8LNCCVq43xzAp_3xw7pSHCTklfFa3qc46Ix9ViD0pzfcm0XnOb2ZLKddcbHLkEXekgUywmpQx5P4VIY1yCLPmOugJ2tbOtKc5lCCl5aoU6cxoeTDd2szCLz685GH83iS_6ReJU8COZjya/s320/writer+sujatha+family.jpg

ஈரோடு மக்களை முட்டாள் ஆக்கும் ஈமு கோழி மோசடி

''ஈமு கோழி இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்!, ஒருமுறை முதலீடு செய்தால் வாழ்நாள் முழுக்க வருமானம் பெறலாம்!'' - இப்படிப்பட்ட கவர்ச்சியான விளம்பரங்கள் இன்று ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்டங்களை கலங்கடித்து வருகின்றன.


'பொன்ஸி’ நிதி மோசடித் திட்டம் போல நடந்துவரும் இத்திட்டங்களில் உள்ள  ஆபத்தை உணராமல், அப்பாவி மக்கள் பணத்தை லட்சக்கணக்கில் கொண்டு போய் கொட்டுவதைப் பார்த்து, களத்தில் இறங்கி விசாரிக்கத் தொடங்கினோம். ( விகடன் டீம்)


நாம் முதலில் சந்தித்தது தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் சுப்பு என்கிற முத்துசாமியை.

''ஒப்பந்த முறையில் ஈமு கோழி வளர்க்க விரும்புபவர்கள், முதலில் 1.5 லட்சம் ரூபாயை டெபாசிட்-ஆக கட்ட வேண்டும். அதைத் தொடர்ந்து மூன்று மாத வயதுடைய ஆறு ஈமு கோழி குஞ்சுகளை தருவார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனமே அந்த ஆறு கோழிகளையும் திருப்பி எடுத்துக் கொள்வதாகச் சொல்லி ஒப்பந்தம். 


இதில் அதிர்ச்சி என்ன வெனில், இரண்டு ஆண்டு வரை கோழிகளை வளர்க்கும் நபருக்கு கோழித் தீவனம் வழங்குவதுடன், வளர்ப்புக் கூலியாக மாதம் 6,000 ரூபாயும், ஆண்டு ஊக்கத் தொகையாக 20,000 ரூபாயும் கொடுப்பதாகவும் ஒப்பந்தத்தில் சொல்கிறார்கள். முதலீடு செய்த பணமும் கிடைக்கிறது; கூடவே மாத வருமானமும் வருகிறது என்று நினைத்து அப்பாவி மக்கள் ஈசல் போல இத்திட்டத்தில் விழுகிறார்கள்'' என்றார் சுப்பு.


இதெல்லாம் எப்படி சாத்தியம்? 


'ஒரு ஈமு கோழி ஆண்டுக்கு 30 முட்டை வரை இடும். ஒரு முட்டையின் விலை 1,500 ரூபாய்.  சேதாரம் போக 22 முட்டைகள் தேறினால், 33 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.


30 கிலோ கறி மூலம் 9,000 ரூபாயும், 3 கிலோ கொழுப்பு எண்ணெய் மூலம் 7,500 ரூபாயும் மற்றும் அலங்கார பொருட்களாகும் இதன் இறகுகள், மருத்துவக் குணம் கொண்ட எலும்புகள், நகம் உள்ளிட்டவைகள் மூலம் 5,000 ரூபாய் என மொத்தம் 54,500 ரூபாய் கிடைக்கும்' என்கின்றன  ஈமு கோழி வளர்க்கும் நிறுவனங்கள். 


இதுபற்றி தடப்பள்ளி அரக்கன்கோட்டை நீர் பாசன விவசாயிகள் சங்க செயலாளர் வக்கீல் சுபி.தளபதியிடமும் பேசினோம்.


''ஈரோடு மாவட்டத்தில் மட்டும் பதினைந்துக்கும் மேற்பட்ட ஓப்பந்தமுறை ஈமு கோழி வளர்ப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தங்க நாணயம் தருகிறோம், போனஸ் தருகிறோம் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி விவசாயிகளை ஏமாற்றி வருகின்றன இந்நிறுவனங்கள். 


மஹாராஷ்டிர மாநிலத்தில் ஒப்பந்தமுறை ஈமு கோழி வளர்த்துவந்த ஒரு நிறுவனம் 200 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பதாக கண்டுபிடித்து, அந்நிறுவனத்தை தடை செய்திருக்கிறது மகாராஷ்டிரா அரசாங்கம். அதேபோல ஆசை வார்த்தைகளைச் சொல்லி, இங்கும் மக்களை ஏமாற்றி வருகின்றன சில நிறுவனங்கள்'' என்றார்.   


எனினும், கோவையைச் சுற்றியுள்ள நான்கைந்து மாவட்டங்களில் இருந்து கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் இத்திட்டங்களில் முதலீடாகி இருப்பதாகச்  சொல்கிறார்கள் வேறு சிலர்.


கடந்த பத்து ஆண்டுகளாக ஈமு கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருபவரும், தமிழ்நாடு ஈமு அசோசியேஷன் தலைவருமான ராஜேந்திரகுமாரிடம் பேசினோம்.


''தமிழகத்திலிருந்து ஈமு கோழியின் மூலம் பெறப்படும் எந்த ஒரு பொருளும் ஏற்றுமதி செய்யப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. அதை பதப்படுத்தி வைக்கும் தொழிற்சாலைகளும் இங்கு இல்லை. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக சொல்வதிலும் உண்மை இல்லை'' என்றார்.


இத்திட்டம் பற்றி இதுவரை அரசுத் தரப்பில் பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, இத்திட்டம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் தென் மாவட்டங்களுக்கு பரவ ஆரம்பித்திருப்பது அபாயகரமான வளர்ச்சிதான்!




மக்கள் கருத்து

1.mahendran.r
 
தமிழ்நாட்டில் ஈமு கறி விற்பனை அப்படி ஒன்றும் சொல்லிக்கொல்வது போல் இல்லை. எங்கும் ஏற்றுமதியும் இல்லை, எப்படி காசு வளரும்? அடுத்தவர் முதலீட்டில் (வைப்புத்தொகை) இருந்துதான் உங்கள் பணம் வரும் போல் தெரிகிறது! 1.5 லட்சம் வைப்புத்தொகை=>6000*12 20000 54500=146500=> என்ன லாபம்? இதுவும் காந்தப்படுக்கை மோசடி போல் ஆகாமல் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்
2.ram1
 
நிறைய தொலைக்காட்சிகளில் இத்திட்டத்தை பற்றிய விளம்பரங்கள் பிரபல நடிகர்களின் நடிப்போடு வெளிவருகின்றது.

நம்பும்படியாக இல்லை. இருந்தாலும் முதலில் பணம் செலுத்தியவர்களுக்கு பணம் அவர்கள் சொன்னபடி தந்து விட்டார்கள்.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனம் ஆண்டிற்கு 25 சதவீதம் வட்டி தருவதாகவும், ஈமு நிறுவனஙள் பொதுமக்களிடம் வாங்கும் பணத்தை அதில் முதலீடு செய்து கிடைக்கும் வட்டியை பொதுமக்களுக்கே திருப்பி தருவதாகவும். எஞ்சிய தொகை தான் ஈமு நிறுவனங்களின் வருமானம் என்றும் கூறப்படுகிறது.

மற்றபடி கோழி வளர்ப்பெல்லாம் ஒரு கண்துடைப்பென்றே ஒரு சிலர் கூறுகின்றார்கள்.

அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஈமு நிறுவனங்களில் மக்கள் டெபாசிட் செய்வது குறைந்தாலோ, அல்லது மத்திய பிரதேசத்தை சேர்ந்த நிதி நிறுவனம் திவாலானாலோ (ஏமாற்றினாலோ) தான் மக்களுக்கு பணத்தை திருப்பி தரமுடியாத சூழ் நிலை ஏற்படும்.

அதன் பிறகு தெரியும், சுசி, ருசி, பசி எல்லாம்.


நன்றி - நாணயம் விகடன்




டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (4.5..2012) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-4104.jpg 

1.வழக்கு எண் 18 / 9 --காதல் படம் எடுத்து வெற்றி பெற்ற இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வழக்கு எண் 18/9 படம் மே மாதம் 4ம் தேதி திரைக்கு வர உள்ளது.இளம் வயதில் ஏற்படும் காதலும், அதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் மிக அழகாக எடுத்துள்ளார் பாலாஜி சக்திவேல். நிச்சயமாக இது மாணவர்களுக்கு ஒரு கருத்தை சொல்லும் படமாக இருக்கும் என்றும் கூறுகிறார் பாலாஜி சக்திவேல்.குடும்பத்தோடு சென்று பார்க்கும் படமாகும் இப்படம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்சார் போர்டு இதற்கு யுஏ சான்றிதழ் அளித்துள்ளது

பாலா‌ஜி சக்திவேல் ம‌ரியாதைக்கு‌ரிய மனிதர். நினைத்தால் நான்கு டூயட்டையும், மூன்று சண்டைக் காட்சியையும் காதலெனும் இற்றுப் போன சரடில் கோர்த்து வருடத்துக்கு நான்குப் படங்கள் தர முடியும். சினிமா மீதுள்ள காதல்... நான்கு ஐந்து வருடங்களுக்குதான் ஒரு படம். செதுக்கி சீர்செய்து பொற்கொல்லனுக்கு‌ரிய பொறுமையுடன்... இதோ தயாராகிவிட்டது அவ‌ரின் வழக்கு எண் 18/9. 


தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் எண்ணிக்கைக்காக படமெடுத்த காலம் இன்று இல்லை. நல்ல தரம், வெற்றியை இலக்கு வைத்துதான் பெரும்பாலான இயக்குநர்கள் படமெடுக்கிறார்கள். அதில் வெற்றி கிடைக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம்.

வருடத்துக்கொரு படம் என்று கூட இல்லை... தன் மனதில் உள்ள கதைக் கருவுக்கு முழுமையான வடிவம் கிடைக்கும் வரை காத்திருந்து ஆத்மார்த்தமாக படம் பண்ணும் இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

அவரது சாமுராய் சரியாகப் போகாவிட்டாலும், காதல் அனைவரையும் உலுக்கியெடுத்தது. அடுத்து அவர் எடுத்த கல்லூரி, மனதைப் பிசைந்தது.

அந்தப் படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் அமைதியாக இருந்த பாலாஜி சக்திவேல், அடுத்து எடுத்திருக்கும் படம் வழக்கு எண் 18/9.

இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமைதான் வெளியாகிறது என்றாலும், முக்கியப் பிரமுகர்கள், சக இயக்குநர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு படத்தைப் போட்டுக் காண்பித்துவிட்டனர் பாலாஜி சக்திவேலும் படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் லிங்குசாமியும்.

படம் பார்த்த அத்தனை இயக்குநர்களும், கண்ணீருடன் வெளியில் வந்து பாலாஜி சக்திவேலைக் கட்டிப் பிடித்துக் கொண்டனர்.

படம் பார்த்த இயக்குநர்களில் ஒருவரான ரா பார்த்திபன், "சினிமா மூலம் ஆன்மாவை தொட முடியும் என இரண்டாம் முறையாக, அதிரும்படியாக, என் தூக்கம் கெடுக்கும்படியாக சொல்லி ஒரு பெரிய தாக்கத்தையே ஏற்படுத்திவிட்டார். தயவு செய்து முதல் நாளே அதுவும் முதல் ஆளாய் பாருங்கள்... ரிக்டர் அளவில் பதிவாகாவிட்டாலும் இதமாய் ஒரு நிலநடுக்கம் இதயத்தில் பதிவாகும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் லிங்குசாமி, "இதுவரை நான் எடுத்ததெல்லாம் படமில்லங்க. பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 தான் உண்மையான படம், படைப்பு. அதற்கு தயாரிப்பாளராக இருப்பதன் மூலம் நான் பெரிதாக எதையோ சாதித்த நிறைவுடன் உள்ளேன். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வந்த பல பத்திரிகையாளர்கள் என்னிடம் பேச முடியாமல் கண்ணீர் விட்டனர். வேறு என்ன சிறப்பு வேண்டும் இந்தப் படத்துக்கு?" என்றார்.


http://www.vikatan.com/news/images/15vazhukku.jpg
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயா‌ரித்திருக்கும் இப்படத்தில் கோடிகளில் சம்பளம் வாங்கும் ‌ஜிகினா நடிகை யாருமில்லை. அதேபோல் ஹீரோ. கண்டெயின‌ரில் சம்பளம் கேட்பவர் யாருமில்லை. எல்லாமே புதுமுகங்கள்.
அனைவரும் எதிர்பார்த்திருக்கும் ஈரோடு தேவி அபிராமி, ஆனூர், அண்ணா ஆகிய 3 தியேடர்களீல் ரிலீஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIx_3Tb50bjxAD8-XeRntODR1sbl_MeHAU5A8dS_F6dEYJf93emUlJn6nQf956RNm6TU7cnu8IMvAk57V1EsSAO8sO959VAWtg-jKUi_WcxynYyrIWj102AKnX2qaGteCLfrBtYsKrieo/s1600/Kaantham-Movie-Wallpapers-11-533x800.jpg 


2. காந்தம்". -கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான தேஜ், நடித்திருக்கும் 'காந்தம்' படத்தை ஜெமினி நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது.

நியூ மூன் ஸ்டுடியோஸ் சார்பில் சஞ்ஜீவ் கணேஷ், தயாரித்திருக்கும் படம் 'காந்தம்'. இதில் தேஜ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ரஷ்மி நடித்திருக்கிறார். தற்போது இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்காக தயாராக இருந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த ஜெமினி நிறுவத்தினர் தாங்களே இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதாக கூறி வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கிறார்கள்.

ஜெமினி டெலிஷாட் மீடியா & மெட்ரிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஜெமினி நிறுவனத்தின் மூலம் இந்த மாதம் இறுதியில் வெளியாக இருக்கும் இப்படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டானதால், படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புதுமுக இசையமைப்பாளர் பிரதாப், இசையில் அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் 'உன் அழகே..' என்ற பாடல் அதிகப் பேர் பயன்படுத்தும் காலர் டூயனர் பாடலாக வெற்றி பெற்றிருக்கிறது.

காதல், காமெடி, சென்டிமென்ட் என்று அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பது ஹீரோ தேஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சரவணன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு பிரேம் சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பு விஷ்வா, கலை கே.சுரேஷ், சண்டைப் பயிற்சி மிரட்டல் செல்வம்.


http://www.mottaboss.com/stills/apr12/16/kaantham_tamil_movie_actor_tej_stills_pictures_743.jpg

இந்த படத்தில் ஆக்ஷன், காதல், செண்டிமென்ட் என ஒரு ஜனரஞ்சகமான படமாக உருவாகிவரும் இப்படத்திற்கு பிரதாப் என்ற புதுமுகம் இசையமைத்திருக்கிறார்.
படத்தில் பாடல்களை கேட்ட சோனி நிறுவனம், தானகவே முன் வந்து பாடல்களின் உரிமையை பெற்றிருக்கிறது, விரைவில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளது.
சஞ்சய் கணேஷ், வினோத் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் இடம்பெறும் “தமிழன்பன் நான் உங்கள் புது நண்பன்" என்ற பாடல் படத்திற்கு மட்டுமின்றி நாயகன் தேஜ்க்கும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தரும் உத்வேகப் பாடலாக அமைந்திருக்கிறதாம்.
 http://www.jointscene.com/php/image.php/picmain.jpg?width=350&height=350&image=/ahtees/admin/movies/content/30206_17_Lankeswar10.JPG
3. ஜக்கம்மா -டைரக்டர் வினயன் என்றாலே உடல் ஊனத்தை மையமாக வைத்துதான் படம் எடுப்பார் என்ற கருத்து நிலவி வருகிறது. அவரும் தனது பாணியை ஒரு படத்திலும் விட்டுக் கொடுத்ததாக தெரியவில்லை. ஒரு காலத்தில் ஓஹோவென ஓடிய அவரது படங்கள் சமீபகாலமாக பெரும் தோல்வியை சந்தித்து வருகிறது. இனிமேல் தனது பாணியை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கலாம்.


முழுக்க முழுக்க ஆவி, பேய், பிசாசு என்று வேறு ஒரு கோணத்தில் படம் எடுக்க ஆரம்பித்திருக்கிறார். இவர் சமீபத்தில் இயக்கிய படமான லங்கேஸ்வரி ஆந்திராவிலும் கேரளாவிலும் சரியான ஹிட். இந்த படத்தை அப்படியே தமிழில் வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார். அதற்கு வசதியாக இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் மேக்னாராஜ்.

 இவர் பூபதி பாண்டினின் காதல் சொல்ல வந்தேன் படத்தில் அறிமுகமானவர். தமிழில் ஒன்றிரண்டு படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த அறிமுகம் போதாதா?ஈரோடு  ராயல், அன்னபூரணி ஆகிய 2 தியேட்டர்களில் ரிலீஸ்
 http://www.123musiq.com/Hindi-Images/Click.jpg
4. CLICK ( HINDI) -  Shreyas Talpade, a fashion photographer, suddenly finds a strange apparition in the photographs clicked by him. Turns out, the spirit is a visitor from his forgotten past who has an unfinished story to tell. Will his current girl friend stand by him in this ordeal?

  She comes back from his past to haunt his present. But does she really create a scare, this crestfallen, sad little spirit who suddenly begins to peer at him from behind mirrors, under beds, inside closets and sobs tears of blood, wherever she goes? 


Not really. After a few initial jumps here and there in the beginning, you don't get the heebie-jeebies, simply because the director reveals too much, too fast. Also, the special effects are not quite state-of-the-art and images of the ghost walking upside down on the ceiling or clambering, head downwards, from a ladder, are actually cheesy. They don't chill your bones, as all horror films must do. 
The story essentially focuses on a college romance gone awry and the aftermath that follows when spurned Sneha Ullal seeks her pound of flesh from Shreyas Talpade who refuses to get serious after a one-night stand. The chapter summarily ends on a bad note and is re-opened again in the picture-perfect present, when Shreyas has graduated into a hotshot photographer who lives with his model girlfriend, Sada. Driving home on a foggy night, the couple hit a mysterious girl and run. 
But there ain't no running away from a sordid past: that's the bitter truth that gradually dawns on the twosome who soon begin to find an intruder in their candle-lit dinners. Got to trek back to the past and ferret out unsavoury secrets....

The film works only in fits and starts. Shreyas does try hard to keep the momentum going, but the campy special effects leave a lot to be desired. Watch it for the twist in the tale in the end and some goosebumps in the beginning.
 

 டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 

காந்தியடிகள் ஒரு கையெழுத்துப்போடவே எங்கப்பா கிட்டே காசு கேட்டவர் - பழ நெடுமாறன் பேட்டி @விகடன்

1.' 'நம்மைவிட பிரபாகரனுக்கு அலெர்ட்னஸ் அதிகம்’ என்கிறார் எனது போலீஸ் உறவினர் ஒருவர்... அப்படியா? நீங்கள் அதை எப்போதேனும் உணர்ந்து இருக்கிறீர்களா?'' 
''நிறைய முறை உணர்ந்திருக்கிறேன்! எங்கள் முதல் சந்திப்பே உங்களுக்கு ஆச்சர்யமூட்டும். 1982-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னை, பாண்டி பஜாரில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. அதையட்டி விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களைச் சந்திப்பதற்காக சிறைக்குச் சென்றிருந்தேன்.


அந்த நால்வரில் பிரபாகரனும் அடக்கம். அப்போது வரை நான் பிரபாகரனை நேரில் சந்தித்தது இல்லை என்பதால், மிகுந்த ஆவலுடன் காத்திருந்தேன். நான்குஇளைஞர் கள் வந்தனர். இராகவன், உமா மகேஷ்வரன், ஜோதீஸ்வரன் என ஒவ்வொருவரும்தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். நான்காவ தாக நின்ற இளைஞர், 'அண்ணா,மன்னித்துக் கொள்ளுங்கள்...


 நான்தான் பிரபாகரன்’ என்று சொன்னபோது, திகைத்துப்போனேன். ஏனெனில், அவர் எனக்குப் புதியவர் அல்ல. என் வீட்டில் அவரும் வேறு சில இளைஞர்களும் அதற்கு முன் பல நாட்கள் தங்கியிருந்துள்ளனர். அப்போது எம்.எல்.ஏ-வாகஇருந்த நான் பெரும்பாலும் வெளியூர்களில்தான் இருப்பேன். சென்னை வீட்டில் இந்த       இளைஞர்கள்தான் தங்கியிருப்பார்கள்.அவர்களில் ஒருவராக பிரபாகரன் இருந்திருக்கிறார் என்பதும் அதை வெளிப்படுத்தாமலேயே அத்தனை நாட்கள் என்னிடம் பழகிவந்திருக்கிறார் என்பதும் பெரும் ஆச்சர்யம் அளித்தது.


அப்போது எல்லாம் நான் பிரபாகரனிடமே பல முறை, 'உங்கள் தலைவர் பிரபாகரனை அழைத்து வாருங்கள், சந்திக்க வேண்டும்’ என்று கேட்டிருக்கிறேன். 'சரி, சரி’ என்று அவரும் பணிவாகத் தலையாட்டியிருக்கிறார். அவரும் அவருடைய தோழர்களும் ரகசியம் காத்த தன்மை என்னை மிகவும் ஈர்த்தது. இந்தக் கட்டுக்கோப்புதான் விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய பலம்.''  



2.''உங்கள் தந்தை காந்தியடிகளிடம் கையெழுத்து கேட்டு, அதற்கு அவர் காசு கேட்டார் என்று எங்கோ படித்திருக்கிறேன். இந்தச் செய்தி உண்மையா?'' 


''உண்மைதான்.1938-ம் ஆண்டு காந்தி ராமேஸ்வரத்துக்கு வந்தார். அப்போது மதுரையில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்த ஜார்ஜ் ஜோசப் அவர்களின் வீடு, எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தது. என் அப்பா பழனியப்பனார் அப்போது இளைஞர். ஜார்ஜ் ஜோசப்பின் மனைவி, மதுரை ரயில் நிலையத்தில் காந்தியைப் பார்ப்பதற்காகக் கிளம்பியிருக்கிறார். என் அப்பா காந்தியின் மீது பெரும்பற்று கொண்டவர் என்பதால், 'நீயும் வா’ என அவரையும் அழைத்துச் சென்றிருக்கிறார். 


ரயில் வந்ததும், காந்தியைப் பார்த்து உண வைக் கொடுத்திருக்கிறார் அந்த அம்மை யார். காந்தியைப் பார்த்த பரவசத்தில் அப்பா அவரிடம் கையெழுத்து பெற முயற்சித்து இருக்கிறார். 


அதற்கு காந்தி அவர்கள் சிரித்துக் கொண்டே, 'ஒரு கையெழுத்துக்கு 5 ரூபாய் ஆகும்’ என்று சொல்லியிருக்கிறார். அவசர மாகக் கிளம்பிச் சென்றதால், அப்போது அப்பாவிடம் காசு இல்லை. உடனே, தன்னு டைய கையில் போட்டிருந்த மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்து 'இதை வைத்துக்கொண்டு கையெழுத்துப் போடுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார்.


 அதைப் பார்த்து திருமதி ஜோசப், 'இது இவருடைய திருமண மோதிரம்’ என்று காந்தியிடம் சொல்ல... உடனேகாந்தி, தன் டைரியில் ஒரு பேப்பரைக் கிழித்து 'காந்தி’ எனத் தமிழிலேயே கையெழுத்துப் போட்டுத் தந்திருக்கிறார். இப்போதும் அந்தக் கையெழுத்து பத்திரமாக என்னிடம் இருக்கிறது!''




3. ''எதிர்காலத் தமிழகம் குறித்த உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன? முன்னேற் றப் பாதையில்தான் தமிழர்கள் செல்கிறார் களா?'' 


 ''ஒற்றுமை நிறைந்த இனமாக, தனது உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் போராடும் இனமாக தமிழினம் வடிவெடுக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. ஆனால், நடைமுறை என்ன? மதவெறி, சாதிவெறி போல தமிழர்கள் கட்சி வெறியால் பிளவு பட்டு உள்ளனர். அரசியல் கட்சிகளே மதங் களாக மாறிவிட்ட நிலையில், மக்களைப் பக்தர்களாக்கிக் குளிர்காய்கின்றனர்.


 இது மிகவும் ஆபத்தான போக்கு. ஏற்கெனவே சுற்றியுள்ள அனைத்து மாநிலங்களும் தமிழ கத்தை வஞ்சிக்கின்றன. மத்திய அரசுதமிழ் நாட்டை மதிப்பதே இல்லை. இந்த நிலையில் இங்கே இருக்கும் அரசியல் கட்சிகளின் போக்கும் இதே சுயநலத்துடன் நீடித்தால், இந்தியாவில் எல்லா வகையிலும் தமிழகம் பின்தங்கிய மாநிலமாக மாறிவிடும்!''



4.''தமிழீழம் பற்றி ஆதியோடு அந்தமாகத் தெரிந்துகொள்ள நான் என்ன புத்தகம் படிக்க வேண்டும்?''


''வரலாற்று அறிஞர் முருகர் குணசிங்கம் எழுதிய 'இலங்கைத் தமிழர் வரலாறு’ என்ற நூல் படித்தால், முழுமையான வரலாறு அறிந்துகொள்ளலாம்!''


5.''கவிஞர் கண்ணதாசனுடன் நெருங் கிப் பழகியவர் நீங்கள். அவருடனான நினைவுகளில் மறக்க முடியாததைக் குறிப்பிடுங்களேன்?'' 


''ஒன்றல்ல... இரண்டல்ல... பல சம்பவங்கள் உண்டு. ஒருமுறை குடும்பக் கட்டுப்பாடு விழாவுக்கு கவிஞரை அழைத்து இருந்தார்கள். 14 குழந்தைகளுக்குத் தகப்பனான அவர் அந்த விழாவில் என்ன பேசப் போகிறார் என்ற ஆர்வத்தில் நானும் சென்று இருந்தேன். பேச்சைத் தொடங்கும்போதே, 'எப்படி வாழக் கூடாது என்பதற்கு உதாரணமானவன் நான் என்பதால், என்னைப் பேச அழைத்திருக்கிறார்கள்’ என்று அவர் சொன்னபோது, அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது


.
இன்னொரு சந்தர்ப்பத்தில் இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் ஹார்மோனியத்தில் மெட்டை இசைத்துக்காட்ட, பாடல் எழுதுவதற்காக எதிரே அமர்ந்திருந்தார் கவிஞர். அவர் மெட்டை இசைத்தார். கேட்டதும், கண்களை மூடி, 'மறுபடியும் வாசிச்சுக்காட்டு’ என்று  எம்.எஸ்.வி-யிடம் சொன்னார் கவிஞர். 


அவர் மறுபடி வாசித்தார். அதைக் கேட்டதும், 'போ... போ... இந்த மெட்டுக்கு எல்லாம் பாடல் எழுத முடியாது’ என்று சொல்லி விட்டார். உடனே எம்.எஸ்.வி. எழுந்து சற்று தள்ளிப்போய் நின்றுகொண்டு, 'இந்த மெட்டுக்குப் பாட்டு எழுதலேன்னா, அப்புறம் என்ன நீங்க கவிஞர்?’ என்று கேட்டுவிட்டு வாசலுக்கு வெளியே ஓடிப்போய்விட்டார். 'பிடி, பிடிய்யா அவனை’ எனக் கவிஞர் சற்று கோபத்துடன் சத்தமிட... எம்.எஸ்.வி. பயத்துடன் வெளியிலேயே நின்றுகொண்டுஇருந்தார். 


பிறகு கோபம் தணிந்ததும், 'உள்ளே... வா’ என்று அழைத்து... அதே மெட்டுக்கு மறுபடியும் பாடல் எழுதிக் கொடுத்தார். வெளியானதும் பெரிய அளவில் பிரபலமான அந்தப் பாடல்.... 'யாரை நம்பி நான் பிறந்தேன், போங்கடா போங்க...’  


காங்கிரஸ் கட்சி பிளவுபட்டபோது, இந்திரா காங்கிரஸில் இணைந்தார் கண்ணதாசன். நான் காமராஜர் காங்கிரஸிலேயே தொடர்ந்தேன். இருந்தாலும், நான் காமராஜரின் பிறந்த நாளை தேசியத் திருவிழாவாக மதுரையில் நடத்தியபோது கவிஞரைஅழைத் தேன். எந்த மறுப்பும் சொல்லாமல் முந்தைய நாளே வந்திருந்து விழா குறித்து மதுரையின் மூலை முடுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்தார். அத்தகைய அரசியல் நாகரிகம் மிகுந்தவர் கவியரசர்!''



6.''ராஜீவ் காந்தியின் மரணச் செய்தியை நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?'' 


''கோவை ரயில் நிலையத்தில் இறங்கிய ஓர் அதிகாலைப் பொழுதில் ராஜீவ் கொலை செய்தியைக் கேள்விப்பட்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். அன்னை இந்திராவின் குடும் பத்தோடு நெருங்கிப் பழகியவன் என்ற முறையில், என்னை ராஜீவின் மரணம் கூடு தலாகப் பாதித்தது. ஆனால், இதைப் பற்றி பிரபாகரனுடன் பேசும் சந்தர்ப்பம் பிறகு வரவில்லை. காரணம், அதன் பிறகு அவரை நான் சந்திக்கவே இல்லை!''  



''7. விலைவாசி உயர்வு, லஞ்சம், தமிழ்நாட்டு சாதிப் பிரச்னைகள்பற்றி எல்லாம் பேசாமல் எப்போதும் இலங்கைத் தமிழர்களைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருப்பது ஏன்?'' 


 ''யார் சொன்னது? நாங்கள் அனைத்துப் பிரச்னைகளைப் பற்றி பேசியும் எழுதியும் போராடியும்வருகிறோம். காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற நதி நீர்ப் பிரச்னைகளுக்கு முதன்முதலாகக் குரல் கொடுத்தது எங்கள் தமிழர் தேசிய இயக்கம்தான். 


ஆனால், இலங்கைப் பிரச்னைபற்றி நான் சொல்வது மட்டுமே ஊடகங்களில் அதிக முக்கியத்துவத்துடன் வெளியிடப்படுகிறது. எங்களு டைய மற்ற போராட்டங்கள் புறக்கணிக்கப் படுகின்றன. இதனால் உங்களுக்கு அப்படி ஒரு தோற்றம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் அது தவறு. ஈழத் தமிழர்களின் நலன் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு எங்களுக்குத் தமிழ்நாட்டு தமிழர் நலனும் முக்கியமே.''



8. ''இலங்கைப் போரை இந்தியா ஆதரித்ததற்கு 'சீனாவின் ஆதிக்கம்அங்கே வந்துவிடும்’ என்பது மட்டும்தான் காரணமா?''   


''இது ஒரு திசை திருப்பும் பேச்சு. ஜெயவர்த்தனே ஆட்சிக் காலத்தில், இலங் கையில் அமெரிக்கக் கடற்படைத் தளத்தைக் கொண்டுவருவதற்கான ரகசிய முயற்சி நடந்தது. உடனே இந்திராகாந்தி நாடாளு மன்றத்தில், 'இந்தியப் பெருங்கடல் எல்லை யில் எந்த நாட்டு ராணுவத்தளம் அமைக்கப் பட்டாலும், இந்தியா அதைத் தனக்கு எதிரான நடவடிக்கையாகக் கருதும்’ என எச்சரித்தார். உடனே, ஜெயவர்த்தனா அடங்கிப்போனார். 



அதைப் போல, 'சீனாவிடம் உதவி பெற்றால், அதை நாங்கள் எங்களுக்கு எதிரானதாகக் கருதுவோம்’ என்று ராஜபக் ஷேவை நோக்கி இந்தியா எச்சரித்திருந் தாலே இலங்கை அடங்கிப்போயிருக்கும். ஆகவே, சீனாவைக் காட்டி இந்தப் பிரச்னை யைத் திசை திருப்புவது சரியானது அல்ல. உண்மையான காரணம் என்ன? இந்தியா வில் காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம், மிசோரம் எனப் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு தேசிய இனங்கள் தங்கள் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்திய ராணுவத்தின் சரிபாதி அங்குதான் நிற்கிறது.


 ஒருவேளை இலங்கை யில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டால்,இந்தியா வில் நடைபெறும் போராட்டங்களுக்கு அது ஓர் உந்துசக்தியாக மாறிவிடும் என்பது இந்திய அரசின் பயம். அதனால்தான் திட்ட மிட்டு புலிகளின் போராட்டத்தை நசுக்கினார் கள்!''



9.''உங்கள் இளமைப் பருவத்தில் நீங்கள் அடைய விரும்பிய லட்சியத்தை இன்று வந்து சேர்ந்துவிட்டீர்களா?'' 


''மாணவர் பருவத்தில் அண்ணன் ஈ.வி.கே.சம்பத் அவர்களின் தமிழ்த் தேசியக் கட்சியில் சேர்ந்து என் அரசியல் வாழ்வைத் துவங்கினேன். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்தபோது, ஒர் தமிழன் பெரும் பதவியில் இருக்கும்போது அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தன் கட்சியை காங்கிரஸுடன் இணைத்தார் சம்பத்.


பெருந்தலைவரின் மறைவுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி சீரழிய ஆரம்பித்துவிட்டது. என்றைக்கு இந்திய ராணுவம் ஈழத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதோ, அன்றைக்கே நாங்கள் காங்கிரஸ் கட்சியை மறந்துவிட் டோம். தமிழர் தேசிய இயக்கத்தைத் தொடங்கினோம். எங்கள் லட்சியம், தமிழ்த் தேசியத்தை நிலைநிறுத்தச் செய்வதுதான். அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து முன்னோக்கிச் சென்றுகொண்டு இருக் கிறோம்!''

முற்றும் 

நன்றி - விகடன் 


டிஸ்கி 1 -

வீரப்பன் விவகாரத்தில் நடந்தது என்ன? பழ நெடுமாறன் பேட்டி http://www.adrasaka.com/2012/04/blog-post_8963.html

டிஸ்கி 2 -

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ நெடுமாறன் பேட்டி வீடியோ   http://www.adrasaka.com/2012/04/blog-post_19.html

டிஸ்கி 3 -

பிரபாகரனை நம்ப வைத்து கழுத்தை அறுத்த ராஜீவ் காந்தி - பழ நெடுமாறன் வெளியிடும் உண்மைகள் http://www.adrasaka.com/2012/04/blog-post_12.html



 டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.