Wednesday, July 17, 2013

வரலாற்று நாயகர்கள்?

தேரா மன்னா!

வரலாற்று நாயகர்கள்?

நீதிபதி சந்துரு

களவும் கற்று மறஎன்று யார் சொல்லி வைத்தார்களோ? அதற்கு நிறைய விபரீத எதிர்வினைகள் ஏற்பட்டுள்ளன. காவல்துறையினர் யாரைப் பார்த்தாலும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார்கள். கண்ணால் பார்ப்பதும் பொய்! காதால் கேட்பதும் பொய்! தீர விசாரிப்பதே மெய்! என்பது அவர்களுக்கு பாலபாடமாகி விட்டது. அதனால்தான் அவர்கள் யாரைச் சந்தேகப்பட்டாலும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுதீரவிசாரிக்கிறார்கள். இந்த விசாரணையைத்தான் பத்திரிகைகளும்தீவிரவிசாரணைக்குப் பிறகு குற்றவாளி குற்றத்தை ஒத்துக்கொண்டான் என்று செய்தியாக வெளியிடுகிறார்கள்.
காலனி ஆதிக்கத்தில் இதைவிட மோசமான நிலைமையை இந்தியா சந்தித்தது. ஒரு சமூகத்தையே அல்லது சாதியையே அவர்கள் குற்றப்பரம்பரை என்று அறிவித்துவிடுவார்கள். அதன்பின் அச்சமூகத்தில் யாரேனும் ஆண் மகவு பெற்றால் தொடர்வது வேதனைதான். பத்து வயதுக்கு மேற்பட்ட ஆண் மகனின் கைரேகையையும், அங்க அடையாளங்களையும் சர்க்கிள் காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். ‘கீரல் சட்டம்என்று இதைச் சொல்வார்கள். அந்த வட்டாரத்தில் ஏதேனும் கிரிமினல் குற்றங்கள் நடைபெற்றால் தண்டோரா போட்டுச் சொல்வார்கள். பின்னர் கைரேகை பதிவு செய்த ஆண்மக்கள் யாவரும் 24 மணி நேரத்தில் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். ஆஜராகாமல் இருப்பவர்களே குற்றவாளி என்று காவல்துறை அறிவித்துவிடும். பின்னர் ஆப்சென்ட் ஆன ஆண்மகன் என்றேனும் மாட்டினால் சித்திரவதையும், சிறைத் தண்டனையும் அவனுக்கு உண்டு.
குற்றப்பரம்பரையினர்’ (Notified Tribe)என்று அறிவிக்கும் சட்டத்தை எதிர்த்து நாடெங்கிலும் எதிர்ப்பு எழுந்தது. திரிபுராவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலும் அச்சட்டத்தை வாபஸ் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடுமையான எதிர்ப்புக்கிடையில் அச்சட்டம் வாபஸ் பெறப்பட்டது. அப்பட்டியலில் இருந்த சமூகத்தினர் பின்னர் சீர்மரபினர் அல்லது De Notified Tribe(DNT) என்றழைக்கப்பட்டனர். ஆனால் காவல்துறையினர் கண்களில் அந்த ’De'என்ற வார்த்தை என்றும் படவில்லை.

சுதந்திர இந்தியாவிலும் தொடர்ந்து அச்சமூகத்தினர் காவல்துறையினரால் கடும் அடக்குமுறைக்கு உள்ளாயினர். அப்படிப்பட்ட பட்டியலில் குறவர்கள் என்ற பிரிவினரும் இருந்தனர். இன்றும் காவல் துறையினர் புகார்கள் பதிவு செய்யும்பொழுது குறரவி, குறகுமார் என்று குற்றவாளிகளின் பெயர்களைக் குறிப்பிடுவதைப் பார்க்கலாம்.
இப்படிச் சமூகம்/சாதி பற்றி சந்தேகக் கண்ணோடு பார்ப்பது மட்டுமல்ல, எந்தத் தனி நபர் மீதும் காவல் துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென்றால் இன்றும் அவர்கள் மீது History Sheeter என்ற கேடி லிஸ்ட் வைத்துப் பராமரிக்க சட்டத்தில் இடமுண்டு. இதில் பெரிய மனிதர்கள், சிறிய மனிதர்கள் என்று வித்தியாசம் பாராட்டப்படுவதில்லை. காவல்துறைக்கு வேண்டுபவர்கள், வேண்டாதவர்கள் என்று வேண்டுமானால் பிரித்துக் கொள்ளலாம்.
காவல்துறை நிலையாணை எண் 746ன்படி(Police Standing Order-PSO)ஒருவர் தொடர்ந்து குற்றங்கள் புரிபவர் அல்லது குற்றம்புரிய உதவி செய்பவர் என்று காவல்துறை கருதினால் அவரை கேடி லிஸ்டில் சேர்த்து அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்கலாம் என்று போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறை ஆய்வாளர் அனுப்பும் சிபாரிசின் மீது ஒரு காவல்துறை கண்காணிப்பாளர் (Dy.S.P) உத்தரவிட்டால் ஒருவர் பெயரை அந்தப் பட்டியலில் சேர்க்கலாம். அப்படிப் பெயர் சேர்க்கப்பட்டவரின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும்; மேலும் அப்படிப்பட்ட நபர் வீட்டில் தங்குகிறாரா என்று இரவு எந்நேரமானாலும் அவரது வீட்டின் கதவைத் தட்டித் தெரிந்து கொள்ளவும் அதிகாரம் காவலர்களுக்கு உண்டு. பந்த், கடையடைப்பு, ஹர்த்தால் என்று எதிர்க்கட்சிகள் போராட்ட அறைகூவல் விடுக்கும் தேதிக்கு முந்தைய நாள் ஆயிரக்கணக்கான சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறை அறிக்கை விடுவதைப் படித்திருப்பீர்கள். அப்படி கைது செய்யப்படுபவர்கள் இந்த ஹிஸ்டரி ஷீடர் () கேடி என்ற நபர்கள்தான்.
இப்படி கேடி லிஸ்டில் வைப்பது ஒருவரது தனிமனித சுதந்திரத்தைப் பறிப்பதாகும், இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 1963ஆம் வருடம் தந்த தீர்ப்பில் இப்படி இரவில் அழையா விருந்தாளிகளாக காவலர்கள் வருவதை அனுமதிக்க முடியாது என்றும், ‘ஒவ்வொரு மனிதனின் வீடும் பலாத்காரத்திலிருந்தும், காயங்களிலிருந்தும் தடுத்துக் கொள்ள ஏற்படுத்திக் கொண்ட அவனது அரணும், கோட்டையுமாகும்என்ற மேற்கோளை ஒரு ஆங்கில நாட்டுத் தீர்ப்பிலிருந்து முன்னுதாரணமாகக் குறிப்பிட்டனர். காவல்துறைக்கு அழையா விருந்தாளியாக சந்தேகத்தின் பேரில்அர்த்தஜாமவிஜயம் செய்யும் அதிகாரத்தை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்.
ஆனால் அதே சுப்ரீம் கோர்ட் 1975ஆம் வருடம் கொடுத்த தீர்ப்பில்தனிமைச் சுதந்திரத்தையும், பொதுநலனையும்ஒப்பிட்டு காவலர்களது கண்காணிப்பு அதிகாரத்தை உறுதி செய்தது. மறுபடியும் 1981ஆம் வருடம் அவ்வதிகாரத்தைப் பற்றி பரிசீலனை செய்த சுப்ரீம் கோர்ட் கேடி லிஸ்ட் தயாரிக்கும் விதிமுறைகளை உறுதி செய்த அதே நேரத்தில் காவலர்கள் அவர்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் பாதிக்கப்பட்ட நபர்கள் கோர்ட்டுக்கு வந்து நிவாரணம் தேடலாம் என்ற உத்தரவாதத்தை அளித்தது.

அப்படி கேடி லிஸ்டில் (History sheet) மாட்டிக் கொண்டோரின் சோகக் கதைகளை இப்பொழுது பார்க்கலாமா?
பழ.கருப்பையாவைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. தற்பொழுது ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர். எழுத்தாளர், பேச்சாளர். திரைப்படத் தயாரிப்பாளர். இப்படி அவருக்கு பல முகங்கள் உண்டு. ஒரு நாள் அவர் காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தின் பக்கம் போகும்போது அங்குள்ள சுவரில் அக்காவல் நிலைய எல்லைக்குள் வசிக்கும் ரவுடிகள் (History sheet) பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. அப்பட்டியலில் இரண்டாவது பெயராக தனது பெயரும் போட்டிருந்ததைப் பார்த்த அவர் அதிர்ந்து போனார்.
அப்படி தமது பெயரைச் சேர்த்ததோடு மட்டுமல்லாமல் அதை காவல்நிலைய வாயிலில் எழுதி வைத்ததையும் எதிர்த்து அவர் ஹைகோர்ட்டில் வழக்கு போட்டார். காரைக்குடிக்கு நீராதாரமாக விளங்கும் ஏரியின் நீரை மற்ற ஊராட்சிகளுக்கு வழங்குவதை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் முன்னணியில் நின்றதால் அவர் மீது பல பொய் வழக்குகள் போடப்பட்டன. அதையொட்டி அப்பகுதி உதவி காவல்துறை ஆணையாளர் (ASP)தனது அதீத கடமையுணர்வில் அவரது பெயரை கேடிகள் பட்டியலில் சேர்த்ததோடு மட்டுமல்லாமல் அதை சுவரில் விளம்பரப்படுத்தவும் உத்தரவிட்டிருந்தார். காவலர் நிலையாணையில் இப்படிப்பட்ட பட்டியலின் ரகசியம் பேணப்பட வேண்டுமென்றிருந்தும் அதைப் புறக்கணித்த அதிகாரியை நீதிமன்றம் கண்டித்ததோடு மட்டுமல்லாமல், போராட்டத்தில் ஈடுபட்டோரை, சமூக விரோதிகளாகக் கருதிய காவல்துறையைக் கண்டித்தது.
பழ. கருப்பையாவுக்கே இந்த நிலைமையென்றால் மற்றவர் நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கவே முடியாது. தங்கள் பெயர்களை கேடி பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்ததை எதிர்த்து மூன்று பேர்கள் ஹைகோர்ட்டின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் பெயர்களைச் சேர்த்த காரணம் கேட்டு ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. அது குறித்த கோப்புகளை ஆராய்ந்த நீதிமன்றம் அதிர்ச்சிக்குள்ளானது.
வாணி என்ற ஒரு பெண் மதுரை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர். அவர் மதுரையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்தார். தனது தாயுடன் அவர் தனியே வசித்து வந்தார். தினமும் மதுரைக்குப் பேருந்தில் சென்று வருவார். அவர் மீது ஒரு திருட்டு வழக்கு போடப்பட்டது. 64 வாதாக்களுக்கு இழுத்து அலைக்கழிக்கப்பட்ட அவர், கடைசியில் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும் அவரை கேடி லிஸ்டில் சேர்த்தது காவல்துறை. அவரைத் தொடர்ந்து கண்காணித்த ஆய்வாளர் கோப்பில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:
நாகரிகமாக உடையுடுத்தி (சல்வார் கமீஸில்) மதுரைக்கு பஸ்ஸில் சென்று ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். திருமணமாகாத அவரது நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியது."

தனிப்பட்ட குரோதத்தின் காரணமாகத்தான் காவல்துறையின் நடவடிக்கை இருந்தது என்று நீதி மன்றம் குறிப்பிட்டது.
தஞ்சை மாவட்டம் அயம்பேட்டைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தின் ஊராட்சித் தலைவர் கணேசன். அவர் விவசாயக்கூலியாக வேலை செய்பவர். தேர்தலுக்கு முன் அவரை கேடி லிஸ்டில் சேர்த்தது காவல்துறை. அவரை ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். தேர்தலுக்குப் பிறகு அவரது கோப்பில் நல்ல முறையில் குறிப்புகள் காணப்பட்டன. ஆனாலும் அவரது பெயர் தொடர்ந்து பட்டியலில் வைத்து கண்காணிக்கப்பட்டதை உயர் நீதிமன்றம் கண்டித்தது.
நெல்லை மாவட்டம் மானூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரது கோப்பில் கண்ட குறிப்புகள் வினோதமானது.
அவர் வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டியில் வீதியில் உலாத்துகிறார்," என்று கூறப்பட்டிருந் தது. அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருப்பதும் இளங்கலைப் பட்டப்படிப்பு படித்தவர் என்பதும் தெரிய வந்தது. வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை போட்டவர்களெல்லாம் கேடி என்று காவல் துறை கருதினால் பல்லாயிரக் கணக்கானோரை இப்பட்டியலில் சேர்க்க வேண்டியிருக்கும் என்று கூறிய நீதிமன்றம் காவல்துறையின் கண்ணியமற்ற நடவடிக்கையைக் கண்டித்தது.
அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளி காவல் நிலையத்தில் ராமநாதன் என்ற INTUC தொழிற்சங்கத் தலைவரின் பெயர், அவரது தொழிற்சங்கம் இயங்கி வந்த ஒரு கம்பெனி நிர்வாகத்தின் தூண்டுதலின் பெயரில் கேடி லிஸ்டில் சேர்க்கப்பட்டது. அவர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகார் அனுப்பினார். அதன் பெயரில் தமிழக அரசிடம் உள்துறை அமைச்சகமே விளக்கம் கேட்டது. தமிழக அரசு, ‘ராமநாதன் பெயர் கேடி பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதுஎன்று பதிலுரைத்தனர். இப்படி காரணமற்ற செயல்களுக்கெல்லாம் ரவுடிப் பட்டி யலில் சேர்த்தமைக்கு காவல்துறைக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்தது ஹைகோர்ட்.
அதேபோல தர்மபுரி மாவட்ட பெரியார் திராவிடக் கழக அமைப்பாளர் வேதியப்பனை ரவுடிகள் பட்டியலில் சேர்த்தது அரூர் காவல்துறை. உள்ளுர் வழக்கறிஞர் ஒருவர் மீது குற்றம்சாட்டி பிரசாரம் செய்ததற்காக அந்த வக்கீலின் தூண்டுதலின் பேரில் அவரது பெயர் லிஸ்டில் சேர்க்கப்பட்டிருந்ததை ஹைகோர்ட் கண்டறிந்து அவரது பெயரை நீக்க உத்தரவிட்டது.
இப்பொழுதெல்லாம் கட்சித் தொண்டர்கள் தெருக்களில் பல பிளெக்ஸ் போர்டுகளில் தலைவர்களது படங்களைப் போட்டுவரலாறேஎன்றெல்லாம் பட்டம் சூட்டி மகிழ்கிறார்கள். படத்திலிருப்பவர்கள் எல்லாம் வரலாறு படைக்கப் போகிறார்களா? அல்லது எதிர்காலத்தில் காவல்துறையின்வரலாற்றாளர் பட்டியலில்சேரப் போகிறார்களா? என்பதை வரலாறே சொல்லவேண்டும்.

நன்றி - கல்கி

2 comments:

Seeni said...

thakvalukku nantri!

'பரிவை' சே.குமார் said...

அருமையான தகவல்கள்....
பகிர்ந்தமைக்கு நன்றி,.