Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Thursday, January 03, 2013

அவர்கள் அப்படியே இருக்கட்டும் - கி.ராஜநாராயணன் - சிறுகதை

http://lh6.ggpht.com/-7d2XBDiXa7k/TuVXaGVYhNI/AAAAAAAAAbE/-yeaZb0LiBg/ki_ra1%25255B3%25255D.jpg 
 
அவர்கள் அப்படியே இருக்கட்டும்

கி.ராஜநாராயணன்
 
ஓவியங்கள் : மருது
 
னிதர்களைப் போலத்தான் வீடுகளும் (கோயில்கள், சத்திரங்கள் பற்றிய சங்கதிகள் வேற).
 அற்புதமான அந்த வீடு இன்னும் இருக்கிறது. அதில் இப்போது மனிதர்கள் இல்லையா?
இருக்கிறார்கள்; எதொ பின்னெ?
அப்படியாப்பட்ட மனுசர்கள் இல்லை.
மனுசர்களை வைத்துத்தானே வீடே. 'அவர்கள்’ இல்லையென்றால், அதை யார் ஏறிட்டுப் பார்ப்பார்கள்.





சிறு பையனாக நான் இருந்தபோது, எனது நண்பன் ராகவலுவோடு இதே வீட்டுக்குள் போனது ஞாபகத்துக்கு வருகிறது. செம்மண் கரையிட்ட அகலமான கோலத்தில் மிதித்துவிடாமல், அந்தப் பூசணிப் பூவைப் பார்த்தபடியே அவனோடு வீட்டுக்குள் நுழைகிறேன். கோயிலைப் போல வீடுகளுக்கும் ஒரு வாசம் இருக்கும் என்று தெரிந்துகொண்டேன். நுழைந்தவுடன் பளிச்சென்று ஒரு பாட்டனார். மீசையும் தலையும் வெளேர் என்று சிரிப்போடு எங்களைப் பார்த்துத் தலை அசைத்தார் வாங்கோ என்பதைப் போல. சோபாக் கட்டிலில் உட்கார்ந்திருந்தார்.



வீட்டின் உள்ளேயிருந்து இனிமையான ஒரு பெண் குரல் பாடும் ஓசை கேட்டது. அந்தப் பாட்டனாரைக் கடந்து உள்ளே போனதும்பனை நார்க் கட்டிலில் அந்தப் பாட்டனார்போலவே ஒரு பாட்டி திண்டில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். பொக்கைவாய்ச் சிரிப்போடு எங்களைப் பார்த்து உள்ளே போகும்படி சொன்னாள்.
போனோம்.



குடிக்க எங்களுக்கு மோர் தந்தார்கள். இன்று வரைக்கும் அந்த மோரை மறக்க முடியலை; அப்படி ஒரு ருசியான மோர்.
ருசி, உறவை நீடிக்கும்போல; அந்த வீட்டோடு ஏற்பட்ட நட்பு அறுபது ஆண்டுகள் ஆகியும் நீடிக்கிறது.



ருசி தொய்ந்துபோனால் உறவும் தொய்ந்துவிடும் என்கிறது வழக்குச் சொல்.
'உண்ணாமல் கெட்டது உறவு’ என்கிறது மற்றொரு வழக்கு.
ந்த வீட்டில் என் வயசுச் சோட்டுப் பிள்ளைகளும் இருந்தார்கள். அந்த வீட்டு மனுசர்களுக்கே மன ஒட்டுதல் அதிகம் என்பேன். சினேகத்துக்கு ஏங்கும் மனசுகள்.



என்னை அந்த வீட்டுக்கு அழைத்துப்போன ராகவலு மேல்படிப்பின் காரணமாக வெளியூர் போனவன்... வெளியூர், வெளி மாநிலம், வெளி நாடு என்று பறந்து போய்விட்டான். திரும்பவே இல்லை.


தூர ஊர்க்காரனான நான் மட்டும் முழு வருஷப் பரீட்சை லீவுகளில் தவறாமல் சில நாட்கள் போய் அந்தப் பிள்ளைகளோடு தங்கியிருந்துவிட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. அன்பைத் தேடும் மனசுகள் நீண்ட நாட்கள் தள்ளியிருக்க முடிவதில்லைதான்.


அந்த வீட்டின் முன்னால் போய் இறங்கியதும், வீட்டுக்காரர்கள் என்னைப் பார்ப்பதற்கு முன்னால் என்னை வரவேற்பது அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் தலை நீட்டி நிற்கும் தங்க அரளிச் செடியின் பூக்கள்தான். அந்த வீட்டுக்காரர்களைப் போலவே அதுவும் தலையை அசைத்து 'வாரும் வே’ என்று சொல்லிவிடும்.


வீடுகளுக்கு அழகு என்று என்னவெல்லாமோ செடிகள் இருக்கின்றன. ஒரு துளசிச் செடி போதும் என்று சிக்கனமாக இருக்கும் வீடுகளும் உண்டு. இந்த வீடு அப்படி இல்லை; செடி கொடிகள் பேரில் அப்படி ஒரு பிரியம். அடங்காத பிரியம். பூக்கள் வாங்க வெளியில் போக வேண்டாம். பூஜைக்கானாலும், தலையில் வைத்துக்கொள்ளவும், வரும் விருந்தாடிகளுக்குத் தலையில் வைத்துவிடவும் வேண்டிய அளவுக்கு வீட்டின் தோட்டமே கொடுத்துவிடும்.
மல்லித் தழையும் கறிவேப்பிலைக் கொழுந்தும் அடுப்படியில் இருந்தே எட்டிப் பறித்துக்கொள்ளலாம். பொதினாக் கீரைக்கு மட்டும் அந்த வீட்டு மண்ணில் இடம் இல்லை. காரணம், அதை இவர்கள் அசைவத்தோடு சேர்த்துவிட்டார்கள். பொதினா அனுதாபிகளுக்கு இது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கும்; என்றா லும் ஒன்றும் செய்ய முடியாது. சைவத்தில் தீவிர சைவம் என்றெல்லாம் இருக்கும்போல் இருக்கு!



சிலருக்கு முருங்கைக்காய் வேண்டாம். வெங்காயத்தையும் வெள்ளைப்பூண்டையும் எதிரிகளாகப் பார்க்கிறவர்கள் உண்டெ.


கொஞ்சம் பால் சாப்பிடலாமே என்று கேட்டால், ஐயோ பாலா... சளி பிடிக்கும் என்று சொல்வதையும் கேட்டிருக்கிறேன். நல்லவேளை, இவர்கள் வீட்டில் இந்த 'ஒப்புரவு’கள் எதுவும் கிடையாது.


இவர்கள் வீட்டுக் குளிப்பறையில் நான் பார்த்த அதிசயம் ஒன்று; வெந்நி அடுப்பு வெளியில் இருக்கும். வெந்நீர்ப் பானையின் வாய் மட்டும் குளியல் அறைக்குள் இருக்கும்; குளிப்பாளி வெந்நீர் அடுப்புப் புகையைப் பார்க்க


முடியாது. கொடியடுப்பு முறையில் செய்யப்பட்டு இருந்தது. இப்படி முயற்சிசெய்து கட்டியிருக்கும் இந்த வீட்டார் யாரும் வெந்நீரில் குளிப்பது இல்லை. என்போன்ற 'சோதா’க்கள்தான் கோடையிலும்கூடக் குளிப்பதற்கு வெந்நீரோ வெந்நீர் என்று அவயமிடுவது.


வெந்நிக் குளியல்காரர்களை இவர்கள் ரொம்பத்தான் கேலி பண்ணுகிறது உண்டு. ஆனால், பச்சைத் தண்ணீரில் குளிக்கும் இவர்களுக்கு, காபி மட்டும் சூடு எச்சாக இருக்க வேண்டும்; இலையில் விழும் சாதமும் அப்படித்தான்.


இந்த வீட்டில் இருந்த நாய்களெல்லாம்கூட எனக்கு சிநேகம்தான். தனது எசமானர்களுக்கு நண்பன் என்பதால், என்னையும் நண்பனாக ஏற்றுக்கொண்டுவிட்டன. கண்ட தும் வாலாட்டிப் புன்னகையைத் தெரிவிக்கும். பூனை களிடம் இந்த ஜம்பம் பலிக்காது. பூனைகளுக்கு மட்டும் அயலார் எப்பவும் அயலார்தான்.


இந்த வீட்டில் வாழ்ந்த, அடுப்படித் தவசிப்பிள்ளைகளில் - உதவிக்கு இருந்த பையன்களில் - இப்போதும் சட்டென்று ஞாபகத்துக்கு வருவது ஒரு ஊமையன். பார்ப்பதற்கு பையன்போல இருந்தாலும் வயது கூடவே இருக்கும். முத்திய மனுசன் அவன்.


'மனுசன் முத்தினால் புத்தி’ என்று சொல்லுகிறது ஒரு சொலவம்.
வாய் பேச முடியாதுதான்; அவனுடைய கண்கள் பேசும். வாய் தவிர உடம்பின் அங்கங்கள் பூராவும் பேசும். நாம் ஒன்றைக் கவனிப்பதுக்கு முன்னால் அவர்கள் கண்டுவிடுகிறார்கள். முகம் பார்த்துப் பரிமாறுவதில் சமர்த்தன். எந்தத் தொடுகறி நமக்குப் பிடித்தம் என்பதை, அதை நாம் பார்க்கும் விதத்தில் இருந்தே கண்டுபிடித்து அதன்படி பரிமாறுவான். இவர்களுடைய அறிநுட்பத்தை அறிந்து சொல்லுகிறது ஒரு சொலவம் இப்படி: 'ஊருக்குள் நடக்கும் அந்தரங்கம் எல்லாம் ஊமைகளுக்குத் தெரியும்’ என்று.



அந்த வீட்டு வில்வண்டிக்கு விலை உயர்ந்த ஓங்கோல் காளைகள் வாங்கிக்கொண்டு வந்திருந்தார்கள். அதைப் பார்க்க உள்ளூர், பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் ரசனையுடையமக்கள் வந்துகொண்டு இருந்தார்கள். கிராமங் களில் இது வழக்கம்தான்.


வந்தவர்கள் காளைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இந்த சமையலறைக் குட்டனோ வந்தவர்களைப் பார்த்துக்கொண்டு இருந்தான். அவர்கள் பார்க்கும் விதங்களை, அவர்களுக்குத் தெரியாமல் நமக்குத் தன்னுடைய முகத்தின் மூலமாக அங்கு இருந்தபடியே உருபரப்பிக்கொண்டு இருந்தான். மகிழ் கலந்த வியப்பு, ஆனந்தம், திருப்தி, பொறாமை கலந்த முகம் இப்படி இப்படி. அன்றைய பார்வை முடிந்த அந்தி நேரத்தின் மம்மல் பொழுதில் தொழு வத்தின் தலை வாசல் படியில் சூடம் பொருத்தித் திட்டிக் கழிப்பான் சமையலறைக் குட்டன்.


அந்த வீட்டுக்கு நான்கு வாசல்கள். தலைவாசல், தொழுவாசல், தோட்டவாசல், புறவாசல். எந்தவிதச் சோலியும் இல்லாமல் அந்த வீட்டைப் பார்க்க என்றே வருவார்கள் மக்கள்.


ஒரு வீட்டுக்கு, ஊரிலும் சுற்றிலும் புகழும் பேரும் சேர்ந்து தொனிக்கிறது என்றால், பல காரணங்கள் இருக்கும். அதிக செல்வம் உள்ளதாக, அதனால் செல்வாக்கும் கூடியதாக, அந்த வீட்டின் பெண்களும் ஆண்களும் பார்ப்பதற்கு அம்சமாகத் தெரியும்படியாக, நல்ல யோக்கியர்களாக இருந்தார்கள்.


இவை அனைத்தோடும், இந்த வட்டகையிலேயே இப்படி ஒரு கூடிய அழகும் குணமும்கொண்ட ஒரு பெண்ணும் அந்த வீட்டினுள் இருந்தாள். அதனாலேயே அந்த வீடும் அழகு பெற்றது. தூரத்தில் இருந்து அந்த வீட்டைப் பார்த்தவர்கள் அவளுடைய அழகோடேயே சேர்த்துப் பார்த்தார்கள்.


இப்போது அவள் இல்லை.

அந்த வீட்டை நெருங்க நெருங்க... என்னுடைய நெஞ்சு படபடக்கிறது. அறுபது ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அந்த வீட்டைப் பார்க்கப் போகிறேன்.
அப்போது அந்த வீட்டில் எல்லாவகைப் பருவத்தினரும் இருந்தார்கள். வங்கிழட்டுப் பருவத்தில் இருந்து பிள்ளைக்கட்டிலில் படுத் துக் குவா குவா என்று கூறும் முட்டு வீட்டுப் பிள்ளை வரை வாழ்ந்திருந்தார்கள். எப்போது பார்த்தாலும் ஒரு கல்யாண வீட்டைப்
போலக் கலகலப்பு. புறப்படும் விருந்தினர்களை வழியனுப்பும் அதே வேளையில், வரும் விருந் தினர்களை வரவேற்கும் உற்சாகக் குரல்களும் கேட்டுக்கொண்டே இருக்கும்.


பகலும் இரவும் ரயில்கள் வந்து நின்றுகொண்டும் புறப்பட்டுக்கொண்டும் இருக்கும் ஒரு பெரிய்ய ரயில் கெடிபோல இருந்தது. இப்பொ... கப்பல்களெல்லாம் புறப்பட்டுப் போய்விட்ட துறைமுகம்போல வெறிச்சோடிக் கிடக்கிறது.


என்னை அங்கே அழைத்துக்கொண்டு வந்த அந்த ஊர்க்காரர்களிடம் கேட்டேன்: ''குமுதவல்லி நாச்சியாள் எப்படிக் காலமானாள்?''
(அவள் எப்படிச் செத்தாள் என்றுதான் கேட்டிருக்க வேண்டும்; முடியவில்லை என்னால்).


கடைசி வரைக்கும் அவளுக்குக் கல்யாணம் ஆகவில்லை. அவளுடைய பெருமூச்சுகள்தான் இந்த வீடு இப்படி ஆனதுக்குக் காரணம் என்று அந்த ஊர்க்காரர்கள் பேசிக்கொண்டார் கள்.


அந்த அழகேஸ்வரிக்கா மாப்பிள்ளை கிடைக்கலை.



நிறைய வந்தார்கள். ஆனால், இவளுக்கான ஜோடிப் பொருத்தம் இல்லை. வந்த மாப்பிள்ளைகள் அவள் காலில் கட்டியடிக்கக்கூட லாயக்கு இல்லாதவர்களாக இருந்தார் கள். அதோடு, இவர்களுடைய சாதிக் காரர்கள் இங்கே மிகக் கொஞ்சம். எல்லாம் பொருந்திவந்தால் ஜாதகப் பொருத்தம் இருக்காது. மனப்பொருத்தங்களை ஜாதகப்பொருத்தம் தகர்த்துவிடும். அந்தஸ்து, லட்சணம் இப்படித் தட்டிக்கொண்டே போனது.



இப்படியான காரணங்களினால் அந்தப் பெண் செல்வத்தை முதிர்கன்னியாகவே நிறுத்திவைத்துவிட்டது. உடம்பு என்பது கல்லினால் செய்த சிலை அல்ல. அது பூத்ததும் காயை நோக்கிப் பிஞ்சும் கனியை நோக்கிக் காயும் என்று ஆவது. பெண்டிருக்கு நாட்கள் ஆக ஆக ஒரு திகில்வந்து பற்றிக்கொள்ளும். உள் உடம்பில் நோய் அல்லாத ஒரு நோய் பரவத் தொடங்கும். அதன் பிறகுதான் 'எமன் பழி சுமப்பானா’ என்று ஏதோ ஒரு நோய் வெளித் தெரிய ஆரம்பிக்கும்.



அவளுக்கு மார்பில் ஒரு சிறிய கட்டி என்று தொடங்கி, வீட்டு இரும்புப் பெட்டியில் சேர்த்துவைத்துஇருந்த ரூபாய் நோட்டுகளுக்கெல்லாம் சிறகு முளைத்து படைக்குருவிகளாகப் பறந்துபோயின.


இந்தச் சமயத்தில்தான் ரெண்டு மூன்று வருடங்கள் மழைகள் அற்று, விளைச்சல்கள் தீய்ந்துபோயின.


'ஆருவச்ச தீயோ...

வீடு எரிந்ததில் குத்தமில்லெ’ என்பதுபோல, கண்ணுக்குத் தெரியாத தீ வந்து வீட்டோடு பொசுக்கிவிட்டுப் போய்விட்டது.


ப்பொ யாரு இருக்கா வீட்டுலெ?


யாரோ அவங்களுக்குத் தூரத்து உறவாம்;


தீபம் பொருத்தி வெச்சிக்கிட்டு இருந்துக்கோங்கனு விட்டிருக்காங்க.
உள்ளெ போயிப் பாக்கலாமா?
பாக்கலாம் பாக்கலாம்; வாங்க போவோம்;
தயங்கித் தயங்கிப் போனோம்.
என் கண்ணுக்கு முதலில் தட்டுப்பட்டது; மரத்தினால் ஆன காய்ந்துபோன நாய்ப் பத்தல். துருப்பிடித்து இத்துப்போன சங்கிலி.
கரையான் அரித்து ஓட்டைகள் விழுந்த காடிப்பலகைகள்.



அதனுள் எட்டிப்பார்த்தபோது பல் குத்த ஒரு தட்டைக் குச்சியும் இல்லை.
கலயம் கலயமாகவும் சருவச்சட்டி வழிய பால் கறந்த தொழு.
வீட்டுத் தோட்டத்தில் எந்தப் பச்சையும் இல்லை; களைகள் உட்பட.
வீடு திறந்தே இருந்ததால் உள்ளே போகலாம் என்று பட்டதால் நுழைந்தேன், 'கப்’ என்று மூக்கு சுளிக்கும் ஒரு வாடை.



பேசும்போதே பற்கள் ஆடும்படியான வாயுடன் ஒரு கிழவனார் வந்து, 'வாருங்க’ என்றார். அந்த வாடை அவரிடம் இருந்துதான் வீடு பூராவும் பரவியிருக்குமோ என்றுபட்டது.


காலம் என்கிறதற்கு ஈவு இரக்கம் என்பதே கிடையாதோ; அடடா என்றிருந்தது.
மேற்கொண்டு உள்ளேபோக மனசில்லை. வெளியே விட்டிருந்த பலகையிலும் உட்காரத் தோன்றவில்லை.


வீட்டுக்குப் பின்புறத்தில் இருந்த தோட்டப் பாதை வழி நடந்தேன். குளிர் கலந்த மார்கழி மாதத்து மஞ்சள் வெயில். பழைய தோட்டப் பகுதியில், பனை ஓலையால் மேல்கூரை போட்டு வேயப்பட்ட ஓர் இடம் தெரிந்தது. அதைப்பார்த்து நடந்தேன். நான் கேட்காமலேயே, அதுதான் குமுதவல்லி நாச்சியாளின் சமாதி என்றார்கள்.


அதைப் பார்க்கும் ஆர்வத்தில் நடை கூட்டினேன். பராமரிப்பு இல்லாததால் சமாதியின் மேல் பறவைகளின் எச்சங்கள் தூரத்தில் இருந்தே பார்க்க முடிந்தது.


கூரையின் குறுக்கு விட்டத்தில் பச்சை நிறத்தில் நான் பார்த்தறியாத இரண்டு பட்சிகள் நெருக்கமாக அமர்ந்து கொண்டு கழுத்து ரோமங்களை ஒன்றுக்கொன்று கோதி விட்டுக்கொண்டு இருந்தன. கிட்டே போனால் கலைந்து பறந்து போய்விடக் கூடும் என்பதால், பின்வாங்கி அப்படியே திரும்பிவிட்டேன். அவை என்ன பறவை என்பது எனது பறவை ஞானத்தால் அறிந்துகொள்ள முடியவில்லை.


எனக்குப் பின்னால் வந்துகொண்டு இருந்த அந்த வயசாளி என்னிடம், இந்தக் கூரையை எடுத்துவிட்டு கட்டடமே கட்டவிருப்பதாகச் சொன்னார்.


வேண்டாம் வேண்டாம்... பறவை எச்சத்தை அடிக்கடி சுத்தப்படுத்திக்கொண்டு இருந்தாலே போதும்; கூரையே இருக்கட்டும் என்று நான் அவசரமாகச் சொன்னதை ஆச்சர்யமாகப் பார்த்தார்.



ஏம் அப்படிச் சொல்லுகிறீர் என்று அவர் கேட்டிருந்தால், உடனே பதில் சொல்லியிருக்க முடியாதுதான்.


எனது சிறிய வயசில் என் தகப்பனார் ஒரு வைணவப் பாகவதரோடு பேசிக்கொண்டு இருந்தபோது என் காதில் விழுந்தது இப்போது ஞாபகத் துக்கு வருகிறது.


'ஒரு சமயம், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு குட முழுக்கு வந்தது.
சந்நிதியின் மூலஸ்தான அறையின் உட்சுவர்களில் விட்டில்பூச்சிகள் போல-ஆனால், அவை விட்டில் பூச்சிகளும் அல்ல- இன்னவை என்று அறிந்துகொள்ள முடியாத அந்த ஜீவராசிகளை அழித்துச் சுத்தப்படுத்த வேண்டியதுதான் என்று தீர்மானித்தபோது, பூஜை செய்யும் பட்டர்களிடையே கடுமை யான எதிர்ப்புக் கிளம்பியது.


தர்மகர்த்தாக்கள், நிர்வாகிகள், முக்கியப்பிரமுகர்கள் 'குடமுழுக்கு என்றால் மூலஸ்தானத்தின் உட்சுவர் கள் உட்பட சகல கசடுகள் பூராத்தை யும் சுத்தப்படுத்திவிட வேண்டியது தான்’ என்று சொன்னார்கள்.
இரு கட்சிகளாக நடந்த விவா தத்தை யாராலும் முடித்துவைக்க முடியவில்லை.


மூலஸ்தானத்தின் உட்சுவர்களில் வாழ்ந்துகொண்டு இருப்பது வெறும் பூச்சிகள் அல்ல; இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டவர்கள் - பக்தர்கள் - சீனிவாசப் பெருமானைச் சரண் அடைந்தவர்கள். மூலஸ்தானத்தினுள் இருந்துகொண்டு அவனையே பார்த்துக்கொண்டு இருப்பவர்கள். அவர்களின் அந்த பாக்கியத்தைத் தடுக்க நாம் யார்? அப்படியே இருக்கட்டும், விட்டுவிடுங்க என்கிற கட்சி வலுப்பெற, அப்படியே விட்டு விட்டார்கள் என்பது செய்தி.’


நன்றி  - விகடன்

Tuesday, January 01, 2013

மஞ்சள் காத்தாடி- உமா ஜானகிராமன் - சிறுகதை





மஞ்சள் காத்தாடி!

கதை :உமா ஜானகிராமன்
ஓவியம் : மகேஷ்

விசாலி இன்னும் எழுந்திருக்கவில்லை. ஐந்து மணிஆனதும், அலாரம் அடித்தது போல, ரப்பர் பந்து மாதிரி துள்ளிக் குதித்து எழுந்து விடும்விசாலி, படுக்கையிலேயே சுருண்டு கிடந்தாள்.
விசா.. குட்மார்னிங்!"
அவளை நெருங்கி அணைத்துக் கொண்ட வாசுவுக்குதிக்என்று இருந்தது.
விசாலியின் உடல் நெருப்பாய்த் தகித்துக் கொண்டிருந்தது.
என்னடா... என்ன உடம்புக்கு?" பதறினான் வாசு.
உம்... ராத்திரியெல்லாம் ஒரே தலைவலிங்க. இப்ப என்னடான்னா ஜுரம் அடிக்குது. வாந்தி வர்ற மாதிரி இருக்கு!"
என்னை எழுப்பியிருக்கலாமில்ல? என்ன பொண்ணு நீ? என்றவன் தொடர்ந்து, சரி, எழுந்திரு. ஒரு பாரசிடமால் தர்றேன். போட்டுக்க!" என்றான் நெற்றியில் பிரியத்துடன் முத்தமிட்டு.
வேணாங்க. அப்படியே சமாளிக்கப் பார்க்கிறேன்!" மேடிட்ட வயிற்றுடன் மெள்ள எழுந்து உட்கார்ந்தாள் விசாலி.
சூடா சுக்கு மல்லி காப்பி போட்டுத் தர்றேன் குடிச்சுட்டுப் படு. ஆபீஸுக்கு லீவு சொல்லிடறேன்!"
லீவா... அவ்ளோதான்! என்னை ஹிட்லரம்மா அப்படியே கிழிச்சு பீஸ் பீஸ் ஆக்கிருவா!"
மெடிக்கல் சர்டிஃபிகேட் கொடுத்துடலாம்!"

ஐயோ! இம்பாஸிபிள்! இன்னிக்கு ஆபீசுல டீலர்ஸ் மீட்டிங் இருக்கு. நான் பக்கத்துலயே நிக்கணும்." என்ற படியே மெள்ள எழுந்து பாத்ரூமுக்குள் போனபோது, வாசுவின் மனது சங்கடப்பட்டது.
சரியாக எட்டரை மணிக்கெல்லாம் அலுவலகத்துக்குள் நுழைந்து விட்டாள் விசாலி. தலைவலி குறையவே இல்லை. வாயெல்லாம் கசந்து குமட்டிக் கொண்டே இருந்தது.
என்ன சொல்றான் பையன்?" என்றபடி, அவளது இடுப்பைத் தொட்டுத் தடவினாள் அக்கவுன்டென்ட் ஹேமா. அவளும் டீலர் மீட்டிங்குக்காக சீக்கிரமே வந்து விட்டிருந்தாள்.
தபால், கூரியரில் வந்த கடிதங்களைப் பிரித்து ஒழுங்குபடுத்தி, க்ளிப் போட்டாள். சில முக்கியமான கடிதங்களை டைப் செய்து -மெயில் அனுப்பினாள்.
புதிய ஸ்டாக்குகளின் பட்டியலைச் சரிபார்த்து வரவு வைத்தாள். சப்ளை ஆனவற்றுக்குப் பணம் வந்து விட்டதா என செக்குகளை சரி பார்த்தாள். ஒன்றரை மணி நேரம் மடமடவென்று எல்லா வேலைகளும் முடிந்த போது, ஹிட்லரிடமிருந்து அழைப்பு வந்தது.
விசாலிம்மா. டீ சாப்பிடுங்க!" என்று பியூன் பாபு சொல்லச் சொல்ல பரபரப்பாக மாடிப்படி ஏறினாள் விசாலி.
ஏம்மா, புள்ளதாய்ச்சிப் பொண்ணை தினம் இருபது தடவையாவது படி ஏற வைக்கிறா பாரு. பொம்பளையா அவ? ராட்சசி!" பியூன் பாபு நறநற என்று பல்லைக் கடித்தான்.
என்னா பாபு பண்றது? நாங்கள்லாம் உன்னை மாதிரியா? குடும்பம் குட்டின்னு ஆகிப் போச்சு! நாலு காசு சேர்க்கணும்னா நாறப் பிழைப்பு பொழைச்சாகணுமே!" ஹேமா அலுத்துக் கொண்டாள்.
விசாலி உள்ளே நுழைவதை முட்டைக் கண்கள் விரிய ஏறிட்டுப் பார்த்தாள் கிருஷ்ணவேணி அலையஸ் ஹிட்லர்!
ஐம்பது வயது கடந்திருந்த கிருஷ்ணவேணி, மெகா சைஸ் குஷன் சீட் கொள்ளாமல் நிரம்பி வழிந்திருந்தாள். சிவப்பு நிற லிப்ஸ்ட்டிக்கும், பாப் செய்த தலை முடியும், அவள் வயதைக் கூட்டிதான் காட்டின.
ஷார்ட்-ஹாண்ட் நோட், பென்சில் சகிதம் உள்ளே நுழைந்த விசாலியைப் பார்த்ததுமே மேனேஜர் கிருஷ்ணவேணிக்கு எரிச்சல் புகைந்தது.
போன வருஷம் கல்யாணம்; உடனே வயித்தைச் சாய்ச்சாச்சு!’ - இது ஒரு கடுப்பு.
அந்த நீளக் கழுத்து, தாழம்பூ நிறம், மெல்லிய உடல்!’ - அதில் ஒரு பொறாமை!
ஐம்பதாயிரம் சம்பளம், .ஸி.கார் என இருக்கும் என் கை, முகம் எல்லாம் சொரசொரப்பாக இருக்க, பத்தாயிரம் சம்பளம் வாங்கும் இவளுக்கு எப்படி வந்தது இப்படி ஒரு தேக மினுக்கல்?’ - வெறுப்பு பிறாண்டியது.
நீ என்ன ஃபூலா? எத்தனை முறை சொல்லியிருக்கேன்? முக்கியமான ஃபைலை வீட்டுக்கு அனுப்புன்னு? ஏன் அனுப்பலை?"
மேஜையைக் குத்தி உரத்தக் குரலில் கத்தினாள் கிருஷ்ணவேணி.
மேடம்... ஃபைலை டிரைவர்கிட்ட கொடுத்து அனுப்பினேனே!"
கொடுத்துட்டு... எனக்கு ஏன் கால் பண்ணலை? அவன் கொண்டு போய் எங்க ஒழிஞ்சானோ? ப்ளடி நான் சென்ஸ்!"
முகத்தின் சதையெல்லாம் ஆட, அவள் கத்தியதைப் பார்த்ததும் விசாலியின் மண்டையிடி அதிகமானது.
மதியவேளை. டீலர்ஸ் மீட்டிங் முடிந்து ஏஜெண்ட்டுகளும், டீலர்களும் வெளியே வந்த போது, விசாலிக்கு இடுப்பு கனத்து வலித்தது. பசி வேறு கிள்ளி எடுத்தது.
டிபன் பாக்ஸைத் திறந்து நாலு வாய் சாப்பிடுவதற்குள், கிருஷ்ணவேணியிடமிருந்து அழைப்பு.
மோகன்தாஸ் அன் கோ கொடுத்த கொட்டேஷன் கொண்டா. க்விக்!"
என்ன இம்சைடி! சாப்பிடக் கூட விட மாட்டேங்கிறா!" ஹேமா தலையில் அடித்துக் கொண்டாள்.
இடுப்பு வலி, பசி, சுயபச்சாதாபம் எல்லாம் சேர்ந்ததில் விசாலியின் கண்களில் நீர்ப்படலம் மினுக்கியது.
சே! இதுக்கு ஏண்டி அழற? ஹிட்லருக்கு காம்ப்ளெக்ஸ். கல்யாணம் இல்ல; குழந்தை குட்டி இல்ல. அதனால அவளுக்கு நம்பளைப் பார்த்தாலே காரணமே இல்லாம எரிச்சல் வருது. போன வாரமெல்லாம் என் மேலே எரிஞ்சு எரிஞ்சு விழுந்தா... இப்ப நீ மாட்டிக்கிட்ட!"

தோட்டத்துப் பக்கம் போய், டிபன் பாக்ஸைக் கழுவி விட்டு வந்தாள். வேலியோரம் ஓர் ஓணான். பழுப்பு நிறத்தில் மஞ்சள் முகத்துடன் உட்கார்ந்திருந்தது.
விசாலிக்கு ஓணான் என்றாலே பாவம்தான். சிறு வயதில் அவளது தெருப் பசங்க எல்லாம், டேய்... ஒடக்காத்திடா!" என்று தேடித் தேடிக் கல்லால் அடிப்பார்கள்.
டேய்.. ப்ளீஸ்டா... பாவம்டா... விட்டுடுங்கடா!" என்று விசாலி கெஞ்சுவாள். குற்றுயிராகக் கிடக்கும் அதன் வாலில் நூலைக் கட்டி, ‘கர கரஎன்று சுழற்றுவார்கள்.
அதுவேபுர்...புர்...’ என்று மூச்சு விட்டபடி, கொம்பை சாய்த்து முட்ட வரும் சிவன் கோயில் காளையைப் பார்த்தால் ஓடுவார்கள். மிலிட்டரிக்காரர் வளர்த்த அல்சேஷன் நாயைக் கண்டால், பயத்துடன் ஒதுங்குவார்கள்.
ஓணான் பாவம்! வாயில்லாத பூச்சி! பெரிய கொம்போ, கூர்மையான பல்லோ இல்லாத ஜந்து. எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாத அதை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யார் கேட்பது?
ஒருவித சம்பந்தமுமில்லாமல் திடீரென்று தானே ஓர் ஓணான் ஆக மாறிவிட்டது போன்ற பிரமை ஏற்பட்டது. பயமும், அருவருப்புமாக குமட்டிக் கொண்டு வந்ததில், சாப்பிட்ட அத்தனையையும் வாந்தி எடுத்தாள் விசாலி.
மதியம் மூன்று மணி. தலை கிறுகிறுக்க அப்படியே மேஜை மீது தலை சாய்த்தாள் விசாலி. இரவு தூங்காமல் கண் விழித்த அசதியோ என்னவோ, சரியாக ஆறு நிமிடங்கள் தூங்கியே போனாள்.
வெரி குட்! சூப்பர்... ...... ஹா!"
கைதட்டியபடி எதிரே நின்றாள் கிருஷ்ணவேணி. பதற்றத்துடன் விசாலி எழவும், பக்கத்திலிருந்த அலமாரியிலிருந்து கனத்த ஃபைல் ஒன்று கிருஷ்ணவேணியின் காலின் மீது விழவும் சரியாக இருந்தது.
வந்த கோபத்தில் என்ன செய்வதென்றே தெரியாத கிருஷ்ணவேணி, ஒரு ஃபைலை எடுத்து, விசாலி மீது எறிய... அதை அப்படியே கேட்ச் பிடித்தாள். பின் பேசத் தொடங்கினாள்.
லுக் மேடம்! நான் உங்க அடிமையில்லை. இது ஒண்ணும் கடைசி ஆபீஸும் கிடையாது. நான் இந்த ஊருக்கு வந்த போது, ‘சென்னை, சென்ட்ரல்னு கேட்டுத்தான் டிக்கெட் வாங்கினேன். ‘எஸ்.எஸ். ஏஜென்ஸின்னு கேட்டு வரலை. உங்க நல்ல நேரம் நான் இப்போ ரொம்பப் பொறுமையா இருக்கேன். மொதல்ல மனுஷியா நடந்துக்குங்க. அப்புறம் மேனேஜரா பிகேவ் பண்ணலாம். உங்க இயலாமைக்கு மத்தவங்கள வடிகாலா யூஸ் பண்றது கோழைத்தனம். இதப் புரிஞ்சுக்கங்க. குட்பை மிஸ் ஹிட்லர்!"
விசாலியின் வார்த்தைகளில் இருந்த நிதானம் தன் முகத்தில் காறித் துப்புவதைப் போல உணர்ந்து குறுகிப் போய் நின்றாள் கிருஷ்ணவேணி.
சத்தம் கேட்டு வந்த ஹேமாவும், பியூன் பாபுவும் மகிழ்ச்சியை மறைத்துக் கொண்டு மௌனமாக நின்றார்கள்.
விசாலி, தன் ஹாண்ட்பேக்கை எடுத்துக் கொண்டு படிகளில்தடதடஎன்று இறங்கிப் போனாள்.
வெளிப்புற கேட்டைத் திறக்க யத்தனித்தபோது, குரோட்டன்ஸ் செடி மீது இருந்த ஓணான், தலையைத் தூக்கிப் பார்த்து, விருட்டென்று புதருக்குள் ஓடி மறைந்தது.
பதற்றத்துடன் ஓடிய ஓணான் முகத்தில் பாப் கட் வைத்து, சிவப்பு நிற லிப்-ஸ்டிக் பூசியது யார்?
ஒருவேளை, மிரண்ட கண்களுடன் நிற்கும் கிருஷ்ணவேணிதான் இந்த ஓணானா? சிரிப்பு வந்தது விசாலிக்கு!
சாலையில் இறங்கி, பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். தூரத்தில் மஞ்சள் நிறக் காத்தாடி ஒன்று, தனது நீண்ட வாலை ஆட்டி ஆட்டி வேகமாகப் பறந்துகொண்டிருந்தது.
... பட்டமே! உனக்கொரு சேதி! இன்றிலிருந்து நானும் சுதந்திரமாய்ப் பறந்து கொண்டிருப்பேன். ஆமாம், உன்னைப் போலவே உல்லாசமாய்!"
விசாலி, கர்வத்துடன் நடைபோட்டாள். மனசு, மழை பெய்த சாலை போலபளிச்என்றிருந்தது!
 நன்றி - கல்கி