Skip to content

Sunday, December 27, 2015

குற்றமும் தண்டனையும்: இனி சுதந்திரமாகத்தான் இருக்கப் போகிறானா அந்தச் சிறுவன்?-மு.அமுதா

ஓவியம்: தீபக் ஹரிசந்தன்.
ஓவியம்: தீபக் ஹரிசந்தன்.
நிர்பயா வழக்கில் இளம் குற்றவாளி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதன் எதிரொலியாக, தீவிர குற்றங்களில் ஈடுபடும் 16 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களை, வயது வந்தோராகக் கருதி நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சிறார் நீதிச்சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
'பாப்புலர் சென்டிமென்ட்' என்ற கூறப்படும் மிகப் பிரபலமான ஓர் உணர்ச்சிமிகுதியின் வெளிப்பாடாகவே இந்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக பொதுவெளியில் கூறப்படுகிறது.
சிறுவன் விடுதலையும், அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட மசோதாவும் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.
1. விடுதலையான இளம் குற்றவாளி உண்மையிலேயே இனி சுதந்திரமாக இருக்கப் போகிறாரா?
2. சிறுவன் மூன்று ஆண்டுகளாக பாதுகாப்பு மையத்தில் இருந்தபோது அவரது சீர்திருத்ததுக்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன?
3. சீர்திருத்தப் பள்ளிகளில் அடைக்கப்படும் சிறுவர்களை குற்றத்தை உணரச்செய்து, மனநலத்தைச் சீரமைத்து, மறுவாழ்விற்குத் தயார்ப்படுத்தும் முழுப் பொறுப்பு யாரிடம் இருக்கிறது?
4. ஒரு சிறுவன் பெருங்குற்றம் செய்து அது செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகும் வரை அந்தச் சிறுவன் அக்குற்றத்தை செய்யத் தூண்டிய பின்புலனும் காரணிகளும் கவனத்தில் வராதது ஏன்?
5. இத்தனை விமர்சனங்கள், நெருக்குதல்களுக்குப் பின் விடுதலையாகியுள்ள சிறுவனை இந்தச் சமூகம் எப்படி அணுகும்?
இது போன்ற இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன.
நிர்பயாவின் கொடூரக் கொலை போல இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பெண் என்ற சக உயிரின் மீதே ஆண் என்ற பிம்பம் தாக்குதல் நிகழ்த்துகிறது, நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது.
இளஞ்சிறார் சட்டப்படி, பத்து முதல் பதினெட்டு வரை உள்ளவர்கள் குழந்தைகள், அவர்களுக்குத் தண்டனைக் காலம் குற்றங்களின் தன்மையை வைத்து மாறினாலும், பெரும்பாலும் எத்தனை ஆண்டுக் காலம் என்றாலும், அந்தத் தண்டனைக் காலம் என்பது அவர்களின் குற்றத்தை உணரச்செய்து, மனநலத்தைச் சீரமைத்து, மறுவாழ்விற்குத் தயார்ப்படுத்துவது போன்றவையே சட்டத்தின் நோக்கம்.
இந்த எல்லாச் சட்ட நோக்கமும் அப்படியே நிறைவேறினால் இங்கே குற்றங்களின் எண்ணிக்கை, பெருமளவு குறைந்து போகும்.
இந்தக் குழந்தைகள் ஏன் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் அல்லது ஈடுப்படுத்தப்படுகிறார்கள்?
வீட்டில் நிலவும் சூழல், குழந்தைகளுக்கு ஒரு நீதியும் நமக்கொரு நியாயமும் என்று பெரியவர்கள் நடந்துகொள்ளும் முறைகள், அவர்களின் கண்முன்னே நிகழும் குடும்ப வன்முறைகள், தங்கள் வீட்டுப் பெண்களை ஆண்கள் நடத்தும் விதம், அல்லது வீட்டில் உள்ள பெண்கள் நடந்து கொள்ளும் விதம், முறையான அடிப்படைக் கல்வி கிடைக்காத நிலை, வறுமை, இக்கட்டான சூழ்நிலை என்று வீட்டில் உள்ள ஏதோ ஒன்றில் ஒரு குழந்தை பாதிக்கப்படுகிறது, பாதிக்கப்படும் குழந்தையை அரவணைக்கும் யாரோ ஒருவர் இருந்தால் கூட அந்தக் குழந்தைத் தவறு செய்வதில்லை.
வீட்டில் கிடைக்காத அன்பையும் ஆதரவையும் குழந்தைகள் வெளியில் தேடும், தன் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள், குடும்பங்கள் என்று அதன் வெளி வட்டம் பெரிதாகும்போது, அந்த வெளிவட்டத்தில் சமூக விரோதிகளும், குற்றவாளிகளும் இருந்துவிட்டால், அல்லது ஒரு குழந்தையைப் போலவே பாதிக்கப்பட்ட மற்றொரு குழந்தையும் துணை சேர்ந்தால், தவறுகள் இயல்பாகும்.
இருவேறு சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.
முதல் சம்பவம்:
ஒன்று ஆதரவற்ற இல்லத்தில் நிகழ்ந்தது, அங்கு ஒரு பதினான்கு வயது மாணவனை, மாலை வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த ஓர் இருபது இருபத்திரண்டு வயது பெண், கையில் ஒரு பிரம்பை வைத்து அடி அடியென்று அடித்துக் கொண்டிருந்தாள், தடுத்துவிட்டு வந்தபோது, அந்த இல்லத்தின் பொறுப்பில் இருந்தால் மற்றுமொரு ஆசிரியை, அனாதைகளான இந்தச் சிறுவர்களை மிகுந்த கண்டிப்புடன் அடித்து உடைத்து வளர்த்தால்தான் ஒழுங்காய் வளர்வார்கள் என்று சொன்னதைக் கேட்டதும் வேதனைதான் மிஞ்சியது.
இரண்டாவது சம்பவம்:
இரண்டாவது நிகழ்வு நான் பள்ளியில் படிக்கும்போது என் பக்கத்து வீட்டில் குடியிருந்த ஒரு குடும்பத்தைப் பற்றியது, கணவன் மனைவி இருவரும் படிக்கவில்லை, அவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள், அவர்களின் மூத்த மகனுக்கு இரண்டாவது மகனுக்கும் இரண்டே வயது வித்தியாசம், ஏழு வயது மூத்த மகனை, எல்லாம் தெரிந்தவனாய் இருக்கவேண்டும், தம்பியும் தங்கையும் குறும்பு செய்யலாம், தவறு செய்யலாம், ஆனால் ஏழு வயது கழுதை அதைச் செய்யலாமா என்று பொழுது தவறாமல் ஒரு பிரம்பை வைத்து அவனை அடிப்பார்கள், யார் சொன்னாலும் அந்தப் பெண் கேட்டதேயில்லை, கூடவே அச்சிறுவனின் தகப்பனும், அடி உதை மட்டுமே வாங்கிய மூத்தமகன், யாருடைய அரவணைப்பும் இன்றி, மனநிலைப் பிறழ்ந்து, அவனுடைய இருபத்திரண்டு வயதில் தொலைந்துபோனான், மனநிலைப் பிறழ்ந்த மகனின் ஏக்கத்தில் இருந்த பெற்றோருக்கு, இளையவன் என்று தூக்கி கொண்டாடிய மகன், தகாத நட்பினால் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, ஒருநாள் மெரினாவின் கடலலையில் சிக்கி உயிரை விட்டுவிட்டான் என்ற செய்தி அடுத்த இடியாக இறங்கியது.
ஏறக்குறைய மனச்சிதைவுக்கு ஆளாகிவிட்ட பெற்றோர், ஒரே பெண்ணை வெளியில் எங்கும் அனுப்பாமல், எப்படியோ திருமணம் செய்து கொடுத்து அனுப்பி விட்டனர்.
ஆதரவில்லை என்றாலும், பெற்றோர் இருந்தாலும் எல்லாப் பிள்ளைகளுக்கும் அரவணைப்புக் கிடைத்துவிடுவதில்லை, ஒரே குழந்தை என்று மிதமிஞ்சிய அன்பும், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால் மிதமிஞ்சிய கண்டிப்பும் குழந்தைகளின் ஏதோ ஒரு தவறுக்கு அடித்தளம் அமைக்கிறது, கண்டுகொள்ளப்படாத சிறு தவறுகள் காலப்போக்கில் பெரும் குற்றங்களுக்கு ஏதுவாகிறது.
மாற்றம் என்பது தண்டனையில் வருமா?
குழந்தைகள் ஈடுபடும், அல்லது ஈடுபடுத்தப்படும் குற்றங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு மனநிலைப் பிறழ்வால், சூழ்நிலையால், போதிக்கப்பட்ட எண்ணங்களின் விளைவால், கூடா நட்பினால், சமூகத்தால், பெற்றோர்களின் அலட்சியத்தால் என்று ஏதோ ஒரு காரணத்தினால் நிகழ்ந்துவிடுகிறது.
குற்றவாளிகளை நாம்தான் உருவாக்குகிறோம், நம்முடைய தவறு, ஒரு குழந்தையைக் குற்றவாளியாக்குகிறது, இன்னொரு குழந்தையை அந்தக் குற்றத்திற்கு இரையாக்குகிறது.
பத்திரிகைகளில், விளம்பரங்களில், தொலைக்காட்சித் தொடர்களில், திரைப்படங்களில் பெண்ணென்றால் போகப்பொருள், ஆணுக்குப் பெண் அடிமைபட்டவள், ஒழுக்கமும் கற்பும் பெண்ணுக்கே உரியது, ஆடை என்பது பெண்ணுக்கு அரண், இதில் தவறும் எந்தப் பெண்ணும் தண்டிக்கப்பட வேண்டியவள் என்று கருத்துக்கள் நேரிடையாகவோ மறைமுகமாகவோ தொனிக்கும் வகையில் தான் சித்தரிக்கப்படுகிறார்கள். இவை நாம் சகித்துக் கொள்கிறோம் அல்லது ரசிக்கிறோம்!
வீட்டில் வெளியில் என்று எதிலும் நாம் மாற்றத்தைக் கொண்டு வராமல், அதற்கான கட்டமைப்பை உருவாக்காமல் சட்டங்களை மட்டுமே மாற்றி என்ன பயன்?
தண்டனை என்பது ஒரு பயமுறுத்தும் காரணியாக இருக்கிறது. தண்டனையை அதிகப்படுத்துவது குற்றங்களைக் குறைக்க உதவுமா அல்லது குற்றத்தை மறைக்கத் தூண்டுமா என்பதை நாம் யோசிக்க வேண்டும், தண்டனைக் கொடுத்துச் சிறையில் தள்ளி, வாழ்க்கையை முடித்துவிட்டால் அது பிறருக்கு பாடமாய் இருக்குமா? இருக்கும் தான், இல்லையென்று சொல்ல முடியாது, அது மட்டுமே போதுமா?
இளஞ்சிறார்களின் தண்டனைக்குரிய குற்றங்களுக்கு வயதைக் குறைத்துக் கொண்டே போவது மட்டுமே தீர்வு ஆகாது. பதினெட்டில் இருந்து பதினாறாக ஆக்கி, பின்பு அதையும் குறைக்கும் காலம் வரலாம்!
தீர்மானம் தீர்வா?
ஒரு நிர்பயாவை கொன்றவர்களில், இளம் குற்றவாளி ஒருவன் பேசும் பேச்சு பாமரச் சமூகத்தைப் பிரதிபலிக்கிறது, அவனுக்காக வாதாடிய வழக்கறிஞர்களின் பேச்சுப் படித்த சமூகத்தைப் பிரதிபலிக்கிறது... இந்தச் சமூகத்தைத் தண்டிக்காமல் அல்லது திருத்தாமல் இந்தக் குற்றவாளிகளை மட்டுமே தண்டிப்பதால் மாற்றம் நிகழாது!
மாற்றங்களை நாம் வீட்டில் இருந்து தொடங்கவேண்டும், எந்தக் குழந்தைக்கும் நல்ல கல்வியும், நல்ல உணவும், அன்பும் ஆதரவும் தேவை, குறைந்தபட்சத் தேவைகளைச் சமூகம் பூர்த்திச் செய்யாதபோது சட்டங்கள் என்பது குற்றவாளிகளைத் தண்டிக்கக் கால சூழலுக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கும் அல்லது நாம் மாற்றிக்கொண்டே இருப்போம், குற்றங்கள் மட்டும் குறையாது.
பல்லாயிரக்கான குழந்தைகளை இந்தச் சமூகத்தின் அலட்சியம் அரசியல்வாதிகளின் சுயநலம் குற்றவாளிகளாக்கிக் கொண்டிருக்கிறது, பதைக்க வைக்கும் என்சிஆர்பி புள்ளி விவரத்தின் படி 2014 ஆம் ஆண்டு 36,138 வழக்குகள் இளம் குற்றவாளிகளின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 75 சதவீதம் குற்றங்களைச் செய்தோர் பதினாறில் இருந்து பதினெட்டு வயதுக்கு உட்பட்டோர். இதே காலகட்டத்தில் நாடு முழுவதும் பதிவான ஒட்டுமொத்த குற்ற வழக்குகள் 28,51,563. இவற்றில், சிறார் குற்றங்களின் பங்கு வெறும் 1.27 சதவீதம் மட்டுமே. அதாவது, 2 சவீதத்துக்கும் குறைவு.
எண்ணிக்கை வழங்கும் உண்மை நிலவரம் இப்படி இருக்க, இளம் குற்றவாளிக்கான வயது வரம்பு 16 ஆக குறைக்க வகை செய்வது என்பது, எதிர்காலத்தில் வழிதவறும் குழந்தைகளின் வாழ்க்கையை முற்றிலும் சிதைக்கும்படி தண்டனைகள் வழிவகுத்திடுமோ அல்லது பல்வேறு சட்டப் பிரிவுகள் போலவே இதுவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, அப்பாவிச் சிறார்களை சிறைவாசம் அனுபவிக்கச் செய்துவிடுமோ என்ற அச்சங்களை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.
நம்முடைய இயந்திர வாழ்க்கையின் சுயநல எந்திரங்கள் பழுதடையும்போது நம்முடைய இளைய தலைமுறை மொத்தமும் சிறையில் இருக்க நேரிடலாம்... மாற்றம் அவசியம் மனநிலையிலும் சமூகத்திலும்.
மு.அமுதா - தொடர்புக்கு [email protected]

தஹிந்து


  • Kailash  
    ஒரு குற்றம் நடந்த பிறகு கொடிய தண்டனை கொடுக்க வேண்டும் என்று அனைவரும் சமுக ஆர்வலர்கள் மற்றும் அனைவரும் போராடுவர், இருக்கும் அதர பழசான சட்ட புத்தகத்தை தூசி தட்டி தீர்ப்பு கொடுத்தபிறகு அனைவரும் மறந்துவிடுவர். பிறகு குற்றவாளி விடுதலைஆனவுடன் இது போன்ற சமுக ஆர்வலர்கள் அவனின் எதிர்காலம் குறித்து கவலை படுவார்கள். சமூகத்தினால் அவன் கெட்டுவிட்டான் அதனால் சமுகத்திற்கு தான் தண்டனை கொடுக்கவேண்டும் என்று விதண்ட வாதம் செய்வர்! சமுகம் கெட்டுவிட்டால் அதில் இருக்கும் சில நச்சுகளை அகற்றினால் தானே சமுகம் சுத்தமாகும்? இளம் குற்றவாளியை (மன்னிக்கவும்!) சிறுவனை (தற்போது மேஜர்!) பற்றி கவலை படுபவர்கள் அவனை தத்து எடுத்துகொள்ள வேண்டியதுதனே? சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை அடைக்க அவசர சட்டம் கொண்டுவந்தால் அதன் முலம் சிறுவயது குற்றவாளிகள் பாதிக்கபடுவார்கள் என்று கூச்சலிடுகின்றனர். அவர்கள் மூலம் பாதிப்பு அடைந்தவர்கள் நிலையை யாரும் யோசிக்கவில்லை. நேற்று கூட இதே போன்ற சம்பவம் காஞ்சிபுரம் அருகே நடந்தது பிடிபட்ட குற்றவாளி (மன்னிக்கவும்) சிறுவன் வயது 16 தான்!
    4975
    2 days ago
     (0) ·  (0)
     
    • KA
      முதலில் சுற்றமும் சுழழும் சரியாக இருந்து தனி மனித ஒழுக்கத்தை பாதுகாக்க வேண்டும் , சட்டமும் , விதிமுறைகளும் நம்மை வழி நடத்தி முறை படுத்தி சீரான வழி கொடுப்பது மட்டுமே,
      2 days ago
       (0) ·  (0)
       
      • PR
        அருமையான பதிவு.
        3 days ago
         (0) ·  (0)
         
        • RR
          முற்றில்லும் உண்மை. சமுதாய மாற்றம் வீட்டில் தான் ஆரம்பம் ஆக வேண்டும். இளம் சிரோர்கள் செய்யும் குட்ட்ரங்கள் அவர்கள் வளர்த்த முறையால் வருகிறது அதனால் வளர்ப்பை மாற்றினால் தன மாற்றம் ஏற்படும்.
          3 days ago
           (0) ·  (0)
           
          • TS
            T. Siva  
            அவன் நடைப்பிணமாக தான் திரிவான் என்றே தோன்றுகிறது.
            78525
            3 days ago
             (0) ·  (0)
             
            • S
              இன்று சிறுவர்கள் மது மற்றும் புகை பிடித்தல் பழக்கங்களால் பாதிக்கப்பட்டு சீரழிந்து கிடப்பதால் வன்புணர்ச்சி,திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரிக்க அடிப்படை காரணமாக உள்ளது.அரசே மதுக்கடைகளை திறந்து வைத்து வயது வரம்பு இல்லாமல் மது வியாபாரத்தை நடத்தி கொண்டிருக்கும் நிலையில், சிறார்கள் சிறை குறித்த அச்சமும், மாற்றமும் சமூகத்தில் மட்டுமல்ல அரசிடமும் உருவாக வேண்டும்.
              5350
              3 days ago
               (0) ·  (0)
               
              • 1) ஒரு சிறுவன் பெருங்குற்றம் செய்து அது செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகும் வரை அந்தச் சிறுவன் அக்குற்றத்தை செய்யத் தூண்டிய பின்புலனும் காரணிகளும் கவனத்தில் வராதது ஏன்? 2) ஒரு நிர்பயாவை கொன்றவர்களில், இளம் குற்றவாளி ஒருவன் பேசும் பேச்சு பாமரச் சமூகத்தைப் பிரதிபலிக்கிறது, அவனுக்காக வாதாடிய வழக்கறிஞர்களின் பேச்சுப் படித்த சமூகத்தைப் பிரதிபலிக்கிறது... இந்தச் சமூகத்தைத் தண்டிக்காமல் அல்லது திருத்தாமல் இந்தக் குற்றவாளிகளை மட்டுமே தண்டிப்பதால் மாற்றம் நிகழாது! 3) பத்திரிகைகளில், விளம்பரங்களில், தொலைக்காட்சித் தொடர்களில், திரைப்படங்களில் பெண்ணென்றால் போகப்பொருள், ஆணுக்குப் பெண் அடிமைபட்டவள், ஒழுக்கமும் கற்பும் பெண்ணுக்கே உரியது, ஆடை என்பது பெண்ணுக்கு அரண், இதில் தவறும் எந்தப் பெண்ணும் தண்டிக்கப்பட வேண்டியவள் என்று கருத்துக்கள் நேரிடையாகவோ மறைமுகமாகவோ தொனிக்கும் வகையில் தான் சித்தரிக்கப்படுகிறார்கள். இவை நாம் சகித்துக் கொள்கிறோம் அல்லது ரசிக்கிறோம்!

              தென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்குத் தள்ளிய நேர்த்தியான படைப்புகள்!

              தென்னிந்திய சினிமாவைப் பொறுத்த வரையில், இந்த வருடம் சுமார் 500 படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் படங்களுக்கான வரவேற்பும், வெற்றி வீதமும் கலவையாகவே இருந்தது.


              காஞ்சனா 2, பிரேமம், படாஸ், காக்கா முட்டை உள்ளிட்ட படங்கள் வெளிவந்து வெற்றிபெற்று, அனைவரையும் ஆச்சரியப்படுத்தின. அதே நேரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகி கவலையையே தந்தன.


              தமிழகத்தில் 2015-ல் வெளியான சுமார் 200 படங்களில், 10 முதல் 15 படங்களே பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டடித்தன.


              இதுகுறித்து நம்மிடம் பேசிய சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை, "'வேதாளம்', 'ஐ' போன்ற மெகா பட்ஜெட் படங்களும் வெற்றி பெற்றன. நடுத்தர பட்ஜெட் படங்களும் மக்களைப் பரவலாகச் சென்றடைந்தன.



              காஞ்சனா 2- வின் தெலுங்கு பதிப்பான 'கங்கா' திரைப்படம், 10 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு, சுமார் 100 கோடியை வசூலித்தது. அதே நேரத்தில் குறைந்த பட்ஜெட் படமான 'காக்கா முட்டை', அதன் முதலீட்டைக் காட்டிலும் மூன்று முதல் நான்கு மடங்கு பணத்தை வாரிக் குவித்து, தேசிய விருதையும் தட்டிச்சென்றது.



              அதைத் தொடர்ந்து, 'நானும் ரவுடிதான்', 'ஓ காதல் கண்மணி', 'அனேகன்', 'டிமாண்டி காலனி', 'டார்லிங்', 'மாயா' ஆகிய படங்களும், சோடை போகாமல் ஓடின. 'நானும் ரவுடிதான்' படத்தின் வெற்றி, திட்டமிடப்பட்ட பட்ஜெட்டுக்குள்ளேயே எடுக்கப்படும் படங்களும் வெற்றி பெறும் என்பதை உணர்த்தியது.



              பெரிய பட்ஜெட் படங்களான கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்', 'தூங்காவனம்', விஜயின் 'புலி', சூர்யாவின் 'மாஸு' ஆகிய படங்கள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.


              டோலிவுட்டில் எப்படி?
              டோலிவுட் நிலவரம் குறித்து கருத்துத் தெரிவித்த, ஆந்திரா பாக்ஸ்ஆபிஸைச் சேர்ந்த ஓம் தீபக், "எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' திரைப்படம், தெலுங்கு திரைப்பட உலகை சுமார் 10 சதவீதம் விரிவடையச் செய்தது.


              பாகுபலி, உலகம் முழுக்க சுமார் 600 கோடி ரூபாயை வசூல் செய்ய, கொரட்டலா சிவாவின் 'ஸ்ரீமந்துடு' திரைப்படம் சுமார் 200 கோடிகளை அள்ளியது" என்றார்.


              சினிமா வர்த்தக ஆய்வாளரான ட்ரிநாத், இத்தகைய படங்களின் வெற்றி தெலுங்குத் திரையுலக மார்க்கெட்டை உயர்த்தியிருக்கிறது. பாகுபலியின் அனைத்து மொழி டப்பிங் படங்களும் நன்றாக ஓடின. அதன் இந்திப் பதிப்பு மட்டும் சுமார் 100 கோடி வசூலித்திருக்கிறது. நல்ல கதைதான் முக்கியம்; மொழி முக்கியமில்லை என்பதை இது உணர்த்தியிருக்கிறது.


              'ராஜு காரி காதி', 'சினிமா சூப்பிஸ்தா மாவா', 'குமாரி 21 ஃபீமேல்', 'படாஸ்', 'பலே பலே மகாடிவோ' உள்ளிட்ட குறைந்த பட்ஜெட் படங்கள், கதாநாயகர்களைத் தாண்டி, கதையின் நாயகர்களை மையப்படுத்தின.


              'ராஜு காரி காதி', 'பலே பலே மகாடிவோ' உள்ளிட்டவை இந்த வருடத்தின் மிகப்பெரும் வெற்றியாக அமைந்தன. 'ருத்ரமாதேவி', 'ஜேம்ஸ் பாண்ட்', 'சுப்பிரமணியம் ஃபார் சேல்', 'காஞ்சி' உள்ளிட்ட படங்கள் நன்றாக ஓடினாலும், விநியோகஸ்தர்களுக்கு சிறிய தடையாகவே அமைந்திருந்தன" என்று கூறினார்.



              டப்பிங் படங்களான 'ரகுவரன் பி.டெக்.', 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7', 'ஜுராசிக் வேர்ல்ட்' ஆகியவை வெற்றி பெற்றன. ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'ப்ரூஸ் லீ: த ஃபைட்டர்', 'அகில்' ஆகியவை பெரும் சோகமாக அமைந்தன.




              மலையாளத் திரையுலகம் மலர்ந்ததா?
              மலையாளத் திரையுலகம், வணிக ரீதியில் வெற்றி பெற்று, கலவையான விமர்சனங்களையும் பெற்றது. 'பிரேமம்', 'என்னு நிண்டே மொய்தீன்' ஆகிய இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றிவாகை சூடின.



              12 கோடியில் தயாரிக்கப்பட்ட 'மொய்தீன்', சுமார் 50 கோடியை அள்ளியது. 5 கோடியில் உருவாக்கப்பட்ட 'பிரேமம்' வசூலித்ததோ சுமார் 60 கோடி.



              இந்த வருடம் வெளிவந்த சுமார் 100 மலையாள படங்களில், 'மிலி', 'பிக்கெட் 43', 'ஃபைர்மேன்', '100 டேஸ் ஆஃப் லவ்', 'ஒரு வடக்கன் செல்ஃபி', 'என்னும் எப்பொழும்', 'பாஸ்கர் த ராஸ்கல்', 'சந்திரனேட்டன் எவிடயா' உள்ளிட்டவை வெற்றியைச் சுவைத்தன.



              மலையாளத் திரையுலக விநியோகஸ்தரில் ஒருவரான அரவிந்த் நம்பியார், "ரீமேக் மூலமாகவும் திரையுலகம் சம்பாதித்தது. 'ஒரு வடக்கன் செல்ஃபி' தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு சுமார் 20 கோடியை வசூலித்திருக்கிறது" என்று கூறினார்.



              மம்முட்டி நடித்த 'பாஸ்கர் த ராஸ்கல்', தெலுங்கு உரிமையோடு, தயாரிப்பைக் காட்டிலும் மூன்று மடங்கு பணத்தை வசூலித்திருக்கிறது.
              'லைலா ஓ லைலா', 'மரியம் முக்கும்', 'சிறகொடிஞ்ச கனவுகள்' உள்ளிட்ட படங்கள் எதிர்பார்ப்போடு வெளியாகி ஏமாற்றத்தை அளித்துச் சென்றன.



              கவனத்தை ஈர்த்த கன்னடத் திரையுலகம்
              அனுப் பந்தாரியின் 'ராங்கிதரங்கா' மூலம் ஒட்டுமொத்த கன்னடத் திரையுலகமும் தன் கவனத்தை ஈர்த்தது. 88வது அகாடமி விருதுகளில் பட்டியலிடப்பட்ட சுமார் 300 படங்களில் ஒன்றாக 'ராங்கிதரங்கா' வந்தது. விநியோகஸ்தரான ரமேஷ் கவுடா, கன்னட திரையுலகம் குறித்துப் பேசினார்.



              '' 'ராங்கிதரங்கா' படம் கர்நாடகாவில் மட்டும் சுமார் 20 கோடியை வசூலித்திருக்கிறது. இப்படம் நிறைய பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளை முறியடித்திருக்கிறது. ஹைதராபாத், புனே உள்ளிட்ட நகரங்களிலும் படம் சுமார் ஐந்து வாரங்கள் தொடர்ந்து ஓடியது. முதல்முறையாக அமெரிக்காவில் எட்டு வாரங்கள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிய கன்னடப் படம் இது என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.



              தர்ஷன் நடித்த 'மிஸ்டர். ஐராவதா படமும்' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மூன்று வாரங்களில் இப்படம், சுமார் 32 கோடியை வசூலித்தது.
              'ரன்னா', 'வஜ்ரகயா', 'ராணா விக்ரமா', 'சித்தார்த்தா' உள்ளிட்ட பெரிய படங்கள், சுமாராக ஓடி, போட்ட முதலீட்டை எடுத்திருக்கின்றன. கன்னட உலகைப் பொருத்த வரை, இந்த வருடம் படங்களின் எண்ணிக்கை அதிகம் ஆனால் வெற்றி பெற்றது குறைவே.


              தஹிந்து

              1984-ல் வெளியான ‘மகுடி’ -‘நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்’ -காற்றில் கலந்த இசை 33:

              ‘மகுடி’ படத்தில் மோகன், நளினி
              ‘மகுடி’ படத்தில் மோகன், நளினி
              திரைப்படங்களுக்கான இசையமைப்பு என்பது ஏனைய கலைகள்போலவே பல்வேறு வாழ்வியல் கூறுகளை உள்வாங்கும் திறனின் அடிப்படையில் அமைந்தது. ஒரு பாடலைக் கேட்கும்போதே இது சிறு நகரத்தில் நடக்கும் கதை, இது வயல்வெளி சார்ந்த கிராமத்தில் நடக்கும் கதை, இது மலையடிவார கிராமத்தின் கதை என்று பிரித்தறிய முடிகிறது என்றால், அந்தப் பாடல் இளையராஜாவின் ஆர்மோனியத்திலிருந்து பிறந்தது என்று நிச்சயமாகச் சொல்லிவிடலாம். அந்த அளவுக்குத் திரைப்பாடல்களில் நுட்பமான வேறுபாடுகளைக் கொண்ட இசைப் பின்னல்களை அவர் உருவாக்கியிருக்கிறார். மோகன், நளினி நடிப்பில் 1984-ல் வெளியான ‘மகுடி’ திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் இதற்கான உதாரணங்களில் அடங்குபவை. (படத்தின் மற்ற இரண்டு பாடல்கள் சுமாரானவை!)



              அப்பாவித் தோற்றம், நன்கு முடியப்பட்ட குடுமி என்று நாட்டுப்புறப் பாடகன் வேடம் மோகனுக்கு. வேடம் சற்றும் பொருந்தவில்லை. எனினும், இளையராஜாவின் அருட்கடாட்சம் நிரம்பப் பெற்றதால், புகழ்பெற்ற பாடல்களுடன் தொடர்புடைய நடிகராகத் திகழும் மோகனுக்கு இப்படத்திலும் அழகான பாடல்கள் கிடைத்தன.



              காட்டாற்று வெள்ளமாகப் பொங்கி வழியும் கிராமிய இசைக் கலைஞனின் திறமையை ஒழுங்குபடுத்தும் பெண், கர்நாடக இசையை அவனுக்குக் கற்றுக்கொடுப்பாள். மெல்ல மெல்ல அவன் மீதான பரிவு காதலாக மலரும் காட்சியமைப்பு. ‘நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்’ எனும் பாடலை அந்தக் காட்சிக்குத் தந்தார் இளையராஜா. எஸ்பிபி, ஜானகி பாடிய இந்தப் பாடல் பாமர ரசிகனுக்குக் கர்நாடக இசையின் சுவையைப் பகிர்ந்தளித்த படைப்பு. திரைப்பாடல்களில் அபூர்வமாய்ப் பயன்படுத்தப்படும் ரசிகரஞ்சனி ராகத்தின் சாயலில் அமைந்த பாடல் இது.
              நீளமான பல்லவியை நாயகி பாட, அதைப் பிரதியெடுத்து நாயகன் பாட என்று பாடல் நீண்டுகொண்டே செல்லும். நிரவல் இசையில் வீணைக்கும், ஒற்றை வயலினுக்கும் இடையில் ஒரு உரையாடல் நிகழும். தொடர்ந்து புல்லாங்குழலுக்கும் வீணைக்கும் இடையில் இசைப் பரிமாற்றம். அதைத் தொடர்ந்து, பரந்த நிலப்பரப்பாக விரியும் வயலின் இசைக்கோவை என்று அற்புதங்களை நிரப்பியிருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில், நதியின் மேற்பரப்பில் நழுவிச் செல்லும் மெல்லிய நீர்ப்படலத்தைப் போன்ற ஒற்றை வயலின் இசையை ஒலிக்கவிடுவார்.



              பின்னாட்களில் இளையராஜா வெளியிட்ட ‘ஹவ் டு நேம் இட்’ எனும் ஆல்பத்தின் சில கூறுகளை இப்பாடலில் உணர முடியும்.



              இளையராஜா பாடிய ‘கரட்டோரம் மூங்கில் காடு’ பாடல், புல்வெளிகள், ஓடைகள், ஊசியிலைக் காடுகள் நிறைந்த மலைக் கிராமத்தின் காட்சிகளைக் கண்முன் நிறுத்தும் பாடல். கிராமிய இசைக் கலைஞனின் புல்லாங்குழலிலிருந்து வெளிவரும் எளிய, இனிய இசையுடன் பாடல் தொடங்கும். பச்சைப் புல்வெளிகளால் போர்த்தப்பட்ட குன்றுகளில் பட்டு எதிரொலித்து, அந்த நாட்டுப்புறப் பாடகனிடமே வந்து சேரும் கணத்தில், ‘கரட்டோரம் மூங்கில் காடு…’ என்று அவன் பாடத் தொடங்குவான். இயற்கையை நேசித்துக்கொண்டே வழிப்போக்கனைப் போல் அலைந்து திரியும் அந்த கிராமிய இசைக் கலைஞன், கண்ணில் படும் எல்லா விஷயங்களையும் வியந்து பாடுவதுபோன்ற காட்சியமைப்பு. எளிய, அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்.



              இயற்கைக் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் பாடல்கள் என்றாலே, ஆர்க்கெஸ்ட்ரேஷனில் பின்னியெடுக்கும் இளையராஜா இப்பாடலில் மிகக் குறைவான இசைக் கருவிகளையே பயன்படுத்தியிருப்பார். எனினும், நகர வாசனையின் தீண்டலுக்கு அப்பாற்பட்ட தொலைதூர கிராமத்தின் அழகை வர்ணிக்கும் பாடல் வரிகளும், இளையராஜாவின் குரலும் பாடலை வேறொரு தளத்துக்கு இட்டுச் செல்லும்.



              நிரவல் இசையில் பூச்செடிகளை அசைத்தபடி பரவிச் செல்லும் காற்றைப் போன்ற புல்லாங்குழல் இசையை ஒலிக்கவிடுவார். தடைகளற்ற வெளியில் காற்று அலைந்து திரியும் பகுதியில் அமைக்கப்பட்ட மின்சார ட்ரான்ஸ்பார்மரிலிருந்து வரும் மெல்லிய ரீங்காரம் ஒலிக்கும். அந்த ரீங்காரத்தை ஸ்வீகரித்துக்கொண்டு பாடலைத் தொடர்வான் கிராமத்துக் கலைஞன். ‘தொட்டாப் புடிக்கும் அந்த/ துடிக்காரன் போட்ட கம்பி/ சீமையிலே சேதி சொன்னா… இங்க வந்து பேசுதில்லே’ எனும் வரிகள் ஒரு கிராமத்தானின் வியப்பை இயல்பாகப் பதிவுசெய்யும்.



              ‘காட்டச் சுத்தி வண்டு பறக்குது…’ எனும் வரிகளைத் தொடர்ந்து பாடலுக்குள் மூழ்கித் திளைக்கும் களிப்பில் ‘உய்யாரா உய்யாரா உய்யார உய்யா’ எனும் வெற்று வார்த்தைகளைப் பாடுவான் பாடகன். வரப்பில் நடந்து செல்லும் பெண்கள் அந்த வார்த்தைகளைப் பாடியபடி கடந்து செல்வதைப் போன்ற பெண் குரல்களின் கோரஸ் ஒன்றை ஒலிக்கவிடுவார் ராஜா. அதைத் தொடர்ந்து எங்கோ குழந்தை அழும் சத்தமும், அதை அதட்டும் அதன் தாயின் குரலும் ஒலிக்கும்.



              குழந்தையைத் திட்ட வேண்டாம் என்று அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டு அந்தக் குழந்தைக்கு ஒரு சிறு தாலாட்டு பாடுவான் நாயகன். ‘… அத்தை அடிச்சா அம்மா இருக்கா, அழுவாதே… அந்த அம்மாவே அடிச்சிப்புட்டான்னு அழுவுறியா… கவலப் படாதடா’ எனும் ஆறுதல் வார்த்தைகளுக்குப் பின்னர், ‘என் பாட்டு இருக்கு அழுவாதே அதக் கேட்டு ஒறங்கு பொழுதோடே’ என்று பாடும்போது இளையராஜாவின் குரலில் இருக்கும் வெம்மை அத்தனை கதகதப்பைத் தரும். அந்தத் தாலாட்டில் மயங்கி உறக்கத்தைத் தழுவுவது அந்தக் குழந்தை மட்டுமல்ல, நாமும்தான்.


              தொடர்புக்கு: [email protected]


              தஹிந்து

              வெ. சந்திரமோகன்

              பதினோரா வது கொலை!-பட்டுக்கோட்டை பிரபாகர்

              குற்றவாளிகள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள் என்று சொல்வார்கள்.


              பெரும்பாலான குற்றவாளிகளின் வாழ்க்கையிலும் அப்படி உருவா வதற்கான சூழல் இருக்கலாம். ஒரே இர வில் ஒருவன் கொள்ளைக்காரனாகிவிட லாம் என்று தீர்மானம் செய்து, அப்படியே கொள்ளைக்காரனாக மாறி வங்கியைக் கொள்ளையடித்துவிட முடியாது. இன்றைக்கு கொலைசெய்யலாம் என்று வண்டிக்கு பெட்ரோல் போடுவது மாதிரி சாதாரணமாக செய்வதில்லை. கூலிப் படையில் காசுக்காக இரக்கமே இன்றி கொலைகளைச் செய்கிற யாரும் “இது எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு’’ என்று சொல்வதில்லை. எல்லோரிடமும் ஒரு கதை இருக்கும்.


              நேனிதாஸின் கதை மிக அழுத்தமானது. அமெரிக்காவில் பிறந்த நேனி தாஸ், தனது சின்ன வயதில் பள்ளியில் சேர்ந்து படித்துப் பெரிய அரசு அதிகாரி யாக வளரத்தான் ஆசைப்பட்டாள். ஆனால், அவளுடைய தந்தை அவளை பணம் கொடுக்கும் ஒரு இயந்திரமாக நினைத்து, வேலைக்கு அனுப்பி சம்பா தித்து வரச் சொன்னார். அங்கேயே விழுந்தது அவள் மனதில் முதல் விரிசல்.



              பதின்பருவத்தில் நேனிதாஸுக்கு ஒரு நல்ல உடை வாங்கித் தந்ததில்லை அவள் தந்தை. அவளுக்கு வயிறார சாப்பாடு போட்டது இல்லை. கொஞ்சம் திருத்தமாக மேக்கப் போட்டுக்கொள்ள வும் அனுமதி இல்லை. வெளியே எங்கும் தனியாகப் போகக் கூடாது. ஆண் நண்பர் களுடன் பழகக் கூடாது. பார்ட்டிகளுக்கு, விழாக்களுக்குப் போகவே கூடாது என்று ஏகப்பட்ட கூடாதுகள்!



              ஆனால், மறுக்கப்படுவதைத்தானே மனித மனம் விரும்பிச் செய்யும்? எதை எல்லாம் வீட்டில் மறுக்கப்பட்டதோ, அதையெல்லாம் பிடிவாதமாக நாடியது அவளுடைய மனசு.



              நேனிதாஸ் கனவுகளில் மிதந்தாள். கற்பனை சுகத்தில் மகிழ்ந்தாள். மனதில் காதல் பொங்கி வழிந்தது. காதல் தொடர்பான புத்தகங்களை மட்டுமே படித்தாள். பத்திரிகைகளுக்கு தனது பெயர் போடாமல் காதல் கட்டுரைகள் எழுதி அனுப்பினாள். மற்றவர்களின் காதல் அனுபவங்களை ஆர்வமாகக் கேட்டாள். ஆனால், அவளின் காதலைப் பகிர்ந்துகொள்ள ஓர் ஆண் மகனைச் சந்திக்கவே இல்லை. அதாவது சந்திக்க வாய்ப்பு அமையவில்லை.



              16 வயதில் பெற்றோர் பார்த்து வைத்த திருமண வாழ்வை ஏற்று, ஆயிரம் கனவுகளுடன் புதிய வாழ்வில் நுழைந்தாள். அங்கே நேனிதாஸின் ஒவ் வொரு கனவும் முறிக்கப் பட்டது. அன்பான கணவன் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவளுக்கு அவளு டைய தந்தையைவிட மோச மானவனாக அவன் அமைந் தான். அவனுடைய வார்த்தை கள் சாட்டையடிகளாக விழுந் தன. அவனுடைய நடவடிக்கை எதுவுமே அவளுக்குப் பிடிக்காமல் போனது. ஆனாலும், அவனோடு பொறுமையாக வாழ்ந்து குழந்தைகளும் பெற்றாள்.



              வெளியே கடைக்காரர்களிடம், கார் டிரைவர்களிடம் என்று எவரிடம் அவள் பேசினாலும் அவனுக்கு சந்தேகம். மனம் நொந்துபோன அவள் புகைப் பழக்கத்துக்கும், மதுப் பழக்கத்துக்கும் ஆளானாள். தினமும் குடித்தே ஆக வேண்டும் என்கிற அளவுக்கு போதைக்கு நேனிதாஸ் அடிமையானாள்.


              திடீரென்று உடல்நலம் கெட்டு அவளது கணவன் இறந்தபோது அவள் அழவே இல்லை. மனதுக்குள் கொண் டாடியபடி, வெளியே பொய் துக்கத்தில் இருந்தாள். இதைத் தொடர்ந்து உடனடியாக இரண்டாவது திருமணமும் செய்துகொண்டாள்.



              புதிய கணவனின் செயல்களிலோ மர்மம் இருந்தது. அவன் இரவில் தாமதமாக வீட்டுக்கு வந்தான். அவனைத் தேடி காவல் துறை ஆசாமிகள் அடிக்கடி வந்து போனார்கள். அந்தத் துறையில் தனக்கு நண்பர்கள் இருப்பதாக அவன் சொன்னதை நேனிதாஸ் நம்பினாள்.



              அவன் உடம்பில் இருந்து வீசும் பெண்கள் உபயோகிக்கும் செண்ட் வாசனையைப் பற்றி அவள் கேட்டபோது, அவனால் அவளுக்கு விளக்கம் சொல்ல முடியவில்லை. ஆனால், அது என் பலவீனம் என்று ஒப்புக்கொண்டான். பிறகுதான் தெரிந்தது, தினமும் விதவிதமானப் பெண்களைத் தொட்டாக வேண்டும் என்கிற அவனது காம உணர்வு. அதற்குப் பணம் தேவை. பணத்துக்காக அவன் ரகசியமாக குற்றங்கள் செய்திருக்கிறான். விசாரிக்க வரும் அதிகாரிகளுக்கு லஞ் சம் கொடுத்து சமாளித்திருக் கிறான்.



              அவனும் திடீரென்று இறந்துபோனான். உறவினர் கள் நேனிதாஸின் நிலைமைக் காகப் பரிதாபப்பட்டார்கள். ஆறுதல் சொன்னார்கள். அப்போதும் அவள் திருமணத்தின் மீது தனக்கு இருந்த நம்பிக்கையை மாற்றிக்கொள்ளவே இல்லை. மூன்றாவதாகவும் ஒரு கணவனைத் தேடிக் கொண்டாள்.



              மூன்றாமவன் இதற்கு முந்தையவர் களைப் போல இல்லை. அவனுக்கு ஒரே ஒரு பலவீனம்தான். அவனுக்கு தினமும் சூதாட வேண்டும். அதற்கு முதலில் அவளுடைய நகைகள் பலியாகின. பிறகு, வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் எடுத்துச் சென்று விற்றுவிடுவான்.



              மனம் வெறுத்துப் போன நேனிதாஸ் அவன் இறக்கக் காத்திருந்து, கடைசி முயற்சியாக நான்காவதாக ஒருவனைத் திருமணம் செய்துகொண்டாள். இந்தக் கணவன் படு மக்கு. அவனோடு இருந்த அவனுடைய அம்மாதான் … அங்கே இவளுக்கு வில்லி. சீரியல்களில் வரும் மாமியாரைப் போல அதிகாரம் செய் வதும் வேலைகள் வாங்குவதுமாக நேனிதாஸைப் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.



              மன உளைச்சலுக்கு மருந்தாக தன் அம்மா வீட்டுக்குச் சென்றால், அங் கேயும் இவளை விமர்சித்து இவளின் அம்மாவும் கடுமையாகத் திட்டினாள். தனது உடன் பிறந்த இரண்டு சகோதரி களும் இவளின் வாழ்க்கையைக் கிண்டல் செய்தார்கள். பொது விழாக்களில் வைத்து இவளை அவமானப் படுத்தினார்கள்.



              போதாக்குறைக்கு இவளுக்குப் பிறந்த இரண்டு பெண்களும் தாய் என் றும் பார்க்காமல் இவளை அலட்சியப் படுத்தினார்கள். எங்கும் மரியாதை இல்லை. எல்லோருக்கும் நேனிதாஸின் வாழ்க்கை கேலிப் பொருளானது.
              ஒரு சுபயோக சுபதினத்தில் இவள் தன் மாமியாரை உணவில் விஷம் வைத்துக் கொன்றாள். முதலில் அது வெளியில் தெரியவில்லை. பிறகு காவல் துறையின் தீவிர விசாரணையில் உண்மை வெளிப்பட்டு, நேனிதாஸ் கைது செய்யப்பட்டாள்.



              தொடர் விசாரணையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியான தகவல்கலைக் கொட்டினாள் நேனிதாஸ். மாமியாரைக் கொன்றது இவளின் முதல் கொலை இல்லை; அது அவளுடைய பதினோரா வது கொலை!



              இவள் மனதைக் காயப்படுத்திய ஒவ் வொருவரையும் ரகசியமாக திட்டமிட்டு, அது கொலை என்று வெளியே தெரியாத படி கொலை செய்திருக்கிறாள். இவளின் நான்கு கணவர்களுக்குமே இயற்கை மரணம் நேரவில்லை. அத்தனை பேரை யும் நேனிதாஸ்தான் கொன்றிருக்கிறாள். கணவர்கள் மட்டுமல்ல; சொந்த தாய், இரண்டு சகோதரிகள், இரண்டு மகள்கள், ஒரு பேரன் உட்பட அவளுக்கு மன வருத்தம் கொடுத்த அத்தனை பேரையும் கொலை செய்திருக்கிறாள்.



              இவளை விசாரித்த நீதிமன்றம் மரண தண்டனை தர நினைத்து, பிறகு.. இவளின் சூழ்நிலை, மனநிலை எல்லாவற்றையும் கணக்கில் எடுத் துக்கொண்டு ஆயுள் தண்டனை வழங்கியது. சிறையில் இருந்தபோது ரத்தப்புற்று நோய் வந்து நேனிதாஸ் இறந்து போனாள்.




              குற்றவாளிகள் பிறப்பதில்லை; உரு வாக்கப்படுகிறார்கள் என்னும் கூற்றை நேனிதாஸின் வாழ்க்கை நிரூபித்தது. ஒரு மனநலக் கணக்கெடுப்பில் திருமணங் களில் தோல்வியைச் சந்தித்த ஒரு சில பெண்கள் தங்களுக்குள் கொலை செய் யும் எண்ணம் வந்ததாக ஒப்புக்கொண் டிருக்கிறார்கள். அந்த எண்ணம் தீவிர மடைகிற தருணத்தில் அதற்கான வாய்ப்பு அமைந்தால் அது செயலாகிவிடுறது.



              - நிறைந்தது
              எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]

              தஹிந்து

              சினிமா எடுத்துப் பார் 37: காலங்களில் அவள் வசந்தம்-எஸ்பி.முத்துராமன்

              • சண்டைக் காட்சியில் அர்ஜுனுடன் மோதும் அழகு
                சண்டைக் காட்சியில் அர்ஜுனுடன் மோதும் அழகு
              •  ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் ஸ்ரீவித்யா, சந்திரகலா | படம் உதவி: ஞானம்
                ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் ஸ்ரீவித்யா, சந்திரகலா | படம் உதவி: ஞானம்
              ‘துணிவே துணை’ படத்தில் அபர்ணா நடிக்கும் ‘ஆகாயத்தில் தொட்டில் கட்டும்’ என்ற பாடல் மிகவும் வித்தியாசமாக அமைந்தது. அந்தப் படத்தில் நடன அமைப்பாளர் புலியூர் சரோஜாவின் உதவியாளராக கலா பணியாற்றினார். மிகவும் சுறுசுறுப்பு. நடிகர், நடிகைகளுக்கு நடனம் சொல்லிக்கொடுப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவார். அவர் தான் இன்றைக்கு உலகப் புகழ் பெற்ற ‘மானாட மயிலாட’நிகழ்ச்சியை நடத்தி வருபவர் என்பது எங்களுக்குப் பெருமை.
              திரையுலக முன்னோடி இயக்குநர் கே.சுப்ரமணியம் அவர்களின் வழித் தோன்றல் ரகுராம் மாஸ்டர், அவர் மனைவி கிரிஜா, அவருடைய தங்கைகள் கலா, பிருந்தா ஆகியோரும் நடனக் கலைக்காக சேவை செய்தவர்கள், செய்கிறவர்கள். அந்தக் கலை குடும்பத்தை மனமாறப் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
              இன்று சின்னத்திரையில் குணச்சித்திர நடிகராக அசத்தி வரும் அழகு, நான் இயக்கிய ‘துணிவே துணை’ படத்தில் அறிமுகமானவர். அப்போது அவரை சண்டைக் காட்சிகளில் பங்குபெற வைத்தோம். சிறந்த சண்டை வீரராக பல படங்களில் பங்கு பெற்றார். உள்ளுக்குள் இருந்த திறமை ஒரு நாள் வெளியே வந்தே தீரும் என்று சொல்வதைப் போல இன்றைக்கு சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் சிறப்பாக நடித்துவருகிறார். அதற்குக் காரணம் முயற்சி திருவினையாக்கும் என்பதே. நடிக்க வருகிறவர்கள் சின்ன வேஷம், பேரிய வேஷம் என்று பார்க்காமல் கிடைத்த வேடத்தில் திறமையைக் காட்டி முன்னேற வேண்டும். துணை நடிகராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் பின்னாளில் உலகம் புகழும் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் ஆகவில்லையா?
               - அழகு
              ‘துணிவே துணை’ படத்தில் அசோகன் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத் தில் நடித்தார். கிளைமாக்ஸ் காட்சியில் அசோகனையும், வில்லன்களையும் ஹெலிகாப்டர் துரத்துகிற மாதிரி காட்சி. அப்போது அசோகன், ‘ஹெலிகாப்டர் கீழே வரும்போது எனக்கு கைக்கு எட்டும் தூரத்தில்தான் வருகிறது. நான் பிடித்து விடட்டுமா? என்றார். ‘ஐயையோ… அப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள். ஹெலிகாப்டர் கவிழ்ந்துவிடும்’ என்று நான் கத்தினேன். ஹெலிகாப்டரை, கார் மீது இடிக்க வைத்து ரிஸ்க்காக பல ஷாட்களை எடுத்து ஒருவித த்ரில்லோடு படமாக்கினோம்.
              அந்தப் படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. மஞ்சப் பையுடன் வந்த துளசிராம் தயாரிப்பாளர் ஆனார். அடுத்தப் படத்தையும் தயாரிக்க முன் வந்தார். நாங்களும் ஒப்புக்கொண்டோம். அப்போது துளசிராம் தயாரிப்பாளர் என்ற கிரீடத்தை தலையில் வைத்துக்கொண்டு, சில நிபந்தனைகள் போட்டுக்கொள்ளலாம் என்றார். ‘முதல் படம் எப்படி எடுத்தோமோ, அப்படியே எடுப்போம். நிபந்தனைகள் என்றால் எங்களை விட்டுவிடுங்கள்’ என்று நங்கள் ஒதுங்கிக்கொண்டோம். சினிமா என்பது கடல். ஒரு படத்திலேயே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுவிட முடியுமா?



              நடிகர்கள் முத்துராமன், ஜெய்சங்கர் இருவரும் நட்பு அடிப்படையில் எங்கள் படங்களில் எப்போதும் நடிக்கத் தயாராகவே இருந்தார்கள். தயாரிப்பாளர் யார்? கதை என்ன என்று கேட்கவே மாட் டார்கள். அட்வான்ஸ் என்பது பணமாக இல்லை, வாய் வார்த்தையில் மட்டும் தான். அவர்களது டைரியை எடுத்து, ‘10 நாட்கள் எஸ்பி.எம் படம்’ என்று தேதி குறித்து வைத்துவிட்டு வந்துவிடுவேன். நான் குறிப்பிட்ட தேதிகளை யாருக்கும் ஒதுக்க மாட்டார்கள். அவர்கள் இருவரும் இப்படி ஒரு புரிதலோடு இருந்தது எங்களுக்குப் பெரிய பலமாக இருந்தது. இதெல்லாம் வியாபார நோக்கம் எதுவும் இல்லாமல் ஒருவருக்கொருவர் இருக்கும் நட்பு அடிப்படையில் செய்தது.


              அடுத்து நாங்கள் எடுத்தப்படம் விஜய பாஸ்கர் தயாரித்த ‘காலங்களில் அவள் வசந்தம்’. முத்துராமன், ஸ்ரீவித்யா, சந்திர கலா, தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்தனர். ஒரு பெண், தன்னைவிட படிப் பில், அந்தஸ்தில், அழகில் பெரிய இடத்து மாப்பிள்ளைதான் வேண்டும் என்று தட்டிக்கழித்து முதிர்கன்னியாகி விடுவார். அந்தக் கதாபாத்திரத்தில் ஸ்ரீவித்யா நடித்தார். ஸ்ரீவித்யா எந்தக் கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடிக்கக்கூடிய நல்ல நடிகை. எங்கள் குழுவில் நட்போடு பழகினார்.
              என் மனைவி இறந்தபோது எனக்கு ஆறுதல் கூறும்போது அவர் அழுத அழுகைக்கு, நான் ஆறுதல் கூற வேண்டியதாயிற்று. அவர் உடல் நலமில்லாமல் கேரளாவில் இருக்கும்போது அவரை நான் பார்க்க விரும்பினேன். கமல் பார்த்துவிட்டு வந்த தாக செய்தி வந்தது. கமலிடம் போய் நான் பார்க்க வேண்டும் என்று கூறினேன். கமல், ‘வித்யா யாரையுமே பார்க்க விரும்பவில்லை. நீங்கள் போய் பார்த்தால் அவர் வேதனை அதிகமாகுமே தவிர உடல்நலம் குணமாகாது’ என்று கூறினார். சில நாட்களிலேயே அவர் இறந்த செய்தி வந்தது. அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், துன்பங்கள் எல்லாவற்றையும் அறிந்த எனக்குக் கண் கலங்கியது. அவரை பார்க்கக்கூட முடியவில்லையே என்ற ஏக்கம் இன்றைக்கும் இருக்கிறது.



              ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் ஸ்ரீவித்யாவுக்குத் தங்கையாக சந்திர கலா நடித்தார். அவருக்கும் முத்து ராமனுக்கும் திருமணம் நடக்கும். முதிர் கன்னியான ஸ்ரீவித்யா தன் நிலையை நினைத்து மனநிலை பாதிப்புக்குள்ளாவார். அதைக் கண்ட தங்கை சந்திரகலா தன் அக்கா குணமடைய தன் கணவனையே அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வார்.



              திருமணம் நடந்து முதலிரவு ஏற்பாடு செய்யும் நேரத்தில் மீண்டும் அக்காவுக்கு மனநிலை பாதிக்கப்படும். தந்தை அசோகன் மகள் ஸ்ரீவித்யாவை ஊருக்கு அழைத்துச் செல்வார். தன்னைப் பார்த்து அழும் அசோகனிடம் ஸ்ரீவித்யா, ‘தங்கை தனது கணவரைத்தான் எனக்குக் கணவராக்கியிருக்கிறார் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. தங்கையின் வாழ்க்கையைக் கெடுக்க விரும்பாமல்தான் பைத்தியமாக நடித்தேன்’ என்று கூறுவார்.



              இளம்பெண்கள் ‘தனக்கு வரும் கணவன் இப்படி இருக்க வேண்டும்? அப்படி இருக்க வேண்டும்’ என்று கனவு கண்டு, வரும் எல்லா மாப்பிள்ளைகளை யும் ஒதுக்கினால் முதிர்கன்னிகளாக ஆக வேண்டியிருக்கும் என்பதை இந்தக்கதையின் மூலம் உணர்த்தினோம். இந்தப் படம் நாங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இந்தக் கதையை எங்களிடம் உரிமை வாங்காமலேயே ஹிந்தியில் எடுத்து அந்தப் படம் வெற்றி பெற்றது. அந்த விஷயமே எங்களுக்குக் காலம் கடந்துதான் தெரிந்தது. அதனால் அவர்களோடு போராட முடியவில்லை. கதையின் உரிமையை வாங்காமல் மற்ற மொழியில் படம் எடுப்பது தவறு. அது படைப்பாளிகளின் உழைப்பை ஏமாற்றுவதாகும். உரியவர்கள் சிந்திக்க வேண்டும்.



              அன்று ஏரியில் வீடு கட்டினோம். இன்று வீட்டுக்குள் ஏரி. இது நம் எல்லோருக்கும் ஒரு பாடம். இந்த வெள்ளத்தில் இளைஞர்கள் மழையில் நின்று கொண்டு மக்களுக்கு வழிகாட்டியது, உதவிகள் செய்தது வருங்காலத்தில் அவர்கள் நாட்டை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையைத் தந்தது.



              பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த மனிதநேயமுள்ள அனைவரையும் வணங்குவோம். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்பதற்கு இந்த நிகழ்வுகள் உதாரணம். வடியும் கண் ணீரைத் துடைத்துக்கொண்டு அடுத்த வாரம் நான் தூக்கி வளர்த்த உலக நாயகன் கமல் பற்றி எழுதப் போகிறேன். அது எந்தப் படம்? எந்த சூழலில் அமைந்தது? அடுத்த வாரம் பார்ப்போம்.
              இன்னும் படம் பார்ப்போம்...

              தஹிந்து

              Saturday, December 26, 2015

              ரைஸன்’.ஹாலிவுட் திரில்லர்

              ரைஸன்
              ரைஸன்
              இயேசு கிறிஸ்துவையும் பரிசுத்த வேதாகமத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஹாலிவுட்டில் அநேகப் படங்கள் வந்துள்ளன. இயேசுவின் அற்புதங்களைப் புகழ்ந்தும் விமர்சித்தும் பல படங்கள் வெளிவந்திருக்கின்றன என்பது கடந்த கால வரலாறு, அந்த வரிசையில் வெளிவர இருக்கும் புதிய ஹாலிவுட் திரில்லர் படம் ‘ரைஸன்’.


              இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய நம்பிக்கையற்ற ஒருவரின் பார்வையில் இந்தப் படம் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியென்ன இந்தப் படத்தில் இருக்கிறது என்ற எண்ணமே இப்படத்தின் மீதான சுவாரசியத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியிருக்கிறது.


              இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வாரத்தில் நடைபெறும் நிகழ்வுகளைச் சம்பவங்களாகக் கொண்டது இப்படத்தின் திரைக்கதை. க்ளேவியஸ் என்னும் ரோமத் தளபதியும் அவனுடைய உதவியாளனான லூஸியஸும் இயேசுவின் மர்மங்களைக் கண்டறியப் புறப்படுகிறார்கள். ரோம ஆளுநர் பொந்தி பிலாத்து இவர்கள் இருவரையும் காணாமல் போன இயேசுவின் உடலைக் கைப்பற்ற அனுப்புகிறான். அவர்களது நோக்கம் இயேசு உயிர்த்தெழுதல் சாத்தியமற்றது என்பதை நிரூபிப்பதும், ஜெருசலேமில் புரட்சி எழாமல் தடுப்பதுமே ஆகும். இதில் அவர்கள் வெற்றிபெற்றார்களா, இயேசுவுக்கு என்ன நேர்ந்தது என்பதைப் படம் காட்சிப்படுத்தியிருக்கிறது.


              ஹாலிவுட் இந்தப் படத்தை முடக்க திட்டமிட்டு செயல்பட்ட காரணத்தாலேயே இப்படம் பற்றிய செய்திகள் அதிகம் வெளியாகவில்லை என ஜீஸஸ் டெய்லி என்னும் இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. சோனி நிறுவனம் இப்படத்தின் உரிமையைப் பெற்று வெளியிடுவதாலேயே இதைப் பார்க்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கப்போகிறது என்றும் அந்த இணையதளம் குறிப்பிட்டிருக்கிறது.


              இந்தப் படத்தை, 1984-ல் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘ரெட் டான்’ படத்தின் திரைக்கதாசிரியரும் ‘வாட்டர் வேர்ல்டு’ (1995) திரைப்படத்தை கெவின் காஸ்னருடன் சேர்ந்து இயக்கி கவனம் பெற்றவருமான கெவின் ரெனால்ட்ஸ் இயக்கியிருக்கிறார். ரைஸன் படத்தின் கதையைப் பால் அயலோ எழுத திரைக்கதையை கெவின் ரெனால்ட்ஸும் பால் அயலோவும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ஜோஸப் ஃபைன்ஸ் ரோமத் தளபதி வேடத்தையும், அவருடைய உதவியாளர் வேடத்தை டாம் ஃபெல்ட்டன் என்னும் நடிகரும் ஏற்றிருக்கிறார்கள்.


              2016-ம் ஆண்டு ஜனவரியில் வெளியாக இருக்கும் இந்தப் படம் ஹாலிவுட்டில் பெரிய சர்ச்சைகளை உருவாக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் உருவாவதையே தடுக்க முயன்ற ஹாலிவுட், படம் வெளியான பின்னர் என்ன எதிர்வினையை ஆற்றுமோ என்னும் திகிலுடன் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் திரில்லராக இப்போதைக்கு ரைஸன் அமைந்திருக்கிறது.

              தஹிந்து