Showing posts with label KUMUTHAM. Show all posts
Showing posts with label KUMUTHAM. Show all posts

Sunday, February 03, 2013

புதிய தலைமுறை திரு மாலன் அவர்களிடம் சில கேள்விகள்

விகடன் , குமுதத்திற்குப்பின்  இளைஞர்களின் வரவேற்பைப்பெற்ற இதழ் புதிய தலைமுறை. குறுகிய கால கட்டத்தில் ஒரு லட்சம் புக் சேல்ஸ். அவங்க ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்காங்க . அதாவது மாதம் ஒருவருக்கு அந்த இதழை தயாரிக்கும் வாய்ப்பு . 4 இதழ்கள் தயாரிக்கலாம்.வாரம் ஒரு புக் வீதம் மாதம் 4 புக் , இந்த மாதிரி 12 பேருக்கு வாய்ப்பு . ஒரு வருடம் - 12 மாதம் , 12 பேர் தலா 4 வாரம், 48 வாரம் வாசகர் தயாரிப்பு 


 வரவேற்க வேண்டிய  விஷயம். ஏன்னா எல்லாருக்கும் பத்திரிக்கை தயாரிக்கும் , பணி புரியும் எண்ணம், ஆசை இருக்கும், ஆனா வாய்ப்பு இருக்காது. அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் விதமாய் இந்த அறிவிப்பு இருக்கு.


 ஆனா அதுல அவங்க போட்ட கண்டிஷன் ஸ் பார்த்தா மிடில் கிளாஸ் ஃபேமிலி இளைஞர்கள் கலந்துக்கவே முடியாது . சென்னை வந்து போகும் செலவை அவங்க ஏத்துக்க மாட்டாங்களாம், புதிய தலைமுறை ஊழியர்களுக்கான சலுகைகள் ஏதும் கிடையாதாம், ஒரு வாரம் தங்கி செயல்படும்போது அதுக்கான செலவையாவது ஏத்துக்குவாங்களா? அல்லது அதுவும் நாம தானா? என்ற தகவல் கொடுக்கப்படலை



எனது கேள்விகள்


1.  பி கே பி நடத்திய உங்கள் ஜூனியர் மாத இதழ் இதே போல் பல வருடங்களுக்கு முன்பு ( 1996 டூ 1999 )  இதே போல் ஒரு வாய்ப்பை வாசகர்களுக்கு வழங்கியது . அவர்கள் புக் சேல்ஸ் இவர்களுடையதை விட 25 மடங்கு கம்மி. அவங்களே  சென்னை வந்து போகும் செலவை ஏத்துக்கிட்டாங்க , இத்தனைக்கும் அவங்களுக்கு அந்த புக்கால பெரிய லாபம் ஏதும் இல்லை. மினிமம் 10,000 மேக்சிமம் 20,000 புக் சேல்ஸ் ஆன ஒரு புக்கே இத்தனை செலவு செய்யும்போது  1,50,000 புக்ஸ் விற்கும் புதிய தலைமுறை ஏன் ஓ சி யில்  மங்களம் பாட நினைக்குது? 


2. இதே போல் குமுதம் ஆஃபீசில் 2000 ஆம் ஆண்டின் தீபாவளி ஸ்பெஷல் இதழுக்காக டாப் டென் ஜோக் ரைட்டர்ஸ் சை சென்னை வர வைத்து ஒரு மீட்டிங்க் போட்டாங்க. வந்தவங்களுக்கு அப் அண்ட் டவுன் சார்ஜ் குடுத்து , ஆளுக்கு  ஒரு வாட்ச் ( ஒர்த் ரூ 1850 ) பரிசு தந்தாங்க . மதிய விருந்தும் இருந்தது , பின் 2012 ஆம் ஆண்டு இதே போல் இன்னொரு மிட்டிங்க் , இதிலும் டிட்டோ . ஏன் உங்க பத்திரிக்கை மட்டும் எளிய மக்களை , இளைஞர்களை கண்டுக்க மாட்டேன்கறீங்க? 



3. ஆனந்த விகடன்  - விக்ரம், விஜய்  என பல வி ஐ பி நடிகர்களுடன் வாசகர் சந்திப்பு நடத்திய போது இதே போல்  அசத்தலான பரிசு கொடுத்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ( ரூ 500 பில் ஒரு ஆளுக்கு )  விருந்து கொடுத்தது .


இப்படி பல முன்னுதாரணங்கள் பத்திரிக்கை உலகில் இருக்கு . நீங்க ஏன் அப்படி செய்யக்கூடாது? 

 ஒரு ஆஃபீஸ்ல பணி புரியும்  ஆள் ஒரு வாரம் லீவ் போட்டா  சம்பளம் பிடிச்சுக்குவாங்க , பல காரணம் சொல்லி லீவ் எடுக்கனும் .அது போக  சென்னை வந்து போகும் செலவும் கூடுதல் சுமைதானே? 


இதை எல்லாம் நான் எனக்காக கேட்கலை,. ஏன்னா நான் இதுக்கு விண்ணப்பிக்கலை . மற்ற மிடில் கிளாஸ் இளைஞர்கள் சார்பா கேட்கறேன். ( நான் கலந்துக்காததுக்கு காரணம் இது யூத்ங்களுக்கானது , என்ன தான் நான் யூத்தா இருந்தாலும்  18 வயசு டூ 25 வயசு யூத் இல்லை ) 




 இந்த பதிவை படிக்கும் பத்திரிக்கைத்துறையினர் ஏழை இளைஞர்களின் கஷ்டம் உணர்ந்து இது போன்ற விழாக்கள்,  பத்திரிக்கைத்தயாரிப்பிப்பணிகள் இவற்றுக்கு  போக்குவரத்துச்செலவு தந்து உதவுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்






Thursday, December 06, 2012

குமுதம் இதழில் நிகழ்ந்த இலக்கியத்திருட்டு - அம்பலப்படுத்தினார் டாக்டர்

தமிழில் மட்டும் அல்ல அனைத்து மொழிகளிலும் சுடுதல் பிராசஸ் அப்பப்ப ஆங்காங்கே நடந்துட்டுதான் இருக்கு.குங்குமம் இதழில் அய்யம்பேட்டை வி விஜயலட்சுமி என்பவர் ( பெண் பெயரில் ஒரு ஃபேக் ஐ டி ) ஆனந்த விகடன்  இதழில் வந்த கவிதையை அப்படியே மகேஷ்-விஜய்  செய்து ஐ மீன் ஜெராக்ஸ் செய்து  மாட்டினார்.புகழ் பெற்ற இதழில் வந்த பிரபலமான படைப்பை திருடும்போது அவங்க என்ன தான் நினைப்பாங்கன்னு தெரியல . யாரும் கவனிக்க மாட்டாங்கன்னா? அல்லது மறந்துருவாங்கன்னா? 

ஏதாவது பிற மொழிப்படைப்பை மொழி பெயர்த்து பட்டி டிங்கரிங்க் பண்ணி அண்ணன் மிஷ்கின் மாதிரியோ, ஜெயம் ராஜா மாதிரியோ ஹோம் ஒர்க் பண்ணி இருந்திருக்கலாம். 


 அடுத்து தமிழ் நாடெங்கும் பிரபலமான திருச்சி அரவக்குறிச்சிப்பட்டி எம் அசோக் ராஜா  1980 களில் வந்த ஜோக்ஸ்களை 1995 டூ 2000 வரை ஜெராக்ஸ் எடுத்து பல பத்திரிக்கைகளில் மாட்டினார் . ஆனந்த விகடன் இதழில் இருந்து அவருக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டதாகத்தகவல்.



இப்போது மாட்டி இருப்பவர் போளூர் சி ரகுபதி . இவர் குமுதம் , குங்குமம் இதழ்களில் பல ஒரு பக்க  சிறுகதைகளை எழுதி இருக்கிறார். பல வருடங்களாகவே இவர் பெயரை அடிக்கடி புக்ஸில் பார்த்திருக்கிறேன்.


பாண்டிச்சேரியில் கல்லூரி லெக்சரராகப்பணி ஆற்றும் புதுவை சந்திரகிரி என்பவரின் சிறுகதை தினமணிக்கதிர் இதழில்  வெளீயானதை ஒரு வருடம் கழித்து குமுதம் இதழில் ரகுபதி பிரசுரமாக்கி இருக்கிறார். 



ட்விட்டர் நண்பர் டாக்டர்



சிறுகதை கதிர் 16-31 ஜனவரி  94-ல் புதுவை சந்திரஹரி எழுதிய 
இந்த கதை
Views 102
419 days ago
சிறுகதை கதிர் 16-31 ஜனவரி 94-ல் புதுவை சந்திரஹரி எழுதிய இந்த கதை






 இன்று வெளியான தீபாவளி மலர் குமுதத்தில்
 போளூர் சி.ரகுபதி நூறு சதம்
 காப்பியடித்து அதே கதை இங்கே:
Views 116
419 days ago
 வெளியான தீபாவளி மலர் குமுதத்தில் போளூர் சி.ரகுபதி நூறு சதம் காப்பியடித்து அதே கதை இங்கே:

Wednesday, September 12, 2012

குமுதம் விழாவில் சென்னிமலை சி .பி.செந்தில்குமார் பேச்சு

சென்னை - குமுதம் - ஜோக் ரைட்டர்ஸ் சந்திப்பு  பாகம் 2

குமுதம் பத்திரிக்கை எங்களை எல்லாம் மதிச்சு அழைச்சு விழா நடத்துவதில் ரொம்ப சந்தோஷம்.. 12 வருடங்களுக்குப்பின் சந்திக்கிறோம். இங்கே பேசுனவங்க எல்லாம் குமுதம் பத்திரிக்கை பற்றி ரொம்ப சிலாகிச்சு சொன்னாங்க.. நான் என் மனசுல உள்ளதை எந்த ஒப்பனையோ,அலங்காரங்களோ செய்யாம சொல்றேன்.. 


2000 ஆம் வருஷ தீபாவளி மலர்ல இதே மாதிரி நிகழ்ந்த ஜோக் ரைட்டர்ஸ் சந்திப்பை 2 பக்க கட்டுரையா போட்டீங்க.. அப்போ இதே மாதிரி குமுதம் புக்ஸின்  ஜோக்ஸ் தரத்தை கூட்டுவது எப்படி?ன்னு பேசுனோம்.. அப்போ குமுதத்தின் விலை ரூ 6. குமுதத்தோட சேல்ஸ்  ஏழரை லட்சம். அப்போ என்ன டாக் இருந்துச்சுன்னா குமுதம் புக்கை ஏழரை லட்சம் பேருக்கும் இலவசமா குடுத்தாலே அதுல வர்ற விளம்பரங்கள் மூலமா குமுதத்துக்கு வர்ற லாபம் ஒரு புக்குக்கு ரூ 1.80  அப்டினு சொல்வாங்க. 


அப்போ ஒரு ஜோக்குக்கு ரூ 50 சன்மானம் குடுத்தீங்க.. ஒரு பக்க கதைக்கு ரூ 100 குடுத்தீங்க.. அப்போ ஒரு பவுனோட விலை ரூ 3900. பெட்ரோல் விலை ரூ 34 .குமுதம் விலை ரூ 6 . இப்போ 12 வருஷங்கள் கழிச்சு பார்த்தா ஒரு பவுனோட விலை ரூ 24,000 + . பெட்ரோல் விலை ரூ 72  .குமுதம் விலை ரூ 10 . எல்லாமே டபுள் மடங்கை தாண்டிடுச்சு. ஆனா சன்மானம்  12 வருடங்களுக்கு முன்னால  என்ன சன்மானம் தந்தீங்களோ அதே 50 ரூபா தான் தர்றீங்க..


 போட்டி பத்திரிக்கைகளான தின மலர் வார மலர்ல ஒரு ஜோக் குக்கு ரூ 500 தர்றாங்க.. அது போக ஸ்பெஷல் ஜோக் 1 க்கு 1000 தர்றாங்க. ஆனந்த விகடன்ல  ஒரு ஜோக் = ரூ 100. ஆனா குமுதம் இதழ்ல  ஏன் சன்மானத்தை உயர்த்தலை?


 உங்களை விட பல மடங்கு சேல்ஸ்ல குறைவா இருக்கும் கல்கி வார இதழ்ல 2000 ஆம் வருஷத்துல ஒரு ஜோக்குக்கு ரூ 15 குடுத்தாங்க. இப்போ 3 மடங்கா  45  தாண்டி ரூ 50 தர்றாங்க.. அட்லீஸ்ட் நீங்க ரூ 100 ஆவது தர வேண்டாமா?


அடுத்து செலக்‌ஷன் டீம். பொதுவா இப்போ இருக்கும் அனைத்து பத்திரிக்கைகளிலும் ஜோக் செலக்‌ஷனுக்கு அனுபவம்  மிக்க ஆட்களை போடுவது கிடையாது. செலக்‌ஷன் டீம்ல இருக்கறவங்க பல வருசங்கள் எல்லா பத்திரிக்கைகளும் படிச்சவரா இருக்கனும். அப்போதான் உல்டா ஜோக்ஸ் வந்தா கண்டு பிடிக்க முடியும்..


ஆல்ரெடி வந்த ஜோக்குகள் தான் இப்போ மீண்டும் மீண்டும் ரீ மேக் ஜோக்குகளா உலா வந்துட்டு இருக்கு. ஒரு நல்ல படைப்பாளி ஒரு நாளுக்கு 10 ஜோக் அனுப்பினா  ஒரு உல்டா படைப்பாளி பல புக்ஸ்ல இருந்து சுட்டு 100 ஜோக்ஸ் அனுப்பறார். செலக்‌ஷன் டீம்ல இருக்கறவங்க அடடே, இத்தனை அனுப்பி இருக்காரே என அவருக்கே அதிக வாய்ப்பு தர்றீங்க.



இதுக்கு நல்ல உதாரணமா எம் அசோக் ராஜா அரவக்குறிச்சிப்பட்டி அவர்களை சொல்லலாம்.. அவர் புக் ஷாப்ல தான்  இருக்கார். எல்லா பழைய புக்ஸும் அத்துபடி.. அது போக நடை பாதைக்கடைகள்ல விற்கும் பழைய குமுதம், விகடன், பாக்யா வாங்கி அதுல வரும் ஜோக்ஸ் காப்பி அடிச்சு எழுதறார்.. ஏன் அப்படிப்பட்டவங்களுக்கு வாய்ப்பு தர்றீங்க? புது ஆட்களுக்கு புது ஜோக்ஸ்க்கு வாய்ப்பு தாங்க..



 புது ஜோக்ஸ் போட ஒரு குறுக்கு வழி இருக்கு. அது டாபிக்கல் ஜோக்ஸ் போடறதுதான்.. உதாரணமா இந்த மன்னர் ஜோக்ஸ், வேலைக்காரி ஜோக்ஸ், நர்ஸ் ஜோக்ஸ் எல்லாம் கட் பண்ணுங்க.. அந்தந்த வாரத்துல எது ஹாட் டாபிக்ஸோ அது சம்பந்தமான ஜோக்ஸ்.. உதாரணமா ஆண்ட்ரியா-அனிரூத் கிஸ் மேட்டர்,அழகிரி மகன் கைது ஆகும் சூழல்,கார்ட்டூனிஸ்ட் கைது இந்த மாதிரி மேட்டர்ஸ் கைல எடுங்க.. அப்போ காப்பி ஜோக்ஸ் உல்டா ஜோக்ஸ் குறைஞ்சுடும். நீங்க மீண்டும் மீண்டும் தலைவர் ஜோக், டாக்டர் ஜோக், வேலைக்காரி ஜோக் போட்டா எல்லாம் ரிப்பீட் ஆகிட்டே தான் இருக்கும் 


 இன்னைக்கு ஆனந்த விகடனும், குங்குமமும் நெட்ல அப்டேட்டா இருக்காங்க.. ட்வீட்ஸ்  வலை பாயுதே , வலைப்பேச்சு என்ற டைட்டில்ல வருது,.,.  ஆனா குமுதத்துல வர்றது இல்லை.  குமுதம் ரிப்போர்ட்டர்ல ஆன் லைன் ஆப்பு என்ற பெயரில் வருது.. ஆனா ஏன் குமுதத்துல. ட்வீட்ஸ்க்குன்னு 2 பக்கங்கள் ஒதுக்கக்கூடாது?


 ஒரு ட்வீட்க்கு ரூ 50 என சன்மானம் குடுத்து படைப்பாளிகளை ஊக்குவியுங்கள்.. ஏராளமான திறமைசாலிகள் சமூக வலைத்தளங்களில் இருக்காங்க.. அவங்களை உபயோகப்படுத்துனா அவங்களும் வளர்வாங்க, குமுதமும் வளரும்.


 குமுதம் இதழில் முதல்ல எல்லாம் ஆறு வித்தியாசங்கள் டாபிக்ல ஒரு ஜோக் செமயா வரும், ஆனா இப்போ அதுல குவாலிட்டி குறைஞ்சுடுச்சு.. அதில் நல்ல கவனம் செலுத்தனும்.


 குமுதம் பத்திரிக்கைல வாரம் மினிமம் 25 ஜோக்ஸாவது போடனும். ரெகுலரா ஜோக்ஸ் எழுதறவங்க 50 பேர் இருக்காங்கன்னா அவங்க தலா 50  ஜோக்ஸ் வாரம் அனுப்பினாலே வாரா வாரம் 2500 ஜோக்ஸ் வந்துடும். ஆனா நீங்க என்ன பண்றீங்க? குமுதம் இதழில் பணி புரியும் குட்டி மு வெங்கடேஷன், மாதவரம் பால்பண்ணை, ஜெயாப்ரியன், சென்னை இவங்க 2 பேருக்கும் தலா 2 பக்கம் ஒதுக்கிடறீங்க. அவங்க ஜோக்ஸ் போட்டது  பொக ஏதோ போனா போகுதுன்னு  தர்மம் போடற மாதிரி வாசகர்கள் ஜோக்ஸ் அஞ்சோ பத்தோ போடறீங்க? அது எப்படி பத்தும்?



 உங்க ஆஃபீஸ் ஆட்கள் ஜோக்ஸை போட வேண்டாம்னு சொல்லலை.. அதை கணக்குல வெச்சுக்காதீங்கன்னு சொல்றேன்.. வாசகர்கள் ஜோக்ஸ் மினிமம் 25 வாரா வாரம் போடுங்க.. அப்போதான் உற்சாகமா ஜோக்ஸ் எழுத முடியும்,..


 வாரா வாரம் ஒரு ஸ்பெஷல் ஜோக் கை ஒரு முழுப்பக்கத்துக்கு போட்டு முத்திரை ஜோக்னு போடுங்க.. ஆல்ரெடி இது ஆனந்த விகடன் ஒரு டைம் செஞ்ச மேட்டர் தான்... நல்ல விஷயங்களை நம ஃபாலோ பண்ணறது தப்பில்லை.



சினிமா விமர்சனங்கள் உங்க யூனிட் ஆட்கள் எழுதறாங்க.. அவங்க பெரும்பாலும் தமிழ்ப்படங்க மட்டும் தான் விமர்சனம் எழுதறாங்க. மற்ற மொழிப்படங்களான ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஹாலிவுட் பட விமர்சனங்களை வாசகர்கள் எழுத வாய்ப்பு குடுங்க.. படிக்கறவங்களுக்கும் ஒரு வெரைட்டி கிடைக்கும்.


 குமுதம் புக்ல கண்ட்டெண்ட் ரொம்ப கம்மியா இருக்கு.. ஒரு குமுதம் புக்கை  கேப் விடாம படிச்சா 45 நிமிஷங்கள்ல  ரெகுலர் வாசகனும், 1 மணி நேரத்துல புது வாசகனும் படிச்சுடலாம்.. ஆனந்த விகடன், இந்தியா டுடே எல்லாம் படிச்சு முடிக்க  2 மணி நேரத்துக்கும் மேல ஆகுது.. 



- தொடரும்



 என் பேச்சு முடிஞ்ச பின்  ஆசிரியர்கள், எடிட்டர்கள் பேசுனாங்க.. பின் கார்டூனிஸ்ட் கண்ணா 3 நகைச்சுவை கார்ட்டூன் வரைஞ்சு ஜோக்ஸ் போட்டி வைச்சாங்க.. அது பற்றி பிறகு....

இதன் முதல் பாகம் படிக்காதவங்க


சென்னை - குமுதம் - ஜோக் ரைட்டர்ஸ் சந்திப்பு பாகம் 1 

 http://www.adrasaka.com/2012/09/1_10.html

 

 


Monday, September 10, 2012

சென்னை - குமுதம் - ஜோக் ரைட்டர்ஸ் சந்திப்பு பாகம் 1

குமுதம் பத்திரிக்கையின் இணை ஆசிரியர் இரா மணிகண்டன்  20 நாட்களுக்கு முன் ஃபோன் பண்ணி குமுதம் ஆஃபீசில் முன்னணி ஜோக் எழுத்தாளர்கள் சந்திப்பு ஒண்ணு வைக்கப்போவதாகவும் , குமுதம் ஜோக்ஸ் தரத்தை முன்னேற்றும் ஆலோசனைக்கூட்டமாகவும், ஜோக் எழுத்தாளர்களை கவுரப்படுத்தும் விழாவாக அது இருக்கும் எனவும் அறிவித்தார்.மிக்க மகிழ்ச்சியுடன் வருவதற்கு ஒப்புதல் தெரிவித்தேன். நிகழ்ச்சி நடைபெறும் நாள் 8.9.2012 சனிக்கிழமை


 ஏன்னா இந்தக்காலத்துல தமிழ் நாட்டில்  படைப்பாளிகளுக்கு மரியாதை கிடைப்பதே அரிது. ஏற்கனவே 12 வருடங்களுக்கு முன் இதே போல் ஒரு சந்திப்பு  நிகழந்தது. 2000 ஆம் ஆண்டின் குமுதம் தீபாவளி மலரில் அது ஃபோட்டோக்களுடன் இடம் பெற்றது. அப்போ  தேர்வு ஆன டாப் டென் ஜோக் ரைட்டர்ஸ் 



1. வி சாரதி டேச்சு, திருவல்லிக்கேணி, சென்னை , 

 2. அம்பை தேவா , தூத்துக்குடி , 

3, சி பி செந்தில்குமார் , சென்னிமலை

 4. பா ஜெயக்குமார் , வந்தவாசி 

5. எஸ்  எஸ் பூங்கதிர் , திருவெண்ணெய் நல்லூர்


 6. சீர்காழி வி ரேவதி, தஞ்சாவூர்


7. உ ராஜாஜி , இடைக்காட்டூர்,சிவகங்கை


8. பாஸ்கி  ,சென்னை


9.தஞ்சை தாமு


10. இரா கமலக்கண்ணன், நாமகிரிப்பேட்டை






இந்த முறை  பழைய லிஸ்ட்டில் இருந்தவங்கள்ல முதல் 3 பேர் , 6வது நபர் மட்டும் இடம் பிடிச்சோம். மீதி ஆட்கள் புது வரவு . அதில் முக்கியமானவர் பர்வீன் யூனுஸ், இவர் இப்போ பெருந்துறையில் வங்கி மேலாளராக பணி புரிகிறார். அவர் தான் விடு பட்ட பல ஜோக் ரைட்டர்ஸை  விழாவுக்கு ஒருங்கிணைப்பதில் பெரும்பங்கு ஆற்றியவர்.


வழக்கம் போல் அதே ஏற்காடு எக்ஸ்பிரஸ் பயணம். சென்னையில் அதிகாலை 4.15 க்கு செண்ட்ரல் போயாச்சு. அங்கே இருந்து எதிர் புறம் உள்ள பார்க் ஸ்டேஷனுக்கு நடந்து போய்  எலக்ட்ரிக் ரயிலில் பல்லாவரம் ஸ்டேஷன் போனேன். அங்கே ட்விட்டர் நண்பரும் , அட்ராசக்க இணையத்தின் ஆரம்ப கால வாசகரும், ஆலோசனை சொல்பவருமான சிவ பக்தர் தீவிர ஆன்மீகவாதி சிவ கீர்த்தியுடன் சந்திப்பு. 


 சென்னை மழையுடன் என்னை வரவேற்றது, நண்பர் சிவா என்னை குடையுடன் வரவேற்றார். மழையிலும் தாமதிக்காமல்  வந்த அவர் என்னை அவர் வசிக்கும் அபார்ட்மெண்ட்டுக்கு அழைத்துச்சென்று உபசரித்தார். காலை டிபன் அவர் கைங்கரியம். ஆனியன் தோசை 8 சாப்பிட்டேன். காலை, மாலை என இரு வேளைக்கும் அவர் வாங்கி வந்த மாவு பாக்கெட் ஒரே  வேளையில் காலி ஆனது.. 

9.30 மணிக்கு என்னை பல்லாவரம் ஸ்டேஷனில் டிராப் பண்ணினார். விழா நடக்கும் நேரம் காலை 11 மணி தானே போயிடலாம்னு நினைச்சது எவ்லவ் பெரிய தப்பு.. ஏகப்பட்ட கூட்டம். வரிசையில் நின்று டிக்கெட் எடுக்கவே 30 நிமிடம் ஆகிடுச்சு. அங்கே இருந்து எக்மோர் ஸ்டேஷன் போனேன். மணி 10.30 ஆகிடுச்சு. 


 அம்பை தேவாவும் , பர்வீன் யூனுசும் ஃபோன் பண்ணி குமுதம் ஆஃபீசுக்கு வந்துட்டதா சொன்னாங்க.. கே ஆனந்தன் ஃபோன் பண்ணி நாங்க எல்லாம் 9 மணிக்கே வந்துட்டோம்.. நீங்க தான் லேட் என்றார்.. இதில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் வெளியூரில் ஒரு நிகழ்ச்சிக்கு செல்லனும்னா நம்ம ஊர் கணக்கு ஒத்து வராது.. பங்க்சுவாலிட்டியை கடை பிடிக்க  முன்னதாக தயாராக வேணும்.. 


அங்கே இருந்து 20 ஆம் நெம்பர் பஸ் பிடிச்சு அபிராமி தியேட்டர்  ஸ்டாப் போனேன் . ஆட்டோ வாடகை ரூ 70ன்னு சொன்னாங்க,. பஸ்சில் 5 ரூபாதான். சிக்கனம் தேவை எக்கணமும். 11. 15 க்கு ஆஃபீஸ் போய்ட்டேன். என்னமோ சி எம் ஆஃபீஸ் மாதிரி பயங்கர செக்யூரிட்டி..  ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவது போல் உள்ளே செல்ல ஏகபப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பண்ணி வெச்சிருந்தாங்க. போன தடவை இவ்வளவு பாதுகாப்பு இல்லை.. 


அதாவது  உள்ளே செல்லும் ஒவ்வொரு கதவிலும் செக்யூரிட்டி ஏதோ ஒரு கார்டை சொருகறார். அப்போதான் கதவு திறக்குது.. 

 கூட்டம் ஜஸ்ட் அப்போதான் ஆரம்பிச்சிருந்தாங்க.. நான் வரப்போ அம்பை தேவா தான் முதல்ல பேசிட்டிருந்தார்.


1.அம்பை தேவா - நான் 30 வருஷங்களா ஜோக் எழுதிட்டு இருக்கேன். என் பூர்வீகம் அம்பை.. விக்ரமசிங்க புரம் ( மணிரத்னம் எடுத்த ராவணன் படத்துல உலக அழகி ஐஸ்வர்யா ராய்  14 ஷாட்ல குளிச்சுட்டே இருப்பாங்களே அந்த அம்பா சமுத்திரம் - சி .பி ) நடிகர் சிவகுமார் என் நீண்டகால நண்பர். அவர் மகன் கார்த்தியின் திருமணத்துக்காக  கோவை வந்து பின்  ஊர் திரும்பும்போது நடந்த பெரிய  பஸ் விபத்தில் என் மகள் , மனைவிக்கு பெரிய காயம் ஏற்பட்டதால் நீண்ட நாட்கள் சென்னை மருத்துவ மனையில் தங்க வேண்டிய சூழலால் சென்னையில் பணி மாற்றல் வாங்கிக்கொண்டேன்.அந்த விபத்து சிகிச்சைக்கு சிவகுமார் ரூ 1,50,000 உதவி செய்தார்.  வாரா வாரம் 100 ஜோக்குகள் எழுதறேன்.. எனக்கு ஜோக் எழுதுவதில் சலிப்பே ஏற்பட்டதில்லை .



2. பர்வீன் யூனுஸ்  - நான் ஒரு வங்கியில் மேலாளரா இருக்கேன். மாசம் ரூ 60,000 சம்பளம் வாங்கினாலும் ஜோக் சன்மானமா ரூ 50 வந்தது என மனைவி ஃபோன் பண்ணிச்சொல்லும்போது ஏற்படும் மன மகிழ்ச்சி அளவில்லாதது. அது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. கடந்த 2 வருடங்களாக பல பத்திரிக்கைகளில் எழுதிட்டு வர்றேன்.  எல்லா படைப்பாளிகளுக்கும் எஸ் எம் எஸ் மூலமா யார் யார் படைப்புகள் எந்த எந்த பத்திரிக்கைகளில் வந்திருக்கு என தகவல் சொல்லிடுவேன்.. குமுதம் பத்திரிக்கையும், விகடனும் என் 2 கண்கள் போல.. தொடர்ந்து வாய்ப்பு தர்றீங்க.. 



3. பாலாஜி கணேஷ் , கோவிலாம்பூண்டி - சார் சொன்னா நம்ப மாட்டீங்க.. மிக வறுமையான சூழலில் நான் இருக்கேன்././ நான் வேலைக்குப்போய் சம்பாதிப்பதை விட ஜோக் எழுதி சம்பாதிக்கறதுல தான் வீட்ல அடுப்பு பொங்குது.. சில சமயம் நீங்க அனுப்பிய மணி ஆர்டர் பணத்துல தான் அரிசி வாங்கி சமைச்சிருக்கோம்.. என் வாழ்க்கைல பத்திரிக்கைகளும், படைப்புகளும் இரண்டறக்கலந்துடுச்சு . 



4. கே ஆனந்தன் பி பள்ளிப்பட்டி  - நான் ஜோக்ஸ், ஒரு பக்க கதை என எல்லாம் கலந்து கட்டி எழுதிட்டு வர்றேன்.. ஒரு பக்க சிறுகதைகள் எழுத என்னை ஊக்குவிச்சதே குமுதம் தான்.மற்ற பத்திரிக்கைகளை விட குமுதம் தான் என் படைப்புலக வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்குது.. ஏன்னா ஒரு முறை விகடன் ஆஃபீஸ்ல ஃபோன் பண்ணி 2 நாளுக்குள் அனுப்புங்க அவசரம்னு சொல்லி ஒரு டாபிக்ல ஜோக்ஸ் அனுப்ப கேட்டாங்க.. நானும் ஆஃபீஸ்க்கு லீவ்  போட்டுட்டு மாங்கு மாங்குன்னு 100 ஜோக்ஸ் எழுதி அனுப்பினேன். ஒண்ணு கூட வர்லை..  மனசு விட்டுப்போச்சு.. ஆனா குமுதத்துக்கு நான் அனுப்பற  ஜோக்ஸ்ல 20க்கு 1 என்ற விகிதத்துல வந்துடுது..



5. சொக்கம்பட்டி தேவதாசன்  - நான் ஆனந்த விகடன் உட்பட பல பத்திரிக்கைகளில் நிருபராக பணி ஆற்றியவன். கடந்த 5 வருடங்களாக ஜோக்ஸ் எழுதிட்டு வர்றேன். ஆனந்த விகடன் தீபாவளி  மலரில் பல ஜோக்ஸ் என்னுது வந்திருக்கு. என்னை லட்சக்கணக்கான மக்களுக்கு அறிமுகம் செஞ்சதில் குமுதத்திற்கு பெரிய பங்களிப்பு இருக்கு.




6. சீர்காழி வி ரேவதி - நான் தஞ்சையில் இருக்கேன்.. என் மனைவி பேர்ல தான் எழுதிட்டு இருக்கேன்.. 21 வருடங்களாக ஜோக்ஸ் எழுதிட்டு இருக்கேன்.. என்னோட முதல் ஜோக் வந்ததே குமுதத்துல தான்.. புக்ல என் பேரு ஐ மீன் என் மனைவி பேரு பார்க்கும்போது எழுதுவதற்கான உத்வேகம் பெருகும்..



7. அ . பேச்சியப்பன் , ராஜபாளையம் - குமுதம் ரிப்போர்ட்டர்  வைத்த பாபா பஞ்ச் டயலாக் போட்டியில் 200க்கும் மேற்பட்ட பஞ்ச் டயலாக்ஸ் அனுப்பினேன்.. அதில் தேர்வானதுதான் 

1. நான் சாய் பாபா அல்ல, யார் பக்கமும் சாயாத பாபா, 

2. நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்..



இப்போ குமுதம் நடத்திய கோச்சடையான் பஞ்ச் டயலாக் போட்டியிலும் கலந்திருக்கேன்.. வாசகர்களை நாடித்துடிப்பு அறிந்து குஷிப்படுத்துவதில் குமுதம் தான் என்றும் நெம்பர் ஒன்..



8. சுபஸ்ரீ சென்னை - நானும், எங்கப்பாவும் கடந்த 3 வருடங்களா குமுதத்துக்கு ஜோக்ஸ் எழுதிட்டு இருக்கோம்.. என் படைப்பு வந்தா என்னை விட எங்கப்பா தான் சந்தோஷப்படுவார்.  ஒரு பொண்ணா நான் சந்தோஷப்படறது என்னை எங்கப்பா ஊக்குவிக்கறதுதான். 



9.  நா கி பிரசாத் , கோவை - என் முத ஜோக், என் முதல் சிறுகதை வந்ததெல்லாம்  குமுதம் இதழில் தான். புதிய படைப்பாளிகளை குமுதம் ஊக்குவிப்பது போல் எந்த பத்திரிக்கையும் ஊக்குவிப்பது இல்லை.. ஒரு பக்க கதை போடும்போது அதில் படைப்பாளிகளின் பெயரை நல்லா போல்டு லெட்டர்ல போடுங்க.. ஏன்னா 2 லைன்ல ஜோக் எழுதறவங்க பேரும், ஒரு பக்கத்துல கதை எழுதறவங்க பேரும் ஒரே சைஸ்ல தான் வருது..  இன்னும் அட்ராக்சனா பேர் போட்டா நல்லாருக்கும்,,


 இதைத்தொடர்ந்து பேசுனவங்க எல்லாம்  ஒரே டைப்ல தான் பேசுனாங்க.. அவங்க பேச்சுல ஒண்ணை கவனிச்சேன்.. எல்லாரும் அவங்கவங்களைப்பற்றி ஒரு சுய அறிமுகம், அப்புறம் குமுதம் துதி பாடல் இதுதான் மேலோங்கி இருந்தது.. கூப்பிட்ட்டிருப்பது குமுதம் பத்திரிக்கையின் ஜோக்ஸ் தரத்தை மேம்படுத்துவது எப்படி? என்பதற்கான ஆலோசனைக்கூட்டம்.. ஆனா வந்தவங்கள்ல பெரும்பாலும் அந்த டாப்பிக்கை தொடவே இல்லை.. 


குமுதம் பத்திரிக்கையின் நிறை குறைகள் என்ன? அவங்க என்ன செய்யறாங்க? என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? ட்விட்டர்ஸ்க்கு ஏன்  விகடன், குங்குமம் போல்  மரியாதை செலுத்தலை?என்பது பற்றி விளக்கமா நான் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு அடுத்த பதிவில்..... 

Thursday, April 05, 2012

குமுதம் - கிருஷ்ணா டாவின்ஸி மரணம் -பாலை இயக்குநர் பகிரும் சில நினைவுகள்

தமிழ் பத்திரிகை உலகில் நன்கு அறியப்பட்ட பிரபல தமிழ்ப் பத்திரிகையாளர் கிருஷ்ணா டாவின்ஸிகாலமாகிவிட்டதாகச் சென்னைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


லேப்டோ பைரோஸிஸ் எனப்படும் எலிக்காய்ச்சலால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணா நேற்று மாலை 5 மணி அளவில் மரணமடைந்ததாகத் தெரிய வருகிறது.


அவரது உடல் போரூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணி அளவில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ளதாக மேலும் அறியப்படுகிறது.


கிருஷ்ணா டாவின்ஸிக்கு அஞ்ச  ஆளுமையான தனிப்பட்ட சித்திரத்தை பிரத்தியேகமான நினைவுக் கட்டுரையாக நமக்குத் தருகிறார், அவருடன் குமுதம் வார இதழில் பணிபுரிந்த பாலை படத்தின் இயக்குனர் ம.செந்தமிழன்.


கிருஷ்ணா டாவின்சியை அறிவீர்களா?


கிருஷ்ணா டாவின்சி என்ற பெயரை உங்களில் பலர் அறிந்திருக்கலாம். குமுதம் எனும் வணிக இதழின் மிகச் சில அறிவுசார் பக்கங்களையும், பல்வேறு வணிக நோக்குப் பக்கங்களையும் நிரப்பிய பெயர் அது. கின்ஸி என்ற புனைப் பெயரில் வெளியான அரசியல் கேலிச் சித்திர வசனங்களின் சொந்தக்காரரும் கிருஷ்ணா டாவின்சியே.


2001 ஆம் ஆண்டு, ஈழத்தில் தலைவர் பிரபாகரன் சர்வதேசச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, குமுதம் சார்பில் சென்றவர். புலிகளுக்கு எதிரான மனநிலையில் இருந்த கிருஷ்ணா, ஆச்சர்யப்படத்தக்க விதத்தில், புலிகள் ஆதரவாளராக மாறினார். நான் குமுதம் இதழில் செய்தியாளராக இணைந்தபோது எனக்கான ஆலமரம் கிருஷ்ணா. சிநேகாவின் அழகு பற்றியும் க்யூபாவின் பொருளாதாரம் பற்றியும் ஒரே கோல்ட் பில்டர் கிங்சை இழுத்தவாறு அவரால் பேச முடியும்.


நான் பணியாற்றிய காலத்தில், குமுதம் இதழ் எடிட்டோரியலில் அவ்வப்போது ஏற்பட்ட குழுக்களில் சில நல்லவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். மீதமிருந்த நல்லவர்களில் கிருஷ்ணா ஒருவர். யாரும் எந்தக் குழுவினருடனும் அடையாளப்பட அஞ்சிய நாட்கள் அவை. தேநீர் குடிக்க யார் யாருடன் போகிறார்களோ, அவர்கள் ஒரு குழு என காங்கிரசுக்குச் சற்றும் சளைக்காமல் வம்பு பேசிய காலம்.


‘நான் கிருஷ்ணா சார் ஆள்’ என நான் மார்தட்டுவேன். இப்போதும் குமுதம் இதழில் பணியாற்றும் பலருக்கு இது தெரியும். அவருடைய ’ஆளாக’ இருப்பதில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி. தத்துவம், கோட்பாடு, இதழியல், நடைமுறை அரசியல், பெண்கள், பாலியல், பெண்ணியம், குடும்பம் இன்னும் எவ்வளவோ பேசும் வல்லமை அவருக்கு உண்டு. எனக்கு இதுவே போதும்

.
குமுதம்.காம் இணையத்தைக் கட்டி எழுப்பிய சிலரில் கிருஷ்ணா குழுவினராகிய நாங்களும் உண்டு. அதிகாலை 4 மணி வரை நானும் ஆனந்தும் கிருஷ்ணாவுடன் இணையதளத்துடன் முண்டிக் கிடப்போம். விஜயன் எனும் எளிய தட்டச்சுப் பணியாளனை, ‘விஜயன் நீங்க நல்ல டிசைனரா வருவீங்க’ என வளர்த்தெடுத்தார் அவர். சென்னையின் தலைசிறந்த வடிவமைப்பாளர்களில் இன்று விஜயன் ஒருவர்.


குமுதம்.காமில் ‘நிகழ்காலம்’ எனும் பத்திரிகையைத் தொடங்கியபோது, என்னுடைய அரசியல் ஆர்வத்தைக் கண்டு, என்னை அந்த இதழுக்குப் பொறுப்பாளராக்கினார் அவர். அவுட்லுக் எனும் துணிச்சல் மிகு ஆங்கில இதழை எனக்கு அவர்தான் அறிமுகப்படுத்தினார். அந்த இதழில் வெளியான நல்ல கட்டுரைகளை நான் மொழி பெயர்த்து எழுதிக் குவித்தேன்.


விரல்கள் வலிக்குமளவு எழுதுவேன். கிருஷ்ணா மெல்லிய புன்னகையுடன், ‘தம் போடப் போலாமா?’ எனக் கேட்டால் அந்த வலி மரத்துப் போகும். தேநீர்க் கடையில் என்னுடன் நின்றபடி சாலையில் கடக்கும் இளம் பெண்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு எனக்கும் அவர்களில் அழகிகளை கண்ஜாடையால் காட்டுபவர் குமுதம் இதழின் துணை ஆசிரியர் என்பதை என்னால் நம்ப முடிந்ததில்லை.


குமுதம் இதழின் தர்க்கங்களுக்கு உட்படாத செய்திகளையெல்லாம் நான் எழுதக் கேட்டபோது, பொறுப்பில் இருந்த பலர் கேலியாக என்னை ஓரங்கட்டுவதுண்டு. கிருஷ்ணா தலைமை நிர்வாகியிடமே என்னை அழைத்துச் செல்வார். ’சத்தியமங்கலம் காட்டுக்குள்ள மலைவாழ் மக்கள் காட்டை விட்டு வெளியேறிக்கிட்டு இருக்காங்களாம் சார்…சென்சேஷனல் ஸ்டோரி…செந்தமிழன் போறேங்கறார்’ என்பார். அனுமதி கிடைக்கும்.


’கல்பாக்கம் அணு உலையைப் பத்தி நம்ம பத்திரிகை உலகம் நெகடிவா எழுத மாட்டேங்குது செந்தமிழன்…நாம் எழுதணும்…’ என்றார்.


‘நான் எழுதறேன் சார்…


’ஓகே ஆனால்…உங்களுக்கு சில க்ரைசிஸ் வரும்…சமாளிக்கணும்’


‘பரவால்ல சார்…’


ஏறத்தாழ உயிரைப் பணயம் வைத்து அலைந்து நான் எழுதிய கட்டுரையை, ’எதுக்கும் அட்டாமிக் அதாரிடில வெர்சன் வாங்கிடுங்க’ என வழக்கம்போல் கூறி, சிலர் அந்தக் கட்டுரையைப் புதைக்க முற்பட்டபோது, மெல்லிய புன்னகை மாறாமல்,


’செந்தமிழன்…இன்னும் ரெண்டு வாரத்துக்கு இதைப் பத்திப் பேசாதீங்க…என்னோட இஷ்யூ வரட்டும்….நான் பார்த்துக்கறேன்’ என்றார்.


அவர் பொறுப்பில் வந்த அந்த இதழில் ’கொல்பாக்கம்’ என்ற தலைப்பில், என் கட்டுரை கவர் ஸ்டோரி. எட்டுப் பக்கங்கள், நான் எடுத்த புகைப்படங்களுடன் வந்தது.


‘சிக்கன் எமன்’ என்னும் கவர் ஸ்டோரி நான் எழுதியது. ப்ராய்லர் கோழிக் கறியை உண்ண வேண்டாம் என்பது கருத்து. கறி விலை கிலோ 18 ரூபாயாகச் சரிந்தது. எனக்குக் கொலை மிரட்டல். எனது வீட்டுத் தொலைபேசி எண்ணை குமுதம் அலுவலகத்திலேயே யாரோ கோழிப் பண்ணை உரிமையாளர்களிடம் கொடுத்து விட்டனர். நள்ளிரவு மணி அடிக்கும். சகல கெட்ட வார்த்தைகளையும் கேட்டுக் கொண்டு தூக்கமின்றிக் கிடப்பேன்.


கிருஷ்ணா அதே மெல்லிய புன்னகையுடன், ‘செந்தமிழன் பேசாம ஒரு வாரத்துக்கு என் வீட்ல தங்கிக்கங்க’ என்றார். அதன் பிறகு, என் அறைக்குப் போவதே அரிது என்றாகிவிட்டது.


மேற்கு தாம்பரம் அருகே, ஒரு தி.மு.க பிரமுகர் தன் ஊருக்குள் தாழ்த்தபட்ட மக்கள் வாழும் பகுதிக்கு ரேசன் கடை வர விடாமல் தடுத்தார். நான் புகைப்படத்துடன் எழுதிவிட்டேன். வாக்குமூலங்களை திருட்டுத்தனமாக பதிவும் செய்துவிட்டேன். கட்டுரை வந்ததும், அந்தத் தேர்தலில் மேற்படிப் பிரமுகருக்கு சட்டமன்ற உறுப்பினர் போட்டி வாய்ப்பு பறி போனது.


அடியாட்களுடன் அலுவலகம் வந்துவிட்டார். கீழே உட்கார்ந்து கொண்டு, ’எழுதினவனை வரச் சொல்லு’’ என்று கத்துகிறார். அப்போது பொறுப்பில் இருந்த ஒருவர் என்னிடம், ‘நீதானய்யா எழுதின…? நீயே போய் பேசி அனுப்பு’ என்றார். என் நிலையை நீங்கள் உணரலாம். முகத்தைப் பார்த்துவிட்டால், தனியே செல்லும்போது வண்டியை மோதினால் போதும்.


கிருஷ்ணாவிடம் ’சார் என்னைப் போகச் சொல்றார் சார்…கொஞ்சம் பேசிப் பாருங்க’ எனக் கெஞ்சினேன்.


கிருஷ்ணா என் தோளில் கைபோட்டபடி, ‘செந்தமிழன்…இவன் கிட்ட சொன்னா கேக்க மாட்டான்…நீங்க கீழே போங்க…செந்தமிழன் வேலையா இருக்காரு… என்ன விஷயம்னு கேளுங்க…’நீங்க யாருன்னு கேட்டா நான் தான் கிருஷ்ணா டாவின்சின்னு சொல்லுங்க’ என்றார் அதே புன்னகையுடன்.


நான் அவ்வாறு செய்துதான் தப்பினேன்.


அவர் ரயில்வே அதிகாரியாகப் பணியாற்றியவர். சினிமா இயக்குனர் ஆவதுதான் அவர் லட்சியம். அதற்காகத்தான் குமுதம் இதழில் சேர்ந்ததாகச் சொல்வார். ‘செந்தமிழன் சினிமாவுல சேர, பத்திரிகை ஒரு நல்ல எண்ட்ரி’ என்பார்.


என்னிடம் அடிக்கடி, ‘உங்க ஆம்பிஷன் என்ன?’ எனக் கேட்பார்

. ‘அப்படி எதுவும் இல்ல சார்…இப்ப இந்த வேலை பிடிக்குது…செய்றேன்…’ என்பேன்.


’தப்பு…நீங்க சினிமாவுக்குப் போனா நல்லா வருவீங்க..’என்பார். அவர்தான் முதன் முதலாக என்னைச் சினிமாவுக்குத் தகுதியானவனாகப் பார்த்தார். அவருடைய கதை ஒன்றை நானும் அவரும் சீன் சீனாகப் பேசி எழுதினோம்.


’செந்தமிழன் முதல்ல நான் படம் பண்றேன்…அடுத்து நீங்க’ என்பார்.


அவர் குடியிருந்த வீட்டுக்கு நள்ளிரவில் நான் போய் கதவைத் தட்டி, என்னை எதிர்த்துக் கேள்வி கேட்ட பெண் உரிமையாளரைக் கண்டபடித் திட்டிவிட்டேன். மறுநாள் காலை, அந்த வீட்டைக் காலி செய்யும்படி உத்தரவு வந்தது.


‘சாரி சார்…’ என்றேன். ‘அட நீங்க வேற செந்தமிழன்…இந்த ஹவுஸ் ஓனர் பெரிய இவளா…? நீங்க என்ன அவ கையப் பிடிச்சா இழுத்தீங்க…? வீ ஆர் ஜர்னலிஸ்ட்ஸ்… லேட் நைட் வருவோம்.. தே ஹவ் டூ அண்டர்ஸ்டேண்ட்’ என்றார் அதே புன்னகையுடன்.


இதுபோல் அவர் மூன்று வீடுகளை மாற்ற வேண்டி இருந்தது.


என்னை அவரே, சுபா வெங்கட்டிடம் அறிமுகம் செய்து வைத்தார். மின் பிம்பங்கள் நிறுவனத்தில் நான் நுழைவதற்கு முழுக் காரணமாகவும் கிருஷ்ணா இருந்தார்.


என் திருமணத்தை நடத்தியதில் கிருஷ்ணா – ரேவதி தம்பதியினரின் பங்குதான் மிக அதிகம்.


2001 ஜூன் மாத்தில் ஒரு நாள் தேநீர்க் கடையில் நின்று கொண்டிருந்தோம். என்னை கிருஷ்ணாவின் பொறுப்பில் இருந்து வேறு ஒரு நபரின் பொறுப்புக்கு மாற்றும்படி உத்தரவு வந்திருந்தது. மழை தூவிக் கொண்டிருந்தது. ’சார் அந்தாள்கிட்ட என்னால வேலை பாக்க முடியாது சார்…அவன் ஒரு இடியட்…’ என்றேன்.


’கொஞ்சம் பொறுத்துக்கங்க’ என்றார்.


‘வேணாம் சார்…நான் ரிசைன் பண்றேன்’ என்றேன்.


அதே புன்னகையுடன், ’இங்கேருந்து யாராவது ரிசைன் பண்ணினா எனக்கு சந்தோஷம்தான் செந்தமிழன்…’ என்றார். நான் அடுத்த பத்தாவது நிமிடம் விலகல் கடிதம் கொடுத்துவிட்டேன்.


’கிருஷ்ணா சார் இருக்கார்ல…பாத்துக்குவார்’ என்று, அடுத்த மாசம் வாடகைக்கு என்னப்பா பண்றது என ஊரிலிருந்து கேட்ட என் அம்மாவிடம் தொலைபேசியில் சொன்னேன்.


’கிருஷ்ணா சார்’ அதேபோல் பார்த்துக் கொண்டார். மின்பிம்பங்களில் சுபாவெங்கட் வழியே குமுதம் இதழில் வாங்கியது போல் மூன்று மடங்கு சம்பளம் பெற்றேன்.


சென்னையின் மத்தியதர வர்க்கத்து உறுப்பினராக நான் மாறியது அந்த தேநீர்க் கடையில் எடுத்த முடிவினால்தான். கிருஷ்ணா எனும் மனிதனின் நம்பிக்கையே செந்தமிழன் எனும் எளியவனின் வளர்ச்சி.


அந்த கிருஷ்ணா டாவின்சி இன்று இல்லை.


பத்திரிகையாளர், என் நண்பர் நா.கதிர்வேலன் ‘krishna davinci expired’ எனக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். கதிர்வேலனும் குமுதம் இதழில் எங்களுடன் பணியாற்றியவர்.


எப்படி இறந்தார்? ஏன் இறந்தார்? என எதையும் விசாரிக்கவில்லை இன்னும்.

எனக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையில் இருந்த ஒருவரால், எங்கள் உறவில் விரிசல் விழுந்தது. அவர் என்னோடு பேசுவதைக் குறைத்துக் கொண்டார். எனக்குக் குழந்தை பிறந்தது, நான் கார் வாங்கியது, நான் ஊரோடு போய் விவசாயம் பார்க்கத் தொடங்கியது, திரைப்படம் தொடங்கியது, படம் முடித்தது என என் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் அவருக்குத் தொலைபேசியில் சொல்லிக் கொண்டுதான் இருந்தேன்.


ஆனாலும், எனக்கும் அவருக்குமான விரிசலில் நியாயமே இல்லை என்பதைத்தான் தாங்கிக் கொள்ள இயலவில்லை.


ஒரு வேண்டுகோள் நண்பர்களே, ஆழமான உறவுகளை ஒதுக்குவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஒதுக்கக் கூடாது என்பதற்கு ஒரே ஒரு காரணம் இருந்தாலும், ஆயிரத்தை விட ஒன்று பெரிது எனக் கருதுங்கள்.


நான் இப்போது அனுபவிக்கும் வலி உங்களுக்கு ஒருபோதும் ஏற்பட வேண்டாம்!


கிருஷ்ணாவுக்கு அஞ்சலி! அவரை இழந்து நிற்கும் குடும்பத்தினரினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ! THANX TO THAMIZMEDIA