Showing posts with label science fiction. Show all posts
Showing posts with label science fiction. Show all posts

Saturday, July 21, 2012

ஓர் உத்தம தினம்- சுஜாதா - லவ் & சஸ்பென்ஸ் - சிறுகதை

ஜன்னல் வழியாக ஆதவன் தலையெடுக்கும் முன்னமேயே புல் தரையில் சிறு குழந்தை தவழ்ந்து வருகிறது. களுக்கென்று சிரிக்கிறது. அதனால் நடக்க முடியுமா என்று கவலையாக இருக்கிறது. அதற்குப் பெயர் இருக்கிறது. பறந்து வந்து விளிம்பில் உட்கார்ந்துவிட்டு அறைக்குள் சிற்றடி வைத்து இறங்கி, அவளருகில் வந்து அவள் மார்பைச் சுதந்திரமாகத் திறந்துகொண்டு, ஏங்கி ஏங்கிப் பால் குடிக்க… அதன் சின்ன விரல்கள் அவள் முலையை நெருட… உள்ளுக்குள் திகட்டிய சந்தோஷத்தைக் கலைக்க விருப்பமின்றி இன்னும் இன்னும் என்று ஒரு விளிம்பைத் தொட்டு ஒரு கணத்தில் சகலமும் வெடித்துப் புலனாகி விழித்தபோது, ”நீங்களா?” என்றாள்.


சத்தீஷ் திருப்திப்பட்ட நிலையில் மல்லாந்து படுத்துக்கொண்டு புன்னகையுடன் தூக்கத்தின் இரண்டாம் பாகத்தைத் துவங்கினான். கஸ்தூரி தன் உடைகளை அவசரமாகச் சரிசெய்துகொண்டு எழுந்து, ஜன்னலைத் திறந்து சில்லென்ற காற்றிலும் சூரிய வெளிச்சத்திலும் முகத்தை அலம்பிக்கொண்டு திரும்பி நிதானமாகக் கணவனைப் பார்த்தாள்.


என் கனவில் புகுந்து என் கனவைக் கலைக்காமல் எனக்குள் நிரம்பிய என் கணவனே!


”எழுந்திருங்க” என்று தலையைக் கலைத்தாள். அவன் விழித்து அவளைப் பரிச்சயமே இல்லாத புதியவளைப் போலப் பார்த்துப் புன்னகைத்து, ”ஹேப்பி பர்த்டே தில்லு! ம்ம்ம்… உன்னை வாசனை பார்க்கணும், வா!” என்று கையை விரித்து விரல்களால் அழைத்தான்.


”ம்ஹ¨ம். நான் மாட்டேம்பா. எனக்கு எத்தனையோ வேலை இருக்கு.”


”ஒரு தேங்க்ஸ் முத்தம்கூடக் கிடையாதா?”

”கிடையாது.”

டெலிபோன் ஒலிக்க, அதைப் படுக்கையில் இருந்தே எடுத்து ஆன்டெனாவை நீட்டிக்கொண்டு, ”ஹலோ?” என்று அதட்டினான். சற்று நேரத்தில், ”உனக்குத்தான்” என்று கொடுத்தான்.


”என்ன எழுந்துட்டியா, ஹேப்பி பர்த்டே” மஞ்சுவின் குரலை டெலிபோன்கூட அசைக்க முடியாது.


”தேங்க்ஸ் மஞ்சு.”

”உனக்கு என்ன வயசுன்னு கேக்கலை. வயசு முக்கியமா என்ன? இந்த வருஷமாவது பெத்துண்டுடு. ரொம்பத் தள்ளிப் போடாதே.”


”மஞ்சு, இன்னிக்குக் காலையில என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு கனா கண்டேன். அதை உனக்கு விரிவா சொல்லியே ஆகணும். எப்ப வரே?”


”எப்ப வேணும்னாலும் வரேன். தில்லுவோட பர்த்டேக்கு வராம இருப்பேனா? உன் ஹஸ்பண்ட் என்ன பிளான் வெச்சிருக்கார்னு கேட்டுக்கோ.”

”அவருக்கென்ன… வழக்கம்போல் ஆபீஸ் போவார்.”

சத்தீஷ் படுக்கையிலிருந்தே, ”இல்லை… இல்லை… நாமிருவரும் வெளியே போறோம்” என்று ஜாடை காட்டினான்.

”மஞ்சு, அவர் எங்கேயோ வெளியே போகப் பிளான் வெச்சிருக்கார்.”

”ஆல் தி பெஸ்ட் தில்லு. போன் பண்ணிட்டு மத்யானம், சாயங்காலம், ராத்திரி எப்பவாவது ஒரு சமயம் வந்து உன் கன்னத்தில் முத்தம் கொடுத்துட்டுத்தான் போவேன். பை தில்லு! மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்!”

டெலிபோனை வைத்தபோது அது ‘டிரிரிக்’ என்றது பறவைபோல.

”மஞ்சுதானே! ஒழிஞ்சுதா?”

”சே! இன்னிக்கு யாரையும் திட்டக் கூடாது. அப்படிப்பட்ட நாள் இன்னிக்கு.”

அவளைப் பிடித்து இழுத்துக் கன்னத்தை உரசிக் கூந்தலுக்குள் கை செலுத்தி நிமிர்த்தி, ”ம், என்ன கனா? சொல்லு!” என்றான்.

”கையெடுங்க. சொல்றேன்.”

”எடுத்தாச்சு.”

”அந்தக் கை.”

”அதுபாட்டுக்கு அது. சொல்லு, என்ன கனா?”

”ஜன்னல் வழியா கிருஷ்ண விக்கிரகம் மாதிரி… ஐயோ, என்ன விஷமம்! நான் சொல்லமாட்டேன்.”

”சரி, இப்ப?” இடுப்பை வளைத்து அவளைத் தன்னிடம் இழுத்துக்கொண்டு முகத்துக்கு முகம் ஒரு இன்ச் பண்ணிக்கொண்டு ”ம், சொல்லு” என்று இழுத்தான்.

”ஜன்னல் வழியா தங்கக் கலர் குழந்தை வந்து அப்படியே எம் மேல படிஞ்சு உடம்பெல்லாம் முலாம் பூசினாப்ல குளுகுளுன்னு ஊர்றது.”

”மை டியர் தில்லு! அது குழந்தை இல்லை நானு! வி ஹேடு செக்ஸ்.”

”ச்சே! உங்களைப் போல எல்லாத்தையும் போட்டு உடைக்கிற ஆசாமி கிடையாது.”

இடுப்பின் உடைகளைத் தளர்த்தத் துவங்கவே, விஷயம் கவலைக்கிடமாகும் என்று கஸ்தூரி நழுவி எழுந்து பாத்ரூமுக்குச் சென்றாள்.


பல் தேய்த்து முகத்தில் தண்ணீர் தெளித்துக்கொள்ளும்போதும் உற்சாகம் மிச்சமிருந்தது. ஜன்னலைத் திறக்க வானம் மேகங்களற்று ‘விம்’ போட்டு அலம்பினாற் போல இருந்தது. கொன்றை மரத்தில் அந்த மாம்பழக் குருவியைப் பார்த்தாள். அவள் பிறந்த தினத்துக்கென்றே தனிப்பட்ட விஜயம் போல் தங்கத் தலையை வைத்துக்கொண்டு, ‘ச்சீயோ, ச்சீயோ’ என்று தேவதூதனைப் போலக் கூப்பிட வந்திருக்கிறது.

நடுவே, தெளிவாக அந்தக் குருவி அவளைத் ‘தில்லு’ என்று பெயர் சொல்லி அழைத்ததை கஸ்தூரி எல்லா கோயில்களிலும் சத்தியம் பண்ணுவாள். நிச்சயம் இன்றைக்குப் பிறந்த தினம்தான். எனக்கு மட்டுமில்லை. எனக்குள் உத்தரவாதமாகப் புகுந்திருக்கும் அதற்கும்தான்.

சத்தீசுக்குக் காபி போட்டுக்கொண்டு போர்வையை விலக்கி, அவன் தலையைக் கலைத்து, ”எழுந்திருங்க. ஆபீஸ் போக வேண்டாம்?” என்று கேட்டாள்.

”இன்னிக்கு ஆபீஸ் லீவு! உனக்குப் பிறந்த நாள் இல்லையா?”

”நாள் முழுக்க வீட்லயா இருக்கப் போறீங்க?”

”வீட்ல இருக்கலாம். வெளியவும் போகலாம். அல்லது ஏ.ஸி. போட்டுட்டுக் கட்டிண்டு படுத்துரலாம். இன்னிக்கு ராணி நீதான்.”

”கோயிலுக்குப் போயாகணும்.”

”ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு எம்.டி.ஆர். போகலாமா?”

”முதல்ல கோயில். அப்புறம்தான் பாக்கியெல்லாம். ஜெயநகர் போய் அம்மாவையும் சரண்யாவையும் பார்த்துட்டு வந்தே ஆகணும்.”

”சாயங்கால ஃப்ளைட்ல பம்பாய் போறதுக்குள்ளே முடிச்சிரணும்.”

”பாம்பே போறீங்களா? சொல்லவே இல்லையே?”

”போர்டு மீட்டிங். நாளன்னிக்கு மார்னிங் ஃப்ளைட்ல திரும்பி வந்துடுவேன்.”

புதுசாக கார், லாரி வாங்கினவர்கள் எல்லாம் பள்ளத்து பிள்ளையாருக்கு முன் வரிசையாகத் தத்தம் வாகனங்களை நிறுத்தியிருந்தார்கள். மல்லிகையும், அகர்பத்தியும், பட்டுப் புடவையும், இளங் காலையும், விபூதியும் கலந்து ஆரோக்கியமாக வாசனை அடித்தது. சத்தீஷ் பாசாங்கோடு மனைவியைக் கவனித்துக்கொண்டு இருந்தான். கஸ்தூரி வேண்டிக் கொண்டாள்.

”கடவுளே! ஏன் இத்தனை உத்தமமான தினம்?”

”இந்தாம்மா புஷ்பம்” என்று ஒரு சிறுவன் பளிச்சென்று திருநீறும் இந்த வயசுக்கு வேஷ்டியுமாக வந்து கொடுத்துச் சிரித்தான்.

பிளாட்ஃபாரத்தில் நடக்கையில், ”எல்லாமே நல்லபடியாக இருக்கு. காலங்கார்த்தால அந்தக் கனா, அந்தக் குருவி என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டது, இந்த அழகான பையன்….” என்று கூறினாள்.

”த பாரு, இன்னி முழுக்கவே இப்படித்தான். சொல்லிண்டிருக்கப் போறியா? மஞ்சள், குருவி, கிருஷ்ண விக்கிரகம், விநாயகர் பிரத்தியட்சம், இப்படி…?”

”நிச்சயம் எனக்கு இன்னிக்கு என்னமோ ஆயிருக்கு. உடம்பு பூரா பதர்றது.”

மாருதியில் ஏறிக்கொள்ள, ”தில்லு, உலகத்திலேயே ரொம்ப சுலபமான விஷயம் எது தெரியுமா?” என்று கேட்டான்.

”தெரியும், சொல்ல வேண்டாம்.”

”யு வான்ட் தி சைல்டு இல்லையா? வேணும்னா சந்தேகத்துக்கு சாம்பாரா வீட்டுக்குப் போய் இன்னுமொரு முறை ஊர்ஜிதம் பண்ணிரலாமா?”

”சே, புத்தி போறதே!”

ஜெயநகரில் மணிப் பொத்தானை அழுத்தியபோது சத்தீஷ், ”இதோ பாரு! அரை மணி, அதுக்கு மேல் அரட்டை கிடையாது” என்று கிசுகிசுத்தான். கதவு திறக்க, ”ஹலோ, கர்னல்!”

அப்பாவைத் தாரிணியின் குழந்தைகள் உள்பட எல்லோரும் ‘கர்னல்’ என்றுதான் கூப்பிடுவார்கள்.


கஸ்தூரியைப் பார்த்ததும் கட்டிக்கொண்டு உச்சியில் முத்தம் கொடுத்து, ”ஓ மை ஸ்வீட் தில்லு, ஹேப்பி பர்த்டே” 


”தேங்க்யூ கர்னல்.”


”இங்கிலீஷ் தேதிப்படி லெவன்த் செப்டம்பர், இன்னிக்கு உனக்கு 25. நீ பிறந்தப்ப விஜயவாடா டூர் போயிருந்தேன் கிருஷ்ணா ரிவர்ல வெள்ளம் அதிகமாயி ரயில் எல்லாம் குளோஸ் பண்ணிட்டான். டக்கோடா ஃப்ளைட்டைப் பிடிச்சுக் காலங்கார்த்தால வந்துட்டேன். தில்லு டியர்! பெரி யாழ்வார் பாசுரம் சொல்லிண் டிருக்கியா?”

”தவறாம! தினம் பெரியாழ்வாருக்காகத்தானே நான் எழுந்திருக்கிறேன்” என்றான் சத்தீஷ்.

”தட்ஸ் மை கேர்ள். சின்ன வயசிலேயே நாலாயிரமும் ஒப்பிப்பா. மாப்பிள்ளை, இவ முழுப் பேர் கஸ்தூரி திலக்கா. நாங்க எல்லோரும் தில்லுன்னுதான் கூப்பிடுவோம். கஸ்தூரின்னு பேர் எப்படி வந்ததுன்னு தெரியுமா?”

”கர்னல் இதை என்கிட்டேயே முப்பது தடவை சொல்லியாச்சு” என்றான் சத்தீஷ்.

கஸ்தூரி, கணவனை முறைக்க… அவன் கடிகாரத்தைச் சுட்டிக் காட்டினான். ”வர்றோம் கர்னல்” என்றான்.

”சேச்சே, லஞ்ச் சாப்பிட்டுட்டுதான் போறீங்க!”

”தேர் கோஸ் மை எம்.டி.ஆர்.”

”அம்மா, நீங்க சும்மாருங்கோ. அவா வேற ஏதாவது பிளான் போட்டு வெச்சிருப்பா” என்று இடைமறித்தாள்.

அம்மா தனியாகக் கூப்பிட்டு, ”இன்னும் குளிக்கிறியா?” என்றாள்.

”ஆமாம்மா.”

”எல்லாம் போறும். அப்புறம் நாளாயிருந்துன்னா பிற்காலத்தில் வளர்க்கிறது கஷ்டம். இந்தப் புரட்டாசிக்கு இருபத்தஞ்சு முடிஞ்சுர்றது உனக்கு.”

அப்பா வந்து, ”தில்லு, மாப்பிள்ளை டூர் போறாராமே. இங்கே வந்து இரேன்?” என்றார்.

”இல்லைப்பா, ராத்திரி துணைக்கு வேலைக்காரப் பொண்ணு வரும். செக்யூரிட்டி இருக்கு. சௌக்கிதார் இருக்கான்.”

”எங்காத்திலெல்லாம் வந்து படுத்துப்பியா, ரிச் கேர்ள்.”

”அப்படி இல்லைப்பா. இவர் இல்லாதபோதுதான் வீட்டை ஒழிக்க முடியும்.” முக்கிய காரணம் அதில்லை. தனியாக வீடியோ பார்க்க வேண்டும் என்று தில்லு தீர்மானித்துவிட்டாள்.

ரேஸ் கோர்ஸ் வழியாக ஆபீசுக்கு வந்து பதினைந்து நிமிஷம் என்று சொல்லிவிட்டுச் சென்றான். பேண்ட் வாத்தியமும் பொய்க்கால் குதிரையுமாக கணேசா ஊர்வலம் ஏரியில் முங்குவதற்காக டெம்போவில் சென்றுகொண்டு இருக்க, பொய்க்கால் குதிரைக்காரன் கூலிங் கிளாசும், பொய்த் தாடியும், ஜிகினா ஜிப்பாவுமாக அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போனான்.

சத்தீஷ் திரும்பி வந்து, ”முக்கியமா மூணு ஃபைல் பார்த்துட்டேன். ஏர் டிக்கெட் கன்ஃபார்ம் ஆயிடுத்து. சாயங்காலம் வரை நாம ஃப்ரீதான். எங்கே போகணும் சொல்லு?” என்றான்.

”எங்கேயாவது!”

”சரி லெட்ஸ் கோ டு ‘எங்கேயாவது’….”

ஸோஃபியா கான்வென்ட்டின் ஆரோக்கியமான ‘ஹன்’களும் கூட்டம் கூட்டமாகச் சட்டை அணிந்த ஆயிரம் உற்சாகப் பெண்களும்… நீச்சல் குளத்தில் உன்னதமாகக் குதித்த ஒரே இளைஞன். மரத்தடியில் டிராஃபிக் சந்தடியில் படுத்துத் தூங்கிக்கொண்டு இருந்த உழைப்பாளி. கீரை விற்றுக்கொண்டு இருந்த கறுப்புப் பெண்ணின் அருகில் சாக்கின் மேல் தூங்கிக்கொண்டிருந்த தேவதைக் குழந்தையின் அரைஞானில் முடிந்திருந்த தாயத்து. இந்த சுசுகியில் ஒரே மாதிரி ஜீன்ஸ் அணிந்து பையனும் பெண்ணும் எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள் என்னைப் போல…. என்னைப் போல.

ஏன் இந்தத் திகட்டும் சந்தோஷம்? விண்ட்சர் மேனரில் ஐஸ்க்ரீம் புடிங் வகைகளிலேயே பத்து தினுசு சாப்பிட்டாள். பெங்காலி போலிருந்த இளைஞன் சின்தஸைஸர் டிரம் அடிக்க… மைக்கை முழுங்குகிற மாதிரி வைத்துக்கொண்டு ஸ்டீவி வாண்டர் பாடினான்.

மிக அழகான ஒரு வெயிட்டர் இளைஞன் அவளருகில் பூச்செண்டு கொண்டுவந்து, ”மேடம்! ஹேப்பி பர்த்டே” என்றான். ஆச்சர்யப்பட்டு சத்தீஷைப் பார்க்க, அவன் மனோகரமாகக் கண்ணடித்தான். அந்த மலர்க் கொத்து செலஃபன் தயவில் புதுசு கலையாமல் அவளை அணைத்துக்கொண்டது. பக்கத்து டேபிள் குண்டுகுழந்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. இவள் ‘வா’ என்று அழைத்ததும் ஓடி வந்துவிட்டது.

”பிங்க்கு பேட்டே இதர் ஆவோ.”

‘லேஸ் மேக்கர்’ போக வேண்டாம் என்று கப்பன் பார்க்கில் கொஞ்ச நேரம் லைப்ரரியில் உலவிவிட்டு, ஒரு கவிதைத் தொகுப்புடன் வெளியே வந்து, மண்டபத்தின் அருகில் மர அடர்த்தியின் கரும் பச்சை நிழலில் ஒரு பெஞ்ச் காலியாக இருக்க, அதில் அவள் உட்கார்ந்துகொள்ள அவள் மடி மேல் தலைவைத்து,

”ஜென்னி கிஸ்ட் மீ படிக்கட்டுமா?”

”படிங்க.”

”ஜென்னி என்னை முத்தமிட்டாள் சட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்து வந்து! காலம் என்னும் கள்ளனே! உன் பட்டியலில் எத்தனையோ இனிய விஷயங்களைச் சேர்த்துக்கொள்ள விரும்புகிறாயே, இதையும் சேர்த்துக்கொள். நான் களைத்திருக்கிறேன் என்று சொல். நான் சோகமாக இருக்கிறேன் என்று சொல். ஏழை என்று சொல். உடல் நலமில்லை என்று சொல். வயசாகிக் கொண்டிருக்கிறேன் என்று சொல். ஆனால், ஜென்னி என்னை முத்தமிட்டாள் என்பதையும் சொல்.”

பிற்பகலின் அமைதியில் தூரத்தில் நகரத்தின் சந்தடி கேட்க மடி மேல் கணவனை அமைதியாக அழுத்திக்கொண்டு அவன் முகத்தையே ஒரு மணி நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாள். நிச்சயம் இன்றைக்குத்தான் நிகழ்ந்திருக்கிறது!

இரண்டு நாளுக்காக மெத்தென்ற பெட்டியில் அவன் சூட், வெள்ளை வெளேர் சட்டைகள், அவன் மாத்திரைகள், ஷேவிங் சாதனங்கள், ஆஃப்டர் ஷேவ் லோஷன், தங்க விளிம்பிட்ட சீப்பு, ஆண் பிள்ளை கர்ச்சீப், அவன் ஃபைல்கள் எல்லாவற்றையும் அடுக்கிவைக்கையில், குறும்பாகத் தன்னுடைய ‘ப்ரா’ ஒன்றையும் இடையில் செருகி மூடினாள்.

பம்பாய் ஃப்ளைட் எட்டரைக்குத்தான் கிளம்பும் என்றார்கள். பேப்பர் கப்பில் சத்தீசுடன் காபி சாப்பிட்டுவிட்டு இருவரும் புத்தகம் பார்த்தார்கள். ஏர்போர்ட் ஜனங்களை வேடிக்கை பார்த்தார்கள். குல்லாயும், தொப்பியும், குங்குமமும், இடது பக்கம் ஸாரியும், அரசியலும், சூட்டும் கோட்டும், வெற்றியும், சவரம் செய்த பச்சை முகங்களும், நாசூக்கான அழுகைகளும்…

”நான் களைத்திருக்கிறேன் என்று சொல், ஏழை என்று சொல், உடல் நலமில்லை என்று சொல், வயசாகிக்கொண்டிருக்கிறேன் என்று சொல், சத்தீஷ் என்னை முத்தமிட்டான் என்பதையும் சொல்.”

செக்யூரிட்டி கேட்டில் நுழையுமுன் சத்தீஷ் திரும்பிக் காற்றில் ‘கேஸி’ என்று வரைந்துகாட்ட, அதன் அந்தரங்க அர்த்தம் அவள் கன்னங்களில் ரத்தம் பாய, கண்ணாடிக்குப் பின்னாலிருந்து சின்னதாக நாலு விரல் டாட்டா காட்டிவிட்டு மறைந்தான்.

மாருதியை பேஸ்மென்ட்டில் நிறுத்திவிட்டு, கதவைத் தன் சாவியால் திறந்து உள்ளே வந்து உடை மாற்றி, படுக்கையறைக்குச் சென்று, பசியின்றி ஒரு சாண்ட்விச் தயாரித்து, ‘விசிஆரை’ இணைத்து, கல்யாண கேஸட்டை நுழைத்து, ரிமோட் கன்ட்ரோலை எடுத்து, மூன்று தலையணைகள் அமைத்து, விளக்கைத் தணித்துவிட்டு, ‘ப்ளே’ பொத்தானை அழுத்தினாள்.

எதிரே டெலிவிஷன் திரையில் மறுபடி சத்தீஷைக் கல்யாணம் செய்துகொள்ள ஆரம்பித்தாள். சத்தீஷ் சின்னப் பையன் போல கன்னத்தில் மை, நெற்றியில் அலையும் தலைமயிர், மஞ்சள் சரிகை வேட்டியில் பஞ்சகச்சம், அசௌகரியத்தில் வாத்தியாரைக் கனவுக் கண்களுடன் பார்த்துக்கொண்டே, அவ்வப்போது சாஸ்திரத்துக்கு மந்திரம் சொல்ல, கண்கள் மையிட்ட கண்கள் அலைய சத்தீஷ் எவ்வளவு அழகாக இருக்கிறான்.

நெற்றியில் அம்மா அவனுக்குப் பொட்டு இடுகிறாள். அத்தை, சித்தி, தாரணி, பேபி அம்மா எல்லாரும் மஞ்சள் நீரை இறைத்துக்கொண்டே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். கால் அலம்பிப் பாய் மேல் வைக்கிறார்கள். சத்தீஷ் கட்டை விரலைப் பிடித்துப் படிப் படியாகச் சம்பந்தாசம்பதமில்லாமல் பேசுகிறான். என்னைவிட சத்தீஷ்தான் நெர்வஸ்.

கர்னலின் மடியில் உட்கார்ந்திருக்க என்னை நெற்றியில் எங்கோ பார்க்கிறான். தாலி கட்டிய பின் அம்மாவின் கண்களில் கண்ணீர். எல்லோருமே கட்டிப் பிடித்துக்கொண்டு, கை குலுக்கிக்கொண்டு, இது என்ன புது வழக்கம்?

ரிசப்ஷனில் ஜெயராமன் கச்சேரியில் சிமென்ட் கலர் சூட்டு போட்டு நிற்க, மத்தியானத்திலிருந்து ப்யூட்டீஷியன் எனக்குச் செய்த அலங்காரம் எனக்குப் பிடிக்கவே இல்லை. ஏதோ விக்ரமாதித்தன் பதுமை மாதிரி, அலுங்காமல் ஆயில் மேக் அப் என்று எண்ணெய் வழிந்துகொண்டு…

வீடியோ முடிந்து கீற்றல் வந்த பின்னும் சற்று நேரம் திரையையே பார்த்துக்கொண்டு இருந்தாள். பின் அணைத்தாள்.

”அன்புள்ள கடவுளே, நான் உனக்கு எப்படி இந்த மகத்தான, உத்தமமான தினத்துக்கு வந்தனம் சொல்ல வேண்டும்? ஏன் இத்தனை சந்தோஷம்? ஏன் இத்தனை வெளிச்சம்? ஏன் இத்தனை உற்சா கம்? ஏன் இப்படி ஒரு ஸ்படிக சுத்தமான தினம்? தயவுசெய்து இதற்கு மேல் சந்தோஷம் தராதே. தாங்காது. எனக்கு இது போதும். இது போதும்!”

கஸ்தூரி தூங்கிப் போய்ப் பத்து நிமிஷத்தில் டெலிபோன் ஒலித்தது!சி.பி -  ( accident to her husband)

Friday, July 06, 2012

நான் ஈ - சினிமா விமர்சனம்http://2.bp.blogspot.com/-SPcybW_rmTI/T355JSQOJUI/AAAAAAAAB7g/hWysyNlJo0Q/s1600/Naan+Ee.jpgசயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்கள் தமிழில் ரொம்ப குறைவுதான்.. ஷங்கரின் எந்திரன் ரஜினி நடிச்சதால அந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் பிரமிப்பு ரஜினியின் ஸ்டார் வேல்யூ முன்னால பெரிசா பேசப்படலை.. எஸ் ஜே சூர்யா நடிச்சு டைரக்ட் செஞ்ச நியூ படம் சயின்ஸ் ஃபிக்சன்ல இருந்து கொஞ்சம் விலகி கில்மா பட ரேஞ்சுக்கு போயிடுச்சு.. அதனால தெலுங்குல Eega என்ற பெயரில்  ரிலீஸ் ஆகும்  ஃபேண்டசி வகைப்படமான நான் ஈ ரொம்ப பெரிய எதிர்பார்ப்பு..


 படத்தோட ஒன்லைன் ரொம்ப சிம்ப்பிள்.. ஹீரோ ஹீரோயின் 2 பேரும் லவ் பண்றாங்க.. வில்லன் ஹீரோவை கொலை பண்ணிடறார்.. ஹீரோ ஈ ஆக மறு ஜென்மம் எடுக்கறார்.. எப்படி வில்லனை பழி வாங்கறார் என்பதுதான் கதை..

இனி திரைக்கதை.. ஓப்பனிங்க்லயே வில்லன் தான் அறிமுகம்.. அதுல இருந்தே படத்தோட முக்கியத்துவம் வில்லனுக்கு தெரிஞ்சுடுது.. வில்லன் எந்த மாதிரி ஆள்னா சிம்புவுக்கு அண்ணன், அர்ஜூனுக்கு பாஸ், கார்த்திக்கிற்கு தாதா, எஸ் ஜே சூர்யாவுக்கு குரு ,  கமலுக்கே வழி காட்டி  சுருக்கமா சொல்லனும்னா பொண்ணுங்களை கரெட்க் பண்றதுல மன்னன்.. அதுதான் அண்ணனுக்கு மெயின்  ஜாப்பே.. அது போக நேரம் இல்லாதப்போ ஏதொ தொழில் பண்ணிட்டு தானும் ஒரு தொழில் அதிபர்னு ஊர்ல சொல்லிட்டு திரியறார்..http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/05/naan-ee-movie-stills.jpg ஹீரோயின் ஒரு மினியேச்சர் ஆர்டிஸ்ட் அம்மா, அப்பா இல்லை, அண்ணி கூட தங்கி இருக்கா.. எதிர் வீட்ல ஹீரோ.. எப்போ பாரு அவ பின்னாலயே ரவுண்டிங்க்.. பாப்பாவுக்கு அது தெரியும்.. பிடிச்சிருக்கு.. ஆனாலும் பிகு பண்ணிட்டு அவனை அலைய விட்டு ரசிக்குது..


 எல்லா சங்கடங்கள், ஈகோவை விட்டு ஹீரோ கிட்டே  ஹீரோயின் லவ்வை சொல்ற டைம் அந்த அசம்பாவிதம் நடக்குது.. அதாவது வில்லன் ஹீரோயினை கணக்கு பண்ண பார்க்கறான்.. ஏதோ சமூக சேவை நிறுவனத்துக்கு டொனேஷன் கேட்க வந்த ஹீரோயினுக்கே 15 லட்சம் தர்றான்.. பாப்பா சம்பளமே  ஒரு படத்துக்கு 40 லட்சம் தான்.. வில்லனுக்கு ஹீரோயின் லவ் தெரிஞ்சுடுது.. தனக்கு இடஞ்சலா வந்த ஹீரோவை டக்க்குன்னு போட்டுத்தள்ளிடறான்..


 ஹீரோ ஒரு ஈயா மறு ஜென்மம் எடுத்து வர்றார்.. இந்த ஐடியா எப்படி வந்திருக்கும்னா ஹீரோ பேரு நிஜ வாழ்விலும் நானி = நான்  + இ  . ஒரு சாதாரண ஈ எப்படி வில்லனை பழி வாங்க முடியும்? அவனை டார்ச்சர் பண்ண முடியும்? கொலை பண்ண முடியும்? அதுக்குத்தான் திரைக்கதை, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் அட்டகாசமா பண்ண ஒரு டீம் இருக்கே.. எப்படி பழி வாங்குது என்பதே மீதிக்கதை..


படத்தோட  முதல் ஹீரோ சி ஜி ஒர்க் தான்.. சமீப காலமா பலர் சொதப்பி வந்த கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸை இவங்க முறையா, ரசிக்கும்படி, ஓவர் பில்டப் எல்லாம் பண்ணாம செஞ்சிருக்கறதால  ரசிக்க முடியுது.. குறிப்பா அந்த ஈ டிசைன் அட்ட்டகாசம்.. அது டான்ஸ் ஆடுவது, சைகை காண்பிப்பது எல்லாம் அருமை..


வில்லன் தான் அடுத்த ஹீரோ..KITCHA SUDEEP . வில்லன் சுதீப் கன்னடத்தில் ஏறக்குறைய சுப்ரீம் ஸ்டார் . படம் முழுக்க இவர் ராஜ்யம் தான்.. ஒரு ரகுவரனோ, பிரகாஷ் ராஜோ செய்ய வேண்டிய கலக்கலான கேரக்டர்.. நல்லா பண்ணி இருக்கார்.. நல்ல எதிர்காலம் உண்டு..


 ஹீரோ நானி சித்தார்த்தின் முகச்சாயல், ஜீவாவின் நடிப்புச்சாயல் என கலந்து கட்டி அடிக்கறார்.. படம் போட்ட 30 வது நிமிடமே அவர் கொலை செய்யப்படுவதால் சான்ஸ் கம்மி./. வந்தவரை ஓக்கே..

 ஹீரோயின் சமந்தா  அழகு.. கண்ணியமான உடைகளில் கவுரமாக வந்து போறார்.. ஆல்ரெடி கலரா இருக்கும் அவர் எதுக்கு ரோஸ் பவுடர் அள்ளி பூசிட்டு வர்றார்? தெரியலை..  சோகமான காட்சிகளில் கூட அதே மேக்கப்.. முப்பத்து நான்கு தேவர்கள் வந்தாலும் அவர்களை கட்டிப்போடும் அழகு..http://g.ahan.in/tamil/NAAN%20EE%20photos/naan%20ee%20(7).JPG

மனம் கவர்ந்த வசனங்கள் ( கிரேசி மோகன்)


1. வில்லனிடம்- ஹாய், நீங்க டெயிலி இங்கே வருவீங்களா?

 யா..

 விச் டைம்?

 நீங்க வர்ற டைம்.. ஹி ஹி2. நம்ம தொழிலுக்கு போட்டியா இருக்கானே அவனை எப்படி கரெக்ட் பண்ணலாம்னு நாங்க எல்லாம் யோசிச்சுட்டு இருக்கோம், நீ என்னடான்னா அவன் சம்சாரத்தையே கரெக்ட் பண்ணிட்டியே?


3. என் ஒயிஃபை முதன் முதல் காதலியா சந்திச்சப்போ ஒரு டைம் முடிச்சுட்டு கழட்டி விட்டுடலாம்னு தான் நினைச்சேன், ஆனா அவ கிடே ஏகப்பட்ட சொத்து.. மேரேஜ் பண்ணிக்கிட்டேன்.. அவ சொத்தை என் பேர்ல எழுதி வைக்க கேட்டேன்.. செத்தாலும் அது நடக்காதுன்னு அடம் பிடிச்சா.. பாவம் அல்பாயுசுல போய்ட்டா..


4. ஹேய்.. நீ பேங்க்ல எவ்ளவ் பணம் வெச்சிருக்கே?

 ரூ 15,860 ஓ டி அமவுண்ட் ( ஓவர் டியூ..  மைனஸ்ல )


5. எனக்கு தன்னம்பிக்கை ஜாஸ்தி.. அதனால செக்ல சைன் பண்ணாமயே தர்றேன்.

 டேய் லூசு, செக்ல சைன் பண்ணலைன்னா எப்படி அது பாஸ் ஆகும்?


6. மிஸ்,,, உங்க ஜடை ரொம்ப டைட்டா இருக்கு.. புரிஞ்சுதா?

 எனக்கு லூஸ் தான் பிடிக்கும்


 நீங்க லூஸ்னு தெரியும்..  ஆனா ப்ளீஸ் ட்ரை த டைட்.. ( டபுள் மீனிங்க் )


7. நீ கொடுத்த 15 ரூபா செக்குக்காக அவ அர்ச்சனை செய்ய கோயிலுக்கு வந்திருக்காளே.. அர்ச்சனை சீட்டே 20 ரூபா ஆச்சே?


8. டேய்.. முதல்ல உன்னோட எக்ஸ்பிரஷனை மாத்து.. அவ எல்லாருக்கும் பிரசாதம் குடுத்துட்டு போறா.. ஆனா உன்னை கண்டுக்காம போறா..


 டேய்.. எல்லாருக்கும் குடுத்துட்டு எனக்கு தர்லைன்னா என்ன அர்த்தம்? அவளுக்கு நான் ஸ்பெஷல்னு அர்த்தம்


9. டிராஃபிக் சார்ஜெண்ட் - வண்டிக்கு ஆர் சி புக் இருக்கா?  லைசன்ஸ் இருக்கா?


 ஹீரோ - என் ஆள் போறா. அவளை பிடிக்கனும்.. வண்டியே இருக்கு.. நீயே அதை வெச்சுக்கோ


10.  என்னடா அவ கிட்டே இருந்து வெறும் பிளாங்க் மெசேஜ் வந்ததுக்கு இப்படி குதிக்கறே?

 உனக்கு தெரியாதுடா , பிளாங்க் மெசேஜ் = பிளாங்க்செக்.. பவர் ஃபுல்.. இஷ்டபட்ட வங்களுக்குத்தான் பொண்ணுங்க  பிளாங்க் மெசேஜ் அனுப்புவாங்க


11. அழுதா வருத்தம் மறைஞ்சுடும்னு சொல்வாங்க, ஆனா எனக்கு அழ அழ அது அதிகம் ஆகுது.. பல தடவை அவனை கண்டுக்காத மாதிரி அலைய விட்டிருக்கேன்.. ஹூம்.. இப்போ நான் தான் சிரமப்படறேன்


12.  வில்லன் - என் மனைவி  சாகறப்ப என் கிட்டே என்ன பிராமிஸ் வாங்கினா தெரியுமா? நீங்க என்னை லவ் பண்றது உண்மையா இருந்தா நான் செத்த பிறகு என்னை மறந்துடனும்.. அப்டின்னா.. அதே போல் நீ உன் காதலனை மறந்துடு, ஓக்கே.. ?


14.  வில்லன் - ஏண்டா, அனிமல்ஸ் ரிவஞ்ச் பண்ணுமா? ( பழிக்குப்பழி வாங்குமா? - நன்றி மேஜர் சுந்தர் ராஜன் )


யா யா விட்டலாச்சாரியார் படத்துல எல்லாம்  அப்படித்தான்


15.. நான் கேட்க வர்றது ஒரு ஈ அப்படி பழி வாங்குமா?


 பாம்பு பழி வாங்கறப்போ ஈ பழி வாங்காதா? சின்ன பாம்புன்னா ஓக்கே.. ஈ-ன்னா யோசிக்கனும்


16. நான் சொல்றேனேன்னு கோவிக்காதே.. ஏதாவது சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதை படிச்சுட்டு அதே ஞாபகமா இருந்திருப்பே..


17. சர்வர் - மேடம், காஃபில ஈ விழுந்துடுச்சு போல ,ஸாரி மேடம்..

 நோ நோ , ஈ காஃபி குடிச்சுட்டு இருக்கு


 18. சந்தானம் - டேய் , எங்கே இருக்கே? என்ன பண்ணிட்டு இருக்கே? ஓவர் ஓவர்..

 நான் இங்கே ஒரு பூட்டுன வீட்டுல குதிக்கலாம்னு பிளான் பண்ணிட்டு இருக்கேன்..

 செருப்பால அடிப்பேன், நாயே அது என் வீடு


 19. சந்தானம் ஹீரோயின் வீட்டுக்கு திருட வர்றார்.. அப்போ ஹீரோயின் காதலனான ஈ கிட்டே பேசிட்டு இருக்கார்.. அது தன்னை பார்த்து பேசறதா சந்தானம் நினைக்கறார்

ஹீரோயின் - டேய் , திருட்டுப்பயலே.... வெளீல வா.. ஐ கேன் லெர்ன் யுவர் ஸ்மெல்.. உன்னை லவ்வர்னு வெளீல எப்படி சொல்ல?


20. பூசாரி - உன் சாவுக்கு விதை இங்கே தான் விதைக்கப்பட்டிருக்கு.. புரியலை.. நீ யாரை சாகடிச்சியோ அவன் பிணம் விழுந்த இதே இடத்துல தான்  நீ சாகப்போறே..


21. வில்லன் - பார்ட்னர்ல ஒரு ஆள் செத்துட்டா இந்த டீலிங்க் கேன்சல் ஆகிடும், இன்சூரன்ஸ் தொகை கோடிக்கணக்குல கிடைக்கும்

 அடப்போப்பா.. அதுக்காக  நீ தற்கொலையா பண்ணிடப்போறே?


 நோ நோ..  உன்னை கொலை பண்ணப்போறேன் ..


22. வில்லன் - அடங்கோ.. ஈக்கும், உனக்கும் கம்யூனிகேஷன் கூட நடக்குதா?


23.டேய் , 2 வருஷமா அவ பின்னாடி சுத்துறே.. இப்பபாரு அவளுக்காக 
எவ்வளவு கஷ்டப்பட்டு, லைட்டெல்லாம் போட்டு இருக்கே அவ கண்டுக்காம 
ஜன்னலைச் சாத்திட்டு தூங்கப் போயிட்டா? அவ உன்னை 
காதலிக்கவேயில்லை 

 இல்லைடா அவ என்னை ரொம்பவே காதலிக்கிறா.. இப்ப கதவை சாத்தினது 
எதுக்குன்னா. ஒரு வேளை சாத்தாம போயி நான் அவளுக்காக இங்கேயே 
நின்னுட்டு இருந்தா ராத்திரி பனியில நனைஞ்சு உடம்பு சரியில்லாம 
போயிருமேன்னுட்டுத்தான் கதவ சாத்தி அவ தூங்க போறத சொல்லி 
என்னையும் தூங்கச் சொல்லுறாhttp://4.bp.blogspot.com/-PB0cCavgFT8/Ty0FIdPxRaI/AAAAAAAAhys/jsDGeYAxfWs/s1600/samanthainbanakathaadi_05.jpg இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. மரகத மணியின் இசையில் வீசும் வெளிச்சத்திலே .. பாட்டு செம மெலோடி.. ஆல்ரெடி சூப்பர்  ஹிட்.. படமாக்கப்பட்ட விதம் குளுமை..


 2. பின்னணி இசை கன கச்சிதம் , குறிப்பாக ஈ கிட்டத்தட்ட ஹீரோ லெவலில் இருப்பதால் அது பழி வாங்க கிளம்பும்போதெல்லாம் அதற்கு தரப்படும் பில்டப் மியூசிக் ஓக்கே..


3. ஒரு ஷாட்ல ஹீரோ சருகுகளை உதைக்க அது சாலை எங்கும் சிதறும் காட்சி கிளாசிக்


4. வில்லன் கார்ல போய்ட்டிருக்கான்.. ஹீரோயின் ஏர்போர்ட்ல .. அவனை போக விடாம பண்ணனும் .. அதுக்கு ஈ டிராஃபிக் கான்ஸ்டபிள் மூலம் குழப்படி பண்ணி முதல்வன் பட டிராஃபிக் ஜாம் போல் பிரம்மாண்டமாய் பண்ணுவது நல்ல நம்பும்படியான ஐடியா


5. ஈயிடம் இருந்து தப்பிக்க வில்லன் பிணம் போல உடம்பு பூரா பாண்டேஜ் கட்டி படுக்கையில் தூங்கும் சீன்..

6. ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் படம் முழுக்க இயக்குநரின் வெற்றிக்கு உழைத்த விதம்,. 


7. ஹீரோயின் வீட்ல கரெண்ட் போயிடுது,, உடனே ஹீரோ பர பரவென மொட்டை மாடி வந்து  சாட்டிலைட் டிஷ்ஷையும், டார்ச் லைட், ரிப்ளெக்டர் பேப்பரை வைத்து  லைட் கொடுக்கும் ஐடியாவும், அதை புன்முறுவலோடு அங்கீகரிக்கும் சமந்தாவின் முகத்தில் காதல் பொங்கி வழிவதும்

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_120522171403000000.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. வில்லன் ரூமுக்குள்ளே ஹீரோயின் கூட தனியா இருக்கார்.. அவர் ஹீரோயினுக்கு 15 லட்சம் செக்  தர்றார்.. 2 பேரும் ஒண்ணா வெளீல வர்றாங்க.. அப்போ பார்டன்ர் வில்லன் கிட்டே ” 15 லட்சம் செக்   தர்ற அளவு அவளை உனக்கு பிடிச்சுடுச்சா? என கேட்கறாரே? எப்படி? செக்கை ஹேண்ட்பேக்ல ஹீரோயின் வெச்சிருக்கா.. வில்லன் எதும் சொல்லலை, எப்படி தொகை பார்ட்னருக்கு தெரியும்?


2. ஹீரோ நண்பர்களிடம் பேசும்போது ஒன்றரை வருஷமா அவ பின்னால அலையறேன்னு ஒரு வசனம், ஹீரோயின் தன் அண்ணி கிட்டே பேசும்போது “ 2 வருஷமா அவன் என் பின்னால சுத்தறான்”ன்னு டயலாக்.. 6 மாசம் என்ன ஆச்சு?


3. ஈயாக மாறும் ஹீரோ வில்லன் கிட்டே நான் உன்னை கொல்லப்போறேன்னு எழுதி காட்டுது.. அதே போல் ஹீரோயின் கிட்ட்டே நான் தான் உன் ஆள், என்னை அவன் கொலை பண்ணிட்டான்னு ஆரம்பத்துலயே எழுதி காட்டி இருந்தா அவ உஷாரா இருந்திருப்பாளே?  ( ஆனா அப்படி ஒரு சீன் வெச்சிருக்காங்க, ரொம்ப லேட்டா )


4. பொதுவா சோகத்துல பொண்ணு இருந்தாலும் ஒரு விழிப்புணர்வு,  ஜாக்கிரதை உணர்வு பொண்ணுக்கு இருக்கும் , ஆனா ஹீரோயின் கேனம் மாதிரி வில்லன் என்ன செஞ்சாலும் கண்டுக்காமயே இருக்காளே.. வாலி படத்துல வில்லன் அஜித் கொஞ்சம் ட்ராக் மாறூம்போது ஒரு சீற்றம் காண்பிப்பாரே அப்படி ஒரு சீனாவது வெச்சிருக்கனும்..


5. வில்லன் பல டைம் ஹீரோயினை தவறான பார்வை தவறான கோணத்துல பார்க்கறான்.. எல்லாருக்கும் அது தெரியுது, ஆனா ஹீரோயினுக்கு மட்டும் அது தெரியலை..


6. க்ளைமேக்ஸ்ல அந்நியன் படத்துல வர்ற மாதிரி ஹீரோவான ஈ மீண்டும் ஈயாக மறு ஜென்மம் எடுக்குது, எப்படி? ஒரு முறை ஒரு பிறவி எடுத்துட்டா மறுபடி அதே பிறவி வரும்?7. க்ளைமாக்ஸ்ல ஈ ஒரு ஊசியை எடுத்து வில்லனை தாக்க வருது.. வில்லன் ஒரு காந்தத்தை எடுத்து அந்த ஊசியை காந்தத்துல மாட்டி வைக்கறார்.. அப்போ ஆபத்துல இருக்கற ஈ ஊசியை விட்டுட்டு அந்த பக்கம் வந்துடலாமே? ஏன் இறுகி பிடிச்சு மாட்டுது?

8. வில்லன் ஈ வைச்ச பாம்ல காயப்படறான்.. அந்த ரூமே அழியுது, அடியாளுங்க எல்லாம் தெரிச்சு ஓடறாங்க, ஆனா ஹீரோயினுக்கு எதுமே ஆகலை.. ஏன்>


9. காதலன் இறந்த துக்கத்தை ஹீரோயின் முகத்துல நல்லா பதிவு செய்யலை.. ஏனோ தானோன்னு இருக்கார்..http://i45.servimg.com/u/f45/17/35/15/36/naan-e12.jpg


அனைவரும் பார்க்கும்படி சுவராஸ்யமா தான் படம் போகுது.. ஜூலை 13 ரிலீஸ் ஆக இருக்கும் பில்லா -2 விற்கு டஃப் ஃபைட் கொடுக்கும்
 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 44


 குமுதம் ரேங்க் - ஓக்கேசி.பி கமெண்ட் - ஃபேண்டசி வகையில் ரசிக்கத்தக்க படம், ஆல் கிளாஸ் ஆடியன்ஸையும் கவரும்.. குழந்தைகள், பெண்கள் ரசிக்கும்படிதான் படம் இருக்கு..  காஞ்சனாவை தூக்கி சாப்பிடும்னு சொன்னாங்களே அந்த அளவு இல்லை.. ஆனாலும் படம் ஹிட்  தான்.. சந்தானம் ஒரே ஒரு சீனில் 2 நிமிடம் மட்டுமே வர்றார்.. மறுபடி க்ளைமேக்ஸ்ல அதே சீனை எடிட் பண்ணி யூஸ் பண்ணி இருக்காங்க

 ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்.. ஸ்ரீ கிருஷ்ணாவிலும் ரிலீஸ் 

http://123tamilcinema.com/images/2012/05/Naan-E-Movie-Posters-Mycineworld-Com-1.jpg

Friday, June 29, 2012

சுஜாதா - சயின்ஸ் ஃபிக்‌ஷன் - சிறுகதை - திமலா


Writer Sujatha - Smiles at Chennai book fair 2006

உங்களைப் பார்க்க உங்கள்…” என்று வெளி ஆபீஸ் சொல்லி முடிப்பதற்குள் ஆத்மா குறுக்கிட்டு “எத்தனை முறை சொல்லிருக்கிறேன். இந்த வேளையில் பார்வையாளர்களை அனுமதிக்காதே என்று” வெட்டினான். கோபக் கதவு திறந்தது.“நான் பார்வையாளர் இல்லை. உன் மனைவி”
“ஒ நித்யா! நீயா?”
“உள்ளே வரலாமில்லையா?”
“தாரளமாக. உனக்கு யார் தடை செய்ய முடியும்?. அருகே வா! முத்தம் தருகிறேன்.
நித்யா அருகே செல்லாமல் தீர்க்கமாக தன் கணவனைப் பார்த்தாள். ஆத்மாவின் மேசையில் டெர்மினல் திரையில் எழுத்துக்கள் அதி விரைந்தன.


சுவற்றில் உயர வரைபடங்கள் சிவப்பிலும் பச்சையிலும் உயிர் பெற்று ‘ஆத்மா & கோ’வின் அந்த நிமிஷ ஆரோக்கியத்தை அடித்துக் காட்டின.


ஆத்மா டச் போனில் “நியூயார்க்” என்று கூப்பிட்டு விட்டு “உட்காரேன் நித்யா” என்றான்.


நித்யா உட்காராமல் கைகளைக் கட்டிக்கொண்டு கணவனைக் கவனித்தாள்.
“நியூயார்க் நியூயார்க்!”
“நியூயார்க் சார்”
“எத்தனை வேண்டுமாம்?”


“இருபது மில்லியன்”


“பத்தொன்பதுக்கு தீர்த்துவிடு”
“நிக்ஸ் சார்”


“வாங்குவது யார்?”


“ராத்சைல்டு”


“அந்தக் கழுகா?. சரியாக ஒரு நிமிஷம் பார். அதன்பின் பத்தொன்பது நாற்பது வரை போ”.
“சரி”


ஆத்மா டச் போனிலிருந்து நிமிர்ந்து நித்யாவை ஒரு மில்லிசெகண்டு புன்னகைத்து விட்டு ””பிஸி பிஸி பிஸி. இந்த சமயத்தில் வந்தாயே?”  என்றான். நித்யா பதில் சொல்லவில்லை ஆத்மா தன் கோட்டின் உட்பறத்தில்கைவிட்டு பேஸ்மேக்கரை அமைத்து இதயத் துடிப்பைஅதிகரித்துக் கொண்டான். மூளைக்கு ரத்த ஆக்ஸிஜன் அளவை அதிகரிததுக் கொண்டான்.
துல்லியமாக சிந்திக்க முடிந்தது. அந்த வரைபடங்கள் இன்னும் நடனித்துக் கொண்டிருந்தன.
“க்ரேட் ! ஒரு நிமிஷத்தில் ஒரு லட்சம் செய்துவிட்டேன். நித்யா

நீ நிற்கிறாயே  என்னவேண்டும் சொல்”


“நான் யார் தெரியுமா உனக்கு?”


“என்ன பைத்தியக்காரக் கேள்வி? நீ என் மனைவி. ஹலோ நியுயார்க்
பத்தொன்பது ஐம்பதா? முடியாது இன்னும் நாற்பது செகண்டு தயங்கி நாற்பத்தி ஐந்துக்கு முடித்து விடு”.
“என்ன சொன்னே  நித்யா”
“ஒன்றுமே சொல்லவில்லை. என் கணவன் இயங்குவதைப் பார்ததுக் கொண்டிருக்கிறேன்”.


“என்னவேண்டும? சொல்லவே இல்லையே”


“ஆத்மா,எனக்கு நீ வேண்டும்”
“நானா? அதுதான் எதிரிலேயே இருக்கிறேனே”
“என் எதிரில் இருப்பது ஒரு பணம் பண்ணும் இயந்திரம்”
“பணம் சக்தி நித்யா. வந்த காரியத்தை நாற்பது செகண்டுக்குள் சொல்”
“ஆத்மா நீ ஒரு மணிநேரம் எனக்கே எனககு என்று பிரத்தியேகமாக வேண்டும்”
“ராத்திரிதான் வருகிறேனே”
“வருகிறாய் ,மாத்திரை விழுங்குகிறாய் இதயத் துடிப்பைக் குறைத்துக் கொள்கிறாய்.  தூங்கி விடுகிறாய். காலை எழுந்து நான் காண்பது காலிப் படுக்கை”
“தேவைப் பட்ட போது ஸ்டிவியில் பேசிக் கொள்கிறோமே?”


“அது வெறும் பிம்பம் எனக்கு வேண்டியது நிஜ நீ”
“ஹலோ டோக்கியோ”
நித்யா டச்போனை பட்டென்று நிறுத்தினாள்.
“என்ன நித்யா இது?”


“ஆத்மா நான் சொல்வதை தயவு செய்து கவனி போன வருஷம் திமலா போவதற்கு அனுமதி கேட்டு எழுதினோமே ஞாபகம் இருக்கிறதா?”
“அதற்கென்ன?”


“அனுமதி கிடைததிருக்கிறது” என்று ஆர்வததுடன் ஒரு மஞ்சள் அட்டையை எடுதது  அவனிடம் காட்டினாள்    அதில் கம்பயுட்டர் அச்சில்
திமலா நிர்வாகம்
உங்கள் வேண்டுகோள்-
20-2-2080 அன்று காலை 10-16
உங்களுக்காக ஒதுக்கப் பட்டிருக்கிறது
நேரந்தவறாமல் வரவும்
இந்த அட்டையையும் கொண்டு வரவும்
உங்கள் பார்வையாளர் எண் 164396
(இது செயற்கைக் காகிதம்)
ஆத்மா அதை அவளிடம் திருப்பிக் கொடுத்து விட்டு “அப்பாடா கடைசியில் அனுமதி கிடைத்து விட்டது சந்தோஷம் போய்வா” என்றான்


நித்யா கோபத்துடன் தெளிவாகப் பேசினாள் “ஆத்மா நீயும் என்னுடன் வருகிறாய் வந்துதான் ஆகவேண்டும்.   ஒரு மணி நேரம்தான் ஆகும். வரவில்லையென்றால் இந்த அலுவலகத்தை நாசம் பண்ணிவிட்டுத்தான் போவேன் அத்தனையும் உடைத்து..”
“இரு இரு எப்போது போகவேண்டும்”
“நாளை காலை 10-16″
“ஹேய் கம்ப்யுட்டர் நாளை காலை 10-16 க்கு நான் ·ப்ரீயா?”
அறையில் ஓர் அமானுஷ்யக் குரல் ஒலித்தது.
“நாளைக் காலை 10-16க்கு வத்தாநபே வருகிறார் “
“ஓகாட்! வத்தாநபே ஜப்பானியன். மிக முக்கியமான சந்திர காண்ட்ராக்ட்.ஸாரி நித்யா நான் வரமுடியாது”
நித்யா இப்போது அழுந்தி உட்கார்ந்தாள். ”முடியாது நாளை நீ என்னுடன் வந்துதான் ஆக வேண்டும்.டச்போன் கொடு  ஜப்பான்காரனுடன் பேசகிறேன். ஹேய் கம்ப்யுட்டர் வத்தாநபே கொடு”.
“ஸாரி கிடைக்கவில்லை” என்றது குரல்.
“போய் உன் தலையைத் தின்னு”
“ஸாரி தலை கிடையாது”
“இரு நித்யா கோபிக்காதே நான் வந்துதான் ஆகவேண்டும என்று என்ன கட்டாயம்? நீதான் திமலா பார்க்கத் துடித்துக் கொண்டிருந்தாய். தனியாகப் போய்ப் பாரேன் மற்றொரு முறை உன்னுடன் வருகிறேன்”
நித்யா பதற்றத்துடன் ” ஆத்மா எப்படி இதைச்சொல்வேன் இரண்டு பேரும் போவதாகத்தானே முதலிலிருந்தே பேச்சு. அட்டையைப் பார் அனுமதி இரணடுபேருக்கு!”
“கூட யாரையாவது அனுப்பட்டுமா?”
நித்யா அழ ஆரமபித்தாள்.
“நித்யா என்ன இது? இந்த நு¡ற்றாண்டில் யாரும் அழுவதில்லை”.
மேலும் அழுதாள்.
“இதோ பார் நித்யா உனக்கு என்ன குறை? கல்யாணம் செய்து கொள்ளும்போது என்னுடன் வாழ்க்கை இப்படிததான் இருக்கும் என்று நான் சொல்லவில்லையா?”
“ஒரே ஒரு மணி நேரம். அப்படி நான் என்ன பெரிசாகக் கேட்கிறேன்?”
“ஒன்று செய்யலாம், திமலா எவ்வளவு தூரம்?”
“நூற்றம்பது கிலோ”
“நீ முதலில் போ நான் சட்டென்று அவனுடன் பேச்சை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன்”
“முடியாது நீ வரமாடடாய்.எனக்குத் தெரியும். நான் போகிறேன். உனக்கு வாழ்க்கைப்பட்டதற்கு பதில் ஒரு கம்ப்யூட்டரைக் கட்டிக் கொண்டிருக்கலாம். ஹேய் கம்ப்யூட்டர் என்னைக் கல்யாணம் செய்து கொள்வாயா”
“ஸாரி பதில் இல்லை”

http://image1.indiaglitz.com/tamil/news/shankar010308_1.jpg


ஆத்மா சிரித்தான்.
“சிரிக்கிறாய்! எனக்குப் பற்றிக்கொண்டு வருகிறது. ஆத்மா நாம் பிரிந்து விடுவோம் என்று நினைக்கிறேன்.  எனக்காகப் பத்து பேர் மனுப் போட்டிருக்கிறார்கள்”
“அப்படி எல்லாம் பேசாதே நித்யா”
“பின்னே என்ன?”
“அந்த திமலா அப்படி என்ன முக்கியம் உனக்கு”
“முக்கியம் ஆத்மா.அங்கே போக வேண்டியது என் நிம்மதிக்கு முக்கியம், என் மனநிலை ஸ்திரமடைவதற்கு முக்கியம்.. ஒரு வருஷமாக நான் இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அங்கே நமக்கு கிடைக்கப்போகும் ஆறுதலும் நிம்மதியும் பிரபஞ்சத்தில் எங்கேயும் இல்லை”.


“இந்த நூற்றாண்டில் இதெல்லாம் அபத்தமாக பிற்போக்காகப் படுகிறது  எனக்கு”.
“ஒரு முறை வந்துபார். உன் மனம் மாறிவிடும். கணவன் மனைவியாகப் போவது பெரும்  பாக்கியம் என்கிறார்கள்”.
“இந்த முறை மன்னித்துவிடு நித்யா மற்றொரு மனுப்போடலாம்”.
“ஹலோ  ந்யூ யார்க்  என்ன ஆச்சு?” நித்யா டச்போனைப் பிடுங்கி எரிச்சலுடன் கீழே எறிந்தாள்
ஹை இம்பாக்ட் பாலிமரி‘ல் செய்யப்பட்ட அது சேதமடையவில்லை.


ஆத்மா அதைப் பொறுக்கிக் கொண்டு “கோபம் கூடாது என் மனைவியே”என்றான்.


“நான் அனி உன் மனைவி இல்லை”


கம்ப்யூட்டர் குறுக்கிட்டது “ஒரு புதிய செய்தி வந்திருக்கிறது”.
“என்ன?”
“வத்தாநபேக்கு வேறு அவசர வேலைகள் இருப்பதால் நாளை வர முடியாதாம் அதிக மன்னிப்புக்கள் கேட்கிறார்”


நித்யா முகம் மலர்ந்தாள் “வாழ்க வத்தாநபே. கம்ப்யூட்டரே நீயும் வாழ்க” என்று கூவினாள்.


“மிகைப் பட்ட உற்சாகம் எதற்கு என்று தெரியவில்லை எனினும் வாழ்த்துக்களும் அஸ்ட்ரா கம்பெனியின் சார்பாக வந்தனமும்“ என்றது கம்ப்.


ஆத்மா சிரித்து” திருப்திதானே? நாளை வருகிறேன். முத்தம் உண்டா?”.


நித்யா அவன் உதடுகளில் முத்தமிட்டாள்.
மறு நாள் ஒன்பது மணிக்கே தயாராகி விட்டாள். ஸ்டி.வி அலுவலகத்தில் சொல்லி விடுமுறை வாங்கிக்கொண்டாள்.  தன்னை மெலிதாக அலங்கரித்துக் கொண்டள். ஸின்த்ரானில் பாட்டு அமைத்தாள்.பைக்குள் தேவையான சாமான்களை அடைத்துக் கொண்டாள். டச்போனை எடுத்து வான டாக்ஸியை அழைத்தாள். ஒன்பது பதினைந்துக்கு மேல்மாடிக்கு வந்து காத்திருந்தாள். நிறைய சமயமிருக்கிறது.
திமலா!
அவள் எதிர்பார்த்து ஏங்கிய திமலா!


கணவனுடன் சென்று வரவேண்டும் என்ற ஒரு வருஷ வைராக்கியம்  என் விரதம் இன்று பூர்த்தியாகப் போகிறது.


நித்யா மற்ற பெண்களைப் போல் இல்லை


.
கணவன் மனைவி உறவுக்கு இந்த நூற்றாண்டின் புதிய அர்த்தங்கள் அவளுக்குப் பிடிக்கவிலலை. அயற்சேர்க்கை விழாவுக்கு அவள் போவதே இல்லை.
குருட்டுக் கூட்டுக்கள் அவளுக்கு பிடிக்காது. கணவன் மனைவி உறவில் இன்னும் சில கவிதை கலந்த சங்கதிகள் இருப்பதாகவே நம்புகிறவள்.
அவள் ஜீன்களில் கோளாறு என்று ஆத்மா சொல்லியிருக்கிறான்.
இருக்கட்டும் கோளாறு அவளுக்குப் பிடித்திருக்கிறது. எனக்கு ஆத்மா ஒருவன் போதும், அவனுடன் என் சுக துக்கங்கள் அனைத்தும் ஐக்கியமாகட்டும்.
மெலிதாக பெருமூச்சு விட்டுக்கொண்டு வான டாக்ஸி வந்து வரைந்த வட்டததில் இறங்கி சுவாசித்தது.
நித்யா ஏறிக் கொண்டாள் “எங்கே” என்றான் டாக்ஸி ஓட்டி.


“முதலில் அஜாக்ஸ் கட்டிடம். அங்கே கணவனை அழைத்துக்கொண்டு
திமலா போகவேண்டும்  பத்தே காலுக்குள். உன்னிடம் பூஸ்டர் இருக்கிறதா?”.
“இருக்கிறது. நிறைய சமயமும் இருக்கிறது. அஜாக்ஸ் கட்டிடத்தில் எத்தனை நேரம் காத்திருக்க வேண்டும்?”.
“அதிகப் படியாக ஐந்து நிமிஷம்”


“சரி”


டாக்ஸி நழுவியது.
அஜாக்ஸ் கட்டிடத்தில் இறங்கிய போது ஒன்பது நாற்பது முப்பது.”ஒரு நிமிஷம்” என்று சொல்லி அதிவேக லி·ப்ட்டில் இறங்கி ஆத்மாவின் அறைக்குள் சென்றாள். எப்போதும் போல் அவன் பணம் பேசிக்கொண்டிருந்தான்,
“ஹலோ லண்டன்!  மெட்ரோவில் டாக்டர் டாம்லின்ஸன் வேண்டும். ஹலோ நித்யா”
“நேரமாகிறது கிளம்பு கிளம்பு”
“ஒரு நிமிஷம் டாக்டர் டாம்லின்ஸன் ஆத்மா ஹியர் ஐயம் ஹோல்டிங் எங்கே போகிறோம்?”
“நாசமாப் போச்சு. திமலா!”
“ஓ எஸ் திமலா திமலா நமக்கு அனுமதி கிடைத்து விட்டதல்லவா?.
இன்னும அரை மணி இருக்கிறதே, இதோ வந்துவிட்டேன்”.
ஆத்மாவை ஒரு வழியாக பிடுங்கிக்கொண்டு வர பத்தாகி விட்டது.
பத்து பதினாறுக்கு அனுமதி. நித்யாவுக்கு கவலை அதிகரித்தது. கடவுளே!
போக்குவரத்துக் குழப்பமில்லாமல் போய்ச் சேரவேண்டும்.
“டிரைவர் பத்து பதினைந்துக்கு நங்கள் அங்கே இருக்க வேண்டும்”
“கவலைப் படாதீர்கள் ·ப்யூல் செல்கள் எல்லாம் புதிதாக சார்ஜ் வாங்கியிருக்கின்றன  பூஸ்டர் வைத்திருக்கிறேன். திமலாவில் எந்த ப்ளாட்பார்ம்?”
“புரியவில்லை”
“உங்கள் அனுமதி அட்டை என்ன நிறம்?”
“மஞ்சள்”


“பத்தாவது ப்ளாட்பார்ம்”


வான டாக்ஸி அம்பாக விரைந்தது. அதன் வேக ஈர்ப்புடன் நித்யாவின்
வயிற்றில் எதிர்பார்ப்பின் ஈர்ப்பும் கலந்திருக்கிறது.
ஆத்மாவை முழுசாக பககத்தில் வைத்துக் கொண்டிருக்கிறாள்.
அவனை உரசிக் கொணடாள்
திமலாவுக்கு அவர்கள் வந்து சேர்ந்தபோது பத்து பதிநான்கு நாற்பது.


அப்பாடா!


ஒரு வழியாக வந்து சேர்ந்தோம்.
நீண்ட ப்ளாட்பாரத்தில் அதிகம் சந்தடி இல்லை.


‘திமலாவுக்கு வரவேற்கிறோம்’ என்று ஸோடியம் ஒளிர்ந்தது.
நித்யா வேகமாக நடந்தாள்.
நீண்ட சதுர இயந்திரங்கள் ’உங்கள் அனுமதிச் சீட்டை செருகுங்கள்‘ என்றன.
செருகினாள். உள்ளே அதன் காந்த எண்கள் படிக்கப் பட்டு

” நீங்கள் ஒரு நிமிஷம் முன்னதாக வந்திருக்கிறீர்கள் ஒன்பதாம் எண் கன்வேயரில் செல்லவும்”. சற்று தூரம் நடந்தார்கள். ஒன்பதாம் எண் கன்வேயருக்கு.
ஒரு வரிசை காத்திருக்க மேலே ஒரு ஆரஞ்சு வண்ண விளக்கு பளிச் பளிச்சிட்டது.
‘இன்னும் முப்பது செகண்டுகளில் புறப்படும்’ என்றது ஒலிபெருக்கி ஆத்மாவும் நித்யாவும் அதன்மேல் ஏறிக்கொள்ள சற்று நேரத்தில் ஆரஞ்சு சிவப்பாகி டர்ன்ஸ்டைல் பூட்டிக் கொள்ள ஊஷ் என்ற சப்தத்துடன் பெல்ட் நகர ஆரம்பித்தது.
முதலில் ஒரு மண்டபத்தின் ஊடே விரைந்தது. மேலும் வேகம் பிடித்து மிக மெலிதான கட்டத்துடன் சுற்றி வந்து …கோபுரம் தெரிந்தது.
நித்யாவின் துடிப்பு அதிகரிக்க ஆத்மாவை அப்படியே அணைத்துக் கொண்டாள்.
பிரதான வாசல் திறந்திருந்தது. அவர் இங்கிருந்தே தெரிந்தார்.
நித்யா துள்ளினாள். “பார் ஆத்மா, அவர்தான்!”.
வேகம் குறைந்து சரியாக பத்து பதினாறுக்கு ஆத்மாவும் நித்யாவும சன்னிதியில் அனுமதிக்கப் பட்டார்கள்.
மெலிதாக ஏர்கண்டிஷனரின் மூச்சு கேட்டது அருகே அருகே அருகே சென்றார்கள்.
“அப்பா! என்ன ஜாஜ்வல்யம் என்ன கம்பீரம்!”
“உங்களுக்காக சரியாக இருபது செகண்டு அனுமதிக்கப் பட்டிருக்கிறது
ஆசை தீர சேவிக்கலாம்’என்று குரல் மேலே ஒலித்தது.
அர்ச்சகர் பட்டாடை அணிந்து நெற்றியில் நாமம் அணிந்து “அர்ச்சனை உண்டா? என்ன மொழி?” என்றார்.
“தமிழ்” என்றாள் நித்யா.
அர்ச்சகர் அருகே இருந்த பட்டன்களைத் தொட்டார். மெலிதான இசை பரவியது.
துல்லியமான கணீர் என்ற பெண் குரலில் பாட்டுக் கேட்டது-
“குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
என்றுமே தொழ நம் வினை ஓயுமே”

“சேவிங்கோ சேவிங்கோ! நன்னா கண்குளிரச் சேவிங்கோ சீனிவாசப் பெருமாள்! முன்னெல்லம் திருப்பதி திருவேங்கடம் திருமலைன்னு பேரு.இப்பதான் கம்ப்யூட்டருககுத் தோதா திமலான்னு சின்னதாக்கிட்டா… பூலோக தெய்வம்..பிராசீனமான கோயில்.
நின்ற திருஉருவம் திருமுடியும் தாளும் தடக்கையும்..

கற்பூர ஒளியில் ஆத்மா “த்ரில்லிங்!”என்றான்.

நன்றி - அமரர் சுஜாதா, சிறுகதைகள்,உயிர்மை பதிப்பகம்

BTW, here are the pictures of Sujatha which I took in the Chennai book fair 2006.
Writer Sujatha - Chennai book fair 2006

Thursday, January 06, 2011

விஞ்ஞான சிறுகதைகள்

விஞ்ஞான சிறுகதைகள்..குட்டி குட்டியாய் எழுதி இருக்கும் இவை நான் கல்கி வார இதழில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் எழுதியவை..படிக்க சிரமமாய் இருப்பின் க்ளிக் செய்து படிக்கவும்..

Saturday, July 17, 2010

விஞ்ஞான சிறுகதைகள்

விஞ்ஞான சிறுகதைகள்..குட்டி குட்டியாய் எழுதி இருக்கும் இவை நான் கல்கி வார இதழில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் எழுதியவை..படிக்க சிரமமாய் இருப்பின் க்ளிக் செய்து படிக்கவும்..