Showing posts with label இது நம்ம ஆளு. Show all posts
Showing posts with label இது நம்ம ஆளு. Show all posts

Sunday, January 10, 2016

'கதகளி' படத்தின் கதைக் களத்தைப் பற்றி..-இயகுநர் பாண்டிராஜ் பேட்டி

‘பசங்க 2' படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு அடங்குவதற்குள் தனது அடுத்த படமான 'கதகளி'யில் மும்முரமாக இருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். அடுத்த ஆட்டத்துக்குத் தயாராகி வந்தவரிடம் உரையாடியதிலிருந்து…
'கதகளி' படத்தின் கதைக் களத்தைப் பற்றி..
முதன்முறையாக என்னிடமிருந்து ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர். நம்முடைய பேச்சில் ‘கதகளி ஆட்டம் ஆடிட்டாண்டா’ என்று சொல்லுவோம் இல்லையா, அதைத்தான் படத்தின் தலைப்பாக வைத்தேன். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் ஒருவனின் வாழ்வில் விதி விளையாடுகிறது. அதற்கு அவன் ஆடும் ஆட்டம்தான் இப்படம். ஒரு பூனை துரத்தத் துரத்த ஓடிக்கொண்டே இருக்கும். இதற்கு மேல் நம்மால் ஒட முடியாது என்று தெரிந்தவுடன் திரும்பி நம்மைத் தாக்கப் புலி மாதிரி பாயும். அப்படி ஒருவனுடைய கோபம், ஆக்ரோஷம், ருத்ர தாண்டவம்தான் 'கதகளி'.முதன்முறையாக மாஸ் படம் பண்ணிய அனுபவம்?
என் நண்பரின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து இந்தப் படத்துக்கு நான் திரைக்கதை அமைத்திருக்கிறேன். அந்தச் சம்பவத்தையும் கதையையும் பார்த்தீர்கள் என்றால், முன்னுக்கு வர நினைக்கும் ஒரு நாயகனுக்குத்தான் பொருத்தமாக இருக்கும். இப்படி ஒரு படத்தை விஷால் ஒப்புக்கொண்டதே எனக்கு ஆச்சர்யம்தான். அவர் ‘பாண்டியநாடு' படம் பண்ணியிருப்பதால், இப்படம் அவருக்கு எப்படி வரும் என்று தெரியும்.அனைவருக்குள்ளும் ஒரு நாயகன் இருக்கிறான். ஒரு சராசரி மனிதனுக்குள் இருக்கும் ஒரு ஹீரோயிசம்தான் இப்படத்தில் இருக்கும். 40 பேரை அடிக்கிறது, 20 நடனக் கலைஞர்களோடு ஆடுவது, சுமோ பறப்பது, இப்படி எதுவுமே இதில் இருக்காது. இது விஷால் படமா, பாண்டிராஜ் படமா என்று கேட்டீர்கள் என்றால் இது இருவரின் படம் என்றுதான் சொல்ல வேண்டும்.இனிமேல் மாஸ் ஹீரோ படங்கள் மட்டும்தானா?
குறைந்த பட்ஜெட்டிற்குள் ஒரு நல்ல குழந்தைகள் படமோ, குடும்ப படமோ பண்ணிக்கொண்டுதான் இருப்பேன். புதுமுகங்களை வைத்துக் கூட படம் பண்ணுவேன். மாஸ் படங்களின் வெற்றிக்கு மயங்கி அதன் பின்னால் கண்டிப்பாகப் போக மாட்டேன். குடும்பம் படம், த்ரில்லர் படம் இப்படி ஒவ்வொரு தளத்திலும் படங்கள் பண்ணிக்கொண்டிருப்பார் மணிவண்ணன் சார். அவரை மாதிரி முயற்சி பண்ணிப் பார்ப்போம் என்பதுதான் என் ஆசை.
‘பசங்க 2' படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பின் மூலம் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
வடபழனியில் உள்ள திரையரங்கில் படம் பார்க்கப் போனபோது, இறுதியில் ‘A Pandiraj Film' என போடும்போது கைதட்டினார்கள். மூன்று வருடமாக எந்தப் படமும் வெளியாகவில்லை. அந்தக் கைதட்டலைக் கேட்கும்போது என்னை அறியாமல் அழுதுகொண்டிருந்தேன். மக்கள் வெளியே பார்க்கும்போது, ‘படம் நல்லாயிருக்கு சார்’ என்று சொல்லும்போது ஒரு பொறுப்பு வந்திருக்கிறது.
‘பசங்க 3' எப்போது எனக் கேட்கிறார்கள், நல்ல தருணத்தில் அப்படத்தையும் பண்ணுவேன். பொதுவாகவே, ரசிகர்களுக்கு ஒரு படத்தில் கருத்துச் சொன்னால் பிடிக்காது. ஆனால், இப்படத்தில் நிறைய கருத்து சொல்லியிருக்கிறோம், அதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இனிமேல் எந்த ஒரு படம் பண்ணினாலும், அதில் ஒரு நல்ல விஷயம் இருக்க வேண்டும் எனக் கற்றுக்கொண்டேன்.தயாரிப்பாளர் பாண்டிராஜைக் காணோமே?
இந்த வருடம் கண்டிப்பாக எனது தயாரிப்பு நிறுவனத்தில் ஓரிரு படங்கள் தயாரிக்கலாம் என்று இருக்கிறேன். மற்ற இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கான வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது. அப்படித் தயாரிக்க முடியாமல் போனால் கூட, ஒரு நல்ல படத்தை வாங்கி வெளியிட்டுவிடுவோம். எனது தயாரிப்பு நிறுவனத்திலிருந்து கண்டிப்பாக ஒரு நல்ல படம் தயாரிப்பாகவோ வெளியீடாகவோ இருக்கும். அதை உறுதியாகச் சொல்லுவேன்.‘இது நம்ம ஆளு' வெளியீட்டுப் பணிகள் எந்த அளவில் இருக்கிறது?
‘இது நம்ம ஆளு' இந்த ஆண்டு கண்டிப்பாக வெளியாகிவிடும். காதலர் தினத்துக்கு வெளியானால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். அதற்கான பின்னணி இசைக் கோப்பு பணிகளெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆண்டு வெளியாகிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தயாரிப்பாளர் கையில்தான் எல்லாம் இருக்கிறது, என் கையில் எதுவுமே இல்லை.


THANX - THE HINDU

Wednesday, September 02, 2015

‘இது நம்ம ஆளு’-மாமனார் டி ஆர் க்கும் ,மருமகள் நயன் தாரா க்கும் சண்டை, அதை ஊரே வேடிக்கை பாக்குது

இது நம்ம ஆளு படத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா

இது நம்ம ஆளு படத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா
'இது நம்ம ஆளு' படத்தின் 2 பாடல் காட்சிகளில் நயன்தாரா நடித்துத்தர வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் டி.ராஜேந்தர் புகார் அளித்திருக்கிறார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் 'இது நம்ம ஆளு'. சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் டி.ராஜேந்தர் தயாரித்து வருகிறார்.
'வாலு' வெளியீட்டு பணிகள் முடிந்தவுடன், 'இது நம்ம ஆளு' படத்தின் 2 பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு துவங்கும் என படக்குழு சார்பில் தெரிவித்திருந்தார்கள்.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் டி.ராஜேந்தர் புகார் அளித்திருக்கிறார். அப்புகாரில் டி.ராஜேந்தர் தெரிவித்திருப்பது, "என் மகன் சிம்புவும், நயன்தாராவும் ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதற்காக நயன்தாராவுக்கு பேசப்பட்ட சம்பளத்தில் 75 சதவீத தொகையை கொடுத்து விட்டேன். மீதி 25 சதவீத சம்பளம் மட்டுமே அவருக்கு பாக்கி இருக்கிறது.
‘இது நம்ம ஆளு’ படத்தில் இன்னும் 2 பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது. இதற்காக நயன்தாராவின் மானேஜரிடம் பேசினோம். இம்மாதம் (செப்டம்பர்) ஐந்து நாட்களும், அடுத்த மாதம் (அக்டோபர்) ஐந்து நாட்களும் தேதி ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொண்டோம். அதற்கு நயன்தாரா மறுக்கிறார்.
பாடல் காட்சிகளை முடித்துக் கொடுத்ததும், அவருக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை கொடுத்து விடுகிறோம். நயன்தாரா ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடித்துத்தர தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட வேண்டும்.
நயன்தாராவிடம், சிம்பு ‘கால்ஷீட்’ கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த படத்தைப் பொருத்தவரை சிம்பு நடிகர்தான். அவர் மீது வதந்தியை பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.” என்று அப்புகாரில் டி.ஆர் தெரிவித்திருக்கிறார்.


நன்றி -த இந்து

Wednesday, June 17, 2015

ஐஸ்வர்யா, நயன் தாரா, ஹன்சிகா என நிறைய கஷ்டங்களை கடந்து வந்துவிட்டேன்: சிம்பு நேர்காணல்

  • 'வாலு' படத்தில் சிம்பு
    'வாலு' படத்தில் சிம்பு
  • 'வாலு' படத்தில் சிம்பு
    'வாலு' படத்தில் சிம்பு
கடந்த சில ஆண்டுகளாக சினிமா ரேஸில் இருந்து சற்று விலகியிருந்த சிம்பு, தற்போது மீண்டும் சிலிர்த்தெழுந்துள்ளார். ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘கான்’, அமீரின் இயக்கத்தில் ஒரு படம் என்று திரையரங்கில் சரவெடி வெடிக்க தயாராக இருக்கிறார். தொடர் படப்பிடிப்புகளுக்கு நடுவில் சில நாட்கள் ஓய்வில் இருக்கும் சிம்புவை சந்தித்தோம்.
இரண்டரை வருட இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபடுவது கஷ்டமாக இல்லையா?
ஒரு கஷ்டமும் இல்லை. இதற்கு முன்பும் நான் இப்படி தொடர்ச்சியாக நடித்தவன்தானே? இந்த ஓய்வும் நானாக தேடிக்கொண்டதல்ல. அதுவாகவே அமைந்தது. இப்போது மீண்டும் பரபரப்பான வாழ்க்கையை வாழத் தொடங்கியிருக்கிறேன். இந்த வாழ்க்கை சந்தோஷமாக நகர்கிறது. எப்போதுமே வாழ்க்கையை அதன் போக்கில் அணுகுவதுதான் என் வழக்கம். கடந்த 2 வருடங்களில் எதுவுமே இல்லாத வாழ்க்கையைப் பார்த்துவிட்டேன். இப்போது காலையில் கெளதம் மேனனின் படம், இரவு செல்வராகவனின் படம் என்று பரபரப்பாக வாழ்க்கை நகர்கிறது. இதையும் நான் ரசித்துத்தான் செய்கிறேன்.
‘படையப்பா’ படத்தின் பாடலில், ‘என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா’ என்று ஒரு வரி வரும். அதேபோல இப்போது நான் வியர்வை சிந்தி உழைக்கும் ஒவ்வொரு படத்தின் பலனும் விரைவில் திரையில் தெரியும்.
‘இனிமே இப்படித்தான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் நீங்கள் பட்ட பல கஷ்டங்களைச் சொல்லி வருத்தப்பட்டீர்கள். அதைக் கேட்டு வீட்டில் என்ன கூறினார்கள்?
அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் சந்தானத்துக்காக கலந்துகொண்டேன். எந்தவொரு நிகழ்ச்சியிலும் என்ன பேச வேண்டும் என்று தயார் செய்யும் வழக்கம் எனக்கு கிடையாது. என் மனதில் பட்டதை பேசுவேன். அந்த நிகழ்ச்சியிலும் என் மனதுக்குப் பட்டதைப் பேசினேன். கடந்த இரண்டரை வருடங்களில் நான் பட்ட கஷ்டங்களைப் பற்றி பேசினேன்.
சாதாரண மக்களைப் போல் என்னால் கடற்கரை, ஸ்பென்சர், சத்யம் சினிமாஸ் என்று சுற்ற முடியுமா? 700 நாட்கள் சும்மாவே 4 சுவர்களுக்குள் வாழ்வது எவ்வளவு கொடுமையாக இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். அந்த நாட்களை எப்படி கடந்து வந்தேன் என்பதைத்தான் நான் அன்றைய நிகழ்ச்சியில் பேசினேன். என் அம்மாவும் அப்பாவும் அதற்கு வருத்தப்பட்டார்கள். “ஏன் இப்படியெல்லாம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகிறாய்? உனக்கு என்ன இல்லை” என்று கேட்டார்கள். அவ்வளவுதான்.
இந்த இருண்ட வாழ்க்கையில் இருந்து வெளியே வருவோம் என்ற நம்பிக்கையை எனக்கு கொடுத்தது என் ரசிகர்கள்தான். அவர்களை என்றைக்குமே நான் மறக்க மாட்டேன். அதே போல “ப்ரோ.. இப்படி வீட்டுக்குள்ளேயே இருக்காதீங்க. சனிக்கிழமையாவது வெளியே வாங்க” என்று திட்டி வெளியே கூட்டிக்கொண்டு போனது அனிருத்தான்.
நீங்கள் எப்போதுமே படப்பிடிப்புக்கு லேட்டாக வருவதாக சொல்கிறார்களே?
நான் லேட்டாக போகிறேன் என்றால் நான் நடித்து இத்தனை படங்கள் எப்படி வெளியானது. அப்படிச் சொல்பவர்கள் இதற்கு பதில் சொல்லட்டும். சிம்பு தாமதமாக வருவார் என்று சொல்லும் இயக்குநர்களிடம், சிம்பு எத்தனை மணிக்கு கிளம்புவார் என்ற கேள்வியைக் கேளுங்கள். அவர்கள் சொல்லும் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன். சில நாட்கள் நான் தாமதமாக சென்றாலும், முழுக் காட்சிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டுதான் திரும்பியிருக்கிறேன். லேட்டாக வந்துவிட்டு 6 மணிக்கே கிளம்பவேண்டும் என்று நான் சொன்னதில்லை.
செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் ‘கான்’ பட அனுபவம் எப்படி இருக்கிறது?
ஒவ்வொரு நாளும் நிறைய விஷயங்களை புதிதாக கற்றுக் கொள்கிறேன். நீங்கள் இதுவரை பார்த்த செல்வராகவன் படங்களில் இருந்து இந்தப் படம் மாறுபட்டு இருக்கும். ஒரே ஒரு விஷயம் சொல்லவா.. இதுவரை நீங்கள் ஹீரோக்களை உருவாக்கிய செல்வராகவன் படங்களைத்தான் பார்த்திருப்பீர்கள். இப்போது முதல் முறையாக செல்வராகவன் ஒரு ஹீரோவுக்காக படம் பண்ணுகிறார். இந்தப் படத்தைப் பற்றி இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்.
‘இது நம்ம ஆளு’ படத்தில் என்ன பிரச்சினை. ஏன் இந்த தாமதம்?
‘வாலு’ படம் வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது. ஒரு படம் பிரச்சினையில் இருக்கும் போது, அந்தப் படத்தை அப்படியே விட்டு விட்டு அடுத்த படத்தில் கவனம் செலுத்துவது முறையல்ல. நிறைய படங்கள் அதேபோல நிற்கிறது. ‘வாலு’ படத்தை நானே வாங்கி பிரச்சினைகளை முடித்துள்ளேன். இப்படம் வெளியானவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான தேதியை அறிவிக்க உள்ளேன். ‘இது நம்ம ஆளு’ படத்தில் எந்த பிரச்சினையும் கிடையாது என்பதுதான் உண்மை. படத்தின் 2 பாடல் காட்சிகளை மட்டும் காட்சிப்படுத்த வேண்டியுள்ளது. மற்றபடி படம் தயார். ‘வாலு’வைத் தொடர்ந்து ‘இது நம்ம ஆளு’ வெளியாகும். இரண்டுமே எனக்கு வேறொரு பரிமாணத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நீண்ட நாட்கள் கழித்து வெளியாகவுள்ள ‘வாலு’ படம் எப்படி இருக்கும்?
நிறைய கமர்ஷியல் படங்களைப் பார்த்திருப்பீர்கள். அதில் ஹீரோ, வில்லனை ஏன் அடிக்கிறான் என்பதுதான் படத்தின் மிகப்பெரிய பலம். அந்த பலம் ‘வாலு’வில் மிக அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமன்றி, நான் நாயகனாக நடித்த படம் 3 வருடங்கள் கழித்து வெளியாகிறது. என் ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் ‘வாலு’ படத்தில் இருக்கும். இது ஒரு புதுமுக இயக்குநரின் படம் போலவே இருக்காது. இப்படம் வெளியானதும் அதன் இயக்குநர் விஜய் சந்தர் ஒரு நல்ல கமர்ஷியல் இயக்குநராக உருவெடுப்பார்.
மீண்டும் காதலில் விழும் திட்டம் இருக்கிறதா?
தெரியவில்லை. இப்போது நிம்மதியாக இருக்கிறேன். என்னுடைய வேலையை காதலித்து கொண்டிருக்கிறேன். மீண்டும் காதலிப்பேனா என்று எனக்குத் தெரியாது. எனக்கானவளை நான் பார்க்கும்போது மீண்டும் காதலில் விழலாம்.
எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்?
முதலில் காதலைப் பற்றிக் கேட்டீர்கள். இப்போது திருமணத்தைப் பற்றி கேட்கிறீர்கள். இதற்கும் தெரியாது என்பதுதான் என் பதில். இப்போது இருக்கும் சமூக சூழ்நிலைகளைப் பார்க்கும்போது கல்யாணம் அவ்வளவு எளிது அல்ல என்பது மட்டும் புரிகிறது. ஏதோ ஒரு பெண்ணைப் பார்த்தார்கள், கல்யாணம் பண்ணிக்கிட்டேன் என்பது கஷ்டம். எனக்காக ஒரு பெண் வந்து, இருவரும் முழுமையாக புரிந்துகொள்ளும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் என் கல்யாணம் நடக்கும்.
இவ்வளவு வெளிப்படையாக பேசும் நீங்கள் உங்களைப் பற்றிய சர்ச்சைகளுக்கு ஏன் விளக்கம் கொடுப்பதில்லை?
உண்மைக்கு விளக்கம் கொடுக்கலாம். பொய்க்கு விளக்கம் கொடுத்தால், அந்தப் பொய் உண்மையாகிவிடும். வாரத்துக்கு ஒரு முறை என்னைப் பற்றி ஏதாவது எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கெல்லாம் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தால், பிறகு நான் அந்த வேலையை மட்டுமே பார்க்க வேண்டிவரும். மேலும் அதற்கெல்லாம் விளக்கம் கொடுத்தால் சிம்பு கெட்டவனாகி விடுவான்.
என்னை பொறுத்தவரை எனக்கென்று சில ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ரசிக்கிற மாதிரி படங்கள் செய்தாலே போதும். என்னை நம்பி வரும் இயக்குநர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தாலே போதும்.


நன்றி - த இந்து