Showing posts with label பிரசவம். Show all posts
Showing posts with label பிரசவம். Show all posts

Saturday, August 18, 2012

பெண் நலம் - பிரசவத்தில்... பொய் வலின்னா என்ன?-மருத்துவம்

A to Z பெண் நலம்

பிரசவத்தில்... பொய் வலின்னா என்ன?

டாக்டர் கீதா அர்ஜூன்

சந்தியாவும் அவள் கணவர் சாரங்கனும் தங்கள் குழந்தையின் வருகையை ஆவலோடு எதிர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய நீண்ட நாள் கனவு, நனவாகும் சமயம் இது. பிரசவகாலம் நெருங்கிக் கொண்டு இருந்தது. அப்போது அவளுக்குள் பரபரப்பும், படபடப்பும் கலவையாக எழுந்தன. பிரசவம் மற்றும் வேதனை போன்ற சொற்கள் அவளுக்கு கவலையை அளித்தன. பிரசவம் பற்றி அவள் கொஞ்சமாவது தெரிந்துகொண்டால்தான், தம் பயத்தை உதறித் தள்ள முடியும் என்று சந்தியாவுக்குத் தோன்றிற்று.


டாக்டரின் மேஜையை நெருங்கிய உடனேயே, டாக்டர் அவளை அமரச் சொல்லி சைகை செய்யும் முன்னாலேயே, ‘எனக்குக் குழப்பமாய் இருக்கு டாக்டர்!’ என்றாள் சந்தியா. ‘லேபர்-னா என்ன? அதுதான் பிரசவ வேதனையா?’


முதல்ல உட்காருங்க. குழப்பமோ, கவலையோ படாதீங்க. பிரசவத்தின் போது கருப்பை வாய் மெலிந்து விரிவடைகிறது. பத்து சென்டிமீட்டர் வரை முதல் ஸ்டேஜில் விரிவடையும். இரண்டாவது ஸ்டேஜில் குழந்தை பிறப்புப் பாதை வழியே வந்து விடும். அதைத் தொடர்ந்து பிளசன்டா அல்லது தொப்புள்கொடியுடன் சேர்ந்த பாகம் வெளிவருவது மூன்றாவது கட்டம். முதல் ஸ்டேஜ்ல தொடங்குகிற வலிதான் பிரசவ வேதனை."


எல்லாருக்குமே பிரசவ வேதனை, பிரசவமாகிற காலம் ஒரே மாதிரி இருக்குமா?


ஒவ்வொரு பிரசவமும் வித்தியாசமானதுதான். அது எத்தனை நேரம் நீடிக்கிறது, எப்படி முன்னேறுகிறது என்பது, பெண்ணுக்குப் பெண் மாறுபடும். ஆனால் உங்கள் மகப்பேறு மருத்துவருக்குத்தான் அது சரியாக முன்னேறுகிறதா என்று தெரியும். அப்படி முன்னேற்றம் நார்மலாக இல்லையென்றால், மருத்துவ உதவி அல்லது சிசேரியன் தேவைப்படுமா என்பதைத் தீர்மானிப்பார்."


பிரசவத்துக்குப் பத்து மாசம் என்கிறார்களே டாக்டர், அப்போ 300 நாட்கள் காத்திருக்கணுமா?


சாதாரணமாக மனித கர்ப்பம் 280 நாட்கள் அல்லது 40 வாரங்கள் நீடிக்கும். 37 வாரங்கள் முடிந்து விட்டாலே நீங்கள் பிரசவத்துக்குத் தயாராகிவிட்டீர்கள் என்று பொருள். பெரும்பாலான பெண்கள் எதிர்பார்த்த தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவோ ஒரு வாரம் பின்னதாகவோ பிரசவிப்பார்கள்.


 ஒருவேளை 37 வாரங்கள் முடிவதற்கு முன்பாகவே பிரசவம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டால், அதைக் குறைமாதப் பேறுபிரிமெச்சூர் பிரசவம்அல்லதுப்ரிடர்ம்’ (Pre-term) பிரசவம்என்று குறிப்பிடுவார்கள். 37ஆவது வாரம் முடிவதற்குள் உங்கள் பிரசவத்துக்கான அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக உங்கள் மருத்துவரை நீங்கள் பார்க்க வேண்டும்."


எது பிரசவ வலியைத் தோற்றுவிக்கிறது?

இதன் காரணம் யாருக்கும் தெரியாது! ஆனால் ஆக்ஸிடாசின், ப்ரோஸ்டாகிளாடின் போன்ற ஹார்மோன்கள்தாம் கருப்பைச் சுவரை மெலிதாக்குகிறது. குழந்தையின் ஹார்மோனும் இயங்குவதால், தாயின் ஹார்மோன்கள் உற்பத்தியாகி வலியை உண்டாக்குகிறது."


பொய் வலி எடுக்குமாமே, டாக்டர்?

சில வேளைகளில் எப்போது பிரசவ வேதனை தொடங்குகிறது என்று கண்டுபிடிப்பது சிரமம். உங்களை மருத்துவ மனையில் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் அந்த வலி தொடரவில்லையானால், கருப்பை வாயில் விரிவடையவில்லை என்றால், வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்! இதுதான் பொய் வலி."

அப்படியானால் உண்மையான வலி?


கருப்பை சுருங்கி, அதன் வாய் மெலிதாகி விரிவடையும்போதுதான் உண்மையான வலி உண்டாகிறது. பெண்களின் உடலில் அதற்கான அறிகுறிகள் தாமாகவே தெரிய ஆரம்பிக்கும். பிறப்புறுப்பிலிருந்து சற்றே ரத்தம் கலந்த சளி வெளியாகும். இது வலி தோன்றுவதற்கு ஒரு நாளோ, ஒரு சில நாட்களோ முன்னால் நிகழும். வலி தொடங்கிவிட்டது என்பதை அறிய, இரண்டு அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.



தொடர்ந்து, இறுக்கமான பிடிப்பு போல் 30 செகண்டுகளுக்கு நீடித்து, கருப்பை வாய் மெலிதாகித் திறக்கும். அல்லது நீர்க்குடம் உடையும்.


இரண்டில் ஒன்று நிகழ்ந்தாலும், உடனே மருத்துவரை அணுகவும்; அல்லது மருத்துவருக்குச் சொல்லவும். வலி தொடங்கிவிட்டது என்பதை உணர்ந்தால், டாக்டர் சொல்லும் வரை, எந்த உணவும் உண்ண வேண்டாம். நீரும் அருந்தாதீர்கள்."


அப்புறம்?

தொடக்ககால பிரசவ வலியில் கருப்பைவாய் மூன்று சென்டிமீட்டர் வரை விரிவடையும். மூன்றிலிருந்து நான்கு சென்டி மீட்டர் வரை விரிவடையும்போது தான் நிஜமான வலி தொடங்குகிறது. அது அடிக்கடியும், இறுக்கமாகவும் இருக்கும். வேகமாகவும் இருக்கும். சராசரி பெண்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு சென்டி மீட்டர் வீதம் விரிவடையும். வலி அதிகமாக இருக்கையில், முன்னரே பிரசவ அனுபவம் இருந்தால் இது இன்னும் வேகமாக இருக்கும். கருப்பை வாய் முழுவதுமாக விரிவடைந்தவுடன், நீங்கள் குழந்தையைப் பிறப்புப்பாதையில் தள்ளிவிட உங்களை முக்கச் சொல்வார்கள். குழந்தை வெளியே வந்தபின், பிளசன் டாவும் வந்துவிடும்."



சிக்கல்கள் ஏதேனும் இருக்குமா, டாக்டர்?


உங்கள் பிரசவம் நார்மலாக இருக்க, உங்கள் மகப்பேறு மருத்துவரின் அனுபவம், திறமை மற்றும் கவனமான கண்காணிப்பு ஆகியவை இருக்க வேண்டும். உங்கள் இயக்கம், கருப்பைச் சுருக்கம், குழந்தையின் இதயத் துடிப்பின் எண்ணிக்கை பிரசவத்தின்போது கவனிக்கப்படும். அப்போதுதான் பிரசவத்தில் சிக்கல் ஏதும் இருந்தால், உடனே தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும்.‘


(பருவம் தொடரும் )
எழுத்தாக்கம் : சாருகேசி

நன்றி - கல்கி, அமிர்தம் சூர்யா, கதிர்பாரதி, புலவர் தருமி