Showing posts with label வெற்றி. Show all posts
Showing posts with label வெற்றி. Show all posts

Thursday, August 13, 2015

பொசிஷனிங்: வெற்றியின் ரகசியம் இதுதான்!-வணிகம்-எஸ்.எல்.வி.மூர்த்தி

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை.
அறிவுக்கும் வெற்றிக்கும் சம்பந்தம் இல்லை என்று எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள். அதேபோல, தயாரிப்புப் பொருட்கள், நிறுவனங்கள், தனி மனிதர்கள், தலைவர்கள் என எதை, யாரை எடுத்துக்கொண்டாலும், அவர்கள் வெற்றிக்கு அடித்தளம், மக்கள் மனங்களில் அவர்கள் உருவாக்கியிருக்கும் நல்ல அபிப்பிராயம்தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். இப்படி நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்துவதைத்தான் பொசிஷனிங் என்று மேலாண்மை மேதைகள் சொல்கிறார்கள்.
பிறர் மனங்களில் தெளிவான, சாதகமான பிம்பத்தை உருவாக்க, எல்லோரிடமும் நான்கு ஆயுதங்கள் இருக்கின்றன. இவற்றை நான்கு P-க்கள் என்று சொல்வார்கள். அவை:
Product (பொருள்)
Price (விலை)
Promotion (விற்பனை மேம்பாடு)
Physical Distribution (விநியோகம்/ பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் முறை)
புத்திசாலிகள் இந்த நான்கு ஆயுதங்கள் மூலம் தங்களுக்குச் சாதகமான, தனித்துவ பிம்பங் களை மக்கள் மனங்களில் உருவாக் குகிறார்கள்.
பொருள் வழி
2003 ம் ஆண்டு, நோக்கியா நிறுவனம், தன் நோக்கியா 1100 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தார்கள். போன், டார்ச் லைட், அலாரம் கடிகாரம், சூரிய வெளிச்சம் பிரதிபலிக்காத ஸ்க்ரீன்கள், தூசி, வியர்வை ஆகியவை பாதிக்காத வடிவமைப்பு, கீழே விழுந்தாலும் பாதிக்கப்படாத உறுதியான அமைப்பு இந்தியக் கிராமப்புறங்களுக்காகவே வடிவமைத்தார்கள். இந்தியாவில் தொட்ட விற்பனைச் சிகரங்களால், உலகம் முழுக்க அரங்கேற்றினார்கள். விற்பனை எண்ணிக்கை 25 கோடிகள் தொட்டது: அதிகம் விற்பனையான செல்போன் என்னும் சாதனை படைத்தார்கள்.
பார்லே ஜி - உலகில் அதிகமாக விற்பனையாகும் பிஸ்கெட், 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருட விற்பனை கொண்ட பிஸ்கெட், 66 வருடங்களாகத் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டிவரும் பிஸ்கெட். எப்படி நடக்கிறது இந்த மேஜிக்? முக்கிய காரணங்கள் - மைதா மாவு, பால், குளுக்கோஸ் ஆகிய மூன்றும் சேர்த்துத் தயாரிப்பதால், பால் மணம், குளுக்கோஸின் இனிப்புச் சுவை இரண்டும் கொண்டதாய், குழந்தைகளின் உடல், அறிவு வளர உதவும் தனித்துவ பலம்.
வெல்வெட், சிக் ஷாம்பூகள், உஜாலா வெளுப்பான் (Whitener), ஆப்பிள் ஐபேட், ஐ போன், ஐ பாட், ஆப்பிள் வாட்ச், மெக்டொனால்ட்ஸ் பர்கர், கேஎஃப்சி (KFC) ஃப்ரைட் சிக்கன் எனப் புதுமைத் தயாரிப்புகளால் தொழில் உலகில் தனிமுத்திரை பதித்திருக்கும் பிரபலங்கள் பலர்.
விலை வழி
27 நாடுகளில் 11,000 கடைகள், 22 லட்சம் ஊழியர்கள். ஆண்டு விற்பனை 486 பில்லியன் டாலர்கள் (சுமார் 30 லட்சம் கோடி ரூபாய்).வால்மார்ட்டின் சாதனைப் பட்டியல். இதன் ரகசியம்? எப்போதும் குறைந்த விலை என்னும் தாரக மந்திரம்!
சோப்புத்தூள் உலகின் தனிக்காட்டு ராஜாவாக இருந்தது ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனியின் ஸர்ஃப். சர்வ வல்லமை கொண்ட இந்தப் பன்னாட்டுக் கம்பெனியைத் தன் குறைந்த விலை நிர்மாவால் புற முதுகிடவைத்தார் கஸன்பாய் பட்டேல். ஏராளமான தொழில் முனைவர்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யும்போது, போட்டியாளர்களைவிட விலையைக் குறைத்து விற்கிறார்கள். இது நல்ல யுக்திதான். ஆனால், குறைவான விலை மட்டுமே போதும் என்னும் குறுகிய எண்ணத்தால், மற்ற 3 P க்களை உதாசீனம் செய்வதும், தரத்தைக் காவு கொடுப்பதும், தனக்குத்தானே குழி பறிக்கும் முயற்சிகள்.
விற்பனை மேம்பாடு வழி
சுவையான, புத்துணர்ச்சி ஊட்டும், தாகம் தீர்க்கும் குளிர் பானம் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தியதுதான் கோகோ கோலாவின் உலகளாவிய மாபெரும் விற்பனைக்கு முக்கிய காரணம். இந்தக் கோட்டையை பெப்ஸி தகர்த்ததும் பொசிஷனிங் மூலம்தான்.
மனதால் நீங்கள் இளைஞரா, பெப்ஸி உங்களுக்காக(Now it’s Pepsi for those who think young), துடிப்போடு வாருங்கள், உங்கள் தலைமுறை பெப்ஸி தலைமுறை (Come alive you’re the Pepsi generation) என்னும் விளம்பர முழக்கங்கள் மூலமாக, இளைய தலைமுறையினர் குடிக்கவேண்டிய ஒரே பானம் பெப்ஸிதான் என்னும் பொசிஷனிங்கை உருவாக்கி, அவர்களைக் கோகோ கோலாவிடமிருந்து விலக்கி, தனக்கு மட்டுமே பெப்ஸி சொந்த மாக்கிக்கொண்டது.
1977 வெளிநாட்டுக் குளிர் பானங்கள் இந்தியாவைவிட்டு வெளி யேற்றப்பட்டன. 1989 இல் தம்ஸ் அப், இளைஞர் இளைஞிகளின் இதயத் துடிப்பாக இருந்த இருபத்து நான்கு வயதான சல்மான் கானைத் தன் தூதுவர் (Brand Ambassador) ஆக்கியது. ஜெயித்தது.
அமுல் வெண்ணெய் அறிமுகம் செய்யப்பட்டபோது, அவர்களுடைய போட்டியாளர்கள் பிரம்மாண்ட பால்சன் (Polson) வெண்ணெய். வித்தியாச விளம்பரங்களால், அமுல் நம் மனங்களில் சிம்மாசனம் போட்டிருக்கிறது. .
சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப் என்னும் முழக்கத்தோடு தனக்கெனத் தனியிடம் பிடித்திருக்கிறது லக்ஸ் சோப், சினிமா நடிக நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே விளம்பரங்களில் ஜொலித்துக்கொண்டிருந்தபோது, ஒரு பிசாசைத் தன் மாடலாகக் களமிறக்கிய ஒனிடா டிவி - இப்படி விளம்பரங்கள் மூலமாகத் தம்மைப் பொசிஷனிங் செய்துகொண்டிருக்கும் பொருட்கள் ஏராளம்.
விநியோகம் வழி
சாதாரணமாக நிறுவனங்கள், ஏஜெண்டுகள், விநியோகஸ்தர்கள், கடைகள் ஆகியவை மூலமாக வாடிக்கையாளர்களிடம் தங்கள் தயாரிப்புகளைக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்களையே தங்கள் விற்பனைப் பிரதிநிதிகளாக்கும் மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் (MLM) என்னும் வித்தியாசப் பாதையில் தொடர்கிறார்கள்.
இன்னொருவிதமான விநியோகம், தங்கள் கடைகளில் மட்டுமே தங்கள் தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்வது. எல்லா நகைக்கடைகளும் காலம் காலமாகப் பின்பற்றும் முறை இது.
கல்யாண் ஜூவல்லர்ஸ், லலிதா ஜூவல்லரி, ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ், ஜாஸ் ஆலுக்காஸ் போன்றவர்களின் நகைகளை நீங்கள் வேறு எங்கும் வாங்கமுடியாது: அவர்கள் கடைகளில் மட்டும்தான் வாங்கமுடியும்.
பாட்டா கம்பெனியும், தன் காலணிகளை இந்த விதத்தில்தான் விற்பனை செய்கிறார்கள்.
எந்த நாட்டுக்கும், எல்லோருக்கும் ஏற்ற கொள்கை
மேலே சொன்ன வெற்றிக்கதைகளை மனக்கண்களுக்கு முன்னால் கொண்டுவாருங்கள். சோப், பிஸ்கெட், கூல் டிரிங்க்ஸ், பர்கர், ஃப்ரைட் சிக்கன், ஷாம்பூக்கள், சோப்புத்தூள், உஜாலா வெளுப்பான் (Whitener), செல்போன், டி.விக்கள், ஆப்பிள் ஐபேட், ஐ போன், ஐ பாட், ஆப்பிள் வாட்ச், தங்க வைர நகைகள் விதவிதமான பொருட் களின் அமோக விற்பனைக்குப் பொசிஷனிங் மந்திரச்சாவியாக இருந்து வருகிறது.
இன்னொரு சமாச்சாரம். ஸ்வீடன் நாட்டு பர்னிச்சர் கம்பெனி ஐக்கியா (ikea), ஜப்பானின் QB ஹவுஸ் (QB House) சலூன், அமெரிக்க வால்மார்ட், அமேசான் இணையதளக் கடை, ஸ்டார்பக்ஸ் காபி, ஈ பே இணையதள ஏலக்கடை, சீனாவில் ஓரியோ பிஸ்கெட், மெக்ஸிகோவில் அல்ட்ரா சோப் பவுடர் என எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் கொள்கை பொசிஷனிங்.
பொருட்களின் இடங்களில் அரசியல் கட்சி, நாட்டுத் தலைவர்கள் ஆகியோரை வைத்துப் பாருங்கள். பொசிஷனிங் கச்சிதமாகப் பொருந்தும். பிசினஸ் செய்கிறீர்களா? உங்கள் விற்பனையில் சிகரம் காணப் பொசிஷனிங் ராஜபாட்டை போடும்: வேலையிலும், வாழ்க்கையிலும் உயரவேண்டுமா? பொசிஷனிங் மூலம் தனித்துவம் காட்டுங்கள்.
வெற்றிமீது வெற்றி வந்து உங்களைச் சேர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


நன்றி - த இந்து

Thursday, August 06, 2015

அப்துல்கலாமே கோபப்பட்ட தருணம்

இளைய சமுதாயத்தினர்தான் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள். அனைத்துத் துறைகளுக்கும் தலைமையேற்று அவர்கள் நமது நாட்டை முன்னேற்றப்பாதையில் வழிநடத்திச் செல்வார்கள் என்பதில் அமரர் கலாமுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.
கோபப்பட்ட கலாம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் கவுரவப் பேராசிரியராகப் பணியாற்றினார். அந்த சமயத்தில், அகில இந்திய வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்காக அவரிடம் நேர்காணல் நடத்த அனுமதி கோரினேன். ‘பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இளைஞர்கள் ஈர்க்கப்படுவது எதனால்?’ என்ற கருத்தை மையமாக வைத்துத் தயாரிக்கப்படவிருந்த உரைச் சித்திரத்துக்காக அவரது கருத்துகளைத் தெரிந்துகொள்ள விரும்பினேன்.
நான் இந்த விஷயத்தைக் கூறியதும் சட்டென்று அவர் முகத்தில் லேசான கோபம் பிரதிபலித்தது. அவர் இயல்புக்கு மாறான சற்றுக் கடுமையான குரலில் ‘‘இளைஞர்கள் எவ்வளவு நல்லவர்கள் தெரியுமா சார்?’ என்று கேட்டார். ‘‘எனக்கு வரும் இ-மெயில்களைப் பாருங்கள். “நாட்டு முன்னேற்றத்துக்காக எந்த வழிமுறைகளில் நாங்கள் செயல்பட வேண்டும் என்று சொல்லுங்கள். நாங்கள் அதற்காக உழைக்கத் தயாராக இருக்கிறோம்” என்று மாணவர்களும் இளைஞர்களும் அந்த இ-மெயில்கள் மூலம் எனக்குத் தெரிவிக்கின்றனர்’’ என்று என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
அரசியலிலும்...
மாணவர்களிடம் அவர் கலந்துரையாடும்போது அவர்களின் எதிர்கால லட்சியம், இலக்கு குறித்துக் கேள்வி கேட்பார். ஆனால், யாருமே அரசியலில் இறங்கப்போவதாகவோ அமைச்சர்களாக மாறப்போவதாகவோ சொல்லாததால், ‘‘ஏன் நீங்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை?’’ என மாணவர்களை அவர் கேட்பது வாடிக்கை. அரசியலைத் தூய்மைப்படுத்த இன்றைய இளைஞர்கள் அரசியலிலும் நேர்மையுடன் செயல்பட்டு நாட்டை வழிநடத்த வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் வெளியிடுவதுண்டு.
பொதுவாகப் பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ பயிலும் பெரும்பாலான மாணவர்கள், பெரிய படிப்புகள் படிக்க வேண்டும், படித்த கல்வித் தகுதிக்கு ஏற்ப அதிகமான சம்பளம் கிடைக்கும் வேலையைத் தேட வேண்டும் என்பதில்தான் விருப்பம் கொண்டிருப்பார்கள். கல்வியால் தனக்குக் கிடைத்த பலன்களைப் பயன்படுத்தி, தங்களைச் சார்ந்த மக்களின் நல்வாழ்வுக்கு எப்படிப்பட்ட பங்களிப்பை வழங்க முடியும் என ஆழமாக யோசிப்பதில்லை.
சின்னது குற்றமே
மாணவர்களின் இத்தகைய மனப்போக்கை தனது கருத்தில் கொண்டுதான் மாணவர்களிடம் அவர் கலந்துரையாடும்போது சின்னதாகக் குறிக்கோள் வைத்துக்கொள்வது ஒரு குற்றம் (small aim is a crime) என வலியுறுத்தினார்.
மிகப் பெரிய இலக்குகளை மாணவர்கள் அமைத்துக்கொள்ள வேண்டும் என எப்போதுமே எடுத்துரைத்து வந்தார். மாணவர்களின் அளவுகடந்த ஆற்றலைத் தேசத்தின் வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கு அவரே ஒரு முன்மாதிரியாகவும் செயல்பட்டார்.
ஏவுகணைப் பணிகளில் மாணவர்கள்
நாம் முதல் முறையாக ஏவுகணைகளை 100 சதவீதம் நமது நாட்டுத் தயாரிப்புகளாக உருவாக்க முனைப்புடன் பாடுபட்டபோது, நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கியமான பொறியியல் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் உள்ள மாணவர்களை ஏவுகணைத் தயாரிப்புத் திட்டத்தில் அப்துல் கலாம் பங்கேற்க வைத்தார். அக்னி ஏவுகணையை தயாரிக்கும் பணிகளில் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கிய பிரத்யேக மென்பொருள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.
அனைத்து விண்வெளித் திட்டங்களிலும் தனது வெற்றிகளுக்குப் பக்கபலமாக இருந்தது துடிதுடிப்பாற்றலும் ஆர்வப் பெருக்கும் கொண்ட இளம் அணியினர்தான் என்பதைத் தனது சுயசரிதையான அக்னிச் சிறகுகளில் பெருமிதத்துடன் நினைவுகூர்ந்துள்ளார்.
நானும் ஒருநாள்...
வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும் என்றால், நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற ஆசை, நம்பிக்கை, எதிர்பார்ப்பு ஆகிய குணாம்சங்களை ஒவ்வொரு இளைஞரும் தனக்குள் ஆழமாகப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறிய கலாம், தனது வாழ்க்கையில் அதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.
‘சாதாரண நாட்டுப்புறத்துப் பையனாக இருந்தாலும், நானும் ஒருநாள் வானத்து உச்சியை எட்டுவேன்’ என்ற நம்பிக்கையைத் தனக்குள் வேர்விட வைத்ததால்தான் தனது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்க முடிந்தது என்றும், சாதனை நாயகன் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
சுய கட்டுப்பாட்டு நெறிகள்
சாதிக்க வேண்டும் என்று வேட்கை கொண்டுள்ள மாணவர்களுக்கு அர்த்தம் பொதிந்த ஆலோசனையைத் தனது வாழ்க்கையிலிருந்தே கீழ்வருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார் :
“மனதையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்தி, என் தலைவிதியை எனக்குச் சாதகமானதாக அமைத்துக்கொள்ள நான் கடுமையாக முயற்சி செய்தேன்.
ஒவ்வொரு மாணவருக்குமே வெற்றிபெற வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை நிஜமாக்கிக் காட்டுவதில்தான் ஒவ்வொருவருமே வேறுபடுகிறோம். சுய கட்டுப்பாட்டு நெறிகளைப் பின்பற்றிச் செயல்பட்டால், ஒவ்வொருவராலும் சாதிக்க முடியும்.”
தீர்க்கதரிசியின் நம்பிக்கை
நாடு விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் உலக அரங்கில் நமக்கு இன்னமும் உரிய மதிப்பும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டிய முக்கியமான பொறுப்பையும் இளைய தலைமுறையினரிடம்தான் அப்துல் கலாம் ஒப்படைத்துள்ளார்.
நமது தேசம் வலுவான, வளமையான, வளர்ச்சியடைந்த ஒரு தேசமாக உயர்வடையும் என்பதில் திட்டவட்டமாக நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தனது சுயசரிதையில் அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார். தீர்க்கதரிசிகளின் நம்பிக்கை என்றுமே பொய்ப்பதில்லை.
“மற்றவர்கள் என்னை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஒருசில ஆத்மாக்களாவது எனது வாழ்க்கைக் கதையைத் தெரிந்துகொள்வதன் மூலம் உத்வேகம் பெறக்கூடும் என்று நம்புகிறேன்’ என்பதுதான் அவரது சுயசரிதையின் இறுதி வரிகள்.
அவரது நம்பிக்கை கட்டாயம் நிறைவேறவே செய்யும்.
- கட்டுரையாளர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நூல்களை தமிழாக்கம் செய்தவர்.


நன்றி - த இந்து

Tuesday, February 01, 2011

சினி ஃபீல்டில் எண்ட்ரி ஆன கவிதைக்காதலன் - வாழ்த்தலாம் வாங்க

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=8c5ee07e1b&view=att&th=12de184f2412fab2&attid=0.1&disp=inline&realattid=f_gjmv4m9i0&zw
ஒரு படைப்பாளிக்கு பெரிய சந்தோஷமே தான் மக்களால் அங்கீகரிக்கப்படுகிறோம் என்ற உணர்வுதான்.ஒவ்வொருவரும் எழுதுவதும்,படைப்பதும் இந்த அங்கீகாரத்துக்குத்தான். அதனால் கிடைக்கும் வருமானம் தனி சந்தோஷம் என்றாலும் இந்த அங்கீகாரம்தான் சிறந்தது என்பேன்.

நான் முதன் முதலாக பிளாக் உலகில் வரும்போது கவனித்த இருவர் கேபிள் சங்கரும், கவிதைக்காதலரும்.பதிவுலகின் ரஜினி என போற்றப்படும் சங்கர் சினி ஃபீல்டில் ஆல்ரெடி எண்ட்டர் ஆகி விட்டார்.நம்ம கவிதைக்காதலன் தபு சங்கருக்கு இணையான கவிதைத்திறம் மிக்கவர். அவரது கவிதைகளில் காதல் ரசம் சொட்டும்.

நான் அவர் பிளாக்கில் கமெண்ட் போடும்போதே நீங்கள் சினி ஃபீல்டில் நுழையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கமெண்ட் போட்டேன்.அது உண்மையாகி விட்டது. கந்தகோட்டை என்ற படத்தை எடுத்த எஸ் சக்திவேல் என்ற இயக்குநர் எடுக்கும் உயிரைத்தொலைத்தேன் படத்தில் 2 பாடல் எழுதுகிறார். அதை விட பெரிய விஷயம் டைட்டிலில் ,போஸ்டரில் அவர் பெயர் வருகிறது. ( மணிகண்டவேல்)

இதில் என்ன பெருமை என கேட்பவர்களுக்கு. சினி ஃபீல்டில் அவ்வளவு சீக்கிரம் டைட்டிலில் பெயர் போட விட மாட்டார்கள்.முதல் படத்திலேயே அவர் பெற்ற இந்த வாய்ப்பும் ,பெருமையும் நம்மை பெருமை கொள்ள வைக்கிறது.

நேற்றே இறந்து விட்டேன்  என்ற கவிதையை பார்த்து இயக்குநர் இந்த வாய்ப்பு கொடுத்தாராம்.பலர் ஸ்டூடியோ ஸ்டூடியோவாக அலைந்து வாய்ப்பு கேட்டும் கிடைக்காத வாய்ப்பு பதிவு போட்டே இவருக்கு கிடைத்தது ஒரு பதிவர் என்ற முறையில் நம்மை எல்லாம் பெருமை கொள்ள வைக்கிறது.

ஒரு திறமைசாலி அடையாளம் காணப்பட்டால் அது நமக்கு பெருமை. அதே திறமைசாலி நம் நண்பன் என்றால் அந்த பெருமிதம் இரட்டிப்பு ஆகிறது.நமக்கு பதிவு போட மேலும் ஊக்குவிப்பாக இவரது முன்னேற்றம் அமைகிறது.

எனவே இவரது வெற்றியை நமது வெற்றியாக கொண்டாடுவோம்.வாழ்த்துவோம். அவரது ஃபோன் நெம்பர் 9043194811,வயது 24, இன்னும் மணமாகாதவர்.. எனக்கு அண்ணன் மாதிரி..ஹி ஹி

அவரது மெயில் ஐ டி [email protected]

வாழ்த்துங்கள்..