Monday, June 01, 2020

DIA - சினிமா விமர்சனம் ( கன்னடம்) எ ஃபீல் குட் மூவிDIA - சினிமா விமர்சனம் ( கன்னடம்)  எ ஃபீல் குட் மூவி

 தடுக்கி விழுந்தால் காதல் கதைகளாகப்பார்த்து பார்த்து சலித்து விட்டோம், ஆனாலும் மவுனராகம், இயற்கை  மாதிரி மனதைத்தொடும்  காதல் திரைக்கதை படங்கள் எப்போதும் நம் மனதை விட்டு அகல்வதில்லை. படம் பார்த்து பல நாட்களுக்கு மனதை பாதிக்கக்கூடிய அளவு நெருக்கமான திரைக்கதை அமைப்புதான் 2020   பிப்ரவரி  7 ம் தேதி ரிலீஸ் ஆன இந்த கன்னடப்படம்  அதிரி  புதிரி ஹிட்


இதயம்  முரளி மாதிரி தன் மனசில் உள்ள காதலை வெளிப்படையாக சொல்ல முடியாமல் தயங்கும் கேரக்டர் நாயகி. கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவனை பார்த்த உடனே மையல் கொள்கிறார். ஆனா வெளில சொல்ல தயக்கம் திடீர்னு  அவருடைய மனம் கவர்ந்த மாணவர் கொரியா போய்டறார்.  3 வருசம் கழிச்சு திடீர்னு ஒரு நாள் நாயகி தன் அபார்ட்மெண்ட்க்கு எதிரிலேயே அந்த மாணவர் குடி வந்ததைப்பார்க்கிறார்.

அப்புறம் என்ன? இருவருமே மனசுக்குள் காதலித்து வெளியே சொல்லாமல் விட்டதை இப்போது உணர்கிறார்கள் . இருவரும் தங்கள் அனபை பகிர்ந்து கொள்கிறார்கள். வாழ்க்கைல நாளை  என்ன ஆச்சரியம் அல்லது அதிர்ச்சி நமக்காக காத்திருக்கும்? என்பது நமக்கு தெரியாது என்ற நியதிப்படி திடீர் என எங்கேயும் எப்போதும் படத்தில் வருவது  போல  இருவருக்கும்  ஒரு சாலை  விபத்து


 நாயகி காயங்களுடன் தப்பிக்கிறாள், ஆனால் நாயகன்..... 


 சோகம் தாங்காமல் நாயகி  மனம் விரக்தி அடைந்து தற்கொலைக்கு  முயல்கிறாள்.  பின் மனம் மாறுகிறாள்கோடை வெய்யில் காலம்  மே மாதம் முடிந்ததும் ஜூன் மாதம் பருவ மழைக்காலம் ஆரம்பிப்பது போல அவள் வாழ்வில்  இன்னொருவன் நண்பனாக அறிமுகம் ஆகிறான். பலவீனமான நிலையில் இருக்கும் கொடி அருகில் இருக்கும் மரத்தில் படர்வது போல  இருவருக்கும் நட்பு இறுக்கம் ஆகிறது. அவன் ப்ரப்போஸ் பண்ண முயல்கையில் வாழ்வில் ஒரு முறை பட்டதே போதும், இனி காதல் வேண்டாம், நட்பு மட்டும் என சொல்லி விடுகிறாள் 


உதடு சொல்வது வேறு , உள்ளம் நினைப்பது வேறு என்று அவள் உணர ஆரம்பிக்கும்போது இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. 

விதி  ஒரு சதுரங்க விளையாட்டு மாதிரி . ராஜாவுக்கு செக் வைப்பது யார் வேண்டுமானாலும் இருக்கலாம். இறந்ததாக நாயகி நினைத்த கல்லூரி காதலன் உயிருடன் வந்து திருமண ஏற்பாட்டை செய்கிறான்

 இரு தலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கும் நாயகி  என்ன முடிவு எடுத்தாள்? புதிய  காதலன்  என்ன முடிவு எடுத்தான்? விதி என்ன முடிவு எடுத்தது? எல்லாம் திரையில் காண்க . 


தமிழ் ல வந்த சொல்லாமலே சசி இயக்கிய பூ படம்  போலவும் ,  மலையாளத்தில் வந்த ஜூன் படம் போலவும் நாயகியின் கண்ணோட்டத்தில் கதை செல்கிறது 

நாயகியா  வரும் குஷி ( பேரே குஷிதான் ) அபாரமான முக  பாவனைகள் ,  பாந்தமான உடல் மொழி என கவர்கிறார். ஒரு நல்ல நடிகை சிரிக்கும்போது மட்டுமல்ல அழும்போதும் அழகாக இருக்கனும் என்ற திரை இயல் படி அழும்போதும் அல்லி மலர் போல மிளிர்கிறார் . சோக காட்சிகளில் அவர்  கன்னம் , உதடு எல்லாம் துடிக்கிறது , நடிக்கிறது 


கல்லூரி கால காதலராக வருபவருக்கு அதிக வாய்ப்பில்லை , ஆனா 2வது நாயகனாக வரும்  ப்ரித்திவ் அம்பார்   இயல்பான நடிப்பு , நம்ம ஊர் மோகன் மாதிரி . அவருக்கும் , அவரது அம்மாவுக்குமான பாண்டிங் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது

இயக்கம்  கே எஸ் அசோகா . அருமையான ஒளிப்பதிவு கை கொடுத்திருப்பதால் காட்சிக்கு காட்சி அழகோவியம் போல திரைக்கதை நகர்கிறது 


க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்  எதிர்பாராதது 

Kushee Ravi (Actress) Wiki, Biography, Age, Family, Images, Movies
சபாஷ் இயக்குநர்

1  ஓவியம் மாதிரி அழகுடன் இருக்கும் நாயகி ஓவியம் வரையும் மாணவனிடம் காதல் கொள்வது சாலப்பொருத்தம். நாயகனுக்குத்தெரியாமல நாயகி அவரை ஃபாலோ பண்ணுவது , பம்முவது என ஆரம்பக்கட்ட அமர்க்களங்கள் அட்டகாசம்

2   கல்லூரிக்காதலன் ரோகித்தை  நாயகி தியா முதன் முதலில் பார்க்கும்போது  கம்ப்யூட்டர் கிராஃபிக்சில் அவர் இதயத்தை எக்ஸ்ரே எடுத்து துடிப்பது  போல் காட்டியது கவிதை 


3  எதிர் எதிர் அபார்ட்மெண்ட்டில் தங்கி இருக்கும் நாயகன் நாயகி இருவரும் ஒருவருக்கொருவர் அறியாமல் அவரவர் வீட்டு கதவு சாவி துவாரம் வழியாக நோட்டம் விட்டு வெளியே கிளம்புவது  காதலிசம்


4  இரண்டாவது காதலன் தியா ஸ்வரூப் எனும் நாயகியின் பெயரை  தியா சூப் என ஒவ்வொரு டைம் சொல்லும்போதும் காதல் குறும்பு கொப்புளிக்கிறது நாயகியிடம் அவர் வணக்கம் வைக்கும் ஸ்டைலும் அதகளம்  

நச்  டயலாக்ஸ் 


1   காதல் வந்த பின் பொறாமையும் கூடவே வந்துடுது 


2  எல்லாருமே  ஓவியத்தை  ரசிக்கறாங்க . நாம ஓவியனை ரசிக்கிறோம், மத்தவங்க ஓவியனை ரசிக்கும் முன் நாம அந்த ஓவியத்தை சுட்டுட்டா என்ன? 


3   உங்களால சரியா தூங்க முடியலைன்னா  யாரோ ஒருவர் கனவில்  வந்துட்டு இருக்க்கீங்கனு அர்த்தம் 

 அது உண்மையா இருந்தா உங்களால ஒரு நாள் கூட தூங்க முடிஞ்சிருக்காதே?

4   இந்த  உலகத்தில் இருக்கற எல்லாப்பெண்களையும் மறக்கடிக்கற   ஒரு பொண்ணு இருக்கா , அவ தான்  நீ

5  ஒரு உள்ளங்கை தொடுகை என்பது 1000 வார்த்தைகளுக்கு சமம்


6  நீ செய்யறதெல்லாம் பார்த்தா குழந்தைத்தனமா இருக்கு , ஆனா நல்லா எஃபக்டிவா இருக்கு, ஐ லைக் இட் 


7  ஒவ்வொரு மனுசனும் தூங்கும்போது அப்பாவியாதான் தெரிவான்

8 பிரச்சனைகளும் , வலிகளும் எல்லார் வாழ்க்கைலயும் இடம் பெற்றிருக்கும் , அதனால அதை ஏத்துக்க கத்துக்கனும்


9   வாழ்க்கைல பிரச்சனை வரும்போது மலைச்சுப்போகக்கூடாது , அதை எப்படி சால்வ் பண்றதுன்னுதான் யோசிக்கனும்

10   தற்கொலைக்கு முயலும்போது காட்ற  தைரியத்தை   வாழ்வதிலும்  காட்டலாமே? 

11  எல்லா நல்ல விஷயங்களும் ஒரு நாள் முடிவுக்கு வரும். அதுக்கான மன பக்குவத்தை நாம வளர்த்துக்கனும்


12   என்  ஒருத்தனால உங்க 2 பேர் வாழ்க்கை பாதிக்கப்படுவதை  விட உங்க  2 பேருக்காக என் ஒருத்தன் வாழ்க்கை பாதிக்கப்படறது தப்பில்லை 


 லாஜிக் மிஸ்டேக்ஸ் 

1   கல்லூரிக்காதலன் இறந்து விட்டான் என நாயகியின் அப்பா சொன்னதும் கோமா நிலையில் உள்ள நாயகனைக்கண்ட நாயகி  அப்பாவிடம் காதலனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள அடம் பிடிக்காதது ஏன்?


2  க்ளைமாக்ஸ் சீனில் மேரேஜ் ரிசப்ஷனில் நாயகியின் கலங்கிய முகத்தைக்கண்டும் கல்யாண மாப்பிள்ளைக்கு சந்தேகம் வராதது ஏன்?


  சி.பி கமெண்ட் = காதலை நேசிப்பவர்கள்  மிஸ் பண்ணக்கூடாத படம் 0 comments: