Sunday, April 14, 2013

30 வகை சைட் டிஷ் ரெசிபி

கல்யாணத்துக்கு ஜோடிப் பொருத்தம் அமைவது போல, சாப்பாட்டுக்கு 'சைட் டிஷ் பொருத்தம்’ அமைவதும் ரொம்பவே அவசியம். காலையில் எழுந்த உடனேயே, 'இன்னிக்கு என்ன சைட் டிஷ் பண்றது’ என்று கவலையோடு யோசிக்க ஆரம்பிப்பவர்கள் ஏராளம். இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவ... சமையல் கலை நிபுணர் உஷாதேவி, தனது சமையல் ஞானத்தை தீவிரமாக பயன்படுத்தி, அலசி ஆராய்ந்து '30 வகை சைட் டிஷ்’ ரெசிபிகளை இங்கு வாரி வழங்கியிருக்கிறார்.


''சாதம், இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, நாண் என்று எல்லாவற்றுடனும் சாப்பிடுவதற்கு விதம்விதமான சைட் டிஷ்களை கொடுத்திருக்கிறேன். இவற்றை செய்து பரிமாறினால், இந்தக் கோடையிலும் நீங்கள் பாராட்டு மழையில் நனையலாம்'' என உற்சாகம் பூரிக்க சொல்கிறார் உஷாதேவி.
காரைக்குடி பேபிகார்ன் ஃப்ரை
தேவையானவை: பேபிகார்ன் - கால் கிலோ, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - தேவைக்கேற்ப, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், கடலை மாவு, அரிசி மாவு - தலா ஒரு டீஸ்பூன்,  பெரிய வெங்காயம், பெரிய தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள், கரம்மசலாத்தூள் - தேவைக்கேற்ப, தனியாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், செட்டிநாடு பவுடர் (டிபர்ட்மென்ட் கடைகள் கிடைக்கும்) - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு,
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, கழுவிய பேபிகார்னை போட்டு 2 நிமிடம் வரை வைத்து பின் தண்ணீரை வடிகட்டி எடுத்து கார்னை நீளவாக்கில் 'கட்’ செய்யவும். ஒரு தட்டில் குறிப்பிட்ட அளவு மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது சிறிதளவு சேர்த்து, இதில் நறுக்கிய பேபி கார்னை சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசிறிக் கொள்ளவும். பேபி கார்னை வறுப்பதற்கு முன் கடலை மாவும், அரிசி மாவும் தூவி பிசிறி, நன்கு காய்ந்து கொண் டிருக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித் தெடுத்து தனியே வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு சேர்த்து பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். பிறகு இதில் மீதம் இருக்கும் இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி... மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், செட்டிநாடு பவுடர், நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கி, பின் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு இதனுடன் வறுத்த கார்னை சேர்த்து சிறிது நேரம் வதக்கி... இறக்கும்போது கொத்தமல்லி, வறுத்த கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
இது சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிடுவதற்கு ஏற்ற சைட் டிஷ்.

கோவைக்காய் வறுவல்
தேவையானவை: கோவைக்காய் - கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கவும்), மஞ்சள்தூள் - கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப, சீரகக்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி... மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு, கறி வேப்பிலை சேர்த்துப் பிசிறி    5 நிமிடம் வைக்கவும். அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசிறி வைத்த கோவைக்காயை போட்டு சில நிமிடங்கள் அதிக தீயில் வைத்து மூடிவிடவும். பிறகு, தீயை மிதமான சூட்டில் வைத்து நன்கு வதக்கி, வெந்தவுடன் இறக்கவும்.
இதை தயிர்சாதம், சாம்பார்சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட... சுவை சூப்பராக இருக்கும்.

வெஜ் குருமா
தேவையானவை: கேரட் - 2, உருளைக்கிழங்கு, நூக்கல் -   தலா ஒன்று, பீன்ஸ் - 10 பச்சைப் பட்டாணி - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - ஒன்று, பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 5 பல், ஏலக்காய் - 3, பட்டை, பிரிஞ்சி இலை - தலா ஒன்று, லவங்கம் - 5, தேங்காய் - அரை மூடி, முந்திரி - 10, தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், கசகசா, பொட்டுக்கடலை -  தலா 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேரட், உருளைக்கிழங்கு, நூக்கல், பீன்ஸ் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் சேர்த்து அரைக்கவும்.  ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை, லவங்கம் ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடி செய்யவும். தேங்காயுடன் முந்திரி, தனியா, கசகசா, பொட்டுக்கடலை சேர்த்து நைஸாக அரைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து, காய்ந்ததும் சோம்பு சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறம் ஆகும் சமயம் பச்சை மிளகாய் - இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை சிறு தீயில் வதக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, பொடி செய்த மசாலா, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு நறுக்கிய காய்கறி, பச்சைப் பட்டாணி சேர்த்து மறுபடியும் வதக்கவும். இப்போது அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் (உப்பு போதவில்லை என்றால் சிறிது போட்டுக் கொள்ளவும்). கொதி வந்தவுடன் குக்கரை மூடி வேக வைக்கவும். வெந்ததும் திறந்து நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
இட்லி, சப்பாத்தி, புரோட்டாவுக்கு சைட் டிஷ் ஆகவும், சாதத்துடன்  சேர்த்து சாப்பிடவும் சிறந்தது இந்த குருமா.

பீட்ரூட் பொரியல்
தேவையானவை: பெரிய சைஸ் பீட்ரூட், பெரிய வெங்காயம் - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 2  சர்க்கரை - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.  
செய்முறை: பீட்ரூட், பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பீட்ரூட், பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து குக்கரில்  கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு சேர்த்து, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம்,  கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் வேக வைத்த பீட்ரூட் கலவையை சேர்த்து, தண்ணீர் வற்றியதும் சர்க்கரை சேர்த்து வதக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர் விட்டு, மறுபடியும் கெட்டியாகும் வரை வதக்கி இறக்கவும்.
இந்தப் பொரியல்... சாதம், வெரைட்டி ரைஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ்.

வாழைக்காய் சிப்ஸ்
தேவையானவை: வாழைக்காய் - 2 (தோல் சீவி வைக்கவும்), மஞ்சள்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தோல் சீவிய வாழைக்காயை நேரடியாக கடாயில் சிப்ஸ்களாக சீவவும். இவ்வாறு செய்வதால் சிப்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வெள்ளையாக... அதே சமயம், மொறுமொறுப்பாகவும் இருக்கும். வாழைக்காயை சீவும்போது அடுப்பை சிறு தீயிலும், பின்பு அதிகமாவும் வைத்து வறுத்தெடுக்க வேண்டும். ஒரு கப்பில் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கலக்கி வைக்கவும் (விருப்பப்பட்டால் சிறிதளவு கறுப்பு உப்பு, சாட் மசாலாவை சேர்க்கலாம்). ஒவ்வொரு முறை சிப்ஸ் வறுத்தெடுக்கும்போதும் இந்தப் பொடியை தூவவும். கடைசியாக கறிவேப்பிலை வறுத்துப் போட்டு பரிமாறவும்.
இது வெரைட்டி ரைஸ்களுக்கு தொட்டுக்கொள்ள சிறந்தது.

குடமிளகாய் சட்னி
தேவையானவை: குடமிளகாய் பெரியது - ஒன்று, சின்ன வெங்காயம் - 100 கிராம், பச்சை மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), தக்காளி சிறியது - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,  புளி - எலுமிச்சை அளவு, கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு - தாளிக்க தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு சிறிய குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குடமிளகாயை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும். புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் அடி கனமான கடாயை வைத்து நல்லெண்ªணய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு சேர்த்து, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு, அதன்பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் குடமிளகாய், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் வதக்கிய பின் தக்காளி சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்கி, பின்னர் புளிக் கரைசலை  சேர்த்து... எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கி இறக்கவும்.
இதை உப்புமா, பொங்கல், தயிர் சாதம், வெறும் சாதத்துடன் சாப்பிடலாம்.

முட்டைகோஸ் சட்னி
தேவையானவை: முட்டைகோஸ் - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), புளி - சிறிய நெல்லிக்காய் அளவு அல்லது தக்காளி - 3, சின்ன வெங்காயம் - 10, உளுத்தம்பருப்பு  - - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, சூடாக்கி உளுத்தம்பருப்பை சேர்க்கவும். அது பொன்னிறம் ஆகும் சமயம் நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ், காய்ந்த மிளகாய், சேர்த்து நன்கு வதக்கவும். முட்டைகோஸ் பச்சை வாசனை போனதும்... புளி,உப்பு, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும் (புளிக்கு பதில் தக்காளி விரும்புபவர்கள் இச்சமயத் தில் நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்). பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, ஆற விட்டு, மிக்ஸியில் அரைக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்து, இதனு டன் சேர்த்துக் கலக்கவும்.
இந்த சட்னியை சப்பாத்தி, இட்லியுடன் பரிமாறலாம்.

வடைகறி
தேவையானவை: கடலைப்பருப்பு - 150 கிராம், பெரிய வெங்காயம் - 2 , பெரிய தக்காளி - ஒன்று, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 5, லவங்கம், பட்டை, ஏலக்காய் - தலா 2, பிரிஞ்சி இலை - ஒன்று, சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - விருப்பத்திற்கேற்ப, பொட்டுக்கடலை மாவு - 3 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளியை நறுக்கி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி இந்தக் கலவையை வைத்து இட்லி போல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, சிறிது நேரம் வதக்கியவுடன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறவும். பிறகு அரைத்த தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கொதி வந்தவுடன், வேக  வைத்த கடலைப்பருப்பை ஒன்றிரண்டாக உதிர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி சிறிது நேரம் கொதிக்கவிடவும். கடைசியில் பொட்டுக்கடலை மாவை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
இதை இட்லி, தோசை, ஆப்பத்துடன் பரிமாறலாம்.

வாழைப்பூ கோலா உருண்டை
தேவையானவை: வாழைப்பூ - ஒன்று, சின்ன வெங்காயம் - 100 கிராம், பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப, இஞ்சி -    பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பொட்டுகடலை மாவு - 250 கிராம், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, வெள்ளை எள் அல்லது கசகசா - 100 கிராம், முந்திரி - 10, புளித்த மோர் - ஒரு கப், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து, நடுவில் உள்ள நரம்பு நீக்கவும். கொஞ்சம் தண்ணீரில் புளித்த மோரை ஊற்றி கலக்கி அதில் ஆய்ந்த எல்லா வாழைப்பூவையும் போடவும். பிறகு வடிகட்டி உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து, நீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு இதை மிக்ஸியில் ஒன்றிண்டாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மிகவும் பொடி யாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பு, ஒன்றிரண்டாக அரைத்த வாழைப்பூ சேர்த்துப் பிசையவும். இதில் பொட்டுக்கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். உருட்டும் பதத்தில் வந்ததும் பொட்டுக் கடலை மாவு சேர்ப்பதை நிறுத்திவிட வேண்டும். பின்னர் இதனை எள்ளிலோ அல்லது கசகசாவிலோ உருட்டி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைபடும்போது எண்ணெயை நன்கு காயவைத்து அதில் இந்த உருண்டைகளை போட்டு சிறிது நேரம் கிளறாமல் விட்டு, நன்கு வெந்தவுடன் இறக்கவும்.
இது, காய்கறி பிரியாணி மற்றும் சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

ஆலு புக்காரா
தேவையானவை: பேபி உருளைக்கிழங்கு - ஒரு பாக்கெட், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, பெரிய வெங்காயம் - 150 கிராம், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், முந்திரிப் பருப்பு விழுது - 3 டேபிள்ஸ்பூன், வெண்ணெய், கிரீம் (விருப்பப்பட்டால்) - தலா 2 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பேபி உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுத்து ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி - பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாயை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் அரைத்த வெங்காய விழுது, முந்திரி விழுதை சேர்த்து வதக்கவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து... அதனுடன் சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், வறுத்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்க்கவும். குழம்பு பதம் வந்தவுடன், விருப்பப்பட்டால் வெண்ணெயும், கிரீமும் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்க வைத்து, கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சப்பாத்தி, நாண் ஆகியவற்றுக்கு இது சூப்பர் சைட் டிஷ்.

மூலிகை சட்னி
தேவையானவை: வல்லாரைக் கீரை - (ஆய்ந்தது), புதினா இலை - தலா ஒரு கப், கொத்தமல்லி இலை - அரை கப், கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம் - 10,  கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லி, புதினா, கறிவேப் பிலை, வல்லாரைக் கீரை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, ஆறிய வுடன் உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக் கவும்.
சப்பாத்தி, சமோசாவுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் இந்த சட்னி.

பகரா பேங்கன்
தேவையானவை: கத்திரிக்காய் - கால் கிலோ, தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, வெங்காயம் - 100 கிராம், தனியா - 3 டீஸ்பூன், எள்,  சீரகம் -  தலா 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப, வேர்க்கடலை - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 5 பல், எண்ணெய், சீரகம் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் தனியா, எள், வேர்க்கடலை, சீரகம், மிளகு, முந்திரியை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் சேர்த்து நைஸாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். இதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, நறுக்கிய தக்காளி போட்டு வதக்கி...  தேங்காய் துருவல் சேர்த்து மேலும் வதக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து வதக்கி... உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு புளிக்கரைசல், அரைத்த மசாலா பொடி, மசாலா விழுது சேர்த்து வதக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து, கத்திரிக் காயுடன் சேர்த்து, எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கவும்.
இது... சப்பாத்தி, இட்லியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

ஸ்வீட் கார்ன்  பனீர் கோஃப்தா
தேவையானவை: ஸ்வீட் கார்ன் - 100 கிராம், பனீர் - 50 கிராம், உருளைக்கிழங்கு - 2,  முந்திரிப் பருப்பு - 10, முந்திரி விழுது - சிறிதளவு, தக்காளி விழுது - 100 கிராம், மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப, வெங்காயம் - 2, சோம்பு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மைதா -  2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லி இலை - சிறிதளவு, இஞ்சி - பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் ஸ்வீட் கார்னை போட்டு ஐந்து நிமிடத்துக்குப் பிறகு எடுத்து, தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். பனீரை உதிர்த்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மூன்றையும் ஒன்றாக சேர்த்து... அதனுடன் உப்பு, சோம்பு, நறுக்கிய பச்சை மிளகாய் சிறிதளவு, உடைத்த முந்திரி, கொத்தமல்லி இலை, மைதா, கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக ஆகும் வரை வதக்கி... இஞ்சி - பூண்டு விழுது, மீதமுள்ள பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தக்காளி விழுது, உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகு, முந்திரி விழுதையும் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததும் பொரித்து வைத்திருக்கும் உருண்டைகளை சேர்க்கவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
இதை புலாவ், சாதம், சப்பாத்தி, நாண் ஆகியவற்றுக்கு சைட் டிஷ்ஷாக பரிமாறலாம்.

வாழைக்காய் சட்னி
தேவையானவை: வாழைக்காய் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 8, பெரிய வெங்காயம் - ஒன்று, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - ஒரு பல், தக்காளி - 2, புளி - சிறிதளவு, சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைக்காயை வேக வைத்து, தோலுரித்து, கட்டியில்லாமல் பிசைந்து வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, சோம்பு ஆகியவற்றை ஒன்றுசேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து... நறுக்கிய பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் இதில் நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அரைத்த மசாலா விழுது, மசித்த வாழைக்காய் போட்டு வதக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கி, எண்ணெய் தெளிந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
இதை... இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.

உருளைக்கிழங்கு மசாலா
தேவையானவை: உருளைக்கிழங்கு - கால் கிலோ, தேங்காய் துருவல்  - ஒரு கப் (பால் எடுக்கவும்), காய்ந்த மிளகாய் - 5, தனியா - 2 டீஸ்பூன், முந்திரி - 10, வெங்காயம் - ஒன்று, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு -  தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை கழுவி, குக்கரில் வேக வைத்து, தோலுரித்து நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாய், தனியா, முந்திரியுடன் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டு, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும். பிறகு தேங்காய்ப் பால், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து... கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு போட்டு எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

கடாய் பனீர்
தேவையானவை: பனீர் - கால் கிலோ, குடமிளகாய், வெங்காயம், தக்காளி - தலா 2, சோம்பு - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.  
மசாலா பொடி தயாரிக்க: காய்ந்த மிளகாய் - 5, தனியா - 2 டீஸ்பூன், லவங்கம், பட்டை, ஏலக்காய் - தலா 2, சோம்பு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: மசாலா பொடி தயாரிக்க  கொடுத்துள்ளவற்றை வறுத்து ஒன்றிரண்டாக பொடி செய்து கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய ஒரு வெங்காயம், நறுக்கிய 2 குடமிளகாய், பனீரை தனித்தனியே வதக்கி எடுத்து கொள்ளவும். பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சோம்பு போட்டு தாளித்து... பொடியாக நறுக்கிய மற்றொரு வெங்காயத்தை நன்கு வதக்கி,  இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, நறுக்கிய தக்காளி, மசாலா பொடியை போட்டு வதக்கி, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, அதனுடன் வதக்கி வைத்திருக்கும் பனீர், வெங்காயம், குடமிளகாய் சேர்த்து மேலும் வதக்கி... எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.
இது... சப்பாத்தி, நாண் ஆகியவற்றுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

பப்பாளி சாலட்
தேவையானவை: பப்பாளி - ஒன்று (செங்காய் பதத்தில் தேர்வு செய்யவும்), முளைகட்டிய பச்சைப் பயறு - 50 கிராம், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, கொத்தமல்லி - சிறிதளவு,  தேன் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பப்பாளியை 'கட்’ செய்து இட்லி குக்கரில் வேக வைத்து எடுக்கவும். பின்னர் முளைகட் டிய பச்சைப் பயறையும் வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தேன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, சுத்தம் செய்து நீளமாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக் கிய கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வேக வைத்த பப்பாளி மற்றும் பச்சைப் பயறு சேர்த்துக் கிளறி, அப்படியே பரிமாறவும்.

சேப்பங்கிழங்கு சாப்ஸ்
தேவையானவை: சேப்பங்கிழங்கு - அரை கிலோ, வெங்காயம், பச்சை மிளகாய் - தலா 2, கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு, கசகசா - 3 டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், முந்திரி - 10, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் அல்லது கறி பவுடர் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேப்பங்கிழங்கை கழுவி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து, தோலுரித்து நீளமாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் எண்ணெயை காய வைத்து நறுக்கிய கிழங்கை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு சிவக்க வறுத்து எடுத்து, அதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்க்கவும். கடாயில் கசகசா, சோம்பு, முந்திரி போட்டு வறுத்து, மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
கடாயில் கொஞ்சம் அதிகமாக எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காய விழுதைப் போட்டு நன்கு வதக்கி, அதனுடன் ஒன்றன் பின் ஒன்றாக இஞ்சி - பூண்டு விழுது, கசகசா பொடி, கரம் மசாலாத்தூள் அல்லது கறி பவுடர் சேர்த்து நன்கு வதக்கி (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்), வறுத்த சேப்பங்கிழங்கை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இதனை புலாவ், சாம்பார் சாதத்துடன் சாப்பிட... சுவை அசத்தலோ அசத்தல்!

தயிர் வெண்டைக்காய்
தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, தக்காளி - ஒன்று, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, வெங்காயம் - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு கப், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: வெண்டைக்காயை கழுவி துடைக் கவும். பின்னர் நடுவில் கீறி விதையை எடுத்து விடவும். தட்டில் சிறிதளவு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். இந்த கலவையை கீறிய வெண்டைக் காயில் தடவவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மசாலா தடவிய வெண்டைக்காயை போட்டு, சிறு தீயில் வதக்கி, வெந்தவுடன் எடுத்து தனியே வைக்கவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி, மீதமுள்ள கரம்மசாலா, மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள், மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பிறகு, வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய் சேர்த்து... தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி, தீயை அணைத்து, தயிரை நன்கு அடித்து இதில் சேர்த்து கலந்து, மறுபடியும் அடுப்பில் வைத்து சிறுதீயில் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, கொத்தமல்லி தூவவும்.
இதை சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

பீர்க்கங்காய் கொத்சு
தேவையானவை: பீர்க்கங்காய் - அரை கிலோ, புளி - நெல்லிக்காய் அளவு, பச்சை மிளகாய் - 3, சின்ன வெங்காயம் - 10, கடுகு - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பீர்க்கங்காயை தோல் சீவி நறுக்கி உப்பு, மஞ்சள்தூள், பச்சை மிளகாய் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு தாளித்து, புளிக்கரைசலை சேர்க்கவும். அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மிளகுதூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி.... சாதத்துடன் பரிமாறவும்.

உருளைக்கிழங்கு ஸ்டூ
தேவையானவை: உருளைக்கிழங்கு - கால் கிலோ, பச்சை மிளகாய் - 3, தேங்காய் - அரை மூடி, இஞ்சி - சிறிதளவு, மிளகுத்தூள்  - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை கழுவி, தோல் சீவி நறுக்கவும். தேங்காயை துருவி கொஞ்ச மாக தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து பால் எடுத்து தனியே வைக்கவும். மறுபடியும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்தால் இரண்டாவது பால் கிடைக் கும். இந்த தேங்காய்ப் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, நறுக்கிய உருளைக்கிழங்கு, உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி போட்டு வேக வைக்கவும். வெந்த உருளைக்கிழங்கை மசித்து... கீறிய பச்சை மிளகாய், மிளகுத்தூள் சேர்த்து  கொதிக்கவிடவும். இறக்கு வதற்கு முன் முதல் தேங்காய்ப் பாலை ஊற்றி, கொதி வரும் போது இறக்கிவிடவும்.
இதனை இட்லி, இடியாப்பத்துடன் சாப்பிடலாம்.

மாங்காய் பச்சடி
தேவையானவை: மாங்காய் - அரை கிலோ, பச்சை மிளகாய் - 6 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), வெங்காயம் - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, சர்க்கரை - 50 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பு சேர்த்து, சிவந்தவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அதில் நறுக்கிய மாங்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின்னர் தண்ணீர் சேர்த்து மூடி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். ஆறியவுடன் மசித்து, சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

பூண்டு சட்னி
தேவையானவை: பூண்டுப் பல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - தேவைக்கேற்ப, புளி - எலுமிச்சை அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் கொஞ்சம் எண்ணெயை விட்டு, காய்ந்ததும் பூண்டு சேர்த்து  வதக்கி, அதனுடன் புளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்கு வதக்கி ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். பின்னர் மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் சட்னியில்  சேர்க்கவும்.
இதை இட்லி, தோசை, தயிர் சாதத்துக்கு தொட்டு சாப்பிடலாம்.

அவியல்
தேவையானவை: முருங்கைக்காய், கேரட், வாழைக்காய் - தலா ஒன்று, பீன்ஸ் - 5, சேனைக்கிழங்கு - 100 கிராம், பச்சை மிளகாய் - 5, சீரகம் - இரண்டு டீஸ்பூன், தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்), தயிர் - ஒரு கப்,  பூண்டு - 3 பல், கடுகு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முதலில் காய்கறிகளைக் கழுவி, ஒன்று போல் நறுக்கி, பாத்திரத்தில் போட்டு, அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு வேக வைத்து எடுக்கவும். தேங்காய் துருவலுடன், பூண்டு, பச்சை மிளகாய், சீரகம், சேர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த விழுதைப் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு வெந்த காய்கறிகளையும் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, தயிர் சேர்த்துக் கிளறவும்.
இதனை ஆப்பம், தோசை, சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

மஷ்ரூம் ரெட் கறி
தேவையானவை: மஷ்ரூம் - 100 கிராம், பேபிகார்ன் அல்லது பனீர் - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 10, வெங்காயம் - 2, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 10 பல், தேங்காய்ப் பால் - 2 கப், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் தண்ணீர் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, ஒரு கொதி வந்தவுடன் வெங்காயத்தை எடுத்து, இஞ்சி - பூண்டுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி மிளகாயை ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அரைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின்னர் அதனுடன் அரைத்த மிளகாயை சேர்த்து நன்கு வதக்கி, மஷ்ரூம் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, தேங்காய்ப் பால், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். அதனுடன் நறுக்கிய பேபிகார்ன் அல்லது வறுத்த பனீரை சேர்த்து எல்லாம் வெந்தவுடன் இறக்கவும்.
இதை... சாதம், புலாவ் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.

பருப்பு தண்ணி மசாலா
தேவையானவை: கடலைப்பருப்பு - 100 கிராம், வெங்காயம் - 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தக்காளி, பச்சை மிளகாய் - தலா 2,  சோம்பு, சீரகம் -  ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், கறி பவுடர் - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து.... பருப்பு தண்ணீரை தனித்தனியாக எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நீளமாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். தக்காளியை நெருப்பில் சுட்டு தோலுரித்து அதையும் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, இஞ்சி - பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய்தூள், தனியாத்தூள், கறி பவுடர் சேர்த்து வதக்கி, அரைத்த தக்காளி விழுதைப் போட்டு நன்கு எண்ணெய் தெளிய வதக்கவும். பிறகு உப்பு சேர்த்து, பருப்பு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு, வெந்த முழு பருப்பு கொஞ்சம் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கி, எலுமிச்சைச் சாறு பிழிந்து கிளறி இறக்கவும்.
இதை சப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

பட்டர்பீன்ஸ் பொரியல்
தேவையானவை: பட்டர் பீன்ஸ் - கால் கிலோ, வெங்காயம் - ஒன்று, முந்திரி - 5, கசகசா, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன், பட்டை, லவங்கம் - தலா ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பட்டர் பீன்ஸை கழுவி குக்கரில் போட்டு, தேவையான  தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் தூவி மூடி இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும். தேங்காய் துருவலுடன் முந்திரி, கசகசா, சோம்பு, லவங்கம், பட்டை, தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி, அரைத்த தேங்காய் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, வேக வைத்த பட்டர் பீன்ஸை தண்ணீருடன் சேர்த்துக் கிளறி, எண்ணெய் பிரிந்து வரும்போது  இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
இது... சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சை டிஷ்.

கீரை கூட்டு
தேவையானவை: சிறுகீரை - ஒரு கட்டு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன்,  பச்சை மிளகாய் - 2, வறுத்த பயத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை  டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் பயத்தம்பருப்புடன் மஞ்சள்தூள், ஆய்ந்தெடுத்து கழுவிய கீரையை போட்டு, கீறிய பச்சை மிளகாயையும் சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ளவும். தேங்காய், சீரகத்தை சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பின்னர் தேங்காய் - சீரக விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கி, வெந்த பருப்பு - கீரையை சேர்த்து, உப்பு போட்டு, கெட்டியானதும் இறக்கவும்.
இது, சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

காளான் வதக்கல்
தேவையானவை: காளான் - ஒரு பாக்கெட், வெங்காயம் - ஒன்று, மிளகு - 2 டீஸ்பூன் (பொடித்துக் கொள்ளவும்),  மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கரம் மசலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 2 பல், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காளானை கழுவி நறுக்கி அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து சிறிது நேரம் வைக்கவும். தேங்காயை கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தட்டிய பூண்டு போட்டு, பின்னர் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, கலந்து வைத்துள்ள காளானை சேர்த்து நன்கு வதக்கவும். காளான் பாதி வெந்த வுடன் அரைத்த தேங்காயை சேர்த்து, உப்பு போட்டு வதக்கவும். சுருள வதங்கியவுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
இதை சாப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம்.

கொத்தமல்லி துவையல்
தேவையானவை: கொத்தமல்லி - ஒரு கட்டு, காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - இரண்டு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் -  இரண்டு டேபிள்ஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெயை காய வைத்து, உளுத்தம்பருப்பு சேர்த்து வறுபட்டவுடன், காய்ந்த மிளகாய், புளி, உப்பு, கழுவிய கொத்தமல்லி இலையை போட்டு வதக்கி, பிறகு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு, வெடித்ததும் கறிவேப்பிலை சேர்த்து, அரைத்து வைத்திருக்கும் விழுதைப் போட்டு நன்கு சுருள வதக்கி இறக்கவும்.
இது... இட்லி, தயிர் சாதம், பிரியாணிக்கு ஏற்ற சைட் டிஷ்.
தொகுப்பு: பத்மினி, படங்கள்: எம்.உசேன்
ஃபுட் டெகரேஷன்: 'செஃப்’ ரஜினி

நன்றி - விகடன்

குஷ்பூ வின் வருசம் 16 இனி வருசம் 18 , ஏன்?

1. நெருப்புடன் விளையாடுகிறது மத்திய அரசு -டி.ஆர் பாலு // தீ தீ தித்திக்கும் தீ.துரத்த துரத்த நெருங்கும்்



-----------------------


2. போலீஸாருக்கு போலி ஆவணம்: மார்ட்டின் மனைவி கைது # ஒரிஜினல் சம்சாரம்தானா?ன்னு நல்லா செக் பண்ணீட்டீங்ளா?


-------------------


3. சஞ்சய் தத்துக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்-ரஜினிகாந்த்#அவரை தியாகி னு யோகி சொல்லிட்டாரு.



--------------------------


4. மணிரத்னம் - ஏன்? 


ரஜினி - என் நண்பன். வெறும் பெயில்.கேட்டேன். தப்பா? # சஞ்சய் தத் சலம்பல்கள்




------------------------


5. சி.பி.ஐ., ரெய்டில் அரசின் பங்கில்லை -- பிரதமர் மன்மோகன் சிங் # பங்கு வேணுமா?



-----------------------


6. சஞ்சய் தத்தை எனக்கு 30 வருஷமாத்தெரியும்.அவர் டெரரிஸ்ட் அல்ல - குஷ்பூ # சுந்தர் சி - தவளையும் என் மனைவியும் 1



------------------------


7. லாட்டரி அதிபர் மார்ட்"டின்"் மனைவி லீமா ரோஸ் கைது # டின் கட்டப்போறாங்க்




-------------------------


8. அழகிரி - ஹூம்.ரெய்டுல கூட எனக்கு 2 வது இடம் தானா? தம்பிக்கு முதல் இடம்




------------------------


9. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில.அழகிரி பண்ணை வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை # நீங்கதான் அழகிரியா? வக்கீல் வந்த பின் தான் பதில் சொல்வேன்


-------------------------


10. தமிழர்கள் இராவணனின் வாரிசுகள் - அத்வானி #ஆசைப்பட்டு கடத்தி வந்த பொண்ணை கடைசி வரை தொடாதவன் அவன்்


--------------------------


11 சிங்களர்கள் அனுமன் வழி வந்தவர்கள்- அத்வானி # இதை அனுமன் கேட்டிருந்தா ஒரு கைல இலங்கை மறுகைல அத்வானி தூக்கி கடல்லபோட்டிருப்பார்



-------------------------


12. 100ஆண்டுபழமையான அரசமரம் விழுந்தது# அரசும் விழப்போகுது மத்தியில்.தலை எழுத்து இத்தாலியின் நெத்தியில்



--------------------------

13. கதைக்கு ஏற்ற கருப்புநிற பெண்ணை தேடி சலித்துப் போய்விட்டேன் -பாலா# கொல்லங்குடி போனா வீட்டுக்கு ஒரு கருப்பாயி





-----------------------------


14. ஸ்டாலின் வீட்டு ரெய்டை நான் எதிர்க்கிறேன் -சிதம்பரம்# ரெய்டுக்கு ஆள் அனுப்புனதே உங்காளுங்கதானே?



-------------------------------


15. ஸ்டாலின் வீட்டுக்கு சிபிஐ ரெய்டு போனது தெரியாது - பிரதமர் # 3 அடி தொலைவில் நமீதாவை நிறுத்துனாக்கூட தெரியாதுன்னுதான் சொல்வார் போல.



-------------------------


16. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்டு # ஆதரவை வாபஸ் வாங்கறதுக்கு முன்னே முத வேலையா எல்லா டாகுமென்ட்சும் ஒளிச்சு வெச்சுட்டோமில்ல?



-------------------------


17. ஓட்டுப்பொறுக்கிகள் நம்மை பொறுக்கி என்பதா?# சுப்ரமணியம்சாமி வரம்பு மீறிய ட்வீட்



--------------------------------


18. பிட்சுக்கள் தாக்குதல் எதிரொலி- கொழும்பில் பிட்சுக்கள் ஆர்பாட்டம் # சன் ஆப் பிட்ச் னு திட்ட வழி இல்ல



-----------------------------


19. செக்ஸ்-க்கான வயது 18 என்பது சரியானதே- குஷ்பூ # அப்போ உங்க முத பட டைட்டில் ஏன் வருசம் 16? வருசம் 18 னு மாத்த சொல்லி இருக்கலாமே




------------------------


20. குதிரை குப்புறத் தள்ளி குழி பறிச்சது- மு க # என்ன அநியாயம் தலைவரே? உங்க வேலையைக்குதிரை செஞ்சிடிச்சு?




------------------------------


21. திமுகவின் விலகல் முடிவை எதிர்பார்க்கவில்லை-ஞானதேசிகன்# நானே எதிர்பார்க்கலை - மு க


--------------------------


22. சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் கருணாநிதி கொடும் பாவி எரிப்பு# விலகுவதால் பாதிப்பு இல்லைன்னு சோனியா சொன்னாங்ளே?




---------------------------------


23. தலைமையின் முடிவே எனது முடிவு:அழகிரி # ஓஹோ.முடிவு னு முடிவே பண்ணீட்டீங்களா? தப்பிக்க வாய்ப்பு இல்லையா?




-------------------------


24. நானும் தமிழன்தான்,எனக்கும் தமிழ் உணர்ச்சி இருக்கு-தங்கபாலு# அப்புறம் ஏன் இத்தாலி கிட்டே அடிமாடா சேர்ந்தீங்க?்





-------------------------------


25. இதற்குப் பிறகும் ஆட்சியில் திமுக நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை - கருணாநிதி# அதான் ஒரு இனமே அழிஞ்சுடுச்சே தலைவா




--------------------------------

Saturday, April 13, 2013

அஞ்சலி அதிரடி பேட்டி -தலைமறைவு ஏன்?

தலைமறைவு ஏன்? நடிகை அஞ்சலி பரபரப்பு தகவல் (படங்கள்)

சென்னை: என்னை யாரும் கடத்தவில்லை, தீவிர மன அழுத்தம் காரணமாகவே வெளியேறினேன் என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார்.

 
கடந்த 7ஆம் தேதி தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் சென்ற நடிகை அஞ்சலி, சித்தி பாரதிதேவியும், இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்துவதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.


இதனிடையே, சித்தப்பா சூரிபாபுடன் ஹைதராபாத்தில் உள்ள  ஓட்டலில் தங்கி இருந்தபோது நடிகை அஞ்சலி திடீரென மாயமானார்.  இது குறித்து அஞ்சலியின் சகோதரர் ரவி சங்கர் ஹைதராபாத் காவல்துறையில் புகார் செய்தார்.

இதனிடையே, சகோதரர் ரவி சங்கருடன் நடிகை அஞ்சலி நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினார். அப்போது, சித்தி பாரதி தேவியும், இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், சூரிபாபு செருப்பால் அடித்ததாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், அஞ்சலியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவர் காணாமல் போய் சில நாட்கள் ஆகிவிட்டதால், உயிருடன் இருப்பாரோ என்ற அச்சம் உள்ளது. எனவே அஞ்சலியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் அவரது சித்தி பாரதிதேவி ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
 
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகை அஞ்சலியை 15 நாளில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உயர் உத்தரவிட்டது.

இந்த நிலையில், 4 நாட்களாக தலைமறைவாக இருந்த அஞ்சலி நேற்றிரவு ஹைதராபாத் துணை போலீஸ் கமிஷனர் சுதிர்பாபு முன்பு ஆஜராகி சுமார் ஒன்றரை மணி நேரம் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய நடிகை அஞ்சலி, என்னை யாரும் கடத்தவில்லை என்றும் தீவிர மன அழுத்தம் காரணமாகவே வெளியேறினேன் என்றும் கூறினார்.

தமக்கு போலீஸ் பாதுகாப்பு தருவதாக உறுதி அளித்துள்ளனர் என்று கூறிய அஞ்சலி, படப்பிடிப்பு நெருக்கடியால் வெளியே வந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமக்கு எதிராக புகார் இருப்பதால் காவல் நிலையத்தில் ஆஜரானதாகவும், வீட்டை விட்டு வெளியேறி மும்பையில் தலைமறைவாக இருந்தேன் என்றும் அஞ்சலி கூறினார்.

தலைமறைவானது பற்றிய முழு விவரங்களையும் பின்னர் தெரிவிப்பதாகவும் அஞ்சலி கூறினார்.

அஞ்சலி ஆஜரானது குறித்து ஹைதராபாத் துணை போலீஸ் கமிஷனர் சுதிர்பாபு கூறுகையில், இந்த வழக்கில் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது காணாமல் போன வழக்கு. அஞ்சலி எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் மும்பை சென்றுள்ளார். மும்பையில் இருந்ததாக அவர் கூறுகிறார். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.இதனிடையே, நடிகை அஞ்சலி ஆஜராக தெலுங்குபடத் தயாரிப்பாளர் கொடுத்த நெருக்கடியே காரணம் என்று கூறப்படுகிறது.

தெலுங்கில் "பலுப்பு" என்ற படத்தில் நடிகை அஞ்சலி நடித்து வருகிறார். இந்த நிலையில் திடீர் தலைமறைவானதால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் இன்றைய படப்பிடிப்பில் பங்கேற்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனாலேயே, நடிகை அஞ்சலி காவல்துறையில் ஆஜராகியுள்ளதாக கூறப்படுகிறது. "பலுப்பு" படத்தின் இறுதிக்கட்ட காட்சியை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது அஞ்சலி இருக்கிறார். இதேபோல் நடிகர் வெங்கடேசுடன் "போல் பச்சன்" படத்திலும் அஞ்சலி நடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
 
 
 
அஞ்சலியின் மறு பக்கம் - மினி சினி தொடர் : பகுதி 3

'ஹைதராபாத் ஓட்டலில் தங்கி இருந்த போது சித்தப்பா சூரிபாபு என்னை தலைமுடியை இழுத்து செருப்பால் அடித் தார். அதனால் தான் நான் ஓட்டலைவிட்டு வெளியேறினேன். எனது சகோதரர் உறுதுணையாக இருந்தால் நான் நேரில் வரத் தயார்"  எங்கேயோ பாதுகாப்பான இடத்தில் பதுங்கி இருக்கும் அஞ்சலி அலைபேசி வழியாக‌ அள்ளித் தெளித் திருக்கும் இந்த அக்னி வார்த்தைகள் சினிமா உலகத்தை உலுக்கி இருக்கிறது.



இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சித்தப்பா சூரிபாபு மயங்கி விழுந்து மருத்துவமனையில் அட்மிட் செய்யப் பட்டிருப்பதாக சொல்கிறார்கள். சித்திக்கும் இதனால் மன உளைச்சலாம். இதற்கிடையில், இன்னும் இரண்டு வாரத் திற்குள் அஞ்சலியை ஆஜர்படுத்தும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆட்கொணர்வு மனுக்கு ஆர்டர் போட்டிருக்கிறது. இன்னொரு பக்கம், தன்னைப் பற்றி அஞ்சலி தெரிவித்த அவதூறு கருத்துக்களுக்காக மானநஷ்ட வழக்கு தொடர்ந் திருக்கிறார் இயக்குனர் களஞ்சியம். இத்தனைக்கும் நடுவில், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தோன்றி 'அஞ்சலி சீசன் டூ" விற்கான அடிக்கல் நாட்டுவிழாவுக்கு தயாராகி வருகிறார் அஞ்சலி.


இனி, அஞ்சலியின் மறுபக்கம்...
மாடலிங் போட்டோ ஷுட் செய்த ஆல்பத்தை தூக்கிக் கொண்டு சித்தியும் மகளும் பிரபல தயாரிப்பு  நிறுவனங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினார்கள். அஞ்சலி எப்படியாவது சினிமா பிரபலமாகிவிட வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் அஞ்சலியைவிட  பாரதி தேவிக்கு இருந்தது. அதற்காக லட்சங்களை கடனாக வாங்கிச் செலவு செய்தார். முயற்சி வீண் போகவில்லை.போட்டோ, பிரேமலேக ராசா என்ற இரண்டு தெலுங்கு பட வாய்ப்புகள் அஞ்சலி வீட்டுக் கதவை தட்டின.


ஆனால், பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பது போல இந்த‌ இரண்டுமே பெரும் தோல்வியை சந்தித்தன‌. ஆனாலும், இரண்டு படங்களிலும் அஞ்சலியின் நடிப்பு சூப்பர் என்று திரை உலகம் பாராட்டியது. அந்த பாராட்டுப் பத்திரம் தான்  'கற்றது தமிழ்'' படத்தில் நடிக்கும் வாயப்பை அஞ்சலிக்கு தந்தது. 'கற்றது தமிழ்' படத்தில் அஞ்சலியின் நடிப்புககு அனைத்து தரப்பிலும் இருந்து பாரட்டுக்கள் குவிந்தன‌. 'நிஜமாத்தான் சொல்றியா?' என்று சோகத்தை அப்பிய‌ முகத்துடன் அஞ்சலி பேசிய வசனம் அனைவரது மனதையும் கரைத்தது. அந்தப் பெண்ணுக்குள் இயல்பாகவே குடிகொண்டிருந்த சோகச் சுமை இந்த வசனத்திற்கு கூடுதல் மார்க் போட்டது.


ஆனாலும் என்ன செய்ய? வியாபார ரீதியாக 'கற்றது தமிழ்' தோற்றது தமிழாகிப் போனது. ஒரே ஒரு ஆறுதல், அஞ்சலி என்ற நடிகை வெளி உலகுக்கு தெரிய ஆரம்பித்தார். 2008 ஆம் ஆண்டு, இயக்குனர்  சுந்தர்.சிக்கு ஜோடியாக 'ஆயுதம் செய்வோம்' படத்தில் நடித்தார். அதுவும் காகிதம் செய்வோம் என்றாகிப் போனது. ஆனாலும், தோல்விகளை பற்றிக் கவலைப் படாமல் ஓடிக் கொண்டே இருந்தார் அஞ்சலி. வெளிப்படையாக சொல்வதனால், குடும்பத்தில் அவருக்கு இருந்த நெருக்கடிகள் அவரை தூங்கவிடாமல் துரத்தின‌. இனி என்ன செய்ய‌ என்று ஒரு இக்கட்டான சூழலில் இருந்த போது தான்  'அங்காடித்தெரு'.வுக்காக அஞ்சலியை அழைத்தார் இயக்குனர் வசந்தபாலன்.


அங்காடித்தெரு படத்திற்கு சேர்மக்கனி பாத்திரத்தில் நடிக்க நாயகியை தேடிக் கொண்டிருந்தார் இயக்குனர் வசந்த பாலன். கதையின் நாயகன் புதுமுகம் என்பதால், நாயகி பழகிய முகமாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்தார் வசந்தபாலன். அப்போது அவரது நினைவில் உதித்தவர் அஞ்சலி. தொட்டதிற்கெல்லாம் சென்டிமென்ட் பார்க்கும் சினிமா உலகம், இத்தனை சறுக்கலுக்குப் பிறகும் அஞ்சலிக்கு வாய்ப்புத் தந்திருக்கிறது என்றால் அதிசயமான ஆச்சரியம் தான்!


வசந்தபாலனை அஞ்சலியும் பாரதிதேவியும் சேர்ந்தே சென்று சந்தித்தார்கள். முதல் சந்திப்பிலேயே, அங்காடித் தெருவிற்காக செலக்ட் பண்ணி வைத்திருந்த காஸ்ட்யூம்களை அஞ்சலிக்கு கொடுத்து நடித்துக் காட்டச் சொன்னார் வசந்தபாலன. கலக்கினார் அஞ்சலி. பிறகு, கதாநாயகன் மகேஷையும்  அஞ்சலியையும் ஒன்றாக வைத்து சில காட்சிகளை சொல்லிக் கொடுத்து நடிக்கச் சொன்னார்கள். அதிலும் அஞ்சலி அசத்தினார். கூச்சத்தால் மகேஷ் தயங்கினார். 'சார்.. இப்புடி கூச்சப்பட்ட சினிமாவில் பெரிய ஆளாகுறது எப்படி? இது வெறும் நடிப்புங்கிறத மொதல்ல மனசுல ஏத்திக்குங்க அப்பத்தான் நடிப்பு வரும்" என்று தள்ளி நின்ற மகேஷை தன்னருகே நிற்க வைத்து நடிப்புச் சொல்லிக் கொடுத்த அஞ்சலியை வியப்புடன் பார்த்தார் வசந்த பாலன்.


'அங்காடித்தெரு' ரியல் படப்பிடிப்பை தொடங்கினார்கள். முதல் மூன்று நாட்கள் படத்தின் முக்கிய காட்சியை படமாக் கினார்கள். அக்காட்சிகளில் அஞ்சலியின் நடிப்பை பார்த்து மெச்சிய வசந்தபாலன், 'கதைக்கு இப்பத்தாம்பா உயிர் வந்திருக்கு" என்று பாராட்டினார். மகேஷின் நடிப்பு சுமாராக இருந்த இடங்களை எல்லாம் அஞ்சலியின் நடிப்பு ஈடு செய்தது. மகேஷ் நடிக்க தயங்கிய நெருக்கமான காதல் காட்சிகளில் அவரது கூச்சத்தை போக்கியவர் அஞ்சலிதான். படப்பிடிப்பு இடைவெளியில் மகேஷிடம் பேசி பேசி கூச்சத்தை போக்கிய அஞ்சலி, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.


படப்பிடிப்புகள் முடிந்தபோது, 'ஓர் இயக்குனரின் கதாநாயகி' என்று வசந்தபாலனிடம் பாராட்டை பெற்றார் அஞ்சலி. படமும் வெளிவந்து சக்கைப்போடு போட்டது. தனது அபார நடிப்பால் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார் அஞ்சலி. 'கற்றது தமிழ்' படத்துக்கு, ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்படும் விஜய் டிவியின் சிறந்த புதுமுக நடிகை விரு தையும், 'அங்காடி தெரு' படத்துக்காக சிறந்த நடிகை விருதையும் வென்றார். ரசிகர்களை தனது நடிப்பாற்றலால் வசீகரித்திருக்கிறார் என்பதற்கு இந்த விருதுகளே சான்று. அதனைத் தொடர்ந்து அஞ்சலி நடித்த படங்களான 'ரெட்டை சுழி', 'மகிழ்ச்சி', 'தூங்கா நகரம்', 'கருங்காலி', 'மகராஜா', 'வத்திக்குசி', ஆகிய படங்கள் தோல்வியை சுமந்தன. இப்போது வெளிவந்திருக்கும் சேட்டையும் செயலிழந்து நிற்கிறது.



இடையே சில படங்களில் சிறு வேடங்களிலும் நடித்தார் அஞ்சலி. 'கற்றது தமிழ்', 'அங்காடித்தெரு' போன்று அஞ் சலிக்கு பெரிய அளவில் பாராட்டு குவித்த படம் 'எங்கேயும் எப்போதும்'. இந்தப் படத்தில் தனது எதார்த்தமான நடிப் பால் திரையுலகை மீண்டும் திரும்பிப் பார்க்க வைத்தார். 'எங்கேயும் எப்போதும்' படத்துக்கும் விருது கிடைத்தது. பல படங்களில் நடித்து வந்தாலும், அவ்வப்போது பாரதிதேவி, களஞ்சியத்தை சந்தித்து "அஞ்சலி அடுத்ததாக ஜீவாவுடன் நடிக்கிறார், இந்தக் கதையில் நடிக்க இருக்கிறார், அந்தக் கதை அஞ்சலிக்கு பொருத்தமாக இருக்குமா?" என்று எல்லாம் தனி ரூட்டில் போய் ஆலோசனைகளை கேட்டுக் கொண்டே இருந்தார்.


தமிழில் பிஸியாக இருந்த‌ சமயத்தில், தெலுங்கிலும் அஞ்சலிக்கு அடித்தது ஒரு லக். மகேஷ்பாபு, வெங்கடேஷ், சமந்தாவுடன் இணைந்து 'சீத்தாம்மா வாகித்லோ ஸ்ரீமல்லே சேத்து'  என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படமும் வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் ரவிதேஜாவுடன் 'பலுப்பு', மீண்டும் 
வெங்கடேஷுடன் இணைந்து ஹிந்தி ரிமேக் படமான‌ 'போல் பச்சன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி. ப‌லுப்பு  படப்பிடிப்பு முடிவுற்றது. போல் பச்சன் படப்பிடிப்பு போய்க்கொண்டு இருக்கிறது. இதற்காக ஹைதராபாத் சென்றபோதுதான் அஞ்சலி தலைமறைவாகி விட்டார்.



ஹைதராபாத்தில் இருந்து சென்னையில் உள்ள நிருபர் ஒருவ‌ரை தொடர்பு கொண்டு, "பாரதிதேவி என்னுடைய அம்மா அல்ல... சித்தி. இயக்குனர் களஞ்சியத்துடன் சேர்ந்து கொண்டு என்னை சித்தி கொடுமைப்படுத்துகிறார். நான் சினி மாவில் இதுவரை சம்பாதித்த பணம் அனைத்தையும் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். எனக்கென்று எதுவும் இல்லை. இனிமேல் தான் என் தேவைக்கு பணம் சம்பாதிக்க வேண்டும்" என்று அஞ்சலி சொன்னதாக சொல்கிறார்கள். அதன் பிறகுதான் அஞ்சலி தலைப்புச் செய்திகளுக்கு தீனியாய் வந்தார். இயக்குனர் களஞ்சியம், "எனக்கு இதில் எந்த சம்பந்த மும் இல்லை. இது எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி" என்கிறார்.


களஞ்சியம், பாரதிதேவி இருவருமே சொல்லும் இன்னொரு அதிர்ச்சி தகவல், "அஞ்சலிக்கு ஒரு நோய் இருக்கு. அதற் காக தினமும் அவர் மாத்திரை சாப்பிட வேண்டும். மாத்திரை சாப்பிடாவிட்டால் சிக்கல் வரும். அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இதற்கு மேல் விளக்கம் சொல்லமுடியாமல் இருக்கிறோம்" என்று சொல்கிறார்கள் அவர்கள். ''ஒரு சினிமா நடிகை மீது எத்தகையை வதந்தியை பரப்பினால் அவரது எதிர்கால‌ம் பாதிக்குமோ அப்படியொரு அவதூறை பரப்பி, அந்த அப்பாவிப் பெண்ணின் எதிர்காலத்தை சீரழிக்கப் பார்க்கிறார்கள். அஞ்சலிக்கு அப்படி ஒன்றும் சீரியஸான நோய் எதுவும் இல்லை" என்று பதறுகிறார்கள் அஞ்சலியை நன்கு தெரிந்தவர்கள்.



அஞ்சலி மற்றும் அவருக்கு எதிரான நம்பத்தகுந்த தரப்பினர்களுடன் பேசியதில் இருந்து கிடைத்த தெளிவான ஒரே விஷயம், 'நட்சத்திரம்'  தமிழ்த் திரைப்படத்தின் ஸ்ரீபிரியா கதாபாத்திரத்தின் நிஜம்தான் அஞ்சலி!

அந்த நிஜத்தை மிரட்டும் நிழல் எது?

பொறுத்திருங்கள்...

நன்றி - விகடன்


டிஸ்கி - இதன் முதல் இரு பாகங்கள் படிக்க 

அஞ்சலி - பார்வதிதேவி -களஞ்சியம் -பால திரிபுர சுந்தரி - வெளி வராத மர்மங்கள்

http://www.adrasaka.com/2013/04/blog-post_9624.html

பெண்கள் - கோடைக்கேற்ற ஆடை - தேர்வு செய்வது எப்படி?

கோடைக்கேற்ற ஆடை - உள்ளாடை... செலக்ட் செய்யலாமா?!
அவேர்னஸ்
வந்துவிட்டது கோடை. இந்த சீஸனில்... உணவு மற்றும் உடல் ஆகியவற்றில் காட்டும் அதே அக்கறையை... ஆடைகள் விஷயத்திலும் நூறு சதவிகிதம் காட்ட வேண்டியது அவசியம்... குறிப்பாக, உள்ளாடை விஷயத்தில். இல்லையெனில், சருமப் பிரச்னையில் ஆரம்பித்து அந்தரங்கப் பிரச்னைகள் வரை படுத்தி எடுத்துவிடுமே!


பொதுவாக, ''பருத்தி உடைகளே நல்லது. அதிலும் கோடை எனும்போது, பருத்தி ஆடைகளைத் தவிர வேறெதுவும் வேண்டாம்'' என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த 'டெர்மடா லஜிஸ்ட்' ஜி.ஆர்.ரத்னவேல்,


''இறுக்கம் தவிர்த்து கொஞ்சம் தளர்வான உடைகளைத்தான் எப்போதுமே அணிய வேண்டும். அப்போதுதான் உடலுக்குத் தேவையான காற்று கிடைக்கும். குறிப்பாக, கோடையில் இத்தகைய ஆடைகளை முக்கியமாக அணிய வேண்டும். வியர்வையில் உடல் நனைந்துவிட்டால், சிலருக்கு அலர்ஜி ஏற்படும். பருத்தி ஆடைகள் வெயிலினால் ஏற்படும் வியர்வையை உறிஞ்சிவிடும். இதனால் வியர்வைக் குழாய் அடைபடாது, வியர்க்குரு வராது, வியர்க்குரு வராததால்... வேனல் கட்டியும் வராது, ஃபங்கஸ் பிரச்னையும் ஏற்படாது. பருத்தி உடைகள் எல்லா பிரச்னைகளையும் ஃபில்டர் செய்துவிடும்'' என்று மருத்துவக் காரணங்களையும் சொன்னார்!



சரி, கோடையில் பெண்கள் அணியத் தகுந்த உள்ளாடைகள் எப்படிப்பட்டவைகளாக இருக்கலாம்?


இந்தக் கேள்விக்கு டிப்ஸ்களோடு தன் பதிலைத் தந்தார்... 'நாயுடு ஹால்' நிறுவனத்தின் விற்பனை மேலாளர் பி.சதீஷ்.


''உள்ளாடை அணிவது ஒருவித பாதுகாப்பு உணர்வைத் தரும். உள்ளாடை சௌகரியமாக இருந்தால்தான் அந்த நாள் இனியதாக இருக்கும். பெண்கள் புடவை, சுடிதார், மிடி, சல்வார் கமீஸ், ஸ்கர்ட், ஜீன்ஸ், டி-ஷர்ட் என்று பலவித உடைகளை அணிகிறார்கள். ஆனால், உடலோடு ஒட்டிஇருக்கும் உள்ளாடையைப் பற்றிய தேர்வும் அக்கறையும் வெகு சிலருக்கே இருக்கிறது. ப்யூர் காட்டன், ஹாய்சரி  மெட்டீரியல் மற்றும் பிஸ்லெசி வகை துணிகளில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளே வெயிலுக்கும் நம்நாட்டு சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றது. லிக்ரா வகைத் துணிகளில் தயாரிக்கப்படும் உள்ளாடை, குளிர்பிரதேசங்களுக்கு சரியாக இருக்கும், நம் ஊரில் அவை கிடைத்தாலும் அதை அணிவது அத்தனை சௌகரியமாக இருக்காது.


டீன் ஏஜ் பருவத்தினர் டி-ஷர்ட்டுக்கு உள்ளே அணிய ஸ்பெஷலாக சீம்லெஸ் என்கிற ஒரு வகை பிரேசியர் வந்துள்ளது. பொதுவாக எல்லா பெண்களுக்கும் ஏற்ற வகையில் பிரேசியர்கள் மற்றும் அந்தந்த உடைக்கேற்றபடி வசதியாக அணிந்து கொள்ள ஸ்லிப்புகள் வந்துவிட்டன. ஹாஃப் ஸ்லிப்களை குர்தி போன்ற உடைகளுக்கும், இடுப்புக்குக் கீழ் வரைக்கும் உள்ள ஸ்லிப்களை சுடிதாருக்கும் அணியலாம். சரியான உள்ளாடைகளைத் தேர்வு செய்து அணிவது, சௌகரியத்துடன் தன்னம்பிக்கையையும் அளிக்கும்.


ஃபைபர், நைலான் மெட்டீரியலில் தயாரிக்கப்பட்ட ஃபேன்ஸி உள்ளாடைகள், சருமத்தைப் பாதிக்கலாம். 'பேடட்’ மற்றும் 'ஸ்பான்ஞ்’ ரக பிரேசியர்கள் வெயிலுக்கு உகந்ததல்ல. பிரேசியரின் ஸ்ட்ராப் அதிகம் அழுத்தினால், சுட்டெரிக்கும் கோடை அந்த அழுத்தத்தில் அரிப்பை உண்டாக்கிவிடும். எனவே, அளவுக்கு அதிகமான இறுக்கத்தில் உள்ளாடை அணிந்து பழக்கப்பட்டவர்கள், கடைகளில் உள்ளாடைகள் சேல்ஸ் பிரிவில் இருக்கும் பெண்களின் உதவியுடன் உங்களுக்கான சரியான உள்ளாடை அளவைத் தேர்ந்தெடுத்து அணியுங்கள்.


நமது தேவைக்கும் வயதுக்கும் ஏற்ப உள்ளாடைகளைத் தேர்வு செய்வது முக்கியம். பேன்ட்டியிலும் காட்டனே சிறந்தது. இறுக்கம் தவிர்த்து, சரியான அளவு தேர்வு முக்கியம். மலிவான எலாஸ்டிக், லேஸ் வைத்த பேன்ட்டிகள் தவிர்த்து, தரமானதை உபயோகிக்கவும். அதிக எடை இருப்பவர்களுக்கும், சென் ஸிட்டிவ் ஸ்கின் உடையவர்களுக்கும் இந்தக் கோடை யில், தொடை இடுக்குகளில் அரிப்பு, அலர்ஜி உண்டாகக் கூடும். அப்போது பேன்ட்டி அணிவது சிரமமாகலாம். அவர்களுக்கு ஷார்ட்ஸ் போன்ற 'லெக் பேன்ட்டி’ அணி வது நல்ல தீர்வாக இருக்கும்'' என்று சொன்னார்!  


ஆக மொத்தத்தில், கோடைக்குத் துணை காட்டனே!


- உமா ஷக்தி, படங்கள்: ச. இரா.ஸ்ரீதர், ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ், செ.திலீபன்
மாடல்: ஸ்ரீவித்யா

ஆடை உதவி: ஸ்ரீகுமரன் ஸ்டோர்ஸ், தி.நகர்

நன்றி - விகடன்