Sunday, November 28, 2010

நந்தலாலா - கலக்கல் லாலா - சினிமா விமர்சனம்





சித்திரம் பேசுதடி,அஞ்சாதே என தொடர்ந்து கமர்சியல் ஹிட்ஸ் அடித்த மிஷ்கின் ஆர்ட் ஃபிலிம் டைப்பில் ஒரு ஜப்பானியப்படத்தை தழுவி எடுத்திருக்கிறார்.பல டப்பா படங்களையும்,ஹீரோயிச படங்களையும் பார்த்து சலித்த நமக்கு இது  ஒரு வித்தியாசமான அனுபவத்தையே தருகிறது.

அன்பே சிவம்.திருடா திருடா,காதல் சொல்ல வந்தேன்,மைனா வரிசையில் இதுவும் ஒரு பயணக்கதைதான்.ஆனால் சொன்ன விதத்தில் மெய் சிலிர்க்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

தனிமையில் இருந்து தாயின் அன்புக்கு ஏங்கி வெளியூரில் இருக்கும் தன் தாயை சந்திக்க தனியாகக் கிளம்பும் சிறுவன்,பைத்தியக்கார விடுதியில் தன்னை இங்கே சேர்த்துவிட்டு போய் விட்டாளே என்ற ஆத்திரத்தில் அவளை கோபமாக சந்திக்கத்துடிக்கும் மன நலம் குன்றிய ஆள் இருவரும் ஒரு புள்ளியில் இணைந்து ஒன்றாக பயணிக்கையில் ஏற்படும் அனுபவங்களும் ,சந்திக்கும் மனிதர்களும்தான் கதை.

ஆற்றின் போக்கில் வளைந்து கொடுக்கும் நாணல் மாதிரி மனிதர்கள் அனுசரித்துப்போக வேண்டும் என்ற குறியீட்டுக்காட்சியுடன் (FLEXIBILITY) டைட்டில் தொடங்குகிறது.

ஒரு படத்துக்கு ஒளிப்பதிவும் ,இசையும்,பின்னணி இசையும்  எப்படி உயிர்நாடியாக விளங்குகிறது என ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு பாடமாக வைக்கும் அளவுக்கு இந்தப்படத்தில் 2 தொழில் நுட்பங்களும் பிரமாதமாகக்கையாளப்பட்டிருக்கிறது.

பாலுமகேந்திரா,மணிரத்னம் வரிசையில் வசனத்துக்கான முக்கியத்துவத்தை குறைத்து காட்சிகளின் மூலமே பார்வையாளனை கட்டிப்போட முடியும் என நிரூபித்திருக்கிறார், இயக்குநர்.

சிறுவனாக வரும் அந்த சின்னப்பையனின் நடிப்பு கிளாஸ் ரகம்.தலையை குனிந்து நிற்பதில் கோபம்,ஏக்கம் ,பாசம் என விதம் விதமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறான்.சபாஷ்..தம்பி.


சில இடங்களில் மனநலம் குன்றியவராகவும்,சில இடங்களில்  நார்மல் மனிதராகவும்,பல இடங்களில் சராசரிக்கும் அதிகமான அறிவுடனும் நடந்து கொள்ளும் விநோதமான ஒரு மனிதனை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் மிஷ்கின். இரண்டு இடங்களில் மட்டுமே ஓவர் ஆக்டிங்க்கோ என யோசிக்க வைத்து மற்ற அனைத்து இடங்களிலும் பண்பட்ட நடிகனாக தன்னை வெளிப்படுத்திய மிஷ்கினுக்கு  ஒரு ஷொட்டு.

படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் மனதில் பதிந்து போகும் அனைத்து கேரக்டர்அளுக்கும் ஒரு சபாஷ்.

மனித நேயத்தையும்,இயக்குநரின் தொழில் நுட்ப நயத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகள் -

1.காலில் அடிபட்டு சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவியின் பாவாடையை முழங்கால் வரை தூக்கும் ஹீரோவை தவறாகப்புரிந்து கொண்டு பளார் என அறையும் மாணவி ஹீரோ  “வலிக்குதா?” எனக்கேட்கும்போது குபுக்கென கண்ணில் கண்ணீர் வரக்கலங்கும் இடம். (இந்த இடத்தில் வரும் பின்னணி இசை அபாரம்)

2.  இளநி வெட்டு ம் ஆள் 3 இளநியை திருடி விட்டார்கள் என்பதற்காக ஹீரோவைத்துரத்தி பின் கீழே விழுந்து அடி பட்டதும் ஹீரோவே அவரை கவனிக்கையில் கண்கலங்குவது.

3.ஹார்னை சுட்டு செல்லும் ஹீரோவை லாரி டிரைவர் அடிப்பதும் ,பின் அவனின் குண நலன் தெரிந்து சினெகம் ஆவதும்.

4. விலை மாதுவாக வரும் சினிக்தா  தனது சோகக்கதையை சொல்லி நான் அழுக்கானவ என கதறும்போது பெய்யும் மழையில் அவளை நனையச்சொல்லி  “நீ குளி சுத்தம் ஆகிடுவே” என வெள்ளந்தியாக ஹீரோ சொல்வதும் ,அப்போது சினிக்தாவின் கண்களில் வெளிப்படும்  நன்றி,புத்துணர்ச்சி கிளாசிக் ரகம்.

5. சிறுவனின் தாயைக்கண்டு பிடித்த ஹீரோ அவளிடம் விளக்கம் கேட்பதை வசனமே இல்லாமல் லாங்க் ஷாட்டில் தெளிவாக பார்வையாளனுக்கு புரிய வைத்த விதம். ( இந்த சீனை ஒரு விசுவோ , டி ஆரோ எடுத்திருந்தால் 4 பகத்துக்கு வசனம் வைத்திருப்பார்கள்) படத்துக்கும் கதைக்கும் மிக முக்கியமான இந்த சீனில் வசனமே இல்லாமல் எடுத்த இயக்குநர் மிக கவனிக்கப்பட வேண்டியவர்.

பின்னணி இசையில் இசைஞானி கலக்கிய இடங்கள்

1.ஹாஸ்பிடலில் இருந்து ஹீரோ தப்பிக்கும் காட்சியில் மத்தளம்,முரசு என கலக்கல் காக்டெயில் இசையை அளீத்தது..

2. கூட வந்த சிறுவனே தன்னை மெண்ட்டலா என கேட்கும்போது ஒல்லிக்கும் பின்னணி இசை.

3. பைத்தியமாக கிடக்கும் தன் அம்மா ராகினியை ஹீரோ சந்திக்கும் காட்சியிலும்,அதைத்தொடர்ந்து 15 நிமிடங்கள் பின்னணி இசை மூலமே கதை சொன்ன விதம்.

4.எல்லாவற்றையும் விட பல இடங்களில் அமைதி,நிசப்தம் ,மவுனம்  இவற்றை வெளிப்படுத்துவது கூட நல்ல இசை தான் என நிரூபிப்பது.


ஒண்டர்ஃபுல் ஒளிப்பதிவு  என சொல்ல வைத்த இடங்கள்

1.டைட்டில் போடும் சீனில் ஆற்று நீர் காண்பிக்கப்பட்ட விதம்.

2. சிறுவனின் தாய் சந்திப்பு சீனில் கேமரா கோணம்

3.சினிக்தா காரில் வரும் இளைஞர்களால் ரேப்புக்கு ட்ரை பண்ணப்படும்போது வைக்கப்பட்ட லாங்க்‌ஷாட்

4,க்ளைமாக்ஸில் ராகினியை சந்திக்கும்போது அவருக்கு க்ளோஷப் காட்சி வைக்காமல் லாங்க் ஷாட்டிலேயே வலியை உணர்த்துவது.

வசனகர்த்தா ஜொலித்த இடங்கள்

1.  நீ வேலைக்காரி.என் கூட ஸ்கூலுக்கு வர வேணாம்,வந்தா எல்லாரும் நீதான் என் அம்மான்னு நினைப்பாங்க.

2.  இந்த பஸ் மெயின்ல போகுதா? பைபாஸ்ல போகுதா?

ம், ரோட்ல


3.  எங்கப்பா நான் சின்னப்பையனா இருந்தப்பவே ஓடிப்போயிட்டாரு..உங்கப்பா?

நான் பிறந்ததுமே ஓடிட்டாரு.

எல்லா அப்பாக்களும் இப்படித்தான் ஓடிப்போவாங்களா?

4. அம்மாவைப்பார்த்ததும் நீயும் என்னை மாதிரியே அவளை அடிக்கப்போறியா?

ம்ஹூம்,கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கப்போறேன்.

5.  ரோட்ல போறவங்கிட்டே எதுக்கு தண்ணீர் கேக்குறே?

ம்,லிஃப்ட் கேக்கறேன்.

அது எதுக்கு நமக்கு..?

6.  நான் ஒரு நொண்டி,நான் எங்கம்மா வயிற்றுல இருக்கறப்பவே செத்திருக்கலாம்.

7.  உன் பேரன்ன?      மெண்ட்டல் .   ஆத்தாடி ,அப்படி ஒரு பேரா?

8.  கொஞ்சம் வேகமாத்தான் போங்களேன்

       .நோ நோ எங்கம்மா 40 கி மீ ஸ்பீடுலதான் போகச்சொல்லி இருக்காங்க.

ஹனிமூனுக்கு வந்த இடத்திலும் அம்மா ஞாபகமா?

9.  ப்ளீஸ் கொஞ்சம் பேசாம வர்றியா?

அய்யய்யோ பேசாம வந்தா நான் ஊமை ஆகிடுவேன்.

10. இதுதான் உங்கம்மா என யார் உனக்கு சொன்னது?       என் பாட்டி.

பாட்டியை உனக்கு அடையாளம் காட்டுனது யாரு? உனக்கு அம்மாவும் இல்லை,-பாட்டியும் இல்லை.

11. விலைமாது - முத்தம் மட்டும் எனக்கு பிடிக்காதுகுடிகாரன்,கிழவன்,சீக்காளி அப்படி ஆளாளுக்குகிட்டே வரும்போது எனக்கு நாறும்,எங்கம்மா பொணம் கூட அப்படி நாறலை.. என்னை சுத்தி ஒட்டடை ...புது சரக்குன்னு சொல்லி..... 3 நாள்ல 36 பேரு  /...... முடியல ...என்னால முடியல.. வலி.. வலி...

12. அம்மா இல்லைன்னா எல்லாரும் கஷ்டப்படுவாங்களா?

கஷ்டம்னா என்னன்னு இப்போ உங்களைப்பார்த்துதான் தெரிஞ்சுது..

13. நரிப்பல்லு வாங்கிக்க..தம்பி..அதிர்ஷ்டம் தேடி வரும்.

அம்மா தேடி வருவாளா?

14. உன்னை மெண்ட்டல்னு சொன்னப்போ உனக்கு எப்படி கோபம் வந்தது?அதே மாதிரிதானே எனக்கும் எங்கம்மா செத்துட்டா அப்படினு நீ சொன்னப்பவும் இருந்திருக்கும்?

டைட்டிலில் துணை ,இணை இயக்குநர்கள் என 17பேர் அறிமுகம் ஆகிறார்கள் அனைவருக்கும் செம வேலை இருந்திருக்கும்.ஒரு படத்துக்கு கண்ட்டினியூட்டி எவ்வளவு முக்கியம் என்பதை சிலாகிக்கவைக்கும் அளவு உபயோகிக்க வைத்திருக்கிறார் மிஷ்கின்.

கோபிசெட்டிபாளையம் கள்ளீபட்டி என ஈரோடு மாவட்டத்தில் பல இடங்கள் காட்டப்படுவது அழகு.

நெம்பர் டூ போக 3 விரலை ஹீரோ காண்பிப்பது,போகும் இடம் இருட்டு என்பதால் கோயிலில் இருந்து அகல் விளக்கை அபேஸ் செய்து வரும் ஹீரோ கடவுள் சிலையை காட்டி பாவம் அவங்க இருட்டுல இருப்பாங்க என்பது.,லிஃப்ட் தர மறுத்த லாரிக்காரனிடம் இருந்து ஹாரனை அபேஸ்
செய்வது, பைத்தியமாக வரும் ஹீரோ எங்கே போனாலும் சுவரின் ஓரத்தில் விரலால் கோலம் போட்டுக்கொண்டே போவது   என ரசிப்புத்தன்மையை அதிகரிக்கும் சீன்கள் அதிகம்.

தாலாட்டு கேக்கலாமா? பாட்டு, ஒண்ணூக்கு ஒண்ணு துணை இருக்கும் உலகத்துலே அன்பு ஒண்ணுதான் அனாதையா என பாடல்கள் கலக்கல் ரகம்.

இந்தப்படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை.ஆனால் இந்தப்படத்துக்கு எல்லாம் குறை சொல்லிகொண்டிருந்தால் நல்ல சினிமா பார்க்கவே லாயக்கு இல்லை.

இந்தப்படத்தில் கமல் நடித்திருந்தால் படத்தின் மார்க்கெட் கூடி இருக்கும் (மிஷ்கினின் முதல் சாய்ஸ் கமல்தான்,சம்பள விஷயம் காரணமாக கமல் நடிக்க மறுத்து விட்டாராம்).

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் 50

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - சூப்பர்

இந்தப்படம் ஜனரஞ்சகமாக சூப்பர் ஹிட் ஆகி ஓடவில்லை என்றால் நட்டம் இயக்குநருக்கு அல்ல.தனது ரசனையை மேம்படுத்திக்கொள்ளாமல் இன்னும் குண்டுச்சட்டியில்தான் குதிரை ஓட்டுவேன் என அடம் பிடிக்கும் தமிழ் ரசிகனுக்குத்தான்.