Showing posts with label வேலை. Show all posts
Showing posts with label வேலை. Show all posts

Wednesday, November 04, 2015

உறவுகள்: வேலையா? காதலியா?- பிருந்தா ஜெயராமன்

வணக்கம் அம்மா. என் வயது 28. ஆன்மிக மற்றும் பொதுநலன் சார்ந்த அறக்கட்டளை ஒன்றில் நான் வேலைசெய்தபோது அந்த ஊரிலேயே ஒரு பெண்ணிடம் எனக்கு நட்பு ஏற்பட்டது.
நான் பணி நிமித்தமாக வேறு ஊருக்கு மாறும்போது நாங்கள் இருவருமே எங்களின் காதலை வெளிப்படுத்திக் கொண்டோம். அவள் அப்போது கல்லூரியில் படித்துகொண்டிருந்தாள். அவள் வீட்டில் அவள்தான் மூத்த பெண். எங்கள் இருவருக்குமே ஒரே வயதுதான்.
மூன்று வருடம் எங்களின் காதல் பயணித்தது. அவள் மூலமாக எங்களின் காதல் அவளின் வீட்டுக்குத் தெரியவந்தது. நாங்கள் இருவரும் நண்பர்களாகப் பழகியபோது என்னிடம் அவளின் பெற்றோர் நன்றாகப் பேசுவார் கள். ஆனால் இப்போது அப்படியல்ல. எனினும் அவள் எப்போதும்போல் என் னிடம் பேசினாள். இதனால் அவளைத் திருமணம் செய்துகொள்ள எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று நம்பினேன்.
நான் எப்படி அவளைக் காதலித்தனோ அதேபோல் நான் பார்த்த வேலையையும் ரொம்ப விரும்பினேன். இங்கேதான் பிரச்சினையே உருவானது. எங்கள் காதல், திருமணத்தை நோக்கிச் சென்றபோது "நீ பார்க்கிற வேலையை நான் விரும்பவில்லை. என் வீட்டிலும் விரும்ப மாட்டார்கள். அதனால் நீ தனியாக‌ எதாவது தொழில் செய். நீ முதலில் அந்த வேலையைவிட்டு வெளியே வா. அதற்காக நீ வெளிநாடு போனாலும் என் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள்" என்றாள்.
ஆனால் அவள் சொல்லியதுபோல என்னால் அவளின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை. அதே சமயத்தில் நான் பார்த்த வேலையில் எனக்குப் பொறுப்புகளும் சம்பளமும் கூடுதலாகக் கிடைக்கும் வாய்ப்பு வந்த நிலையில் அவளுக்காக நான் பார்த்த வேலையை விட்டுப் போவதா, வரும் வாய்ப்பை ஏற்றுக்கொள்வதா என்று முடிவு செய்ய‌முடியாமல் மன‌அழுத்தத்தில் தவித்தேன். தூங்கினால்கூட எந்தக் காரணமும் இல்லாமல் பதறி எழுந்து உட்காருவேன். இப்படிக் கடந்த இரண்டு மாதங்களாகத் தவிக்கிறேன். அவளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அவளிடம் பேசுவதையும் தவிர்க்கிறேன். என்ன செய்வது என்று எனக்குத் தெரிய வில்லை. நல்ல ஆலோசனை தேவை.
‘சைத்தானுக்கும் ஆழமான கடலுக்கும் இடையே' மாட்டிக் கொண்டீர்கள்! உங்கள் தொண்டு நிறுவனத்தில் குடிசை வாழ் மக்களோடு வேலை செய்ய வேண்டியிருக்கிறதோ? அதுதான் எதிர்த் தரப்பின் ஆட்சேபணையோ? அந்த வேலையில் கிடைக்கும் மனநிறைவைக் காதலிகூடப் புரிந்துகொள்ளவில்லையே!
உங்கள் பொருளாதார நிலைதான் அவர்களுக்குக் கவலை என்றால், உங்களுக்குப் பிடித்த இந்த ‘லைனி'லேயே வேறு ஒரு பெரிய வேலை தேடிக்கொள்ளும்வரை காத்திருக்கச் சொல்லுங்கள். ஆனால் எந்த வேலை உங்களுக்கு உகந்தது என்பதைத் தீர்மானிப்பதில் காதலியின் பெற்றோருடைய தலையீடு ‘ரொம்ப டூ மச்'சாகத் தோன்றுகிறது!
முதலில் பிடிவாதமாக காதலியைச் சம்மதிக்க வையுங்கள். பெற்றோரை அவர் சமாளிப்பார்! சோதனை இப்போது உங்களுக்கல்ல. காதலிக்குத்தான்-காதலா, கௌரவமா என்று!
இந்த வேலையை விடுவதைப் பற்றிய பேச்சே வேண்டாம். புதிதாகத் தொழில் ஆரம்பிப்பது சுலபமல்ல. அதில் உள்ள சவால்கள் என்ன என்று காதலிக்குப் புரிய வையுங்கள். நீங்கள் முன்பே முயன்றிருந்தாலும், பேச்சுத் திறன் மிக்க ஒரு தோழரின் உதவியோடு அவரைச் சம்மதிக்க வையுங்கள். விவாதத்தில் குரலை உயர்த்திப் பேசி ‘ஈகோ கிளாஷா'க மாற்றிவிடாதீர்கள். அமைதியாக, ஆனால் அழுத்தமாகப் பேசுங்கள்.
அதுவும் சரிவரவில்லை என்றால், காதலி உயர்வாக மதிக்கும் ஒருவரை விட்டுப் பேசச் சொல்லுங்கள். காதலியிடம் பேசுவதைத் தவிர்ப்பது தீர்வாகாது. எதிர்காலம் பற்றிய பயத்தால் இரவில் தூக்கிவாரிப் போட்டு விழிக்கிறீர்கள். தடைகளைப் பார்ப்பவர் வெல்ல முடியாது. குறிக்கோளைப் பார்ப்பவர் தோற்க முடியாது!
உங்களது கருத்தில் உறுதியாக நின்று காத்திருங்கள். உங்களை அசைக்க முடியவில்லை என்று உணர்ந்ததும், காதலி விட்டுக்கொடுப்பார்... உங்கள் மீது ஆழமான அன்பு கொண்டிருந்தால்!




எனக்கு 18 வயது ஆகிறது. ஐந்தாறு வருடங்கள் நாங்கள் இருவரும் ஒன்றாகவே படித்தோம். ஆரம்ப காலத்தில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத நெருங்கிய நண்பர்களாகவே பழகி வந்தோம். காலப்போக்ககில் அதுவே காதலாக மாறியது.
சிறிதும் எதிர்பார்க்காத சமயத்தில் அவள் என்னைக் காதலிப்பது என்னுடைய நண்பன் மூலம் எனக்குத் தெரிய வந்தது. அவளிடம் நேரடியாகவே சென்று கேட்டேன். அவளும் ஒப்புக் கொண்டாள். இரண்டு நாட்களுக்குப் பின் சிந்தித்து நானும் சம்மதம் தெரிவித்தேன்.
அவள் என்னை உயிருக்கு உயிராகக் காதலித்து வருகிறாள் என்பது தெளிவாகத் தெரிகிறது. என் பெற்றோரைவிட அதிகமாக நலம் விசாரிப்பாள். என் உடல் நலம் மீது அதிக அக்கறை செலுத்துவாள். நானும் அவள் மீது உயிராக இருக்கிறேன். சொல்ல வார்த்தை இல்லை; அவ்வளவு பைத்தியமாக இருக்கிறேன். நாங்கள் இருவரும் ஒரே ஜாதி, மதம். இருவருக்கும் மனம் ஒத்துப் போகிறது. ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துகொள்கிறோம்.
நாங்கள் இருவரும் இப்போது படித்துக் கொண்டிருக்கிறோம். இருவருக்கும் ஓரே வயதுதான். இதற்கு எங்கள் சமுதாயத்தில் எதிர்ப்பு இல்லை. நான் கூடிய சீக்கிர‌ம் படிப்பை முடித்துவிட்டு நல்ல வேலை பார்த்து சொந்தமாக வீடு கட்டிய பின் அவள் வீட்டில் சென்று பெண் கேட்க வேண்டும் என்பது என்னுடைய குறிக்கோள். அதுவரை அவளும் காத்திருப்பாள்; நானும் காத்திருப்பேன். எங்கள் இருவரின் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இல்லை.
இருந்தாலும் என் மனதில் அடிக்கடி ஒரு பயம் ஏற்படுகிறது. நாங்கள் இருவரும் பிரிந்துவிடுவோமோ என்ற பயம்தான் அது. இதனால் சில சமயம் தற்கொலை முயற்சியும் செய்துள்ளேன். எனக்கு ஜாதகம், ஜோசியம் மீது சிறிது நம்பிக்கை உண்டு. என் ஜாதகத்தைப் பார்த்த ஜோசியக்காரர் நான் 29 வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்றும் இல்லையெனில் இரண்டாம் தாரமாகவே திருமணம் நடக்கும் என்று கூறினார். இது என் மனதை இன்னும் அதிகமாக நடுங்க வைக்கிறது. ஏனெனில் அவள் வீட்டில் அவ்வளவு நாட்கள் கண்டிப்பாகக் காத்திருக்க மாட்டார்கள்.
அவள் வீட்டிலுள்ள அனைவருக்கும் என்னை நன்றாகவே தெரியும். நன்றாகவே பேசுவார்கள். ஆனால் நாங்கள் காதலிப்பது தெரியாது. நான் அவளை முழுவதும் மனைவியாகவே ஏற்றுக்கொண்டேன். அவளும் என்னைக் கண‌வனாக ஏற்றுக்கொண்டாள். இனி என்னால் அவளை கண்டிப்பாகப் பிரிய முடியாது. அவள் இல்லாத வாழ்க்கையை என்னால் கண்டிப்பாக வாழ முடியாது. என் பயத்தைப் போக்க வழி கூறுங்கள்.
தம்பி, 14 வயதில் பாலினச் சுரப்பிகளின் விஷமத்தால் ஆண்-பெண் ஈர்ப்பு வருவதும், அண்மை ஒரு கிறக்கத்தைக் கொடுப்பதும் இயற்கை. எங்கும் அவளே, எல்லாம் அவளே என்று அவள் வியாபித்திருப்பாள்! ஆனால் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கக்கூடிய வயதா அது? அப்போதே இதை வெட்டியிருந்தால் இப்போது படும் அவஸ்தையைத் தவிர்த்திருக்கலாம்.
உங்கள் காதல் அவள் வீட்டாருக்குத் தெரியாதபோது எந்த நம்பிக்கையில் ‘இதற்கு எங்கள் சமுதாயத்தில் எதிர்ப்பு இல்லை', ‘இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இல்லை' என்று சொல்கிறீர்கள்?
உங்களை அவளுடைய நண்பனாகத் தெரியும் அவர்களுக்கு, காதலன் என்று தெரிந்தால் ‘ரியாக் ஷன்' எப்படி இருக்குமோ என்று கவலைப்படுவதால், பிரித்துவிடுவார்களோ என்ற பயம், தற்கொலை முயற்சிகள் எல்லாம்!
நிலைமையை இன்னும் மோசமாக்குவது ‘கணவன், மனைவியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களோ?' என்கிற ஐயம்! காதல் கொடுத்த போதையில், வரம்பு மீறிவிட்டீர்களோ? உங்கள் வயதில் உணர்வுகளின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதால், பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் செயல்படுவீர்கள்.
இந்த வயதில் தாம்பத்திய உறவு ‘டேஞ்சர்'! போதையளித்து அடிமையாக்கிவிடும் (என் கணிப்பு தவறானால் மகிழ்ச்சி.!) போதை தலைக்கேறியதால் சில நிஜங்களைப் பார்க்கத் தவறிவிட்டீர்கள். படிப்பை முடித்து, வேலைக்குப் போய், சொந்தமாக வீடு கட்டி.....இதெல்லாம் 10 வருடங்களில் முடியுமா? மன முதிர்ச்சி இல்லாத பேச்சு. ஜோசியர் சொன்னதுபோல உங்களுக்கு 29 வயதாகிவிடும்!
உங்கள் சிந்தனையின் ‘ட்ராக்'கை மாற்றுங்கள். படிப்பு, வேலை இவைதான் உங்கள் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும். வேலையில் அமர்ந்தபின், பெண் கேளுங்கள். அவர்கள் மறுத்துவிட்டாலும் உங்கள் திருமணத்தை யார் தடை செய்ய முடியும்? காதலுக்காகச் சாவதைவிட, வாழ்வது உயர்ந்ததல்லவா?
Keywords: 

-தஹிந்து

Thursday, August 13, 2015

பொசிஷனிங்: வெற்றியின் ரகசியம் இதுதான்!-வணிகம்-எஸ்.எல்.வி.மூர்த்தி

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை.
அறிவுக்கும் வெற்றிக்கும் சம்பந்தம் இல்லை என்று எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள். அதேபோல, தயாரிப்புப் பொருட்கள், நிறுவனங்கள், தனி மனிதர்கள், தலைவர்கள் என எதை, யாரை எடுத்துக்கொண்டாலும், அவர்கள் வெற்றிக்கு அடித்தளம், மக்கள் மனங்களில் அவர்கள் உருவாக்கியிருக்கும் நல்ல அபிப்பிராயம்தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். இப்படி நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்துவதைத்தான் பொசிஷனிங் என்று மேலாண்மை மேதைகள் சொல்கிறார்கள்.
பிறர் மனங்களில் தெளிவான, சாதகமான பிம்பத்தை உருவாக்க, எல்லோரிடமும் நான்கு ஆயுதங்கள் இருக்கின்றன. இவற்றை நான்கு P-க்கள் என்று சொல்வார்கள். அவை:
Product (பொருள்)
Price (விலை)
Promotion (விற்பனை மேம்பாடு)
Physical Distribution (விநியோகம்/ பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் முறை)
புத்திசாலிகள் இந்த நான்கு ஆயுதங்கள் மூலம் தங்களுக்குச் சாதகமான, தனித்துவ பிம்பங் களை மக்கள் மனங்களில் உருவாக் குகிறார்கள்.
பொருள் வழி
2003 ம் ஆண்டு, நோக்கியா நிறுவனம், தன் நோக்கியா 1100 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தார்கள். போன், டார்ச் லைட், அலாரம் கடிகாரம், சூரிய வெளிச்சம் பிரதிபலிக்காத ஸ்க்ரீன்கள், தூசி, வியர்வை ஆகியவை பாதிக்காத வடிவமைப்பு, கீழே விழுந்தாலும் பாதிக்கப்படாத உறுதியான அமைப்பு இந்தியக் கிராமப்புறங்களுக்காகவே வடிவமைத்தார்கள். இந்தியாவில் தொட்ட விற்பனைச் சிகரங்களால், உலகம் முழுக்க அரங்கேற்றினார்கள். விற்பனை எண்ணிக்கை 25 கோடிகள் தொட்டது: அதிகம் விற்பனையான செல்போன் என்னும் சாதனை படைத்தார்கள்.
பார்லே ஜி - உலகில் அதிகமாக விற்பனையாகும் பிஸ்கெட், 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருட விற்பனை கொண்ட பிஸ்கெட், 66 வருடங்களாகத் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டிவரும் பிஸ்கெட். எப்படி நடக்கிறது இந்த மேஜிக்? முக்கிய காரணங்கள் - மைதா மாவு, பால், குளுக்கோஸ் ஆகிய மூன்றும் சேர்த்துத் தயாரிப்பதால், பால் மணம், குளுக்கோஸின் இனிப்புச் சுவை இரண்டும் கொண்டதாய், குழந்தைகளின் உடல், அறிவு வளர உதவும் தனித்துவ பலம்.
வெல்வெட், சிக் ஷாம்பூகள், உஜாலா வெளுப்பான் (Whitener), ஆப்பிள் ஐபேட், ஐ போன், ஐ பாட், ஆப்பிள் வாட்ச், மெக்டொனால்ட்ஸ் பர்கர், கேஎஃப்சி (KFC) ஃப்ரைட் சிக்கன் எனப் புதுமைத் தயாரிப்புகளால் தொழில் உலகில் தனிமுத்திரை பதித்திருக்கும் பிரபலங்கள் பலர்.
விலை வழி
27 நாடுகளில் 11,000 கடைகள், 22 லட்சம் ஊழியர்கள். ஆண்டு விற்பனை 486 பில்லியன் டாலர்கள் (சுமார் 30 லட்சம் கோடி ரூபாய்).வால்மார்ட்டின் சாதனைப் பட்டியல். இதன் ரகசியம்? எப்போதும் குறைந்த விலை என்னும் தாரக மந்திரம்!
சோப்புத்தூள் உலகின் தனிக்காட்டு ராஜாவாக இருந்தது ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனியின் ஸர்ஃப். சர்வ வல்லமை கொண்ட இந்தப் பன்னாட்டுக் கம்பெனியைத் தன் குறைந்த விலை நிர்மாவால் புற முதுகிடவைத்தார் கஸன்பாய் பட்டேல். ஏராளமான தொழில் முனைவர்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யும்போது, போட்டியாளர்களைவிட விலையைக் குறைத்து விற்கிறார்கள். இது நல்ல யுக்திதான். ஆனால், குறைவான விலை மட்டுமே போதும் என்னும் குறுகிய எண்ணத்தால், மற்ற 3 P க்களை உதாசீனம் செய்வதும், தரத்தைக் காவு கொடுப்பதும், தனக்குத்தானே குழி பறிக்கும் முயற்சிகள்.
விற்பனை மேம்பாடு வழி
சுவையான, புத்துணர்ச்சி ஊட்டும், தாகம் தீர்க்கும் குளிர் பானம் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தியதுதான் கோகோ கோலாவின் உலகளாவிய மாபெரும் விற்பனைக்கு முக்கிய காரணம். இந்தக் கோட்டையை பெப்ஸி தகர்த்ததும் பொசிஷனிங் மூலம்தான்.
மனதால் நீங்கள் இளைஞரா, பெப்ஸி உங்களுக்காக(Now it’s Pepsi for those who think young), துடிப்போடு வாருங்கள், உங்கள் தலைமுறை பெப்ஸி தலைமுறை (Come alive you’re the Pepsi generation) என்னும் விளம்பர முழக்கங்கள் மூலமாக, இளைய தலைமுறையினர் குடிக்கவேண்டிய ஒரே பானம் பெப்ஸிதான் என்னும் பொசிஷனிங்கை உருவாக்கி, அவர்களைக் கோகோ கோலாவிடமிருந்து விலக்கி, தனக்கு மட்டுமே பெப்ஸி சொந்த மாக்கிக்கொண்டது.
1977 வெளிநாட்டுக் குளிர் பானங்கள் இந்தியாவைவிட்டு வெளி யேற்றப்பட்டன. 1989 இல் தம்ஸ் அப், இளைஞர் இளைஞிகளின் இதயத் துடிப்பாக இருந்த இருபத்து நான்கு வயதான சல்மான் கானைத் தன் தூதுவர் (Brand Ambassador) ஆக்கியது. ஜெயித்தது.
அமுல் வெண்ணெய் அறிமுகம் செய்யப்பட்டபோது, அவர்களுடைய போட்டியாளர்கள் பிரம்மாண்ட பால்சன் (Polson) வெண்ணெய். வித்தியாச விளம்பரங்களால், அமுல் நம் மனங்களில் சிம்மாசனம் போட்டிருக்கிறது. .
சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப் என்னும் முழக்கத்தோடு தனக்கெனத் தனியிடம் பிடித்திருக்கிறது லக்ஸ் சோப், சினிமா நடிக நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே விளம்பரங்களில் ஜொலித்துக்கொண்டிருந்தபோது, ஒரு பிசாசைத் தன் மாடலாகக் களமிறக்கிய ஒனிடா டிவி - இப்படி விளம்பரங்கள் மூலமாகத் தம்மைப் பொசிஷனிங் செய்துகொண்டிருக்கும் பொருட்கள் ஏராளம்.
விநியோகம் வழி
சாதாரணமாக நிறுவனங்கள், ஏஜெண்டுகள், விநியோகஸ்தர்கள், கடைகள் ஆகியவை மூலமாக வாடிக்கையாளர்களிடம் தங்கள் தயாரிப்புகளைக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்களையே தங்கள் விற்பனைப் பிரதிநிதிகளாக்கும் மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் (MLM) என்னும் வித்தியாசப் பாதையில் தொடர்கிறார்கள்.
இன்னொருவிதமான விநியோகம், தங்கள் கடைகளில் மட்டுமே தங்கள் தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்வது. எல்லா நகைக்கடைகளும் காலம் காலமாகப் பின்பற்றும் முறை இது.
கல்யாண் ஜூவல்லர்ஸ், லலிதா ஜூவல்லரி, ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ், ஜாஸ் ஆலுக்காஸ் போன்றவர்களின் நகைகளை நீங்கள் வேறு எங்கும் வாங்கமுடியாது: அவர்கள் கடைகளில் மட்டும்தான் வாங்கமுடியும்.
பாட்டா கம்பெனியும், தன் காலணிகளை இந்த விதத்தில்தான் விற்பனை செய்கிறார்கள்.
எந்த நாட்டுக்கும், எல்லோருக்கும் ஏற்ற கொள்கை
மேலே சொன்ன வெற்றிக்கதைகளை மனக்கண்களுக்கு முன்னால் கொண்டுவாருங்கள். சோப், பிஸ்கெட், கூல் டிரிங்க்ஸ், பர்கர், ஃப்ரைட் சிக்கன், ஷாம்பூக்கள், சோப்புத்தூள், உஜாலா வெளுப்பான் (Whitener), செல்போன், டி.விக்கள், ஆப்பிள் ஐபேட், ஐ போன், ஐ பாட், ஆப்பிள் வாட்ச், தங்க வைர நகைகள் விதவிதமான பொருட் களின் அமோக விற்பனைக்குப் பொசிஷனிங் மந்திரச்சாவியாக இருந்து வருகிறது.
இன்னொரு சமாச்சாரம். ஸ்வீடன் நாட்டு பர்னிச்சர் கம்பெனி ஐக்கியா (ikea), ஜப்பானின் QB ஹவுஸ் (QB House) சலூன், அமெரிக்க வால்மார்ட், அமேசான் இணையதளக் கடை, ஸ்டார்பக்ஸ் காபி, ஈ பே இணையதள ஏலக்கடை, சீனாவில் ஓரியோ பிஸ்கெட், மெக்ஸிகோவில் அல்ட்ரா சோப் பவுடர் என எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் கொள்கை பொசிஷனிங்.
பொருட்களின் இடங்களில் அரசியல் கட்சி, நாட்டுத் தலைவர்கள் ஆகியோரை வைத்துப் பாருங்கள். பொசிஷனிங் கச்சிதமாகப் பொருந்தும். பிசினஸ் செய்கிறீர்களா? உங்கள் விற்பனையில் சிகரம் காணப் பொசிஷனிங் ராஜபாட்டை போடும்: வேலையிலும், வாழ்க்கையிலும் உயரவேண்டுமா? பொசிஷனிங் மூலம் தனித்துவம் காட்டுங்கள்.
வெற்றிமீது வெற்றி வந்து உங்களைச் சேர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


நன்றி - த இந்து

Wednesday, January 07, 2015

இண்ட்டர்வ்யூவில் எடக்கு மடக்கு செஞ்ச ஏகம்பவாணனின் கதை

முகேஷ் நேர்முக அறைக்குள் வேகமாக நுழைகிறார். அங்கு உள்ள தேர்வாளர்களைப் பார்த்துத் தலையசைத்தபடி அவர்கள் எதிரிலுள்ள நாற்காலியில் அமர்கிறார். கால்மேல் கால் போட்டுக் கொண்டபடி உட்கார்ந்திருக்கிறார். இது பற்றி​ எல்லாம் கவலைப்படாததுபோல் தேர்வாளர்கள் கேள்விகளைக் கேட்கத் தொடங்குகிறார்கள். 



தேர்வாளர் 1 – உங்க​ பெயர் என்ன?
முகேஷ் - ‘அடுத்ததாக மிஸ்டர் முகேஷை உள்ளே அனுப்புங்க’ன்னு நீங்க சொன்ன பிறகுதான் அட்டெண்டர் என்னை அனுப்பியிருப்பார்னு நினைக்கிறேன்.
தேர்வாளர்கள் சிறிது அதிர்ச்சியடைகிறார்கள்.
தேர்வாளர் 2 – நீங்க லேப்டாப் வச்சிருப்பீங்க..
முகேஷ் - (அவர் முடிக்குமுன் குறுக்கிடுகிறார்) - சந்தேகமில்லாமல் வச்சிருக்கேன். இந்தக் காலத்திலே பள்ளி மாணவர்கள்கூட வச்சிருக்காங்க. ​இலவசமா வேறு அரசு அவங்களுக்குக் கொடுக்குது. நான் கம்ப்யூட்டர் படிப்பிலே முதுநிலைக் கல்வி படிச்சிருக்கேன். என்கிட்டே லேப்டாப் இல்லாம இருக்குமா?
தேர்வாளர் 2 – (கோபத்துடன்) இப்ப என்ன, நான் கேட்டதுக்குச் சாரி சொல்லணுமா?
முகேஷ் - அது உங்க மனப்பக்குவத்தைப் பொருத்தது. நான் உங்களைக் கட்டாயப்படுத்த மாட்டேன்.
தேர்வாளர் 1 – அவர் லேப்டாப் தொடர்பாக எதையோ கேட்க நினைக்கிறார். அதற்காகத்தான் அது தொடர்பாக ஒரு கேள்வியை முதலில் கேட்டிருக்கிறார் மிஸ்டர் முகேஷ்.
முகேஷ் – நேரடியாகவே அந்தக் கேள்வியை அவர் கேட்டிருக்கலாம். பரவாயி​ல்லே, இப்பதான் அந்தக் கேள்வியைக் கேளுங்க.
தேர்வாளர் 2 – லேப்டாப்பின் பவர் ஸ்விட்சில் ஒரு ‘ஐகான்’ இருக்குமே, அதன் அர்த்தம் என்ன?
முகேஷ் மவுனமாக இருக்கிறார்.
தேர்வாளர் 2 – கம்ப்யூட்டரை ஆன், ஆஃப் செய்ய ஒரு பட்டனை அழுத்துவோமே, அதிலே ஒரு குறியீடு இருக்கும் ஏன் அந்தக் குறியீடுன்னு கேட்கிறேன்.
முகேஷ் - சார், தமிழிலே ஒரு பழமொழி இருக்கு. “வடையைத் தின்னச் சொன்னால் துளையை எண்ணலாமா?’’ன்னு. அந்த மாதிரி ஆன்–ஆஃப் ஸ்விட்ச் எதுன்னு தெரிஞ்சுகிட்டா போதாதா? அதுக்கும் மேலே அதிலே இருக்கும் குறியீடை எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது அனாவசியம்.
தேர்வாளர் 1 – உங்கள் பதில்கள் ஆணவமாக இருக்கின்றன. இதுபோல பதிலளித்துக்கொண்டிருந்தால் எங்கள் நிறுவனத்தில் உங்களுக்கு வேலை கிடைப்பது கஷ்டமாகிவிடும். இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
முகேஷ் - நஷ்டம் எனக்கில்லை. உங்கள் நிறுவனத்துக்குத்தான். வேற ஏதாவது நீங்க சொல்லணுமா?
தேர்வாளர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கின்றனர். பின்னர் அறை வாசலை ஒரு தேர்வாளரின் கை காட்டுகிறது. முகேஷ் கவலைப்படாமல் வெளியேறுகிறார்.
பல வருடங்களுக்கு முன் படித்த செய்தி இது. பிரிட்டனிலுள்ள சுமார் 100 பெரிய நிறுவன மேலதிகாரிகளிடம் “நீங்கள் நடத்திய நேர்முகத் தேர்வுகளில் மிக வித்தியாசமாக நடந்து கொண்ட நபரைப் பற்றி சொல்ல முடியுமா?’’ என்று கேட்கப் பலவித விடைகள் கிடைத்தன.
தான் கொண்டுவந்த சான்விட்ச்களைச் சாப்பிட்டுக் கொண்டே விடையளித்த ஒருவர்.
நாற்காலியில் உட்கார மறுத்து நின்று கொண்டே அத்தனை கேள்விகளுக்கும் பதிலளித்த ஒருவர்.
“என்னைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் நிறுவனத்தின் பெயரை என் கையில் பச்சை குத்திக் கொள்வேன்’’ என்ற ஒருவர்.
“எனக்கு நேர்முகத் தேர்வு நடத்துமளவுக்கு உங்களுக்குத் தகுதி இருக்கிறது என்பதை நிரூபியுங்கள்’’ என்று கூறிய ஒருவர்.
இப்படிப் பலவிதத் தகவல்கள் அவர்கள் தந்த பதில்களில் வந்தனவாம்.
முகே​ஷ் நடந்து​கொண்ட விதமும் இப்படித்தான் இருக்கிறது இல்லையா?
சில தமிழ்த் திரைப்படங்களில் இதுபோன்ற காட்சி உண்டு. “தாஜ்மகால் எங்கே இருக்கிறது?’’ என்று தேர்வாளர் கேள்வி கேட்பார். “மெட்ராஸிலே’’ என்பார் வேலைக்காக வந்தவர். தேர்வாளர் திடுக்கிட, “பின்னே என்ன சார்? டெல்லின்னு சரியா சொன்னா மட்டும் எனக்கா வேலையைக் கொடுத்திடப் போறீங்க? ஏற்கெனவே சிபாரிசு ​மூலம் வந்த யாரையாவது செலக்ட் செய்திருப்பீங்க. இந்த நேர்முகமெல்லாம் கண்துடைப்புதானே’’ என்றபடி விரக்தியுடன் வெளியேறுவார் கதாநாயகன்.
முகேஷும் அப்படித்தான். பல நேர்முகத் தேர்வுகளில் தோல்வி கண்டவன். தனது தவறுகள் என்ன என்பதைப் பற்றிச் சிந்திக்காமல் வேண்டுமென்றே தனக்கு வேலைவாய்ப்பு அளிக்காமல் சதிவேலை பின்னப்படுவதாக நினைத்துக் கொண்டிருப்பவர்.
இன்றைய நேர்முகத்​ தேர்வில் அவர் அப்படி நடந்து கொண்டதற்கு ஒரு காரணம் இந்த விரக்தி. ஆனால் இன்னொரு காரணம் மேலும் முக்கியமானது.
அடுத்த மாதம் அவர் வேறொரு வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வைச் சந்திக்கப் போகிறார். அது மேலும் பெரிய நிறுவனம். இன்றைய நேர்முகத்தில் வெற்றி பெற்றால் கிடைக்கக்கூடிய வேலைக்கான ஊதியத்தைவிட அந்தப் பெரிய நிறுவனத்தில் இரண்டு மடங்கு ஊதியம். தவிர அந்தப் பெரிய நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் முகேஷின் உறவினர். அவர் அந்த வேலையை முகேஷுக்கு வாங்கித் தருவதாகக் கூறியிருக்கிறார். இந்த நிலையில் இன்றைய நேர்முகத்தைத் தன் கடந்த கால கோபத்துக்கு வடிகாலாக வெளிப்படுத்திக்கொண்டால் தவறில்லை என்று நினைத்துச் செயல்பட்டிருக்கிறார் முகேஷ்.
இது மிக ஆபத்தான அணுகுமுறை. உறவினர் சொன்னதைச் செய்வாரா? ஒரு மாதத்துக்குள் அவர் வேறு நிறுவனத்துக்கு மாறிவிட்டால்? ஒரு மாதத்துக்குள் குடும்பங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏதாவது ஏற்பட்டுப் பிளவு உண்டாகி விட்டால்? ஒருவேளை அந்த உறவினருக்கு மாற்றலாகி விட்டால்? அல்லது அவர் இறந்து விட்டால்?
இந்தக் கேள்விகளெல்லாம் ‘ஆனாலும் ஓவர்’ என்று நினைப்பவர்களுக்கு மேலும் சில கேள்விகள். இன்றைய நேர்முகத்துக்கான தேர்வாளர்களில் ஒருவர் இந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு அந்தப் பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் ​சேர்ந்து விட்டால்?
பெரிய நிறுவனத்தின் நேர்முகத் தே​ர்வையும் அவரே நடத்தும்படி அமைந்துவிட்டால்? அல்லது குறைந்தபட்சம் இந்தத் தேர்வாளர்களும் பெரிய நிறுவனத்தின் உயர் பதவியில் உள்ளவர்களும் நண்பர்களாக இருந்து முகேஷ் நடந்து கொண்ட விதத்தைப் பற்றிய தகவல்கள் பரிமாறப்பட்டால்? 



யாகாவராயினும் நாகாக்க - மிக முக்கியமாக நேர்முகத் தேர்வுகளில்.
(கணினியில் பவர் ஸ்விட்ச்சில் உள்ள குறியீடு பற்றி அறிய விரும்புபவர்களுக்கு - அதை உற்றுப் பார்த்தால் ஒரு வட்டமும், அதன் மேற்பகுதியில் உள்ள இடைவெளியில் ஒரு செங்குத்தான கோடும் இருப்பதைக் காணலாம். இவை இரண்டும் முறையே 0, 1 ஆகிய எண்களைக் குறிக்கின்றன. கணினிகளைப் பொருத்தவரை, பைனரி எனப்படும் இந்த இரு எண்களாக மாற்றப்பட்டுதான் நம் ஆணைகளைக் கணினி செயல்படுத்துகிறது). 


நன்றி - த இந்து