Monday, April 15, 2013

காவிரி டெல்டாவுக்கு ஆபத்து! ( தஞ்சை - திருவாரூர் - நாகை )


மீத்தேன் அபாயம்

காவிரி டெல்டாவுக்கு ஆபத்து!

திருநாவுக்கரசு

ஐந்து திணைகளில் பாலை, தமிழகத்தில் இல்லை. அந்தக் குறையைப் போக்க, கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர முனைப்பு காட்டுகிறது மத்திய அரசு. தஞ்சை - திருவாரூர் மாவட்டப் பகுதிகளில் மீத்தேன் வாயு மற்றும் பழுப்பு நிலக்கரி எடுத்துக்கொள்ள, ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிட்என்ற வெளிநாட்டு நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு.


 காவிரிப் பாசனப் பகுதியின் விவசாயக் கருவூலங்கள், தஞ்சை - திருவாரூர் - நாகை மாவட்டப் பிரதேசங்கள். பசுமையான இந்த மருத நிலப் பகுதிகளை ஒட்டுமொத்த பாலைவனமாக மாற்ற வந்திருப்பதே இத்திட்டம் எனக் குமுறுகின்றனர் காவிரி விவசாயிகள்.

தமிழ்நாடு - பாண்டிச்சேரி கடலோரப் பகுதியில் அமைந்துள்ள காவிரி பெருங்குழிப் படுகையில் உள்ள பழுப்பு நிலக்கரிப் படிவத்தின் ஒரு பகுதியாக இருப்பதே மன்னார்குடி படுகைப் பகுதியில் மீத்தேன் தொகுதி. இந்த நீள்வடிவ பழுப்பு நிலக்கரி மண்டலம் பாண்டிச்சேரியின் பாகூரில் தொடங்கி, நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் முதல் ஸ்ரீமுஷ்ணம், ஜெயங்கொண்ட சோழபுரம், மன்னார்குடி மற்றும் தெற்குப் பகுதி வரை பரந்துள்ளது" என்கிறது கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவன ஆய்வறிக்கை.


தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு தாலுகாக்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம், குடவாசல், வலங்கைமான் தாலுகாக்களிலும் மீத்தேன் வாயுவும் பழுப்பு நிலக்கரியும் எடுக்கப்பட உள்ளன. சுமார் 691 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது இத்திட்டம். மன்னார்குடியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கவிருக்கிறது. கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிட்.

இந்திய மாநிலங்கள் பலவற்றில் மின் உற்பத்தி கட்டமைப்புக்காகப் பணியாற்றி வருபவர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசு. இவர்பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின், ஒருங்கிணைப்பாளர். இத்திட்டம் குறித்து இவரிடம் பேசினோம்.

திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டப் பகுதிகள் அடங்கிய மன்னார்குடி மண்டல நிலப்பகுதிகளில் தரைமட்டத்திலிருந்து 150 மீட்டர் முதல் 600 மீட்டர் ஆழத்துக்கு, சுமார் 760 சதுர கி.மீ.க்கும் அதிக பரப்பளவில் பழுப்பு நிலக்கரிப் படிமங்கள் இருக்கின்றன என்கிறது ஜி...சி. ஆய்வறிக்கை. ஆசியாவிலேயே மிக அதிக அளவு பழுப்பு நிலக்கரி இங்கே இருக்கின்றனவாம்


 மன்னார்குடியை மையமாகக் கொண்டு திருவாரூர் - தஞ்சை மாவட்டப் பகுதிகளில் சுமார் 690 சதுர கி.மீ. பரப்புக்கு மீத்தேன் வாயு மற்றும் பழுப்பு நிலக்கரி எடுத்திட வரைவுத் திட்டம் தயாரித்துள்ளது அந்த நிறுவனம்" என்றவரிடம், மீத்தேன் வாயு எரிபொருளுக்கும் பழுப்பு நிலக்கரி மின் உற்பத்திக்கும் பக்கபலமாக இருக்ககும். இரண்டுமே நமக்குஇப்பதேவைதானே?" எனக் கேட்டோம்.


இந்தப் பழுப்பு நிலக்கரிப் படிமங்கள் அதிக நுண் துளைகள் கொண்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அந்த நுண்துளைகளுக்குள் அடைபட்டிருக்கும் மீத்தேன் வாயுவை வெளியேற்றிய பின்னரே, பழுப்பு நிலக்கரிப் படிமங்களை வெட்டியெடுக்க முடியும். அப்போது தரைமட்டத்துக்குக் கீழே பூமிக்கடியில் பெருமளவு தண்ணீரை முதலில் வெளியேற்றியாக வேண்டும். இயற்கையின் கொடையான நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றி விட்டால், தஞ்சை - திருவாரூர் - நாகை மாவட்டங்களின் வயல்வெளிகள் அனைத்துமே கருகிப் போய்விடும். விவசாய விளை நிலங்களுக்கும், பொதுமக்களுக்கும் ஜீவாதார பாசன நீரும், குடிநீரும் கிட்டாது போய்விடும். வளமான நிலப்பரப்புப் பாலைவனமாக்கி விடும்!" என்கிறார் இவர்!


மேற்கு வங்கத்தின் பர்த்வான் மாவட்ட தாமோதர் பள்ளத்தாக்கில் ராணிகஞ்ச் பகுதியில் சுமார் 210 சதுர கி.மீ. பரப்பளவில் மீத்தேன் வாயு மற்றும் நிலக்கரியை எடுத்து வருவதாகச் சொல்கிறதே கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனம்என்று பேரழிவுக்கு எதிரான இயக்கத்தின் தலைவர் அத்திவெட்டி லெனினிடம் கேட்டோம்.

அங்கு விளைநிலங்களும், பொதுமக்கள் வசிப்பிடங்களும் மிகமிகக் குறைவு. இங்கு அப்படி அல்ல. ஆசியாவிலேயே இதுபோன்றதொரு மிகப்பெரிய பரப்பளவுக்கு சமவெளி வேளாண் பிரதேசம் வேறெங்குமே இல்லை என்பதுதான், தஞ்சை - திருவாரூர் - நாகை மாவட்டங்களின் காவிரி டெல்டாவின் மாபெரும் தொன்மை!" என்கிறார் லெனின்.


தரைமட்டத்துக்குக் கீழே (core drilling) உள்ளீட்டுத் துரப்பணத் துளைகள் மூலமாக, துரப்பணக் குழாய் கிணறுகள் அமைத்து, நிலத்தடி நீரை அருகருகே இருக்கும் பாசன வாய்க்கால்கள் மூலமாக வெளியேற்ற உள்ளனர். மீத்தேன் வாயு மற்றும் நிலக்கரிப் படிமங்களிலிருந்து வெளியேற்றப்படும் நீர், கடல்நீரைவிட ஐந்து மடங்கு உப்புத்தன்மை கொண்டது. அது வாய்க்கால் வழியாகச் செல்லும் போது விளைநிலங்களின் படிந்திருக்கும் அற்புதமான நுண்ணுயிர்களும், பயிர்களும் மடிந்து போகும். அப்புறம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் பாலைவனமாவதைத் தவிர வேறு வழியில்லை."

திருவாரூர் மாவட்டத்தில் 38 இடங்களிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 12 இடங்களிலும் உள்ளீட்டுக் குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. கடந்த நான்கைந்து மாதங்களாகவே இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டங்களும், பொதுக் கூட்டங்களும் மன்னார்குடி மற்றும் தஞ்சாவூரில் நடைபெற்று வருகின்றன. காவிரி பாசனப் பகுதிக்குள் இத்திட்டத்தை முற்றிலுமாகக் கைவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டத் துணைச் செயலாளர் பி.ஆர். பாண்டியன்.


ஏற்கெனவே காவிரி பொய்த்துப் போச்சு. இப்போது இதுவேற எங்களை வதைக்குது! விளைநிலங்களும், பொதுமக்களும் அடர்த்தியாக உள்ள பகுதியில் இத்திட்டத்துக்கு முன்னுரிமை அளித்துள்ளது முதல் குற்றம். பொதுமக்களுக்கு மருந்தில்லா நோய்கள் பரவக்கூடிய அபாயம் ஏற்படும். வெளியேற்றப்படும் நீரில் உள்ள மிக அதிகளவு உப்பு, கதிரியக்கக் கழிவுகள் மற்றும் ரசாயனக் கழிவுகளால் சுமார் இருபது லட்ச ஏக்கர் வயல்வெளிகளிலும் பூண்டுச் செடிகள் முளைக்கக் கூட லாயக்கற்றதாகப் போய்விடும். எங்கள் மூன்று மாவட்ட மக்களின் ஒரே வாழ்வாதாரமே விவசாயம் தான். அதுலயும் மண்ணை அள்ளிப் போட்டா நாங்க எங்கே போவோம்" என்கிறார் பி.ஆர். பாண்டியன்.

நன்றி - கல்கி

பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் ( பி.பி.ஸ்ரீனிவாஸ்) - ஒரு பார்வை

பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் எனப்படும் பி.பி.ஸ்ரீனிவாஸ், தனது பெயரின் ‘பி.பி.எஸ்’ என்னும் ஆங்கிலச் சுருக்கத்துக்கு Play Back Singer என்று பொருத்தமாக விரிவாக்கம் கூறி, தான் பின்னணிப் பாடகராக இருந்ததில் முழு நிறைவும் மகிழ்வும் கண்டவர். 1930-ஆம் ஆண்டு, ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடாவில் பிறந்த இவருக்கு 82 வயது.



இவரது அம்மாவுக்கு இசையில் மிகுந்த விருப்பம். அது அப்படியே மகனிடமும் தொற்றிக்கொண்டது. ஆனால், இவரது அப்பா இவரை ஓர் அரசாங்க உத்தியோகஸ்தராக்கி அழகுபார்க்கத்தான் ஆசைப்பட்டார். தன் மகன் இசையின் பக்கம் தலைவைத்தும் படுக்கக்கூடாது என்று தீர்மானித்தார். அதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. பி.பி.ஸ்ரீனிவாஸின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்த ஒரு ஜோதிடர், இவர் இசைத் துறையைத் தேர்ந்தெடுத்தால் இவரது வாழ்க்கையில் பல இன்னல்கள் நேரும், மிகுந்த சோதனைகளுக்கு உள்ளாவார் என்று பலன் சொன்னார்.


எனவே, பி.பி.ஸ்ரீனிவாஸின் தந்தையார் தன் மகனை பி.காம். படிக்க வைத்தார். பட்டப் படிப்பு முடிந்ததும், தன் மகனை வழக்கறிஞராக்கிப் பார்க்கவேண்டும் என்கிற ஆசையில், இவரை சென்னை சட்டக் கல்லூரியில் சேர்த்து விட்டார். எனினும், இசையில் இருந்த ஈடுபாடு காரணமாக, பி.பி.ஸ்ரீனிவாஸால் சட்டப் படிப்பில் நாட்டம் கொள்ள இயலவில்லை. ஜோஸியத்தைப் பொய்யாக்கியே தீருவது என்று சவால் விட்டு, இசைத் துறையைத் தேர்ந்தெடுத்தார்.


ஏ.எம்.ராஜாவை அறிமுகப்படுத்திய ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன்தான் பி.பி.ஸ்ரீனிவாஸையும் பின்னணிப் பாடகராக அறிமுகப்படுத்தினார். ஜெமினியின் ‘மிஸ்டர் சம்பத்’ படத்தில்தான் பி.பி.ஸ்ரீனிவாஸ் பின்னணிப் பாடகராக அறிமுகம் ஆனார்.


கர்னாடக இசை மட்டுமின்றி இந்துஸ்தானி இசையிலும் வட இந்தியப் பாடகர்களுக்கு நிகரான திறமை கொண்டவர் பி.பி.ஸ்ரீனிவாஸ். கஸல் பாடல்களை அழகாகப் பாடுவதில் மன்னன். ‘தவப்புதல்வன்’ படத்தில் தமிழ்ப் பாடகருக்கும் இந்துஸ்தானி பாடகருக்கும் ஒரு போட்டி வரும். ‘இசையில் சிறந்தது தமிழ் இசையே’ என்று தொடங்கும் அந்தப் பாடலில் தமிழ்ப் பாடகராக சிவாஜியும், அவருக்குப் போட்டியாக இந்துஸ்தானி இசை பாடுபவராக நாகையாவும் நடித்திருப்பார்கள்.


சிவாஜிக்கு டி.எம்.எஸ். பின்னணி பாட, நாகையாவுக்குக் இந்துஸ்தானியில் பின்னணி பாடுவார் பி.பி.எஸ். கதைப்படி தமிழ் இசைதான் சிறந்தது எனக் காட்டுவதற்காக டி.எம்.எஸ்ஸின் குரலை கம்பீரமாக உயர்த்தியும், பி.பிஎஸ்ஸின் குரலை பம்மிப் பதுங்குகிற மாதிரி வளைந்தும் குழைந்தும் பாடச் செய்திருந்தாலும், அந்தப் பாடலில் பி.பி.எஸ்ஸின் குரலில் வெளீப்பட்ட இனிமையை மறுக்கவோ மறக்கவோ முடியாது. இப்போதும் கேட்டுப் பாருங்கள், பி.பி.எஸ்ஸின் மயக்கும் குரலில் இந்துஸ்தானி இசை உங்கள் காதுகளை ஈரமாக்கும்.


தெலுங்கு, கன்னடம், இந்தி என எட்டு மொழிகள் தெரிந்தவர் பி.பி.ஸ்ரீனிவாஸ். எட்டு மொழிகள் தெரியும் என்றால், வெறுமே பேச, பாட மட்டுமல்ல; எட்டு மொழிகளிலும் கவிதை புனையத் தெரியும் அளவுக்கு வல்லமை பெற்றவர்.


உருக்கமான பாடல்களை இவர் பாடிக் கேட்கும்போது உண்டாகும் பரவசமே தனி! பேசும்போது கணீரென்று, கம்பீரமாக ஒலிக்கும் இவர் குரல் பாடும்போது மட்டும் மென்மையாகக் குழைவது ஓர் ஆச்சரியம்! தமிழில் ஜெமினி கணேசனுக்கு ஏ.எம்.ராஜாவின் குரல்தான் பொருத்தமானது பலரும் நினைத்திருந்த காலமும் இருந்தது. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே’ என்கிற பாடலை முதன்முதலாக ஜெமினிகணேசனுக்கு பி.பி.ஸ்ரீனிவாஸைப் பின்னணி பாட வைத்தார் ஜி.ராமநாதன். அது அத்தனைக் கச்சிதமாக அமைந்துவிடவே, அது முதல் ஜெமினிகணேசனுக்கு அதிகம் பாடத் தொடங்கினார் பி.பி.எஸ்.



பி.பி.எஸ்ஸின் குரலில் ‘மயக்கமா, கலக்கமா? மனதிலே குழப்பமா?’ பாடலைக் கேட்டு உருகாதவர்கள் இருக்க முடியுமா என்ன? ‘நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை...’, என சோகத்தில் மூழ்குவதாகட்டும், ‘ரோஜா மலரே ராஜகுமாரி’, ‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘தாமரைக் கன்னங்கள், தேன்மலர்க் கிண்ணங்கள்’ எனக் காதலில் களிப்பதாகட்டும்... பி.பி.எஸ்ஸின் குரல் செய்யும் மாயாஜாலத்துக்கு நிகரில்லை.


பி.பி.எஸ் - எஸ்.பி.பி. இந்த எழுத்து ஒற்றுமையில் அதிகம் மகிழ்ந்தவர் ’பாடும் நிலா பாலு’வான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன். தன்னை பி.பி.எஸ்ஸின் விசிறி என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்பவர். திரைத் துறையில் வாய்ப்பு வேண்டி அவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனை அணுகியபோது, தான் பி.பி.எஸ்ஸின் தீவிர ரசிகன் என்றும், அவரது பாடல்களை அட்சரம் பிசகாமல் அப்படியே தன்னால் பாட முடியும் என்று சொல்லி, அவர் பாடிக் காண்பித்த பாடல்... பி.பி.எஸ்ஸின் ‘நிலவே என்னிடம் நெருங்காதே...!’ வேடிக்கை என்னவென்றால், நிலவை நெருங்காதே என்று பாடி வாய்ப்புக் கேட்ட அதே எஸ்.பி.பி-தான் எம்.ஜி.ஆருக்காக ‘ஆயிரம் நிலவே வா’ என்று அழைத்துப் பாடி பிரபலமானார்.

கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாருக்கு பி.பி.எஸ். பாடிய ஏராளமான பாடல்கள் சூப்பர்டூப்பர் ஹிட்! பின்னர் ஏற்பட்ட ஒரு சின்ன மனஸ்தாபத்தால் பி.பி.எஸ். குரல் வேண்டாம் என்று மறுத்து, தானே சொந்தக் குரலில் பாடத் தொடங்கிவிட்டார் ராஜ்குமார். அப்போதும் கோபமோ வருத்தமோ கொள்ளவில்லை பி.பி.எஸ். ‘ராஜ்குமார் மிகச் சிறந்த பாடகர். அவர் குரல் கம்பீரமானது’ என்று பெருந்தன்மையோடு பாராட்டினார் பி.பி.ஸ்ரீனிவாஸ்.

மற்றவர்களை ஊக்கப்படுத்திப் பாராட்டுவதில் வஞ்சனையே செய்வதில்லை பி.பி.ஸ்ரீனிவாஸ். ‘ஜானகியா! அடேயப்பா! கேக்கணுமா! அற்புதமான பாடகி!’ என்பார். ‘ஏ.எம்.ராஜாவின் குரலில் உள்ள குழைவும் இனிமையும் யாருக்கு வரும்?’ என்பார். ‘சலீல் சௌத்ரி மிகப் பெரிய கம்போஸர்! எப்பேர்ப்பட்ட மனுஷன்’ என்று பாராட்டுவார்.

நமது ஜமுனாராணி, எம்.எஸ்.ராஜேஸ்வரி போன்று அந்தக் காலத்தில் அழகான, இனிமையான குரலில் பாடி, இந்தித் திரையுலலில் பிரபல பாடகிகளாக இருந்தவர்கள் கீதா தத், ஷம்ஷத் பேகம் ஆகியோர். அவர்களுடன் இணைந்து பாடியிருக்கிறார் பி;.பி.ஸ்ரீனிவாஸ். ‘உங்கள் குரல் முகம்மது ரஃபியின் குரலைப் போன்று இனிமையாக உள்ளது’ என்று அவர்கள் மிகவும் பாராட்டியதோடு, இவரோடு இணைந்து பாடுவதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார்கள்.

இந்திப் பாடகர் கிஷோர்குமாரின் பாடல்களில் ஒரு சிறப்பம்சம் உண்டு. பாடிக்கொண்டு இருக்கும்போதே ‘ஹைலுலு ஹைலுலு ஹைலுலூ...’ என்று குரலை உருட்டுவார். ‘ஜிந்தகி ஏக்சஃபர் ஹைசுஹானா...’ பாடல் போன்று பல பாடல்களில் இந்த குரல் வித்தையைச் செய்திருக்கிறார் அவர். இப்படிக் குரலை உருட்டும் வித்தையை  ‘யோட்லிங்’ என்பார்கள். இப்படிப் பாடுவது கஷ்டம். தமிழில் அந்த வித்தையை முதன்முதலில் செய்து காட்டியவர் பி.பி.ஸ்ரீனிவாஸ்தான்!

சினிமா பாடல்கள் மட்டுமின்றி, பக்தி ரசம் சொட்டும் ‘சாரதா புஜங்க ஸ்தோத்திரம்’, ’ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம்’ போன்றவற்றையும் தமது இனிமையான குரலில் பாடியிருக்கிறார் பி.பி.எஸ். 

இவர் ஒரு பாடகர் மட்டுமல்ல; நினைத்த மாத்திரத்தில் கவிதை புனையும் ஆற்றல் பெற்ற வரகவியும் ஆவார். தனக்குத் தெரிந்த எட்டு மொழிகளிலும் லட்சக்கணக்கான பாடல்களை எழுதியிருக்கிறார் இவர். எந்த விழாவிலாவது இவர் கலந்துகொண்டால் அந்த விழா குறித்து இவரின் ஒரு வாழ்த்துப் பாடல் நிச்சயம் இருக்கும். தெரிந்தவர்களுக்குப் பிறந்த நாள், திருமண நாள் என்றால் அதற்கும் ஒரு வாழ்த்துப் பாட்டு எழுதி அனுப்பி வைப்பார்.

இவர் தான் எழுதும் பாடல்களில் ஒரு புதுமையைச் செய்வார். அதாவது, பதினைந்து, இருபது வரிகளில் இவர் கவிதை அமைந்ததென்றால், ஒவ்வொரு வரியிலிருந்தும் ஐந்தாவது எழுத்தை மட்டும் எடுத்துச் சேர்த்துப் படித்தால், அது அந்த விழாவுக்கான, அல்லது அந்த விழா நாயகருக்கான வாழ்த்துரையாக ஆசி கூறுவது போன்று வாக்கியம் அமையும்!

பிறரை மனம் கனிய வாழ்த்துவது என்பது இவருக்கு ரொம்பவும் பிடித்தமானது. எப்போதும் இவரது சட்டைப் பையில் பத்துப் பன்னிரண்டு பேனாக்கள் வெவ்வேறு நிறங்களில் இருக்கும். சட்டென்று அவற்றை எடுத்து  வண்ண வண்ண எழுத்துக்களில் கவிதையோ வாழ்த்தோ எழுதுவது இவர் பழக்கம்.



சென்னை, வுட்லண்ட்ஸ் டிரைவ் இன் ரெஸ்ட்டாரெண்ட் இருந்தவரையில், இவரை நாள் தவறாமல் அங்கே பார்க்கமுடிந்தது. வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வைத்தால் இவர் வரும் ஒரே இடம் அதுதான். இவருக்கு ரொம்பப் பிடித்தமான இடம் அது. அவரைச் சந்திக்க விரும்புகிறவர்களும் சரியாக அவர் வரும் நேரத்தைக் கணக்கிட்டு அங்கே வந்து அவருக்காகக் காத்திருப்பார்கள்.

உடையில் மிகவும் கவனம் செலுத்துவார் பி.பி.எஸ். எம்.ஜி.ஆருக்கு வெள்ளைத் தொப்பி அடையாளம் போன்று பி.பி.ஸ்ரீனிவாஸும் கறுப்பும் வெளுப்பும் கலந்த ஒரு தொப்பியை ரொம்பக் காலம் அணிந்திருந்தார். பின்பு, அதைத் துறந்து தங்க ஜிகினா பளபளக்கும் ஒரு டர்பனை அணியத் தொடங்கினார். ’சக்கரவர்த்தி போல உடை அணியணும்; சாமானியன் போல கலந்து பழகணும்’ என்பது பி.பி.எஸ்ஸின் சித்தாந்தம். அந்த அளவுக்கு எல்லோரிடமும், எந்தவொரு சின்ன பந்தாவுமின்றி எளிமையாக, இனிமையாகப் பேசிப் பழகுவதில் பி.பி.எஸ்ஸுக்கு நிகர் இல்லை.

’மெல்லிசை’ என்று சொல்கிறபோதே ‘பி.பி.ஸ்ரீனிவாஸ்’ என்ற சொல்லும் சேர்ந்து நம் மனத்தில் உதிக்கிறது. அந்த அளவுக்குத் தன் கானக் குரலால் காற்றில் தேனை நிரப்பியவர் பி.பி.ஸ்ரீனிவாஸ்.
சமீபத்தில் கர்நாடக அரசு, பி.பி.எஸ்ஸின் இசைச் சேவையைப் பாராட்டி 2500 சதுர அடியில் ஒரு பிளாட்டை வழங்கி கௌரவித்தது. 

மற்றபடி... தமிழ் இசை, இலக்கியத்துக்குச் சிறந்த பங்களிப்புச் செய்யும் ஜாம்பவான்களைத் தமிழ்கூறும் நல்லுலகம் கண்டுகொள்வதில்லை என்பது ஒரு சாபம்! அந்த வகையில் எழுத்தாளர் சுஜாதா, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், பாடகர் டி.எம்.எஸ். வரிசையில் பி.பி.ஸ்ரீனிவாஸுக்கும் சுண்டல் மாதிரி யார் யாருக்கோ விநியோகம் ஆகிற தமிழக அரசின் ‘கலைமாமணி’ பட்டம் தவிர, எந்த உயரிய விருதும் கிடைத்ததில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்தான். 


வழக்கம்போல், அந்த விருதுகளுக்குக் கொடுப்பினை இல்லை என்று நாம் நம் மனத்தைச் சமாதானம் செய்துகொண்டாலும், ஒரு பக்கம் இம்மாதிரி மூத்த கலைஞர்களுக்கு உரிய மரியாதை செய்யாத நமது அசிரத்தையை நினைத்து எரிச்சல் ஏற்படத்தான் செய்கிறது.



‘நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
...’
பி.பி.எஸ்ஸின் குரல் காற்றில் கரைகிறது.


 ன்றி - விகடன்


பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் (83) சென்னையில் நேற்று காலமானார்.


சென்னை சி.ஐ.டி. நகரிலுள்ள தனது இல்லத்தில் மதிய உணவுக்குப் பின் ஓய்வெடுத்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.


ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை பூர்விகமாகக் கொண்ட பி.பி.ஸ்ரீநிவாஸ் இளம் வயதில் இருந்தே இசையில் ஈடுபாடு மிகுந்தவராக இருந்தார். சிறந்த குரல் வளம் கொண்ட அவரை, குடும்ப நண்பரான ஈமனி சங்கர சாஸ்திரி என்ற வீணைக் கலைஞர் சென்னைக்கு அழைத்து வந்தார்.


1952ஆம் ஆண்டு வெளிவந்த "மிஸ்டர் சம்பத்' என்ற படத்தில் இரண்டு, மூன்று வரிகள் கொண்ட பாடல்களை முதன்முதலாகப் பாடினார்.


பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாரான "ஜாதகம்' என்ற படத்தில் பாடிய ""சிந்தனை ஏன் செல்வமே....'' என்ற பாடல் அவருக்கு பரவலான பாராட்டுக்களைப் பெற்று தந்தது. பின்னர் "விடுதலை' படத்தில் இடம் பெற்ற ""உன்னாலே நான் என்னாலே...'', "பிரேம பாசம்' படத்துக்காக "அவனல்லால் புவியின் மீது...'', "அடுத்த வீட்டுப் பெண்' படத்தில் இடம் பெற்ற ""கண்ணாலே பேசி பேசி கொல்லாதே...'' ஆகிய பாடல்கள் சினிமா துறையில் பி.பி.ஸ்ரீநிவாஸýக்கு தனித்துவமான இடத்தை உருவாக்கி தந்தன. ""காலங்களில் அவள் வசந்தம்...'', ""பால்வண்ணம் பருவம் கண்டு...'', ""என்னருகே நீ இருந்தால்...'', பொன் ஒன்று கண்டேன்...'', ""மயக்கமா கலக்கமா...'', ""நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்...'' ஆகிய பாடல்கள் பி.பி.ஸ்ரீநிவாஸýக்கு பெரும் புகழைத் தேடி தந்தன.


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காளி, மராத்தி, கொங்கணி உள்ளிட்ட 12 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், காந்தாராவ் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுக்கு பின்னணி குரல் பாடியுள்ளார். குறிப்பாக ஜெமினி கணேசனுக்கு பெரும்பான்மையான பாடல்களைப் பாடியுள்ளார். சிறந்த பாடகராக விளங்கிய பி.பி.எஸ். கவிதைகள் எழுதுவதிலும் தேர்ந்தவராக இருந்தார்.


2010இல் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த "ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் பாடிய ""பெம்மானே....'' பாடலும் தமிழ் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்ற பி.பி.எஸ். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.


இறுதிச் சடங்கு: சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள இல்லத்தில் பி.பி.ஸ்ரீநிவாஸின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பாடகிகள் எஸ்.ஜானகி, பி.சுசீலா, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், பாடலாசிரியர் வாலி உள்ளிட்ட திரையுலகத்தினர் பி.பி.எஸ். உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


பி.பி.ஸ்ரீநிவாஸýக்கு மனைவி ஜானகி, நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இறுதிச் சடங்குகள் கண்ணம்மாபேட்டை மயானத்தில் திங்கள்கிழமை நடக்கிறது.


ஆளுநர் கே. ரோசய்யா: ஆளுநர் கே. ரோசய்யா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:


பி.பி. ஸ்ரீநிவாஸ் மறைவு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இனிய குரலுக்குச் சொந்தக்காரரான அவர், பின்னணி பாடகராக பல்வேறு மொழித் திரைப்படங்களில் ஏராளமான பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர்.


ஸ்ரீ வெங்கடேஸ்வர சுப்ரபாதம், சாரதா புஜங்க ஸ்தோத்திரம், புரந்தரதாசர் கீர்த்தனை உள்ளிட்ட அவருடைய ஆன்மிக பாடல்கள் உலக அளவில் புகழ்பெற்றவை.


இத்தகைய சிறந்த பாடகரின் மறைவு, திரையுலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடைய குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.


முதல்வர் இரங்கல்: முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தியில், பி.பி.ஸ்ரீநிவாஸ் இறந்த செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன். ஆயிரக்கணக்கணக்கான பாடல்களை 12 இந்திய மொழிகளில் பாடி இசை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவர் பாடிய பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியா வரம் பெற்றவை. மென்மையான குரல் கொண்டு இனிமையைக் கூட்டி பாடும் புதிய பாணியை திரை உலகுக்கு கொண்டு வந்தவர். பி.பி.எஸ். மறைவு திரை மற்றும் இசைத்துறையினருக்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என தெரிவித்துள்ளார்.


வாலிக்கு வாழ்வு தந்த பி.பி.எஸ்.


நான் சிரமப்பட்ட நாட்களில் எனக்கு உதவியவர் சிறந்த பின்னணிப் பாடகரும், பன்மொழி வித்தகருமான பி.பி.ஸ்ரீனிவாஸ் என்று நானும்...இந்த நூற்றாண்டும்...என்னும் புத்தகத்தில் கவிஞர் வாலி குறிப்பிட்டுள்ளார்.


இதோ அவரது வரிகளில்... ""சிரம நாள்களில் எனக்கு உதவியவர் பி.பி.ஸ்ரீனிவாஸ்.


கஷ்டப்பட்ட காலத்தில் அவர் காசு கொடுத்து என் இரைப்பையை நிரப்பியிருக்கிறார். நான் வறுமைக்கடலில் மூழ்கியபோதெல்லாம், என் முடியைப் பிடித்துத் தூக்கிக் கரையில் போட்டுக் காப்பாற்றியவர்.


இனியும் காலம் தள்ள முடியாது என்று நினைத்த போது மதராஸýக்கு ஒரு பெரிய வணக்கத்தைப் போட்டுவிட்டு, மதுரைக்குப் போய்விடலாம் என்று முடிவு கட்டினேன்.


தந்தை மறைந்துபோனார்; தாயோ பம்பாயில் நோய்ப்படுக்கையில் இருக்கிறாள். எனக்காக நானே அழுதுகொள்ள வேண்டுமே தவிர, ஈரம் துடைப்பார் எவருமேயில்லை. இந்த லட்சணத்தில், சினிமாவை விடாமல் பிடித்துக் கொண்டு தொங்குவது, புத்திசாலித்தனமல்ல என்று புரிந்துகொண்டேன்.


கைவசம் இருந்த நீலப்பெட்டியையும், சிகப்பு ஜமுக்காளத்தையும் தூக்கிக்கொண்டு மறுநாள் மதுரைக்கு புறப்பட இருந்தேன்.


அப்போது பி.பி.ஸ்ரீனிவாஸ் என் அறைக்கதவைத் தட்டினார். அவரிடம் ஒரு பாட்டு பாடுங்கள் என்றேன். அவர் சிறிது சிந்தித்துவிட்டு வெளியாக இருக்கும் "சுமைதாங்கி' என்னும் படத்தில் கண்ணதாசன் எழுதிய, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்த ஒரு பாடலை முழுமையாகப் பாடிக்காட்டினார்.


பாட்டு வரிகள் என் செவியில் பாயப்பாய, மதுரைக்குப் பயணமாவதை ரத்துச் செய்து, சென்னையிலேயே தங்கிவிடுவது என்று முடிவு செய்தேன்.


ஆம்! ஒரு சினிமாப் பாட்டு என் திசையை மாற்றியது; என் எதிர்காலத்தை நிர்ணயித்தது. நான் தொடர்ந்து போராடுவதற்கான தெம்பையும் தெளிவையும் என்னுள் தோற்றுவித்தது.


"சுமைதாங்கி' படத்தில் பின்னாளில் இடம்பெற்று மிக மிகப் பிரபலமான அந்தப் பாடல் மயக்கமா? கலக்கமா? கண்ணதாசன் எனக்குச் செய்த கீதோபதேசமாகவே அமைந்தது''.


நன்றி - தினமணி 

 

Sunday, April 14, 2013

ஆரூர் சிட்ஃபண்ட்ஸ் ரெங்கா - திருவாரூர் பாபு - சிறுகதை

ஆரூர் சிட்ஃபண்ட்ஸ் ரெங்கா

அரைமணி நேரம் தாமதம். எட்டரை மணிக்கு பிரஸ் திறப்பது என்பது பரமேஸ்வரின் 20 ஆண்டு கால வழக்கம். அந்த நேரம் நேதாஜி சாலையில் யூனிஃபார்ம் அணிந்த மாணவ - மாணவியர் சைக்கிளில் பள்ளிக்கூடம் நோக்கி விரைவார்கள். எதிரே இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு மாடுகள், ஆடுகள், நாய்களைச் சிகிச்சைக்காக அழைத்துவந்திருப்பார்கள். உள்ளே போதுமான இடம் இல்லாத காரணத்தால் வெளியே நிற்க வைத்திருப்பார்கள். வொர்க்ஷாப் வாசலில் இருக்கும் டீக்கடை மாரிமுத்து இவரைப் பார்த்த நிமிடத்தில் டீ கிளாஸை வெந்நீரில் ஊறப்போடுவார். பிரஸ் திறந்து கதவிடுக்கில் சிக்கிக்கொண்டிருக்கும் தினசரியை எடுத்து தலைப்புச் செய்தியைப் பார்த்தபடி நாற்காலியில் அமரும்போது டீ வந்துவிடும்.
இன்றைக்கு மாணவ - மாணவிகள் பள்ளிக்குச் சென்றுவிட்டார்கள். எதிரே ஆஸ்பத்திரியில் வழக்கத்தைவிடக் கூட்டம் அதிகம். ஆடி அமாவாசைக்கு மனைவியோடு கோயிலுக்குப் போனதால் அரை மணி தாமதம்.
பரமேஸ் இரவு ஓடி முடித்திருந்த போஸ்டர்களைப் பார்த்தார். இரண்டு பொதுக்கூட்ட அறிவிப்பு, ஒரு மரணச் செய்தி, ஒரு நினைவு நாள் அறிவிப்பு. மரணச் செய்தி போஸ்டரில் கறுப்பு நிறம் சற்றுக் கூடுதலாக ஏறி இருந்தது. ஆர்டர் முழுக்க ஓடி முடிந்துவிட்டதா என்று பார்த்தார். முடிந்திருந்தது. நள்ளிரவில் ஓடியிருக்க வேண்டும். தூக்கக் கலக்கத்தில் பசங்க கவனிக்காமல் விட்டிருப்பார்கள்.
9.30 மணி தொடங்கி வேலையாட்கள் ஒவ்வொருவராக வந்து சேர்வார்கள். இரவு வேலை பார்த்திருப்பதால் காலையில் சிறிது தாமதம் நேரிடலாம். பெண்டிங் ஆர்டர் எதுவும் இல்லை. புது ஆர்டர் வந்தால்தான் வேலை. வினைல் போஸ்டர்களும் ஃப்ளெக்ஸ் பேனர்களும் வந்த பிறகு வியாபாரத் தில் சுணக்கம் ஏற்பட்டுவிட்டது. திருமணங்களும், அரசியல் நிகழ்ச்சிகளும், மரணங்களும் லித்தோ போஸ்டரில் மட்டுமே வெளிப்பட்ட காலம் போயிருந்தது. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இப்போது வேலை வருகிறது. இதை மட்டுமே நம்பி வாழ்க்கை இல்லை என்பதால் சமாளிக்க முடிகிறது.
பரமேஸ், யதேச்சையாக வாசலைப் பார்த்தார். க்ரில் கதவைப் பிடித்தபடி, ஒருவன் நின்றிருந்தான். முகத்தை முக்கால்வாசி ஆக்ரமித்திருந்த தாடி, வாரப்படாத கேசம், அழுக்கு வேட்டி, பட்டன் போடாத சட்டை, நெஞ்சுப் பகுதியில் கிழிந்திருந்தது. உள்ளே அமர்ந்திருந்த அவரையே பார்த்தபடி... யார்?
பரமேஸ் கவனம் கலைந்தார். அவனும் இமைக்காமல் பரமேஸைப் பார்த்தபடியே இருந்தான். விழிகளில் வியப்பைத் தேக்கியபடி, உட்கார்ந்திருந்த நிலையிலேயே தலையை ஆட்டி யார் என்பதுபோலக் கேட்டார். பதில் இல்லை. ஆனால், பார்வை இவரை நோக்கி வெறித்தபடி. ஏதோ கேட்க வருவதுபோல...
அந்தப் பார்வை பரமேஸைச் சலனப்படுத்தியது. யாசகம் கேட்பவர்போல இல்லை. ஒரு உரிமையோடு தன்னிடம் ஏதோ சொல்ல வருவதுபோல...
பரமேஸ் எழுந்தார். அவனைப் பார்த்தபடி வாசல் நோக்கி நடந்தார். அருகே நெருங்கி... அந்த நபரை உற்றுப் பார்த்தார். சட்டென மூளைக்குள் ஒரு திடுக்கிடல். நினைவு அலைவரிசையில் ஒரு சலனம்.
தன்னை அறியாமல் ''ரெங்கா...'' என்றார்.
அவன் சிரித்தான். வாழ்க்கையில், இனி நடக்கவே நடக்காது என்று மனதுக்குள் முடிந்திருந்த சந்திப்பு. வாரத்தில் ஒரு முறையாவது தன்னை மறந்து யோசிக்கும் ஒரு விஷயம்.
ரெங்கா... நண்பன்!
20 வயதில்... ஒரு தை மாதத்தில்... அப்பா பெயரில் நவீனப்படுத்தப்பட்ட சேரன் லித்தோ பிரஸ் தொடங்கப்பட்டபோது, 500 ரூபாய் முதல் வைத்தவன். அருகில் இருந்து அவரது வளர்ச்சியை ரசித்தவன். தினசரி இரவு பிரஸ் பூட்டும் வரை காத்திருந்து சைக்கிளில் எருத்திக்காரத் தெருவில் இருக்கும் வீட்டுக்கு அழைத்துச் சென்றவன். கால ஓட்டத்தில் சிட்ஃபண்ட் தொடங்கி, இரண்டு வருடத்தில் அமோகமாக வளர்ந்து, பொதுமக்களிடம் இருந்து வசூலித்த டெபாசிட்டில் ஏறிவரும் பவுன் விலையை உத்தேசித்து 500 பவுன் நகை வாங்கி, அதைத் தொலைத்து, வளர்ந்த வேகத்தில் சரிந்து, ஒரு அதிகாலை நேரத்தில் மனைவி, மகனோடு காணாமல்போனவன்.
பல லட்ச ரூபாயைப் பறிகொடுத்த ஊர் மக்கள் திகைத்துத் திண்டாடி, பதைத்து ஒன்று கூடி, அழுது அரற்றி... சிலர் தற்கொலை செய்து... 'சார், உங்க ஃப்ரெண்ட் சிட்ஃபண்ட் ரெங்கா எங்க இருக்கார்னு தெரியுமா?’ நேற்று இரவுகூட துர்கையம்மன் கோயிலில் ஒருவர் கேட்டார்.
அந்த ரெங்கா...
''ரெங்கா?''
தலையாட்டினான். அந்தத் தீர்க்கமான கண்களைத் தவிர, வேறு எந்த உடல் பாகங்களும் அவனை ரெங்கா என்று கூறவில்லை.
''ஏன் வாசல்லயே நிக்கற... உள்ள வா...'' - உரிமை யோடு அழைக்க, தயக்கமாக நிலை வாசல் தாண்டினான். பரமேஸ் சிறிதும் தயக்கமின்றி அவன் கைகளைப் பற்றினார். இதை ரெங்கா எதிர்பார்த்திருக்கவில்லைபோலும். பரமேஸையே சில விநாடிகள் உற்றுப் பார்த்தவன், தோள் குலுங்க வாய்விட்டு அழுதான். கண்களில் நீர் வழிந்தது. உதடு கோணிக்கொண்டு, தன்னிலை மறந்து எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் உடைந்து மனதிலிருந்து அழுதான்.
''ஏய்... ஏண்டா... ஏன் அழற..? உட்காரு...'' என்றபடி கட்டிப்பிடித்து நகர்த்திச் சென்றான்.
நாற்காலியில் அமர்ந்தபடி, ''சொந்த ஊர்ல பரதேசி மாதிரி நிக்கறேன் பார்த்தியா பரமேஸ்...''
பரமேஸ் அமைதியாக இருந்தான்.
''ஊர்ல என்னை யாராவது அடையாளம் கண்டுபிடிச்சிடுவாங்களா?''
சத்தியமா வாய்ப்பு இல்லை. ஆனாலும் அவனது வருகையில் பரமேஸுக்கு ஒரு விதச் சங்கடம் இருந்தது. ஆகவே, அமைதியாக இருந்தான். அதை அவன் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.
''கௌம்பிடுவேன்... இந்த ஊர... உன்னைப் பார்க்கணும்னு உள்ளுக்குள்ள ஒரு துடிப்பு... அதான் என்னவானாலும் பரவாயில்லேனு வந்துட்டேன் பரமேஸ். ஒரு மணி நேரம் உன் கூட இருக்கலாமா?''
பரமேஸ் அவன் கைகளைப் பற்றினான்.
''தாராளமா... மொதல்ல டீ சாப்பிடலாம்.''
அப்போதுதான் வந்திருந்த ஆபீஸ் பையன் இவன் பேச்சறிந்து டீ சொல்ல ஓடினான். சுவரில் சைஸ் காட்டுவதற்காக ஒட்டப்பட்டிருந்த லித்தோ போஸ்டர்களைப் பார்த்தான் ரெங்கா.
''என்னைத் தேடி இப்பவும் போலீஸ் வருதா?''
''இப்ப இல்ல... ரெண்டு வருஷம் அப்பப்ப வந்தாங்க...''
மறுபடியும் ரெங்கா உடல் குலுங்கினான்.
''உனக்கு ரொம்பக் கஷ்டம் கொடுத்துட்டேன். தப்புப் பண்ணிட்டேன் பரமேஸ்... பெரிய தப்புப் பண்ணிட்டேன். என்னை நம்பித்தான பணம் கட்டினாங்க... ரெண்டு வருஷத்துல 400 மெம்பர். 50 லட்சம் வரைக்கும் சீட்டு பிடிச்சேன். எல்லாம் போயிட்டு... எல்லாம் போயிட்டு...'' என்றவன் கண்களில் நேற்று இரவு அடிக் கப்பட்டிருந்த போஸ்டர்கள் விழுந்தன.
போஸ்டரில் இருந்த போட்டோவையே உற்றுப் பார்த்தான்.
''வேணு டீச்சர் பையன்தானே?''
''ம்...''
''இவர்கூட 25 ஆயிரம் ரூபாய் சீட்டுப் போட்டிருந்தாருடா... எவ்வளவு பேரோட நம்பிக்கையைச் சிதைச்சேன்.''
டீ வந்தது. உள்ளங்கையில் கிளாஸை வைத்த படி குடித்தான்... அந்தப் பழக்கம் இன்னும் மாறாமல்.
''கலை எப்படி இருக்கு?''
''நல்லாருக்கு.''
''பசங்க என்ன படிக்குது?''
''பெரியவன் இன்ஜினீயரிங் முடிச்சிட்டு அமெரிக்கால இருக்கான். பொண்ணு ப்ளஸ் டூ.''
சிரித்தான்.
''உன் வீட்டுல ராசாத்தி எப்படி இருக்காங்க..? எங்க இருக்காங்க... நீ மட்டும்தான் வந்தியா?''- பரமேஸ் கேட்டான்.
கிளாஸைக் கீழே வைத்துவிட்டு, ரெங்கா விரக்தியாகச் சிரித்தான்.
''ராசாத்தி செத்துட்டா... அபிலேஷ§ம் போயிட்டான்''- தழுதழுத்தான்.
பரமேஸுக்குப் பேரதிர்ச்சி.
''என்னடா சொல்ற..?''
''குடும்பத்தையே தொலைச்சுட்டேண்டா... தலைமறைவு வாழ்க்கை அவளுக்குப் பிடிக்கலை. எட்டு ஊரு. எந்த நேரத்துல போலீஸ் வருமோனு பயம். அடையாளம் கண்டுபிடிச்சிடுவாங்களோ... அடிச்சிடுவாங்களோனு ரெண்டு பேருமே தினமும் செத்துச் செத்துப் பொழைச்சோம். கையில பணம் இருந்த வரைக்கும் பிரச்னை இல்லை. பணம் கரைஞ்சதும் அடுத்து என்ன பண்றதுங்கிற கவலையிலயே அவளுக்கு உடம்பு முடியாமப்போச்சு. வைத்தியம் பார்க்கக் கையில் ஒண்ணும் இல்ல. யார்கிட்டயும் உதவி கேட்க முடியாத சூழ்நிலை. ராத்திரி படுத்தவ காலைல பொணமாக் கெடந்தா. யாருக்கும் சொல்ல வழி இல்லை. போலீஸ் எப்பவும் கண்காணிச்சுக்கிட்டே இருக்கற மாதிரி ஒரு உணர்வு. செல்போன்கூட வெச்சுக்கலை. உன்னைக் கண்காணிச்சுட்டு இருப்பாங்களோ... என்னால கஷ்டப்படுவியோனு நெனப்பு. அதான் உனக் குக்கூடச் சொல்லாம... எல்லாம் நாசமாப்போச்சுடா.''
சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
''சீட்டுப் புடிச்ச பணத்துல கோயம்புத்தூர்லேர்ந்து வாங்கிட்டு வந்த ரெண்டு கிலோ தங்கத்த வர்ற வழியில பறிகொடுத்த உடனே போலீஸுக்குப் போயிருக்கணும். அன்னைக்கு அந்தச் சம்பவம் மட்டும் நடக்கலைன்னா, நான் சரிஞ்சிருக்க மாட்டேன். எல்லாத்தையும்தான் பக்கத்துல இருந்து பார்த்தியே... கணக்குவழக்கு சரியில்லாததால... நம்ப மாட்டாங்களோ... சொந்த ஊர்லயே அடிவாங்கணுமோ... அவமானப்படணுமோனு போலீஸுக்குப் போகப் பயந்துட்டேன். நிதானமா எதிர்காலத்தைப் பத்தி யோசிக்காமச் சபலப்பட்டுட்டேன். தேவையான அளவுக்குக் கையில பணம் இல்லாததால சீட்டு முடிச்சவங்களுக்குப் பணம் கொடுக்க முடியாம ஏதோ ஒரு நெனப்புல புத்தி பிசகி, கம்பெனிப் பணத்தோட ஊரைவிட்டு ஓடி, இப்ப எல்லாத்தையும் இழந்து பழிபாவத்த சுமந்துக்கிட்டு நிக்கிறேன்!''
பரமேஸ் அமைதியாக இருந்தான்.
''நான் காணாப் போனதும் உன்னையும் ரெண்டு நாள் ஸ்டேஷன்லவெச்சு விசாரிச்சதா கேள்விப்பட்டேன்... அழுதேன். எனக்கு வேற வழி தெரியலடா. என்னை மன்னிச்சிரு... உன்னைப் பார்க்கணும்... உன்கூடப் பேசணும்னு துடிச்சிருக்கேன். ஆனா, பொண்டாட்டி குழந்தைகளோடு இருக்கற உனக்கு, என்னால சங்கடம் வந்துடக் கூடாதுனு உறுதியா இருந்தேன். அதனாலதான் இத்தனை வருஷமா உன்னைத் தவிர்த்தேன்!''
வேட்டியால் முகம் துடைத்துக்கொண்டான். 20 வருட சோகத்தை, ஆற்றாமையைத் தன்முன்னே இறக்கிவைக்கிறான் என்பது பரமேஸுக்குப் புரிந்தது. ஆகவே, அமைதியாக இருந்தான்.
''பள்ளிக்கூடம் போன பையன் தண்ணி லாரில அடிபட்டு நசுங்கி செத்துப்போன அன்னைக்குத்தாண்டா நான் பண்ண துரோகத்தோட முழு பாரமும் எனக்குப் புரிஞ்சுச்சு.''
''என்னடா சொல்ற?''
''ஆமாண்டா... எத்தினி பேர் வயித்தெரிச்சல்... சாபம். அவ போன சூட்டோடயே புள்ளையை யும் பறிகொடுத்துட்டேண்டா.''
ஓரத்தில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த போஸ்டர் ஃபைலைப் பார்த்தான். எழுந்து சென்று கீழே அமர்ந்து ஒவ்வொரு போஸ்டராகத் திருப்பினான்.
''இது ராமசாமி வாத்தியார்... செத்துட்டாரா..?''
''இவங்க சரஸ்வதி டெய்லர்...''
''பிரபாகரன் மேஸ்திரி... ஐயோ! இவரு லட்ச ரூபாய் சீட்டுப் போட்டிருந்தாரே... பொண்ணு கல்யாணத்துக்கு எடுக்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தாரே. என்கிட்ட ஏமாந்த வேதனையிலயே செத்திருப்பாரு''- தலையில் அடித்துக்கொண்டான்.
பரமேஸ் அமைதியாக ரெங்காவைப் பார்த்தபடி இருந்தான்.
''பரமேஸ்... மனசளவுல நான் என்னைக்கோ செத்துப்போயிட்டேன். இப்ப சாவு என்னை நெருங்குது. என்னால உணர முடியுது. பண்ணின துரோகத்தை நெனைக்கறப்ப யாரோ கழுத்தப் புடிச்சு நெரிக்கற மாதிரி இருக்கு. தற்கொலை பண்ணிக்கத் தைரியம் வரலேங்கிறதவிட, செஞ்ச பாவத்த நெனச்சு நெனச்சுக் கரைஞ்சுபோகணும். அதுக்காகவே இருக்கணும்னு தோணுது. அதனால தான் உசுரக் கையில பிடுச்சிட்டு அதுவா போறப்ப போகட்டும்னு இருக்கேன்!''
''கடைசியா நான் பொறந்து, வளர்ந்து, தொழில் செஞ்ச ஊரைப் பார்க்கணும்... உன்னைப் பார்க்கணும். அதுக்காகத்தான் இங்க வந்தேன். பரமேஸ்... எனக்கொரு உதவி செய்வியா?''
''சொல்லுடா...''
''எனக்கு ஒரு ஆட்டோ புடிச்சுக் கொடு... ஊர சுத்தணும்... தெருத்தெருவாப் போகணும். கமலாலயக் கரை சிமென்ட் திட்டுல ஒரு அரை மணி நேரம் தனியா உக்கார்ந்திருக்கணும். நாம படிச்ச பள்ளிக்கூடத்த, காலேஜ, காகிதக்கார மாரியம்மன் கோயில...'' என்றவன் குரல் தழைத்து... ''உன் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறியா... கலையப் பார்க்கணும்.''
பரமேஸ் திடுக்கிட்டு அவனைப் பார்த்தான்.
''என்னைப் பத்தி அதுகிட்ட ஏதும் சொல்லாத பரமேஸ்... ஒரு மூணாம் மனுஷனா பார்த்துட்டுப் போறேன். ஆசையா இருக்குடா... ப்ளீஸ்... அழைச்சுட்டுப் போறியா?''
''ம்..!''
வேலையாட்கள் ஒவ்வொருவராக உள்ளே நுழைய... ரெங்காவைப் பார்த்துத் தலையாட்டினான். இருவரும் வெளியே வந்தார்கள். காரில் ஏறினார்கள்.
''என் கார்லயே நீ விரும்பின இடத்துக்கெல்லாம் போகலாமா?''
ரெங்கா, பரமேஸைப் பார்த்தான்.
''உனக்கு நேரம் இருக்கா... முடியுமா?''
''ம்...''
''அப்ப போகலாம்...''
கார் மெதுவாக நகர்ந்தது.
''மொதல்ல தெற்கு வீதி வழியாப் போ. நாலு வீதியையும் பார்க்கணும்.''
அவன் கூறியபடியே காரைச் செலுத்தினான் பரமேஸ். இன்றைய தினம் வாழ்க்கையில் ஒரு முக்கியமான தினமாக உணர்ந்தான். இனி, சந்திக்கவே மாட்டோம் என்று நினைத்திருந்த நண்பன் ஒருவன்... டிராயர் போட்ட பருவத்தில் இருந்து நெருக்கமாகப் பழகி, கல்லூரி தொடர்ந்து, கட் அடித்து சினிமா பார்த்து, ஊர் சுற்றி, ஒரே பெண்ணை சைட் அடித்து, சண்டை போட்டு, வாலிப கால தாபங் களைப் பகிர்ந்துகொண்டு, சிட்ஃபண்ட் தொடங்கி சட்டென வாழ்க்கையில் உயர்ந்த நண்பன் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலையில் தவறிழைத்து, இன்று சொந்த ஊரில்... பரதேசியாக... தேடப்படும் குற்றவாளியாக...
வெளிநாடு சென்று பல வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு வந்தவன்போலச் சாலையை வெறித்தபடி வந்தான் ரெங்கா. காலையில் பிரஸ்ஸில் பார்த்த நிலையிலிருந்து இப்போது ரெங்காவின் தோற்றத்தில் ஒரு வித்தியாசம் தெரிந்தது. தன்னைப் பார்த்த திருப்தியில் உணர்வுரீதியாக அவனிடம் மாற்றம் ஏற்பட்டு அது முகத்தில் பிரதிபலிக்கிறதா அல்லது காட்சிப் பிழையா என்பது பரமேஸுக்குப் புரியவில்லை.
மயிலாடுதுறை சாலையில் கார் சிறிது தூரம் ஓடி... சுந்தரம் நகரில் பரமேஸ் வீட்டின் காம்பவுண்டுக்குள் நுழைந்தது. அவன் மனைவியிடம் ஏதும் விளக்கியிருக்கவில்லை. 'நண்பனோடு வருகிறேன்’ என்று மட்டுமே தெரிவித்திருந்தான். கண்டுபிடிப்பாளா? அவனுக்குச் சவாலாக இருந்தது. திருமணமான புதிதில் 'சிஸ்டர்... சிஸ்டர்’ என்று இழைவான். வாரத்துக்கு ஒரு நாள் வீட்டுக்குச் சாப்பிட வந்துவிடுவான்.
கார் சத்தம் கேட்டு வெளியில் வந்த கலை, ரெங்காவின் தோற்றத்தால் சலனப்பட்டு, பரமேஸை வியப்பாகப் பார்த்து பிறகு ரெங்காவைக் கும்பிட்டாள். அரைகுறையாக ஒரு சிரிப்பு.
''வாங்க...''
அவள் நகர... பரமேஸிடம் கிசுகிசுத்தான் ''என்னைத் தெரியல! சிஸ்டர் அப்படியே இருக்காங்கடா''- பரமேஸ் மெலிதாகப் புன்னகைத்தான்.
ரெங்கா பங்களாவைப் பார்வையால் தடவினான். ரசித்து ரசித்துக் கட்டப்பட்ட வீடு அற்புதம் காட்டியது. ஒவ்வொரு சதுர அடியிலும் அழகு உணர்ச்சி மின்னியது. ஏனோ அவனுக்குள் ஒரு மகிழ்ச்சி... திருப்தி.
பரமேஸின் கைகளை நெகிழ்ச்சியாகப் பற்றிக்கொண்டு, உணர்ச்சிப்பூர்வமாக, ''நான் வாழ நினைச்சிருந்த வாழ்க்கைடா... இது மாதிரி ஒரு வீடு கட்டணும்னு எனக்கு அப்பவே ஆசை. இப்ப நீ கட்டியிருக்க... ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குடா... எனக்குள்ள இருந்த கவலைஎல்லாம் போயிடுச்சுடா... நான் தவறவிட்ட வாழ்க்கைய என் நண்பன் வாழறான்...''
கலை, காபி கொண்டுவந்தாள். பரமேஸை ஒரு மாதிரி பார்த்துவிட்டுப் போனாள்.
''ரெங்கா... இரு... மதியம் சாப்பிடலாம்.''
அவன் அவசரமாக மறுத்தான்.
''வேணாம்டா... ரொம்ப நேரம் இருந்துட்டேன். இப்ப நான் பேரளம் போகணும். என் மாமியாரைப் பார்க்கணும். அவங்களைப் பார்த்தும் 20 வருஷமாச்சு. அடையாளம் வெச்சிருப்பாங்களானு தெரியல. ஆனா, பார்க்கணும்''- எழுந்துகொண்டான்.
''சிஸ்டர்... போயிட்டு வர்றேன்...''
கைகுவித்தான். வீட்டைவிட்டு வெளியே வந்தார்கள். சட்டெனக் கண்களில் நீர் கோத்துக்கொள்ள... பரமேஸின் கைகளை அழுத்தமாகப் பற்றிக்கொண்டான்.
''இதுதான் நம்ம கடைசி சந்திப்பு. இதுக்குப் பிறகு சத்தியமா நான் உன்னைப் பார்க்க வாய்ப்பு இல்லை. உன்கூட ஊர் சுத்தினதுல இந்த மண் என்ன மன்னிச்சிட்ட மாதிரி இருக்கு. ஆனா, மனுஷங்க மன்னிக்கணும்டா...''
''என்கிட்ட திருப்பித்தர எதுவுமே இல்ல... ஆனா, இந்த ஊர் மக்கள் என்னால ஏமாற்றப்பட்டவங்க. அவங்களை நான் ஏதோ ஒரு விதத்துல திருப்திப்படுத்தணும்டா!'' - சட்டைப் பையில் இருந்து எதையோ எடுத்து பரமேஸிடம் நீட்டினான்.
அவனது புகைப்படம்.
''என்னோட பழைய போட்டோ. நான் சிட்ஃபண்ட் நடத்துனப்ப எடுத்த போட்டோ. இந்த போட்டோதான் போலீஸ்கிட்டயும் இருக்கு. எனக்கு ஏதாச்சும் நடந்துட்டா அந்தத் தகவல் நிச்சயம் வரும். அப்ப எனக்கு நீ ஒரு உதவி பண்ணணும் பரமேஸ்...''
சலனம் இல்லாமல் பரமேஸ் அவனைப் பார்த்தான்.
''ஆரூர் சிட்ஃபண்ட்ஸ் ரெங்கா அகால மரணம் அடைந்தார். இந்த போட்டோவ பெரிசா வெச்சு நான் பிறந்த தேதி, இறந்த தேதி எல்லாம் போட்டு, போட்டோ பின்னால  எழுதியிருக்கேன். நாற்பத்துச் சொச்சம் வயசுல நான் செத்துப் போனதை இந்த ஊருக்குச் சொல்லணும்டா. பழைய போட்டோவைப் போட்டாதான் என்னை அடையாளம் தெரியும். ஆயிரம் போஸ்டர் அடிச்சு தெருத் தெருவா ஊர்ல உள்ள அத்தினி சுவத்துலயும் ஒட்டு. என்கிட்ட ஏமாந்தவன், நான் ஏமாத்தினவன் எல்லாம் போஸ்டரைப் பார்த்து 'தொலைஞ்சான்’னு ஒரு பெருமூச்சுவிடுவான். அதுதான் என் ஆத்மா சாந்தி அடையறதுக்கான மந்திர வார்த்தை. எனக்காக இதைச் செய்வியா? என்னோட கடைசி ஆசைடா...''
பரமேஸ் அவன் கைகளை நெகிழ்ச்சியாகப் பற்றிக்கொண்டான். இருவரும் தங்களை மறந்த நிலையில் கலங்கிய கண்களோடு நின்றிருந்தார் கள்.
''தென்றல் நகர் பஸ் ஸ்டாப்புல மயிலாடுதுறை போற பஸ் நிக்கும். அதுல ஏறிப் போயிடறேன்... வரட்டுமா...''
கையாட்டிவிட்டு வேகமாக நடந்தவன், ஏதோ நினைத்தபடி திரும்ப வந்து பரமேஸைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டுத் திரும்ப நடந்தான். அவன் கண்களில் இருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, பரமேஸ் வீட்டுக்கு வந்தான். நெஞ்சை அடைப்பது மாதிரி இருந்தது. கனமாக ஒரு துக்கப் பந்து தொண்டைக் குழி வரை வந்துவந்து போனது. ஓவென வாய் விட்டு அழ வேண்டும்போல் இருந்தது. வாசலி லேயே நின்றிருந்தாள் கலை.
''யாருங்க...? பார்க்கப் பரதேசி மாதிரி இருக்காரு... உங்க ஃப்ரெண்டா? என்கிட்ட இதுவரைக்கும் சொன்னதே இல்லையே!''
பரமேஸ் மனைவியை ஓரிரு விநாடிகள் உற்றுப் பார்த்தான்.
''உனக்கு நிஜமாவே அடையாளம் தெரியலையா கலை?''
''சத்தியமா தெரியலைங்க.''
''ரெங்கா.''
கலை முகத்தில் அதிர்ச்சி.
''யாருங்க... நம்ம ரெங்கா அண்ணனா... உசுரோட இருக்காரா? அடையாளமே தெரியலைங்க... ஏன் என்கிட்ட சொல்லலை?''
''நான்கூடக் கஷ்டப்பட்டுதான் அடையாளம் கண்டுபிடிச்சேன். உன்கிட்ட சொல்ல வேணாம்னுட்டான்...''
''பிரஸ்ஸுக்கு வந்தாரா?''
''ம்...''
''அப்படியே பேசித் திருப்பி அனுப்பிட வேண்டியதுதானே. எதுக்கு வீட்டுக்குலாம் அழைச்சுட்டு வர்றீங்க? பைத்தியமா உங்களுக்கு? நம்ம வசதியைப் பார்த்துச் சந்தேகம் வந்து கண்டுபிடிச்சிடப்போறாருங்க.''


நன்றி - விகடன்

ஃபேஸ்புக் ரகசியங்கள் ( முக புத்தக சீக்ரெட்ஸ் )

பாவமன்னிப்பு @ ஃபேஸ்புக்.காம்

ஆ.அலெக்ஸ் பாண்டியன்

இணையத்துடன் இணையும் 70 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட 'நெட்டிஸன்கள்’ ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட்ஆரம்பிக்கிறார்கள் என்கிறது ஒரு சர்வே. அந்த 70 சதவிகிதத்தினரிலும் பாதிப் பேருக்கு மேல் இணையத்தில் நுழைந்ததும் முதலில் 'லாக்-இன்’ செய்வது ஃபேஸ்புக்கில்தானாம்!


'சிகரெட், மதுப் பழக்கம்போல ஃபேஸ்புக்கும் மாணவர்களை அடிமை ஆக்குகிறது’ என்று பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களை இறுக்கிப் பிடிக்கப் பார்த்து முடியாமல்போனதெல்லாம் பழங்கதை. அந்த வகையில், இப்போது சமீப ஃபேஸ்புக் சென்சேஷன் 'கன்ஃபெஸன் பேஜஸ்’. அதாவது, பாவ மன்னிப்புப் பக்கங்கள்!


'கன்ஃபெஸன்’ என்றால், நீங்கள் செய்த பாவத்தை, குற்றத்தை ஒப்புக்கொள்வது. அப்படி தங்கள் பள்ளி, கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களுக்கு என பிரத்யேக கன்ஃபெஸன் பக்கம் ஆரம்பித்து, தங்கள் அடையாளம் மறைத்து குற்றங்களை, பாவங்களை உலகத்தின் பார்வைக்குப் பந்திவைக்கிறார்கள் மாணவர்கள். ஹார்வர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்களிடையே தொடங்கிய இந்த டிரெண்ட், தற்போது அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கி கன்னியாகுமரி கலைக் கல்லூரிகள் வரை பரவியிருக்கிறது. தமிழகப் பள்ளி, கல்லூரி பக்கங்களில் பதிவாகியிருக்கும் பாவ மன்னிப்புகளில் சில இங்கே...


சென்னை கல்லூரிகளின் பக்கங்களில் இருந்து சில சாம்பிள்கள்...


''பாவி... காலேஜ் ஜிம்மில் இருந்து டம்புள்ஸ்களைத் திருடி என் லக்கேஜில் வைத்துவிட்டான். நான் இப்போது அதை ஸ்டேஷன் வரை கொண்டுசெல்ல வேண்டும். செம கனம்!''


''தினமும் இரவு ஹாஸ்டலில் என் தோழி அவள் பாய் ஃப்ரெண்ட்பற்றிக் கூறுவாள். இப்படியே ஒரு மாதமாக அவள் சொல்லச் சொல்ல... எனக்கும் அவனைப் பிடித்துவிட்டது. நவ் ஐ’ம் இன் லவ் வித் ஹிம்... ஸாரி ஜெனி!''


''நான் முதலாம் ஆண்டு படிக்கும்போதே என் பெற்றோரை இழந்துவிட்டேன். அதன் பின் எனக்கு நண்பர்கள் மட்டுமே உறுதுணையாக இருந்தார்கள். கல்லூரியின் இறுதி இரண்டு வருடங்கள் அவர்கள்தான் என்னைப் படிக்கவைத்தார்கள். இப்போது நான் பெங்களூரில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டுஇருக்கிறேன். ஆனால், நேற்று ஒரு டிரஸ்ட்டில் இருந்து கல்வி நன்கொடை கேட்டு வந்தபோது மறுத்துவிட்டேன். ஸாரி ஃப்ரெண்ட்ஸ்!''


''அடப்பாவி... லைப்ரரியில் இருந்து 20 அரிதான புத்தகங்களைத் திருடிவிட்டான் என் உயிர் நண்பன். எந்த ரெக்கார்டும் கிடையாது. யாரும் கண்டுபிடிக்கவும் முடியாது... ஹ்ம்ம்!''


கோவைக் கல்லூரிகளின் பக்கங்களில் இருந்து...


''நண்பர்களே... கடந்த செமஸ்டர் வரை நான் 85 பெர்சன்ட் வைத்திருப்பதாக என் அப்பா - அம்மாவிடம் பொய் சொல்லிவந்திருக்கிறேன். ஆனால், ஆறு அரியர்கள் வைத்திருக்கிறேன். ஸாரி அப்பா - அம்மா!''


''நான் முதலாம் ஆண்டு படிக்கும்போதே அவளைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். ஒரு நடனப் பயிற்சியின்போது கீழே விழுந்த அவளுடைய தோடை எடுத்துவைத்துக்கொண்டேன். இப்போது நான் அதே கல்லூரியில் முதுகலை படிக்கிறேன். அவளும்தான். தோடு காணாமல் போனபோது கல்லூரியையே கிடு கிடுக்கவைத்துவிட்டாள். அதனால், இன்று வரை அவளிடம் பேசக்கூடப் பயமாக இருக்கிறது. என் காதலையும் சொல்லவில்லை!''


இப்படியான பாவமன்னிப்புகள் சாம்பிள் வகையறாதான். 'அதான் நம் அடையாளம் தெரியாதே!’ எனப் பல பகீர் தகவல்களை வெளியிடுகிறார்கள் பல மாணவர்கள். ஆசிரியருடனான உறவுகள் துவங்கி, குடும்ப உறுப்பினர்களிடையே நிலவும் ரகசியங்கள் வரை இந்தப் பக்கங்களில் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால், வெறுமனே லைக்ஸ் அள்ளவும் கமென்ட் குவிக்கவும் அல்லாமல், யாரிடமும் பகிர முடியாத வேதனைகளை இறக்கிவைக்கும் ஒரு வடிகாலாகத்தான் இந்தப் பக்கங்களைக் கையாள்கிறார்கள் பல மாணவர் கள். கிடைக்கும் அறிவுரைகள், வழிகாட்டல்கள் மூலம் மனம் சாந்தியடைந்ததாக வரும் பின்னூட்டங்களும் ஏகம்!


ஆனால், பேராசிரியர்களைத் திட்டுவது, கேலி செய்வது எனக் கழிவறை சுவரின் டெக் வளர்ச்சியாக இயங்கும் பக்கங்களும் உண்டு. அப்படியான தங்கள் கல்லூரியின் பக்கம் ஒன்றை மூடச் சொல்லி, இங்கிலாந்தில் இருக்கும் ஸ்வான்சீ பல்கலைக்கழகம் தன் மாணவர்களை வற்புறுத்த, 'முடியவே முடியாது’ என வீதிக்கு வந்து போராடினார்கள் மாணவர்கள். பல அமெரிக்கக் கல்லூரிகள், இந்த கன்ஃபெஸன் பக்கங்களில் இயங்குபவர் எனத் தெரிந்தால் வேலை கிடைக்க விட மாட்டோம். உங்கள் எதிர்காலமே வீணாகிவிடும் என மிரட்டியும் மாணவர்களிடம் அவர்கள் பாச்சா பலிக்கவில்லை.


கன்ஃபெஸன் பக்கம் ஒன்றில் தீவிரமாக இயங்கும் சென்னை மாணவர் ஒருவரிடம் சாட்டில், 'இது ஆரோக்கியமான போக்கா?’ என்று கேட்டேன். 'இதுல என்னங்க தப்பு? நல்லதோ, கெட்டதோ ஓப்பனா இருக்கோம். இங்கே போஸ்ட் பண்றதுல பல விஷயங்களை அப்பா, அம்மாகிட்டயோ, புரொஃபசர்கள் கிட்டயோ பேசத்தான் ஆசை. ஆனா, காது கொடுத்துக் கேட்க அவங்களுக்கு நேரம் இல்லை. ஒருவேளை கேட்டாலும் எங்களையே திட்டி பி.பி. ஏத்திக்குவாங்க. அதான் அதை உலகத்தின் பார்வைக்கு வெச்சிடுறோம்!'' என்கிறார் செம கூலாக.


வாசகர் கருத்து 


1. இந்தப் பாவ மன்னிப்புக்கள் அவற்றை எழுதுபவர்களின் மனச்சுமைகளைச் சற்றே குறைக்க வல்லது என்றால் கன்பெஷன் பக்கம்
தேவை தான் !


2. இப்படியான பாவமன்னிப்புகள் சாம்பிள் வகையறாதான். **** ஹலோ, கன்பெஷன் என்றால் குற்றத்தை ஒப்புக்கொள்ளுதல் என்று பொருள். பாவமன்னிப்பு அல்ல அது.



3. குப்பைகளைக் கொட்டவும், எரிக்கவும் ஒரு தனி இடம் தேவைதான், ஆனால் அதில் அவர்களே எரிந்து போகாதவரை.........


4. அகில இந்திய தொழில் நுட்பக்கழகம் மொபைல் லேர்னிங் என்றொரு கான்செப்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது.நை தலும் என்ற காந்தியின் கல்விக்கொள்கையை, ராஜாஜியின் கல்விக்கொள்கையை ஒட்டிய வகையில் இந்த மொபைல் லேர்னிங்கை தனி நபர் கல்வித்திட்டமாக , தனி நபர் கல்வி சுதந்திரமாக ஒரு தனிநபர் வடிவமைத்துக் கொள்ள முடியும்.


அது முழுக்க லைப் டைம் எக்ஸ்பீரியன்சஸ் கல்வித்தகுதியாக பல்கலைக்கழக ஆசிரியர், நிபுணர், வல்லுநர் குழுவின் ஒத்துழைப்போடு மாற்றிக் கொள்ளத்தக்கது.இம்முறை அமலுக்கு வந்தால் தற்போது செய்திகளில் அடிபடும் அசம்பாவிதங்களுக்கு முற்று வைப்பதோடு, ஒவ்வொரு தனி நபர் திறனும் முற்போக்காக மாற்றம் கொள்ளும்.இந்த கட்டுரையில் மாணவர் பகிர்ந்திருப்பதைப்போல பெற்றோருடன், ஆசிரியருடன் பகிர்ந்து முன்னேறலாம் .எந்நிலையிலும் பாடத்திட்டம் மாற்ற முடியும் வசதி கொண்டது.அகாடமிக் காலண்டர் , வருகைப்பதிவு இல்லாததால் அவசியமில்லாத பொய், சாக்குகள், திட்டங்கள், பழி போன்ற எதிர் மறை செயல்களுக்கு இடமேயில்லாத சூழல் வரும்.ஒதுக்குதல் என்பதற்கு சிறிதும் இடமேயில்லை. 


5. மனதில் உள்ள இரகசியத்தை, சுமையை வெளியில் சொல்லி விட்டால் பாரம் குறைந்துவிடும் என்பார்கள். எனவே, இளைஞர்கள் மன பாரத்தை குறைக்க, தம், பீர் அடித்து உடலை கெடுப்பதைவிட, இப்படி எழுத்து கன்பெஷன் வழியாக விடுதலை தேடுவது சரியென்றே தோன்றுகிறது.


6. எழுதுகிறவர்கள் எழுதி ஈதோ ஒருவகையில் அமைதி பெறட்டும். படிக்கிறவர்கள் பொழுதுபோக்காகப் படிக்கட்டும். அப்படியே எப்படியெல்லாம் நடக்ககூடாதென்பதை புரிந்துகொள்ளட்டும்.


நன்றி - விகடன்

அஞ்சலியின் மறுபக்கம் - பாகம் 4 ( பொன்னியின் செல்வன் ரேஞ்சுக்கு )

அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர் : பகுதி 4

மிழக போலீஸும் ஆந்திர போலீஸும் ஆளுக்கொரு திக்கில் தேடிக் கொண்டிருந்த நிலை யில், தாமாக வந்து ஆஜராகி இருக்கிறார் நடிகை அஞ்சலி.''என்னை யாரும் கடத்தவில்லை. தாங்கமுடியாத மன அழுத்தம் காரணமாக நானே தான் வீட்டைவிட்டு வெளியேறினேன். மும்பையில் நண்பர்கள் பாதுகாப்பில் இருந்தேன். போலீஸ் எனக்கு பாதுகாப்பு தருவதாக சொன்னதால் நான் இங்கு வந்திருக்கிறேன்.


 என் தரப்பு நியாயத்தை போலீஸ் துணை கமி ஷனர் சுதிர்பாபுவிடம் முழைமையாக சொல்லிவிட்டேன். தேவைப்பட்டால் விரைவில் மீடி யாக்களை சந்தித்து உண்மைகளைச் சொல்வேன்” என்று திடமாக சொல்லிவிட்டுப் போயி ருக்கிறார். அஞ்சலியின் தலை மறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதால் இனி, அவரது திரைமறைவு வாழ்க்கை ஆரம்பமாகும்.



இனி, அஞ்சலியின் மறு பக்கம்...


இருபது வயதில் ஒரு இளம் பெண் நடிக்க வந்தால் அவருக்கு துணையாக அப்பாவோ, அம்மாவோ, அண்ணனோ வருவார்கள். அவர்கள் தான் அந்தப் பெண்ணுக்கு மெய்க்காப்பாளர் போல் இருப்பார்கள். அஞ்சலிக்கு துணையாக சித்தி, சித்தப்பா, அண்ணன் என மூன்று பேரும் வந்தார்கள். இதனால் இந்த மூன்று பேரும் எது சொன்னாலும் அதைக் கேட்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானர் அஞ்சலி. தொடக்கத்தில் இவர்கள் சொல்வதெல்லாம் நல்லதாகவே பட்டது அஞ்சலிக்கு. ஆனால், போகப் போக கசக்க ஆரம்பித்தது.


தன்னை முன்னுக்கு கொண்டு வந்தார்கள் என்பதற்காக தனக்கு ஒப்பாத விஷயங்களை எல் லாம் சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் அந்தப் பெண்ணுக்கு. அப்படியும் எத்தனை நாளைக்குத் தான் சகித்துக் கொள்ளமுடியும்? ஒரு கட்டத்தில் எதிர்க்கவும், மறுக்கவும் ஆரம்பித்தார் அஞ்சலி. அவரை பணம் காய்ச்சி மரமாக நினைத்துக் கொண்டிருந்தவர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. கண்டிக்கிறோம் என்கிற பேரில் அஞ்சலிக்கு டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தார்கள்.


 பெற்றதாயைப் பிரிந்த ஏக்கம் அப்போதுதான் முதல் முறையாக அஞ்சலிக்கு வந்தது. எட்டா தூரத்தில் அம்மா இருந்ததால் தன்னுடைய கஷ்டங்களை உட்கார்ந்து சொல்லி அழக் கூட அவருக்கு ஆறுதலாய் ஒரு நிழல் இல்லை. இந்த ஏக்கமே அஞ்சலியை வெளிக்கிளம்ப வைத் தது. தன்மீது பரிவு காட்டிப் பேசிய நண்பர்கள் மற்றும் இயக்குனர்களோடு நிறையவே பொழுதை கழிக்க ஆரம்பித்தார். வீட்டிற்குள் இருந்த நெருக்கடிக்கு அது அவருக்கு ஆறுதல் தரும் மருந்தாக இருந்தது. வீட்டுக்குள்ளோ வேறு மாதிரியாய் பற்றி எரிந்தது. ’கண்டவர்களோடு சுற்றினால் இமேஜ் என்னாகும்?’ என்று தாவினார்கள்.


 ’எனக்கு சரி என பட்டதை நான் செய்கிறேன். நான் இன்னும் சின்னப் பெண் இல்லை உங் களுக்கு தேவை பணம் தானே அதற்கு எந்தக் குறையும் வராது. ஆனால், அதற்காக என்னை குத்திக் குத்தி அழ வைத்து ரசிக்காதீர்கள்” என்று குரலை உயர்த்தினார் அஞ்சலி. இப்படிப் பேசியதற்காக பலமுறை அஞ்சலி, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்.



 ’’சித்தப்பா தன்னை முடியைப் பிடித்து இழுத்து அடித்ததாக இப்போது அஞ்சலி சொல்வது உண்மையாக தான் இருக்க முடியும். ஏனென்றால், அந்தக் குடும்பத்தில் இருப்பவர்கள் எங்கள் கண் எதிரி லேயே அஞ்சலியை மிரட்டியதை நாங்கள் பார்த்திருக்கிறோம்” என்கிறார் ஒரு பிரபல சினிமா இயக்குனர்.



இத்தனையையும் போதாதென்று வேறுமாதிரியான சங்கடங்களையும் அஞ்சலி சந்திக்க நேர்ந் தது. நடிகர் விக்ரமின் அப்பா சினிமாவில் நடிக்க வந்து தோற்றுப் போனவர். அந்த வெறி யில்தான் அவர் தனது மகனை ஹீரோ ஆக்கினார். நடிகை மந்த்ராவின் அம்மா ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட். தன்னால் ஜெயிக்க முடியாததை மகள் மந்த்ராவை வைத்து ஜெயித்துக் காட்டினார், இன்றைக்கு திரை உலகில் பிரபலமாக இருப்பவர்களில் பலரது பின்னணி இப்படித்தான் இருக் கும். அஞ்சலியின் சித்தி பாரதி தேவியும் இந்த கேரட்க்டர் தான்.


எப்படியாவது கதாநாயகியாக நடித்துவிட வேண்டும் என்பதற்காக பூமணி படத்தில் நடிக்க சான்ஸ் கேட்டு இயக்குனர் களஞ்சியத்தைச் சந்தித்தார் பாரதி தேவி. களஞ்சியத்தை மடுமல்ல பல இளம் இயக்குனர்களை சந்தித்து அப்போது சான்ஸ் கேட்டடார். அத்தனை பேரும் இனிக்க இனிக்க பேசினார்கள். ஆனால், யாருமே வாய்ப்பு தரவில்லை. களஞ்சியம் மட்டும் பாரதி தேவிக்கு ஆறுதலாய் பேசினார். களஞ்சியத்தின் நம்பிக்கை வார்த்தைகள் பாரதிதேவிக்கு பிடித் திருந்தது. 


அதேநேரம், தன்னால் சாதிக்க முடியாததை தன்னுடைய வளர்ப்பு மகள் அஞ்சலியை வைத்து சாதித்துக்காட்ட வேண்டும் என்ற வெறியை தனக்குளே வளர்த்துக் கொண்டார் பாரதி தேவி. அந்தவெறிதான் அஞ்சலியை கதாநாயகி அளவுக்கு உயர்த்தியது. தனக்காக வாய்ப்புக் கேட்டு அலைந்த காலங்களில் கனவுத் தொழிற்சாலையின் நெளிவு சுளிவுகளை நன்றாக தெரிந்து வைத்திருந்தார் பாரதி தேவி.


 வளர்ப்பு மகள் அஞ்சலியை ஜெயிக்க வைக்க அது அவருக்கு ரொம்பவே உதவியாக இருந்தது.இத்தனையும் செய்தது எதற்காக அஞ்சலிக்காகவா? இல்லை, அஞ்சலியால் வந்து கொட்டும் பணத்துக்காக. சினிமாவில் வந்த வருமானத்தை வைத்து, தானே படம் எடுக்க நினைத்தார் பாரதி தேவி. அதற்காக தனது இயக்குனர் தோழர்களிடம் கலந்து ரையாடல் நடத்தினார். சிக்கலே இங்குதான் ஆரம்பிக்கிறது.



சித்தி படம் எடுப்பது அஞ்சலிக்கு பிடிக்கவில்லை.அதை வெளிப்படையாகவே சொன்னார். இது சித்திக்கு பிடிக்கவில்லை. இருவரும் இப்படி முரண்பட்டதால் வீட்டுக்குள் பிரளயம் வெடித்தது. ’உன் பணம், என் பணம்” என்கிற அளவுக்கு வார்த்தைகள் தடித்தன. இதற்கு முந்தைய படங் களில் சில லகரங்கள் மட்டுமே அஞ்சலிக்கு சம்பளமாக தரப்பட்டது. அந்தப் பெண் முழுதாய் இருபது லட்சத்தை பார்த்ததே சேட்டை படத்தில் தான். ஆனால், அந்த வருமானத்தையும்  சினிமா தயாரிப்பில் போட துடித்தார் பாரதி தேவி.


அதை அறிந்து அந்தப் பூவும் புயலானது ’இதுவரை சம்பாதித்ததை எல்லாம் உங்களுக்கே கொடுத்துவிட்டேன் இனியாவது எனக்காக சம்பாதிக்க நினைக்கிறேன்” - அஞ்சலியிடம் இருந்து இப்படி வார்த்தைகள் வந்து விழும் என்று அந்தக் குடும்பத்தில் யாரும் நினைத்திருக்க மாட் டார்கள். இப்படிச் சொல்வதால் தன்னுடைய எதிர்காலத்தையே பாழாக்கும் விதமாக காரியங் கள் நடக்கும் என்று அஞ்சலியும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.



அதுசரி, சித்தி சொன்னதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருந்த அஞ்சலிக்கு, திடீரென இப்படிப் பேச தைரியம் கொடுத்தது யார்?


சஸ்பென்ஸ்!


தொடரும்  ( ராஜேஷ் குமார் நாவல் மாதிரி ) 




சென்னை: "நடிகை அஞ்சலி தொடர்பான அனைத்து பொறுப்புகளையும் அவரது தாயாரும், எனது சகோதரியுமான பார்வதி தேவியிடம் ஒப்படைத்துவிட்டேன்" என்று அவரது சித்தி பாரதி தேவி கூறியுள்ளார்.
"'பலுப்பு' தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக ஹைதராபாத் சென்ற நடிகை அஞ்சலி கடந்த 8ஆம் தேதி திடீரென காணாமல் போனார். இதையடுத்து, அஞ்சலியின் சித்தி பாரதி தேவி சென்னை காவல்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.

ஆனால் புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதால் சென்னை உயர் நீதிமன்றத்தில், நடிகை அஞ்சலியை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார் பாரதி தேவி.

இதனிடையே, யாரும் எதிர்பாராத வகையில் மும்பையில் இருந்து நடிகை அஞ்சலி, நேற்று முன்தினம் இரவு ஹைதராபாத்  துணை போலீஸ் கமிஷனர் சுதிர்பாபு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அஞ்சலி, என்னை யாரும் கடத்தவில்லை, தீவிர மன அழுத்தம் காரணமாகவே வெளியேறினேன் என்று கூறினார்.

நடிகை அஞ்சலியின் தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்த நிலையில், அஞ்சலி தொடர்பான அனைத்து பொறுப்புகளையும் அவரது தாயாரும், எனது சகோதரியுமான பார்வதி தேவியிடம் ஒப்படைத்துவிட்டதாக அவரது சித்தி பாரதி தேவி கூறியுள்ளார்.


சென்னை காவல் நிலையத்தி்ல் கொடுக்கப்பட்டுள்ள புகார், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஆகியவற்றை வாபஸ் பெறுவது குறித்து இரு தரப்பினரும் பேசி முடிவு செய்யப்படும் என்றார்.

தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்வது போல் ஏற்கனவே ஒப்பந்தம் ஆன தமிழ் படங்களிலும் நடித்துக் கொடுக்கும்படி அஞ்சலியிடம் அறிவுறுத்தி இருப்பதாகவும் பாரதி தேவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெலுங்கு படத் தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவிடம் பேசியிருப்பதாகவும் பாரதி தேவி கூறியுள்ளார்.

--------------------
 நடிகை அஞ்சலி விவகாரத்தி்ல் அரசியல் சதி: களஞ்சியம் சந்தேகம்

நடிகை அஞ்சலி விவகாரத்தில் அரசியல் சதி இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ள இயக்குனர் களஞ்சியம், வரும் 24ஆம் தேதி நடக்கும் படப்பிடிப்பில் அவர் பங்கேற்கா விட்டால் நடிகர் சங்கத்தி்ல் புகார் செய்வேன் என்று கூறியுள்ளார்.
 
நாகர்கோவிலில் இன்று மாலை நடைபெறும் தமிழர் நலம் பேரியக்கத்தின் சார்பில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த இயக்குனர் களஞ்சியம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது, அவர் கூறுகையில், நடிகை அஞ்சலி பிரச்னையை பொருத்தமட்டில் குடும்ப பிரச்னை காரணமாக அவர் வீட்டை விட்டு ஓடிச்சென்று தனது சித்தி, சித்தப்பா மீது புகார் தெரிவித்துள்ளார். என் மீது அவர் சுமத்தியுள்ள புகார் வியப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துகிறது.

நான் அஞ்சலியை கொடுமை செய்ததாகவும், சொத்தை அபகரிக்க முயல்வதாகவும், கொலை செய்ய முயற்சிப்பதாகவும் 3 குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது சந்தேகமாக உள்ளது. இதுதொடர்பாக நான் போலீசில் புகார் செய்துள்ளேன்.
அஞ்சலியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி எனக்கு நீதி வழங்க வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்தில் அவர் மீது அவதூறு வழக்கும் தொடர்ந்து உள்ளேன். நீதிமன்றத்திலும் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்.

லங்கை தமிழர் பிரச்னைக்காக என்னுடைய தமிழர் நலம் பேரியக்க அமைப்பு பாடுபட்டு வருகிறது. அந்த அமைப்பின் மாநில தலைவராக நான் உள்ளேன். இலங்கை தமிழர் பிரச்னையில் தி.மு.க. மீதும், காங்கிரஸ் அரசு மீதும் நாங்கள் குற்றம் சாட்டி வருகிறோம். இதனால் அஞ்சலி விவகாரத்தில் அரசியல் சதி இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.

அஞ்சலி அபாண்டமாக என் மீது பழி சுமத்தி விட்டார், சேற்றை என் மீது மட்டுமின்றி எனது அமைப்பினர் மீதும் வீசி உள்ளார். தற்போது ‘ஊர் சுற்றும் புராணம்’ படத்தில் நான் கதாநாயகனாகவும், அஞ்சலி கதாநாயகியாகவும் நடித்து வருகிறோம். இதற்கான படப்பிடிப்பு ஏற்கனவே 15 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. சம்பவத்துக்கு முந்தைய நாளில்கூட என்னுடன் அஞ்சலி பணி செய்துள்ளார்.

இந்த படத்துக்கான அடுத்த கால்ஷீட்டை அஞ்சலி வருகிற 24ஆம்  தேதி கொடுத்துள்ளார். அன்றைய தினம் அவர் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும். இல்லாவிட்டால் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், நடிகர் சங்கத்தில் அவர் மீது புகார் செய்வேன். பிரச்னைக்கு பிறகு அஞ்சலி என்னுடன் பேசவில்லை. 24ஆம் தேதி படப்பிடிப்புக்கு அவர் வந்தால் வழக்கம்போல் நான் அவருடன் நடிப்பேன்.


நன்றி - விகடன்

 டிஸ்கி - பாகம் 3 -

அஞ்சலி அதிரடி பேட்டி -தலைமறைவு ஏன்?

 

http://www.adrasaka.com/2013/04/blog-post_9801.html
 

 

அஞ்சலி - பார்வதிதேவி -களஞ்சியம் -பால திரிபுர சுந்தரி - வெளி வராத மர்மங்கள்

http://www.adrasaka.com/2013/04/blog-post_9624.html