Saturday, December 29, 2012

டெல்லி சம்பவத்துக்கு நாம் அனைவரும் பொறுப்பு - ஓ பக்கங்கள் ஞானி கடிதம் @ குமுதம்

மன்னிக்க வேண்டுகிறேன்…..!!!!


அன்புள்ள…..

... உன் பெயர் எனக்குத் தெரியவில்லை. தெரியாதது பற்றி வருத்தமில்லை. ஏனென்றால் எனக்குத் தெரிந்து முதல்முறையாக இப்போதுதான் மீடியா பாலியல் வன்முறைக்குள்ளான ஒருவரின் பெயரையும் படத்தையும் வெளியிடக் கூடாது என்ற இதழியல் அறத்தைப் பின்பற்றியிருக்கிறது.

டெல்லி இந்தியாவின் அரசியல் தலைநகரம் மட்டுமல்ல பாலியல் வன்முறைக்கும் தலைநகரம் என்பதை மீண்டுமொரு முறை உனக்கு எதிரான வன்முறை நிரூபித்திருக்கிறது. இந்தியா முழுவதும் கிராமங்களிலும் கூட பெண்களுக்கெதிரான, குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் உச்சமான அதிகார மையமான டெல்லியிலேயே இது நடக்கும்போது இதர இடங்களில் நடப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

உன்னைப் பற்றிய முதல் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரவு 9 மணிக்கு நண்பருடன் ஒரு பஸ்சில் ஏறினாய். அதில் இருந்த டிரைவரும் இன்னும் ஐந்து பேரும் உன்னை கிண்டல் செய்தார்கள். கண்டித்த உன் நண்பனை இரும்புக் கம்பியால் அடித்துப் போட்டுவிட்டு, எதிர்த்த உன்னையும் அடித்துப் போட்டுவிட்டு ஆறு பேரும் மாறி மாறி உன்னைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கினார்கள். உன்னையும் நண்பரையும் சாலையோரம் தூக்கி எறிந்துவிட்டுப் போனார்கள். 


இந்த நான்கு வரிகளை எழுதும்போதே, கோபத்திலும் ஆற்றாமையிலும் என் கண்களில் நீர் பொங்கி வருகிறது . எழுதும் எனக்கே இத்தனை வேதனையை ஏற்படுத்தும் இந்த நிகழ்வு உன்னை எத்தனை துயரத்துக்கும் அதிர்ச்சிக்கும் வலிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கும் என்று நினைக்கும்போது தொடர்ந்து அழுவதை என்னால் நிறுத்தமுடியவில்லை.

உன்னைப் பற்றி அடுத்தடுத்து வரும் செய்திகள்தான் என் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள வைக்கின்றன. உயிர் பிழைப்பதற்காக மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கும் உன் மன உறுதியை மருத்துவர்களே வியந்து பாராட்டுகிறார்கள். இரும்புத் தடியால் சிதைக்கப்பட்ட உன் முழு குடலையும் அறுவை சிகிச்சை செய்து நீக்கியபின்னரும் நீ தொடர்ந்து போராடுகிறாய். 


நினைவு வரும்போதெல்லாம், குற்றவாளிகள் சிக்கிவிட்டார்களா, அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று எழுதிக் காட்டுகிறாய். குடும்பத்தில் முதல் தலைமுறையாகப் படிக்கப் போயிருக்கும் உன்னை நம்பித் தங்கள் எதிர்காலத்தை வைத்திருக்கும் சகோதரிகளிடமும், பெற்றோரிடமும் கவலைப்படவேண்டாம், நான் பிழைத்துக் கொள்வேன் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறாய்.

உன்னிடம் மன்னிப்பு கேட்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உனக்கு நேர்ந்த நிலைக்குக் காரணமான ஒவ்வொன்றின் சார்பாகவும் நான் மன்னிப்பைக் கோருகிறேன்.

பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த பஸ்சை விடுமுறை நாளன்று அதன் டிரைவர் மது குடித்துவிட்டு தன் நண்பர்களுடன் உல்லாசமாக சுற்றித் திரிய எடுத்துச் செல்ல அனுமதிக்கும் பஸ் முதலாளிகளை, நம் சமூகத்தில் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன் மன்னிப்பைக் கோருகிறேன். ஒரு விபத்துக்குப் பின் டிரைவர் வேலைக்கான உடல் தகுதி இல்லையென்று அறியப்பட்ட ஒருவரை தொடர்ந்து டிரைவராக வைத்திருந்த அந்த முதலாளியின் குற்றத்தினால் இத்தனை நாட்களாக தம்மையறியாமலே ஆபத்தை சந்தித்து மயிரிழையில் தப்பி வந்த பள்ளிக் குழந்தைகளிடமும் தப்ப முடியாமல் சிக்கிய உன்னிடமும் மன்னிப்பைக் கோருகிறேன்.

மக்கள் தேவைக்கான போதுமான அரசு பஸ்களை இயக்காமல், எந்த தனியாரும் எப்படிப்பட்ட பஸ்சையும் பொது தடங்களில் இயக்க அனுமதித்திருக்கும் லாயக்கற்ற டெல்லி பஸ் நிர்வாகத்தை நாங்கள் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன் மன்னிப்பைக் கோருகிறேன். அதனால்தான் நீயும் உன் நண்பரும் இந்த பஸ்சையும் அப்படிப்பட்ட ஒரு பஸ் என்று நம்பி ஏறும் நிலை வந்தது.

படிப்பறிவில்லாத அந்த டிரைவரும் அவன் நண்பர்களும் குடித்துவிட்டு ஒரு பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட என்ன காரணம் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

நாங்கள்தான் – we the people of Indiaதான். காரணம். முதலில் எல்லாருக்கும் படிப்பு, எல்லாருக்கும் சமமான படிப்பு என்பதை நாங்கள் கொடுக்கத் தவறிவிட்டோம்.

படிப்பு கிடைத்தவர்களுக்கும் எப்படிப்பட்ட படிப்பை வழங்கினோம் ? வேலைக்குப் போய் கணிசமான சம்பளம் வாங்குவதற்கான திறமைகளை மட்டுமே தரும் படிப்பை வழங்கினோமே தவிர, சக மனிதர்களுடன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எதையும் எங்கள் பள்ளிகளும் கல்லூரிகளும் சொல்லித் தந்ததில்லை.

அதையெல்லாம் குடும்பம் பார்த்துக் கொள்ளும் என்று விட்டுவிட்டோம். குடும்பம் என்ன பார்த்தது ? சாதி பார்த்தது. மதம் பார்த்தது. ஆணுக்கு அடிமையாக வேலை செய்யவே பெண் பிறந்திருக்கிறாள் என்ற கருத்தைக் குழந்தையிலிருந்தே என்னைப் போன்ற ஆண்களுக்கு ஊட்டி வளர்த்தது.

உன்னைப் போன்ற பெண்கள் படித்து வேலைக்கு சென்றபின்னரும் கூட, திருமணமாகிவிட்டால், கணவன் சொல்படிதான் நடக்க வேண்டும் என்பதைத்தான் குடும்பம் இன்று வரைக் கற்றுக் கொடுத்துக் கொண்டேஇருக்கிறது. இருவரும் வேலையில் இருப்பீர்கள். ஆனால் திருமணம் ஆகிவிட்டால், தொடர்ந்து வேலைக்குப் போவாயா என்று ஒரு போதும் எந்த ஆணிடமும் எந்தக் குடும்பமும் கேட்டதே இல்லை. கணவனுக்கு சரியென்றால் மட்டுமே தொடர்ந்து வேலைக்குப் போகலாம் என்று பெண்ணுக்கு சொல்லத் தவறியதும் இல்லை.

உன் உடல் உனக்குச் சொந்தமில்லை என்றுதான் நாங்கள் உன்னைப் போன்ற பெண்களிடம் காலம் காலமாக கற்றுத் தந்திருக்கிறோம். அது ஆணுக்கானது. அதற்குரிய ஆண் வரும்வரை பத்திரமாக வைத்திருந்து அவனிடம் ஒப்படைப்பதையே பெற்றோரின் மகத்தான கடமையாக குடும்பம் சொல்லித் தந்திருக்கிறது. அதனால்தான் என்ன உடை அணியவேண்டும், எங்கே எந்த நேரத்தில் போக வேண்டும், எப்படி ஆணுக்குள் எப்போதும் காத்திருக்கும் காமப் பிசாசை உசுப்பிவிட்டுவிடக் கூடாது என்றெல்லாம் உனக்கு - உங்களுக்கு கட்டளைகள் போட்டு வந்திருக்கிறோம். ஆண் குடிக்கலாம். ஆண் சிகரெட் பிடிக்கலாம். ஆண் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், நீ — நீ ஒரு பெண் – செய்யக்கூடாது என்று மிரட்டி வந்திருக்கிறோம்.

நியாயப்படி பெண்ணை சக மனுஷியாக, தன்னைப் போலவே சிந்திக்கக் கூடிய, செயல்படக் கூடிய ஆற்றல் உடைய இன்னொரு உயிராகப் பார்க்கவும் மதிக்கவும் எங்கள் ஆண்களுக்கு எங்கள் குடும்பங்கள் சொல்லித் தந்ததே இல்லை. அப்பா எதிரிலே பேசவே மாட்டோம் என்றால் அது ‘மரியாதை’ தெரிந்த குடும்பம்.

பெண் காமத்துக்கானவள். பெண் குழந்தை வளர்ப்பதற்கானவள். பெண் ஆணின் இச்சைகளை பூர்த்தி செய்வதற்கானவள். இதைத் தவிரவும் ஒரு பெண் வேறு ஏதாவது அவள் விருப்பப்படி செய்ய முடிந்தால், அது அவளின் உரிமையாளனாகிய ஆணின் பெருந்தன்மையையே காட்டும் என்றே நாங்கள் உங்களை நம்பவைத்தோம்.

குடும்பம் வார்த்திருக்கும் இந்தப் பார்வையை தொடர்ந்து உரம் போட்டு வளர்த்து உறுதி செய்வதையே தங்கள் தலையாய பணியாக, பத்திரிகைகள், சினிமா, தொலைக்காட்சி என்று எல்லா ஊடகங்களும் செய்து வந்திருக்கின்றன. பெண்ணின் உடல் அழகிப்போட்டி முதல் பத்திரிகை அட்டை வரை, சீட்டுக்கட்டு முதல் சினிமா வரை எல்லா இடங்களிலும் ஆணுக்கான போகப்பொருளாகவே அழுத்தந்திருத்தமாக வரையறுக்கப்பட்டு விட்டது. பொறுக்கித்தனம் செய்பவன்தான் கதாநாயகன். அவனுக்காக உருகுபவள்தான் கதாநாயகி என்ற கருத்தை வலியுறுத்தும் படங்களுக்கு தேசிய விருது கொடுத்து கௌரவிப்பவர்கள் நாங்கள்.

இந்தச் சூழலில் வளரும் ஆண் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்று யோசி. படிக்காதவனாக இருந்தால் நீ பஸ்சில் எதிர்கொண்ட ஆறு பேரில் ஒருவனாகும் வாய்ப்பே அதிகம். தன்னைச் சுற்றிலும் காமத்தை தூண்டும் சூழல். நீ ஆண் என்பதால் நீதான் அதிகாரம் உள்ளவன் என்ற போதை. கூடுதல் போதைக்கு மது. பள்ளிகளை விட அதிகமாக பார்களை அரசாங்கமே நடத்தும் நாடல்லவா இது….

படிக்காதவன் தன்னைக் காதலிக்க மறுக்கும் பெண்ணாயிருந்தால் முகத்தில் ஆசிட் ஊற்றுவான். எனக்கு கிடைக்காத உடல் வேறு எவனுக்கும் கிடைக்க வேண்டாம் என்ற ஆணாதிக்க மனநிலை அது.

இந்த சூழலில் படித்தவனாக இருந்தால் அந்த ஆண் எப்படிப்பட்டவனாக வருவான் ? வரதட்சிணை பிரச்சினைக்காக மனைவியை வீட்டை விட்டுத் துரத்துவான்.அல்லது தன் பேச்சைக் கேட்காமல் கருவுற்ற குழந்தையை அபார்ஷன் செய்ய மறுத்த மனைவியை தண்டிக்க, பெற்ற குழந்தையை சுவரில் அடித்துக் கொல்வான். இதையெல்லாம் உன் நண்பனைப் போன்ற ஐ.டி படித்த எஞ்சினீயர்கள்தான் இதே நாட்டில் செய்தார்கள். கொஞ்சம் நாசூக்கு தெரிந்தவனாக இருந்தால், உடன் வேலை பார்க்கும் பெண்ணை கண்ணியமான ரேப்புக்கு அழைப்பான். உடன்படுத்தால் வேலை ஏணியில் அவள் அடுத்த படி ஏறிப் போகலாம்.

மாறுபட்ட எல்லா அணுகுமுறைகளுக்கும் ஒரே அடிப்படைதான். பெண்ணின் உடல் ஆணுக்கானது. மனம், சிந்தனை, அறிவு அதெல்லாம் ஆம்பளைங்க சமாச்சாரம். ஒவ்வொரு ஆணும் இன்னும் வாய்ப்பு கிடைக்காத ரேப்பிஸ்ட் என்ற நிலையை உருவாக்குவதையே நாங்கள் குடும்பம் தொடங்கி மீடியா வரை முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பார்வையைத் தொடர்ந்து பரப்பி வரும் நாங்கள் எல்லாரும்தான் குற்றவாளிகள். அந்த ஆறு பேர் மட்டுமல்ல. அவர்களை தண்டிக்க சில சட்ட வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் எங்களை தண்டிக்க சட்டத்தில் இதுவரை இடமில்லை.

அதனால்தான் உன் மன்னிப்பைக் கோருகிறேன். உன்னிடம் மட்டுமல்ல, ஒவ்வொரு பெண்ணிடமும் மன்னிப்பைக் கோருகிறேன். அவர்கள் எல்லாரும் இன்னமும் பாலியல் வன்முறைக்கு உட்படாமல் இருப்பது அதிர்ஷ்டம்தான். நேற்று நீ. நாளை இன்னொருத்தி. இந்த நிலை மாறவேண்டுமானால், அந்த ஆறு பேரை தூக்கில் போட்டால் மாறிவிடாது. அல்லது ஆறு பேரையும் காயடித்தாலும் மாறிவிடாது. நம் குடும்பம் மாற வேண்டும் நம் கல்வி மாற வேண்டும். நம் அரசியல் மாற வேண்டும். நம் ‘பண்பாடு’ மாறவேண்டும்.

இதையெல்லாம் மாற்ற உன்னைப் போன்ற பெண்கள் வேண்டும். உனக்கு நேர்ந்த கொடூரத்துக்குப் பின்னும் இந்த வாழ்க்கை மேல் நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறாய். நீ பிழைத்து வந்து மீடியாவில் தோன்ற வேண்டும். எவனோ ஒருவன் லவ் லெட்டர் கொடுத்தாலே தன் மானம் போய்விட்டதாகப் பதறும் கோழைப் பெண்களை மாற்ற நீ வர வேண்டும். தன்னைச் சுற்றிலும் இருக்கும் அத்தனை அம்சங்களும் தன் திமிரையும் காமத்தையும் மட்டுமே ஊக்குவிக்கும் ஆபத்திலிருந்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பும் ஆண்களை ஊக்குவிக்க நீ வரவேண்டும்.

அப்படி வரும்போது எங்களை மன்னித்துவிட்டு நம்பிக்கையுடன் வா. உன் மன்னிப்புதான் இனியேனும் எங்களை நல்லவர்களாக்கும்.

அன்புடன்

ஞாநி

சக இந்தியர்கள் சார்பாக.

குமுதம்
டிசம்பர் .2012

உயர்ந்த மனிதன் -அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே பாடல் உருவான விதம் - டி எம் எஸ் பேட்டி

மீட்டருக்கு மேட்டர் - 6

பல்லவிக்குச் சன்மானம் பத்து ரூபாய்!

எம்.எஸ்.விஸ்வநாதன்

‘உயர்ந்த மனிதன்படத்தில், ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே... நண்பனேஎன்ற சூப்பர் ஹிட் பாடலை யாரால் மறக்க முடியும்? அந்தப் பாடல் உருவானதற்குப் பின்னால் ஒரு சுவாரசிய கதை இருக்கிறது.
ஏவி.எம். நிறுவனம் அந்தப் படத்தைத் தயாரித்துக் கொண்டு இருந்த போது, சென்னையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ரெக்ஸ் ஹாரிசன் நடித்த படம் ஒன்று ஓடிக் கொண்டு இருந்தது. அந்தப் படத்தில் ஒரு பாட்டு இடம் பெற்றிருந்தது. கால்ஃப் மைதானத்தில் ரெக்ஸ் ஹாரிசன் கையில் ஒரு வாக்கிங் ஸ்டிக்கை வைத்துக் கொண்டு, அதனை ஸ்டைலாகச் சுழற்றிக் கொண்டே நடந்துவருவார்



 அந்தப் பாடலின் நடுநடுவே சில வசனங்களும் இடம் பெற்றிருக்கும். அதே மாதிரியான ஒரு பாட்டு, உயர்ந்த மனிதன் படத்திலும் இடம்பெற வேண்டும் என்று ஏவி.எம்.மில் விரும்பினார்கள். எனவே, கதையிலும் அதைப் போலவே ஒரு பாடல் காட்சிக்கான சிச்சுவேஷன் உருவாக்கப்பட்டது. அந்தப் பாட்டுக்கான டியூனைப் போடுவதற்கு முன்னால், ‘அந்த ஹாலிவுட் படத்தை ஒரு தடவைப் பார்த்துவிடுங்கள்!’ என்று soன்னார்கள். நானும் பார்த்தேன்.
அப்புறம் சிச்சுவேஷனுக்கு சுலபமாக டியூன் போட்டுக் கொடுத்து விட்டேன். பாடலும் எழுதப்பட்டுவிட்டது. அதைப் பாடும்போது சிவாஜி, மைதானத்தில் ஓடி வந்த களைப்பில் மூச்சு வாங்க, தமது நண்பரைப் பார்த்து அந்தப் பாட்டைப் பாடுவார். டி.எம். சௌந்தரராஜன், அந்தப் பாடல் ரெகார்டிங்குக்காக ஸ்டூடியோவுக்கு வந்தபோது, சிச்சுவேஷனைச் சொல்லி, பாடலையும் கொடுத்தாகி விட்டது. அவர், ஸ்டூடியோ வளாகத்திலேயே சில சுற்றுகள் ஓடிவந்து, மூச்சிரைக்க, அந்தப் பாடலைப் பாடினார். ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...’ பாடல் மிகவும் புதுமையாக இருப்பதாகப் பலரும் பாராட்டினார்கள்.

இயக்குனர் பீம்சிங்கின்வரிசைப் படங்கள் தமிழ் சினிமா உலகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றவை. அவரது ஒவ்வொரு படத்திலும், ஓர் அற்புதமான தத்துவப் பாடல் இடம்பெறும். அவற்றை டி.எம்.எஸ்.தான் பாடுவார். அந்தப் பாட்டுக்களைத் தாமே பாடுவதுபோல சிவாஜி அற்புதமாக லிப் மூவ்மென்ட் கொடுத்து அசத்துவார். பீம்சிங் இயக்கிய படங்களில் ஒன்று பழனி. அதில் சிவாஜிக்காக ஒரு தத்துவப் பாட்டு.
கவிதா ஓட்டலில் நானும், கவிஞர் கண்ணதாசனும் இன்னும் சில நண்பர்களும் உட்கார்ந்து கொண்டிருந்தோம். தத்துவப் பாடல் என்றால், கவிஞர் பாட்டை எழுதிக் கொடுத்த பிறகுதான் நான் டியூன் போடுவது வழக்கம். எனவே, சிச்சுவேஷனுக்குத் தகுந்தாற்போல கவிஞர் ஒரு நல்ல பல்லவி எழுதித் தருவதற்காகக் காத்துக் கொண்டிருந்தேன். ஏனோ அன்றைக்குப் பார்த்து நல்ல பல்லவி அமையவில்லை. அந்தச் சமயம் பார்த்து ஒருவர் விலை உயர்ந்த விஸ்கி பாட்டில் ஒன்றை அங்கே எடுத்துக் கொண்டு வந்தார். அது கண்ணதாசனின் கண்ணில் பட்டுவிட்டது. அவ்வளவுதான். பல்லவி எழுதுகிற வேலைக்கு தற்காலிக இடைவேளை.
கவிஞர் அந்த ஃபாரின் சரக்கின் விலை என்ன என்று கேட்க, அந்த மனிதர் ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்றார். அந்த பாட்டில், கைமாறி கவிஞரின் கைக்கு வந்தால் ஒழிய, பல்லவி பிறக்காது என்பது எனக்குப் புரிந்து விட்டது. சரி நடப்பது நடக்கட்டும் என நான் பொறுமையாக அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

என் பக்கம் திரும்பிய கவிஞர், ‘விசு! எவ்வளவு தேறும் உன்னிடம்?’ என்று கேட்டார். ‘என்னிக்கு கவிஞரே நான் கையில பணம் வெச்சிருந்திருக்கேன்? வாங்குற பணத்தை எல்லாம் அம்மா கையில் கொடுப்பதுதான் பழக்கம் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?’ என்று சொன்னேன். அங்கே இருந்த மற்றவர்களிடம் பணம் புரட்டி, அந்த விஸ்கி பாட்டிலை வாங்கிவிட முடியுமா? என்று கவிஞர் முயற்சித்தார். ஐநூறோ, அறுநூறோ தேறியது. ‘மிச்சத்துக்கு என்ன செய்ய?’ என்று கேட்டுவிட்டு, அடுத்தடுத்து யார் யாருக்கோ போன் போட்டுப் பேசினார். நேரம் ஆகிக் கொண்டிருந்ததே ஒழிய, பணம் புரட்ட முடியவில்லை; ஆகவே பல்லவியையும் எழுதி வாங்க முடியவில்லை.
கவிஞர் தன் கண்ணெதிரே இருக்கிற விஸ்கி, கைக்கு எட்டவில்லையே என்று மிக மனம் நொந்து போனார். கடைசியில் தமது அண்ணன் .எல். சீனிவாசனுக்கு போன் செய்தார். பணம் கேட்டுப் பார்த்தார். அண்ணனோ தம்பியைத் திட்டிவிட்டு, கேட்ட பணத்தைக் கொடுக்காமல், கேட்காத அறிவுரையை மட்டும் நிறைய கொடுத்தார். போனில் கவிஞர் கோபமாக அண்ணனோடு வாக்குவாதம் செய்யவில்லை என்றாலும், அவரது கோபத்தை அவருடைய முகமே வெளிப்படுத்தியது. போனை வைத்துவிட்டு வந்தவர், ‘இந்தா பல்லவி!’ என்றார். அடுத்து அவருடைய வாயிலிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன.
அண்ணன் என்னடா...தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே

இதைச் சொல்லும்போதே, எனக்கு மது அருந்துவது குறித்து கவிஞர் இன்னொரு பாடல் எழுதிய சம்பவமும் நினைவுக்கு வருகிறது. சிவாஜி நடித்தநீதிபடத்துக்குப் பாட்டு கம்போஸ் செய்ய உட்கார்ந்தோம். எனக்குக் கூட அவ்வப்போது சில சமயங்களில் பாடல் வரிகள் தானாகத் தோன்றும், அவற்றில் சில மிக நன்றாக அமைந்துவிடும்.  


அவற்றை தம் ஸ்டைலில் பாட்டில் புகுத்திவிடுவார் கவிஞர். இது அப்படிப்பட்ட ஒரு சம்பவம். நான் ஒரு டியூனைப் போட்டுக் காட்டி, அதற்கு ஒரு பல்லவியையும் சொன்னேன். நான் சொன்ன பல்லவி: ‘இன்று முதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம்; இன்னிக்கு ராத்திரிக்குத் தூங்கவேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்...’
நான் சொன்ன பல்லவியைக் கேட்டு, ஆச்சர்யப்பட்ட கவிஞர் உடனே ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்து, ‘உன் பல்லவிக்கு இந்தா சன்மானம்என்றார். ஆனால் நான் கைநீட்டி, அந்த ரூபாய் நோட்டை வாங்கப் போனபோது, சட்டென்று பின்னுக்கு இழுத்துக் கொண்டார்.



 ‘நீ சொன்னது நல்லாத்தான் இருந்தது; ஆனா ஒரு சின்ன திருத்தம். எந்தக் குடிகாரனும் இன்னியில இருந்து குடிக்க மாட்டேன்னு சொல்ல மாட்டான்; நாளையிலிருந்து நான் குடிக்க மாட்டேன் என்றுதான் சத்தியம் பண்ணுவான். நீ சொன்ன பல்லவியில தப்பு இருக்கு; அதனால உனக்கு பணம் கிடையாதுஎன்றார். பாட்டின் பல்லவிநாளை முதல் குடிக்க மாட்டேன்என்று மாறியது.
இசை ஆர்வம் காரணமாக தியேட்டரில் பாட்டுக் கேட்டுக்கொண்டே, வடை, முறுக்கு வியாபாரம் செய்வது விஸ்வநாதனுக்குப் பிடித்திருந்தாலும், அது வெகுநாட்களுக்கு நீடிக்கவில்லை.  



கண்ணனூரில் இசைப்பள்ளி நடத்தி வந்த நீலகண்ட பாகவதர், விஸ்வ நாதனின் தாத்தாவுக்கு நண்பர் என்பதால், தியேட்டரில் வடை விற்றுக் கொண்டிருந்த விஸ்வநாதனைப் பார்த்து




 ‘நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று ஆரம்பித்து, கேள்வி மேல் கேள்வி கேட்க, விஸ்வநாதன் எதையும் மறைக்காமல், ‘தனக்கு ஸ்கூலுக்குப் போவதைவிட சங்கீதம் கற்றுக் கொள்ளத் தான் ஆசை; ஆனால் உங்களுக்கு மாசம் மூன்று ரூபாய் ஃபீஸ் கொடுக்கும் படியான பொருளாதாரச் சூழ்நிலையில் குடும்பம் இல்லைஎன்பதைச் சொன்னதும், பாகவதர்



அப்படியா? நீ என் ஸ்கூலில் வேலை செய்யும் பையனாகச் சேர்ந்திடுஎன்றார். எட்டு வயசு விஸ்வநாதன் வேறு எதையும் பற்றிச் சிந்திக்காமல், பாகவதர் இசைப் பள்ளியில் வேலை செய்ய சம்மதித்தான்.

நீலகண்ட பாகவதருக்குக் கூடவே இருந்து பணிவிடைகள் செய்வது, அவரது அறையையும், வகுப்பறையையும் சுத்தம் செய்வது, இசைக்கருவிகளைத் துடைத்து வைத்துப் பராமரிப்பது போன்ற வேலைகளை ஆர்வத்துடன் செய்ததோடு, எட்ட நின்று கவனித்து, தமது இசை ஞானத்தையும் வளர்த்துக் கொண்டான்



 அந்த வருடம் விஜயதசமி. அதிகாலையில் எழுந்து இசைக் கருவிகளைத் துடைத்து, பொட்டு வைத்து, பூஜைக்குத் தயார். அக்கம் பக்கத்தில் யாருமில்லை என்ற எண்ணத்தில், ஹார்மோனியத்தை எடுத்து வைத்துக் கொண்டு, பய பக்தியோடு வணங்கி விட்டு, விரல்கள் ஹார்மோனியத்தில் விளையாட, வா பைரவி ராகத்தில் ஒரு பாட்டைப் பாடியது. ஆனால், அந்த நேரத்தில், நீலகண்ட பாகவதர் அங்கே இருந்தார்.



 விஸ்வநாதனின் திறமையில் சொக்கிப் போனார். அப்படியே விஸ்வநாதனைக் கட்டியணைத்து உச்சிமோய்ந்தார். ‘நீ முறையா சங்கீதம் கத்துண்டு, கச்சேரி பண்ணற அளவுக்கு உசரணும்என வாழ்த்தினார். விஸ்வநாதன், நீலகண்ட பாகவதரது மனம் கவர்ந்த சிஷ்யன் ஆனான்.
- ராணி மைந்தன்
(மீட்டர் நீளும்)


நன்றி - கல்கி