Wednesday, December 26, 2012

2013 -ஷேர் மார்க்கெட் எப்படி இருக்கும்? -சோம. வள்ளியப்பன்

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்!

ஷேர் மார்க்கெட் காளைகள்; கரடிகள்!

சோம. வள்ளியப்பன்

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சில நாட்கள் முன்பு, நூறு புள்ளிகளுக்கு மேல் விழுந்தது. ஏன் இறங்கியது என்பதற்குக் காரணம் சொன்னார்கள். நாடாளுமன்றத்தில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு தேவையா என்பது பற்றி வோட்டெடுப்பு எடுக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கேட்டதும், அதனால் ஆளும் அரசுக்கு சிக்கல் வரலாம் என்று பங்குச் சந்தை கருதியதும்தான் இறக்கத்துக்குக் காரணம் என்றார்கள்.
அதே சென்செக்ஸ், கடந்த செவ்வாய்க் கிழமை அன்று, ஒரே நாளில் 300 புள்ளிகள் உயர்ந்தது. திடீரென ஏன் அவ்வளவு உயர்ந்தது என்பதற்கும் காரணம் சொன்னார்கள். ‘கிரீஸ் நாட்டின் பொருளாதாரச் சிக்கலுக்குத் தீர்வு கிடைக்கும் எனத்தெரிந்தது மற்றும் மூடீஸ் என்ற ரேட்டிங் நிறுவனம் இந்தியாவுக்குச் சாதகமான ரேட்டிங் கொடுத்ததும்தான் சென்செக்ஸின் திடீர் உயர்வுக்கான காரணங்கள்.’
இப்படியாக அவ்வப்போது வருகிற செய்திகளை வைத்து சில நாட்கள் உயர்ந்தும் வேறு சில நாட்கள் இறங்கியும் இருப்பது பங்குச் சந்தையின் பழக்கம். இது இரவும் பகலும் மாறிமாறி வருவது போல. எல்லா காலகட்டங்களிலும் இப்படிப்பட்ட, ஒருநாள் ஏற்றம் அடுத்த சில நாட்களிலேயே இறக்கம் என்பது சாதாரணம்.
இந்த ஏற்ற இறக்கங்கள் வாங்கி விற்று, விற்று வாங்கி டிரேட் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வாய்ப்பு. அவர்கள் கவனம் இந்த மிகக் குறுகிய கால ஏற்ற இறக்கங்களின் மீதுதான்.
இதற்கும் அடுத்த (கால)கட்டம் உண்டு. அதை ஷார்ட்டர்ம் என்று சொல்லலாம். மூன்று மாதம் முதல் ஓர் ஆண்டு வரை. முன்னது இரவு பகலுக்கு ஒப்பு என்றால், இதை, ஆண்டில் வரும் வெவ்வேறு பருவக் காலங்களுடன் ஒப்பிடலாம். கோடைக்காலம், இளவேனிற் காலம் (இப்போது இருக்கிறதா என்ன?) மாரி காலம் (மழை), பனிக் காலம் என்பது போல, பங்குச் சந்தையிலும் ஓர் பட்ஜெட் தொடங்கி அடுத்த பட்ஜெட் வரை, ஒரு ரிசல்ட் சீசன் தொடங்கி அடுத்த ரிசல்ட் வரை என்பது போல ஏற்றங்களோ இறக்கங்களோ தொடர்ந்து நடக்கும்.
இதற்கும் அடுத்த நீண்ட காலகட்டமும் உண்டு. அதுதான் புல் ரன் மற்றும் பேர் ரன்கள். இவை குறைந்த பட்சம் சில ஆண்டுகள் நீடிக்கும்.
புல் ரன் என்றால், பங்குச்சந்தை தொடர்ந்து உயரும் காலகட்டம். பங்கு விலைகளின் எழுச்சி காலம். ஆமாம், இதை ஏன் புல் ரன் என்கிறார்கள் என்று சிலர் கேட்கலாம். காளைமாடு, சண்டைகளில் (புல் பைட்கள்), முன்வந்து தாக்கும் குணமுடையது. அதனால் தொடர்ந்து பங்கு விலைகள் உயரும் பங்குச் சந்தை காலகட்டத்தை புல் ரன் என்று சொல்லும் பழக்கம் இருக்கிறது.

இந்தக் காலகட்டத்தில் பங்கு விலைகள் விழவே விழாதா என்றால், விழும்தான். அதெப்படி விழாமலே மேலே போக முடியும்? விழும் ஆனால் விழாது என்று கூடச் சொல்லலாம். நூறு ரூபாய் விலை விற்கிற பங்கு 120 ரூபாய்க்கு விலை உயரும் (பகல்). அதன்பின் விழும் (இரவு). எவ்வளவு விழும்? பத்து ரூபாய்தான் விழும். இருபது ரூபாய் ஏறி, பத்து ரூபாய் விழுந்தால், அது வீழ்ச்சியா? இதுதான், விழும் ஆனால் விழாது (தத்துவம்!) என்பது.
பங்குச்சந்தை அனலிஸ்ட்டுகளின் மொழியில், இதை Forming Higher என்பார்கள். இறங்கும் ஆனால் முந்தைய இறக்கத்தைவிடக் குறைவாக. அதேபோல விலைகள் உயரும், முந்தைய உயர்வை விடக் கூடுதலாக. இதை Forming higher highs என்பார்கள்.
மிகக் குறுகிய கால பார்வையும் அணுகுமுறையும் கொண்டவர்கள், அன்றாடம் நடக்கும் ஏற்றங்களையோ இறக்கங்களையோ பார்த்துவிட்டு, முடிவுக்கு வந்துவிடுவார்கள். அதனால், வைத்திருக்கும் பங்குகளை விற்பார்கள். அல்லது கூடுதலாக வாங்குவார்கள்.
தொலைநோக்குப் பார்வையும் நீண்ட கால அணுகுமுறையும் கொண்டவர்கள், நடக்கும் விலை மாற்றங்களைத் தனித்துப் (in isolation) பார்க்காமல், மொத்தத்தில் விலைகளின் பயணம் (ஓவரால் டிரெண்ட்) எப்படி இருக்கிறது என்று பார்ப்பார்கள். அவர்கள் கவனிப்பது, டிரெண்ட் புல்லிஷா? அல்லது பேரிஷா?
ஆமாம், பகலுக்கு இரவு போல, கோடைக்குக் குளிர் காலம் போல, புல் ரன்க்கு எதிர்மறையும் எதிர்மாறான காலமும் உண்டு. அதன் பெயர் பேர் ஃபேஸ் (ரன் என்று சொல்வதில்லை).
Bear Phase என்றால், விலைகள் தொடர்ந்து இறங்குகிற காலகட்டம். கரடிகள் சண்டைகளில் பின்வாங்கித் தாக்குமாம் (யார் பார்த்தது!). பங்குச் சந்தையில் சிலர், பங்குகளை விற்று விற்றே பணம் பார்ப்பார்கள். அவர்கள் பெயர்தான் பேர்ஸ், கரடிகள்.
முன்பே பார்த்திருக்கிறோம். கையில் இல்லாமலே பியூட்சர்ஸ் மார்க்கெட்டில் விற்கலாம். பின்னர் விலை இறங்கும்போது வாங்கிக்கொடுத்து, நேர் செய்து கொண்டு விடலாம். இதுவும் நடக்கும். இப்படி பலரும் ஷார்ட் போவதால் பங்குவிலைகள் இறங்கும். கையில் பங்குகள் வைத்திருப்பவர்கள், ‘என்ன இது விலைகள் இப்படித் தொடர்ந்து இறங்குகிறதே! கையில் இருப்பதை விற்று, கிடைக்கிற பணத்தைப் பிடிப்போம்என்று அவர்களும் விற்பார்கள். இப்படியாக விற்போர் எண்ணிக்கை அதிகமாகிவிடும். வாங்குவோர் குறைந்து குறைந்து ஒரு நேரம் சீந்த ஆள் இல்லாமல் போகும். தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு!

முன்பு பார்த்த இரவு பகல் என்ற குறுகிய காலச் சின்ன மாற்றங்கள் இந்தக் காலகட்டத்திலும் நடக்கும். தொடர் இறக்கம் நேர்கோடாக இறங்காது. இடையிடையே உயர்வுகள் வரும். ஆனால் அவை இறங்கியதை விடக் குறைவாக இருக்கும். ஆமாம், Forming lower Tops & Lower lows உயரும்; ஆனால் முந்தைய உயர்வை விடக் குறைவாக இறங்கும்; முந்தைய இறக்கத்தை விட அதிகமாக.
நீண்டகால முதலீட்டாளர்கள் பார்க்க வேண்டியது, ஓவரால் டிரெண்ட் எப்படி இருக்கிறது என்பதைத்தான். இடையிடையே ஏற்படும் இரவு பகல் மாற்றங்களைப் பார்த்துத் திகைக்க வேண்டாம். எடுத்த முடிவுகளை அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டாம்.
2003 முதல் நம் பங்குச் சந்தைகளில் புல் ரன். தொடர்ந்து நாலே முக்கால் ஆண்டுகள் காளைகள் ஆண்டார்கள். 2008 ஜனவரியில்தான் அது முடிவுக்கு வந்தது. சென்செக்ஸ் 21 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டது அப்போதுதான். அந்தச் சமயங்களில்தான் பரஸ்பர நிதிகளால் கூட பெரும் லாபம் காட்ட முடிந்தது. இடைஇடையே இறக்கங்கள் வந்தன. ஆனாலும் டிரெண்ட், அப் தான்.
அதன்பிறகு வந்த பேர் ஃபேஸ்சில் அதே சென்செக்ஸ் 9000 புள்ளிகளுக்கும் கீழே வந்தது. அது சமயம், பங்கு விலைகள் சரிந்தன. உதாரணத்துக்கு, தற்போது 205 ரூபாய்க்கு விற்கும் அம்புஜா சிமெண்ட் 43 ரூபாய்க்குக் கிடைத்தது. தற்போது 1100 ரூபாய் விற்கும் ICICI வங்கிப் பங்குகள் 283 ரூபாய்க்கு வர்த்தகம் ஆயின.
2010 க்குப் பிறகு பங்குச் சந்தை இறக்க மனநிலையை விட்டுவிட்டு, உயரவும் பறக்கவும் தயாராகி வருவது போலத் தெரிகிறது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்து, மீண்டும் ஒரு புல் ரன் தொடங்கலாம்.
(தொடரும்)


நன்றி - கல்கி , புலவர் தருமி 

பரதேசி - வசனகர்த்தா நாஞ்சில் நாடன் பேட்டி

http://www.shalsaa.com/movie_gallery/Paradesi-Audio-Launch-Stills-12_S_981.jpgபரதேசி’ xclusive

‘‘பாலா, ஒரு வலி கடத்தி!’’

நாஞ்சில் நாடன் பேட்டி
எஸ். சந்திரமௌலி

கடந்த ஐம்பதாண்டுகளில் நான் ஏராளமான தமிழ்ப் படங்களைப் பார்த்து வந்திருக்கிறேன். இன்று தமிழ் மக்கள் மத்தியில் தவிர்க்கமுடியாத ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் சினிமா இன்னமும் ஒரு பொழுதுபோக்காகவே இருப்பது வருத்தம் தருகிறது



 அபூர்வமாக சில படங்கள் மட்டுமே பொழுதுபோக்கு தளத்தைத் தாண்டி, இந்தச் சமூகத்தை, இந்த மண்ணின் சரித்திரத்தைப் படம் பிடித்துக் காட்டி இருக்கின்றன. இயக்குனர் பாலாவின்பரதேசிஅதுபோன்ற ஒரு அரிய முயற்சி. அதற்காகவே அவரைப் பாராட்ட வேண்டும்," என்கிறார் சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன்



 அவர்தான் படத்தின் வசனகர்த்தா. குடும்ப நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்னை வந்திருந்த அவர்பரதேசிபடம் பற்றிய தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்...

சமகாலப் பிரச்னை இல்லையென்றாலும் கூட, பாலாபரதேசிபடத்தில் கையாண்டிருப்பது ஒரு சரித்திரப் பதிவுதான். 1940களில் நிகழ்ந்த மிக முக்கியமான விஷயத்தைத் தான் அவர் கையாண்டு இருக்கிறார். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அனுபவித்த பரிதாபத்துக்குரிய வாழ்க்கை முறையை விவரித்திருக்கிறார் பாலா.



 நம் நாட்டில் தேயிலை, காஃபித் தோட்டங்கள் என்பது இயற்கை இல்லை. ஆங்கிலேயர்கள் இங்கே வந்த பிறகு, மலைவாசஸ் தலங்களை ஏற்படுத்திய காலகட்டத்தில், காடுகள் அழிக்கப்பட்டு, தேயிலைத் தோட்டங்கள் முளைத்தன. அங்கே வேலை செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து படிப்பறிவு இல்லாத, கடுமையாக உழைக்க மட்டுமே தெரிந்த அடிமட்டத்து மக்களுக்கு முன் பணம் கொடுத்து, கூலிகளாக, அடிமைகளாக, பெண்களைத் தோட்டங்களில் தேயிலைப் பறிக்கவும், ஆண்களை கரடு முரடான வேலைகளைச் செய்யவும் கூட்டிக் கொண்டு போனார்கள்.



அங்கே கல்வி, மருத்துவ வசதி வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடையாது. அதிகார வர்க்கத்தினரின் கைகளில் அவர்கள் அனுபவித்த கொடுமைகளின் பதிவுகளே பரதேசி."

கதையில் என்ன விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன?

இந்திய தேயிலைத் தோட்டங்களில் நடக்கும் கொடுமைகளைப் பற்றி, அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசி இருக்கிறார்கள். காந்திஜியும் நிறைய பேசியிருக்கிறார். அதன் பிறகுதான், அவர்கள் விஷயத்தில் சில சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இது ஒரு பக்கம் என்றால், இயற்கை கூட அவர்களை மனிதநேயத்தோடு பார்க்கவில்லை.



தேயிலைத் தோட்டங்களில் மழைக் காலத்தில் மலேரியா வந்தால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பலியாவார்கள். ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில் அவர்களின் அடக்குமுறைக்கும், மலேரியாவுக்கும் பலியான இந்தியர்கள், உலகப் போர்களில் மாண்ட இந்தியர்களின் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகம். இதுதான் கதையின் ஆன்மா. உபரியாக, படத்தில் வரும் காதல், பழிவாங்கல், ஊர்த் திருவிழா எல்லாம் சினிமா அம்சங்கள்."

பாலாவோடு பணியாற்றிய அனுபவம்?

இதுபோன்ற ஒரு விஷயத்தை, ஆழமாக ஆராய்ந்து, ஒரு திரைப்படமாக பாலா எடுக்க முன்வந்திருக்கிறார் என்பதே எனக்கு ஆச்சர்யத்தையும், சந்தோஷத்தையும் அளிக்கிறது.
தம்முடைய கல்லூரி நாட்களில் படித்த என்னுடைய ஆரம்பக் காலப் படைப்புக்களில் ஒன்றானஇடலாக்குடி ராசாசிறுகதை தம்மை மிகவும் பாதித்ததாக பாலா எழுதி இருக்கிறார். என்தலைகீழ் விகிதங்கள்என்ற நாவலைத்தான் தங்கர்பச்சான்சொல்ல மறந்த கதையாக எடுத்தார். இயக்குனர் ஞான ராஜசேகரன்பாரதி’, ‘பெரியார்படங்கள் எடுத்தபோது, ஒரு சிறு அளவில் என் பங்களிப்பும் உண்டு. என்னுடையஎட்டுத் திக்கும் மத யானைநாவலைப் படமெடுக்க சிலர் அணுகியபோது நான் மறுத்துவிட்டேன். ஆனாலும், அதைப் பல்வேறு வழிகளிலும் பலரும் எடுத்துப் பயன்படுத்திக் கொண்டார்கள்.



பாலா, ‘நான் கடவுள்படம் எடுக்கத் தொடங்கியபோது, என்னை வசனம் எழுதும்படிக் கேட்டார். ஆனால், அந்தக் கதையில் ஜெயமோகனின் நாவலுக்கும் பங்கு உண்டு என்பதால் அவர் வசனம் எழுதுவதுதான் பொருத்தம் என்று சொன்னேன். ‘பரதேசிபடத்துக்கு வசனம் எழுத வேண்டும் என்று கேட்டபோது, படத்தின் இயக்குனர், இயக்குனர் பாலா என்பதாலும், அவர் படத்தில் கையாளப்போகும் விஷயம் மிக முக்கியமான ஒன்று என்பதாலும் சம்மதித்தேன்."


முதன்முதலில் சினிமாவுக்கு வசனம் எழுதியது?

என்னுடைய இடலாக்குடி ராசாவின் தாக்கத்தில் தம்முடைய பட ஹீரோக்களை உருவாக்கியதாகச் சொன்ன பாலா, பரதேசி படத்தின் முக்கிய பாத்திரமே அந்த ராசா தான் என்று முதலில் என்னிடம் சொன்ன போது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
ஆனாலும், 60 வயதுக்குப் பிறகு நமக்கு சினிமாவெல்லாம் தேவைதானா? நம்மால் சினிமாவுக்கு வசனம் எழுத முடியுமா? என்றெல்லாம் தயக்கம் இருக்கவே செய்தது. ஆனால், ஜெயமோகன் போன்ற சில நண்பர்கள்உங்களால் முடியும்; தள்ளிப் போடாமல், உடனே உட்கார்ந்து ஒன்றிரண்டு காட்சிகளுக்கு வசனம் எழுதுங்கள்; அதன்பிறகு, தானாகவே வேலை சூடு பிடிக்கும்என்று ஊக்கமளித்தார்கள். சென்னைக்கு வந்து கதை விவாதத்தில் கலந்து கொண்டேன். கையோடு உட்கார்ந்து ஏழெட்டு நாட்களில் பாதி படத்துக்கான வசனத்தை எழுதி முடித்துவிட்டேன்."

ஷூட்டிங் போனீங்களா?

போனேன். என்னை ஹீரோயினின் அப்பா என்று நினைத்து விட்டார்கள். நான் தான் படக் காட்சிகளுக்கு வசனம் எழுதினேன் என்றாலும், காகிதத்தில் பதிவான எழுத்து, பாலா போன்றவர்களின் கையில் நடிகர்களின் உடல் மொழியால், திரையில் பதிவாகும்போது, அது இன்னமும் உயிர்ப்பு பெறுவதைக் கண்டு பிரமித்துப் போனேன். கதாபாத்திரங்கள் கதையில் அனுபவிக்கும் உடல்ரீதியான, மனரீதியான வலிகளை, திரை மூலமாக அப்படியே படம் பார்க்கிறவர்களுக்கு பாலா கடத்தி விடுகிறார். பாலா ஒரு மிக நுணுக்கமான வலி கடத்தி!" - பேசும் நாஞ்சில் நாடனின் கண்களில் விரிகின்றன அந்தக் காட்சிகள்...


நன்றி - கல்கி , புலவர் தருமி  


http://www.thehindu.com/multimedia/dynamic/00477/CB15_TY26SIRPI_GAM2_477857g.jpg

மேஜிக் ரைட்டர் சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்…

(கண்டிப்பாக படிக்கவும் !!!)


1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள்,
இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி

... கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம்
அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.



2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக
இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள்
கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு
கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான்
இருக்கும்.



3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள்.
க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப்
போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு
உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும்
குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம்
செய்யாதீர்கள்.



4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது
விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல்
இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக்
கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.
\

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில்,
முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம்
ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.



6. இந்தச்
தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு
ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத
கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.



7.
வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ்
வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்),
எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும்.
வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன
படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும்,
கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக்
கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.



8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும்
நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும்.
கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது.
எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும்
உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம்
வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக
சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.



9. ஒன்பது
மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம்.
ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.



10. படுக்கப்
போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது
பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம்,
நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது
காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.



இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

நன்றி - ஆர் பார்த்திபன் ஃபேஸ்புக் , அமரர் சுஜாதா ..