Sunday, November 11, 2012

சுகி சிவம் -தீபாவளி சிறப்புக் கட்டுரை @ கல்கி

தீபாவளி சிறப்புக் கட்டுரை

மனசெல்லாம் மத்தாப்பூ!


நம் எல்லோருக்குமே மகிழ்ச்சியாக இருக்கத்தான் ஆசை. ஆனால், மகிழ்ச்சியாக இருப்பவர்கள் எத்தனை பேர்? பலர் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார்களே தவிர, நிஜமாகவே அப்படி இருப்பதாகத் தோன்றவில்லை.

மகிழ்ச்சிக்கு நாம் சில நிபந்தனைகள் விதிக்கிறோம். இது நடந்தால், இப்படி இப்படி சூழ்நிலைகள் அமைந்தால் மட்டுமே நான் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்கிறோம். அதனால்தான் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை. எது நடந்தாலும் அதை மகிழ்ச்சியாக்கிக் கொள்கிறவர்களே வெற்றியாளர்கள்.


தொலைக்காட்சியில் சுவாரஸ்யமான தொடரைப் பார்க்க இடையிடையே விளம்பரங்களையும் சகித்துத்தான் ஆகவேண்டும். வாழ்க்கையும் அப்படித்தான். சந்தோஷம் மட்டுமே தனியாகக் கிடைக்காது. இடையிடையே சங்கடங்களும் கலந்துதான் வரும். அந்தச் சங்கடங்களின் போது மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதுதான் வாழ்வின் விசேஷமே!


வானொலியில் பாட்டு கேட்பதற்கும் ஆடியோ ப்ளேயரில் பதிவுசெய்யப்பட்ட பாட்டுக் கேட்பதற்கும் வேறுபாடு உள்ளது. மியூஸிக் பிளேயரில் பிடித்ததாக மட்டுமே தேர்வு செய்து கொள்ள முடியும். வாழ்க்கை வானொலி மாதிரி. வருவதில் பிடித்ததும் உண்டு. பிடிக்காததும் உண்டு. பிடிக்காதது வரும்போது வருத்தப்படுவதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டு வேதனையின்றி வாழ்வது மிகப்பெரிய கலை.


மனிதர்கள், சங்கடங்களே வரக்கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள். பிரச்னை இல்லாத வாழ்க்கை எந்த மனிதனுக்காவது கிடைக்குமா என்ன? தலை உள்ள காலம் வரை தலைவலி இருக்கத்தானே செய்யும்


 மனிதர்கள் இருக்கும் வரை பிரச்னைகளும் இருக்கத்தான் செய்யும். ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வும் இருக்கிறது என்ற புரிதலே மனமகிழ்ச்சி தருகிற விஷயம். அதே பழமொழி புத்தகத்தில் சுறுசுறுப்பாக உள்ளவனுக்கு ஒவ்வொரு மரத்தின் பின்னாலும் ஒரு ரொட்டி இருக்கிறது... ஒவ்வொரு கல்லின் கீழும் ஒரு கதை இருக்கிறது" என்று படித்தேன். ஆம், ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு தீர்வு இருக்கிறது என்ற புரிதல் அவசியம்.



‘நம்மால் தீர்க்க முடியாத பிரச்னைகள் வராதா?’ என்று கேள்வி எழுந்தால் அதற்கும் ஒரு பிரிட்டிஷ் பழமொழி வைத்திருக்கிறேன். வீட்டை விடப் பெரிய கதவுகள் இருக்க முடியாது" என்பதே அது. நம் சக்திக்கேற்ப நம் பிரச்னைகளும் உள்ளன. நமக்கு மீறியது என்றால் நிச்சயம் அவை நமக்குரிய பிரச்னையே அல்ல என்று விலகி நிற்கும் துணிவு அவசியம். இந்த விவேகம் மிக மிக முக்கியம்.


ஒரு பட்டிமன்றத்துக்கு நான் நடுவராக இருந்தேன். அப்போது அங்கே பேசிய ஒரு பெண் பேச்சாளர், இன்னொரு பெண் பேச்சாளரின் கணவர் அட்டைக் கரி, அமாவாசைக் கரி என்று கிண்டலடித்தார். அடுத்துப் பேசிய கவிதா ஜவஹர் என்கிற அந்தப் பெண் பேச்சாளர் சிறிதும் கவலையடையாது, அவுங்க கறுப்புதான் ஆன மனசு தங்கம்ல. கறுப்புன்னா என்ன நஷ்டமா? இப்ப அடிக்கடி கரண்ட் போகுதில்ல. அன்னிக்குச் சாயங்காலம் ஏழு மணிக்கு கரண்ட் போச்சு. நான் என்ன செஞ்சேன்? அத்தான்... லேசா ஒரு சிரிப்பு சிரிங்கன்னேன். அந்த வெளிச்சத்துல தீப்பெட்டி எடுத்தேன். தீக்குச்சி வெளிச்சத்துல மெழுகுவத்தி எடுத்தேன். பிரச்னை தீந்திடுச்சுல்ல" என்று ஒரு போடு போட்டார்.


கொஞ்சம் மிகையான கற்பனை என்றாலும் அவரது தன்னம்பிக்கையான குரலும் நேர் வளமான மனமும் என்னை அசர வைத்தன.


ஒரு வேடிக்கையான கதை. ஓர் அலுவலகத்தில் மதிய உணவு வேளையின் போது மூன்று பேர் ஒன்றாகச் சாப்பிடுவது வழக்கம். தினமும் ஒரே வகையான உணவே அவர்களது டிபன் பாக்ஸில் இருக்கும். ஒருவருக்கு இட்லி மற்றவருக்குப் புட்டு, இன்னொருவருக்குச் சப்பாத்தி. இதே சிற்றுண்டிதான் தினமும். ஒருநாள் இட்லிக்காரர் எரிச்சலுடன், இன்னிக்கு மனைவிகிட்ட சொல்லப் போறேன். நாளைக்கும் இட்லியே கொடுத்தனுப்பினா இந்த 8வது மாடியிலிருந்து விழுந்து செத்துடுவேன்" என்று கத்தினார்



 புட்டுக்காரரும் ரோஷமுடன் அதையே வழிமொழிய சப்பாத்திக்காரரும் அதை வழிமொழிந்தார். ஆனால், மறுநாள் டிபன் பாக்ஸ் திறந்ததும் மூவருக்கும் வருத்தம். அதே இட்டிலி... அதே புட்டு... அதே சப்பாத்தி. ரோஷக்கார இட்லிக்காரர் சொன்னால் சொன்னபடி மாடியிலிருந்து விழுந்து விட்டார். புட்டுக்கும் வேறுவழியில்லை. அவரும் பாய்ந்தார். சப்பாத்தியும் அதையே பின்பற்றி விட்டார்.



கீழே விழுந்த மூவரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அவர்களது மனைவிமாருக்கும் தகவல் தரப்பட்டது. பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த மனைவிமார் மூவரும் தங்கள் தலையிலடித்துக் கொண்டார்கள். இட்லிக் காரர் மனைவி சொன்னார். இவர் இப்படிச் சொல்லுவாரே ஒழிய, செய்ய மாட்டார்ன்னு இட்டிலியே வைச்சேன்" என்றார். இது நிறைய விளையாட்டுக்குச் சொல்லும். அப்படி நெனச்சுடுதான் புட்டு வைச்சேன்" என்றார் அடுத்தவர். சப்பாத்திக்காரர் மனைவியோ, எனக்கு ஒண்ணு புரியவே இல்லை. சப்பாத்தி போட்டதும் அவர்தான், எடுத்து வச்சிக்கிட்டதும் அவர்தான்; அவரும் ஏன் விழுந்தார்னு புரியவே இல்லை" என்றார்.



மனிதர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். இதைச் செய்யாவிட்டால் மற்றவர்கள் தவறாக நினைப்பார்களோ என்கிற கவலையிலேயே வாழ்வைத் தொலைத்து விடுகிறார்கள். பிறரது நினைப்பு... பிறரது விமர்சனம்... இவற்றாலேயே அளவுக்கு அதிகமாகத் துன்பப்படுகிறார்கள். இந்த வட்டத்திலிருந்து வெளியே வந்து விட வேண்டும். பிறர் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை நம்மை மகிழ்ச்சியாக வாழவே விடாது.


நாம் துக்கப்படுவதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் எப்போதுமே பிறர் காரணம் என்று ஏமாந்து போகிறோம். நம் மனமே தான் உண்மைக் காரணம். நம் மனத்தை நாம் விரும்பியபடி மாற்றியமைக்க நம்மால் முடியும். நம்புவது சிரமம் என்றாலும் அது தான் உண்மை.


நமக்கு உடல்நலம் சரியில்லை என்று மனம் நம்பி விட்டால் காரணமே இன்றி நாம் நோய்வாய்ப் படுகிறோம். அதேபோல நிஜமாகவே உடல்நலக் குறைவு ஏற்படும் போதும், இல்லை எனக்கு ஒரு குறையும் இல்லை... என்னை இது எதுவும் செய்யாது" என்று திடமனத்துடன் நம்பி நோயில்லாத போது எப்படி இருப்போமோ அப்படியே இருக்கத் தொடங்கினால் நோயே ஓடி விடுகிறது என்கிறது உளவியல். மறக்கின்ற ஞானம் என்று இதனைக் குறிப் பிட்டு நோயைமனதிலிருந்து முழுமை யாகத் துடைத்து எடுத்து விட்டால் உடம் பால் அதைத் தாங்கிப்பிடிக்க ஆகாதுஎன்று எழுதுகிறார் நாகூர்ரூமி.


சுருக்கமாகச் சொன்னால், எப்போதும் நமது மனம் நம்மை உபயோகப்படுத்திக் கொள்கிறது. ஆனால் மனத்தை நாம் உப யோகப்படுத்திக் கொள்ள பழகிக் கொண் டால் வாழ்க் கையை ஜெயித்து விடலாம். கலை வாணர் என்.எஸ். கிருஷ்ணன் காரை ஏலம் போட வந்து விட் டார்கள். துணைவியார் மதுரம் பதறியபடி மாடிக்கு ஓடி வந்தார்.


 தமது வழக்கமான ஹெஹ்ஹே சிரிப்பைக் கலைவாணர் உதித் ததும் மதுரம், இப்ப என்ன சிரிப்பு வேண் டிக் கிடக்கு?" என்று சீறினார். நம்ம காரை வித்துடலாமான்னு நான் கேட்டப்ப இதை எந்த மடையன் வாங்குவான்னு கேட்டியே... இப்ப போயி எத்தனை பேரு மடையன்னு எண்ணிக்கோ" என்றபடி வருத்தமின்றி இருந்தாராம் என்.எஸ்.கே.



சந்தோஷமானவை நடந்தால்தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று சாதிக்காதீர் கள். அது குழந்தை மனம். சங்கடமானவை நடந்தாலும் சந்தோஷமாகவே இருங்கள். அதுதான் மனமுதிர்ச்சி. சில வருடங்களுக்கு முன்பாக கொல்கத்தா வானொலி நிலையத்துக்கு குரல் தேர்வுக்கு நெடுநெடுவென்று ஓர் இளைஞர் வந்தார். குரல் சரியில்லை என்று தோல்வியுடன் வெளியேறினார். இன்று அவர் விளம்பரப் படங்களில் நடிக்கவே கோடி கோடியாகத் தருகிறார்கள். அவர்தான் அமிதாப்பச்சன்.


பிரதமரின் விஞ்ஞான ஆலோசகர் பதவி முடிந்த பின் பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தார் அப்துல்கலாம். எதனாலோ பணி தரப்படவில்லை. அதனால்தான் அவர் ஜனாதிபதியானார்.


சங்கடங்கள் வந்தாலும் சந்தோஷமாகவே இருங்கள். தீபாவளி மத்தாப்பூவைப் பார்த்தீர்களா? அதன் தலையில் நெருப்பையே வைத்தாலும் வண்ண வண்ணமாய் பொங்கிப் பொங்கி எப்படி எல்லாம் சிரிக்கிறது பார்த்தீங்களா?


அப்படி இருக்க முயற்சிப்போமா?

நன்றி - கல்கி

சன் நியூஸ் - வை கோ எனக்கு அல்வா குடுத்தது ஏன்? - நாஞ்சில் சம்பத் பேட்டி

நாஞ்சில் சம்பத் உருக்கம்

‘‘கண்கள் பூக்கும்வரை காத்திருப்பேன்!’’

ப்ரியன்

வைகோ, என்னைக் கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்துவிட்டார். விசாரணை இல்லாமலே எனக்குத் தண்டனை கொடுக்க நினைக்கிறார் வைகோ," என்று உருகுகிறார் நாஞ்சில் சம்பத்.
எனக்கும் அவருக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது. கருத்து வேறுபாடுகளுக்குக் கதவு திறந்து வைக்கின்ற பழக்கமும் எனக்கு இல்லை. எப்போதும் தொலைபேசியில்கூட நான் அவரைத் தொடர்பு கொள்வதில்லை. ஏதாவது சொல்ல வேண்டுமென்று கருதினால் நேரில் சந்தித்துச் சொல்வதுதான் என் வழக்கம். கடந்த ஆகஸ்ட் திங்கள் 24ம் தேதி, அவருடைய தொலைபேசிக்குத் தொடர்பு கொண்டு, உதவியாளர் சந்துருவிடம், ‘பொதுச் செயலாளர் வீட்டுக்கு நான் வந்துகொண்டிருக்கிறேன்,’ என்று சொல்லிவிட்டுச் சென்றேன்.


வீட்டில் அவர் இல்லை. காத்திருந்தேன். வந்தவுடன், ‘மகள் திருமணம், 2013, மே.12 அன்று நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. வர வசதியாக இருக்குமா?’ என்று கேட்டேன். ‘அதனாலென்ன வந்து விடுகிறேன்என்று டயரியில் குறித்துக் கொண்டார். ‘சாப்பிடுங்கள்என்று வற்புறுத்தினார். தவிர்க்கப் பார்த்தேன். முடியவில்லை. அவரே, ‘உங்களுக்கு மீன் பிடிக்குமேஎன்று பாசத்துடன் பரிமாறினார். வயிறாரச் சாப்பிட்டேன். ‘மாப்பிள்ளை யார்என்றெல்லாம் விசாரித்தார். பின்னர் விடை பெற்றேன். அதுதான் வைகோவுடனான கடைசி விருந்தாக அமையுமென்று கனவில்கூட நினைக்கவில்லை.


கல்யாணத் தேதியும் வாங்கி வைத்துக் கொண்டு மகனுக்கு மெடிக்கல் சீட் வேண்டும் என்ற கோரிக்கையையும் அவரிடத்தில் கொடுத்துவிட்டு 47 வழக்குகளையும் சந்தித்துக் கொண்டு ஏங்குகிற நான் இனி வேறு ஒரு இயக்கம் என்று எப்படிச் சிந்திக்க முடியும்? நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இதுதான் வினைப்பயனோ என்று எண்ணி, எண்ணி கலங்குகிறேன். நான் மட்டுமல்ல; தென்திசை குமரி முதல் திருத்தணி எல்லைவரை இந்த இயக்கத்தைக் காப்பாற்ற களத்தில் நிற்கிற எல்லா தொண்டர்களும் வேதனைப்படுகிறார்கள்.



கடந்த செப்டெம்பர் 28ம் தேதி தொடங்கிய இந்தப் பிரச்னை ஒரு மாதம் தாண்டியும் இழுத்துக் கொண்டே போகிறது என்றால் எனக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் முடிவெடுத்து விட்டார் என்பதுதான் புரிகிறது.


மேலப்பாளையம், சத்திரப்பட்டி பொதுக் கூட்டம், மதுரை திருமணம்; இப்படி நான் ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. உட்கட்சி ஜனநாயகம் உளுத்துவிட்டது. கேள்வி கேட்க யாரும் இல்லை. கேட்டாலும் பதிலில்லை. மௌனத்தின் மூலமே என் மீது மண்ணை அள்ளிப் போடுவதற்குத் தீர்மானித்துவிட்டார். எது வருகிறதோ அதை எதிர்கொள்ள நான் தயாராகிவிட்டேன். காலம் என்ன கோலம் போடுகிறதோ தெரியவில்லை. நான் காத்திருக்கிறேன். கண்கள் பூத்துப் போகிறவரை காத்திருப்பேன்."


வைகோவுடன் கடைசி விருந்து என்று எப்படிச் சொல்கிறீர்கள்?


அவர் பேசாவிட்டாலும் பரவாயில்லை. மற்ற கழக முக்கியஸ்தர்கள்கூட என்னிடத்தில் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டார்கள். ‘நாடாளுமன்றத்தில் வைகோ குரல்என்ற புத்தக அறிமுக நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்கு எந்த மாவட்டத்திலும் நான் அழைக்கப்படவில்லை. எனவே நிராகரித்துவிட்டார்கள் என்பதை அவர் நினைத்தாலும் மறுக்க முடியாது."



வேறெந்த இயக்கம் போவதாக உத்தேசம்?


வேதனைகளும் விலங்குகளும் வருத்தமும் வலியும் இல்லாத ஒரு வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறேன்!"


நன்றி - கல்கி 

சென்னை: தமிழக அரசியலில் கட்சிகள் உடையும் அல்லது உடைக்கப்படும் காலம் இது! மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பெரிய கட்சிகள் தங்களுக்கு அடுத்த கட்சிகளை உடைப்பது கால்ந்தோறும் தமிழக அரசியலில் நடைபெற்று வரும் ஒன்றுதான்! அண்மையில்தான் தேமுதிகவை அதிமுக உடைத்து வைத்திருக்கிறது. இந்நிலையில் ஓசையின்றி மதிமுகவும் உடையக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது. உருவாகப் போகும் போட்டி மதிமுகவின் தலைவராக தற்போதைய கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் இருக்கக் கூடும் என்றே தெரிகிறது.




மதிமுக பொதுசெயலர் வைகோ மற்றும் நாஞ்சில் சம்பத் இடையேயான கருத்து வேறுபாடு உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. வைகோவோ, நாஞ்சில் சம்பத்தே கட்சியைவிட்டு விலகட்டும் என்று எண்ணுகிறார். ஆனால் நாஞ்சில் சம்பத்தே. வைகோவை விட கட்சிக்காக அனைத்து வகைகளில் அதிகம் உழைத்த நான் ஏன் என் கட்சியைவிட்டு விலகுவேன்... அது நடக்காது.. வேண்டுமானால் நீக்கிப்பாருங்கள்..நடப்பது என்னவென்று தெரியும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.



இன்று சன் நியூஸ தொலைக்காட்சிக்கு நாஞ்சில் சம்பத் அளித்த சிறப்புப் பேட்டியில் அவரது "போட்டி மதிமுக" மனநிலை வெளிப்படையாகவே வெளிப்பட்டது. அந்தப் பேட்டியில் நாஞ்சில் சம்பத் கூறியிருந்தாவது:




கடந்த 43 நாட்களாக என்னைப் பற்றி ஊடகங்களில் செய்தி வருவது என்பது தானாக வெளியிடப்படுவதல்ல.. யாரோ பற்ற வைத்துவிட வெளிவரும் செய்திகள்தான். என்னை மதிமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று திட்டமிட்டிருப்பவர்களே இப்படி செய்தியை கசியவிட்டிருக்கின்றனர். ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்த என்னை இப்படி பேசவைக்கிறவனாக மாற்றியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.



கருத்து வேறுபாடுகளுக்கு கதவு திறந்து வைக்கிற பழக்கம் என்னிடத்தில் இருந்தது இல்லை. எந்த ஒரு அத்துமீறலையும் நான் செய்ததும் இல்லை. எந்த ஒரு சிபாரிசுக்கும் சென்றது இல்லை. எம்.எல்.ஏ. பதவிக்கோ எம்.பி. பதவிக்கோ கோரிக்கை வைத்ததும் கிடையாது. எனக்கு விதிக்கப்பட்ட கடமையை நான் செவ்வனே செய்து வந்திருக்கிறேன்.



என்னை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று வைகோ நீண்டகாலமாகவே திட்டமிட்டிருக்கிறார். அதற்கான ஒத்திகைதான் தற்போது நடைபெற்று வருகிறது.



கடந்த 43 நாட்களாக சர்ச்சைக்குரிய செய்திகள் வந்த பிறகும் என் மகளின் மீது சத்தியமிட்டு என்னால் எந்தப் பிரச்சனையும் வராது என்று சொன்ன பிறகும் சம்பத்துக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று வைகோ சொல்லாமல் சங்கொலி இதழில் என்னை இழித்தும் பழித்தும் எழுதுகிற வைகோவை ‘சாரைப் பாம்பு' என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?





தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் உட்கட்சி பிரச்சனையில் வெளியேற்றறப்பட்டிருக்கிறார். சிலர் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது என் உருவப்பொம்மையை என் சொந்த ஊரிலேயே கொளுத்தியிருக்கின்றனர். நான் கொளுத்தியவன் மீது குற்றம்சாட்டவில்லை. என் உருவபொம்மையைக் கொளுத்தச் சொல்லியிருக்கிறார்கள். எனக்கு என் சொந்த ஊரில் செல்வாக்கு இல்லை என்பதற்காகவே வைகோ திட்டமிட்டு நடத்திய நாடகம்தான் இது!



வைகோவுக்கு அதிமுக கூட்டணியைவிட்டால் வேறு கதி இல்லை. அதனால்தான் அதிமுக அரசு குறித்து விமர்சிப்பது இல்லை. அவர் அங்குதான் போய்சேருவார். அதற்காகத்தான் நாஞ்சில் சம்பத்துக்கு எம்.பி. பதவி கேட்டார் என்றெல்லாம் பரப்பிவிடுகின்றனர். செப்டம்பர் 7-ந் தேதி மாவட்ட செயலர்கள் கூட்டம் கூட நடைபெற்றது. அப்பொழுது யாரும் இதுபற்றி பேசவில்லையே!



என்னை மதிப்பவர்களை மட்டுமே நான் மதிப்பேன்.. என்னை மதிக்காதவர்களை மதிக்க மனசு வராது. ஒவ்வொரு ஊரிலும் யார் யார் கட்சிக்காக உழைக்கிறவர்கள் என்று வைகோவால் நிச்சயம் அடையாளம் காட்ட முடியாது. என்னால் முடியும். வைகோ பரப்பிவிடுவது போல் மதிமுக மாவட்ட செயலாளர்களை ஓரணியில் திரட்டவெல்லாம் முயற்சிக்கவும் இல்லை.. முயற்சிக்கவும் மாட்டேன். என்னிடத்தில் நாள்தோறும் என் தம்பிமார்கள் ஆதரவு தெரிவித்து பேசினாலும் அவர்களை எனக்கு ஆதரவாக இருக்கச் சொல்லி கேட்பதும் இல்லை.



மதிமுகவுக்காக வைகோவைக் காட்டிலும் கடுமையாக உழைக்கிறேன். அவரைக் காட்டிலும் தொண்டர்களின் அன்பைப் பெறுகிறேன். கட்சி எல்லைகளைக் கடந்து இலக்கியக் கூட்டங்கள், பட்டிமன்றங்களில் பங்கேற்கிறேன். கடல் கடந்து நாடுகளிலெல்லாம் பேசிவருகிறேன். என் இமேஜ் ஏறி வருகிறது. அதை அவரால் பொறுத்துக் கொள்ளவில்லை.



தரம்கெட்ட, அடுத்தவர்களின் இருப்பை ஒத்துக் கொள்ளாத வியாதியின் விளைவுதான் இது. நான் ஒருபோதும் அவருக்கு போட்டியாக என்னைக் கருதியது இல்லை. நான் பிகராக இருப்பதுதான் இப்பொழுது பிரச்சனை.



என்னைப் பொறுத்தவரை என்னை ஆட்கொண்ட தலைவனின் பெருமையைத்தான் பேசுவேனே தவிர அவர்களின் சிறுமையை ஒருபோதும் கோடிட்டுக் காட்டியது கிடையாது. நான் நாகரிகமாக பேசுவேனே தவிர நாலாந்தரமாக பேசமாட்டேன்...


நான் பாலைவிட பரிசுத்தமாவன். நான்குபேர் நகைக்கும்படியாக நடக்கமாட்டேன். நான் அரசியல்வாதியைப் போல் நடந்து கொள்ளமாட்டேன். மனிதனைப் போல் நடந்து கொள்வேன்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் நான் வளர்த்த இயக்கம்.. அதில் இருந்து விலகமாட்டேன்.. விலகமாட்டேன்.



நான் வைகோவைக் காட்டிலும் அதிக மேடைகளில் பேசியிருக்கிறேன். அதிக வழக்குகளை சந்தித்திருக்கிறேன். அதிக அளவு பயணம் செய்திருக்கிறேன். ஒரு ஊருக்குப் போய் கூட்டம் நடத்தினால் 10 இளைஞர்களை கட்சிக்கு கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன். மேடைப் பேச்சு பேசிக் கொண்டு தின்றுவிட்டு உறங்குகிறவன் அல்ல இந்த நாஞ்சில் சம்பத்! நஞ்சு அருந்தச் சொன்னால் முதல் ஆளாக நிற்பவன் நாஞ்சில் சம்பத்!
என்னால் மதிமுகவுக்கு எப்போதும் பிரச்சனை வந்தது. தள்ளாடிய நிலையில் தலைமை எடுத்த முடிவு. அதனால் தத்தளித்தவர் நாங்கள்.



நெஞ்சிலே வக்கிரமத்தை வைத்துக் கொண்டு கருப்பை தேக்கி வைத்துக் கொண்டு என் கொடும்பாவியை கொளுத்தச் சொன்ன மனசாட்சியற்றவர் என்பதை தெரிந்து கொண்டதால்தான் வைகோவை என் மகள் திருமணத்துக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டேன்.



என்னை கட்சியைவிட்டு வைகோ நீக்கிப் பார்க்கட்டும். அப்போது என் தம்பிமார்கள் அனைவருடனும் சேர்ந்து முடிவெடுப்போம். காலம்தான் அதை தீர்மானிக்கும் என்றார்.



தாம் உருவாக்கிய வளர்த்த மதிமுகவை விட்டு தாம் ஒருபோதும் விலகமாட்டேன் என்றும் தமக்குப் பின்னால் தம்பிமார்கள் இருக்கிறார்கள் என்று மதிமுக தொண்டர்களைக் குறிப்பிட்டு நாஞ்சில் சம்பத் கூறியிருப்பதும் வைகோவைவிட மதிமுகவுக்காக பாடுபட்டவன் நானே என்று பிரகடனம் செய்திருப்பதும் நாஞ்சில் சம்பத் ஒரு தெளிவான முடிவாக அதாவது போட்டி மதிமுகவை உருவாக்கத்தான் போகிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.



இதனை உணர்த்தும்விதமாகத்தான் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், நான் எடுக்கப் போகும் முடிவால் எதிரிகள் அச்சப்படுவர் என்று கூறியிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

 thanx - thatstamil