Sunday, November 04, 2012

காதல் ரேடியோ!- கிருஷ்ணா- சிறுகதை

காதல் ரேடியோ!

கிருஷ்ணா

கடை வாசலில் அந்தப் பெரியவர் வந்து நிற்பது தெரிந்தது. அவர் மேல்துண்டால் முகத்தைத் துடைத்துக் கொள்வதையும் கவனித்தேன்.
ரிப்பேருக்கு வந்த ரேடியோ ஒன்றை ஊன்றிக் கவனிப்பதுபோல நடிக்க ஆரம்பித்தேன்.
ரேடியோ, ட்ரான்சிஸ்டர், டூ இன் ஒன், டி.வி. போன்ற எலெக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை சரி செய்யும் கடை நடத்தி வருகிறேன்.
போன மாதம்தான் இந்தக் கிழவர் என் கடைக்கு வந்தார். வெள்ளை வேட்டி, சட்டையில் ஐந்தரை அடி உயரத்தில் இருந்தார். எழுபது வயது இருக்கலாம். வயதின் காரணமாகவோ, இல்லை, உடலின் தளர்வு காரணத்திலோ, இலேசாகக் கூன் போட்டிருந்தார்.
கையில் கொண்டு வந்திருந்த ட்ரான்சிஸ்டரை என் முன் உள்ள டேபிளில் வைத்தார்.
தம்பி, இது பாட மாட்டேங்குது. சரி செஞ்சுத் தந்தால் புண்ணியமாய்ப் போகும்."
நான் ட்ரான்சிஸ்டரை எடுத்துப் பார்த்தேன். இரண்டு தலைமுறைக்கு முந்தைய மாடல்.
பெரியவரே, இது ரொம்ப பழைய மாடல். ஸ்பேர் பார்ட்ஸ் கிடைப்பது அரிதாச்சே" என்றேன்.
சற்று நேரம் ட்ரான்சிஸ்டரை வெறித்துப் பார்த்தார்.
கொஞ்ச நாள் ஆனாலும் பரவாயில்லை" என்றார்.
சரி, அப்புறம் வாங்க. முயற்சி பண்றேன்" என்றேன், நம்பிக்கையில்லாமல்.
ஆனால், அவர் முகம் சற்று மலர்ந்தது.
அதற்குப் பிறகு, இந்த ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட ஆறேழுமுறை அலைந்துவிட்டார்.
அவர் மேல் பரிதாபப்பட்டு, பழைய சாமான் கடைகளில் நானும் கேட்டுப் பார்த்தேன். பிரயோஜனமில்லை!
எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்ளவும் மறுக்கிறார்.
உங்களிடமே இருக்கட்டும் தம்பி. பார்த்துப் பண்ணிக் கொடுங்க" என்று அந்தப் பழைய ட்ரான்சிஸ்டரை என் தலையில் கட்டிவிட்டார்.
கடன்காரன் போல அவர் வருகை அமைய, எனக்குள் அவ்வப்போது கோபம் முளைக்கும். அவர் வயதையும், முகத்தையும் பார்த்தபிறகு, பாவம் எனத் தோன்றும்.
இதோ இன்றும், என் எதிரே வந்து நிற்கிறார்.
அவர் பார்வை, என் பின்னே சென்றது. அலமாரியில் இரண்டாவது தட்டில் இருக்கும் அவரின் ட்ரான்சிஸ்டரில் சற்று நேரம் நிலைத்தது.
தம்பி..." என்றார் மெதுவாய்.
உட்காருங்க..." என்றேன்.
சற்று நேரம், திறந்து கிடந்த ரேடியோவை நோண்டினேன். அந்த நேரம் பார்த்து மின்சாரம் நின்றது. இனி ஒரு மணி நேரம் ஆகும் திரும்பி வர.
வேறு வழியில்லை! பெரியவருடன்தான் பேசியாக வேண்டும்.
எதிரே அமர்ந்திருந்த பெரியவரை நோக்கினேன்.
சொல்லுங்க பெரியவரே..."
இன்னும் உதிரிச் சாமான் கிடைக்கலே போலிருக்கு" என்றார்.
அவர் குரலில் இருந்த ஏக்கம் என்னைச் சங்கடப்படுத்தியது.
புரிஞ்சுக்குங்க பெரியவரே! மிகவும் பழைய மாடல் இது. உதிரிப் பாகம் கிடைக்கிறது சிரமம். செலவும் அதிகமாகும். புதுசாய் வாங்கறதுதான் உத்தமம். இப்போதான் அம்பது ரூபாயிலிருந்து ட்ரான்சிஸ்டர் கிடைக்குதே. வாங்கித் தரவா?"
பெரியவர் தலைகுனிந்தபடி இருந்தார்.
இது என் பொண்டாட்டியோட உசிரு," என்றார் தழுதழுப்பாய்.
நான் திகைத்துப் போய்ப் பார்த்தேன்.
எனக்கும், தனலெட்சுமிக்கும் கல்யாணமாகி, ஏழெட்டு வருஷமாய் குழந்தையே இல்லை. அதனாலே வெளியே போக வர சங்கடப்படுவா! அப்போதே இந்த ட்ரான்சிஸ்டரை நானூறு ரூபாய் கொடுத்து வாங்கினேன், அவளுக்காக."
ட்ரான்சிஸ்டர் மார்க்கெட்டுக்கு வந்த சமயம் அது என்று எனக்குப் புரிந்தது.
வீட்டுலே எப்பவும் இது பாடிக்கிட்டே இருக்கும். நான் வேலைக்குப் போனப்புறம், தனத்துக்குத் துணையே இதுதான். இதோடவே சேர்ந்து பாடுவா, சிரிப்பா! தம்பி, தனம் பாடி நீங்க கேட்டதில்லையே. அப்படியேஜிக்கிகுரல்தான்."
பெரியவர் தமது இளமை துள்ளிய பருவத்திலேயே பயணித்துக் கொண்டிருப்பது புரிந்தது.
அவ பாடும்போது, நானும் சேர்ந்து பாடுவேன். அவஜிக்கின்னா, நான்ராஜா’! டூயட் பாடிப் பாடி, மனசு மிதக்க, ஒருவரை ஒருவர் விழிகளால் பருகி... அன்னிக்கெல்லாம் ஒரே ரொமான்ஸ்தான் போங்க!"
பெரியவர் வெட்கப்படுவதை வியப்புடன் பார்த்தேன். முதுமையும் அழகு தான்! பெரியவரும், முகம் தெரியாத அவர் மனைவியும் டூயட் பாடுவது போலக் கற்பனை ஓடியது எனக்குள்.
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
குடி இருக்க நான் வர வேண்டும்
எனக்குள் டூயட் பாட்டு ஒலிக்க, சிரித்துவிட்டேன்.
கண் மூடி, பரவசமாய்ப் பேசிக் கொண்டிருந்தவர், சட்டென குலுங்கி அழ ஆரம்பித்தார்.
அவர் அருகே சென்று, பெரியவர் தோளை ஆறுதலாய்ப் பிடித்துக் கொண்டேன்.
கொஞ்சம் சமாதானம் ஆனதும் சொன்னார்.
போன வருஷம் என் தனம் என்னை விட்டுப் போயிட்டா, நிரந்தரமாய். அவ போன பிறகு, எனக்கு இந்த ட்ரான்சிஸ்டரே துணை. இது பக்கத்திலே இருக்கறப்ப, பாடறப்ப, பேசறப்போ, தனலெட்சுமியே பேசற மாதிரி, பாடற மாதிரி ஒரு பிரமை."
அவர் பார்வை அலமாரியில் இருந்த அவரின் ட்ரான்சிஸ்டர் மேலேயே பதிந்திருந்தது.
ஏதோ தோன்ற, நான் அலமாரியிலிருந்த ட்ரான்சிஸ்டரை எடுத்து, அவர் அருகே கொண்டு வந்தேன்.
ஆசையுடன் அதைத் தடவினார்.
இதைப் பாருங்க தம்பி" என்றார்.

அவர் சுட்டிக் காட்டிய இடத்தில், ட்ரான்சிஸ்டர் மேற்புறம்தனம் - ராமசாமிஎன்று கம்பியால் கிறுக்கியிருந்தது.
ஹேர் பின்னை வைத்து தனம் தான் எழுதினா. ட்ரான்சிஸ்டர், தனம், நான் என்ற முக்கோண உறவில், தனம் இப்ப இல்லை! இதுவும் இல்லேன்னா, நான் எப்படி ஜீவிப்பேன்!" என்றார், பரிதாபமான குரலில்.
அன்று வீடு திரும்பியதும் என் மனைவியிடம் சொன்னேன்.
ஒரு பெரியவரோட ரொமான்ஸ் கதை கேளேன்."
கண்கள் விரிய கேட்ட என் மனைவி, ஆதர்ச தம்பதிங்க போல" என்றாள்.
இதுல இந்த ட்ரான்சிஸ்டர் சென்டிமென்ட் வேற" என்றேன்.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான சென்டிமென்ட். யாருக்குத்தான் இல்லை," என்றாள் பட்டென.
அப்ப, உனக்கும் இருக்கா?"
தலையசைத்தாள்.
சொன்னால் சிரிக்கக்கூடாது," என்றபடி பீரோவைத் திறந்து என் சட்டை ஒன்றை எடுத்துக் காண்பித்தாள். எங்களுக்குத் திருமணம் ஆனதும் வந்த என் பிறந்த நாளுக்கு, அவள் தேர்வு செய்த சந்தனக் கலர் சட்டை அது.
நீங்க வீட்டில் இல்லாதபோது, வெளியூர் எங்கேயாவது போனபோது, இதை எடுத்துப் போட்டுப்பேன். அப்பல்லாம், என்கூடவே நீங்க இருக்கறமாதிரி ஒரு உணர்வும், பரவசமும் ஏற்படும்" என்றாள்.
வியப்புடன் அவளைப் பார்த்தேன்.
பெரியவரின் கதையா, இல்லை, என் மனைவியின் சிபாரிசா தெரியவில்லை. அந்த ட்ரான்சிஸ்டரைப் பாட வைத்தே தீருவது என்று முடிவு செய்தேன்.
டவுனில் முனைப்புடன் அலைந்து, திரிந்து கிடைத்த உதிரிப் பாகங்களைச் சேகரித்து, எனது இத்தனை வருட அனுபவத்தையும் சேர்த்து, ட்ரான்சிஸ்டருக்கு உயிர் கொடுத்த பிரம்மாவானேன். இரண்டு நாள் வேலை, அதிக அலைச்சல், செலவு என்றாலும், ட்ரான்சிஸ்டர் பாட ஆரம்பித்ததும், கைதட்டி ஆரவாரித்தேன் குழந்தை போல.
பெரியவரின் வருகையை எதிர்பார்த்து, நானும், ட்ரான்சிஸ்டரும் காத்திருந்தோம். அவரைக் காணவில்லை.
மனசு திக்திக்கென்றது. பெரியவரின் தளர்ந்த தேகம் மனத்தில் ஓட, விபரீத கற்பனைகள் தோன்றின. கடவுளே அவர் உயிருடன் இருக்க வேண்டும்!
அவர் பெயர் ராமசாமி என்பதும், சீனிவாச நகரில் வசிப்பதும் தெரியும். முழு விலாசம் என்னிடம் இல்லை. காத்திருக்க பொறுமை இல்லாமல், நானே அவரைத் தேடிக் கிளம்பினேன்.
சீனிவாச நகரில் எந்தத் தெருவில் அவரைத் தேடுவது என்று குழம்பியபோது, ரேடியோ ரிப்பேர் கடை ஒன்று கண்ணில் பட்டது.
விசாரித்தேன்.
அந்த ரேடியோ பெரியவரா? நம்ப கடையிலேதான் முதல்ல ரிப்பேருக்குக் கொடுத்தார். சாமான் கிடைக்கலே. திருப்பிக் கொடுத்துட்டேன். இதே தெருவிலே பிள்ளையார் கோயிலுக்கு அடுத்த வீடு. ஓட்டு வீடாய் இருக்கும்," என்றார் கடைக்காரர்.
மனத்தில் பரபரப்பு. கால்களில் ஒட்டிக் கொள்ள, வேகமாய் நடந்தேன்.
அரை கிரவுண்ட் நிலத்தில், சொப்பு மாதிரி இருந்தது அந்த வீடு.
வாசல் கதவைத் தொட்டதும் திறந்து கொண்டது. உள்ளே நிசப்தம்.
முன் ஹாலிலேயே, கட்டிலில் பெரியவர் படுத்திருப்பது கண்டேன்.
அருகில் போய்ஐயாஎன்றேன்.
மெல்ல கண் திறந்தார்.
யாரு? ரெண்டு, மூணு நாளாய்க் காய்ச்சல். கண்ணே திறக்க முடியலே. யாரு நீங்க" என்றார் தீனமான குரலில்.
அருகிலிருந்த பிளக் பாயின்டில், ட்ரான்சிஸ்டர் ப்ளக்கை செருகி, ஸ்விட்சைத் தட்டினேன்.
ட்ரான்சிஸ்டர் பாட ஆரம்பித்தது.
பெரியவர் உடம்பில் மெல்லிய அதிர்வு.
தனம்...தனலெட்சுமி..."
பரவசமாய் அழைத்தபடி எழ முயன்றார் பெரியவர்.
ஏனோ, என் கண்களில் நீர் பெருகியது.


 நன்றி - கல்கி

தனி மனித தாக்குதல் நான் செய்ததில்லை - ஜெயமோகன் மறுப்பு

நான் சொல்வது கருத்து ரீதியான தாக்குதல் மட்டுமே!

எஸ்.வி.ராஜதுரைக்கு ஜெயமோகன் விளக்கம்!
ழுத்தாளர் ஜெயமோகன் மீது ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளது குறித்து கடந்த இதழில் எழுதி இருந்தோம். இந்த வழக்கு குறித்த தனது விளக்கத்தை எழுத்தாளர் ஜெயமோகன் நமக்கு அனுப்பி உள்ளார். அது... 



''எண்பதுகளில் திடீரென்று தமிழகத்தில் மிக வலுவான இந்திய அரசு எதிர்ப்பு வாதங்கள் எழுந்தன. காஷ்மீர் போல, பஞ்சாப் போல தமிழகத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் அவை. காந்தி, நேரு முதல் அம்பேத்கர் வரை எல்லாத் தேசியத் தலைவர்களையும் அவதூறு செய்து, இழிவுபடுத்தி எழுதும் போக்கு உருவானது. அதில் முதன்மையானவர் எஸ்.வி.ராஜதுரை.




 அவர் எழுதிய 'இந்து இந்தி இந்தியா’ முதலிய நூல்கள் அப்பட்டமான அவதூறு நூல்கள் என்பதை ஆய்வாளர்​கள் பலர் எழுதி​ விட்டனர். இளைய தலைமுறையினரிடம் தேசம் பற்றியும், இந்தியப் பண்பாடு பற்றியும் வெறுப்பை உருவாக்கக்கூடிய நூல்கள் அவை. அந்நூல்களுக்கு திட்டவட்டமான பதிலை நான் என் ’இன்றைய காந்தி’ முதலிய நூல்கள் வழியாக அளித்து வருகிறேன்.
இடதுசாரியாக அறியப்பட்ட எஸ்.வி. ராஜதுரை, எண்பதுகளில் சட்டென்று இந்திய தேசிய எதிர்ப்பு அரசியலை எழுதிக் குவிக்க அவர்பெறும் அன்னிய நிதியே  காரணம் என, அவரது முன்னாள் தோழர்களே அவர்களின் 'புதிய ஜனநாயகம்’ போன்ற இதழ்களில் குற்றம்சாட்டி மிகவிரிவாக எழுதி இருக்கிறார்கள். அவற்றை அவர் அப்போது மறுக்கவோ மானநஷ்ட வழக்குகள் போடவோ செய்யவில்லை.




கருத்துப் பிரசாரத்துக்கு பணம் அளிக்கும் 'ஃபோர்டு பவுண்டேஷன்’ என்ற அமைப்பு 'காலச்சுவடு’ போன்ற பல சிற்றிதழ்களுக்கு நிதி அளித்திருக்கிறது என்பதை ஃபோர்டு ஃபவுண்டேஷன் அமைப்பின் முன்னாள் ஊழியரான எம்.டி.முத்துக்குமாரசாமி  வெளிப்படுத்தினார். இந்தக் கருத்துக்களின் நிதிப் பின்னணியைக் கருத்தில்கொண்டுதான் இளைய தலைமுறை அக்கருத்துக்களை யோசிக்க வேண்டும் என்று நான் சொன்னேன்.



அதன் ஒரு பகுதியாக நான் ஏற்கெனவே அச்சில் வந்த, எஸ்.வி.ராஜதுரையே ஒப்புக்கொண்ட விஷயங்களை மட்டுமே சுட்டிக்காட்டினேன். ஈ.வே.ராமசாமி அவர்கள் பற்றி எஸ்.வி.ராஜதுரை எழுதிய நூலுக்கு அன்னியநிதி பெறும் ஒரு கிறித்தவ மதப் பரப்பு நிறுவனம் உதவி செய்திருப்பதை அவரே பதிவு செய்திருக்கிறார். அன்னியநிதி பெறும் கிளாட் ஆல்வாரிஸ் போன்றவர்களின் நிறுவனங்களில் அவர் பணியாற்றி இருக்கிறார். அவற்றை அவரே அச்சில் சொல்லி இருக்கிறார். அவற்றையும் கருத்தில் கொண்டுதான் எஸ்.வி.ராஜதுரையின் தேசவிரோதக் கருத்துக்களையும் தேசியத் தலைவர்கள் மீதான அவதூறையும் பரிசீலிக்க வேண்டும் என்பதை முன்வைத்தேன்.



 நாத்திகராகிய ஈ.வே.ராவைப் பற்றி எழுத ஏன் ஒரு கிறித்தவ நிறுவனம் உதவ வேண்டும்? இந்திய எதிர்ப்புக் கருத்துக்களை எழுதும் ஒருவர் எந்த அன்னிய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்று கேட்க ஒரு வாசகனுக்கு உரிமை உண்டு. இதைத்தான் தனிப்பட்ட அவதூறு என எஸ்.வி.ராஜதுரை சொல்கிறார்.



நான் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்கக்கூடியவன் அல்ல. 'விடியல்’  சிவா பெயரில் என்னை மிகவும் தனிப்பட்ட முறையில் தாக்கியும் சாபமிட்டும் ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதம் நோயுற்று மரணப்படுக்கையில் கிடந்த சிவாவால் எழுதப்படவில்லை என்றும் எஸ்.வி.ராஜதுரையாலேயே எழுதப்பட்டது என்றும், சிவாவின் உயிர் நண்பரும் இடதுசாரி இயக்கத் தோழருமான ஈழ எழுத்தாளர் ஒருவர் இணையத்தளத்தில் எழுதியபோது அறிந்தேன்.




இத்தகைய செயலை எஸ்.வி.ராஜதுரை செய்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், கருத்துலக விவாதத்தில் இதைப் பொருட்படுத்தலாகாது என நினைத்து விட்டுவிட்டேன். இப்போது, எஸ்.வி. ராஜதுரை நீதிமன்றம் சென்றிருப்பதால், நானும் அவர் மீது இவ்விஷயமாக மானநஷ்ட வழக்கு தொடுத் திருக்கிறேன். நான் சொன்னது ஒரு கருத்துலக மறு தரப்பு. எஸ்.வி.ராஜதுரை செய்திருப்பதுதான் முழுக்க முழுக்க தனிநபர் மீதான உளவியல் தாக்குதல், அவதூறு'' - என்கிறார் ஜெயமோகன்




ஜெயமோகன் தனது விளக்கத்தில் சொல்லி இருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து எஸ்.வி. ராஜதுரை யிடம் விளக்கம் கேட்டோம். ''அம்பேத்கர் பற்றி நான் மட்டமாக எழுதினேன் என்று இவர் சொல்வது சகிக்க முடியாத குற்றச்சாட்டு. நான் அம்பேத்கரைப் பெரிதாக மதிப்பவன். காந்தி, நேருவை விமர்சிக்க இந்த ராஜதுரை உள்ளிட்ட எந்த ஒரு சாதாரண குடிமகனுக்கும் உரிமை உண்டு. காந்தியையும் நேருவையும் விமர்சித்தால் அது இந்தியாவையே விமர்சித்தது ஆகாது. எனது விமர் சனத்துக்கு எதிர்விமர்சனம் வைக்க நினைத்தால் காந்தியையும் நேருவையும் காக்கும் வகையில்தான் கருத்துக்களை இடவேண்டுமே தவிர, ராஜதுரையின் மீது தனிமனிதத் தாக்குதலை ஜெயமோகன் செய்வது ஏன்? 




ஜெயமோகன் எழுதும் விஷயங்களில் எனக்கு முரண் இருந்தால் அவரது கருத்துகளுக்குத்தான் விமர்சனம் தெரிவிப்பேனே தவிர, அவர் மீது தனிப்பட்ட விமர்சனம் வைக்க மாட்டேன். காஷ்மீர், பஞ்சாப் போல தமிழகத்திலும் கிளர்ச்சி எழ வேண் டும் என்ற ரீதியில் நான் எழுதவில்லை. அதே​போல் எனது, 'இந்து இந்தி இந்தியா’ போன்ற நூல்களெல்லாம் அப்பட்டமான அவதூறு நூல்கள் என ஆய்வாளர்கள் பலர் எழுதியிருக்கிறார்களாமே... யார் அந்த ஆய்வாளர்கள் என்றும் ஜெயமோகன் சொல்லட்டும்.




என் நிதி பின்னணியை ஒரு நிறுவனம் அமைக்கிறது என்று குற்றம் சாட்டும் ஜெயமோகனுக்கான எனது சவால்கள்... நான் வாங்கிய பணம் எவ்வளவு என்பதை நிரூபிக்க வேண்டும். அந்த நிறுவனம் கிறிஸ்தவ மதக் கருத்துக்களைப் பரப்பும் நிறுவனம் என்பதையும், இந்திய தேசத்தைக் குலைக்கும் நிறுவனம் என்பதையும் நிரூபிக்க வேண்டும்.




அடுத்தும் ஓர் அடுக்க முடியாத குற்றச்சாட்டு, விடியல் சிவாவின் பெயரில் ஜெயமோகனைத் தனிப்பட்ட முறையில் தாக்கி நான் கடிதம் எழுதினே ​னாம். இப்படி ஒரு தகவலை இணையத்தில் எழுதிய ஈழ எழுத்தாளர் யார் என்பதையும் ஜெயமோகன் தெரிவிக்க வேண்டும். இந்த இடத்தில் ஒரு விளக்கத்தை வைக்க நினைக்கிறேன். சிவாவின் இமெயில் ஐ.டி-யில் இருந்து அந்தக்கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. நான் எப்படி அவரது ஐ.டி-யில் இருந்து அனுப்ப முடியும்?



 இறந்துபோன ஒருவரை மையமாக வைத்து புதுக்கதை தீட்டுவது ஈனத்தனமான செயல். ஜெயமோகன் என் மீது மானநஷ்ட வழக்குத் தொடுத்திருந்தால், அதை சட்டரீதியாக சந்திக்க நான் திறனாக உள்ளேன். அதேநேரத்தில், என் மீது அவர் வைத்த தனிமனிதத் தாக்குதல் தொடர்பாக நான் தொடுத்திருக்கும் வழக்குக்காக நீதிமன்றம் வந்து ஆஜராகிப் பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது'' என்றார் அழுத்தம்திருத்தமாக.



- நீதிமன்றம் இந்த விவகாரத்தை எப்படிப் பார்க்​கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்!

நன்றி - ஜூ வி 

டிஸ்கி - ஜூ வி வழக்கு பாயுதே வாழ்த்துகள் டூ ஜெமோ