Showing posts with label THAAMARAI. Show all posts
Showing posts with label THAAMARAI. Show all posts

Friday, July 06, 2012

முதல் கணவரை விட்டு விலகியது ஏன்? பாடல் ஆசிரியர் தாமரை பேட்டி

http://www.southdreamz.com/wp-content/uploads/2010/05/thamarai1.jpg 

மீட்டு வருவேன் மீண்டு வருவேன்!”

சந்திப்பு: அமிர்தம் சூர்யா


தாமரை உக்கிரம்

பாடலாசிரியர் தாமரை 500க்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் எழுதி, கலைஞர், ஜெயலலிதா இருவரிடமும் தமிழக அரசின் விருதினைப் பெற்றவர். சமூக நோக்கோடும் தமிழ் உணர்வோடும் பயணப்படும் தனித்துவமான படைப்பாளி. காதலுக்கு முன்... காதலுக்குப் பின்; திருமணத்துக்கு முன்... திருமணத்துக்குப் பின்; சினிமாவுக்கு முன்... சினிமாவுக்குப் பின் என மூன்று கட்டங்களில் அவர் எதிர்கொண்ட சவால்களைப் பற்றிக் கேட்டபோது, அவரது பதில்கள், தன்னம்பிக்கைப் பாடமாய் விரிந்தது.


நான், புத்தகம் வளர்த்த பிள்ளை. என் தோழமை, பலம் எல்லாமே புத்தகங்கள்தான். வாசிப்பு என்பது எனக்கு மூச்சு விடுதல் மாதிரி. என் வாழ்வின் தன்னம்பிக்கையை நான் புத்தகங்களிலிருந்தும் வகுப்பறையிலிருந்தும்தான் வாங்கிக் கொண்டேன். உண்மையிலேயே அன்று பள்ளி ஆசிரியர்கள் ஒழுங்காக இருந்தனர். பள்ளி ஒழுக்கமாக இருந்தது. இன்று விதிவிலக்காகத்தான் நல்லாசிரியர்கள் இருக்கிறார்கள். என் பள்ளியும் பள்ளி ஆசிரியர்களும்தான் என் தன்னம்பிக்கையைத் தட்டித் தட்டிச் செதுக்கியவர்கள


யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் எரிச்சலோடு மனப்பாடம் செய்த திருக்குறளும் தமிழ்ப் பாடங்களும்தான் என் மனதில் ஊன்றி என்னை இப்போதும் வழி நடத்தி வருகிறது என்று சொல்லலாம்," என்று சொல்லிக்கொண்டே வந்த தாமரையை நோக்கி, இந்தத் தன்னம்பிக்கைதான் உங்களின் கசப்பான முதல் காதலிலிருந்தும் முதல் திருமணத்திலிருந்தும் விடுவித்ததா?" என்ற கேள்வித் தூண்டிலைப் போட்டுவிட்டுக் காத்திருந்தேன். தாமரையின் இதழ்களில் இளம் புன்னகை.


நான் மங்கையர் மலர் வாசகிகளுக்கு என் வாழ்வின் ரணமான பக்கங்களையும் அந்தக் காயங்களை ஆற்றிய தன்னம்பிக்கை மருந்தைப் பற்றியும் பகிரங்கமாய்ப் பறை சாற்ற விரும்புகிறேன். இந்தக் கடுமையான கேள்விகள் என்னை எதுவும் செய்யாது நண்பரே! உங்களுக்குத் தெரியுமா?


கோயம்புத்தூரில் ஒரு முன்னணி தொழிற்சாலையில் முன்னணி பொறியாளர் பணியில் இருந்தேன். காலை 6.30 மணிக்குக் கிளம்பி இரவு நேரங்காலமின்றித் திரும்பும் இயந்திரமாய் இயங்கினேன். கல்லூரியில் என்னுடன் படித்த ஒருவரை விரும்பி இருந்தேன். சாதிகளைக் கடந்து ஆரம்பித்த காதல் அது.

http://3.bp.blogspot.com/-LGiIX4SRbh8/ToSqF7lBwFI/AAAAAAAAN1Q/XV_iPp6gvWs/s1600/Writer_Thamarai_Stills_01.jpg
திருமணம் நடந்த முதல் நாளிலிருந்தே போராட்டம்தான். அவருக்கு வேலை இல்லை. தொழிலதிபராகும் கனவு மட்டும் இருந்தது. அவர் கனவை நனவாக்க நான் சம்பாதிக்கும் இயந்திரமாக மாறிப் போனேன். என் கனவுகள், ஆசைகளைப் புதைத்து அவருக்கும் சேர்த்து உழைக்க வேண்டியிருந்தது. என் பெயரில் நிறைய கடனும் வாங்கப்பட்டது. மன உளைச்சலோடு துக்கம் கவ்விய நிலையில் என் முதல் திருமணம் தோல்வி அடைந்ததை உணர்ந்தேன்" என்று வெப்பம் கலந்த பெருமூச்சோடு சற்றே நிறுத்தினார் தாமரை.

தோழி, நீங்கள் சொன்ன சம்பவத்தில் தோல்வி என்று இதை எப்படி ஏற்பது? நீங்கள் கொஞ்சம் அதிகமாகக் கற்பனை செய்து கொண்டது போலத் தோன்றுகிறதே?" என்று சொன்னதுதான் தாமதம். கவிஞரின் கண்கள் சிவக்க ஆரம்பித்து செந்தாமரையாகவே மாறிவிட்டது.


ஓஓ! காதலித்து மனைவியான நான் இருக்கும்போதே இன்னொரு பெண்ணை எனக்குத் தெரியாமல் மணந்து, குழந்தை பெற்று இன்னொரு குடும்பம் நடத்தி வருவது தெரிந்தும் அதை நிரூபிக்க முடியாமல் தத்தளித்து மனதுக்குள் அழுது தற்கொலை உணர்வோடு, சம்பாதித்து மட்டுமே போடும் இயந்திரமாய் இருக்கும் பெண் அந்தத் திருமண வாழ்வைத் தோல்வி என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? இது கொஞ்சம் அதீதமான கற்பனையா? ஆண்கள் மொழியில் இதை வேறு எப்படிச் சொல்வது?" என்றார். அந்தரங்கத்தின் காயம் அறிந்தபின் அந்த வலியை சக மனிதனாய் நாமும் உணரத்தான் முடிந்தது. உங்கள் தன்னம்பிக்கை இதற்கு என்ன தீர்வு தந்தது. உங்கள் வாழ்வை, உங்களின் தனித்துவத்தைப் பிறகு எப்படித்தான் மீட்டெடுத்தீர்கள்?" என்று கேட்டேன்.

http://2.bp.blogspot.com/-ULDoTDxZZpA/T7cYczEchiI/AAAAAAAABZQ/4YWIWbk-VSg/s1600/2006110900400101.jpg
ஏழு வருடம் செய்த பொறியாளர் பணியிலிருந்து துணிந்து 93-ல் வேலையை விட்டேன். 94லிருந்து 97வரை முதன்முறையாக நான் எனக்காக வாழ ஆரம்பித்தேன். நிறைய படித்தேன். ஏழு ஆண்டுகளில் விட்டதைப் பிடித்தேன். இலக்கியத்தை இரவு பகலாகக் கரைத்துக் குடித்தேன். எழுத்தாளராக வேண்டும் என்ற கனவை மீட்டெடுக்க ஆரம்பித்தேன். ‘கல்கி’, ‘மங்கையர் மலர்’ ‘தினமலர்’, ‘குமுதம்’ ‘தினமணிஎன்று இதழ்களின் போட்டிகளுக்கு - கவிதை, கட்டுரை, கதை எழுதி பரிசுகளை வென்றேன். மாணவ நிருபராக விகடனில் இருந்த நான் மீண்டும் விகடனுக்கு எழுத ஆரம்பித்தேன். சிறந்த கதைக்காகசாவியில்தங்கச் சாவிபரிசு பெற்றேன். சாதிக்க முடியும் என்று தன்னம்பிக்கை துளிர்விட்டது. பாடலாசிரியராக வேண்டும் என்ற என் சிறு வயதுக் கனவை தூசித் தட்டி எடுத்துக்கொண்டு 97ல் சென்னைக்கு வந்தேன்.



சன்டீ.வி.க்கு இரண்டுமுறை விண்ணப்பித்திருந்தேன். என் மனுவுக்குப் பதிலே இல்லை. அப்போது உறுதிமொழி எடுத்தேன். இதேசன்டீ.வி., என்னைப் பேட்டி எடுக்கும் நிலைக்குப் போவேன் என்று. பின்னர் அதுவும் நிகழ்ந்தது.


நான் சென்னைக்குத் தனியாக ஒரே ஒரு பெட்டியுடன்தான் ரயில் ஏறினேன். நான் பிறந்து வளர்ந்த கோவையைத் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை. ஆனால், அந்தகோயமுத்தூரையே என்னைத் திரும்பிப் பார்க்க வைப்பேன்என்ற சபதம் அப்படியே புத்தியில் நெருப்பாய்க் கனன்று கொண்டு இருந்தது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_hY7Z7_eD_eyNC84bIo5L7Zu72YH-vIHrhpOnpOpIslUzYnVKaW6gL_83e-esHEeOt28lxKxhXdzhvlyBpOffNgQSzKSrWt4b7LnT15ZOMMCnTfnJCaFzW99e25WEF8crKzj0y5JQZD2G/s400/t.jpg
2008ல் தினமலர் வழங்கியகோவையின் தங்கப் பெண்மணிஎன்ற விருதின் மூலம் அதையும் சாதித்தேன்... இல்லை சாதித்தது சாதிக்க வைத்தது என் தன்னம்பிக்கை" என்று முடித்தார் பாடலாசிரியர் தாமரை.


நீறுபூத்த நெருப்பை ஊதிவிடும் காற்றைப்போல அவிழ்த்துப் போட்டேன் வேண்டுமென்றே ஒரு கேள்வியை. ‘சினிமா அதிர்ஷ்டம்தானே உங்களைப் புகழ் உச்சிக்கு ஏற்றியது. அந்த இடத்திலும் எதுக்குக் கொள்கை கோஷம்னு வீம்புப் பிடிக்கிறீங்க?’ என்றதும்தான் தாமதம்.

மன்னிக்க வேண்டும். அது நல்வாய்ப்பு இல்லை. என் அரிய உழைப்பு. விடாமுயற்சிதான் காரணம். 97லிருந்து 2000வரை திரைப்படத் துறையில் போராடினேன். தேடினேன். தேடிக்கிட்டே இருந்தேன். வாய்ப்பு வராது. வந்தாலும் என் ஆங்கிலம் கலக்காத, ஆபாசச் சொல் இல்லாத பாடல் என்ற கொள்கைக்குப் பாடல் கிடைக்காது. கிடைத்தாலும் பாடல் இடம் பெறாது. இடம் பெற்றாலும் படம் வெளிவராது. படம் வந்தாலும் கைக்குப் பணம் கிடைக்காது. இத்தனைக்கும் நான் இதுவரை கடன் வாங்கியது இல்லை என் வாழ்நாளில். குறைந்த வருமானத்துக்குள் என்னை அடக்கிக் கொண்டு வாழப் பழகினேன்.


2000-ல் கௌதமுடன் வாய்ப்பு வந்த போதுமின்னலேபடத்தின்வசீகராபாடல் என்னைத் தூக்கி நிறுத்தி அங்கீகாரம் தந்தது. மனைவி இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்ததை எதிர்த்து, கணவன் மீது குற்றவியல் வழக்குப் போட்டு சென்னைக்கு அவர்களை இழுத்து, நானே நீதிமன்றத்துக்குத் தனியாகப் போய்ப் போராடி விவாகரத்துப் பெற்றேன்.


பிறகு 2002-ல் தோழர் தியாகுவுடன் திருமணம் நடந்தது. கைக்குழந்தையோடு சினிமா வாய்ப்புக்கு நீங்கள் அலைந்து பாருங்கள். அதன் வலி புரியும். சென்னையில் நான் தனியாக வாழ்ந்தபோது, என் அறைக்கு யாரையும் அழைத்துப் பேச மாட்டேன். என்னைச் சந்திக்க வருபவர்களை அறைக்கு வெளியே பொது இடத்தில் வைத்துத்தான் எச்சரிக்கையோடு பேசுவேன். இதுவரை எந்த வதந்தியும் என் மீது படர்ந்தது இல்லை" என்றபோது கொஞ்சம் ஆசுவாசம் படுத்தியபின் பேசினேன்...
நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறீர்கள்" என்றபடி என் இறுதிக் கேள்விக்கு இடம் விட்டேன்...


வதந்திக்கு உட்படாத உங்கள் வாழ்வில் உங்களது இரண்டாவது மணவாழ்வு ஊடகங்களால் இப்போது ஊசலாடுவது போலிருக்கிறதே. இதை எப்படி எதிர்கொள்வீர்கள்?" என்றேன்.


ஒரு நாள் காலை எழும்போது நேற்று வரை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை, உழைத்த உழைப்பு, வைத்த நம்பிக்கைகள் அத்தனையுமே பொய்யானவை என்ற நிலை ஏற்பட்டால் என்ன வலி ஏற்படுமோ அதுதான் எனக்கும் ஏற்பட்டது. கைகால்கள் மரத்துப் போய் செயல் இழந்த நிலையில்தான் அதையும் எதிர்கொண்டேன்.
திருமணம் என்பது இருவர் சேர்ந்து செய்துகொள்வது. அதைத் திடீரென்று இருவரில் ஒருவர் தன்னிச்சையாக, தனிப்பட்ட முறையில், தன் சொந்தக் காரணங்களுக்காக, உடைத்து வெளியேற முடியாது என்பதில் உறுதியாக இருந்தேன்.


அப்படித்தான் எனது இந்தப் போராட்டம் எனக்கு இன்னும் பல அனுபவங்களையும் பார்வைகளையும் கற்றுக் கொடுத்துள்ளது. மீட்டு, மீண்டு வருவேன்" என்றார் உக்கிரமாய்.


தமிழகத்தின் ஹிலாரி போல் தெரியும் தாமரை, கிளிண்டன் போல் தோற்றம் காட்டும் தியாகுவையும் சேர்த்தே வெல்ல வேண்டும். இந்த உரையாடலில் தாமரையை மொழிபெயர்த்தால்தன்னம்பிக்கைஎன்றே வருவதைத் தவிர்க்க முடியவில்லை. எல்லா பெண்களுக்குள்ளும் போராடும் ஒரு செந்தாமரை இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது என்ற சிந்தனையோடு விடை பெற்றோம்.

http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/161967_163686113679931_6652959_n.jpg


நன்றி - மங்கையர் மலர் மாத இதழ் , அமிர்தம் சூர்யா, கல்கி வார இதழ்


 டிஸ்கி - நான் ஈ - சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/07/blog-post_5455.html