Showing posts with label 10. Show all posts
Showing posts with label 10. Show all posts

Tuesday, January 01, 2013

2012 - டாப் 10 அழகிகள்

உலக நாயகிகள்!

ஆ. அலெக்ஸ் பாண்டியன்
ஹாலிவுட்டில் ஏஞ்சலினா ஜோலிகளை ஓரங்கட்டிவிட்டது அழகிகள் படை. உலகின் டாப் செக்ஸி லிஸ்ட், பியூட்டி லிஸ்ட், காஸ்ட்லி லிஸ்ட் என அனைத்துப் பட்டியல்களிலும் இடம் பெற்றிருக்கும் டாப் 10 பட்டாம்பூச்சிகளின் இனிய இன்ட்ரோ இங்கே... 


செலினா கோம்ஸ்

'ஸ்பை கிட்ஸ்’ படம் மூலம் சின்னதாக அறிமுகமாகி, பரபர வளர்ச்சி அடைந்து 20 வயதுக்குள்ளாகவே 'வுமன் ஆஃப் தி இயர்’ பட்டம் வென்ற ஏஞ்சல். ஆரம்பத்தில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் தலை காட்டி வந்தவருக்கு 'விசார்ட்ஸ் ஆஃப் வேவர்லி பிளேஸ்’ படம் பெரிய பிரேக்.  இடையில் பாப் பாடகர் ஜஸ்டின் பைபருடனான இரண்டு வருட டேட்டிங், பிரிவு, மீண்டும் காதல் எனக் காதல் பஞ்சாயத்துக்கும் பஞ்சம் இல்லை. பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் இயக்கத்தில் ஈடுபாடு காட்டும் செலினா, 'ப்யூர் லவ் வெயிட்ஸ்’ என்ற எழுத்துக்கள் பொறித்த மோதிரத்தை அணிந்திருக்கிறார். யார் எங்கே காத்திருக்கிறார்களோ!
வெனஸா ஹட்ஜென்ஸ்

ட்டு வயதிலேயே மேக்கப் போட்டு போஸ் கொடுக்க ஆரம்பித்த வெனஸா, 'பலானா பலான’ விஷயங்களில் பிரபலம். படுக்கையறையில் அவரை அவரே எடுத்துக்கொண்ட செம செக்ஸி படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்த, அதுவரை அவர் நடிப்பதற்கென கமிட் ஆகியிருந்த படங்களில் இருந்து கழட்டிவிடப்படும் நிலை உண்டானது. ''அது என் அனுமதி இல்லாமல் வெளியான படங்கள். எக்ஸ்கியூஸ்மீ!'' என்று சமாளித்தார் ஐஸ்க்ரீம் அழகி. படங்களை லீக் செய்தது யார் என்பதை அறிய எஃப்.பி.ஐ. ஆட்கள் விசாரிக்க வந்ததெல்லாம் டாப்பிக்கல் தகராறு. ஹாலிவுட்டின் பிரபலப் பத்திரிகைகளின் அட்டைப் படங்களை அலங்கரித்திருக்கும் வெனஸா, 22 வயதுக்குள் வாழ்க்கையின் எல்லா இன்ப துன்பங்களையும் அனுபவித்துவிட்டதாக அலுத்துக்கொள்கிறார். ''வாழ்க்கை போரடிக்கிறது!'' என்று அடிக்கடி சொல்பவர், அப்படி உணரும் தருணங்களில் தனது காமாசோமா வீடியோக்களை இணையத்தில் அப்லோடுவார். அதை முழுக்கப் பார்த்து ரசித்துவிட்டு, மறக்காமல் திட்டிக் குவித்துவிடுவார்கள் இணைய தலைமுறையினர்!
விக்டோரியா ஜஸ்டிஸ்

கிறங்கடிக்கும் அழகையும் தாண்டி உருகவைக்கும் கேரக்டர், விக்டோரியா ஜஸ்டிஸ். நடிப்பு மீது இவருக்கு இருந்த தீராக் காதலால், இவரது குடும்பமே லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குக் குடிபெயர்ந்தது. குடும்பத்தின் நம்பிக்கையைப் பொய்க்காமல் நடிக்கத் துவங்கி, இப்போது வருடம் மும்மாரி விருது மழை பொழிகிறது. பன்னிரண்டாவது வயதிலேயே 'சிறந்த நடிகை’ விருது தட்டியிருக்கிறார். ''என் 17 வயதில் எனக்கு இருந்த சுதந்திரமான சூழல் இப்போது பல பெண்களுக்குக் கிடைப்பது இல்லை. அதை அவர்களுக்கு உருவாக்குவதற்காகப் பாடுபடுவேன்!'' என்று சொல்லி பெண்கள் முன்னேற்றத்துக்காக அமெரிக்கா முழுக்கச் சுற்றுகிறார். ''உங்கள் கனவைச் சிதைக்க யாருக்கும் அனுமதி அளிக்காதீர்கள்!'' - இதுதான் விக்டோரியாவின் வேதம்.
எம்மா ஸ்டோன்

ச்சைக் கண் பளிங்குப் பொண்ணு. 'தி அமேஸிங் ஸ்பைடர்மேன்’ படத்தில் நடித்ததன் மூலம் அதீத லைம்லைட் பெற்றவர். சினிமாவுக்கு வரவில்லை என்றால், பத்திரிகையாளர் ஆகியிருப்பேன் என்று சொல்பவர், கடந்த ஒரு வருடமாக 'ஸ்பைடர் மேன்’ பட ஹீரோவுடன் கோயிங் ஸ்டெடி. கூந்தலை பிரவுன், சிவப்பு என விதவிதமாக நிறம் மாற்றிக்கொள்வது இவருக்குப் பிடித்த பொழுதுபோக்கு.
ஜெனிஃபர் லாரன்ஸ்

'மிகவும் திறமையான இளம் நடிகை’ என்று ஜெனிஃபரை அமெரிக்கா கொண்டாடுகிறது. 'எக்ஸ் மேன்’, 'தி ஹங்கர் கேம்ஸ்’ படங்களில் அதிரடி செய்ததன் மூலம், 'எப்போதைக்குமான ஆக்ஷன் ஹீரோயின்’ என ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் பாராட்டப் பெற்றிருக்கிறார். ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸுடன் தேவதைக்குக் காதல். 'உலகிலேயே என்னை அதிகம் சந்தோஷப்படுத்தக்கூடிய மனிதர் நிக்கோலஸ்தான்!’ என 'உருகுதே மருகுதே’கிறார்!
க்ரிஸ்டன் ஸ்டூவர்ட்

க்ரிஸ்டன் ஸ்டூவர்ட் என்பதைவிட 'பெல்லா’ என்றால் உலகமே பாசப் பார்வை பார்க்கும். டிராகுலா கதையான ட்வைலைட் படங்கள் மூலமாக உலகப் பிரபலம் அடைந்த ஹோம்லி ஏஞ்சல். தனது 19-வது வயதில்தான் ஹைஸ்கூல் படிப்பையே முடித்தார். ட்வைலட் பட நாயகன் ராபர்ட்டுடன் இவருக்கு நிஜத்திலும் வளர்ந்த காதல் உலகம் அதிகம் விவாதிக்கும் அந்தஸ்து பெற்ற செய்தி. இப்போது க்ரிஸ்டன் பிற ஆண்களுடனும் கெமிஸ்ட்ரி பாராட்டுவதால், இருவருக்கும் இடையே லடாய்... கடாய்!
மேகன் ஃபாக்ஸ்

ந்து வயதில் மேடை நாடகத்தில் தொடங்கிய கலைச் சேவை, பதின்பருவ வயதுகளில் பல மில்லியன்கள் சம்பளம் வாங்கும் அளவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. டிரான்ஸ்ஃபார்மர்ஸ், ஜெனிஃபர்ஸ் பாடி படங்களில் நடித்ததன் மூலம் சர்வதேசக் கவனம் ஈர்த்தவர். உடல் முழுக்க விதவிதமாக டாட்டூ குத்திக்கொள்பவர், காதலன் பிரையன் க்ரீனின் பெயரை இடுப்பில் பதித்திருக்கிறார். வால் மார்ட் கடை ஒன்றில் ஷாப்பிங் செய்யும்போது சில மேக்கப் அயிட்டங்களைத் திருடி, மாட்டிக்கொண்டு முழித்தது மேகனின் சாதனைகளுள் ஒன்று!
டக்கோடா ஃபேன்னிங்

'தெய்வத் திருமகள்’ படத்தின் ஒரிஜினல் 'ஐ யாம் சாம்’ படத்தில் குட்டி நிலாவாக நடித்த பியூட்டி. ''இயக்குநர் ஆக வேண்டும் என்பதே லட்சியம்'' என்று சொல்லும் டக்கோடா, இப்போதும் செல்லும் இடங்களில் எல்லாம் பொம்மைகளை வாங்கிக் குவிக்கிறார். 'இவ்வளவு கலாட்டா செய்கிறீர்கள். ஆனால், 'ஐ யாம் சாம்’ படத்தில் எப்படி அவ்வளவு சீரியஸாக நடித்தீர்கள்?’ என்று கேட்டதற்கு, 'நான் வளர்க்கும் தங்க மீன் இறந்துவிட்டதாக நினைத்துக்கொள்வேன். கண்ணீர் பொலபொலவென வந்துவிடும்!'' என்றார் சமத்தாக!
அன்னா சோபியா ராப்  

டிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, 'சினிமா... சினிமா’ என அழுது அடம்பிடித்து நடிக்க வந்தாலும், 42 ஆடிஷன்களுக்குப் பிறகும் சினிமா கதவு திறக்கவே இல்லை அன்னாவுக்கு. இப்போது அன்னாவின் கால்ஷீட் 2015 வரை ஃபுல். 'சார்லி அண்ட் தி சாக்லேட் ஃபேக்டரி’ இவரது லேட்டஸ்ட் ஹிட். இவர் அணியும் எந்த ஆடையையும் சிலாகித்து வர்ணித்துப் போற்றிப் பாராட்ட பெரும் கும்பல் உண்டு இணையத்தில். குழந்தைத்தனம் மாறாத முகத்தாலேயே பலரைக் கவர்ந்த அன்னாவை டூ-பீஸ் ஆடையில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. அதனாலேயே இப்போதெல்லாம் டவுசர் சட்டை தாண்டி, கவர்ச்சி எல்லை தாண்டுவதே இல்லை.
எல்லி ஃபேன்னிங்

'ஐ யாம் சாம்’ புகழ் டக்கோடா ஃபேன்னிங்கின் அன்புத் தங்கை எல்லி. ஹாலிவுட்டின் மிக மிகக் குட்டிப் பாப்பா ஹீரோயின். ஹாலிவுட் சினிமா வரலாற்றில் முதல் முறையாக மூன்றரை வயதிலேயே பிரீமியர் ஷோவில் கலந்துகொண்ட ஹீரோயினான இவருக்கு இப்போது வயது 14. தனது ஏழாவது பிறந்த நாளுக்கெல்லாம் தனது மொத்தக்  குடும்பத்தையும் தனது செலவில் ஆஸ்திரேலியா டூர் அழைத்துச் சென்றவர். சினிமாவில் ஒன்றாகப் பயணம் துவக்கி இப்போது வெவ்வேறு பாதையில் அக்காவும் தங்கையும் பிரிந்துவிட்டார்கள். ஆனாலும், இப்போதும் எனக்குப் பிடித்த நடிகை என எல்லி சொல்வது அவரது அக்காவைத்தான்!



நன்றி - விக்டன் 

Thursday, October 25, 2012

இந்தியாவின் டாப் 11 திரைக்கதை ஆசிரியர்கள் - கே பாக்யராஜ் பேட்டி @ விகடன்

விகடன் மேடை - கே.பாக்யராஜ்

அ.ராஜப்பன், கருமத்தம்பட்டி.


 ''தாங்கள் தி.மு.க-வில் சேர்ந்து தேர்தல் காலங்களில் முழு ஈடுபாட்டோடு பிரசாரம் செய்தீர்கள். ஆனால், கட்சியில் தங்களுக்கு எந்தப் பதவியும் தரப்படவில்லை. அதனால்தான், கே.பாக்யராஜுக்கு அரசியல் தேவை இல்லை என்று ஒதுங்கிவிட்டீர்களா?''  



''தப்பு செஞ்சாங்களோ இல்லையோ... ஆனா, பதவியில் இருக்கிறதாலேயே நாட்டுல நிறையப் பேர் குற்றம்சாட்டப்பட்டு மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க. நல்லவேளை... நான் அந்த வகையில் பேர் கெட்டுப் போக வைக்கிற பதவிக்கு ஆசைப்பட்டு எந்த விஷயத்தையும் செய்யலைனு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன். திருப்தியா இருக்கேன்!''



எம்.ராஜன், சென்னை-4.


 ''தமிழிலும் பிற மொழிகளிலும் நீங்கள் வியந்து ரசிக்கும் திரைக்கதை ஆசிரியர்கள் யார் யார்?'' 



''பி.ஆர்.பந்துலு சார், பீம்சிங் சார், ஸ்ரீதர் சார், கே.பாலசந்தர் சார், ஜி.பாலசுப்ரமணியம் சார், ஜாவர் சீதாராமன் சார்... இவங்கள்லாம் தமிழ்ல. இந்தியில் சலீம் ஜாவத், பாசு சட்டர்ஜி, ரிஷிகேஷ் முகர்ஜி, 'ஷோலே’ இயக்குநர் ரமேஷ் சிப்பி. இப்படி நிறையப் பேர் இருக்காங்க. சிவாஜி சாரை வெச்சு 'முரடன் முத்து’ சக்சஸ் கொடுத்தாரு பி.ஆர்.பந்துலு சார். அவரே எம்.ஜி.ஆர். அவர்களை வெச்சு 'ஆயிரத்தில் ஒருவன்’ படமும் ஹிட் கொடுத்தாரு. இப்படி ஒவ்வொருத்தருக்கும் நான் சொல்ல ஆரம்பிச்சா, தனிப் புத்தகமாத் தான் போடணும்!''




ஆ.கோவிந்தன், செங்கல்பட்டு.


 ''அதென்ன, உங்களுக்கு ஜோடியா நடித்திருக்கும் பெரும்பாலான ஹீரோயின் கள் மூக்குக் கண்ணாடி அணிகிறார் கள்... என்ன சென்டிமென்ட்?''



''சென்டிமென்ட்லாம் எதுவும் கிடையாது. நான் கண்ணாடி போடுறதால ஜோடியும் கண்ணாடி போட்டாலாவது ஏதாவது கெமிஸ்ட்ரி வொர்க்-அவுட் ஆகுமேனு ஒரு நப்பாசைதான்!''



என்.நாராயணன், செங்கம்.



 ''உண்மையைச் சொல்லுங்க... உங்க டான்ஸைப் பார்த்தா உங்களுக்கே சிரிப்பு வருமா... வராதா?''



''சில விஷயங்களை எப்போ, எத்தனை தடவை பார்த்தாலும் திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டும். உதாரணத்துக்கு...



1. அழகான குழந்தை முகம்
2. ஆகாய விமானம்
3. யானை
4. என் டான்ஸ்.
இப்போ உங்களுக்கும் சிரிப்பு வருதுல்ல!''




இரா.தோணி, தூத்துக்குடி.



''என்னதான் இருந்தாலும் சில்க் ஸ்மிதாவிடம் இருந்த கிளுகிளுப்பு, கிறக்கம் இப்போதைய ஹீரோயின்களிடம் இல்லைதானே. தலைவா... உண்மை சொல்லுங்க?''



''அது வேற ஒண்ணும் இல்ல... சில்க் ஸ்மிதா கண்ணுல ஒரு மாதிரி மயக்கமும் கிறக்கமும் உண்டாக்குற வசீகரம் ஒளிஞ்சிருக்கும். அந்தப் பொண்ணு கோபமா பார்த்தாக்கூட சுண்டி இழுக்குற மாதிரி இருக்கும். சில்க்கோட ரெண்டு கண்களை மட்டும் க்ளோஸப்ல பார்த்தாலே, ஜிலீர்னு இருக்கும். அது அவங்களுக்குக் கிடைச்ச வரம். என்ன... சினிமாலயும் ரொம்ப நாள் இல்லாம, சொந்த வாழ்க்கை யிலயும் நிம்மதியா இல்லாம இறந்துட்டாங்க. அவங்க ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திப்போம்!''



கி.ராஜேஷ், தஞ்சாவூர்.



 ''அடிக்கடி 'சமாசாரம் சமாசாரம்’னு சொல்லிட்டே இருக்கீங்களே... என்னங்க அது சமாசாரம்?''



''அப்போ நான் ஸ்கூல் பையன். பள்ளி ஆண்டு விழா வுக்கு ரவீந்திரநாத் தாகூரின் 'தி ஹோம் கம்மிங்’ சிறுகதையை நாடகமாப் போடலாம்னு முடிவுபண்ணி, ரிகர்சல் போய்ட்டு இருக்கு. நான் நடிக்கிறதோட அப்பப்ப மத்தவங்க நடிக்கிறதையும் கவனிச்சு, தோணுற விஷயங்களைச் சொல்லிட்டு இருந்தேன். வாத்தியார் பாராட்டி தட்டிக் கொடுத்துட்டு இருந்தாரு. அப்போ ஒரு நாள், லேடி டீச்சர்ஸும் ரிகர்சல் பார்க்க வந்திருந்தாங்க. அப்ப ஒரு சீன் முடிஞ்சு அடுத்த சீனுக்குப் போகலாம்னு வாத்தியார் சொல்ல... நான், 'இல்ல... இதே சீனை இன்னொரு தடவை நடிக்கவைங்க’னு சொன்னேன்.


அந்த சீனை மறுபடி நடிக்கவெச்சுப் பார்த்துட்டு, 'எல்லா ரும் சரியாத்தான் டயலாக் பேசுறாங்க’னு வாத்தியார் சொல்ல, நான் ஒரு பெரிய கிளாஸ் பையனைக் காட்டி, 'அவர் நடிக்கும்போது கவனிங்க’னு சொன்னேன். இன்னொரு தடவையும் ரிகர்சல் பார்த்துட்டு, 'அவர் டயலாக் எல்லாம் சரியாத்தானே பேசினார்’னு வாத்தியார் சொல்ல, 'இல்லை... அந்தப் பையன் சரியாப் பண்ணலை’னு ஒருமாதிரி மென்னு முழுங்கி சொல்றேன். 'என்ன சரிஇல்லே?’னு வாத்தியார் கேட்க, நான் தயங்கி நிக்க, 'டேய்... என்ன தப்புனு சொன்னாத்தானே தெரியும்’னு வாத்தியார் என் வாயைப் புடுங்க... லேடீஸ் டீச்சர்ஸைப் பார்த்துட்டே நான் முழுங்கி முழுங்கிப் பேசுறேன். 'சார்... அந்தப் பையன் இடது பக்கம் சட்டை பாக்கெட் மேல ஸ்கூல் பேட்ஜ் குத்தியிருக்கார். நடிக்கும்போது அவரை யும் அறியாம இடது கை அந்த பேட்ஜைத் திருகிட்டே இருக்கு’னு சொன்னேன்.



 புரியாமப் பார்த்த வாத்தியார், 'ஏண்டா... இது ஒரு தப்பா டா?’னு கோபப்பட்டார். 'இல்ல சார்... மூணு தடவை நடிக்கிறப்பவும் அவர் விடாம பேட்ஜை அப்படித் திருகிட்டே இருந்தார். இப்ப ரிகர்சல்ல யூனிஃபார்ம்ல இருக்கார். ஆனா, மேடையில நடிக்கும்போது, எல்லாருக்கும் அந்தந்த கேரக்டர் மேக்கப்தான் போட்டிருப்பாங்க. அப்போ இவர் பேட்ஜைத் திருகிற மாதிரி கை போனா ரொம்பத் தப்பா இருக்கும் சார். ஏன்னா, இவர் நாடகத்துல லேடீஸ் வேஷம் போடுறார். இதே பழக்கதோஷத்துல அப்போ கை வெச்சா தப்...’னு நான் முடிக்கிறதுக்குள்ள லேடீஸ் டீச்சர்ஸ், 'ஐயோ’னு சவுண்டு கொடுத்துட்டே வெட்கப்பட்டு எந்திரிச்சு வெளியே போயிட்டாங்க. வாத்தியாரும் சிரிச்சுட்டு, 'உனக்கு மட்டும் எப்படிறா அந்த சமாசாரத்துல கண்ணுபோச்சு’னு கேட்டாரு. 'பொம்பள வேஷம்கிறதால உத்துக் கவனிச்சேன்’னு சொன்னேன். ஆக, எட்டாவது படிக்கும்போதே அந்த சமாசாரத்துல கவனம் போனது, இன்னும் அந்த சமாசாரமாவே தொடருது!''



சா.தருமன், காஞ்சிபுரம்.



 ''நீங்கள் நடித்த கதாபாத்திரங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? ஏன்?''



'' 'ஒரு கை ஓசை’ படத்துல வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியா நடிச்சது ரொம்பப் பிடிக்கும். ஏன்னா, அப்போ சில முன்னணி நடிகர்கள் இது மாதிரி கேரக்டர்ல நடிக்க முயற்சி பண்ணி, அது பெரிசா வெற்றியடையல. அதனால் நான் அப்படி நடிச்சப்போ, 'எதுக்கு இந்த வேண்டாத வேலை?’னுதான் பலரும் சொன்னாங்க. ஆனா, எனக்குக் கதை மேல நம்பிக்கை இருந்துச்சு. அது மட்டும் இல்லாம அந்தப் படத்துல ஹீரோ பேச முயற்சி செஞ்சு நிறைய விநோதமான சத்தங்களை வெளிப்படுத்துவான்.



அதை எல்லாம் மக்கள் ரசிப்பாங்கனு எதிர்பார்த்தேன். ஏன்னா, எங்க ஊர்ல தேவராஜ்னு ஒருத்தர் அப்படித்தான் தான் சொல்ல வேண்டிய சங்கதி யைச் சொல்லுவாரு. அது புரியுதோ இல்லையோ, கேட்க நல்லா இருக்கும். நான் எதிர்பார்த்த மாதிரியே 'ஒரு கை ஓசை’ வெற்றி அடைஞ்சது. அடுத்ததா, பாலக்காட்டு மாதவன் கேரக்டர் பிடிக்கும். ஏன்னா, நிஜமாவே அப்படி சூதுவாது இல்லாம ஒருத்தன் இருந்தா, எல்லாருக்கும் அவனைப் பிடிச்சுப்போகும்ல. அந்த கேரக்டர் தான் என்னை எல்லார்கிட்டயும் போய்ச் சேர்த்தது!''



சொல்வேந்தன், திருச்சி-4.



 ''சுயநலம் யாருக்கு அதிகம்... ஆணுக்கா... பெண்ணுக்கா?'' 



''இதுல என்ன சந்தேகம்... பெண்களுக்குத்தான்! 'தன்’ புருஷன், 'தன்’ புள்ளைங்க நல்லா இருக்கணும்னு பார்த்துப் பார்த்துச் செய்யிற பாசமான சுயநலத்துல, பெண்கள் கிட்டகூட ஆண்களால நெருங்க முடியாது!''



மா.சின்னய்யா, ராமேஸ்வரம்.



'' 'அந்த 7 நாட்கள்’ படத்தின் க்ளைமாக்ஸில், அம்பிகா உங்களோட சேர்ந்து வாழ ராஜேஷ் அனுமதிக்கிற மாதிரி சீன் வெச்சிருந்தா, அதே வெற்றி சாத்தியமா?''




''இல்லைங்க... அந்தப் படத்துல ஸ்பெஷலே அந்த க்ளைமாக்ஸ்தான். 'சங்கராபரணம்’ இயக்குநர் கே.விஸ்வநாத் சார் 'சப்தபதி’னு ஒரு படம் பண்ணியிருந்தாரு. அதுவும் கிட்டத்தட்ட 'அந்த 7 நாட்கள்’ கதைதான். ஒரு ப்ரிவியூ ஷோல என்னை அவர் பார்த்தப்ப, 'நானும் நீங்களும் ஒரே மாதிரி ஒரு படம் பண்ணோம். ஆனா, க்ளைமாக்ஸ் மட்டும் வித்தியாசம். அந்த க்ளைமாக்ஸ்னால மட்டும்தான் என் படம் ஃபெயிலியர் ஆச்சு. யுவர் க்ளைமாக்ஸ் இஸ் வெரி பவர்ஃபுல்’னு சொன்னாரு. நம்ம ஊர் எவ்வளவு மாடர்ன் ஆனாலும் நாகரிகம் வளர்ந்தாலும் சில சென்ட்டிமென்ட்கள் எப்பவும் எடுபடும்!''




ச.வேலு, சென்னை-17.



 ''இப்போதைய ஹீரோயின்களில் யாருடன் நடிக்க விரும்புவீர்கள்?''




''ஒருத்தர் ரெண்டு பேர் பேரை மட்டும் சொன்னா ஏதாவது கசமுசா ஆயிடும். அதனால எல்லார்கூடவும் நடிக்க ஆசைனு சொல்லி எஸ்கேப் ஆயிடுறேன்!''



நா.பழனி, வந்தவாசி.



''உங்கள் படங்களில் முதலில் ஹீரோவைக் கோமாளியாகக் காட்டி சிரிக்க வைத்துவிட்டு, பிறகு அவரைப் புத்திசாலியாகச் சித்திரிப்பது ஏன்?'



'
'' 'முந்தானை முடிச்சு’ வாத்தியார், 'இது நம்ம ஆளு’ கோபால் எல்லாம் பார்த்தா உங்களுக்குக் கோமாளியாவா தெரியுது! வாழ்க்கையில ஒவ்வொருத்தரும் ஏதாவது சில விஷயங்கள்ல ஏமாந்து போறவங்கதான். ஒரு சில விஷயங்கள்ல சபாஷ் வாங்குறவங்கதான்!''




- நிறைய பேசலாங்க...



அடுத்த வாரம்



 ''தமிழக எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் பற்றி உங்கள் கருத்து?''



 ''டி.வி. ஷோல ஆரம்பிச்சு கிராமத்து மேடைகள் வரை மிமிக்ரி பண்றவங்க உங்க குரல் இல்லாமப் பண்றதே இல்லை. அதை எப்படி எடுத்துக்குறீங்க?''



''முருங்கைக்காய் போன்ற சமாசாரங்களை அப்பவே லேடீஸை ரசிக்கவெச்சீங்களே... எப்படி?''

 பாகம் 1 படிக்க கே பாக்யராஜ் பேட்டி @ ஆனந்த விகடன் 

http://www.adrasaka.com/2012/10/blog-post_7561.html

நன்றி - விகடன்

 பாகம் 2- தமிழ் சினிமாவின் டாப் 10 படங்கள் - கே பாக்யராஜ் பேட்டி 

http://www.adrasaka.com/2012/10/10.html

பாகம் 4 -சிவப்பு ரோஜாக்கள்,சுவர் இல்லாத சித்திரங்கள் ஷூட்டிங்க் ஸ்பாட் சுவராஸ்யங்கள் - கே பாக்யராஜ் பேட்டி

http://www.adrasaka.com/2012/11/blog-post_159.html

Thursday, October 18, 2012

தமிழ் சினிமாவின் டாப் 10 படங்கள் - கே பாக்யராஜ் பேட்டி

எம்.கே.கதிர்வேலன், திருத்துறைப்பூண்டி. 


1. ''ரஜினி, கமல் சேர்ந்து நடிக்கிற மாதிரி ஒரு படம். ஒன் லைன் சொல்லுங்க பார்ப்போம்?''


''ம்க்க்கும்... ஆச... தோச... அப்பளம்... வட!


நான் எழுதி யாராவது சுட்டுட்டா அப்புறம் வெல்லம் திங்கறது ஒருத்தன், விரல் சூப்பறது இன்னொருத்தன் கதை ஆயிடும்!''



இசக்கிமுத்து, திருநெல்வேலி.



2. ''இப்போதைய ஹீரோக்களில் உங்களைப் போல டான்ஸ் ஆடுறவங்க யார்?''



''ஒருத்தர்கூட இல்லைனு தைரியமா காலரைத் தூக்கிவிட்டுக்கிறேன்!''



கு.கிருஷ்ணமூர்த்தி, கம்பம்.



3.  ''உங்க பார்வையில் திரைக்கதையைப் பொறுத்து தமிழ் சினிமாவின் தலைசிறந்த 10 படங்களை வரிசைப்படுத்துங்க?''



''கஷ்டமான விஷயம், வெறும் பத்துங்கறது... சரி உங்களுக்காக...


1.நாடோடி மன்னன்

 2.அடுத்த வீட்டுப் பெண் 

3.தில்லானா மோகனாம்பாள்

 4. கல்யாணப் பரிசு

 5.அவள் ஒரு தொடர்கதை

 6. 16 வயதி னிலே 

7.முள்ளும் மலரும் 

8.ஆட்டோகிராஃப்

9.காதல்


 10.சுப்ரமணியபுரம்.


இன்னும் நிறையச் சொல்ல முடியாதது வருத்தமா இருக்கு!''



விடியல் ராஜன், மதுரை-3.



'4. 'இயக்குநர் ஆகணும்னு வந்த பாக்யராஜ் எப்படி நடிகர் ஆனார்?''



''நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் - இது விவேகானந்தரின் உபதேசம். ஆனா, கலைத் துறையை நோக்கி வர்றவங்களுக்கு அது பொருந்தாது. பத்திரிகையில் வேலை பார்க்க வந்து, சினிமாவுல பாடலாசிரியராகி 'கவியரசு’னு பேர் வாங்கினார் கண்ணதாசன். நடிக்க ஆசைப்பட்டு வந்த எம்.எஸ்.விஸ்வநாதன் சார் மெல்லிசை மன்னர்னு பேர் வாங்கினார். 


நடிப்பு ஆசையோட வந்த ஷங்கர், இயக்குநர் ஆனார். அப்பாவின் நடன இயக்கத்தைப் பார்க்க வந்த பிரபுதேவா நடிகர், இயக்குநர்னு எல்லாமுமா ஆகிட்டார். ஆக நம்ம கதையும் அதேதான். நடிக்க நினைச்சு வந்து, வேண்டாம்னு உதவி இயக்குநர் ஆகி, அப்புறம் மறுபடியும் வசனகர்த்தா, கதாசிரியர், நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பத்திரிகையாளர்னு சங்கிலித் தொடரா நீண்டிருச்சு. ஆனா, இதுல ஒரு விஷயம்... சினிமாவை ஆத்மார்த்தமா ரசிச்சு வர்றவங்க அதுல டீ, காபி கொடுக்கிற வேலைக்கு வந்தாலும் ஜொலிக்க முடியும். அது தான் சினிமாவின் புதிர்.''


மே.நாகராஜன், மன்னார்குடி.





5.  ''இயக்குநர் பாக்யராஜ் எப்ப ரிட்டர்ன்?''



''2012 - கேது புத்தி முடிஞ்சி இப்ப சுக்ரபுத்தி ஸ்டார்ட் ஆகிடுச்சி. 2 0 1 3=6. என் பிறந்த தேதி 7-1-1951.7 1 1 9 5 1=24-2 4=6. ஆக, என் தன்னம்பிக்கை பழையபடி தெம்பாவே இருக்கு. ஜாதகப்படியும் அந்தந்த வீட்ல அது அது வந்து உட்கார்ந்து 2013-ல மக்கள் உங்க எல்லார் வீட்டுக்குள்ளயும் பழையபடி நான் குடியேறி குஷிப்படுத்தப்போறேன்.''



பவளநாதன், திருச்சி-2.


6. ''உங்கள் நண்பர் கவுண்டமணி ஏன் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருக்கார்?''



''முன்னணித் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமில்ல... முன்னணி ஹீரோக்களுக்கே அவர் தேதி அவ்ளோ டிமாண்டா இருந்தது ஒரு காலம். இப்ப ஒரு சின்ன கேப் எடுத்துருக்காருனு நெனைக்கிறேன். 'கேப்’தான். தொடர்வார். தொடரணும்!''



எம்.செல்வகுமார், சென்னை.



7.  '' '16 வயதினிலே’ படத்தை இப்ப எடுத்தா, சப்பாணி, மயிலு, பரட்டை கேரக்டர்களுக்கு யார் யார் பொருந்துவாங்க?''



''உங்க ஆசை - ஆதங்கம் எனக்குப் புரியாம இல்லை. ஆனா, அதுல அவ்வளவு லயிச்சு வேலை பார்த்தவன் நான். அந்த மூணு கேரக்டர்லயுமே நடிச்சவங்க அதுக்குப் பிறகு அவ்வளவு பிரமாதமா ஷைன் பண்ணி சினிமாவில் இன்னும் கோலோச்சிட்டு இருக்காங்க. அதனால என்னால வேற யாரையும் மாத்தி யோசிக்க முடியலை!''




தா.மலர், திருச்சி-2.



8. ''நீங்க எடுத்த காட்சிகளில் உங்கள் மனதில் இன்னும் பசுமையாகப் பதிந்திருக்கும் காட்சி எது?''



''நிறையச் சொல்லலாம்... 'ஒரு கை ஓசை’ படத்துல பேச்சு வந்தும் ஊமையாவே இருந்துடுறது. 'மௌன கீதங்கள்’ படத்துல சினிமா, ஹோட்டல்னு போயிட்டு வந்த பின்னால என்கிட்ட சரிதா 'நான் 'மூணு’ நாள் லீவு’ன்னதும் நான் சண்டை போட்டு பிரளயம் பண்றது. 'அந்த 7 நாட்கள்’ க்ளைமாக்ஸ்ல, 'என்ட காதலி உங்களுக்கு மனைவியாயிட்டு வரலாம். பச்சே... உங்க மனைவி எனக்கு காதலியாயிட்டு வராது!’னு சொல்ற டயலாக், 'முந்தானை முடிச்சு’ல பொய் சத்தியம் பண்ணி ஊர்வசி குழந்தையைத் தாண்டுறது... 'தாவணிக் கனவுகள்’ படத்துல தியேட்டர்ல தங்கச்சிகளுக்காகக் காசு போட்டுட்டே இருந்துட்டு பிறகு நானே மறந்து, என் தங்கச்சியே காசு போடச் சொல்றது... அது கெடக்குங்க ஒரு வண்டி நிறைய!''




எம்.எஸ்.சேகர், தஞ்சாவூர்-3.



 9. ''அப்போ மேட்னி ஷோவுக்குப் பெண்கள் கூட்டத்தை அலைபாய வைத்த, பெண்களின் மனம் கவர்ந்த இயக்குநர் நீங்க... இப்ப யாரை அப்படிச் சொல்வீங்க?''



''சேரன், வசந்த பாலன், பிரபு சாலமன், சுசீந்திரன். இன்னும் கமர்ஷியல் ஹீரோ இல்லாமப் படம் எடுக்கும் நிறையப் பேர் பெண்கள் விரும்புற மாதிரி இருக்கணும்னுதான் முயற்சி பண்றாங்க.''



வி.மருதவாணன், தஞ்சாவூர்.



10.  ''உங்களால் மறக்க முடியாத பாராட்டு?''



''என் கதை 'ஒரு கைதியின் டைரி’யை - இந்தியில் 'ஆக்ரி ராஸ்தா’னு அமிதாப் பச்சன் அவர்களை வெச்சு நான் டைரக்ட் பண்ணேன். அதுல ஒரு கல்லறை சீன் வரும். முன் பகுதி கதைல மனைவி புருஷனுக்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்திருப்பா. அப்ப கர்ப்பமா இருக்குற மனைவி 'நாளைக்கு என் பையன் வந்து இங்கிலீஷ்ல பிச்சு உதறப்போறான். ஆனா, உங்களால அவனுக்கு ஈடு கொடுத்துப் பேச முடியாதுனு கிண்டல் பண்ண, கர்ப்பஸ்திரீ வயித்தைத் தொட்டு அப்பா அமிதாப் பச்சன், 'No No No... I can talk English... Walk English... Come on, Come out My son... Let us see’னு தமாஷா சேலஞ்ச் பண்ணுவார்.



 பின்னால் கதையில் அப்பா வுக்கு மகனைத் தெரியும்... மகனுக்கு அப்பாவைத் தெரியாது. கல்லறையில் தன் மனைவிக்கு மெழுகுவத்தி ஏற்றி அப்பா அமிதாப் பிரார்த்தனை பண்ணிட்டு இருப்பார். அப்போ போலீஸா இருக்குற மகன் அங்கே ஒரு குற்றவாளியோட வந்து, 'எந்தக் கல்லறையில் ஒளிச்சு வெச்சிருக்க.. காட்டு... 'Come on Show me’னு ஆங்கிலத்தில் அதட்ட, அதைக் கவனிக்கும் அமிதாப் தன் மனைவியிடம், 'நீ சொன்ன நேரம் வந்துருச்சு. என் மகனுடன் நான் இங்கிலீஷ்லயே சண்டை போடுறேன் பார்’னு சொல்லிட்டு வருவார். மகன்கிட்ட வந்து இங்கிலீஷ்லயே பேசுவார். 'உன்னைக் கேள்வி கேட்க ஆள் இல்லைனு நினைச்சியா? கல்லறை யில் பக்கத்தில் இறுதிச் சடங்கு பிரார்த்தனையில் உள்ளவர்களைப் பத்திக் கவலையே இல்லாம கத்திட்டு இருக்க’னு சத்தம் போடுவார்.



 அவர் தன் அப்பானு தெரியாத மகனும் பதிலுக்கு வாக்குவாதம் செய்வான். இது 150 அடிக்கு மேல ஆங்கிலத்திலேயே வசனம் பேச வேண்டிய காட்சி. ஆனா, அமிதாப் இங்கிலீஷ்ல பேச மறுத்து, 'பளிச் வசனங்கள் மூலமா எனக்கு இமேஜ் பில்ட்-அப் கொடுத்த எழுத்தாளர்கள் சலீம் ஜாவேத் கதையில்கூட நான் நாலு வரிக்கு மேல இங்கிலீஷ் பேசினதுஇல்லை. இந்தி ரசிகர்களுக்கும் அந்த அளவு ஆங்கிலம் புரியாது. ரசிக்கவும் மாட்டாங்க. அதனால இவ்ளோ நீளமா இங்கிலீஷ் பேசுற மாதிரி சீன் வேண்டாம்’னு சொன்னார்.



'அமிதாப்ஜி... இந்த சீனுக்கு இங்கிலீஷ் தெரிஞ்சிருக்கணும்னு அவசியம் இல்லை. புரியலைன்னாலும் அப்பா மகனை அதட்டி இங்கிலீஷ்ல பேசுறார்ங்கிற அந்த மூடுக்கே, ரசிகர்கள் ரசிச்சுக் கை தட்டுவாங்கனு சொன்னேன். ரொம்ப நேரம் சமாதானப்படுத்திய பிறகுதான் அமிதாப்ஜி, 'சரி... நீங்க டைரக்டர்... உங்க முடிவை நான் ஏத்துக்கிறேன்’ என்றார்.  படம் ரிலீஸ் ஆச்சு. பாம்பேயில் இருந்து நள்ளிரவு ஒரு மணிக்கு போன் வந்தது. லைன்ல அமிதாப். 'சார்... நீங்க சொன்னது நூறு பெர்சன்ட் சரி... இங்கிலீஷ் தெரியாத என் டிரைவர், சமையல் காரங்கலாம் முன் வரிசைல உக்காந்து படம் பார்த்துட்டு இருந்தாங்க. அந்தக் கல்லறை சீனுக்கு அவங்கதான் முதல்ல கை தட்டி உற்சாகமானாங்க. 



அஸ் எ கேப்டன் ஆஃப் த ஷிப், யுவர் ஜட்ஜ்மென்ட் இஸ் கரெக்ட். என் கேரியர்ல இதுக்கு முன்னாடி எப்பவும் 'அமிதாப் படம் சூப்பர்’னு சொல்லித்தான் கேட்டுருக்கேன். ஆனா, இப்போ என் மனைவி ஜெயா, படம் பார்த்துட்டு, 'ஸாரி... இது அமிதாப் படம் இல்லை. இது டைரக்டர் பாக்யராஜ் படம்னு சொன்னாங்க’னு விடாமப் பேசிட்டே இருந்தார்.



அப்புறம் ஒரு நாள் ரைட்டர் ஜாவேத்தைச் சந்திச்சப்போ, முதல்ல ஒரு தடவை கை குலுக்கி, 'இது படத்துக்கு’ என்றார். மீண்டும் ஒருமுறை கை குலுக்கி, 'இது அமிதாப்பை 120 அடிக்கு ஆங்கிலத்தில் பேசவெச்சதுக்கு. ஒரு ரைட்டரா நாங்க எவ்வளவோ போராடி இருக்கோம். அவர் சம்மதிச்சதே இல்லை. ஆனா, நீங்க அவரையே அவ்வளவு நீளமா பேசவெச்சு ரைட்டர்களுக்குப் பெருமை ஏற்படுத்திக் கொடுத்துட்டீங்க’னு சொன்னாங்க. அந்தப் பாராட்டுகள் இன்னும் மனசைவிட்டு அகலாம இருக்கு!''



- நிறைய பேசலாங்க...



அடுத்த வாரம்


''அரசியலுக்கு கே.பாக்யராஜ் தேவையே இல்லை; கே.பாக்யராஜுக்கு அரசியல் தேவையா?'' 


''நீங்கள் வியந்து ரசிக்கும் திரைக்கதை ஆசிரியர் யார்? தமிழிலும் பிற மொழிகளிலும். காரணத்துடன் சொல்லுங்களேன்?''



''அதென்ன... உங்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் அனைத்து ஹீரோயின்களும் மூக்குக் கண்ணாடி அணிகிறார்கள்... என்ன சென்டிமென்ட்?''

 பாகம் 1 படிக்க

கே பாக்யராஜ் பேட்டி @ ஆனந்த விகடன் 

http://www.adrasaka.com/2012/10/blog-post_7561.html

 

பாகம் 3 படிக்க -இந்தியாவின் டாப் 11 திரைக்கதை ஆசிரியர்கள் - கே பாக்யராஜ் பேட்டி @ விகடன் |..

http://www.adrasaka.com/2012/10/11.html 

நன்றி - விகடன்

பாகம் 4 படிக்க சிவப்பு ரோஜாக்கள்,சுவர் இல்லாத சித்திரங்கள் ஷூட்டிங்க் ஸ்பாட் சுவராஸ்யங்கள் - கே பாக்யராஜ் பேட்டி
http://www.adrasaka.com/2012/11/blog-post_159.html