Showing posts with label வாலு - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label வாலு - சினிமா விமர்சனம். Show all posts

Friday, August 14, 2015

வாலு - சினிமா விமர்சனம்

நடிகர் : சிம்பு
நடிகை :ஹன்சிகா மொத்வானி
இயக்குனர் :விஜய் சந்தர்
இசை :தமன்
ஓளிப்பதிவு :சக்தி
நன்றி - மாலை மலர்


சிம்பு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவரது அப்பா நரேன் ரெயில்வேயில் பணிபுரிந்து வருகிறார். பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த சிம்பு, தனது சொந்த முயற்சியிலேயே வேலை கிடைக்க வேண்டும் என்று வேலை தேடி அலைகிறார். 

மறுபுறம் பெரிய குடும்பத்து பெண்ணான ஹன்சிகா மொத்வானி தனது அப்பா ஆசையாக வாங்கிக் கொடுத்த ஐபோனை தொலைத்துவிடுகிறார். இந்த ஐபோன் ஒருநாள் சிம்பு வேலை தேடி போகும்போது அவரது கண்ணில் அகப்படுகிறது. 

தொலைந்துபோன ஐபோன் சிம்பு கைவசம் இருப்பதை அறிந்துகொண்ட ஹன்சிகா மொத்வானி அதை தான் நேரில் வாங்கிக் கொள்வதாக கூறுகிறாள். இதற்கிடையில், ஹன்சிகா மொத்வானியை பஸ்ஸில் பார்க்கிறார் சிம்பு. பார்த்தவுடனேயே அவள்மீது சிம்புவுக்கு ஈர்ப்பு வந்துவிடுகிறது. 

அவளைத் தொடர்ந்து போகும்போது, ஒரு விபத்தில் சிக்கிறார் ஹன்சிகா. அவரை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் சேர்க்கிறார் சிம்பு. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பணம் இல்லாததால் தன் கையில் இருந்த ஐபோனை அடமானம் வைத்து ஹன்சிகாவுக்கு வைத்தியம் பார்க்கிறார். 

ஆனால், அப்போது அந்த ஐபோனுக்கு சொந்தக்காரி ஹன்சிகாதான் என்பது சிம்புவுக்கு தெரிவதில்லை. ஹன்சிகாவும் தன்னை ஆஸ்பத்திரியில் யார் சேர்த்தது என்று தெரியாமலேயே அங்கிருந்து கிளம்பி சென்று விடுகிறார். 

இந்நிலையில், அடமானம் வைத்த செல்போனை மீட்டு, அதற்கு உரியவரிடம் கொடுக்க செல்கிறார் சிம்பு. அப்போது, ஹன்சிகாதான் அந்த பெண் என்பது தெரிந்ததும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார். அவளிடம் தனது காதலை சொல்கிறார். ஆனால், ஹன்சிகாவோ இவரது காதலை ஏற்றுக் கொள்வதில்லை. 

மாறாக தனது முறைமாமனுடன் தனக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதாகவும், இன்னும் 2 வருடத்தில் திருமணம் நடக்கப்போவதாகவும் கூறுகிறாள். இதைக் கேட்டதும் அதிர்ச்சியடையும் சிம்பு, இருவரும் நண்பர்களாக பழகுவோம் என்று கூறுகிறான். அவளும் அதற்கு ஒப்புக்கொள்கிறாள். 

ஆனால், சிம்புவோ, ஹன்சிகாவிடம் நட்புடன் பழகி 2 வருடத்திற்குள் தனது காதலை அவளுக்கு புரிய வைத்துவிட வேண்டும் என்ற திட்டத்துடன் அவளுடன் பழக ஆரம்பிக்கிறார். ஆனால், ஹன்சிகாவை திருமணம் செய்துகொள்ளப்போகும் அவளது முறைமாமன் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, வட்டிக்கு பணம் கொடுப்பது என மிகப்பெரிய தாதாவாக வலம் வருபவர். 

இவ்வளவு முரடனான மாமனையும் மீறி, ஹன்சிகாவுக்கு தனது காதலை சிம்பு புரிய வைத்தாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை. 

இந்த படத்தில் சிம்புவின் நடிப்பு மிகவும் அபாரம். ரொம்பவும் எதார்த்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் பார்த்த சிம்புவை இதிலும் பார்க்க முடிகிறது. அதேபோல், சந்தானம், விடிவி கணேஷுடன் சேர்ந்து கலாட்டா செய்வதிலும் நடிப்பில் அசத்துகிறார். சண்டைக்காட்சியில் சூப்பர் ஸ்டார்களை மிஞ்சும் அளவுக்கு மாஸ் காட்டியிருக்கிறார். 

ஹன்சிகா மொத்வானியும் சிம்புவுக்கு போட்டி போடும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருடைய சின்ன சின்ன முகபாவனைகள்கூட ரசிகர்களை ரொம்பவும் ரசிக்க வைக்கிறது. சந்தானத்தின் காமெடி இந்த படத்திற்கு ரொம்பவும் கைகொடுத்திருக்கிறது. இவர் அடிக்கும் கவுண்டர்கள் எல்லாம் புதிதாகவும், ரசிக்க வைக்கும்படியும் உள்ளது. சிம்பு-சந்தானம்-விடிவி கணேஷ் கூட்டணி இந்த படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. 

சிம்புவுக்கு அப்பாவாக வரும் நரேன், அம்மாவாக வரும் ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள். முறைமாமனாக வரும் ஆதித்யா, வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். பிரம்மானந்தம் ஒருசில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைக்கிறார். 

நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்தாலும், இப்போதும் ரசிக்கும்படி படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் சந்தர். அழகான காதல் கதையை, ஆக்ஷன் கலந்து சொல்லியிருப்பது அழகு. படத்திற்கு மிகப்பெரிய பலமே வசனங்கள்தான். ஒவ்வொரு வசனங்களும் ரசிகர்களின் கைதட்டல்களிலும், விசில்களிலும் அனல் பறக்கிறது. 

அதுமட்டுமில்லாமல், நேர்த்தியான திரைக்கதையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. முதல் பாதி மட்டும் சற்று மெதுவாக செல்வதுபோல் இருக்கிறது. ஆனால், இரண்டாம் பாதி சூடு பிடித்து விறுவிறுப்பாக செல்கிறது. 

தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே ஹிட்டாகியிருந்தாலும், படத்தில் பார்க்கும்போது இன்னும் அழகாக இருக்கிறது. ‘ஓ மை டார்லிங்’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. சிம்பு எம்.ஜி.ஆர்., ரஜினி, அஜித் கெட்டப்பில் வரும் தாறுமாறு பாடல் ஆட்டம் போட வைப்பது மட்டுமில்லாமல் ரசிக்கவும் வைக்கிறது. பின்னணி இசையும் அசத்தல். சக்தியின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சியாக அமைந்துள்ளது. 

மொத்தத்தில் ‘வாலு’ தூளு.