Showing posts with label மூத்த எம்.பி.. Show all posts
Showing posts with label மூத்த எம்.பி.. Show all posts

Monday, November 04, 2013

ஸ்வேதா மேனனிடம் சில்மிஷம் செய்த காங்கிரஸ் எம் பி - பர பரப்புப்புகார்

Shweta Menon Assaulted At A Public Function
கேரளாவில் நடந்த படகு போட்டி நிகழ்ச்சியில், பிரபல மலையாள நடிகை, ஸ்வேதா மேனனை, கேரளாவின் மூத்த, காங்கிரஸ், எம்.பி., பீதாம்பர குருப், மானபங்கம் செய்ததாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தன் மீதான, நடிகையின் குற்றச்சாட்டை, எம்.பி., மறுத்தாலும், அந்த நிகழ்ச்சியின், "வீடியோ காட்சிகளில், நடிகையை வேண்டுமென்றே பல முறை, எம்.பி., தொடுவது தெளிவாகத் தெரிகிறது.


சூடான அரசியல் விவாதங்களுக்கும், பாலியல் பலாத்கார சர்ச்சைகளுக்கும் பெயர்பெற்ற கேரள அரசியலில், புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகையிடம், 73 வயது காங்கிரஸ், எம்.பி., அத்துமீற முயன்றதை, அந்த நடிகையே கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் அருகே உள்ள ஒரு இடத்தில், நேற்று முன்தினம் மாலையில், "பிரசிடென்ட் கோப்பை படகுப் போட்டி நடந்தது. அதில், ஏராளமானோர், தங்கள் படகுகளுடன், தீரத்தைக் காண்பிக்க போட்டியில் பங்கேற்றிருந்தனர்.
 நிகழ்ச்சியை பார்வையிட அமைக்கப்பட்டிருந்த மேடையில், வி.ஐ.பி.,களும், அரசியல் பிரமுகர்களும் அமர்ந்திருந்தனர். அவர்களுடன், நடிகை, ஸ்வேதா மேனனும் அமர்ந்திருந்தார். நாற்பது வயதைத் தாண்டிவிட்ட ஸ்வேதா மேனன், மலையாள படங்களில், மிகவும் கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகளில் ஒருவர். அவர் அருகில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, எம்.பி., என்.பீதாம்பர குரூப் அமர்ந்திருந்தார். படகுப் போட்டியை பலரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த நிலையில், எம்.பி., நடிகை ஸ்வேதாவை, "சில்மிஷம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை, தர்மசங்கடத்தில் நெளிந்தார்.

நிகழ்ச்சி முடிந்து, அனைவரும் கலைந்து சென்றதும், நடிகை, பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ""மேடையில் இருந்த என்னை, அந்த எம்.பி., தொட்டுத் தொட்டு பேசினார். என்னிடம் அத்துமீற முயன்றார். அதை நான் தவிர்க்க முயன்ற போதும், தொடர்ந்து என்னை துன்புறுத்தி, என் நிம்மதியைக் கெடுத்து விட்டார், என்றார்.

இந்த விவகாரம் நேற்று அந்த மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. "மூத்த எம்.பி., மீது கூறிய புகார் உண்மை தானா என, பலரும், நடிகை ஸ்வேதாவுக்கு போன் செய்து கேட்டுள்ளனர். அவர்களிடம், "நான் கூறியது உண்மை தான்; நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியின் அதிர்ச்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை என கூறியுள்ளார்.

இந்தத் தகவலை அறிந்த, முதல்வர், காங்கிரசை சேர்ந்த உம்மன் சாண்டி, கொல்லம் கலெக்டரிடம், நடந்த விஷயம் குறித்து கேட்டறிந்துள்ளார். பின், நிருபர்களை சந்தித்த முதல்வர், சாண்டி, ""முறையான புகார் இன்னும் பதிவு செய்யப்படவில்லை; அதற்குப் பிறகு தான், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும், என்றார். எம்.பி.,யால் தொந்தரவுக்கு ஆளான நடிகை ஸ்வேதா, மலையாள நடிகர் சங்கத் தலைவர், நடிகர் இன்னொசென்டிடம், கொல்லம் நிகழ்ச்சியில் நடந்தவற்றை விளக்கியுள்ளார்.

நடிகை ஸ்வேதா நேற்று கூறுகையில், ""விழா மேடையிலேயே நான், அந்த மனிதரின் சின்னத்தனத்தை அம்பலப்படுத்தியிருப்பேன்; நிகழ்ச்சியில் பிரச்னை வேறு விதமாகப் போய்விடும் என்பதால் தான், அமைதியாக இருந்தேன், என்றார்.

இதுகுறித்து, நடிகர், இன்னொசென்ட் கூறும் போது, ""நடிகை ஸ்வேதா மேனன் என்னிடம், கொல்லம் விழா மேடையில் நடந்த சம்பவத்தை விவரித்தார். இன்னும் அவர் முறைப்படி புகார் கொடுக்கவில்லை. புகார் கொடுத்த பிறகு, நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்போம், என்றார்.

இதை அறிந்த, எம்.பி., பீதாம்பர குரூப், நேற்று, செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொல்லம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த அரசியல் தலைவர் நான் தான். பெயரைக் குறிப்பிடாமல், ஒரு மூத்த அரசியல் தலைவர் என்ற ரீதியில், நடிகை ஸ்வேதா மேனன் புகார் கூறியுள்ளார். அதனால், அது குறித்து தகவல் தெரிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். நான் அந்த நடிகையிடம் அத்துமீறி நடந்து கொள்ளவில்லை. அவரின் புகாரில், துளியளவும் உண்மையில்லை. இதன் பின்னணியில் ஏதோ, அரசியல் சதித்திட்டம் இருப்பதாக உணர்கிறேன். எவ்வித விசாரணைக்கும் நான் தயார். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, கொல்லம் படகுப் போட்டியில், பார்வையாளர் மேடையில் நடந்த சம்பவங்களை, "வீடியோ எடுத்திருந்தனர். அதைப் பார்த்த போது, தேவையில்லாமல் நடிகை ஸ்வேதா மேனன் நெளிவதும், அவரை, பல முறை, எம்.பி., பீதாம்பர குருப் தொடுவதையும் காண முடிந்தது.

இந்த விவகாரம் குறித்து, மாநில பெண்கள் கமிஷன் உறுப்பினர், லிசி ஜோஸ் கூறும் போது, ""இந்தப் பிரச்னை குறித்து, யாரும் புகார் அளிக்கத் தேவையில்லை; எங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், நாங்களாகவே முன்வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளோம், என்றார்.

மார்க்சிஸ்ட் மகளிரணி தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான, டி.என்.சீமா கூறுகையில், ""இந்தப் பிரச்னையை நாங்கள் விடப் போவதில்லை; நடந்த சம்பவம் குறித்து, நடிகை ஸ்வேதா, மாவட்ட கலெக்டர், மோகனனிடம் கூறியுள்ளார்; அதை அவர், வெகுசாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளார், என்றார்.
நன்றி - தினமலர்