Showing posts with label மனுசங்க.. 13: தூங்கா நாயக்கர்! -கி.ராஜநாராயணன். Show all posts
Showing posts with label மனுசங்க.. 13: தூங்கா நாயக்கர்! -கி.ராஜநாராயணன். Show all posts

Wednesday, August 05, 2015

மனுசங்க.. 13: தூங்கா நாயக்கர்! -கி.ராஜநாராயணன்

ஓவியம்: மனோகர்
ஓவியம்: மனோகர்
தூங்கா நாயக்கர்'
ஊரைச் சொன்னாலும். பேரைச் சொல்லாதே என்பார்கள். நான் ஊரைச் சொல்லலை. பேரை மாத்திரமே சொன்னேன்.
‘இப்படி ஒரு பேரா? தூங்கவே மாட்டாரா?’
‘அது சாமியோட பேரப்பா!’
‘அப்படி ஒரு சாமி கோயில் எங்கே இருக்கு?’
‘இருக்கே. இல்லாம வருமா; அள்ளாமக் குறையுமா?’
தூங்கும் கடவுளை ‘அப்பனே எந்திரி நேரமாச்சி...’ என்று பக்தர்கள் பாடி எழுப்புவதாகத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.
அது சாமியப் பார்த்துச் சொன்னதில்ல. தூங்குகிற பக்தனைப் பார்த்துச் சொன்னது.
கடவுளே தூங்கினா என்ன ஆவது? அவர் உலகத்துக்கு எல்லாம் நாழியால் படி அளக்காமல், மரக்கால் கொண்டு படி அளந்துவிட்டு, சித்த நாழி அதே மரக்காலில் சாய்ந்து... வலது கையைத் தலைக்கு வைத்துப் படுத்திருந்தால், அதைத் தூங்குகிறார் என்று சொல்லிவிடுவதா?
‘அரிதுயில்’ என்பார்கள். தூங்குவது போல் விழித்துக் கொண்டிருப்பது.
அதைத்தான் ‘தூங்கான்’ என்று சொல்லுவது.
சும்மா சொல்லப்படாது, தூங்கா நாயக்கரோட அம்மா - அப்பாவே, இப்புடி ஒரு பேரைப் பார்த்து வெச்சிருக்காங்களே.
இந்த ‘நாயக்கர்’ என்கிறதை விட்டுட்டா, பள்ளிப் புள்ளைங்க இவரை எப்புடிக் கூப்பிட்டிருப்பாங்க?
பள்ளிக்கூடத்துக்கு எங்கே போனாரு இவரு? சின்ன வயசிலயிருந்தே ‘கோபாலன்’ போல மாடுதாம் மேச்சாரு. பெரியவர் ஆன பிறகு ஆடுகள் மேய்ச்சாரு.
அநேகமா அவரு வீட்டுக்குள்ள இருந்த நாட்களைவிட காடுல இருந்த நாட்கள்தான் அதிகம்.
மண்ணோடு மண்ணாக அப்படியே விழுந்து கிடப்பாரு. காலுக் குச் செருப்பு போடுறதில்லை. கேட் டாக்கா ‘ராமர் பதிநாலு வருஷங்க காலுல செருப்பு அணியாமத்தான அலைஞ்சு திரிஞ்சாரு’ என்பார் இவர்.
இவருக்கு சேக்காளியா இருந்த ராமு கோனாரு சொல்வாரு: ‘‘காட்டுக்கு விரட்டுனாளாம் ஒருத்தி; அவளோட மகன் வந்து ராமரோட காலுல கிடந்த செருப்புகளையும் வாங்கிட்டுப் போயிட் டாம்’’ என்பார். நமக்கு சோறு கொடுக்கிற மண்ணெ செருப்புக் காலோடு மிதிக்கக் கூடாது என்கிற எண்ணம்.
வீட்டுலயும் மண் தரையிலதாம் படுப்பாரு. காட்டுலயும் அப்படித்தாம். காட்டுல மண்ணெக் கூட்டி வெச்சி அதும்மேல ஒரு துணிய விரிச்சி, அதுல தல வெச்சிப் படுப்பாரு. ‘‘பூமாதேவி மடியில படுத்திருக்கெம்...’’ என்பார்.
‘இவரு ஆட்டுக் கிடைக்குக் காவல்காரரா வந்த யோகம்தான்... ஆடுக கெலிச்சிப் பெருகினது’ என்பார்கள் கிடைக்காரர்கள்.
ஆடுகளோடு பழகிப் பழகி, அதனோட குணபாகங்களெல் லாம் அத்துபடி ஆயிட்டது. அதுகளெத் தடவித் தட்டிப் பேச்சுக் கொடுப்பார். ஒரு ஆட்டோட மூக்கிலே ஈரம் இல்லைன்னா... ‘என்ன செய்யுது?’ என்று கேட்பார் அதனிடம் ‘காச்ச’ கண்டு இருக்கான்னு தொட்டுப் பார்ப்பார்.
நாளா சரி பழக்கத்துல வாகடம் (வைத்தியம்)தெரிஞ்சவரு ஆயிட்டாரு. பக்கத்து ஊரு ஆட்டுக் கிடைக்காரங்க இவர்ட்ட வந்து மருந்து கேட்பாங்க.
‘‘செம்மறி ஆடுக மூக்குல எப்பப் பாத்தாலும் கட்டியான மூக்குச் சளி இருக்க மாதிரி, ஏன் வெள்ளாடுகளுக்கு இருக்க மாட்டெங்கு..?’’ என்று கேட்டால், ‘‘வெள்ளாடுக மேயிற பச்சிலைகதாம் காரணம்...’’ என்பார்.
செம்மறிக பரம சாது. வெள்ளாடுக பண்ற அழிச்சாட்டியம் அதிகம். திருட்டுப் புத்தியும் இருக்கும் என்பார். நாம் கேட்கும்போதெல்லாம் அது நமக்குப் பால் தரும். அமிர்தம்ங்குறது வெள்ளாட்டம் பால்தான் என்பார்.
காட்டில் தாங்க முடியாத பசி எடுத்துவிட்டால், வேற வழி இல்லை என்றும் ஆகிவிட்டால், பால்ச்சார உள்ள ஆட்டின் காம்பைப் பிடித்து ரெண்டு மடக்கு பால் சாப்பிட்டு பசி ஆறுவதும் உண்டு.
ஆண்டுத் தொடக்கத்தில் கிடை மொத்தத்தின் வரவு-செலவுக் கணக்குப் பார்ப்பார்கள். அப்போது கிடைக்காகவே உழைத்தவர் களுக்கு ‘ஆச்சிக் குட்டி’ தருவது என்று உண்டு. தூங்கா நாயக்க ருக்கு ரெண்டு மூணு தடவை ‘ஆச்சிக் குட்டி’ கிடைத்திருக்கிறது. அவைகளை அவர் விற்றுவிடாமல், கிடையிலேயே வருஷக் கணக்காக வைத்திருந்து, விருத்திபண்ணி மொய்களாகப் பெருக்கிவிட்டார். இப்படித்தான் அவர் செல்வம் சேர்த்தார்.
‘வட்டிக்கு விட்டுச் சம்பாதிக்கிறதையும்விட ஆட்டைப் பெருக்கி சம்பாதிக்கிறவனே செல்வந்தன் ஆவான்’ என்பது பெரியவர்களின் வாக்கு.
‘ஒரு துட்டுக்கு எட்டுக் குட்டிகளை வாங்கி,
குட்டி ஒவ்வொண்ணையும் எட்டுத் துட்டுக்கு வித்தாலும் வட்டித் துட்டுக்கு ஈடாகாது’ - என்று ஒரு பழமொழியும் உண்டு.
ஆனால், திகிடுமுகுடான வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கினால், என்றைக்கு இருந்தாலும் ஆபத்து என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
நின்று நிதானிச்சி ஒரு ஆலமரம் போல வளர்ந்தார் தூங்கா நாயக்கர்.
ஒரு கிராமமானது, எதையும் பார்க்காதது போல இருந்தா லும் எல்லாத்தையுமே கவனிச்சுக்கிட்டே இருக்கும்.
குமரு காத்துக்கொண்டிருக்கும் வீடுகளின் பார்வை இப்போது இவர் மேல் விழ ஆரம்பித்தன. உடல் உழைப்பாளி களுக்கு மவுசு எப்போதும்தான்; அதிலும் குணசாலிகளுக்குக் கூடுதலாகவே இருக்கும்.
வீடு தவறாமல் ஒரு கட்டில் இருக்கும். விடிந்து எழுந்தவுடன் அந்தக் கட்டிலை முதல் காரியமாக நிமிர்த்தி ஒரு ஓரமாக வைத்துவிடுவார்கள். பகலில் அந்தக் கட்டிலில் யாராவது படுத்துக் கிடப்பதைப் பார்த்துவிட்டால், ‘‘என்ன ராத்திரிக்கு கிடைக் காவல் போயிருந்தியோ?’’ என்பார்கள். கிடைக் காவல் என்பது அப்படிக் கண் அசராமல் ராவெல்லாம் முழித்துக் காவல் காக்க வேண்டிய வேலை. மெல்ல மெதுநடை போட்டுக் கொண்டும் கொஞ்ச நேரம் அமர்ந்துகொண்டும் இருப்பார்கள். எந்தெந்த ஆடு ஈனப் போகுது என்றெல்லாம் கவனத்தோடு இருப்பார்கள். பார்வை பிசகிவிட்டால் ‘தூங்கினவன் மறி கிடா மறி...’ என்றாகிவிடும். (மறி: ஆட்டுக் குட்டி)
பக்கத்தில் பக்கத்தில் இரண்டு ஆடுகள் ஈன்று கொண்டிருக் கும். ஒன்றுபோல ஈன்றால் அதில் ஒன்று பெண் குட்டியும் மற்றது ஆண் குட்டியும் ஈன்றிருந்தால், உடனே மாற்றி வைத்துவிடலாம்.
‘மேகி... விருதா மேகி’ என்று ஒரு வசவு உண்டு வேற்றுமொழியில். ‘மேகி’ என்பது ஆட்டைத்தான். நுட்பம் குறைந்த மனிதனைக் குறிப்பது இந்த வசவு.
ஆடுகள் அவ்வளவு நுட்பமானவை அல்ல. தனது சினை ஆடு இன்று ராத்திரியே ஈன்றுவிடும் என்று தெரிந்துவிட்டால், ஆட்டின் சொந்தக்காரன் கிடையிலேயே ராத்திரிக்குத் தங்கிவிடுவான்.
ஆடுகளில் இரண்டு குட்டிகள் மூன்று குட்டிகள் போடும் ஆடுகள் என்றெல்லாம் இருக்கெ. தூங்கா நாயக் கரின் காவலில் இருக்கும் கிடைக்கு இந்த வித பயம் கிடையாது. அவரிடம் ஒரு வார்த்தை சொல்லி வைத்துவிட்டால் போதும். ஆட்டின் சொந்தக்காரன் நிம்மதியாகத் தூங்கலாம் வீட்டில்.
கிடைக் காவல்காரன் உட்காந்துகொண்டு தூங்க முடியாது; நின்றுகொண்டே தூங்கலாம். இந்தக் கதையை எனக்குத் தூங்கா நாயக்கர் சொல்லித்தான் தெரியும்.
- இன்னும் வருவாங்க...