Showing posts with label நான் அவனில்லை. Show all posts
Showing posts with label நான் அவனில்லை. Show all posts

Wednesday, August 19, 2015

கவிதாலயா தயாரிப்பில் உருவான ‘கிருஷ்ண லீலை’ கில்மா காமெடிப்படமா? -ஜீவன் பேட்டி

கவிதாலயா தயாரிப்பில் உருவான ‘கிருஷ்ண லீலை’ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். அந்தப் படத்தில் நடித்து முடித்திருந்த ஜீவன், அதன் பிறகு அமைதியாகிவிட்டார். தற்போது மூன்று ஆண்டுகள் இடைவெளிகளுக்குப் பிறகு மீண்டும் முழு வீச்சில் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...
கிருஷ்ண லீலை படத்துக்கு என்னதான் ஆனது?
ஒவ்வொரு படத்துக்கும் ஒரு விதி இருக்கிறது என்று நினைக்கிறேன். என் திரை வாழ்க்கையில் ’காக்க காக்க’ போலவே அதை மிக முக்கியமான படமாகப் பார்த்தேன். கதையில் மட்டுமல்ல பட்ஜெட்டிலும் விசாலமான படம்.
ஒரு சாதாரண இளைஞன் ஐ.ஏ.எஸ் ஆகக் கனவு காணும் கதை. ஆன பிறகு அவன் செயல்படுத்த நினைத்த விஷயங்கள் படத்தின் முக்கியமான போர்ஷன். அதில் அவனுக்கு இருக்கும் போராட்டங்கள் யதார்த்தமாக இருந்தன. அந்தப் படத்தில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் தற்போது நம்ம மாநிலத்தில் நடைமுறைக்கே வந்துவிட்டது. அதில் ஒன்று சமச்சீர் கல்வி. அத்தனை அருமையான படம். ஆனால் நடித்துக் கொடுப்பதோடு ஒரு நடிகனின் வேலை முடிந்துவிடுகிறது என்று நினைப்பவன் நான். தயாரிப்பாளருக்கு அழுத்தம் தருவது எனக்குப் பிடிக்காது.
இந்த மூன்று ஆண்டுகளில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?
நான் எதிர்பார்த்ததுபோல எனக்குக் கதைகள் அமையவில்லை. எல்லோரும் ‘காக்க காக்க’ பாண்டியாவை மனதில் வைத்துக்கொண்டு எதிர்மறை வேடங்களுக்காக என்னைத் துரத்தினார்கள். இன்றும் எனக்குப் பெண் ரசிகைகள் இருக்கிறார்கள் என்றால் அது ‘காக்க காக்க’ பாண்டியா கேரக்டரால்தான். ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு அந்த கேரக்டர் பிடித்துப்போய்விட்டது.
எங்கே போனாலும் பாண்டியா மாதிரி நடித்துக்காட்டச் சொல்லுவார்கள். தலைமுடியைக் கோதியபடி டயலாக் பேசச் சொல்வார்கள். அதை ரசிப்பார்கள். என்னை வில்லனாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் என்னை விடாமல் வில்லன் வேடங்களே துரத்தினால் நான் என்ன செய்ய?! மனதளவில் தொடர்ந்து நெகட்டிவ் ரோல்கள் பண்ணுவதில் எனக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. அதனால் பல படங்களை மறுத்துவிட்டு நிறைய பயணம் செய்தேன். பயணம் நெடுகிலும் நிறைய புத்தகங்கள் படித்தேன். லடாக் செல்ல வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.
அதற்குத் திட்டமிட்டுக்கொண்டிருந்தபோது கேட்ட கதைகளில் ‘அதிபர்’, ‘ஜெயிக்கிற குதிரை’ என இரண்டு கதைகள் எனக்கு பிடித்துப்போனது. அதிபர் படம் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. ‘ஜெயிக்கிற குதிரை’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் தென்னிந்தியச் சாயல் கொண்ட வில்லன் நடிகர்களுக்குப் பெரிய பஞ்சம் இருக்கிறது. வில்லன் வேடங்களில் நடிக்க ஏன் மறுக்கிறீர்கள்?
மனம் ஏற்றுக்கொள்ளாததுதான் முக்கிய காரணம். நான் வில்லன் ரோல்களில் வரத் தயார்தான். ஆனால் அது எந்தமாதிரியான வில்லன் என்பதுதான் கேள்வி. ‘ஓசன்ஸ் லெவன்’ , ‘கேச் மீ இஃப் யூ கேன்’ மாதிரி நெகட்டீவ் கேரக்டர்கள் கொடுத்தால் கண்டிப்பாக நடிப்பேன். ஹீரோக்களிடம் அடிவாங்கி சாகும் வில்லனாக நடிக்க நான் தயாராக இல்லை. ‘திருட்டுப் பயலே’ படத்தில் செய்ததுபோல வாழ்க்கையில் சறுக்கி விழுந்து பரிதாபகரமான வில்லனாக மாறும் கதாபாத்திரம் எனக்கு செட்டாகும். ஆனாலும் அதுபோல் வந்தால் கூட என் மனம் ஒப்புக்கொண்டால்தான் எதிர்மறைக் கதாபாத்திரங்களை செய்ய முடியும்.
‘அதிபர்’ படத்தில் உங்களது தலைமுடி, தோற்றத்தைப் பார்க்கும்போது எதிர்மறை வேடம் என்று எண்ணத் தோன்றுகிறதே?
இல்லவே இல்லை. இந்தப் படத்தை தமிழ் சினிமாவை திருப்பிப்போடும் கதை என்று சொல்ல மாட்டேன். ஆனால் கேரக்டரைத் திருப்பிப் போட்ட கதை. இது நிஜத்தில் ஒரு தொழிலதிபருக்கு நடந்த கதை. தனது தொழிலில் நேர்மையாக ஓஹோ என்று உயர்ந்து நிற்கும் ஒருவன், ஒரே இரவில் மொத்த சாம்ராஜ்யத்தையும் இழந்துவிட்டு நின்றால் என்ன நடக்கும், அவனையே அவனால் காப்பாற்றிக்கொள்ள முடியாதபோது வேறு எப்படி அவன் எழுந்தான் என்ற உண்மையோடு சினிமாவைக் கலந்திருக்கிறார் இயக்குநர். நான் இதுவரை பண்ணாத கேரக்டர். ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
ஜெயிக்கிற குதிரை என்ன கதை?
ஷக்தி சிதம்பரம் தொடந்து வெற்றிகளைக் கொடுத்தவர். அவரும் ஒரு இடைவெளிக்குப் பிறகு இயக்க வந்திருக்கும் படம். அப்படியானால் எத்தனை தெளிவான கதையோடு வந்திருப்பார் பாருங்கள். தொய்வில்லாமல் நகரும் பொழுதுபோக்குப் படம். நகைச்சுவைக் களம். ஆனால் முகம் சுளிக்க வைக்காத க்ளீன் காமெடி. படப்பிடிப்பில் மொத்த படக்குழுவும் விழுந்து விழுந்து சிரிக்கிறோம்.
கதாநாயகர்கள் பலரும் தங்களுக்குள் ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் ஜீவன் தனிமை விரும்பிபோல் தெரிகிறதே?
சமூகத்தை விட்டுத் தனித்து வாழும் ஆள் கிடையாது நான். ஆனால் யாரையும் தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைப்பவன். என்னுடன் பழகுகிற வாய்ப்பு அமைந்தவர்கள் அடுத்த நிமிடமே என்னுடன் நண்பர்களாகிவிடுவார்கள். ஆனால் நானாக யாரிடமும் போய்ப் பழகுவதோ என்னை மார்க்கெட்டிங் செய்துகொள்வதோ எனக்குத் தெரியாது. அது பிடிக்காது. அது என் இயல்பு. அதே நேரம் எனக்கு யாரிடமும் பிரச்சினையோ மனத்தாங்கலோ கிடையாது. எளிமையாக வாழ நினைப்பன் நான். ஆனால் திட்டமிட்டு வாழ நினைப்பவன் கிடையாது.
கௌதம் மேனனோடு உங்கள் நட்பு தொடர்கிறதா?
இல்லாமலா? அவ்வப்போது என்னுடன் போனில் பேசிக்கொண்டிருப்பார். பிறந்த நாளைக் கொண்டாடும்போதெல்லாம் என்னை மறக்காமல் அழைப்பார். ’காக்க காக்க’ குழுவுடன் நான் இருந்த நாட்கள் என் சினிமா வாழ்க்கையின் பெஸ்ட் என்று சொல்ல வேண்டும். கண்டிப்பாக அவர் படத்தில் மீண்டும் நடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் எப்போது அழைத்தாலும் அவருடன் இணைவேன்.
இன்றைய சினிமாவைக் கவனித்துக்கொண்டிருக்கிறீர்களா?
அதைவிட வேறு என்ன வேலை இருக்க முடியும். கௌதம் மேனன், பாலா, மிஷ்கின், வெற்றிமாறன் தொடங்கி இன்றைய நலன், மணிகண்டன் வரை இயக்குநர்கள் கையிலும் தமிழ் சினிமா பத்திரமாக இருக்கிறது. அதில் இயக்குநர்களின் நடிகனாக நான் தொடர்வேன்.


நன்றி - த இந்து