Showing posts with label தூக்குதண்டனை. ராஜீவ்காந்தி. Show all posts
Showing posts with label தூக்குதண்டனை. ராஜீவ்காந்தி. Show all posts

Saturday, August 27, 2011

ஜெ நினைத்தால் தூக்கு தண்டனையை ரத்து செயலாம்.. செய்வாரா ஜெ?

தூக்குக் கயிறை வெட்டும் கத்தி முதல்வர் கையில்!

தழுதழுத்த தமிழருவி மணியன்

டந்த 22-ம் தேதி, சென்னை எம்.ஜி.ஆர். நகரில் 'மூன்று தமிழர்கள் உயிர்க் காப்பு இயக்கத்தின்’ சார்பில் நடந்த பொதுக் கூட்டம்... முன்பு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தையே அசை போடவைத்தது. அலை கடலெனத் திரண்டிருந்த கூட்டத்தின் முன், அடங்காத ஆவேசத்துடன் இயக்கத்தினர் பேசிய பேச்சுக்கு, பெரும் வீச்சு!

 தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மணியரசன் எடுத்த எடுப்பிலேயே, ''காந்தி நம் தேசத் தந்தை என்று கூறிக்கொண்டு, அன்பு, அமைதி, சமாதானம் குறித்து வாய் கிழிய முழங்கும் மத்திய அரசே, தூக்குத் தண்டனையை உடனடியாக நீக்கு. 'பழிக்குப் பழி... ரத்த வெறி...’ என்ற போக்குடன் நீ தொடர்ந்து செயல்பட்டால், இந்தியாவின் தேசத் தந்தையாக கோட்சேவைப் பிரகடனம் செய். அசோகச் சக்கரத்தை அப்புறப்படுத்திவிட்டு தூக்குக் கயிறை வை!'' என்று சீற, கூட்டம் முறுக்கேறி நிமிர்ந்தது.


அடுத்துப் பேசிய தமிழருவி மணியன், ''தமிழினத்தின் உண்மை​யான தலைவர் பழ.நெடுமாறன் அவர்களே... தமிழினத்தின் உண்மையான தளபதி வைகோ அவர்களே...'' என்று புன்முறுவலுடன் ஆரம்பிக்க, தி.மு.க. மீதான முதல் அட்டாக்கை கரகோஷத்தோடு ரசித்தது கூட்டம்.

தொடர்ந்த மணியன், ''இன்று இனத்தைக் காட்டிக்கொடுப்பதுதான் காங்​கிரஸின் ஒரே அடையாளமாக இருக்கிறது. அந்தக் கட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்றும் வரை யாரும் ஓயக் கூடாது. கடந்த தேர்தலில் பி.ஜேபி. போட்ட பிச்சையில் காங்கிரஸ் சார்பில் ஐந்து பேர் சட்டமன்றம் போனார்கள்.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஓர் இடத்தில்கூட காங்கிரஸ் ஜெயிக்கவில்லை என்ற சூழலை நீங்கள் உருவாக்கினால், உங்கள் மான உணர்வு உலகுக்கு உணர்த்தப்படும். ப.சிதம்பரம் குறித்து எனக்கு முன்பு சிலர் பேசினார்கள். விதி வசத்தாலும், வினைப் பயனாலும் தமிழனாக வந்து உதித்தவர் சிதம்பரம். உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய தமிழன், மூன்று தமிழர்களின் உயிரைப் பறிப்பதற்கு பரிந்துரை செய்தால், 'அவர் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம்தானா?’ என்று சந்தேகமாக இருக்கிறது...'' எனக் கொந்தளித்தவர், ''தமிழக முதல்வர் அவர்களே... இந்த மூன்று தமிழர்களின் தூக்குக் கயிறை அறுத்து எறியும் கத்தி உங்களிடம்தான் இருக்கிறது. உங்களால் மட்டுமே இது முடியும்!'' என்ற கோரிக்கையுடன் முடித்தார்.

தண்டனைக்கு உள்ளான தமிழர்களுக்காக, கடந்த காலத்தில் நடத்திய சட்டப் போராட்டங்களைப் பட்டியலிட்டுப் பேசிய பழ.நெடுமாறன், ''விரைவில் நமது இயக்கத்தின் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிர் காக்க வலியுறுத்துவோம்!'' என்றார்.

கடைசியாக மைக் பிடித்த வைகோ, ''சில நாட்களுக்கு முன்பு பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சந்திக்க, வேலூர் சிறைக்குப் போனேன். மூவர் முகத்திலும் நான் எந்தக் கலக்கத்தையும் பார்க்கவில்லை. பதற்றம், பயம் இன்றி எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்தார்கள். ஏன் தெரியுமா? 'தாய்த் தமிழகம் தங்களைக் கைவிடாது, காப்பாற்றும்’ என்ற நம்பிக்கைதான் காரணம்.

உலகத் தமிழர்கள் அனைவரும் தற்போது முதல் அமைச்சரின் உரிமையை எதிர்பார்த்துக் காத்து இருக்கிறார்கள். 'முதல்வர் அவர்களே... மூவர் உயிரைக் காத்திடுக... வரலாற்றுச் சாதனை புரிந்திடுக... விதி 162-ஐ கையில் எடுங்கள்’ என்பதே அனைவரின் கோரிக்கை. இனி யாரிடத்தில் போய் நாங்கள் முறையிடுவோம்? 'கருணை மனுக்களை ஜனாதிபதி விரைவில் நிராகரிக்கப்போகிறார்’ என்று நம்பத் தகுந்த தகவல் வந்ததும், உடனடியாக டெல்லிக்கு ஓடினேன்.

பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, 'மூன்று நிரபராதிகளைத் தூக்கிலிட முயலாதீர்கள்’ என மனு கொடுத்து மன்றாடினேன். ஆனால், அந்தக் கல்லுளிமங்கர் கண்டுகொள்ளவில்லை. அடுத்த சில நாட்களில் கருணை மனு நிராகரிக்கப்பட்டது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கோத்தபய ராஜபக்ஷே விமர்சிக்கிறான். மத்திய அரசே நீ இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டித்தாயா? அவன் யார் எங்கள் சட்டமன்றத் தீர்மானத்தை விமர்சிக்க? அது யாரோ ஒரு சிலரின் குரல் அல்ல... ஏழரைக் கோடி தமிழர்களின் குரல்!'' என்று முழங்கிய வைகோ, இறுதியாக, ''மூவர் உயிர் காக்கப்பட வேண்டும் என்ற காரணத்தால் அமைதியாக இருக்கிறோம். எதிர்மறையாகப் பேச விரும்பவில்லை.

அவர்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால்... அந்தச் சம்பவம் நடந்தது 1991. இது 2011. நினைவில் வைத்துக்கொள். அவர்களுக்கு ஆபத்து என்றால், இன்னும் நிறைய முத்துக்குமரன்கள் வருவார்கள். தீயை தங்கள் மேல் வைத்துக்கொள்ள அல்ல..! தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல் இதே போக்குடன் நீ செயல்பட்டுக்கொண்டுஇருந்தால்... இந்தியா சுதந்திரம் அடைந்தது 1947... ஆனால், 2047-ல் தமிழ்நாடு உன்னோடு இருக்காது!'’ என்று கர்ஜிக்க... ஆர்ப்பரித்தது கூட்டம்!


''கௌரவத்தைக் கைவிடுங்க!''

மூவர் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் குரல் கொடுக்கும், ராமதாஸ், திருமாவளவன், சீமான் ஆகியோர் எம்.ஜி.ஆர். நகர் கூட்டத்துக்கு வரவில்லை. அவர்கள் கட்சிப் பிரதிநிதிகள் மட்டும் வந்திருந்தனர். ''அனைத்துக் கட்சி சார்பில் நடக்கும் இதுபோன்ற நிகழ்வுக்கு வராமல் அப்படி என்ன கௌரவம் பார்க்கிறாங்களோ? இவங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தா, அடுத்த முறை புறக்கணிக்கக் கூடாது!'' என்று தமிழ் உணர்வாளர்கள் பேசிக்கொண்டனர்.


தூக்கு?

அதிர்ச்சி அரசியல்... திகில் விவரங்கள்

''அம்மா, மிகுந்த அறிவும் ஆய்ந்தறியும் பேராற்றலும் கொண்டவர் நீங்கள். இந்த வழக்கில் இருக்கும் குளறுபடிகளை நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் சாவின் மடியில் கிடப்பவனாகக் கேட்கிறேன்... தயவுசெய்து தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுங்கள். இத்தனை வருடங்களாக வாடும் எங்களுக்காக உங்களின் ஒற்றைக் குரல் ஒலித்தால் போதும்!'' - கடந்த ஜூ.வி. இதழ் மூலமாக முதல்வர் ஜெயலலிதாவிடம் பேரறிவாளன் வைத்திருந்த கண்ணீர்க் கோரிக்கை இது. ஆனால், இந்தக் கண்ணீர் இன்னமும் அரசுத் தரப்பை அசைக்கவில்லை என்பதுதான் துயரம்!

ஆம்; நடக்கக் கூடாது என நினைத்தது, நடந்தேவிட்டது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக்கு ஆளாகி வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருடைய கருணை மனுக்களும் சமீபத்தில் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து மூவருக்கும் தூக்கு வேளை நெருங்கிவிட்டதாகப் பரபரப்புக் கிளம்ப, தமிழகம் முழுக்க உருக்கமான கோரிக்கைப் போராட்டங்கள் நடந்தன.

இலங்கையின் போர்க் குற்றங்களைக் கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய முதல்வர் ஜெயலலிதாவை நோக்கி கண்ணீர்க் கரங்கள் நீண்டன. சட்டமன்றக் கூட்டத் தொடர் நடக்கும் இந்த நேரத்தில் தூக்குத் தண்டனைக்கு எதிரான சட்ட வடிவத்தை ஜெயலலிதா இயற்றுவார் என்கிற எதிர்பார்ப்பும் நிலவியது.


ஆனால், அந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக, சிறைத் துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அதிரவைத்திருக்கிறது தமிழக அரசு. கடந்த 25-ம் தேதி மாலை உள்துறைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா மூலமாக வேலூர் சிறைக் கண்காணிப்பாளருக்கு ஸ்பீட் போஸ்ட்டில் அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், ''நடவடிக்கை எடுப்பதற்கான கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன். நடவடிக்கை எடுத்த பின் உடனடியாக அரசுக்கு அறிக்கை அனுப்பவும்!'' என மிகச் சுருக்கமான முறையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


மூவருடைய தூக்குத் தண்டனைக்கும் எதிராக நிச்சயம் தமிழக அரசு குரல் கொடுக்கும் என உறுதியாகப் பலரும் நம்பி இருந்த வேளையில், அதிர்ச்சிகரமான இந்த முடிவு எப்படி எடுக்கப்பட்டது?

இது குறித்துப் பேசும் அரசுத் துறையில் உள்ள உணர்வாளர்கள், ''கருணை மனு நிராகரிக்கப் பட்ட கடிதம், கடந்த 16-ம் தேதியே தமிழக அரசுக்கு வந்துவிட்டது. உடனே அரசுத் துறை செயலாளர்கள் அந்தக் கடிதம் குறித்து ஆலோசனை நடத்தி, முதல்வரிடம் தகவல் சொன்னார்கள். 'கூட்டத் தொடர் நடக்கும் இந்த நேரத்தில் இது குறித்து எந்த முடிவு எடுப்பதும் சரியில்லை. அதனால், கூட்டத் தொடர் முடிந்த பிறகு இதுபற்றிப் பேசலாம்!’ என்றார் முதல்வர்.

அதனால், இப்போதைக்கு இந்த விவகாரத்தில் பயப்பட வேண்டியது இல்லை என்கிற நிலை நிலவியது. இதற்கிடையில், கிருஷ்ணசாமி, சரத்குமார், ஜவாஹிருல்லா, தனியரசு உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள் பலரும் இந்த விவகாரம் குறித்து முதல்வரிடம் பேச முயற்சித்தார்கள். சீமான் மூலமாகவும் முதல்வருக்கு உருக்கமான கோரிக்கை வைக்க முடிவானது. 'முதல்வரை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைப்போம்’ என எம்.ஜி.ஆர். நகர் கூட்டத்தில் நெடுமாறன் பகிரங்கமாகவே அறிவித்தார். ஆனால், இதற்கிடையில் எங்கிருந்து உத்தரவு வந்ததோ... அரசுத் தரப்பு அதிகாரிகள் 25-ம் தேதி காலையில் இருந்தே பரபரப்பாக இந்த விவகாரம் குறித்துப் பேசத் தொடங்கினார்கள்.

முதல்வரின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த கருணை மனு நிராகரிக்கப்பட்ட ஃபைல் முதன்மைச் செயலாளர் சாரங்கியின் டேபிளுக்குக் கொண்டுவரப்பட்டது.

'இதில் நாம் ஒன்றும் செய்ய முடியாது. உடனே மத்திய அரசின் கடிதத்தை சிறைத் துறைக்கு அனுப்பிவிடுங்கள்’ எனச் சொல்லிவிட்டாராம் சாரங்கி. 'அரசு உத்தரவு வந்த ஏழு நாட்களுக்குள் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவோம்’ என சிறைத் துறை அதிகாரி டோக்ரா ஏற்கெனவே அறிவித்திருக்கும் நிலையில், அரசுத் தரப்பின் இந்த வேகம் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்திருக்கிறது. 26-ம் தேதி காலையில் கடிதம் சிறைத் துறைக்குக் கிடைக்க, அடுத்த ஏழு தினங்களுக்குள் மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனையை அதிகாரிகள் நிறைவேற்றக் கூடும்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக செயல்படாவிட்டாலும், அந்தக் கடிதத்தைக் கிடப்பில் போட்டு வைக்கலாம் என்பதுதான் முதல்வரின் எண்ணமாக இருந்தது. ஆனால், அதிகாரிகள் தரப்பில் சிலர் திட்டமிட்டு மத்திய அரசின் பெயரைச் சொல்லி இந்த விவகாரத்தை விரைவுபடுத்திவிட்டார் கள்.

முதல்வர் நல்லது செய்ய நினைத்தும் அதிகாரிகள் சிலரால் நிலைமை கைமீறிப் போய்விட்டது தமிழக அரசு கைவிரித்துவிட்ட நிலையில், முறைப்படியான சட்டப் போராட்டங்களால் மட்டுமே மூவருக்குமான தூக்குத் தண்டனையைத் தடுக்க முடியும். ஐந்து நாட்களுக்குள் சட்ட ரீதியான தடை உத்தரவை நீதிமன்றத்தில் பெற முடியாமல் போனால்... மூவருக்கும் எந்த நேரத் திலும் தூக்குக் கயிறு விழும்!'' என்கிறார்கள் ஆதங்கமாக.


அரசுத் தரப்பில் பேசும் அதிகாரிகளோ, ''கொலையானவர் முன்னாள் பிரதமர் என்கிற நிலையில் ஒரு மாநில அரசால் இந்த விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது. கொலையாளியை நியாயப்படுத்தும் செயல்பாடாகக் கருதப்பட லாம் என்பதற்காகவே, முறைப்படி கடிதம் சிறைத் துறைக்கு அனுப்பப்பட்டது!'' என்கிறார்கள்.


இதற்கிடையில் சீமான் மூலமாக தூக்குத் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பேரறிவாளன், முருகன் சாந்தன் மூவரின் சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியை களம் இறக்கும் வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட உணர்வாளர்கள் பலரும் ஒன்றுகூடி சட்டப் போராட்டம் நடத்தவும் தீவிர வேலைகள் நடக்கின்றன. 'தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பல விவகாரங்களில் நீதிமன்றம் மூலமாக தடை வாங்கிய பல தீர்ப்புகளை முன் உதாரணமாக வைத்து மூவருடைய உயிர்களையும் காப்பாற்ற முடியும்’ என்றும் உறுதியாக நம்புகிறார்கள்.


கைவிடப்பட்ட இந்த மூவரின் உயிரை அடுத் தடுத்த சட்டப் போராட்டங்களாவது மீட்டுக் கொடுக்குமா? கண்ணீரோடு காத்திருக்கிறார்கள், கவலைப்பட மட்டுமே தெரிந்த தமிழர்கள்!

thanx -ju vi