Showing posts with label சிறந்த விமர்சகர் யார்? - ஜோதிகா நேர்காணல். Show all posts
Showing posts with label சிறந்த விமர்சகர் யார்? - ஜோதிகா நேர்காணல். Show all posts

Wednesday, May 20, 2015

சிறந்த விமர்சகர் யார்? - ஜோதிகா நேர்காணல்

நடிப்பை விட்டு விலகி திருமணம், குடும்பம், குழந்தைகள் என முழு இல்லத்தரசியாக மாறியிருந்த ஜோதிகா, 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்குத் திரும்பியிருக்கிறார். துள்ளலும் துடிப்பும் குறையாத அவரிடம் உரையாடியதில் இருந்து..
மீண்டும் நடிக்க விரும்பியபோது உங்களுக்கு ஊக்கம் அளித்தது யார்?
எனது நண்பர்கள். ‘திரையில் உன்னை மிஸ் பண்றோம் ஜோ’ என்று கூறிக்கொண்டே இருந்தனர். குழந்தைகள் இருக்கிறார்களே.. முழுமையாக நடிப்பு சாத்தியமா என்று நினைத்தேன். நண்பர்கள்தான் நம்பிக்கை கொடுத்தனர். காயத்ரி ஸ்ரீநாத், தேவி இவங்க இல்லாத வீட்டை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. தேவி, என் குழந்தைகளுக்கு இன்னொரு அம்மா. காலை 7 மணிக்கு புறப்பட்டு படப்பிடிப்புக்கு சென்றுவிட்டால், நான் வரும்வரை கண்ணும் கருத்துமாகக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வார். குழந்தைகளை என் அப்பா (மாமனார் சிவகுமார்) பள்ளிக்கு அழைத்துச் செல்வார். பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவது அம்மா (மாமியார் லட்சுமி). ஏதாவது அவசரம் என்றால் என் நண்பர்கள் உடனடியாக உதவிக்கரம் நீட்டி விடுவார்கள். நான் மீண்டும் நடிக்க வந்ததுக்கு பக்கத்து வீட்டு சாராவும் ஒரு காரணம்.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கேமரா முன்னால் நின்றபோது எப்படியிருந்தது?
முதல்நாள் படப்பிடிப்புக்கு பயந்து பயந்துதான் போனேன். உள்ளுக்குள் பயமாக இருந்தது. என் நிலைமையைப் புரிந்துகொண்டு இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ் உதவினார். அதனால் முழு படப்பிடிப்பும் எளிதாக இருந்தது.
ஒருசில படங்கள் தவிர, துறுதுறு பாத்திரங்களில்தான் அதிகம் நடித்திருக்கிறீர்கள். இப்போது பக்குவப்பட்ட பாத்திரம். என்ன வித்தியாசம் உணர்ந்தீர்கள்?
நான் சினிமாவில் நடிக்க வந்தபோது 17-18 வயசு இருக்கும். தமிழ் தெரியாது. 5 வருடம் கஷ்டப்பட்டு தமிழ் கற்றுக்கொண்டேன். எப்படி வசனம் பேசவேண்டும் என்று ஒவ்வொரு காட்சிக்கும் சொல்லிக் கொடுப்பார்கள். அதை அப்படியே பின்பற்றினேன். இதனால் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் ஆனதுகூட உண்மை. 40 வயதுக்கு மேற்பட்ட ஹீரோக்களுடன் கூட நடித்தேன். அப்போதுதான் நடிப்பு என்றால் என்ன என்பதைக் கற்றுக்கொண்டேன். கடைசியாக நடித்தது ‘மொழி’ படம். அப்போது வயது 27. காட்சி என்ன, வசனம் என்ன என்பதை புரிந்துகொண்டு நடித்ததால் ஓவர் ஆக்டிங் குறைந்துவிட்டது. இப்போது 36 வயது. அதே 36 வயதுடைய கதாபாத்திரத்தில் நடித்தது ரொம்ப பெருமையாக இருக்கிறது.
உங்களது வழக்கமான பணிகள் பற்றி..
காலை 6 மணிக்கு எழுந்துவிடுவேன். 7 மணிக்கு குழந்தைகள் பள்ளிக்குச் சென்றுவிடுவார்கள். குழந்தைகள் இல்லாமல் என்னால் வீட்டில் இருக்கமுடியாது. 8.30-க்கு கிளம்பி ஜிம்முக்கு போவேன். ஜிம் தோழிகளுடன் சேர்ந்து காபி குடிப்பது பிடிக்கும். மதியம் 12 மணிக்கு வீடு திரும்புவேன். குழந்தைகளும் பள்ளியில் இருந்து வந்துவிடுவார்கள். 12 மணியில் இருந்து இரவு 8 மணி வரை குழந்தைகளுக்கு சாப்பாடு போடுவது, பள்ளியில் என்ன நடந்தது என விசாரிப்பது, வீட்டுப் பாடம் எழுதவைப்பது எல்லாம் முடித்து தூங்கவைத்து விடுவேன். வீட்டில் சூர்யா இருந்தால் அவரோடு சேர்ந்து பேசிக்கொண்டே சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். சூர்யா இல்லை என்றால் இரவு 10:30 மணி காட்சிக்கு தியேட்டருக்கு போவோம். நடுநடுவே வீட்டுக்கு போன் செய்து குழந்தைகள் தூங்குகிறார்களா, ஏதும் தொந்தரவா என்பதை தெரிந்துகொள்வேன். இதுதான் என் ஒரு நாள்.
உங்கள் நடிப்புக்கு சிறந்த விமர்சகர் யார்?
நண்பர்கள்தான் விமர்சகர்கள். சூர்யா எனது நடிப்பை விமர்சனம் பண்ணவே மாட்டார். ரொம்ப ஓவராக நடித்தால் கூட சூப்பர் என்பார். சுமாராக நடித்திருந்தால் ‘பக்குவம் கூடியிருக்கிறது’ என்பார்.
குழந்தைகளைப் பற்றி..
மகள் தியா ரொம்ப கூச்ச சுபாவம் கொண்டவள். சூர்யா மாதிரி ரொம்ப கம்மியாக பேசுவாள். மகன் தேவ் அப்படியே என்னை மாதிரி. நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருப்பான். மகள் வெஜ், மகன் நான்-வெஜ். இருவருமே நீச்சல், விளையாட்டு, ஜிம்னாஸ்டிக், கராத்தே என்று பயங்கர பிஸி.
உங்களுக்குப் பிடிக்காத விஷயங்கள் ஏதாவது உண்டா?
நேரம் தவறுவது சுத்தமாகப் பிடிக்காது. அப்புறம், செல்போன் பேச்சு. விட்டால் சூர்யா நாள் முழுக்க போனில் நண்பர்களிடம் பேசிக்கொண்டே இருப்பார். படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தபிறகும் அதுபோல மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்தால் எனக்கு கோபம் வரும். வீட்டில் காலிங்பெல் அடித்து நான் கதவு திறந்துவிடும்போது போன் பேசிக்கொண்டு வீட்டுக்குள் வரக்கூடாது என்பது பொதுவான சட்டம்.
தொடர்ந்து நடிப்பீர்களா?
மீண்டும் நடிக்க வருவேன்னு நினைச்சுக்கூட பார்க்கல. ‘36 வயதினிலே’ படத்தில் நடித்தது தற்செயலாக நடந்ததுதான். நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன்.


thanx - the  hindu