Showing posts with label கல்லூரி. Show all posts
Showing posts with label கல்லூரி. Show all posts

Tuesday, January 08, 2013

பள்ளி கல்லூரி காலை 7.30 க்கு திறப்பது சாத்தியமா? மக்கள் கருத்து

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றும் அரசின் முயற்சிக்கு, ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரித்துள்ளனர். ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், மாணவ, மாணவியர் உடலாலும், உள்ளத்தாலும் கடுமையாக பாதிக்கப்படுவர் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

கடந்த மாதம், சென்னை, பெருங்குடியில், பஸ் படிக்கட்டுகளில் பயணித்த மாணவர்கள் நான்கு பேர், லாரி மோதி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்தை, சென்னை ஐகோர்ட் தானாக முன்வந்து, விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதைத் தொடர்ந்து, போக்குவரத்து துறை, ஐகோர்ட்டில் ஒரு பதில் அறிக்கையை சமர்ப்பித்தது. 



அதில் கூறியுள்ளதாவது: சென்னையில், பள்ளி வேலை நேரத்தை, காலை, 7:30 மணியில் இருந்தும், கல்லூரி வேலை நேரத்தை, 8:00 மணியில் இருந்தும் துவங்கும் வகையில், மாற்றம் செய்யலாம். இந்தக் கருத்தை, கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறையிடம் தெரிவித்துள்ளோம். மேலும், கல்வி நிறுவனங்கள் துவங்கும் நேரம் மற்றும் முடியும் நேரங்களில், கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம், ஆசிரியர், மாணவர், பெற்றோர் மத்தியில், பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சென்னையைப் பொறுத்தவரை, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், காலை, 8:45 மற்றும் 9:00 மணிக்கு துவங்குகின்றன. தனியார் பள்ளிகள், 8:00 மணியில் இருந்து, 8:30க்குள் துவங்கப்படுகின்றன. தற்போதைய நேரத்தை மாற்றினால், பள்ளியின் தூரத்தை பொறுத்து, முன்கூட்டியே மாணவர்கள் கிளம்ப வேண்டியிருக்கும். குறைந்தபட்சம், 6:45 மணி முதல் கிளம்ப வேண்டியிருக்கும். இதற்கு, அதிகாலை, 5:00 அல்லது 5:30க்கே எழுந்து, குளித்து முடித்து, தயாராக வேண்டிய நிலை ஏற்படும். இதனால், அரசின் முயற்சிக்கு, ஆசிரியர்கள், 





மாணவர்கள், ஆரம்பத்திலேயே எதிர்ப்பு குரல் கொடுக்கின்றனர்.


மாணவர்கள் பாதிப்பர்:
அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் அண்ணாமலை கூறியதாவது: காலை, மாலை நேரங்களில், பஸ்களின் ண்ணிக்கையை இப்போதே,அதிகரிக்கலாம். மாணவர்களுக்கென, தனியாக சிறப்பு பஸ்களை இயக்கலாம். அனைத்து பஸ்களிலும், கதவுகள் அமைப்பதை கட்டாயமாக்கலாம். இதில் எதையுமே செய்யாமல்,பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றினால், நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் கண்டிப்பாக வரும்.காலையில் சரியாக சாப்பிடாமல் பள்ளிக்கு வந்து, மயக்கம் அடைந்து விழுகின்றனர்.

இதுபோன்றசம்பவம், அரசுப் பள்ளிகளிலும் நடக்கிறது; தனியார் பள்ளிகளிலும் நடக்கின்றன. இதனால், மாணவர் மட்டுமில்லாமல், பெற்றோர், ஆசிரியர்களுக்கும் சிரமம் ஏற்படும். ஆசிரியர்கள், நீண்ட தொலைவில் உள்ள பள்ளிகளில் வேலை பார்க்கின்றனர். அதிகாலையில் எழுந்து தயாரானால் தான், ஆசிரியர்களாலும், 7:30க்கு, பள்ளிக்குச் செல்ல முடியும். எனவே, நேர மாற்றம் செய்யும் முயற்சியை, அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


கல்வித்துறை தயார் : இந்த விவகாரம் குறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போதுள்ள நேரத்திற்கு, பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டும், பிரச்னை தீராது; போக்குவரத்து நெரிசல் தான் அதிகமாக ஏற்படும். நேரத்தை மாற்றுவது தான் ஒரே தீர்வு. அரசு உத்தரவிட்டால், நேரத்தை மாற்ற நாங்கள் தயார்' என்றார். இந்த விவகாரம் தொடர்பாக, போக்குவரத்து துறை, கல்வித்துறை, காவல்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டு கூட்டம், 10ம் தேதி, சென்னையில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

 மக்கள் கருத்து  



1. அனைத்து பள்ளிகளும் அரசு மயமாக வேண்டும் பள்ளிகள் 2 கி மீ சுற்றளவில் உள்ள மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும் பெற்றோர் பிள்ளைகளை நடந்தே சென்று விட்டு விடலாம் 


2. வட மாநிலங்களில் குளிர் ஒரு டிகிரி இருக்கும்போதே கூட குழந்தைகள் ஏழு மணிக்கெல்லாம் ஆட்டோவில் ஏறி பள்ளி செல்வதை காணலாம். தமிழ்நாடு குளிரால் அவ்வளவு பாதிக்காத பகுதி மாலை இரண்டு மணிக்கு பள்ளி முடிந்து விடும். இதில் என்ன இவர்களுக்கு கஷ்டம் என்று தெரியவில்லை 


3. இதையெல்லாம்,ஜென்மத்திற்கும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.....மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் ஒப்புக்கொண்டாலும் ஆசிரியர் வர்க்கம் இதை ஏதனும் ஒரு காரணம் கொண்டு எதிர்க்கும் ....இவையெல்லாம் நடைமுறை படுத்துவது அவ்வளவு எளிதல்ல ...


.பெற்றோர் ,ஆசிரியர், ..காவல் துறை, கல்வித்துறை .மற்றும் ..அதற்கான பொறுப்புள்ள அமைச்சர்கள் உள்துறை செயலர் ...கல்வி துறை செயலர் இவர்களை கொண்ட கூட்டு கூட்டம் நடத்தி அவர்களது கருத்து கேட்டு ... அதன் படி ஒரு முடிவினை எடுக்கவேண்டும் ....அரசு தனது கொள்கையை ஏதேனும் ஒரு வகையில் திணிக்க முயலக்கூடாது 


4. Changes are never change. சார் நானும் தமிழ் நாட்டில் இருந்து இருந்தால் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தான் தெரிவித்து இருப்பேன். தமிழகம் தொடர்ந்து பின் நோக்கி செல்ல ஒரு காரணம் மக்களாகிய நாம் மட்டங்களை ஏற்காததே. திர்ப்பு தெரிவிப்போர் தமிழ் நாடு அல்லாத மற்ற மாநில நகர்களை சென்று பார்த்தல் சென்னை எவ்வளவு பின் தங்கியுள்ளது என்று தெரியும். 



பாம்பே மற்றும் பெங்களூர் நகர்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் காலை 7.30 ஆரம்பித்து மாலை 3.00 அல்லது 3.30 க்கெல்லாம் முடிந்துவிடும். இதனால் மாணவர்கள் பேருந்துகளை சிரமம் இல்லாமல் பயன் படுத்தமுடியும், படி கட்டு பயணம் தவிர்க்க படும் மற்றும் போக்கு வரத்தும் பீக் ஹவர் நேரங்களில் குறையும். நேரம் இல்லை, சிக்கிரம் எழ வேண்டும் என்று புலம்புவதை விட்டு நம் வாழ்க்கை முறையை மட்டற்ற வேண்டும் 


அதாவது பிள்ளைகளை ஒன்பது மணிக்கு முன் படுக்க செய்து அதிகாலை எழ பழக்க வேண்டும். இன்று சென்னை போன்ற நரக வாழ்க்கையில் தனி மனித மாற்றம் களை ஏற்காத வரை சமுதாய மாற்றம் ஏற்படாது. 



5. போக்குவரத்து துறை தங்களிடம் உள்ள குறைகளை தீர்க்காமல், பள்ளி மற்றும் கல்லூரி நேரத்தை மாற்றுவதற்கு ஆலோசனை கொடுப்பது வியப்பாக இருக்கிறது. ஏற்கனவே பள்ளிகள் 8.30 மணிமுதல் 9.00 மணிக்குள் தான் துவங்குகின்றன. இதற்கே நேரத்திற்கு போகமுடியாமல் அனைத்து பள்ளிகளிலும் சில மாணவ, மாணவிகள் வெளியில் நிற்பதும், கடவுள் வாழ்த்து முடிந்தவுடன் அவர்களை உள்ளே விடுவதும் நடக்கிறது. முதலில் போக்குவரத்து துறை அனைத்து பேருந்துகளிலும் மகாராஷ்டிரா,கர்நாடகா, மற்றும் ஆந்திரா போல இரும்பு கதவுகள் போருத்தட்டும். தானாகவே விபத்துகள் குறையும். 


6. எந்த ஒரு துறையிலும் எந்த ஒரு மாற்றத்தையும் எந்த ஒரு மக்களும் உடனடியாக ஏற்று கொள்வதில்லை.. அது போல்தான் இதுவும்.. எல்லாமும் சாத்தியம்தான்... நடைமுறைபடுத்தபட்டால் எல்லாம் ஓரிரு மாதங்களில் சரியாகிவிடும்.... இங்கு கருத்து சொல்லும் எத்தனை பேர் தங்கள் வீடுகளில் குழந்தைகளுக்கு காலை வேளைகளில் உதவுகின்றனர்... 


எதிர் கட்சியினர் போல் எல்லா திட்டங்களையும் எதிர்த்து கொண்டே இருந்தால் என்னதான் செய்ய..? தவிர மதியம் மற்றும் மாளை வேளைகளில் பல விசயங்களை செய்யலாம், கற்று கொள்ள நேரமும் மிஞ்சும்... காலை பொழுதில் வெறும் தூக்கம் மட்டுமே மிஞ்சும்... தவிர நடைமுறைபடுத்தபட்டு சாத்தியம் இல்லையெனில் மீண்டும் பழைய நடை முறைகே வரலாமே.... சமச்சீர் கல்வியில் என்ன நடந்தது...? காலையில் ஒரு மணி நேரம் முன்பே எழுந்தால் உடலுக்கும் நல்லதுதான். எல்லாமே பழக்கத்தில் மாறுபவனவே.... முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்... 


7. அரசு என்றால் மக்களுக்கு எதிராக செயல்படுவது என்பதுதான் ஜனநாயகம் . பிள்ளைகள் நிம்மதியாகத் தூங்குவது இந்த காலகட்டத்தில்தான், அதிகாலை எழுந்து தூக்கம் கலையுமுன், அவர்களுக்கு உணவை வாயில் திணித்து, திட்டி, பெற்றோகள் அவதிக்குள்ளாகி, டென்ஷனாகி, இவர்களும் நிம்மதியை இழந்து, குழந்தைகளையும் நிம்மதி இழக்கச் செய்து, பள்ளி சென்றவுடன் எமன் பாசக்கயிறு போல் ஆசிரியர்கள் தங்கள் கடமையைச் செய்கிறோம் என்ற பெயரில் பிள்ளைகளை தாங்கள் வீட்டில் பட்ட கஷ்ட்டங்களுக்கு இந்த பிள்ளைகளின் மீது காட்டி, மொத்தத்தில் எல்லோரும் பயித்தியம் பிடித்து ஆளாகவேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம் என்றால் நடக்கட்டும், தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் கல்விமுறைக்கு மாற்றாக பல நல்ல கருத்துக்களை சான்றோர்கள் அள்ளி தர ஆர்வமாக இருக்கும்போது, அவர்களை எல்லாம் மனிதனாகவே மதிக்காமல், இவர்கள்தான் எல்லாம் என்று ஈடுபட்டால் யார்தான் என்ன செய்ய முடியும்? 



ஒவ்வொன்ற்க்கும் மக்கள் நீதிமன்றம் சென்றுதான் தங்கள் வாழ்க்ககை நடத்தவேண்டிய காலகட்டத்தில் உள்ளோம் என்றால் மிகையாகாது. பள்ளி மாணவர்களிடமே கருத்துக் கேட்கலாமே? இவர்களுக்கு இல்லாத மூளையா இன்று ஆள்பவர்களிடம் இருக்கப்போகிறது? இன்றைய மாணவர்களிடம் இருக்கும் அறிவு வளர்ச்சி மிக மிக ஆற்றல் கொண்டது, ஆகவே அரசியல் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கும் மாணவர்கள், நாட்டுப்பற்றுள்ள மாணவர்கள், பெற்றோர்களுக்குக் கீழ்ப்பட்டு நடக்கும் மாணவர்கள், இப்படி பல கிளைகளாக உள்ள பல தரப்பு மாணவர்களிடம் கலந்து ஆலோசித்து , கடைசியில் பெற்றோர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுத்தால் நல்லது. வந்தே மாதரம் 



8. நல்ல திட்டம். 2 - 2:30 க்கு வீட்டிற்கு வந்து வீட்டுப்பாடங்ககளை முடித்துவிட்டு மாலையில் 2 மணி நேரம் தொலைக்காட்சியின் முன்னால் உட்காராமல் விளையாட நேரம் கிடைக்கும். இதனால் உடம்பு குண்டாவதைத் தடுப்பதுடன் பல்வேறு வியாதிகளுக்கும் விடை கொடுத்திடலாம். 



9. காலை 7 1/2 மணிக்கு பள்ளி ஆரம்பித்தால் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேலைக்கு செல்லலாம். மேலும் பள்ளிகளும் 3-5 KM க்குள் வசிக்கும் மாணவர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து சேர்க்கவேண்டும். அப்போது தான் ஊரில் உள்ள அனைத்து பெற்றோர்களும் தம் குழந்தைகளை ஒரே பள்ளியில் சேர்க்க முற்பட மாட்டார்கள். இது தேவையில்லாத டிராபிக்கை கட்டுப்படுத்தும். மேலும் பள்ளிக்காக குழந்தைகள் வெகு தொலைவு செல்வதும் தவிர்க்கப்படும். செய்வார்களா? 



10. நேரம் மாற்றம் நல்லது தான் பள்ளிக் குழந்தைகளுக்கு, ஆனால் இன்று இருக்கும் போக்குவரத்து நெரிசல்கள் , வாகனங்கள் அதிகமின்மை மற்றும் பலதரப்பட்ட மக்கள் வேலைக்கு அவரசமாக பணிக்கு செல்லும் அதிகாலையில் இந்த நேரம் மாற்றம் மீண்டும் பெற்றோர்களுக்கு, குழந்தைகளுக்கும் பல சிரமத்தை கொடுக்கும் அதற்கு பதிலாக அரசு சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு என்று தனிப் பேருந்துகளை என்று காலையும் , மாலையும் குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகளை இயக்கலாம் மற்ற அரசு பேருந்துகள் காலையிலும் , மாலையிலும் தனியார் பேருந்துகளுக்கு இனியாக வருவாயை ஈட்டலாம் .


 பள்ளிக்குழந்தைகளும் இனிதாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்யலாம் மற்றும் படியில் பயணம் செய்யாமலும் தவிர்க்கலாம் இலவசங்கள கொடுப்பதை தவிர்த்து விட்டு, நல்ல பயனுள்ள திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்


 நன்றி - தினமலர்