Friday, March 15, 2013

ஈழத் தமிழர்களின் பிரச்னை - களத்தில் மாநிலக் கல்லூரி மாணவர்கள்

களத்தில் மாணவர்கள்... கொதிக்கும் தமிழகம்!
டி.எல்.சஞ்சீவிகுமார்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ், ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று கொந்தளிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், அதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை நள்ளிரவில் போலீஸாரை ஏவிக் கைது செய்கிறது அரசு. 'அம்மா’வின் அரசியல் அப்படி. போலீஸ் அதிகாரிகளோ, ''இதில் அரசியல் எதுவும் இல்லை. மாணவர்களின் உயிரைக் காக்கும் கடமை இந்த அரசுக்கு இருக்கிறது!'' என்று சமாளிஃபிகேஷன் தட்டுகிறார்கள்.

 கடந்த 8-ம் தேதி லயோலா கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 'திருக்குறள்’ திலீபன், ஜோ.பிரிட்டோ, ஷாஜிபாய் ஆண்டனி, மணிகண்டன், சண்முகப்ரியன், ரமேஷ், லியோ ஸ்டாலின், பால் கென்னட் ஆகிய எட்டு மாணவர்கள், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்பேடு செங்கொடித் திடலில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்கள். அனைவருமே 20 வயதுக்கு உட்பட்டவர்கள்.


'தி.மு.க-வின் பொது வேலை நிறுத்தத்தை நீர்த்துப்போகச் செய்ய ஆளும் கட்சியின் ஏற்பாடுகளில் இதுவும் ஒன்று’, 'மாணவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்க எதிர்க் கட்சிகள் செய்யும் சதி’ என்பன போன்ற ஏச்சுகளும் பேச்சுகளும் உண்ணாவிரதப் போராட்டத்தைச் சுழற்றிச் சுழற்றி அடிக்க... ''தங்களது அறப் போராட்டத்துக்கு அரசியல் தீனி போட்டுக் கொச்சைப்படுத்த வேண்டாம்!'' என்பதே மாணவர்களின் கோரிக்கையாக இருந்தது.


''முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தைச் சில அரசியல்வாதிகள் எப்படி எல்லாம் திசை திருப்பி கேவலப்படுத்தினார்கள் என்பதை நாங்கள் அறிவோம். எங்கள் போராட்டத்தையும் அப்படித் திசை திருப்பிவிட வேண்டாம்'' என்கிறார் போராட்டக் குழுவின் உறுப்பினர் ஒருவர்.


உண்ணாவிரதத்தின் மூன்றாம் நாளான ஞாயிறு பின்னிரவு 2.15 மணிக்கு சுமார் 400 ஆயுதப் படை போலீஸார் திபுதிபுவெனத் திடலுக்குள் புகுந்தார்கள். உண்ணாவிரதம் இருந்த எட்டுப் பேர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் 124 பேரை அதிரடியாக அப்புறப்படுத்திக் கைதுசெய்தார்கள். உண்ணாவிரதம் இருந்த எட்டுப் பேரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.


உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களில் ஒருவரான திலீபனிடம் பேசினேன். ''ஈழத்தில் திட்டமிட்டு லட்சக்கணக்கான தமிழ் மக்களைச் சிங்கள அரசு கொன்று குவித்தது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கொடூரம். போரின் பெயரில் உலகின் மிகப் பெரிய இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். அந்த அரசின் மீது சர்வதேச - சுதந்திரப் பொது விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணையில் இந்தியா உட்பட ஆசிய நாடுகள் எவையும் பங்கு பெறக் கூடாது. தனி ஈழம் வேண்டுமா... வேண்டாமா? என்பதுகுறித்து முடிவு செய்யும் உரிமை உலகின் எந்த ஒரு நாட்டுக்கும் இல்லை. 


 ஈழத்தில் துயரக் கடலில் மூழ்கி இருக்கும் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மட்டுமே அந்த முடிவை எடுக்கத் தகுதியானவர்கள். அந்த மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவது மட்டுமே இதற்குச் சரியான தீர்வாக அமையும். சிங்கள இனவெறி அரசின் துணைத் தூதரகத்தைத் தமிழ் மண்ணில் இருந்து அகற்ற வேண்டும். மகாராஷ்டிரா, கேரளாவில் அந்த மாநில மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்னை என்றால், உடனடியாக மத்திய அரசு தலையிட்டுத் தீர்வு காண்கிறது. 


இரண்டு பேரைச் சுட்டுக் கொன்ற இத்தாலி நாட்டின் வீரர்களை விடாமல் துரத்தி, இரண்டாம் முறையாகக் கைதுசெய்திருக்கிறது. ஆனால், தினமும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் இலங்கை ராணுவத்தைக் கண்டிக்கக்கூட இந்திய அரசுக்கு மனம் வரவில்லை. தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக அரசு சார்பில் வெளியுறவுத் துறை உருவாக்கப்பட வேண்டும்.


நாங்கள் எந்த அமைப்பின், கட்சியின் சார்பு இல்லாமல் இந்தப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம். சிலர் இறுதிப் போர் நடந்தபோது எங்கே சென்றீர்கள்? என்று கேட்கிறார்கள். அன்று நாங்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள். அன்றைய நாள் எங்களுக்கு உணர்வு மட்டுமே இருந்தது. அதை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்பு இல்லை. அதனால், அப்போது போராட முடியவில்லை. இப்போது எங்களால் முடியும் என்கிற நம்பிக்கை நிறையவே இருக்கிறது. மேற்கண்ட பிரச்னைகளுக்குத் தீர்வு காண மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதி, எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்''  என்கிறார் உறுதியான குரலில்.


இந்த நிலையில் கடந்த திங்கள் அன்று மாலை லயோலோ கல்லூரியின் பேராசிரியர்கள் சிலர் மருத்துவமனையில் இருந்த மாணவர்களைச் சந்தித்துப் பேசினார்கள். கல்லூரி நிர்வாகம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. தொடர்ந்து, உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக சொன்ன மாணவர்கள், தங்களது அறப்போராட்டம் வெவ்வேறு வடிவங்களில் தொடரும் என்றார்கள். லயோலா கல்லூரியின் மாணவர்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டாலும்கூட, இவர்கள் தொடங்கி வைத்த போராட்ட நெருப்பு தமிழகம் எங்கும் பற்றிக்கொண்டு இருக்கிறது.


சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், மாநிலக் கல்லூரி, திருச்சி தூய வளனார் கல்லூரி, மதுரை சட்டக் கல்லூரி, காரைக்குடி அழகப்பா கல்லூரி உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் மாணவர் கள் சாலை மறியல், கல்லூரி உள்ளிருப்பு, வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் கள். சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டங்களைத் தொடங்கி இருக்கிறார்கள். மாணவர்களிடம் இருக்கும் இந்த ஒற்றுமை தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்திருந்தால், என்றைக்கோ ஈழத் தமிழர்களின் பிரச்னையைத் தீர்த்திருக்கலாம்!


thanx - vikatan


readers views


1.இந்த ஒற்றுமை தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்திருந்தால், என்றைக்கோ ஈழத் தமிழர்களின் பிரச்னையைத் தீர்த்திருக்கலாம்!" - எப்படி அப்படின்னு சொல்லுங்க பார்க்கலாம்?

சும்மா உதார் விட கூடாது. என்ன பண்ண முடியும் ஒரு ஜன-நாயக அரசால்? அதுவும் அவர்கள் அரசும் முறையான தேர்தலால் தேர்ந்து எடுக்க பட்ட அரசு.

மிரட்டலாம். ஆனால் சப்பை கட்டு கட்ட பாகிஸ்தானும், சீனாவும் இருக்கும் பொழுது யாரால் என்ன செய்ய முடியும்?, அதுவும் கடல் வணிக பாதையில் முக்கிய இடத்தில் இருக்கிறது இலங்கை.

ஈரானை மிரட்டாத அமெரிக்காவா ? ஆனால் என்ன வெந்தது? ஒண்றும் இல்லையே. தமிழக அரசா ராணுவத்தை அனுப்ப முடியும்?

ஐ.நா ல மிரட்ட முடியுமா என்ன? சீனாவுக்கு வீட்டோ உரிமை இருக்கு. பின்னே நாலு நாள் பட்டினி கிடந்தா என்ன சாதிக்க முடியும்?

சும்மா கட்டுரை எழுதினா போதுமா? போஸ்டர் அடிச்ச போதுமா? ரெண்டு தலைவர், ஜெஜெ தீர்மானம் போட்ட போதுமா - அதனை அமல் படுத்துவது எப்படி?

உறவே வேண்டாம் என்று முறித்து கொள்ள முடியாது - அதுவும் கைக்கு எட்டும் தூரத்தில் ஒரு எதிரியாக.

துணிவாக ஒரு ராணுவத்தை அனுப்பி (தலிபானை ஒழித்தது போல, சதாமை ஒழித்தது போல) இலங்கையை ஆக்கிரமிக்க முடியுமா என்ன? அல்லது மீண்டும் "உள்ளடி" வேலைகளை இந்திரா காந்தி போல ஆரம்பிக்கத்தான் முடியுமா? இந்திர ஆரம்பித்த "உள்ளடி" அதில் இந்தியா தாரை வார்த்த பணத்தை கொள்ளை அடித்து ஓடிய "புலம் பெயர்ந்த பேடிகள்" எத்தனை பேர். அட அந்த "உள்ளடி" மூலம் உருவான ஒரு தலிபான் தானே புலிகள். அவர்களே அதே இந்திய ராணுவத்தை தாக்கி அழிக்க முற்பட்ட பின் - ஏன் இந்திய மீண்டும் தலைஇடும்?

ஆக எப்படி பார்த்தாலும் ஒண்ணும் பண்ண முடியாது. ஏதோ கோவத்தை போக்க உண்ணாவிரதம் அப்படின்னு இருந்துட்டு ஐ.டி கம்பெனில அதே அமெரிக்க காரனுக்கு கறிவேப்பில்லை கொத்தமல்லி கணக்கு எழுத போறவங்க தானே பெரும்பான்மையோர் 


2.எனக்கு தெரிந்து சமீப காலத்தில் நடக்கும் அறவழி போராட்டம் எந்த அரசாங்கத்திடம் விளைவையும் எற்படுத்துவதில்லையோ என்று தோன்றுகிறது.


3. ஈழப் போர் நடந்த 2008 - 2009 வருடங்களில் எங்கே போனீர்கள்" என்று கேட்பவர்கள் அப்போது எங்கே போய் என்னென்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்று முதலில் சொல்லட்டும்.

அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட தேவை இல்லை. ஈழ போராட்டத்தில் ஒரு "திலீபன்" உண்ணாவிரதம் சோகமாக முடிந்தாலும் ஒரு திருப்புமுனையாக இருந்தது. இப்போது லயோலா கல்லூரி மாணவர்கள் போராட்டம் நல்லபடி முடிந்தாலும் இதுவும் ஒரு திருப்புமுனை ஆக இருக்கும்

4. இவர்களின் போராட்டம் வெற்றி பெறுகிறதோ,இல்லையோ.......இந்த மாணவர்களின் உணர்வு மதிக்கப் பட வேண்டும். ஆதரவு தெரிவிக்கிறேன் என்று நுழையும் அரசியல்வாதிகளை, வைகோ உள்பட, இவர்கள் தள்ளி வைத்து விட்டு தனியொரு மாணவ இயக்கமாக இதை எடுத்துச் செல்லட்டும். ஏனென்றால் இவர்கள் போராட இன்னும் பல விஷயங்கள் இங்கு காத்துக் கிடக்கின்றன.

Thursday, March 14, 2013

'டெசோ அல்லது புஸ்ஸோ’ -தமிழினத் தலைவர் நாடகம்

அன்று பராசக்தி... இன்று 'பல்டி'யேசக்தி!

சாந்தா அல்லது பழனியப்பன்’ - இது கருணாநிதி  போட்ட முதல் நாடகம். 'டெசோ அல்லது புஸ்ஸோ’ - இது கருணாநிதி நடத்த ஆரம்பித்திருக்கும் இறுதி நாடகம். கோபாலபுரம் வீட்டு வாசலில் முதலமைச்சர் கார் வந்து நிற்க ஆரம்பித்தால், 'தமிழினத் தலைவர்’ நாற்காலியைப் புறவாசலில் கொண்டுபோய்ப் போட்டுவிடுவதும், அந்தக் கார் காணாமல் போனால், தூசி தட்டி 'தமிழினத் தலைவர்’ நாற்காலியை எடுத்துவந்து உட்காருவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை. இந்த நூற்றாண்டின் வரலாற்றுச் சோகமான ஈழத் தமிழர் வாழ்க்கையைவைத்தும் அவர் இப்படி நாடகம் ஆடுவதைத் தான் பார்க்கச் சகிக்கவில்லை.


ஈழத்தில் கொடுமை நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிடவில்லை. மூன்று ஆண்டுகளே முழுமையாக முடியவில்லை. அந்த அவலம் அரங்கேறியபோது, தமிழ்நாட்டின் அதிகாரம் பொருந்திய நாற்காலியில் அமைச்சர்களோடு அமர்ந்து நாளரு பாராட்டு விழா, நித்தம் ஒரு கொண்டாட்டம், கவர்ச்சி ஆட்டம்பாட்டங்களைக் கண்டுகளித்தவர் கருணாநிதி. அப்போது அவரது கட்சியின் தயவை நம்பித்தான் மத்தியில் காங்கிரஸ் அரசாங்கம் இருந்தது. மன்மோகன், சோனியா, பிரணாப் முகர்ஜி ஆகிய மூன்று அதிகார மையங்களிடமும் அரை மணி நேரத்தில் தொடர்புகொண்டு, தான் நினைத்ததைச் சொல்லும் சக்தி கருணாநிதிக்கு இருந்தது. 


அப்போதெல்லாம் கேளாக் காதினராய், பாராக் கண்ணுடையவராய் இருந்துவிட்டு, 'என்னது... சிவாஜி செத்துட்டாரா?’ என்று மறதி நாயகன் கேட்பதுபோல, இப்போது 'ஈழத்தில் எவ்வளவு அவலம் பார்த்தாயா உடன்பிறப்பே!’ என்று கேட்பது சினிமாவுக்கு வேண்டுமானால் சிரிப்பைத் தரலாம். அரசியலில் இதற்குப் பெயர் துரோகம்... பச்சைத் துரோகம்!


முதலமைச்சராக இருக்கும்போது ஒரு பேச்சு, எதிர்க் கட்சி ஆனதும் மறுபேச்சு. நரம்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டு மானாலும் வளையும் என்பார் கள். ஆனால், இப்படியெல்லாம் வளைய முடியுமா என்று கருணாநிதியின் அறிக்கை களைப் பார்த்து அதிர்ச்சியடை யத்தான் வேண்டும். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக கருணாநிதி எதையெல்லாம் சொல்லிவந்தாரோ, அதை எல்லாம் கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக உல்டா அடிக்க ஆரம்பித்திருக்கிறார்.


''இலங்கையை சர்வாதிகாரப் பாதையில் செலுத்திக்கொண்டு இருக்கும் ராஜபக்ஷேவை, மனித உரிமைகள், மனிதநேயம் ஆகியவற்றுக்கு எதிராகப் பல்வேறு வகையான போர்க் குற்றங்களைப் புரிந்த சர்வதேசக் குற்றவாளி என உலக நாடுகள் பார்க்கின்றன. அவர் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் அளவுக்குப் பேசி இருக்கிறார்.



 சிங்களப் பேரினவாதத்தின் சின்னம் ராஜபக்ஷே. நமது இந்தியப் பேரரசு தற்போதாவது விழித்துக்கொண்டு ராஜபக்ஷே வின் சுய உருவத்தையும், குணத்தையும், நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று இப்போது அறிக்கைவிட்ட கருணாநிதிதான் தமிழ்நாடு சட்டசபையில் 'முதல்வராக’ இருந்தபோது, ''நாம் தமிழர்களைக் காப்பாற்ற அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளமாக்கப் பாடுபடப்போகிறோமா? 


அல்லது ராஜபக்ஷேவை குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்போகிறோமா? வாழ்வா தாரத்தைப் பெருக்க வேண்டுமானால், இன்றைக்கு இருக்கிற சிங்கள அரசின் மூலமாகத்தான் அதைச் செய்ய முடியும். அங்கே இருக்கிற தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், நாம் இங்கே ஆத்திரப்பட்டோ அல்லது வெறுப்பு உணர்வுடனோ அங்குள்ள சிங்கள இனத்தினரைப் பற்றி ஒன்றைச் சொல்லி, அது வேறு விதமான விளைவுகளை உண்டாக்கினால் நல்லதல்ல. இலங்கையிலே உள்ள தமிழனைக் காப்பாற்ற வேண்டுமானால், சிங்களவர்கள் கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும்'' என்று சொல்லிச் சமாளித்தவர்.
லட்சக்கணக்கான தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டது மே மாதம் 17-ம் தேதி. கருணாநிதி இப்படிச் சொன்னது ஜூலை 1. லட்சம் பேர் செத்ததைப் பார்த்து ஆத்திரம் வரவில்லை. அனுதாபம் கூட வரவில்லை. 'கோபப்படாதே’ என்று ஈழ தாகத்தின் வேரில் வெந்நீர் ஊற்றினார். அதற்கு ஒரே காரணம்தான். அதையும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் அவர் ஒப்புக்கொண்டார். 'இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் நிலைக்கு மாறாக நடந்திருந்தால், என் ஆட்சியையே இழக்க வேண்டி வந்திருக்கும்’ என்பது பட்டவர்த் தனமான அவரது வாக்குமூலம். ''பதவி என் தோளில் கிடக்கும் துண்டு, கொள்கைதான் வேட்டி'' என்று பேசியது எல்லாம் ஊருக்குத்தானோ?!


''இலங்கை அரசு அறிவித்த போர் நிறுத்தத்தை உண்மைஎன்று நானும் நம்பி, இந்திய அரசும் அதை நம்பி எனக்குத் தெரிவித்ததால், உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றேன்'' என்று புதுக்கதை விட ஆரம்பித்துள்ளார் கருணாநிதி. அவரை இத்தனை சுலபமாக ஏமாற்ற முடியும் என்பதை அவரது எதிரிகளும் ஏற்க மாட்டார்கள். 



அவர் அப்போதும் இப்போதும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிறார் என்பதே உண்மை. 'போரை நிறுத்திவிட்டோம்’ என்று ராஜபக்ஷே சொன்னதை, ப.சிதம்பரம் நம்பலாம். ப.சி. சொன்னதை மு.க-வும் நம்பலாம். தவறில்லை. ''அன்றைய தினம்தான் எட்டு இடங்களில் கொத்துக் குண்டுகளைப் போட் டார்கள்'' என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப் பாளர் நடேசன், பி.பி.சி. வானொலியில் அன்று இரவே கதறினாரே... அப்போது கருணாநிதி அளித்த பதில் என்ன? கருணாநிதியின் அறிவிப்பைப் பார்த்துதான் 'பாதுகாப்பான இடத்துக்கு’ அப்பாவி மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அந்த இடத்தில் குண்டு கள் போடப்பட்டு கொலைகள் நடந்தன. கருணாநிதி சொன்னதை நம்பியதால் தமிழர்கள் உயிரைவிட்டார்கள். ஆனால், இப்போது கருணாநிதி அறிக்கைவிட்டு ஊதுபத்தி ஏற்றுகிறார்.



''நீங்கள் போர் நிறுத்தம் செய்துவிட்டதாகச் சொல்லி  உண்ணாவிரத்தத்தை முடித்துவிட்டீர்கள். ஆனால், அன்றைய தினம்கூட குண்டுபோட்டுள்ளார்களே?'' என்று மனசாட்சிஉள்ள ஒரு பத்திரிகையாளன் கேட்டபோது, ''மழைவிட்டும் தூவானம் தொடர்வது வழக்கம்தான். இதைப் போலத்தான் இலங்கையிலே இப்போதும் தொடரும் விமானத் தாக்குதல்களைக் கருத வேண்டும்'' என்று கருணாநிதி சொன்ன வாசகம், மிகக் கொடூரமான சினிமா வில்லன்கள்கூடப் பேசாத வசனம். உரிமை மனோபாவம் கொண்டவன் உடலில் உடைகூட இருக்கக் கூடாது என்று நிர்வாணப்படுத்திக் கண்ணைக் கட்டி சிட்டுக்குருவிகளைப் போல சுட்டுக் கொன்ற காட்சிகளைப் போர் முடிந்த நான்கா வது மாதம் சேனல் 4 வெளிப்படுத்தியது. 



'கொன்றுவிட்டார் கள்... கொடுமைப்படுத்தினார் கள்... சித்ரவதை செய்தார்கள்’ என்று அதுவரை சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள். முதன்முதலாக அந்த வீடியோ காட்சிகள், அம்பலப்படுத்தி அதிரவைத்தன. அப்போதும் 'முதல்வர்’ கருணாநிதி, ''இந்தக் காட்சிகள் பழையவை. இப்போது எடுக்கப்பட்டவை அல்ல'' என்று எல்லாம் தெரிந்தவராகச் சொன்னார்.



 ராஜ பக்ஷேவின் கண்துடைப்பு நாடகத்தில் தானும் ஒரு பாத்திர மாகப் பங்கேற்கும் வகையில் 10 பேரை அனுப்பிவைத்தார் கருணாநிதி. அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்கும் தினத்திலும், ''போரின்போதுதான் சித்ரவதை கள் நடந்தன. இப்போது அல்ல. இப்போது தமிழர்கள் யாரும் கடத்திச் செல்லப்படுவது இல்லை'' என்றார். அதாவது, இலங்கை அரசாங்கத்தை, ராஜபக்ஷேவைக் குற்றம்சாட்டி யார் கேள்வி கேட்டாலும் கருணாநிதிக்குச் சுருக்கென்றது. அதனால்தான் ராஜபக்ஷேவும் மன்மோகனும் பதில் சொல்ல வேண்டிய கேள்விகளுக்கு எல்லாம் கருணா நிதியே வலியப் போய் பதில் சொன்னார். இந்த அதீத ஆர்வத்துக்கு ஒரு பின்னணி இருந்தது. இலங்கையில் நடந்த அனைத்தும் அவருக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டன.


''இறுதிப் போர் நடந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு குழுவை அமைத்தோம். எங்கள் நாட்டின் சார்பில் நானும் பசில் ராஜபக்ஷே, லலித் வீரதுங்க ஆகிய மூவரும் இடம்பெற்றோம்.



இந்தியாவின் சார்பில் எம்.கே.நாராயணன், சிவசங்கர்மேனன், விஜய்சிங் ஆகிய மூவரும் இருந்தார்கள்'' என்று கோத்த பய ராஜபக்ஷே சொன்னார். போர் நடந்த காலகட்டத்தில் கருணாநிதியை எம்.கே.நாராயணன் எத்தனையோ தடவை சந்தித்தார். இலங்கை போய்விட்டு இங்கே வருவார். அல்லது கருணாநிதியைப் பார்த்துவிட்டு அங்கே போவார். போரை வழி நடத்திய ஒருவர் தன்னை அடிக்கடி வந்து சந்திக்கிறாரே என்று அப்போதாவது கருணாநிதிக்குக் குற்றவுணர்ச்சி வந்திருக்க வேண்டும். 'போர் நிறுத்தம் செய்வதற்கு இந்தியா முயற்சிக் காவிட்டால், உங்களுக்குத் தரும் ஆதரவை வாபஸ் பெறுவேன்’ என்று மானஸ்தர் சொல்லி இருக்க வேண்டும்.
''போர் நிறுத்தம் செய்யச் சொல்வது எங்களது வேலை அல்ல'' என்று கருணாநிதி வீட்டு வாசலில் நின்றுகொண்டு அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொன்னபோதாவது, கருணாநிதிக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். ''அங்கே போர் முடிவுக்கு வரப்போகிறது'' என்று சந்தோஷ அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பிரணாப் வெளியிட்டபோதாவது, கோபம் வந்திருக்க வேண்டும். ''ராஜபக்ஷே என்ன முடிவெடுத்தாலும் இந்தியா வழக்கம்போல ஆதரிக்கும். இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என்று ராஜபக்ஷே சொன்னது ஒருவகையில் சரியானதுதான்'' என்று சிவசங்கர் மேனன் சொன்னபோதாவது, அவமானம் வந்திருக்க வேண்டும். இத்தனை கழுத்தறுப்புகளையும் மறைப்பதற்கு டெசோ ஷோவை கருணாநிதி இப்போது ஆரம்பிக்கிறார்.



போர் உச்சகட்டத்தில் இருந்த போது, ''முதல்வர் கருணாநிதி யின் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து'' என்று சென்னை போலீஸ் கமிஷனரை வைத்து அறிக்கை விடவைத்து, முத்துக்குமார் உள்ளிட்ட 17 தமிழ்த் தியாகிகள் தங்களது தேகங்களை ஈழத் தாய்க்கு அர்ப்பணித்தபோது வேடிக்கை பார்த்ததுடன், ''அவர்கள் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கவில்லை... பொண்டாட்டியிடம் தகராறு. அதனால் தீக்குளித்தனர்'' என்று கொச்சைப்படுத்தும் காரியத்தை போலீஸ்காரர்களை வைத்து முடுக்கிவிட்டு, தமிழ்நாடு ஒரே உணர்வில் இருக்கிறது என்பதைக் காட்ட கடையடைப்பு நடத்தப் பட்டபோது, ''இது சட்டப்படி குற்றம். கடையை அடைக்கச் சொன்னால் தேசப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்வோம்'' என்று மிரட்டல் விடுத்து,  பிரபாகரன் படத்தைப் பார்த்தாலே கிழிக்கும் வேலையை போலீஸாருக்குக் கொடுத்து... இப்படிச் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் இப்போது பரிகாரம் தேட நினைக்கிறார் கருணாநிதி.



 
சென்னையில் இருந்த இலங் கைத் தூதரக வட்டாரத்துக்கும் அன்றைய தி.மு.க. ஆட்சியின் போலீஸ் உளவுத் துறைக் கும் இருந்த பிரிக்க முடியாத பாசத்தை கருணாநிதி உணரத் தவறியதன் விளைவுதான், இன்று நித்தமும் உடன்பிறப்பு களுக்குக் கடிதம் எழுதியாக வேண்டிய அவஸ்தையைக் கொடுக்கிறது. உயிரோடு வந்த பாட்டி பார்வதியை, அநாதை யாக வானத்தில் திருப்பி அனுப்பிய சோகத்தை பேரன் பாலச்சந்திரன் படம் பார்த்து அறிக்கை வெளியிட்டுப் போக்கியாக வேண்டியிருக் கிறது.


 ''பாவிகளின் கொலை வெறிக்குப் பலியான பாலகன் பாலச்சந்திரன்'' என்று இன்று கண்ணீர்க் கவிதை வடிப்பவர், ''விடுதலைப் புலிகள் கல்லறை கள் கட்டுவதில் காலம் கழித்து விட்டார்கள்'' என்று கிண்டல் அடித்ததும், ''இன்று அனை வரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்'' என்பவர், அன்று, ''ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கடல் வழியாகப் போய் போராட வேண்டியதுதானே. நான் கரையில் இருந்து கண்டுகளிப்பேன்'' என்று வயிற்றெரிச் சலைக் கொட்டியதும் தமிழன் மறக்கக் கூடாத வாக்குமூலங்கள்.




ஊழல் வழக்கில் ஏ.சி முருகேசன் தன் கையைப் பிடித்துத் தூக்கியதால் ஏற்பட்ட சிவப்புக் காய்ப்பை 100 வீடியோ கேமராக்களுக்கு முன்னால் காட்ட வேண்டுமானால், பாளையங்கோட்டை சிறையில் பல்லி ஓடியதையே 50 ஆண்டுகள் சொல்ல முடியுமானால், வளரும் கருவை வயிற்றில் இருந்து எடுத்துப் பொசுக்கிய காட்டுமிராண்டிக் கூட்டத்தைப் பற்றி இன்னும் எத்தனை ஆண்டுகள் சொல்லித் தொலைத்தாலும் ஆத்திரம் அடங்காது. அந்த சோகத்தில்கூட அரசியல் செய்ய நினைப்பது, அந்தக் கொடூரத்தை விடக் கொடூரமானது. 


காங்கிரஸை மிரட்டுவதற்கு, அல்லது காங்கிரஸ் தங்களை விரட்டிவிட்டால் ஈழ ஆதரவுக் கட்சிகளைக்கொண்ட கூட்டணி அமைப்பதற்கு, அதுவும் இல்லா விட்டால் ஈழப் பிரச்னையை எதிர் அணியினர் பயன்படுத்தாமல் இருப்பதற்கு... என்று சாவு வீட்டிலும் லாபநஷ்டங்களுக்கு, கடல் தாண்டிய சொந்தங்களின் சோகத்தை முதலீடு ஆக்குவது ஆபத்தானது. தன்னுடைய கடந்த காலத் தவறுகளை மறைக்க இன்றைக்கு கருணாநிதிக்குத் தேவை முகமூடி. ஏற்கெனவே வீரமணி, திருமாவளவன் ஆகிய இருவரும் சிக்கிவிட்டார்கள். பெரியாரைக் காப்பாற்றுவதைவிட, அம்பேத்கர் புகழைப் பரப்புவதைவிட இவர்களுக்கு கருணாநிதியை நியாயப்படுத்துவதே முழு நேரத் தொழிலாக மாறிவிட்டது. ''ஓட்டுக்காக எவனும் எதையும் செய்வான். யார் காலையும் நக்குவான். இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை!'' என்று தந்தை பெரியார் சொன்னார்.

அதற்காக, ஈழத் தமிழர் பிணங்களையுமா?

thanx - vikatan 

பரதேசி

அதர்வா, வேதிகா, தன்ஷிகா மற்றும் பலர் நடிக்க பாலா இயக்கி இருக்கும் படம் பரதேசி. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, செழியன் ஒளிப்பதிவு செய்ய, வைரமுத்து பாடல்களை எழுதி இருக்கிறார். படத்தினை எழுதி, தயாரித்து இருக்கிறார் பாலா.

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் என வித்தியாசமான கதைகளங்களை எதார்த்தமாக படமாக்கி வெற்றிக் கண்டவர் பாலா. அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த அவன் இவன் திரைப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் மீண்டும் தனது எதார்த்த களத்திற்கே திரும்பி இருக்கிறார் பாலா.

பரதேசி திரைப்படம், 'எரியும் பனிக்காடு' என்ற நாவலை தழுவி, அதில் கொஞ்சம் தனது கற்பனைகளை புகுத்தி இருக்கிறார் பாலா. இப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை,  மானாமதுரை, மூணாறு, பெரியகுளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.

பஞ்சம் பிழைக்க தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற பரதேசி கூட்டத்தினரின் கதையினை எதார்த்தமாக படமாக்கி இருக்கிறார். பரதேசி படம் குறித்து பாலா "'நீங்கள் எதிர்பார்க்காத விஷயங்கள்தான் இருக்கும். கிட்டத்தட்ட என்னைத் தவிர, கேமராமேன் செழியன் முதல் எடிட்டர் கிஷோர் வரைக்கும் எல்லோரும் இதில் புதுசு.

முதல்முறையா என் படத்தில் வைரமுத்து பாடல்கள், ஜி.வி.பிரகாஷ் இசை. 25 வயசுக்கு 25 படங்கள் முடிச்சு நிக்கிறான் ஜி.வி.பிரகாஷ். அவனுக்குள்ள இருக்கிற பணிவும் பக்குவமும் பிரமிக்கவைக்குது. 'பரதேசி’யில பிரமாதப்படுத்தி இருக்கான்.

வைரமுத்து சார்... ஜி.வி.பிரகாஷின் வயசைக் காட்டிலும் கவிஞரின் அனுபவத்துக்கு வயசு பெருசு. அதுவும் இந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொண்ணும் கதை பேசணும். மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்துல கெடந்தவன்தான் அதை எழுத முடியும். மொத்தப் படத்தையும் முடிச்சுட்டு வந்து, எடிட் பண்ணிப் போட்டுக் காட்டித்தான் பாடல்கள் கேட்டேன். மூணு மாசமாப் போராடி எடுத்துட்டு வந்த கதைக்கு மூணே வாரத்தில் வலி கூட்டிட்டார்." என்று தெரிவித்து இருக்கிறார்.

படப்பிடிப்பு துவங்கியவுடன், படத்தினைப் பற்றிய எந்த ஒரு செய்தியையும், புகைப்படத்தினையும் வெளியே வராமல் பார்த்துக் கொண்டார்கள். படத்தின் FIRST LOOK புகைப்படங்கள், டிரெய்லர் என பார்த்தவுடன் எதிர்ப்பார்ப்பு எகிறியது.

அதுமட்டுமன்றி, இப்படத்தின் சில காட்சிகளுக்காக சில ஏக்கர் தேயிலை தோட்டத்தினை வாங்கி, அங்கு செட் போட்டு படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள். 1930ல் நடைபெறும் கதை என்பதால் படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார்கள். படத்தில் வரும் ஒரு காட்சிக்காக மின்கம்பம், வீடு என எதுவுமே இல்லாத இடத்தினை தேடி அங்கு 6 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.

அதர்வா, வேதிகா, தன்ஷிகா என அனைவருக்கும் விருது கிடைக்கும் என்று தெரிவித்து இருக்கிறார் பாலா. அதுமட்டுமன்றி இப்படத்தினைப் பார்த்த இந்தியின் முன்னணி இயக்குனர் அனுராக் கைஷ்யாப் " பாலாவின் 'பரதேசி' படத்தினை பார்த்தேன். நெகிழ்ந்து விட்டேன்.. அவரது இயக்கத்தில் வெளியான படங்களில் பெஸ்ட் இது தான்" என்று தெரிவித்தோடு, வட இந்தியாவில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பரதேசி படத்தினை வெளியிட இருக்கிறார்.

பரதேசி வெளிவரும் முன்பே கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி இருக்கிறது. நீண்ட நாட்களாக தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வந்த பரதேசி படத்தினை JSK பிலிம்ஸ் நிறுவனம் வாங்கி மார்ச் 15ம் தேதி வெளிவரும் என அறிவித்து இருக்கிறது.

முதன் முறையாக பரதேசி படத்தினை விளம்பரப்படுத்த அனைத்து காட்சிகள் உருவான விதத்தினையும் படமாக்கி இருக்கிறாராம் பாலா. அதனை வைத்து படத்தினை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். 'பரதேசி' படத்திற்காக பாலாவுக்கு தேசிய விருது நிச்சயம் என்று சொல்கிறது கோலிவுட்.

thanx - vikatan

எம்.ஜி.ஆர் VS மருத்துவர் ச.ராமதாஸ்


காரிலேயே காத்துக் கிடந்தோம்!

மருத்துவர் .ராமதாஸ்

நான் மறக்க முடியாத மற்றொரு போராட்டம் கும்மிடிப்பூண்டி இரயில் மறியல் போராட்டமாகும். 500 பெண்கள் உட்பட 4000 வன்னியர் சங்கத் தொண்டர்கள் அரிசி ஆலையில் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக இரவே தங்க வைக்கப்பட்டிருந்தனர். விடியற்காலை 4 மணிக்கு இரயில் நிறுத்தப் போராட்டம் கும்மிடிப்பூண்டி இரயில் நிலையத்தில் தொடங்கியது


 காலை 7 மணிக்கு இரயில் மறியலில் ஈடுபட்ட வன்னியர் சங்கத் தொண்டர்களைத் தடியால் அடித்தும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கலைக்க முயற்சித்தனர். ஆனால், மக்கள் கலைய மறுத்ததால் துப்பாக்கிச் சூடு நடந்தது. 3 பேருக்கு மேல் குண்டு பாந்து சென்னை பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டியிலிருந்து சூளூர்பேட்டைவரை காலை 4 மணியிலிருந்து 8 1/2 மணிவரை வந்த இரயில்கள் அப்படியே நகரமுடியாமல் நின்று கொண்டிருந்தன. துப்பாக்கிச்சூடு நடந்த பிறகுதான் மக்கள் கலைந்து ஓட இரயில்கள் நகரத் தொடங்கின.
ஒரு வாரம் அந்தப் பகுதியிலுள்ள கிராமங்களில் காவல் துறையினருடைய காட்டு தர்பார் அரங்கேறியது. ஆண்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு, பெண்களையும் அடித்து கையில் வைத்துக் கொண்டிருந்த குழந்தைகளையும் தூக்கி வீசினர். கண்ணில் தென்பட்ட மாடுகளைக்கூட வெறிபிடித்து அடித்து அவர்களுடைய கோபத்தைத் தணித்துக் கொண்டனர். நூற்றுக்கணக்கான ஆண்கள் கைது செய்யப்பட்டு பல்வேறு வழக்குகள் அவர்கள் மீது போடப்பட்டன.

சென்னை பேசின்பிரிட்ஜ் இரயில் நிறுத்தப் போராட்டத்தில் கைதாகி பிறகு ஜாமீனில் நான் வெளிவந்தபோது என்னுடைய வீட்டுக்குக்கூடச் செல்லாமல், நேரே கும்மிடிப்பூண்டிக்குச் சென்று கிராமம் கிராமமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினேன்.
டிசம்பர் 19 போராட்டத்தில் நான் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டபோது என்னை விடுதலை செய்யக் கோரி டிசம்பர் 24 ந்தேதி அன்று கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் இரவு 12 மணியிலிருந்து வன்னியர் சங்கத் தொண்டர்கள் பத்தாயிரம் பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்குக் காலை 11 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் தட்டானோடை செல்வராஜ் என்ற இளைஞருக்கு மார்பில் குண்டு பாய்ந்து கடலூர் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லை என்று சொல்லி சென்னைப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சென்னைப் பொது மருத்துவமனையில் டாக்டர் பஞ்சமூர்த்தி அறுவை சிகிச்சை செய்து குண்டுகளை அகற்றினார். இன்னும் ஒரு குண்டு விலாப் பக்கத்தில் அகற்ற முடியாமல் அதனோடேயே அவர் இன்றும் வாழ்ந்து வருகிறார். மேலும் 3 பேருக்கு கால்களில் குண்டடிபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
செல்வராஜ் சென்னைப் பொது மருத்துவனையில் சிகிச்சை பெற்றபோது 28.12.1986 சென்னை மத்திய சிறைச்சாலையிலிருந்து நான் அவருக்கு எழுதிய ஒரு கடிதத்தை இன்றும் அவர் வைத்துக் கொண்டிருக்கிறார். அந்தக் கடிதத்தை வாசகர்களுடைய பார்வைக்கு வைத்துள்ளேன்.
மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வெளியில் வந்த பிறகு திண்டிவனத்தில் உள்ள என் வீட்டில் ஒரு மாதம் அவரைத் தங்க வைத்து அவருக்கு மேலும் சிகிச்சை அளித்தேன்.
15.3.1986 அன்று வகுப்புவாரி ஒதுக்கீட்டுக் கோரிக்கையை வலியுறுத்தி என் தலைமையில் கல்லூரி மாணவர்களுடன் முதுகிலும், நெஞ்சிலும், நெற்றியிலும் பட்டை நாமம் போட்டுக்கொண்டு கோட்டையை நோக்கி நடந்த பட்டை நாமப் பட்டினிப் போராட்டமும் இட ஒதுக்கீட்டுக்காக நடத்திய போராட்டத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.

1980இல் இருந்து 1987வரை அப்பொழுது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரைச் சந்தித்து மனுக்கள் கொடுப்பதற்கு பலமுறை முயன்றேன். ஆயினும் அவரைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு ஏற்படவில்லை.
ஒரு முதல்வருக்கு, ஒரு நடிகையின் கணவர் மறைவுக்கு அடுத்த மாநிலத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தவும், ஒரு நடிகரின் தாயாரின் மணிவிழாவில் கலந்து கொண்டு வாழ்த்தவும், ஒரு நடிகரின் சொந்தப் படத்தைத் தொடங்கிவைத்து வாழ்த்தவும், ஒரு நடிகையின் மகன் பூணூல் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தவும், ஒரு நடிகரின் தங்கை திருமணத்துக்காகக் கோவை சென்று வாழ்த்தவும், நேரம் இருக்கிறது.
ஆனால், சமுதாயத்தில் பல நூற்றாண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட வெகு மக்களுடைய பிரதிநிதிகளைச் சந்திக்க முதல்வருக்கு நேரம் இல்லைஎன்று அறிக்கைகளும் கருத்துப்படங்களும் தொடர்ந்துகனல்பத்திரிகையில் வெளியிடப்பட்டன.
அப்பொழுது எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இருந்த பண்ருட்டி இராமச்சந்திரனைச் சந்தித்து எம்.ஜி.ஆரைச் சந்தித்துப் பேச ஒரு பத்து நிமிடம் ஏற்பாடு செய்யுங்கள் என்று பலமுறை கூறியும், அவர் செய்கிறேன் என்று சொல்லி சந்திப்பை ஏற்படுத்தத் தவறிவிட்டார். ஒருமுறை பண்ருட்டியார் அவருடைய வீட்டுக்கு என்னை வரச் சொல்லி நானும் தீரனும் காரிலேயே காத்துக் கிடந்தோம். காரிலேயே காத்திருக்க வேண்டும் என்று அவருடைய பணியாளர் எங்களுக்குக் கட்டளையிட காரிலேயே காத்திருந்தோம்.

பார்வையாளர்கள் அனைவரும் அமைச்சரைப் பார்த்துச் சென்ற பிறகே எங்களை பணியாளர் அமைச்சரைப் பார்க்க அழைத்துச் சென்றார். ஏற்கெனவே அமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தியதற்கு ஏற்ப எம்.ஜி.ஆரைப் பார்க்கும் பொழுது கொடுக்க வேண்டிய கோரிக்கை மனு எப்படி இருக்க வேண்டும் என்பதை அவரிடம் காட்டினோம்.


 நான், குகுகு பொதுச் செயலாளர் .கே.நடராசன், தீரன் மூன்று பேரும் மெரினா கடற்கரையில் உட்கார்ந்து தயாரித்த அந்தக் கோரிக்கை மனுவை பண்ருட்டியாரிடம் காட்டினோம். அவர்நான் தேதி வாங்கித் தருகிறேன்என்று எங்களுக்கு உறுதி அளித்து வழியனுப்பி வைத்தார். ஆனால் 1987இல் தொடர் சாலை மறியல் நடக்கும்வரை எம்.ஜி.ஆரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.
இதே பண்ருட்டி இராமச்சந்திரன், தான் அமைச்சராக இருந்தபோது தன்னுடைய தொகுதியான பண்ருட்டிக்குச் செல்லும் வழியில் சாலையோரத்தில் வண்டியை நிறுத்தினார். அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு படிக்காத சிறுவன் ஓடிவந்து, டாக்டர் அய்யா கேட்கிற 20 சதவிகிதத்தைக் கொடுக்க வேண்டியதுதானே" என்று கோபமாகக் கேட்டதாகப் பாட்டாளி மக்கள் கட்சியில் பண்ருட்டியார் சேர்ந்த காலத்தில் கூட்டங்களில் இதுபற்றிச் சொல்ல தவறியதில்லை. அந்த அளவு வன்னியர் சங்கத்தினுடைய இட ஒதுக்கீடு கோரிக்கை மாடு மேய்த்த சிறுவனையும் சென்றடைந்தது.


thanx - kalki