Showing posts with label பெண்கள் அடையாளம். Show all posts
Showing posts with label பெண்கள் அடையாளம். Show all posts

Thursday, March 20, 2014

ஆணின் “வரைபடத்தில்” பெண் எனும் பயணி (கோவை)

a

வீடு, புற வெளி, பெண் அடையாளம்

 
ஒரு எழுத்தாக்கத்தைப் பாலின வகைப்பட்ட எழுத்துச் செயல்பாடாக எழுத்தாளரின் பால் எனும் சாராம்சத்தை வெளிக்காட்டுவதாகப் பார்க்க முடியாது. 


மேலும் பெண் எழுத்தாளரின் ஆக்கம் பெண்சார்பு நிலைகளோடு செயல்படும், ஆண் எழுத்தாளரின் ஆக்கம் அப்படியில்லை என்று பால் இருமையைப் படைப்பின் இருமையாக மாற்றி பொதுப்படையாக நிறுவுவதும் சரியான அணுகுமுறை அல்ல. பெண் உணர்வுகளை, சார்பு நிலைகளை முன்வைக்கிற ஆண் எழுத்தாளர்களின் கதைகள் (அரிதாகவேனும்) நம்மிடமிருக்கின்றன. என்றாலும் பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளை மட்டும் இங்கே ஆய்வுக்கு எடுத்துக்கொள்வதற்கு சில முகாந்திரங்கள் உண்டு. 



முதலில், சில வருடங்களாகத்தான் பெண் எழுத்தாளர்களின் எழுத்துகள் தமிழ் இலக்கியச் சூழலில் பேசுபொருளாகியிருக்கின்றன, இன்னமும்கூடப் பிரபல ஆண் இலக்கியவாதிகள் தருகிற மைய நீரோட்டத் தரவரிசையில் பெண் எழுத்தாளர்கள் இடம்பெறுதல் அபூர்வமாகவே இருக்கிறது. பெண் எழுத்தாளர்களின் எழுத்து குறித்த, பெண்ணியம் குறித்த தீவிர ஆய்வுகள், வாசிப்புகள், விமர்சனங்கள் பெரிதும் நம்மிடையே இல்லை. 


எனவே, அரசியல் நிலைப்பாடாகப் பெண்களின் எழுத்தை முன்நிறுத்த வேண்டிய வேண்டிய தேவையிருக்கிறது. 


மேலும், எழுத்தாக்கத்தில் எழுத்தாளரின் பால் என்பதன் அடையாளத்துக்கு இடமில்லை என்றாலும், வாசகர் அர்த்தப்படுத்திக்கொள்ளும் வழிமுறை களில் ஒரு முக்கியமான சட்டகமாக எழுத்தாளரின் பால் செயல்படுகிறது. உதாரணமாக, பெண் ஒடுக்குமுறையை, குடும்பத்தின் ஆண் செலுத்தும் வன்முறை, பெண் பாலியல் போன்றவை இடம்பெறும் ஆக்கம் ஆண் எழுத்தாளரைவிடப் பெண் எழுத்தாளரிடமிருந்து வரும்போது கூடுதல் முக்கியத்துவத்தை, ஈடுபாட்டை வாசிப்புச் செயல்பாடுகளில் பெறுவதை நாம் பார்க்கிறோம். 


ஆணின் “வரைபடத்தில்”
பெண் எனும் பயணி 


பொதுவாக இந்திய, தமிழ் வம்சாவளியினரைப் பொறுத்தவரை இடம்பெயர்தல் பெண்ணின் பால் இருப்பில் எழுதப்பட்டிருக்கும் ஆண்-மையப் பண்பாட்டு விதி. திருமண பந்தத்தில் கணவனின் வசிப்பிடத்தில் பெண் போய்ச்சேர்வது இயல்பாகவே கருதப்படுகிறது. வீடு இடவாகுபெயராகக் குடும்பத்தை, குறிப்பாக மனைவியைச் சுட்டுகிறது; இல்லாள் இல்லத்திலிருப்பவளாக மனைவியை அடையாளப்படுத்துகிறது. 



எனினும் பெண்ணைப் பொறுத்தவரை, “வீடு” உறைவிடம் என்பதன்றி, அந்தச் சொல்லுக்கிருக்கும் “விட்டு விடுதலை” என்கிற பிறிதொரு பொருளில் அவள் தாய் வீட்டையும் அவ்வீடுசார் நிலத்தையும் அன்றி, கணவன் வீட்டையோ, அதுசார் நிலத்தையோ சுட்டுவதாக இல்லை. சந்திரா இரவீந்திரனின் “யாசகம்” ([2001] 2011) கதையில் வீடு அம்மாவின் நினைவுகளோடு கூடிய வீடு; முற்றத்து வேப்பமரக்கிளைகள், அம்மாவின் மூக்குத்தி ஒளிரும் சமையலறை, ஊஞ்சலின் ஒய்யார ஆட்டம் இட்டுச்செல்லும் மனதின் வானுயரம், வெள்ளை மணற்கும்பி தந்த நிசப்த வேளைகள், ஏகாந்தம் இவை அனைத்தும் திருமணத்தில் தொலைந்துவிடுகின்றன. 



கதைசொல்லிப் பெண்ணின் “சுவாசத்துக்காக மூச்சுக் காற்றையே தந்துவிட முயல்பவன்” அவள் காதலித்து மணந்தவன். அவளின் “சரிபாதியாக” அவனைக் கருதுகிறாள். ஆனால் அந்தச் சரிபாதியின் “விரல்களில் நசித்துக்கொண்டிருக்கிறது அவளின் இதயம்”. இயல்பான சிறகுகள் வெட்டப்பட்டுவிட, தனது ஆண்பாதி தரும் சிறகை “கடன்வாங்கி” அணியவேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு. 


அவளை அவளாகவே “பறக்கவிட்ட” அவளது அன்னையின் அருகாமைக்கான யாசகம், அன்னையோடான ஒன்றிப்புக்கான யாசகமாகிறது. சுதந்திரத்தைச் சுட்டும் மிகவும் வழமையான கற்பனைவாத உருவகமான வானமும் பறத்தலும் கதையாடலில் வருகின்றன. இவற்றுக்கு நேரெதிராக நகர்தலைக் கண்காணிக்கும் “மாயப்பலகையொன்று எச்சரிக்கையுடன்” அவள்முன் நடப்பட்டிருப்பதும் சொல்லப்படுகிறது. அவள்மேல் “நெருப்புத் துகள்களோடு நகர்கிற” இரு கண்கள் வேறென்ன, அவன் கணவனுடையதாகத்தான் இருக்க வேண்டும். 


அவள் வாழ்வுக்கு அவன் வரைபடமிட்டுத் தந்திருப்பதாகக் கூறுகிறாள் கதைசொல்லி. கணவனின் வரைபடத்தில், கண்காணிப்புப் பார்வையில் அவளற்ற அவளின் பயணமாக நகர்கிறது வாழ்க்கை. 


எனினும், நகைமுரணாக அவளுக்கு வாழ்க்கை “அழகாக” இருக்கிறது: “லண்டன் பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் பெயர்தெரியாத மரங்களைப்போல, வாசனையேதுமற்ற வண்ணப்பூக்களைப்போல, மொழிமறந்த உதடுகள் தரும் கவர்ச்சிப்புன்னகையைப்போல” அழகு அது (89). பெயர் தெரியாத மரம் பசுமையென்றாலும் அந்நியம், வண்ணமிருந்தாலும் வாசமிலா மலர்கள், மொழித்திறனை கைவிட்ட உதடுகள். 


திருமண உறவில் அந்நியப்படுதலும் காதல் நீக்கமும் பயனற்ற மேம்பூச்சுத்தன்மையும் இடம்பெயர்ந்திருக்கும் புலத்தின் வர்ணனைகளாகிவிடுகின்றன. விளைவாக, புறவெளி கதையின் பின்னணியாகவன்றி அகத்தின் நீட்சியாகக் கதையாடலில் பங்குபெறும் இன்றியமையாத கதாபாத்திரமாகிவிடுகிறது. 


சந்திராவின் சிறுகதை புலம்பெயர்ந்திருக்கும் பெண்ணின் மன உணர்வுகளைச் சித்தரிக்கிறது என்று சொல்லிவிடலாம். ஆனால், பெண்ணைப் பொறுத்தவரை, புலம்பெயர்தல் இரண்டு பரிமாணங்களில் செயல்படுவது கதையை வாசிக்கையில் மனதிலோடியது. 


புலம்பெயர்தலை ஒரு குழுவின் பொதுவான வன் இழப்புகளின், இடம்பெயர்தல்களின் கூட்டு வரலாறைக் குறிக்கும் குறியீட்டுச்செயல் என்று கொண்டால், இந்திய அல்லது தமிழ் சமூகத்தில் திருமண நிமித்தத்தால் பிறந்த இடத்திலிருந்து பிய்த்து வேறிடத்தில் நடப்படுகிற சந்திராவின் கதைசொல்லியின் வார்த்தைகளில், “சிறகுகள் வெட்டப்படுகிற”வன் இழப்பை, உள ஊறுதனை காலம் காலமாகச் சந்தித்துவரும் பெண்கள் அனைவருமே தத்தம் தாயகங்களில் இருந்தாலும் புலம்பெயர்ந்தவர்கள் என்ற வரையறைக்குள் வந்துவிடுகிறார்கள். 


ஆக, பெண்ணின் புலம்பெயர்தலோடு திருமணத்தை முன்னிட்டு பெண்ணின் புலம்பெயர்தலும் சேரும்போது, தாயகம் நீங்குதலோடு தாயிடத்தை நீங்குதலும் சேர்ந்துவிடுகிறது. இந்நிலையில் புலம்பெயர்தல் கொள்கிற இரட்டைத்தன்மை பெண்ணின் இழப்புகளிலும் பிரதிபலித்து, கூடுதல் மன அழுத்தத்தை நினைவேக்கத்தைத் தரக்கூடியதாகவும் உள்ளது. இந்த இரட்டைத்தன்மை அதனளவில் தனித்த, விரிவான ஆய்வைக் கோரும் பொருளாக இருக்கிறது. 


(கோவையில் ஜனவரி 20, 21, 22 தேதிகளில் நடைபெற்ற ‘தாயகம் கடந்த தமிழ்’ மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் ஒரு பகுதி இது.)

 
thanx - the hindu