Showing posts with label சிங்க தளபதி (2015)-சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சிங்க தளபதி (2015)-சினிமா விமர்சனம். Show all posts

Wednesday, December 23, 2015

சிங்க தளபதி (2015)-சினிமா விமர்சனம்

நடிகர் : பிரபாஸ்
நடிகை :ஸ்ரேயா ரெட்டி
இயக்குனர் :எஸ்.எஸ்.ராஜமௌலி
இசை :எம்.எம்.கீரவாணி
ஓளிப்பதிவு :செந்தில்குமார்
இலங்கையில் வசித்து வரும் பானுப்ரியா தனது கணவன் இழந்த நிலையில், அவருடைய முதல் மனைவியின் மகனான பிரபாஸையும், தன்னுடைய மகனான ஷபியையும் வளர்த்து வருகிறார். இதில் பிரபாஸ், பானுப்ரியா மீது பேரன்பு கொண்டு இருக்கிறார். ஆனால், ஷபியோ இவர்கள் பாசமாக இருப்பதை வெறுக்கிறார்.

இந்நிலையில், இலங்கையில் நடைபெற்ற போரில் பானுப்ரியா வசிக்கும் இடம் எல்லாம் அழிந்து போகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி பானுப்ரியாவை பிரபாஸிடம் இருந்து பிரித்து செல்கிறார் ஷபி.

பானுப்ரியா, ஷபி இருவரும் ஒரு திசையிலும், பிரபாஸ் ஒரு திசையிலும் செல்கிறார்கள். அம்மாவை பிரிந்த பிரபாஸ், அவரை தேடி அங்குமிங்குமாக அலைகிறார். இந்நிலையில் அகதிகளை கொத்தடிமைகளாக நடத்திவரும் கும்பலிடம் மாட்டிக்கொள்கிறார். கொத்தடிமையாகவே வளர்ந்து பெரியவனாகும் பிரபாஸ், ஒரு கட்டத்தில் அந்த கும்பலின் தலைவனை எதிர்த்து கொல்கிறார். இதையறிந்த தலைவனின் அண்ணனான பிரதீப் ராவத் பிரபாஸை பழிவாங்க நினைக்கிறார்.

இதற்கிடையில், ஸ்ரேயாவின் உதவியுடன் தன் அம்மாவை தேடி வருகிறார் பிரபாஸ். அம்மாவை தேடி வரும் விஷயம் தன் தம்பியான ஷபிக்கு தெரியவருகிறது. இன்னும் பிரபாஸ் மாறாமல் அம்மாவை தேடுவதால், பிரபாஸை அழிக்கவும், தேடுவதை தடுக்கவும் திட்டமிடுகிறார்.

இந்நிலையில் ஷபி, பிரதீப் ராவத்துடன் இணைந்துக் கொண்டு பிரபாஸை அழிக்க முயற்சி செய்கிறார். இறுதியில் இவர்களிடம் இருந்து பிரபாஸ் தப்பித்தாரா? தன் அம்மாவான பானுப்ரியாவை கண்டுபிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பிரபாஸ் ஆக்‌ஷன், சென்டிமென்ட் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் காட்சியில் கடலுக்குள் சுறாவுடன் சண்டை போடுவது அதிகப்படியான லாஜிக் மீறலாக அமைந்திருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரேயா, பிரபாஸுடன் இணைந்து டூயட் ஆட மட்டும் செய்திருக்கிறார்.

தம்பியாக நடித்திருக்கும் ஷபி, சைக்கோ வில்லனாக திறமையாக நடித்திருக்கிறார். அம்மாவிடம் இருந்து பிரபாஸை பிரிப்பது, அவரை அழிக்க திட்டமிடுவது என சிறப்பாக நடித்து பாராட்டு பெறுகிறார். 

2005ம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் ‘சத்ரபதி’ என்னும் பெயரில் வெளியான இப்படம், தற்போது தமிழில் ‘சிங்க தளபதி’ என்னும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்புகளை பார்த்த நமக்கு இந்த படம் கொஞ்சம் எதார்த்த மீறலாக அமைந்திருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பு இப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. ஆனால் இப்போது அப்படத்தை பார்க்கும் போது, காமெடியாக தோன்றுகிறது. தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவிற்கு தமிழ் ரசிகர்களை கவரவில்லை.

கீரவாணியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். செந்தில் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.


மொத்தத்தில் ‘சிங்க தளபதி’ ஆக்ரோஷம்.
http://cinema.maalaimalar.com/2015/12/22205952/Singa-thalapathy-movie-review.html