Showing posts with label என் வழி தனி வழி. Show all posts
Showing posts with label என் வழி தனி வழி. Show all posts

Wednesday, October 14, 2015

பதின் பருவம் புதிர் பருவமா?- 2: என் வழி தனி வழி-டாக்டர் ஆ.காட்சன்

‘வர வர அவன் சொன்ன பேச்சைக் கேட்கவே மாட்டேங்கிறான்’… ‘எப்பப் பாரு இவளுக்குக் கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டிருக்கணும்’... பதின் வயதுப் பிள்ளைகள் உள்ள எல்லா வீடுகளிலும் இந்த வசனங்களைக் கேட்க முடியும். வளரிளம் பருவத்தில் வெளிப்படையாகத் தெரியும் மாற்றங்களில், இதெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே.
இதுவரை பெற்றோரோடு தூங்கிய மகன்/மகள், தனி அறையை நாடத் தொடங்குவார்கள். இவ்வளவு காலம் தாயின் கையைப் பிடித்து சாலையில் நடந்து சென்றிருந்தாலும், இப்போது வெட்கமாகத் தோன்றும். பெற்றோரின் ஆலோசனையைவிட நண்பர்களின் சொற்கள் வேதவாக்காகத் தெரியும்.
ஆனால், இந்தப் பருவம்தான் தனக்கென்று ஒரு தனித்தன்மை (Identity) மற்றும் அகநிலையை - சுயத்தை (Self) உருவாக்கிக்கொள்ளும் காலம். இது ஆரோக்கியமான மாற்றம்தான்!
பெற்றோரின் பங்கு
இந்த நேரத்தில் ‘ஐயையோ... அவன் அப்படிச் செய்யுறான்.. இவள் இப்படிப் போறா..’ என்று பெற்றோர்கள் புலம்புவதால், பயனில்லை. பிள்ளைகளின் வளர்ச்சி மாற்றத்தைப் புரிந்துகொண்டு, அவர்களுடைய உலகத்தில் பங்கேற்று, அவர்களுக்கு ஆதரவாக இருப்பதுதான் அவசியத் தேவை.
உதாரணமாக, ‘அந்தப் பசங்களுடன் சேராதே' எனக் கட்டளையிடுவதைவிட, பிள்ளைகள் யார் யாருடன் நட்பு கொண்டிருக்கிறார்கள், அவர்களுடன் எப்படிப் பழகுகிறார்கள் என்று சற்றே விலகி நின்று கண்காணிப்பது பலன் தரும். தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவோ அல்லது அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாகவோ வளரிளம் பருவத்தினர் நினைத்துவிட்டால் கொஞ்சம் ஆபத்துதான்.
அப்படி நம்பிவிட்டால், பெற்றோரை எதிரியாகப் பார்க்க ஆரம்பிப்பார்கள். உறவு சிக்கலுக்கு உள்ளாகும். இந்தக் கட்டத்தில் அவர்களை அதிகம் சந்தேகப்படுவதோ அல்லது அதிகம் நம்புவதோ, இரண்டுமே அவர்களுடைய மனதைப் பாதிக்கும்.
புதிய பிரச்சினைகள்
‘கூகுள்’ யுகத்துக்கு முன்னால் விடலைப் பருவத்தினரின் நடவடிக்கை மாற்றங்கள் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தன. அதுவரை கசங்கிய சட்டை அணிந்தவன், திடீரென்று அயர்ன் செய்து நீட்டாக அணிய ஆரம்பிப்பது, எண்ணெய் வழியத் தலைசீவி சென்றவள் சிகை அலங்காரத்தை மாற்றச் சிரத்தையெடுப்பது போன்றவையெல்லாம் நடக்கும். அதையெல்லாம் தாண்டி அதிகபட்சமாக சைக்கிள் கேட்பார்கள். ஆனால், இப்போதோ ‘டாக்டர், என் பையன் மொபைல் போன் வாங்கிக்கொடுத்தால்தான் ஸ்கூலுக்குப் போவேன் என்று அடம்பிடிக்கிறான்’ என்றோ, ‘ஒன்றரை லட்ச ரூபாய்க்குப் பைக் வாங்கித் தரவில்லையென்றால், வீட்டைவிட்டு ஓடிப்போய்விடுவேன் என்று மிரட்டுகிறான்’ என்றோ மனநல மருத்துவரிடம் புகார் சொல்லும் அளவுக்குப் பிரச்சினைகள் சகஜமாகி வருகின்றன.
கஷ்டப்பட விடலாமா?
சிறுவயதிலேயே குடும்பச் சூழ்நிலை, பொருளாதார நிலையைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்து வளர்ப்பதில் தவறே இல்லை. ‘நான் பட்ட கஷ்டத்தை, என் பிள்ளைகள் அனுபவிக்கக் கூடாது’ என்ற எண்ணம், பெற்றோரிடம் இருப்பது இயல்பான ஒன்றுதான். இந்த வயதில் இது தேவையில்லை என்று பெற்றோர் நினைத்தால், அதைத் தைரியமாகப் பிள்ளைகளிடம் சொல்லப் பழக வேண்டும். மிக இன்றியமையாததாகவும், அதேநேரம் விலை உயர்ந்ததாகவும் இருந்தால், அதன் மதிப்பைச் சுட்டிக்காட்டிக் கையில் கொடுப்பதில் தவறில்லை.
நான் யார்?
‘பாட்ஷா' படத்தில் ரஜினி, ‘எட்டு எட்டா மனுஷ வாழ்க்கையைப் பிரிச்சுக்கோ' என்று பாடியதைப் போல, நூறு வருடங்களுக்கு முன்னரே புகழ்பெற்ற ஜெர்மன் உளவியல் நிபுணர் எரி எரிக்சன் வாழ்க்கையை எட்டு நிலைகளாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும் மனதளவில் ஏற்படும் மாற்றங்களைக் கூறியிருக்கிறார்.
அதில் ஐந்தாம் நிலையான பதிமூன்று வயதில் ஆரம்பித்து இருபத்தியொரு வயதில் முடியும் பருவத்தில் ஏற்படும் முக்கிய மாற்றமாக Self என்றழைக்கப்படும் தனித்துவமும் சுயமும் உருவாவதைக் குறிப்பிடுகிறார். இந்தக் காலகட்டத்தில்தான் ‘தான் யார், இந்தச் சமூகத்தில் தன் பங்கு என்ன?’ என்ற குழப்பம் ஏற்படும். இதற்கு Identity crisis (அடையாளச் சிக்கல்) என்று பெயர்.
அந்தக் குழப்பத்தைத் தீர்ப்பதற்காக மனம் எடுக்கும் பல முயற்சிகளில் ஒன்றுதான், தனக்குப் பிடித்த ஒருவரோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது. விளைவாக ஒரு நடிகர், நடிகை அல்லது விளையாட்டு வீரரின் தீவிர ரசிகராக அடையாளப்படுத்திக் கொள்வது, அரசியல் தலைவரின் மானசீகத் தொண்டனாக மாறுவது, மதரீதியான நம்பிக்கைகளில் ஐக்கியமாவது போன்ற மாற்றங்கள் நடக்கும். பச்சை குத்திக்கொள்வது முதல் பாலாபிஷேகம் செய்வதுவரை, எல்லாமே இதன் வெளிப்பாடுதான்.
தடம் மாறும் நிலை
இந்த மாற்றங்களில் பெரும்பாலா னவை போகப்போக ஆரோக்கியமான முதிர்ச்சியை அடைந்துவிடும். இந்த அடையாளப்படுத்திக்கொள்ளுதல் சில நேரங்களில் எதிர்பாலின ஈர்ப்பாக மாறி, காதல் வயப்படுவதிலும் முடியும்.
சில வேளைகளில் சமூகவிரோதக் கும்பலுடன் சேர்வது, ஜாதி அடிப்படையில் அடையாளம் காண்பது அல்லது போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற ஆரோக்கியமற்ற செயல்பாடுகளிலும் முடிவடையலாம். பெற்றோரின் சரியான வழிகாட்டுதல், சாதகமான குடும்பச் சூழ்நிலை, ஆரோக்கியமான கல்வி போன்றவை, இந்தக் காலகட்டத்தில் சரியான பாதையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: [email protected]

நன்றி-தஹிந்து