Sunday, June 09, 2013

வாரா என் தோழி வாராயோ! சூப்பர் ஹிட் பாடல் ஆனது எப்படி?

காதோடு நான் பேசுவேன்...

வாழ்க்கைத் தொடர் - 4 \
எல் ஆர் ஈஸ்வரி

1961- இது தமிழ் சினிமா சரித்திரத்துல குறிப்பிடப்பட வேண்டிய ஒரு வருஷம். அந்த ஆண்டுதான்பாசமலர்படம் ரிலீஸ் ஆனது. அந்த 1961ஆம் வருஷத்தையும், பாசமலர் படத்தையும் என்னால ஆயுசுக்கும் மறக்கமுடியாது. ஒருநாள் எம்.எஸ்.வி. என்கிட்ட உனக்கு மங்களகரமான ஒரு பாட்டைக் கொடுத்திருக்கேன். இந்தப் பாட்டைப் பாடறத்துக்கு உன்னை செலக்ட் பண்ணினது என்னோட சாய்ஸ். உன்னோட முழு திறமையையும் காட்டி, அந்தப் பாட்டை நீ அற்புதமாய் பாடிட்டேன்னா, நீ எங்கேயோ போயிடுவே!"ன்னு சொன்னார் 




. நான் என் ரெண்டு கைகளையும் குவிச்சு அவரை வணங்கி, ‘உங்களோட ஆசிர்வாதம் இருந்தா நீங்க எதிர்பார்க்கிற படியே பாடுவேன். நல்ல பேர் வாங்குவேன்என்று உணர்ச்சி பொங்கச் சொன்னேன். அந்தப் பாட்டு எது தெரியுமா? ‘வாரா என் தோழி வாராயோ!’


வாரா என் தோழிபாட்டை ரெக்கார்டிங் செய்வதற்கு முந்தைய நாள் நான் எம்.எஸ்.வி. இசையில் வேறு ஒரு கோரஸ் பாட்டில் ஹம்மிங் பாட வேண்டியிருந்தது. அன்றைய ரிக்கார்டிங் காலையில் ஆரம்பிச்சு, ராத்திரி வரை நீண்டுக் கொண்டே போனது. திரும்பத் திரும்ப பாடியதில் எனக்குத் தொண்டை கட்டிக் கொண்டது. ராத்திரி ஒன்பது மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து மறுநாளுக்காக கொஞ்சம் பாட ஆரம்பித்தால் வாயிலிருந்து காற்றுதான் வந்ததே ஒழிய குரல் வரவில்லை. நாளைக்கு முக்கியமான பாட்டு ஆச்சே! எப்படிப் பாடப் போறோம்கிற பயத்துல தூக்கமே வரலை. ஒரு வேளை நல்லா பாடாமல் போனா இனிமே சான்ஸ் கிடைக்காம போயிடுமோன்னு கலக்கமாய் இருந்தது.


காலையில எழுந்து பார்த்தபோது தொண்டைக் கட்டு சரியாகி இருந்தது. நான், என் அம்மா, என் தங்கை மூணு பேருமே சாரதா ஸ்டுடியோவுக்குப் போனோம். அப்போ சாரதா ஸ்டுடியோவுக்கு மெஜஸ்டிக் ஸ்டூடியோன்னு பேரு. என் கூட எதுக்கு என் அம்மாவும், தங்கையும்? ‘வாரா என் தோழிபாட்டை நான் பாடணும்; என் கூட அம்மாவும், தங்கையும் கோரஸ். அதுக்காகத்தான். போனதும் ரிகர்சல் ஆரம்பமானது. நான் ஆண்டவரை வேண்டிக் கொண்டு பாடினேன். பாடி முடித்தவுடன், ரிக்கார்டிங் அறைக்குள்ளே இருந்து, வெளியில் வந்த எம்.எஸ்.வி.


பிரமாதமா இருக்கு; அப்படியே பாடு!’ என்றார். அந்த வார்த்தைகளைக் கேட்டதும் எனக்கு உற்சாகம் அலைமோதியது. பயம் சுத்தமாக அகன்றது; அடுத்த ரிகர்சலில் ரொம்பத் தெம்பாகப் பாடினேன். அடுத்து டேக். பிரதான பாடகி, கோரஸ், மந்திரங்கள். ஆர்கெஸ்டிரா என்று எல்லாவற்றுக்குமான ஒருங்கிணைப்பு சரியாக வரவில்லை. ஒண்ணு, இரண்டு, மூணு என்று அடுத்தடுத்து டேக் போய்க் கொண்டே இருந்தது. எங்கேயாவது ஒரு சின்ன பிசகு என்றாலும், மறுபடி முதலில் இருந்து ஆரம்பிக்கச் சொல்லி விடுவார் எம்.எஸ்.வி.


ஐந்தாவது டேக் முடிஞ்சதும், இது .கே. ஆனாலும் எனக்கு முழு திருப்தி இல்லை; இன்னொரு டேக் போயிடலாம்" என்றார். அடுத்தடுத்து இன்னும் பல டேக் வாங்கி, ஒரு வழியாக பதினோறாவது டேக்கில் .கே. ஆனது. அப்போது கூட அவர் என்ன சொன்னார் தெரியுமா? அஞ்சாவது டேக்கையும், பதினோறாவது டேக்கையும் மிக்ஸ் பண்ணிக்கறேன்" அப்படி உருவான பாட்டுதான் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி, சினிமா உலகத்தின் ஒட்டு மொத்த கவனமும் என் மேல் விழச் செய்தது.


அந்தப் பாட்டு பதிவான சில நாள் கழித்து கே.வி. மகாதேவன் மியூசிக்ல ஒரு பாட்டு பாடுவதற்காக நான் போயிருந்தேன். அப்போ அவர் என்னைப் பார்த்ததும்,

ராஜா! (என்னை அவர் அப்படித்தான் அன்போடு கூப்பிடுவார்) விசு மியூசிக்ல நீ பாடின ஒரு பாட்டு கேட்டேன். மந்திரம், நாதஸ்வரத்துக்கு நடுவுல கணீர்னு உன் குரல்! பிரமாதம்! இனிமே அந்தப் பாட்டு ஒலிக்காத கல்யாண வீடே இருக்காது. அந்தப் பாட்டால உனக்கு இதுவரைக்கும் இல்லாத பேரும் புகழும் வரப்போகுது பாரு" என்று சொல்லி, மனசார வாழ்த்தினார்.


இந்தப் பாட்டுக்கு அப்புறம், எம்.எஸ்.வி. ‘ உனக்கு குரல் நல்லா செட் ஆயிடிச்சு! இனிமே நீ கோரஸ் பாட வேணாம்"னு சொல்லிட்டாரு. அதுமட்டுமில்லை. புதுப்புது வெரைட்டியான பாட்டுக்களை எனக்குக் கொடுத்து, உற்சாகப்படுத்தினார். நானும் அதையெல்லாம் நல்ல வாய்ப்பாகவும், சவாலாவும் எடுத்துக்கிட்டுப் பாடினேன்.

1964-ல் டைரக்டர் ஸ்ரீதர் எடுத்த படம்வெண்ணிற ஆடை’. அந்தக் காலத்துக்கு அது ரொம்பவும் புதுமையான கதை. அதுல நம்முடைய மரியாதைக்குரிய சி.எம். அம்மாவை அவர் நடிக்கவெச்சாரு. அதிலே அம்மாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் கேரக்டர். ‘நீ என்பதென்ன? நான் என்பதென்ன? ஒரு நினைவு என்பதென்ன



 நிலையில்லாத ஒரு உலக மேடையில் நாமும் வந்ததென்ன?’ என்று அவர் பாடுவதாக ஒரு பாட்டு. அதை எனக்குப் பாடக் கொடுத்தார் எம்.எஸ்.வி. அதிலே பாட்டு வரிகளுக்கு இடையில் பேச்சு, விதம், விதமான சிரிப்பு, கூக்குரல்கள் என எல்லாம் வரும். ரொம்ப சவாலாக இருந்த அந்தப் பாட்டை, நான் பாடி முடிச்சதும், எம்.எஸ்.வி. ‘நினைச்ச மாதிரியே பாடிட்டஎன்று சொன்னபோது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.



 அதுமட்டுமில்லை. அந்தப் பாட்டை ஒலிப்பதிவு செய்த இன்ஜினியர் டி.எஸ். ரங்கசாமி என்னிடம் வந்து, உங்க குரல் பிரமாதம்; இனிமே எல்.ஆர். ஈஸ்வரி என்னோட ஃபேவரிட் ஆர்டிஸ்ட்" என்றார். நான் என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த என் அம்மாவைப் பார்த்தேன். இரண்டு பேர் கண்களிலுமே ஆனந்தக் கண்ணீர்.


அந்தப் பாட்டும் எனக்கு ரொம்ப நல்ல பேரை வாங்கிக் கொடுத்தது. இன்னைக்கும், நாடே போற்றுகிற ஓர் அரசியல் தலைவிக்கு, நான் சினிமாவுல பின்னணி பாடியிருக்கேன் என்பதுல எனக்கு ரொம்பப் பெருமையா இருக்குது.
ஆரம்ப நாட்கள்ல எனக்கு பாட்டு கொடுப்பாங்க. நான் அதை வாங்கிப் படிச்சுப் பார்த்து, ரிகர்சல் பண்ணி, பாடுவேன்.



 கொடுக்கிற பாட்டை நல்லாப் பாடி, நல்ல பேர் வாங்கணும் என்கிற நினைப்பு மட்டும்தான் எனக்கு இருக்கும். சொல்லிக் கொடுக்கிறதை, கூர்ந்து கவனிச்சு, அப்படியே பிடிச்சுக்குவேன். அந்தக் காலத்துல ஏவி.எம். ஸ்டூடியோவுல சுதர்சன் மாஸ்டர் என்று ஒரு மியூசிக் கண்டக்டர் இருப்பார்.  



மியூசிக் டைரக்டர் கம்போஸ் பண்ணற இசைக்கு ஏத்தபடி பாடறவங்களையும், பலவிதமான இசைக்கருவிகள் வாசிப்பவர்களையும் ஒருங்கிணைச்சு, நல்ல முறையில் ஒலிப்பதிவை நடத்துவதுதான் அவருடைய பாணி. கோவர்த்தன் மாஸ்டரிடம், மாஸ்டர்! இந்தப் பாட்டை எப்படிப் பாடப்போறோம்னு கொஞ்சம் பயமா இருக்குன்னு சொன்னா, உடனே, ‘ஈஸ்வரி! நீ எதைப்பத்தியும் கவலைப்படாதே! எல்லாம் என் கையில் இருக்கு. பாடுகிறபோது என் கையையே பாரு. அது எப்படி எல்லாம் அசையுதோ, அதுக்கேத்தா மாதிரி உன் குரலில் நெளிவு, சுளிவுகளைக் கொண்டு வந்துவிடு. பாட்டு நல்லா வந்திடும்"னு சொல்லுவாரு.



இன்னொரு விஷயம். நான் பாடுற பாடல் வரிகளுக்கு என்ன அர்த்தம்னு எனக்கு சொல்லித் தந்தாரு. அந்த பாட்டுக்களை எல்லாம் இப்போ கேட்கிறபோது, வாழ்க்கை நடைமுறையோடு சம்மந்தப்பட்ட அற்புதமான பல வரிகளுக்கு அர்த்தம் எனக்கு நல்லாப் புரியுது.


தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் என் குரல் ஒலிக்கத் தொடங்கிய வேளையில், சுந்தரத் தெலுங்கில் பாட எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் எனக்கோ தெலுங்கு தெரியாது. பாடலாமா? என்னால் முடியுமா? எனக்குள்ளே சின்னதாக ஒரு குழப்பம்.


இந்தப் படத்தில் அணிந்திருக்கும் தங்கத்தோடு, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் என் அம்மா எனக்கு முதன் முதலாக வாங்கிக் கொடுத்தது. நான் ஒரு நகை ப்ரியை. டாலர் வைத்த லாங்செயின், குடை ஜிமிக்கி என்னோட ஃபேவரிட். உள்நாட்டில் பட்டுப்புடைவை விரும்பி அணியும் நான், வெளி நாடுகளுக்குப் போகும்போது மட்டும் ஜீன்ஸ் - டாப்ஸ் அணிவேன்.


(கலகலப்போம்...)


நன்றி - கல்கி

கரிமேடு - சினிமா விமர்சனம் ( குமுதம் )

தினமலர் விமர்சனம்


"தண்டு பாளையா" எனும் பெயரில் கன்னடத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம், தமிழில் "கரிமேடு" ஆகியிருக்கிறது. "கொக்கி" பூஜா காந்தி, பொம்பளை கொலை கொள்ளைகாரியாக ஒரு கும்பலுடன் சேர்ந்து மிரட்டியிருக்கிறார்.

கர்நாடகாவில் உள்ள தண்டுபாளையா எனும் பகுதியை சார்ந்த கொடூர கொலை கொள்ளைக்காரர்கள் பற்றிய உண்மை கதைதான் "கரிமேடு" படம் மொத்தமும். 1990 - 95ம் ஆண்டு வாக்கில் கர்நாடகா போலீஸ்க்கு பெரும் சவாலாக விளங்கிய தண்டுபாளையா பகுதி கொள்ளையர்கள் இன்று சிறைக்குள் களி தின்று வந்தாலும்,  அவர்கள் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களையும், சிறுவர் சிறுமிகளையும் குறி வைத்து கர்நாடக முழுவதும் நடத்திய கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் நெஞ்சை உறைய வைக்கும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளன! படம் பார்க்கும் நமக்கு இப்படத்தை பார்த்து கும்பலாக புதிய குற்றவாளிகள் யாரும் உருவாகாமல் இருக்க வேண்டுமே எனும் பயமும் லேசாக எழுகிறது!

கதைப்படி ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் ஊர் ஊராய் கொத்தனார், சித்தாள் வேலைக்கு போகும் தண்டுபாளையா வாசிகள், அங்கு வசதியான வீட்டை நோட்டமிட்டு, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் தாகத்துக்கு தண்ணீர் கேட்பது மாதிரி ஒரு பெண்ணை அனுப்பி வீட்டில் உள்ளவர்கள் கதவை திறந்ததும் கும்பலாக உள்ளே நுழைந்து, வீட்டு பெண்களின் கழுத்தை அறுத்து, கற்பழித்த படி கொள்ளை அடிக்கிறார்கள். இவர்களுக்காக வெளியில் உளவு பார்ப்பவர்கள், யாராவது பொதுமக்கள், அப்பகுதி வாசிகள் அந்தப்பக்கம் வந்தால் விசிலடித்து சிக்னல் கொடுத்ததும் இவர்கள் எஸ்கேப் ஆவதும் நமது இதய துடிப்பை எகிற வைக்கும் விதங்களில் படமாக்கப்பட்டுள்ளது. "கரிமேடு" படத்திற்கு பலம் சேர்ந்துள்ளது என்றாலும் பலவீன இதயம் உடையவர்களை படுத்தப்படுக்கையாக்கி விடும்படியான காட்சியமைப்புகள் கொடூரம்!!

பூஜா காந்தி, ரவிகாளே, த‌லைமையிலான கொள்ளை கும்பலிடம் புதுமணப் பெண் பிரியங்கா கோத்தாரியும், அவரது அண்ணியும் சிக்கி கற்பழிக்கப்பட்டு சாகுமிடங்கள், இதயமில்லாதவர்களின் இதயத்தையும் உறைய வைத்துவிடுகின்ற காட்சிகள் என்றால் மிகையல்ல! பூஜா காந்தி, ரவிகாளே, ரகு முகர்ஜி, பிரியங்கா கோத்தாரி, மகர்ந்த் தேஷ்பாண்டே உள்ளிட்ட எல்லோரும் கொள்ளையர்களாகவும், கொள்ளையர்களால் பாதிக்கப்படுபவர்களாகவும் தங்கள் பாத்திரமறிந்து பயமுறுத்தியிருக்கின்றனர். அதிலும் போலீஸ் அதிகாரியாக வரும் சாய் ரவிசங்கர், ரசிகர்களை மிரட்டும் கொள்ளையர்களையே மிரளடித்திருப்பது சூப்பர்ப்! "வேட்டைக்காரன்" வில்லன் பாத்திரத்திற்கு பின் நடிகர் சாய்குமாரின் ‌சகோதரர் சாய்ரவிசங்கரை தமிழில் பேச வைத்திருக்கும் படம் "கரிமேடு" எனலாம்!


அர்ஜூன் ஜன்யாவின் இசை, ராம் பிரசாத்தின் ஒளிப்பதிவு உள்ளிட்ட பிரமாண்டங்களுடன் மதுரை கரிமேடாக தெரியும் படத்தின் வசனக்காட்சிகள், திடீர் திடீர் என கன்னட தண்டுபாளையாவாக மாறுவது உள்ளிட்ட ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், ஸ்ரீனிவாச ராஜூ இயக்கத்தில்,
 நரி மனிதர்கள் நிறைந்த "கரிமேடு" - "திகில்மேடு!!"


---------------------------------------------------------------


குமுதம் சினிமா விமர்சனம்

வீட்டில் நீங்கள் தனியாக இருக்கும்போது கதவைத் தட்டி யாராவது தண்ணீர் கேட்டால் இனிமேல் தரமாட்டீர்கள்! இதுதான் இந்தப் படம் சொல்லும் நீதி!

பெண்கள் மட்டும் தனியாக இருக்கும் வீடாகத் தேடி கதவைத் தட்டி தண்ணீர் கேட்பாள் ஒரு பெண். அவளுக்குப் பின்னால் ஏழெட்டு ஆண்கள் இருப்பார்கள். இரக்கப்பட்டு தண்ணீர் எடுக்க உள்ளே சென்றால், அவ்வளவுதான். அத்தனை பேரும் உள்ளே நுழைந்து வீட்டில் உள்ளவர்களை காலி செய்து நகைகளைக் கொள்ளையடித்து, பின்னர் கற்பழிப்பையும் செய்துவிட்டு ஒன்றுமே தெரியாதது போல் நடையைக் கட்டுவார்கள்.

எங்கெங்கோ நடந்த உண்மைச் சம்பவங்களைக் கோர்த்து, குறும்பட பாணியில் டெரராய் ஒரு படம் பண்ணியிருக்கிறார்கள். கன்னடத்தில் காசை அள்ளிய படம் தமிழ் பேசுகிறது!

கதாநாயகியாக அல்லது வில்லியாக கலக்கியிருக்கிறார் பூஜா காந்தி. அலட்சியமான நடையும், வாயில் வைத்த பீடியும், கலைந்த தலையும், குலைந்த புடவையும், எதற்கும் கவலைப்படாமல் குத்துக்காலிட்டு உட்காரும் பாவமும் பயங்கரம். ரொம்ப நாளைக்கு அவரை மறக்க முடயாது!

அவருடன் கூட வரும் வில்லன்கள் எல்லாம் நிஜமான பொறுக்கிகள்தானோ என்கிற சந்தேகம் வருகிறது!

அந்த போலீஸ் அதிகாரி சின்னச் சின்ன க்ளூக்களை வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது ராஜேஷ்குமார் நாவல் டச்!

கொலை பண்ண எவ்வளவோ வழிகள் இருக்கே. எதுக்குடா எல்லோரையும் கழுத்தைக் கத்தியால அறுத்தே கொன்னீங்க? “கழுத்தை அறுத்து முடிச்சவுடனே அந்த இடத்திலேர்ந்து ஸ்ஸ்ஸ்னு ஒரு சத்தம் வரும் பாருங்க. அது எனக்குப் பிடிக்கும் சார்’ வசனம் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது.

கழுத்தை அறுக்கும் காட்சிகளும், கற்பழிப்புக் காட்சிகளும் படம் பூராவும் வருவது ரொம்ப ஓவர்.

ஜே ஜே படத்தில் நடித்த நிஷா கோத்தாரி குட்டி நாயகியாக வருகிறார். பரிதாபத்துடன் சாகிறார்.

தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற ஆலோசனையைச் சொல்லும் படத்துக்கு கரிமேடு என்று பெயர் வைத்திருக்கத்தான் வேண்டுமா?

கரிமேடு - உஷார் ரிப்போர்ட்!

குமுதம் ரேட்டிங்: ஓகே