Tuesday, May 28, 2013

மதன் கார்க்கி - கலைஞர் தூது போன காதல்! -வி.ஐ.பி.களின் காதல் அரங்கேற்றம்

வி..பி.களின் காதல் அரங்கேற்றம்
கொஞ்சு புறாவே

கலைஞர் தூது போன காதல்!

கதிர்பாரதி
மதன் கார்க்கி

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு... இந்தப் பஞ்சபூதங்களில் எதுதான் காதல்? இவையெல்லாம் கலந்ததுதான் காதலென்றால் அண்ணா பல்கலைக் கழகத்தில் என்னையும் நந்தினியையும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நனைத்த மழையை ஏன் காதலென்று சொல்லக்கூடாது! இப்போது பெய்கிற மழையில் அப்போது பெய்த மழையை இனங்காண முடிகிற உணர்வுதானே காதல்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டுகள் படிப்பை முடித்துவிட்டு ஆராய்ச்சிப் படிப்புக்காக நான் ஆஸ்திரேலியாவுக்குப் பறக்கிறவரை என் காதலை நந்தினியிடம் சொல்லவில்லை. அப்போது என் காதலுக்கு வயது ஐந்து. என்.சி.சி.யில் நான் சீனியர் மாணவன்; நந்தினி ஜூனியர். இந்தளவில் இருந்த எங்கள் அறிமுகத்தை காதலை நோக்கித் திருப்பி வைத்ததெல்லாம் நான் செக்ரெட்ரியாக இருந்த கம்ப்யூட்டர் சொஸைட்டிதான். அது மாணவர்களின் கம்ப்யூட்டர் திறன் மட்டுமல்லாத மற்ற திறமைகளுக்கும் நாற்றங்கால். அங்கே நந்தினி என் அப்பாவின் கவிதைகளையும் கலீல் ஜிப்ரானின் படப்புகளையும் பற்றிப் பேசியதும் எழுதியதும் அவளைத் தனித்துக் காட்டியது. அப்போதிருந்தே நான் நந்தினியைக் கவனிக்க ஆரம்பித்திருந்தேன். ஆனால் நந்தினிக்குள் நான் காதலாக அப்போது இல்லை. வெறும் நட்பாகத்தான் இருந்தேன்.
அப்போதெல்லாம் நந்தினியோடு என்ன பேச வேண்டும் என்பதை ஒரு பேப்பரில் குறிப்பெடுத்துக் கொள்வேன். பிறகுதான் பேசுவேன். குறிப்புகளுக்கு இடையில் இந்த இடத்தில் நந்தினி சிரித்தால், இந்தப் பதில்; சிரிக்காவிட்டால் இந்தப் பதில் என்றெல்லாம் காதலை வீட்டுப்பாடமாகச் செய்தவன் நான். நந்தினி சிரிக்க வேண்டும் என்று நினைத்த இடத்திலெல்லாம் சிரித்தாள். இந்த அனுபவத்தைத்தான்காதலில் சொதப்புவது எப்படி?’ படத்தின்அழைப்பாயா...’ பாடலில் இப்படிப் பதிந்து வைத்தேன்.
நானென்ன பேசவேண்டுமென்று சொல்லிப் பார்த்தேன் / நீ என்ன கூற வேண்டுமென்றும் சொல்லிப் பார்த்தேன் / நான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓடவிட்டுப் பார்த்தேன் / நீ எங்கு புன்னகைக்க வேண்டுமென்றுகூட சேர்த்தேன்
ஆஸ்திரேலியாவில் இருந்த ஒருநாளில் நந்தினிக்கு நான்தான் சாட்டில் என் காதலைச் சொன்னேன். நான் மத்தியதர வகுப்பு. உங்களோடது பெரிய குடும்பம் ஒத்துவராது என்று முதலில் மறுத்தவளுக்கு முற்றாக மறுக்க மனமில்லை. ஆஸ்திரேலியாவில் என் படிப்பு எனக்குக் கொடுத்த அழுத்தம், லட்சியம் எல்லாம் என்னை நந்தினியிடமிருந்து விலக வைத்தது. நந்தினிக்கும் அப்படித்தான். அவள் மேல்படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டாள். ஐந்து வருடங்கள் என் தேடல்களை நோக்கி ஓடிக் கொண்டிருந்தேன். நந்தினியும் அப்படித்தான் அமெரிக்காவில் ஓடிக் கொண்டிருந்திருக்கிறாள்.
ஆராய்ச்சிப் படிப்பெல்லாம் நான் முடித்து விட்டு இந்தியா வருகிற சமயத்தில் என் அப்பா என்னைப் பற்றி குமுதத்தில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். ‘என் தோள்வரைக்கும் வளர்ந்துவிட்ட என் மகனை, தோளைவிட்டுக் கீழிறக்கிவிடும் காலம் வந்துவிட்டது. இனி அவன் திசை, அவன் வானம், அவன் சிறகு. திருமணம் செய்து வைக்கலாம் என்றிருக்கிறேன் பார்க்கலாம் எந்தத் தேவதைக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோஎன்றெல்லாம் அந்தக் கட்டுரையில் எழுதி இருந்தார். அப்போதுகூட என் மனத்தில் நந்தினியின் ஞாபக நிழல் இல்லை. திருமணத்துக்குத் தீவிரமாக பெண் தேடும் மும்முரத்தில் ஒரு நாள் என் அப்பா கேட்டார்.
உன் மைண்ட்ல யாரும் இருக்காங்களா? "
அப்படியெல்லாம் ஒருத்தருமில்லை. நீங்க பொண்ணு பாருங்க" என்று சொல்லிவிட்டேன். பின்பு யதேச்சையாக ஆர்குட்டில் நந்தினியைப் பிடித்தேன்.
எப்படி இருக்கீங்க"- நான்தான் ஆரம்பித்தேன்.
நல்லாருக்கேன். அமெரிக்காவில் வேலையில் இருக்கேன்" - என்றாள் நந்தினி.
கல்யாணம் ஆயிடுச்சா?"

கல்யாணம் பண்ணிக்கறதா ஐடியா இல்லை. நிறைய பயணம் போகணும். உலகத்தை அப்சர்வ் பண்ணணும். விரிந்து பரந்த உலகத்தில் விடை தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கே!" என்றெல்லாம் பேசிக்கொண்டு போன நந்தினியிடம், வீட்டுல பொண்ணு பார்க்கறாங்க. உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறேன். " - சாட்டில் தட்டிவிட்டுவிட்டு, நந்தினியின் பதிலுக்காகக் காத்திருந்த நொடிகள் கனமானவை.
சரின்னுதான் தோணுது. நீங்களும் நானும் சேர்ந்து வாழறது அர்த்தமுள்ளதா இருக்கும். நான் இன்னும் ஒரே வாரத்துல உங்களை இந்தியாவுல வந்து பாக்கறேன்" என்று நந்தினி சொன்னதும் எனக்குள் நந்தினிக்காக ஆகாயம் விரிய ஆரம்பித்தது. ஆகாயம் பழசுதான் ஆனால் சிறகு புதிது. அவள் என்னை வந்து பார்ப்பதாகச் சொன்ன நாள் என் பிறந்தநாள் மார்ச் 10 அன்று.
இப்போது அப்பாவிடம் வந்து நின்றேன். நந்தினியைப் பற்றிச் சொன்னதும் அவருக்குக் கோபம். ஏன் ஆரம்பத்தில் சொல்லவில்லை. நண்பர்களிடம் சொல்லி பெண்ணெல்லாம் பார்த்துவிட்டேனே முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் ஏன் இப்படி?" என்ற அப்பாவின் வாதத்தில் மகனின் வாழ்க்கை நலமாக இருக்க வேண்டுமே என்கிற கவலை இருந்தது.
அப்பா, என் விருப்பம் நந்தினி. உங்கள் சம்மதத்துக்காகக் காத்திருக்கிறோம் இருவரும்" என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். தம்பியைத் தூதனுப்பினேன். தாயை அனுப்பினேன். நண்பனை பேசவைத்தேன். அப்பா அசைந்து கொடுக்கவில்லை. எனக்கும் வேறு வழி தெரியவில்லை. என் காதலைத் தூக்கிக் கொண்டு கலைஞரிடம் போய்விட்டேன். அப்போது அவர் தமிழகத்தின் முதல்வர். என் காதலைக் காது கொடுத்துக் கேட்டவர், கவலைப்படாதே என் குடும்பத்தில் நிறைய காதல் கல்யாணம்தான். உன் அப்பாவிடம் பக்குவமாகப் பேசுகிறேன்" என்று என் காதலுக்குக் கைகொடுத்தார்.
மறுநாள் காலையில், நான் என் காதலுக்காக கலைஞரைப் பார்த்துவிட்டு வந்த விஷயத்தை அவர் என் அப்பாவின் காதுக்குள் போட்டுவிட்டார். கலைஞரோடு அப்பா பேசி முடித்ததும், என் வீட்டில் அப்பாவின் கோப அலை.
கலைஞரிடம் உன்னைப் போக வைத்தது யார்? எப்படிப் போகலாம்..." என்று பொரிந்து தள்ளிவிட்டு, சரி நந்தினியை வரச் சொல்," என்றதும், எனக்கு சந்தோஷம். நந்தினியை வரவைத்து அப்பாவோடு அரைமணி நேரம் பேச வைத்தேன்.
காதலைப் பற்றிப் பேச வந்தவள், அப்பாவின்கள்ளிக் காட்டு இதிகாசம்நாவலையும்ரிதம்படத்தின் பாடல்களைப் பற்றியும் பேசிய தைரியசாலி நந்தினி. அப்போதுகூட அப்பா இறங்கி வரவில்லை.
எங்கேயும் வெளியே சுற்றாதீர்கள்" என்று கட்டளை போட்டுவிட்டு கவிதை எழுத போய்விட்டார். அவர் சொன்னதிலும் நியாயம் இருந்தது. அமெரிக்காவிலிருந்து என்னைப் பார்க்க நந்தினி இந்தியா வருவதற்குள் அந்த மாத போன் பில் மட்டும் எழுபத்தைந்தாயிரம் கட்டினேன். அப்போது எனக்கு அண்ணா பலகலைக்கழகத்தில் பார்ட் டைம் வேலையில் மாதச் சம்பளமே இருபதாயிரம்தான்.
நந்தினியோடுதான் என் திருமணம் என்ற என் பிடிவாத நியாயத்தை அப்பா புரிந்து கொண்டார். கலைஞர் தலைமையில் என் திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. எங்கள் காதலின் உயிர்சாட்சியாக மகன் ஹைக்கூ வந்து விட்டான். பயணமும் உணவும்தான் எங்களுக்கான புரிதலை , காதலை அதிகப்படுத்தி இருக்கிறது. டாஸ்மேனியாவில் நானும் நந்தினியும் காரில் சுற்றிய 3000 கி.மீ. பயணம், அவளை இன்னும் நெருக்கமாக உணர வைத்தது. என் பாடல்களை நந்தினி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்போது இன்னும் எங்கள் காதல் அடர்த்தியாகி இருக்கிறது.
மொழியை நம்பி ஓடிக்கொண்டு இருப்பவனுக்கு காதல் நல்ல ஆசுவாசம்தான். அதுவும் திரைத்துறையில் ஓடிக்கொண்டிருக்கிற எனக்கும் என் லட்சியத்துக்கும் ஆசுவாசமாக காதல் இருக்க வேண்டிய இடத்தில் நந்தினியை நிற்க வைத்திருக்கிறது காலம். கடல் படத்தில் நான் எழுதிய கீழ்க்கண்ட பாடலைப் போல
மனச தொறந்தாயே... நீ /எங்கிருந்து வந்தாயோ நீ?/ அடியே... அடியே / என்ன எங்க நீ கூட்டிப் போற?

நன்றி - கல்கி 

Monday, May 27, 2013

வெட்கத்தைக்கேட்டால் என்ன தருவாய்? - சினிமா விமர்சனம்

 

பத்து ரூபாய்க்கு பஞ்சு மிட்டாய் வாங்கித்தர்றதுக்குக்கூட த்தகுதியே இல்லாத டொக்கு ஃபிகரை  ஹீரோ உருகி உருகி காதலிக்கறாரு. அந்த டொக்கு ஃபிகரும் இவரை லவ்வுது. 2 பேரும் ஊரைச்சுத்தறாங்க . மேரேஜ்னு பேச்சு வரும்போது அந்த டொக்கு ஃபிகரு ஹீரோவைக்கழட்டி விட்டுட்டு பெரிய இடத்துல செட்டில் ஆகிடுது. 



ஹீரோ சரக்கு அடிச்சு புண் பட்ட மனதை ஆத்திட்டு இருக்காரு. அப்போ ஒரு வீணாப்போனவன்  வீணாப்போன ஐடியா தர்றான். உன்னை எப்படி ஒருத்தி லவ் பண்ணறதா நடிச்சு ஏமாத்தினாளோ அதே மாதிரி நீயும் ஒருத்தியை லவ் பண்ணி ஏமாத்திடு. தானிக்கு தீனி .சரி ஆகிடும்கறான்.

 அந்த கேவலமான ஐடியாவை  ஹீரோ ஃபாலோ பண்ணி இன்னொரு 50 மார்க் சுமார் ஃபிகரை லவ்வறாரு. அதுவும் உருகி உருகி லவ்வுது.என்ன நடந்தது? அப்டிங்கறதுதான் க்ளைமாக்ஸ் . 


இந்த  மோசமான கதையை எவ்வளவு முடியுமோ அந்த அளவு சொதப்பி எடுத்திருக்காரு இயக்குநர் தபு சங்கர் . 



 


15 வருஷங்களுக்கு முன்னால காலேஜ் பொண்ணுங்க வட்டாரத்துல தபு சங்கர் கவிதைகள் செம ஃபேமஸ். அவர் கவிதையை வெச்சே லவ் பண்ணுன ஆளுங்க பலர் உண்டு. ஒரு பிரபல வார இதழில் அவர் எழுதிய தொடர் கவிதைக்கு வெட்கத்தைக்கேட்டால் என்ன தருவாய்?  என டைட்டில் வெச்சு செம ஹிட் ஆச்சு. சேர்த்து வெச்ச எல்லா நல்ல பேரையும் அண்ணன் ஒரே படத்துல  இழந்துட்டாரு, அய்யோ பாவம் .(நேரடித்தமிழ்ப்படம் அல்ல. மலையாள டப்பிங்க் படமாம்)


பிடிச்சிருக்கு பட ஹீரோ அசோக் தான் இதில் ஹீரோ. காதல் , கோபம் , சோகம் என எல்லா காட்சிகளுக்கும்  பெரிதாக ஏதும் அலட்டிக்கொள்ளவில்லை. திரைக்கதைக்கு இயக்குநரே அலட்டாத போது நாம ஏன் சிரமப்பட்டு நடிக்கனும்னு நினைச்சிருக்கலாம்.  பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் . 


சும்மா 10 நிமிஷம் வந்துட்டுப்போகும் ஏமாற்று காதலியாக  தர்ஷணா. சொல்லிக்கற அளவுக்கோ , ஜொள்ளிக்கும் அளவுக்கோ அங்கே ஒண்ணும் இல்லை . சுத்தமா தேறாது 


மெயின் ஹீரோயினாக வரும்  கிருத்திகா  சின்ன சின்ன முக பாவனைகளில் பாஸ் மார்க்கைத்தாண்டி விடுகிறார்.  படம் எப்படியும் தேறாது என்பதை இயக்குநரும் உணர்ந்திருக்க வேண்டும். அதனால் ஹீரோயினுக்கு லோ கட் காட்சிகள் ,மழையில் நனையும் காட்சிகள் , ஸ்லோ மோஷனில் ஓடி வரும் காட்சிகள் வைக்கத்தவறவில்லை. ஆனாலும் ஒரு காட்சி கூட மனதைக்கவரவில்லை 


கஞ்சா கருப்பு , மயில் சாமி சம்பந்தப்பட்ட காட்சிகள் காமெடி வறட்சியையே காட்டுகிறது 



 

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 



1. படத்தின் டைட்டில் கவித்துவமாக இருப்பதும் , அது ஆல்ரெடி மக்கள் மனதை கவர்ந்திருப்பதும் 



2. இது மலையாள டப்பிங்க் என்பது தெரியாத வண்ணம் போஸ்டர் டிசைன் வடிவமைத்தது 


3. தரை டிக்கெட்  தரை டிக்கெட் குத்தாட்டப்பாட்டு இசை இமான் பெயரைக்காப்பாற்றுகிறது . செம ஹிட் சாங்க் . ஆனால் விழலுக்கு இறைத்த நீர் தான் 


4. காதலுக்கு ட்யூஷன் எடுக்கும் தபு சங்கர் டச் வசனங்கள்


 



இயக்குநரிடம் சில கேள்விகள் 



1. உண்மையான காதல் கொண்ட ஒருவன் தன் காதலி துரோகம் செய்தாலும் அவள் நினைவாகவும் , அவள் நல விரும்பியாகவும் தான் இருப்பான். சம்பந்தம் இல்லாம வேற ஒரு பொண்ணை லவ் பண்ணி ஏமாத்த நினைக்க அவன் ஒண்ணும் சைக்கோ இல்லையே?



2. படத்துக்கு முக்கிய சீனாக ஹீரோயின் முகத்தை ஹீரோ ஓவியமாக வரைவதும் நிலா ஓவியத்தில் ஹீரோயின் முகம் இருப்பதும் தான். ஒரு நல்ல ஓவியரை வைத்து அந்த காட்சியை மெருகேற்றி இருக்கக்கூடாதா? கிராஃபிக்ஸ் சொதப்பல் 


3. ஹீரோவின் ஃபிளாஸ் பேக் கதையை அப்படியே காட்சியாக காட்டினால் போதாதா? எதுக்கு பின்னணியில்  செய்தி வாசிக்கற மாதிரி காட்சியை படிச்சு காட்ட ஒரு ஆள்? 



4. க்ளைமாக்ஸில் இன்ஸ்பெக்டர் ஹீரோவைக்கொலை செய்ய நினைச்சா ஈசியா கொன்னிருக்கலாம். சும்மா 2 தட்டு தட்டிட்டு அப்டியே விட்டுடறாரு. ஹீரோ உயிர் பிழைச்சதும் அய்யய்யோ என அடிச்சுக்கறாரே? இவர் போலீஸ் சர்வீஸ்ல ஒரு ஆளை எப்படி அடிச்சா சாவான்?னு தெரியாதா? ஆள் இருக்கானா?  போய்ட்டானா? என செக் பண்ணக்கூட சோம்பேறித்தனமா? 


5. கஞ்சா கருப்பு தனி காமெடி டிராக் படு திராபை . அவர் கத்தி கத்திப்பேசுவது சிரிப்பை வர வைப்பதற்குப்பதில் எரிச்சலைத்தான் வர வைக்குது.காமெடி டிராக்கையும் தபு சங்கரே எழுதி இருப்பது இன்னொரு கொடுமை 


 


6. கதை , திரைக்கதை , வசனம் - தபு சங்கர். அப்படி இருக்கும்போது அனைவரும் அறிந்த  அவர் எழுதிய ஒரு கவிதையை ஹீரோயின் படிப்பதும் அட , இந்த வரி தபு சங்கர் எழுதியது என காட்சி வைப்பதும் கலைஞர் பாணி தம்பட்ட காட்சி 


7. காட்சிகள் ஒவ்வொன்றும் நாடகம் பார்ப்பது போல இருக்கு.  எடிட்டிங்க் மகா மோசம் . பின்னணி இசைக்கு இமான் கொஞ்சம் கூட மெனக்கெடவே இல்லை 


8. லவ்வர் பாயாக வரும் ஹீரோ க்ளைமாக்ஸில் கேப்டன் ரேஞ்சுக்கு லெக் ஃபைட் போடுவதும், பேக் கிக் ,பறந்து பறந்து தாக்குவதும் செம காமெடி 



9. டைட்டிலில் இருக்கும் காதல் நயம்,  கவித்துவம் படத்தில் , திரைக்கதையில் ஒரு காட்சியில் கூட இல்லை


10. காதலியை லாரி விபத்தில் இருந்து காப்பாற்றி தான் அடிபடும் காதலனின் முயற்சி படு டிராமாடிக் சீன். படமாக்கப்பட்ட விதமும் மோசம் 




 மனம் கவர்ந்த வசனங்கள்





1.காதல் அமைவதெல்லாம் காதல் கொடுத்த வரம்



2. எனக்குன்னு தனி ஆசை ஏதும் இல்லை.உன் ஆசைகளை நிறைவேற்றுவதே என் ஆசை


3. ஆண் அளவோட தண்ணி அடிக்க 1000 காரணம் இருக்கும்.ஆனா அளவில்லாம தண்ணி அடிக்க 2 காரணம் தான் 1 பொண்டாட்டி டார்ச்சர் 2 லவ் பெய்லியர்



4. ஒரு பொண்ணுக்கு மேரேஜ் ஆனா 2 குடிகாரர்கள் உருவாகிறார்கள். 1 பழைய காதலன் 2 புது புருஷன் 



5.  காதல்ல விளையாடலாம், ஆனா கல்யாணத்துல? ஏன்னா அது சீரியஸ் மேட்டர் 




6.  தப்பு பண்ணினவளுக்கே இவ்ளவ் நல்ல லைஃப் வரும்போது   நல்லவனுக்கு  ஏன் நல்ல லைஃப்   வரக்கூடாது? 



7.  என் சைஸ் என்ன? சொல்லு பார்ப்போம்?


 தெரியாதே?

 தன் காதலியின் உடல் அளவை கண்ணாலயே அளந்து விடுபவன் தான் உண்மையான காதலன் 




8.  ஆமா , நான் பொறுக்கி தான். லட்சக்கணக்கான பொண்ணுங்க இங்கே இருக்கும்போது உன்னை மட்டும் பொறுக்கி எடுத்து லவ் பண்ணினனே? நான் பொறுக்கிதான் . 


9. உலகத்தையே மறந்து கிடப்பது ரொம்ப சுலபம், ஆனா காதலிச்ச பொண்ணை மறப்பதுதான் உலகத்துலயே ரொம்ப கஷ்டமான விஷயம் 



10.  மனோபாலாவைக்காட்டி - இந்த ஆளை அடிச்சா ரத்தம் வருமா? சத்தமே வராது 


 



11.  நான் 5 பேரை லவ் பண்றேன்


 நவீன பாஞ்சாலியா? 


 அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி ,தங்கை 


12. ஆஹா, அவளை மடக்கறதுக்கு அவளே ஐடியா தர்றாளே? 



13.  அடியாளுங்க வெச்சு அடிக்கற அளவுக்கா நான் பெரிய  ஆள் ஆகிட்டேன்? 


14. பசங்களை அறையற பொண்ணுங்கதான் அவனை லவ்  பண்ணுவாங்க. இன்னைக்கு அறைவாங்க, நாளைக்கு லவ்வுவாங்க 

 என்னமோ இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்  அப்டிங்கற மாதிரி பேசறியே? 



15. என்னை லவ் பண்றேன்னு சொல்லிட்டு அப்புறமாத்தானே கிஸ் பண்ணி இருக்கனும் ? எதுக்கு முன்னாடியே கிஸ் பண்ணினே? 



16.  சிட்டில இருக்கும் பொண்ணுங்கள்ல இருந்து சின்னாளப்பட்டில இருக்கும் பொண்ணுங்க வரை காதல்னா வெட்கம் வரும்


17/  எச்சில் தான் காதல் உலகில் ஃபெவிகால். காதலை அது ஒட்ட வைக்கும்   


18,.  டியர், நீ தான் எனக்கு பெட் அனிமல் 


19.  கடவுள் உதட்டைப்படைச்சதுக்கு ஒரே காரணம் - முத்தம்



20. எத்தனை நாள் ஆனாலும் கெட்டே போகாத பால் இன்பத்துப்பால் 


 


21.  இப்போதானே குட் நைட் சொன்னே? மறுபடியும் ஏன் சொல்றே?  லவ்வர்ஸ்னா ஒரு நாளுக்கு 3 டைமாவது குட் நைட் சொல்லனும்


22.  இதுக்குள்ளே தான் என் காதலே இருக்கு 


 காதலை சமைச்சு கொண்டு வந்துட்டியா? 


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 33


குமுதம் ரேங்க் - மோசம் 


 ரேட்டிங்க் -     1  / 5 



 சி பி கமெண்ட் - கடந்த 25 வருடங்களில் வந்த  டாப் டென் மோசமான படங்கள் லிஸ்ட் எடுத்தால் இதுக்கு முதல் இடம் கிடைக்கலாம். டி வி ல போட்டாக்கூட பார்த்துடாதீங்க மக்களே. முடியல