Monday, April 22, 2013

உதயம் NH4 - சினிமா விமர்சனம்

 

காலேஜ் படிக்கற பணக்காரப்பையன் லஞ்ச் டைம்ல மத்த ஏழைப்பசங்களை எல்லாம் கேலி பண்ணுவான். என்னடா எப்போப்பாரு பழைய சோறு , கடிச்சுக்க மோர் மிளகாய், வெரைட்டியே கிடையாதா அப்டினு நக்கல் அடிப்பான்.அப்பேர்ப்பட்ட அபாடக்கர் பையன் ஒரு நாள் எல்லாப்பசங்களையும் கூட்டிட்டு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்க்கு போனான். அங்கே பிரம்மாண்டமா டெக்ரேஷன் எல்லாம் பண்ணி ஒரு அயிட்டம் கொண்டு வந்தாங்க, பேரு ஐஸ் பிரியாணி , அட வெண்ணெய் , அதுதாண்டா பழைய சோறு. 


அந்த பணக்காரப்பையன் தான் எப்போ பாரு எல்லாரையும் குறை சொல்லிட்டே இருக்கும் வெற்றி மாறன். அந்த ஏழைப்பசங்க தான் நாளைய இயக்குநர்கள். எதுக்கு இந்த தேவை இல்லாத முன்னுதாரணம்னா அண்ணன் வெற்றி மாறன் கலைஞர் டி வி ல குறும்பட விமர்சனத்துல ஜட்ஜா தீர்ப்பு சொல்லும்போது “ என்னய்யா படம் , ஒரு புதுமை வேணாமா?ன்னு கலாய்ப்பார். அப்பேற்பட்ட அவரு எங்கே ஒரு புதுமையான படம் கொடுத்துடுவாரோன்னு பயந்துட்டே இருந்தேன், அண்ணன் அரைச்ச மாவைத்தான் அரைச்சிருக்காரு , ஆனாலும் ஸ்டைலிஸா இருக்கு , ஹி ஹி

அழகிரி மாதிரி ஒரு மினிஸ்டர், அவருக்கு  ஒரு பொண்ணு, தான் லவ் பண்ற பையன் கூட ஓடிடுது . அதுக்கு இன்னும் 18 வயசு ஆகலை. இன்னும் 1 நாள் தான் இருக்கு . அந்த ஒரு நாளுக்குள்ளே அவங்களைப்பிடிச்சாகனும், இல்லைன்னா பாப்பா மேஜர் ஆகி இன்னொரு பாப்பாவுக்கு அம்மா ஆகிடும்.

 



அதனால மினிஸ்டர் போலீஸ்  ஆஃபீசர் உதவி கேட்கறாரு.அவரு ஆல்ரெடி இல்லீகலா ஒரு என்கவுண்டர் கேஸ்ல மாட்டினவர் தான்.மினிஸ்டர் தான் காப்பாத்தி விட்டாரு. அந்த நன்றிக்கடனுக்காக பர்சனலா மினிஸ்டருக்கு இந்த உதவி பண்றாரு . எப்படி என்பதைத்தான் சுவராஸ்யமா திரைக்கதைல சொல்லி இருக்காங்க . 


 நான் - லீனியர் ஸ்க்ரீன்ப்ளே அப்டினு ஒரு யுக்தி இருக்கு . அதாவது முதல் ஷாட்ல நயன் தாரா - பிரபு தேவாவை காட்டுவது , அடுத்த ஷாட்ல நயன் தாரா - சிம்பு வை காட்டுவது ,3 வது ஷாட்ல ஆர்யா - நயன் தாராவைக்காட்டுவது , இப்படி மாத்தி மாத்தி கதை சொல்லி சுவராஸ்யமா முடிச்சை அவிழ்ப்பது தான் நான் - லீனியர் மெத்தேட்.


 படத்துல முதல் ஹீரோ அந்த போலீஸ் ஆஃபீசரா வ்ர்ற  கே கே மேனன் தான் . பட்டாசான நடிப்பு , தூர் தர்ஷன் ல வாரா வாரம் திங்கள் கிழமை சுராக் அப்டினு ஒரு க்ரைம் த்ரில்லர் தொடர் வரும் அதுல ஹீரோவா நடிப்பவர் போலவே முகச்சாயல். ஆனா பாடி லேங்குவேஜில் மனிதர் அசத்திட்டார். தமிழ் சினிமாவுக்கு முக்கியமான ஒரு வில்லன் கிடைச்சுட்டார்னு தாராளமா சொல்லலாம். இவர் போலீசாக கெத்து காட்டுவதும், அவரோட சம்சாரத்து கிட்டே ஃபோன் வரும்போதெல்லாம் பம்முவதும் அபாரம். ( போலீசா இருந்தாலும் பொண்டாட்டி கிட்டே பம்மித்தான் ஆகனும் போல ) 



அடுத்த ஹீரோ சித்தார்த்.ஆண்ட்ரியாவை மிஸ் பண்ணின அனிரூத் மாதிரி மூஞ்சியை ஏன் அப்டி வெச்சிருக்கார்னு தெரியல. இந்த மாதிரி பர பர ஆக்‌ஷன் திரைக்கதைக்கு ஹீரோ முகம் மவுன ராகம் கார்த்திக் மாதிரி , சச்சின் விஜய் மாதிரி  செம ஜாலியா கலாய்ச்சுக்கிட்டு இருக்க வேணாமா? பீமா விக்ரம் போல் ஜிம் பாடி வெச்சுக்கிட்டு , தில் விக்ரம் போல் ஃபைட் சீனில் கலக்கி இருக்க வேணாமா?  கிடைச்ச பிரமாதமான சான்சை அட்டகாசமா கோட்டை விட்டிருக்கிறார் சித்தார்த் .


ஹீரோயின் அஷ்ரிதா ஷெட்டி .சாதா இலந்தைப்பழத்தை விடுங்க , கொஞ்சம் பெரிய சைஸ்ல ஒரு இலந்தைப்பழம் வருமே அந்த மாதிரி வழு வழுப்பான கன்னம் .ரோஸ் கலர்ல இருக்குமே தர்பூசணிப்பழம் ( கோஷாப்பழம் ) அதுல 2 பீஸ் கட் பண்ணின மாதிரி உதடு , நாவல் பழம் மாதிரி கண்ணு ( போன ஜென்மத்துல ஃப்ரூட் ஸ்டால்ல வேலை செஞ்சியா? ) . பொட்டு வைக்காமயே லட்சுமிகரமான முகம் தான் . ஃபிகருக்கு 70 மார்க் கண்ணை மூடிட்டு கொடுக்கலாம் ( காசா? பணமா? அள்ளி விட்றா அழகேசா) இவருக்கு ஆடை வடிவமைப்பு பிரமாதம் . எல்லா வகை மாடர்ன் டிரஸ்சும் ஓக்கே . ( ஒரு சீன்ல ஸ்லோ மோஷன் ல ஓடி வரும்போது ........ )


அடுத்தது நம்ம ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்ன் உழைப்பு. மிகப்பிரமாதம் .இசை ஜி வி பிரகாஷ்குமார். கானாப்பாட்டில் தேவாவின் சாயல் . மொத்தம் 3 பாட்டு ஹிட் . 




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. நேரடியாக சாதா \திரைக்கதையில் கதையை சொல்லி இருந்தால் படம் சுமார் படமாகி சராசரி ஆகி இருக்கும் . அதைப்புரிந்து  புது முக இயக்குநர்  மணிமாறன் ( வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் )  மிகச்சிறப்பாக இயக்கி இருக்கிறார் ( கதை , திரைக்கதை அண்ணன் வெற்றி மாறன் ) 


2. ஹீரோயின் செல்க்ஷன் . வில்லன் செலக்‌ஷன் , லொக்கேஷன் செலக்சன், டெம்ப்போ ஏற்றும் காட்சிகள் எல்லாம் குறிப்பிட வேண்டியவை 

3. போலீஸ் ஆஃபீசரின் மனைவி ஃபோன் மூலம் டார்ச்சர் செய்வதை ஒரு சிறுகதையாக சொன்ன விதம் ( கடைசி வரை போலீஸின் மனைவியை  காட்டாமல் விட்டது புத்திசாலித்தனம் )


4. செல் ஃபோன் , சிம் கார்டு மாற்றங்கள் இவற்றை வைத்து ஹீரோ போலீஸ்க்கு தண்ணி காட்டும் உத்திகள் 


5. படத்துக்கான போஸ்டர் டிசைன் , விளம்பர உத்திகள் , நல்ல தியேட்டர்களை தமிழகம் எங்கும் புக் செய்தது  எல்லாமாகச்சேர்ந்து ஏ செண்ட்டர்களில் இந்தப்படம் அமோக வரவேற்பு பெறும் வாய்ப்பு 


6. ஓவரா உணர்ச்சி வசப்படும் சின்சியர் டியூட்டி கான்ஸ்டபிள் கேரக்டரின் அசத்தலான  நடிப்பு  ( செம காமெடி )


7.ஓரக்கண்ணாலே கானாப்பாட்டுக்கு தியேட்டர் அதிர்கிறது. செம மேக்கிங்க் 


8. யாரோ இவன் யாரோ இவன் பாட்டுக்கான ஆர்ட் டைரக்‌ஷன் கலக்கல். அதே போல் அந்த கிளப் டேன்ஸ் ஓப்பனிங்க்ல வருவதும் செம






 இயக்குநரிடம் சில கேள்விகள்  ( திரைக்கதை வெற்றி மாறன் என்பதால் அவருக்கும் பங்கு உண்டு ) 


1. ஹீரோயின் காலேஜ் படிக்கறா. ஆனா மேஜர் ஆகலை. அதாவது 18 வயசு ஆகலை . இதுதான் படத்தின் மெயின் மேட்டர். யாரா இருந்தாலும் பிளஸ் டூ முடிச்சாலே 18 வயசு ஆகிடும் .  காலேஜ் வரும்போதே 19 ஆகி இருக்கும். காலேஜ் 3 வது வருஷம் படிக்கும் பொண்ணுக்கு 18 வயசு ஆகி இருக்காதா? நல்ல வேளை ஃபிகர் இன்னும் வயசுக்கே வர்லைன்னு சொல்லாம விட்டாங்க . ( ஹீரோயின் முகம், மற்ற சமாச்சாரங்களைப்பார்த்தா எப்படியும் 25 வயசு இருக்கும் .) அப்டியாவது பிஞ்சு முகம் உள்ள ஃபிகரை ஹீரோயினா போட்டாங்களா? 


2. ஓடிப்போகனும்னு பிளான் போட்டவங்க  ஒரு நாள் கழிச்சு ஓடி இருக்கலாமே? 18 வயசு ஆகி இருக்குமே? ( ஆனா படமே அதுல தான் இருக்கு ) 


3. ஹீரோவுக்கு ஹீரோயினோட அப்பாவைத்தெரியாது. அதனால மினிஸ்டர் காரைப்பார்த்ததும் லிஃப்ட் கேட்கறார். ஓக்கே . ஆனா ஹீரோயினுக்கு அப்பா கார் தெரியும் , பக்கத்துலயே கல்லுளி மங்கி மாதிரி நிக்க்றவர் ஏன் காதலனை  வார்ன் பண்ணலை? அது அப்பா கார். போகாதேன்னு சொல்லி இருக்கலாமே? 


4. ஹீரோ , ஹீரோயின் இருவரும் அன் ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட்ல போறாங்க. இன்ஸ்பெக்டர் டி டி ஆர் கிட்டே அவங்களைப்பற்றி விசாரிக்கும்போது அவர் எல்லாத்தகவலும் சொல்றாரு. எந்த ஊர்ல எந்த டி டி ஆர்க்கு அன் ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட் பேசஞ்சர்ஸ் பற்றி தெரியும்? 


 



5. ரயில்வே ஸ்டேஷன் வரும் எஸ் ஐ ஹீரோயினை கையைப்பிடிச்சு இழுத்துட்டுப்போறார். அப்போ ஹீரோவோட ஃபிரண்ட்ஸ் எல்லாம் என்ன செஞ்சாங்க ? அவங்களை காட்டவே இல்லையே? 


6. இந்தக்காலத்து ஃபிகருங்க எல்லாம் விபரமானவங்க. கமுக்கமா இருப்பாங்க. அப்பா மினிஸ்டர் , லவ் ஏத்துக்க மாட்டார்னு தெரிஞ்சும் லூஸ் மாதிரி தன் லவ்வர் கூட எடுத்த ஃபோட்டோக்களை ஃபேஸ் புக்ல அப்டேட் பண்ணுதே , எப்டி?


7. இந்தக்காலத்துல ஃபிகர் கிடைப்பதே உன் பாடு என் பாடுன்னு இருக்கு. இந்த லட்சணத்துல ஹீரோயின்  ஹீரோ ரூம் க்கு தேடி வந்து கில்மாவுக்கு கூப்பிடறா. ஹீரோ பெரிய இவராட்டம் வேதாந்தம் பேசி அவளைத்திருப்பி அனுப்பிடறாரே? அந்த அளவு யோக்கிய சிகாமணி இந்த உலகத்துல யாராவது இருக்காங்களா?  ( சீன் போச்சேங்கற ஆதங்கம் தான் ) 


8. எஸ் ஐ ஐ கார்ல கை விலங்கோட மாட்டி எஸ் ஆகும் ஹீரோ ஏன் லூஸ் மாதிரி விலங்கோட சாவியை விட்டுட்டுப்போறார்? 


9. க்ளைமாக்ஸ்ல ஒரு லிப் டூ லிப் கிஸ் இருக்கு. கிளுகிளுப்புக்கு நன்றி, ஆனா  யாருமே இல்லாத தனி ரூமிலேயே கிஸ் பண்ணாத ஒரு யோக்கியன் நடு ரோட்ல இன்னொரு ஆம்பளைக்கு முன்னால அப்டி கிஸ் அடிப்பானா? ( இதுவும் ஸ்டொமக் பர்னிங்க் தான் , 2 நிமிஷம் பாவி அந்த உதட்டை விடவே இல்லை ) 


 



 மனம் கவர்ந்த வசனங்கள் 



1. நம்மளை விட இங்க்லீஷ் நல்லா பேசறான், கான்வெண்ட் ல படிச்சிருப்பான் போல 


2. பெங்களூர்ல படிக்காம இருக்கலாம், சரக்கு அடிக்காம எப்டி இருக்க முடியும் ? 


3. இந்த மாதிரி எல்லாம் இருந்தா பொண்ணுங்களை கரெக்ட் பண்ண முடியாது . எப்டின்னு ஸ்டெப் பை ஸ்டெப் சொல்லித்தர்றேன் இரு 


4. கண்டிப்பா ஷூ போட்டுட்டுத்தான் பார்ட்டிக்கு வரனும்னு சொன்னேனே? 

 சொன்னே. ஆனா ஷூ போட்டுட்டு வர்லைன்னா பார்ட்டிக்கு உள்ளே விட மாட்டாங்கன்னு சொல்லலையே? 



5. சொல்றேனேன்னு  கோவிச்சுக்காதே, இவ்ளவ் மொக்கையான பொண்ணை நான் பார்த்ததில்லை 


6. அந்தப்பசங்களுக்கு 2 மேட்டர் தான் தெரியும்  1. சரக்கு 2 ஃபிகரு 



7.போலீஸ் வேற வேலையா வந்திருப்பாங்க, நம்மைத்தேடி இல்லை, முகத்தை கேசுவலா வெச்சிரு 

------


 ஏண்டா இப்படி வெச்சிருக்கே முகத்தை ?

 ஹி ஹி கேசுவலா இருக்கேன் 



8. மைனர் பொண்ணை கிட்நாப் பண்ணா 7 வருஷம் கடுங்காவல் தெரியுமில்ல? 


9. டேய், நாம தாண்டா அவளை சப்போர்ட் பண்ணனும் 

 ம்க்கும், நமக்கே சப்போர்ட் இல்லை 



10 . மச்சி , சரக்கு ஃபிரீயா கிடைக்கும்போது எப்டிடா  சரக்கு அடிக்கறதை விட முடியும் ? 


 



11. மச்சான் , ஹெல்த் ஈஸ் வெல்த். நீ மட்டும் குடிக்கக்கூடாது , நான் குடிப்பேன் ஹி ஹி 


12. இந்த ஒரு தடவையாவது எங்கப்பா பேரு  ஒரு நல்லதுக்கு யூஸ் ஆகட்டுமே?


13. நீ எப்படி இந்த மாதிரி பேலன்ஸ்டா, மெச்சூரா, புரொஃபஷனலா இருக்கே? ஐ லைக் யூ டா



14. இங்கே பாரு . நீ செத்துட்டா நானும் சாக மாட்டேன். நாம வாழனும் , சேர்ந்து வாழனும் 


15 . போலீஸ்  எஸ் ஐ - என் கழுத்துல அவன் பிளேடு வெச்சுட்டாண்டா


 சார், அவன் ஏன் உங்களுக்கு இந்த நேரத்துல ஷேவிங்க் பண்றான் ( பயங்கர அப்ளாஸ் ) 


16. என்னடா  மாப்ளை , சரக்கடிச்சேன்னு இபடி ஜாலியா சொல்றே?


 மச்சான்,ஜாலியா சரக்கடிச்சதை  ஜாலியா சரக்கடிச்சேன்னுதானே சொல்ல முடியும்?


17. உன் கூட பேசும் போது தான், தனியா பேசற மாதிரி இருக்கு  (இந்த வசனம் மட்டும் விடுபட்டுடுச்சு, சுட்டிக்காட்டிய க்கு நன்றி )





 சி.பி கமெண்ட் - ஏ செண்ட்டர்களில் இது நல்லா ஓடும் , பி சி சுமாராத்தான் போகும் ,  டோட்டலா இது ஒரு வெற்றிப்படமே . லவ்வர்ஸ் , வெற்றி மாறன் ரசிகர்கள் , காலேஜ் ஸ்டூடண்ட்ஸ், பார்க்கலாம் . மீரா, திருடா திருடா, தாம் தூம் ,மாதிரி ரன்னிங்க் ஃபிலிம் ( அதாவது படம் பூரா ஹீரோ , ஹீரோயின் ஓடிட்டே  இருப்பது )களை ரசித்தவர்கள் இதையும் தாராளமாக ரசிக்கலாம்


 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 41


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 


 ரேட்டிங்க் -  3 / 5 



கரூர் உப்பிடமங்கலம் பெண் அர்ச்சகர் சிவராணி பேட்டி

நம்மால் முடியும்!

கருவறையில் பெண்கள்!

பூஜைக்கு வந்த மலரே...

பூஜை செய்யும் உரிமையை பெண்களுக்கும் தர வேண்டும் என வலியுறுத்தும் வித்தியாசமான கிராமம் உப்பிடமங்கலம்... ஆண்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருக்கும் இக்காலத்தில் கரூர் உப்பிடமங்கலம் கிராமத்தில் உள்ள கோயில் நிர்வாகியான சிவராணி, தன்னைப் போன்று பல பெண் அர்ச்சகர்களையும் கடவுள் வழிபாட்டில் ஈடுபடுத்துவது ஒரு சிறந்த முன்னுதாரணம்.
மார்கழி காலைப்பொழுது, நகரப் பேருந்தை விட்டிறங்கி கிராமத்து மண்ணில் கால் பதிக்கிறோம். காற்றில் மிதந்து வருகின்றன பன்னிரு திருமுறைப் பாடல் வரிகள். எதிர்ப்படும் நபரிடம் கேட்கிறோம்.
அய்யா... இங்கு பெண்களே அர்ச்சகர்களாக?..." அடியார்க்கு எளியர் கோயிலை அடையாளம் காட்டினார் அவர்.
அடியார்க்கு எளியன் சிற்றம்பலவன்
கொற்றங் குடியார்க்கு எழுதிய கைச்சீட்டு படியின் மிசைப்
பெற்றான் சாம்பானுக்கு பேதமுறத் தீக்கை செய்து
முத்தி கொடுக்க முறை."

இன்பத் தேனாய் நம் செவிகளுக்குள் வந்து பாய்கின்றன. இது ஓலைச்சுவடியில் சிவபெருமானே, தம் கைப்பட எழுதிய பாடல் எனச் சொல்லப்படுகிறது.
கோயிலை வந்தடைகிறோம். உட்பிராகரத்தில் சுவாமியின் வலதுபுறம், சிறிய ஐம்பொன் சிலைகளாக நால்வரான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தருடன், அர்த்தநாரீஸ்வரரும் காட்சி தருகிறார். எதிரே உற்சவ மூர்த்தியாக கிளிசேர் மொழிமங்கை உடனமர் அடியார்க்கு எளியர் (சேயிலைச் செல்வர்) ஐம்பொன் சிலைகளாக அருள்பாலிக்கிறார். அதனைக் கடந்தால் எதிரே தெரிவது கிழக்கு நோக்கிய கருவறை. ஈசன், லிங்கத் திருமேனியாக காட்சியளிக்கிறார். அந்தக் கருவறையில் இடது கையில் மணியும், வலது கையில் விபூதி கற்பூரத் தட்டுமாக ஒரு பெண்!
தமிழில் மந்திரங்களைப் பாடி ஈசனுக்கு அர்ச்சனை செய்கிறார் கோயிலின் பெண் அர்ச்சகரான சிவராணி. இக்கோயிலின் நிர்வாகியும் அவரே.
ஈசன் கருவறையில் ஒரு பெண்ணாகிய நீங்கள் எப்படி?" என்றோம்.

புன்முறுவலுடன் எல்லாம் ஈசன் செயல். நானும் என் கணவரும் சிவனடியார்கள். சிவன் கோயில்களில் உளவாரப் பணி செய்து வருகிறோம். ஒருமுறை எங்கள் ஊரின் அருகிலுள்ள பாழடைந்த சிவன் கோயிலில் உளவார பணி செய்த போது தொடர்ந்து எதிர்ப்புகள் ஏற்படவே பணியைத் தொடர முடியவில்லை. கோவையிலுள்ள மணிவாசக மன்றத்திலுள்ள எங்கள் குருநாதரிடம் கூறி வருந்தினோம்.
சில நாட்களில் குருநாதரிடமிருந்து தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. ‘எங்களிடம் சிவலிங்கம் ஒன்று உள்ளது. எடுத்து வருகிறோம். பிரதிஷ்டை செய்ய இடம் ஏற்பாடு செய்என்றார். எங்கள் வீட்டு முற்றத்திலேயே ஒரு பகுதியைக் கொடுத்தோம். இரவோடு இரவாக வேலை ஆரம்பித்தோம். கருவறைக்குத் தோண்டிய இடத்தில் திருக்கைலாய மலை உச்சியைப் போன்றே ஒரு பாறை இருந்தது. சிவனடியார்கள் பலர் வந்து பார்த்து வியந்தனர். ஒரு ரூபாய்கூட கூலி கொடுக்காமல் கொத்தனார் மற்றும் பெண்ணடியார்களைக் கொண்டுக் கட்டப்பட்ட கோயில் இது. தினமும் நான்கு கால பூஜைகள் உண்டு.
என் கணவர் வேலைக்குச் சென்று விடுவதால் நானே பூஜை செய்கிறேன். முதலில் எதிர்ப்புகள் வந்தன. இங்கு வரும் பெண்களையும் பூஜை செய்ய அனுமதித்தேன். எங்கள் ஈசன் முன் சாதிமத பேதமின்றி அனைவரும் சமம் என்பதை இங்கு நிறுவியுள்ளோம்.
பி. ஆங்கில பட்டதாரியான நான் சைவசித்தாந்தம் இரண்டு வருடம், தமிழில் குடமுழுக்கு வேள்விக்கான படிப்பு, தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் மூலமாக இரண்டு வருட அர்ச்சகர் படிப்பு ஆகியவை கற்று பணியாற்றி வருகிறேன்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் முக்கியமானவர் திருநீலநக்க நாயனார். அவரது மனைவியார் கருவறையில் சிவபூஜைகள் செய்து வழிபட்டு வந்துள்ளார். ஆக, இறைவன் கருவறையில் பெண்கள் இருந்து வழிபடுவது அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது. இடைக்காலத்தில் ஏதும் இல்லாதிருக்கலாம். பெண்களும் அர்ச்சகப் பணியில் ஈடுபடலாம். அதனை நாங்கள் நிரூபித்துள்ளோம். முழுவதும் தமிழிலேயே மந்திரங்களைப் பாடி வழிபடுவது எங்களின் தனிச்சிறப்பு. மனம், வாக்கு, மெய் (உடல்) மூன்றும் தூய்மையாக இருந்தால் போதும்!" எனச் சொல்கிறார் சிவராணி.


நன்றி - கல்கி

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்


அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 1

-கரு.முத்து
                       
பாரம்பரியமும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் தற்போது அரசுடைமையாக்கப்பட்டிருக்கிறது.முதுபெரும் அறிஞர்களையும், தமிழ்ப் புலவர்களையும் உருவாக்கிய இந்த பல்கலைகழகத்தில்தான் திராவிட இயக்கத்தலைவர்களில் பெரும்பாலோனோர் உருவானார்கள்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் பெரும் தீயாய் கிளம்பியபோது இங்கு படித்த மாணவர்கள் காட்டிய கடுமையான இந்தி எதிர்ப்பு ராஜேந்திரன் என்ற மாணவரை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாக்கியது. வரலாறு, இசை, பொறியியல், சமூகம், பொருளாதாரம்,வேளாண்மை,மருத்துவம்,கலை,விளையாட்டு என்று எல்லா துறைகளும் இயங்குகின்றன.

தற்போதைய நிலையில் 12,600 ஆசிரியர்கள் மற்றும்  பணியாளர்கள் பணிபுரிகிறார்கள்.முப்பத்தைந்தாயிரம் மாணவர்கள் கல்வி பயிலுகிறார்கள். இங்கு இயங்கும் தொலைதூர கல்வி நிலையத்தின் மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் பட்டம் பெறுகிறார்கள்.இவ்வளவு பெருமைக்குரிய எம்.ஏ.எம் ராமசாமிக்கு சொந்தமான இந்த பல்கலைகழகம் தற்போது அவரிடமிருந்து பறிக்கப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. அது ஏன்? அரசுடைமையாக்கப்பட்டதன் காரணம் என்ன?
முதலில் அண்ணாமலை பல்கலைகழகத்தின் வரலாறு...

செட்டிநாடு பகுதியில் அரசோட்சிக் கொண்டிருந்த அண்ணாமலை செட்டியார் வட மாவட்டங்களில் கல்வியின்மை மற்றும் மேல்படிப்புக்கு வசதி இன்மை ஆகியவற்றை அறிந்து, அதனை போக்க சிதம்பரம் வந்து தன்னுடைய சொத்திலிருந்து சில லட்சங்களை செலவழித்து  மீனாட்சி கல்லூரி என்ற பெயரில் ஒரு கல்லூரியை தொடங்கினார்.அந்த நேரத்தில் சுவாமி சகஜானந்தர் சிதம்பரத்தில் நந்தனார் கல்விக் கழகத்தை தொடங்கி கல்விக் கூடம் ஆரம்பித்தார். இரண்டுக்கும் போட்டி வந்துவிடக் கூடாது என்பதற்காக இருவரும் சந்தித்து பேசி நந்தனார் கல்வி கழகம் பள்ளிப்படிபையும், மீனாட்சிக் கல்லூரி மேல் படிப்பையும் வழங்குவது என்று முடிவெடுத்து செயல்படுத்தினார்கள்.

ஒரு சில மேல் படிப்புகளோடு துவங்கிய மீனாட்சி கல்லூரியின் சேவை அதிகரித்து இன்னும் அதிக மக்களை சென்றடைய ஆரம்பித்தது.அதனால் இன்னும் பெரிதாக்க விரும்பினார்.அதன் விளைவாக இருபது லட்சம் ரூபாயையும் ஊராட்சி பிரதிகளிடம் ஒப்படைத்து கல்லூரியை பல்கலைகழகமாக ஆக்கினார்.1928 ஆம் ஆண்டு மீனாட்சி கல்லூரி அண்ணாமலை பல்கலைகழகமாக உருவெடுத்தது. இதில் அண்ணாமலை செட்டியார் அவரது காலத்துக்குப் பின் அவரது வாரிசுகள் ஆகியோருக்குத்தான் எல்லா அதிகாரங்களும் இருக்கும் வகையில் பல்கலைகழக சட்டம் உருவாக்கப்பட்டது.அந்த சட்டத்தில்தான் தமிழகத்தை சேராத வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு கல்வி பயில அனுமதி இல்லை என்ற விதியும் இருக்கிறது.

அன்றிலிருந்து இன்றுவரை அண்ணாமலை செட்டியார், முத்தையா செட்டியார், ராமசாமி செட்டியார் என்று செட்டியார் குடும்பத்தினர் பல்கலைகழகத்தின் இணைவேந்தராக சர்வ அதிகாரம் படைத்தவர்களாக விளங்கினார்கள்.முந்தைய இருவர் இணைவேந்தராக இருந்த காலகட்டத்தில் பல்கலைகழகம் சிறப்பான முறையில் கல்விச்சேவையை அளித்து வந்தது மறுப்பதற்கில்லை.

முத்தையா செட்டியாரின் காலத்தில் பல்கலையை அரசுடைமையாக்க முயற்சித்தார் அப்போதைய முதல்வரான எம்.ஜிஆர். இதை தெரிந்துகொண்ட முத்தையா செட்டியார், எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து பல்கலைகழகம் உருவாக்கப்பட்டதன் காரணத்தை விளக்கி, கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நிலையை எடுத்துச் சொல்ல,அப்போது அரசுடைமையாக்கும் முயற்சி கைவிடப்பட்டது. அபபடி காப்பாறிய பல்கலையையைத்தான் இப்போது இழந்திருக்கிறார் ராமசாமி செட்டியார்.

இணைவேந்தராக ராமசாமி செட்டியார் வந்தும் வெகு காலம் வரை ஏழை மாணவர்களின் கல்விக்குத்தான் முக்கியம் கொடுத்தார். ஆனால் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பிருந்து தான் கல்விச்சேவை வணிகமாக மாறத்தொடங்கியது.  அண்ணாமலை பல்கலையில் பணிபுரிந்த சில கல்வியாளர்கள்,நிர்வாகிகள் சிலரால்தான் அப்படிப்பட்ட நிலைமை உருவானது.

தாங்கள் காசு பார்க்க செட்டியாரின் சேவை மனதை மாற்றினார்கள்.அதுவரை பலகலைகழகத்தை கல்வி நிலையமாக நிணைத்திருந்த எம்.ஏ.எம் ராமசாமி செட்டியார், கல்வியாளர்களின் கலகத்திற்கு பிறகு ஒரு வணிக நிறுவனமாக ஆக்கிக் கொண்டார்.

ஒவ்வொரு படிப்பிற்கும், ஒவ்வொரு பணியிடத்துக்கும் இவ்வளவு தொகை என்று நிர்ணயிக்கபட்டது அப்போதுதான்.மிகக் குறைந்த தொகையே அப்போது நிர்ணயிக்கப்பட்டது. காசு கொடுத்தால் கல்விக்கு சீட், காசு கொடுத்தால் நிச்சயம் வேலை என்று உறுதியாக தெரிந்ததால் அதனை வாங்கி விற்க புரோக்கர்கள் நடமாட்டம் ஆரம்பித்தது.புரோக்கர்கள் அதிகமாக ஆக விலையும் உயர்ந்து கொண்டே போனது.இவையெல்லாம் 2006 க்கு பிறகு உச்சகட்டத்தை அடைந்தது.அதன் விளைவுதான் இப்போது செட்டியார் குடும்பத்தின் சொத்து கையை விட்டு பறிபோகிறது.

புரோக்கர்கள் ராஜ்ஜியமாகிப்போன அண்ணாமலை பல்கலைகழகத்தின் 2006 நிலவரங்கள் அதன் விளைவுகள்
அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 2

 - கரு.முத்து
                           
2000 மாவது ஆண்டிலேயே ஆரம்பித்துவிட்டது காசுக்கு கல்வி கலாச்சாரம். அதுவரை பட்டும் படாமலும் முக்கிய சில படிப்புக்களுக்கு மட்டும் சில ஆயிரங்களை கொடுத்து சீட் வாங்கவேண்டியிருந்தது. ஆனால் 2006 ஆம் ஆண்டிலிருந்துதான் எல்லா படிப்புகளுக்குமே காசு வாங்குவது எழுதப்படாத சட்டமாக ஆனது. அதற்கு முந்தைய கால அண்ணாமலை பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு பொற்காலமாக விளங்கியது. 
ஒரு மாணவன் அங்கு படிக்க வேண்டும் என்றால் முறைப்படி விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தால் மட்டுமே போதும். அழைப்புக் கடிதம் வீடு தேடி வந்துவிடும். விண்ணப்பத்தின் விலை ஐம்பது ரூபாயோ, நூறு ரூபாயோ படிப்புக்கு ஏற்றமாதிரி இருந்தது. அழைப்பு கடிதம் கிடைத்தவர்கள் பல்கலைகழகத்துக்கு வந்து நேரடியாக சேர்ந்து கொள்ளலாம். எம்.ஏ, போன்ற படிப்புகளை ஒரு மாணவன் விடுதிகட்டணத்தோடு சேர்த்து ஆண்டுக்கு பத்தாயிரத்துக்குள் முடித்துவிடலாம்.
பொறியியல் படிக்க இன்னும் சில ஆயிரங்கள் கூடுதலாக ஆகும். பெரிய படிப்பான மருத்துவப் படிப்புக்கும் நிலைமை அப்படித்தான் இருந்தது. பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றவர்கள் கட்டணம் மட்டும் கட்டிவிட்டு மருத்துவம் படிக்கலாம். வேளாண்மை படிப்புகளுக்கும் அப்படித்தான் மிகக் குறைந்த கட்டணம் இருந்தது.

2000த்துக்கு பிறகு வேளாண்மை, பொறியியல், மருத்துவம் ஆகிய படிப்புக்கள் பணம் காய்ச்சி மரமாகியது. இந்த மூன்று படிப்புக்களுக்கும் சேருவதற்கு பல்கலைக் கழகத்தில் நேரடியாக அனுமதி கிடைக்காது.  இணைவேந்தரை பார்த்துத்தான் சீட் வாங்க வேண்டும். அவரும் ஆரம்பத்தில் பணமெல்லாம் வாங்கவில்லை.
சிதம்பரத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாநில அளவிலான முக்கிய பிரமுகர்கள்,  வருவாய்த்துறை காவல்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகள் ஆகியோர் அவரை சந்தித்து பையனுக்கோ, பெண்ணுக்கோ சீட் வேண்டும் என்று கேட்டால் போதும். உடனடியாக வழங்கப்படும். இதனால் சிதம்பரம் பகுதியில் உள்ள அரசியல் கட்சிகளில் கட்சிப் பதவிக்கு பலத்த போட்டி ஏற்பட்டது. ஒரு லெட்டர்பேடு இருந்தால் போதும். அதை வைத்து செட்டியாரிடம் சீட் வாங்கிவிடுவார்கள். அவரின் இந்த இரக்கக் குணத்தை பல்கலைகழகத்தின் பண ஆசை பிடித்த சில நிர்வாகிகளும் கல்வியாளர்களும் கெட்டியாக பிடித்துக் கொண்டு அதை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டார்கள்.

அதற்காக அவர்கள் கடைபிடித்த உத்தி ரொம்பவும் பழைய பாணிதான். எம்.ஏ.எம் ராமசாமியை எப்படியாவது அப்பாயின்ட்மென்ட் வாங்கி அவரைப் பார்த்ததும் காலில் விழுந்து வணங்குவார்கள். "என்ன விஷயம்?" என்று அவர் கேட்டதும்  ‘‘ஐயா எங்க சொந்தகார பையன் ஒருத்தன், ரொம்ப ஏழைங்க, இஞ்சினியரிங் படிக்க ஆசைப்படறான்யா’’ என்று சொல்லி திரும்பவும் காலில் விழுவார்கள். உடனடியாக அவர்கள் கேட்ட சீட் வழங்கப்படும். அதை  வாங்கிக் கொண்டு வந்து தங்கள் இஷ்டத்துக்கு அதற்கு விலை வைத்து விற்று காசு கொடுத்த மாணவர்களை சேர்த்தார்கள். இப்படி மருத்துவத்துக்கு ஒரு லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரை விலை நிர்ணயித்தார்கள். வேளாண்மைக்கு ஒரு லட்சம் என்று ஆக்கினார்கள். பொறியியலுக்கு இருபத்தைந்தாயிரம் ரேட்.

ஒரு துறையில் உள்ள ஒரு பேராசியரோ அல்லது ஊழியரோ இப்படி எம்.ஏ.ம்மை பார்த்து சீட் வாங்குவதை பார்த்ததும், அதே துறையில் உள்ள மற்றவர்களுக்கும் ஆசை துளிர்விட தொடங்கியது. அவர்களும் தனித்தனியாக சென்னைக்கு படையெடுக்க தொடங்கினார்கள். சிதம்பரத்தில் உள்ள அரசியல்வாதிகளும் செட்டியாரை பார்க்க அணி வகுத்தார்கள். நாளொன்றுக்கு இப்படி சில நூறுபேர் வரையிலும் தன்னை பார்க்க வருவதை கண்டதும் அவர்களை சந்திக்க மறுத்த செட்டியார், தன்னுடைய உதவியாளரான எஸ்.ஆர் என்று பல்கலைக்கழக வளாகத்தில் அழைக்கப்படுகிற ராஜேந்திரனை பார்க்க உத்தரவிட்டார். சீட் வேண்டுமா ராஜேந்திரனை பார்த்தால் போதும் என்ற நிலைமை உருவானது. அப்போதுதான் செட்டியாருக்கு பணம் கொடுக்கும் வழக்கமும் ஆரம்பித்தது.

பத்து மெடிக்கல் சீட் கொடுங்க என்று கேட்டு ஒரு சீட்டுக்கு பத்துலட்சம் வீதம் ஒரு கோடி ரூபாயை மொத்தமாக ராஜேந்திரனிடம் கொடுத்துவிட்டு சீட் வாங்கி பதினைந்து லட்சம், இருபது லட்சம் என்று வெளியில் விற்றார்கள் புரோக்கர்கள். பொறியியல் படிப்புக்கும் இப்படித்தான் மொத்தமாக ஒரு தொகையை கொடுத்துவிட்டு ஐம்பது, நூறு என்று அட்மிசன் வாங்கிவிடுவார்கள். அதனை மாணவர்களுக்கு பல ஆயிரங்களை மேலே வாங்கிக் கொண்டு விற்று கோடீஸ்வரர்கள் ஆனார்கள்.

இவர்களிடம் சீட்டை வாங்கி அதை தாங்கள் இன்னும் அதிக விலைக்கு விற்று பிழைப்பவர்களும் பெருத்தார்கள். இப்படி ஒட்டுமொத்த ஊழியர்களுமே ஒரு கட்டத்தில் புரோக்கர்களாகிவிட்டார்கள். தொழில் போட்டி ஏற்பட்டது. அடிதடிகள் நடந்தது. ஒரு கொலையும் நடந்துமுடிந்தது.  பல்கலை ஊழியர்களை பார்த்து  சென்னையில் செட்டியார் அரண்மனையில் வேலை பார்க்கும் அத்தனை தொழிலாளிகளுமே புரோக்கர்களாக மாறினார்கள்.
அங்கிருக்கும் துப்புரவு தொழிலாளி கூட இன்று பல கோடிகளுக்கு அதிபதியாகிவிட்டார்கள். அவர்களுக்காக செட்டியார் இலவசமாக தரும் சீட்டை பெற்று அதை லட்சங்களுக்கு விற்று சம்பாதித்தார்கள்.
இவ்வளவும் நடக்கிறதே பல்கலையில் துணைவேந்தர், பதிவாளர் என்று எல்லோரும் இருக்கிறார்களே அவர்கள் என்ன செய்துகொன்டிருந்தார்கள்? அவர்களுக்கு இதில் தொடர்பு உண்டா?
ஒரு உதாரணமாக 2011 ஆம் ஆண்டில் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை வேளாண்மை கல்லூரியில் 120 பேர்தான்.ஆனால் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர்கள் 800 பேர்.பொறியியல் புலத்தில் அங்கீகாரம் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 810 பேர்தான். ஆனால் அங்கு அந்த வருடம்  சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 5319.

இப்படி எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் மாணவர்களை சேர்த்தார்கள். தமிழகத்தை இருப்பிடமாக கொள்ளாத மாணவர்கள் இந்த பல்கலை கழகத்தில் படிக்க முடியாது என்ற விதிகளெல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டன.வட மாநிலங்களில் கூவிகூவி  ஆள் பிடித்தார்கள் புரோக்கர்கள்.ஒரு பொறியியல் சீட்டுக்கு நிர்வாகத்துக்கு அவர்கள் தந்தது 25,000 ரூபாய்.அவர்கள் வாங்கியது குறைந்தது ஒரு லட்சம் ரூபாய்.

இப்படி ஆளாளுக்கு சீட் வாங்கித் தருவதோடு மட்டும் நிறுத்திக் கொண்டிருந்தால்  பல்கலைக்கழகம் இந்த கதிக்கு வந்திருக்காது.அடுத்தக்கட்டமாக எதில் சம்பாதிக்கலாம் என்று பார்த்தவர்கள் ஊழியர்கள் ஆசிரியர்கள் நியமனம் செய்தால் இன்னும் அதிகமான அமவுண்டை அடிக்கலாம் என்று கணக்குப்போட்டு அதை செயல்படுத்த துவங்கினார்கள். ஒரு கட்டத்தில் அதாவது 2007 ன் ஆரம்பத்தில் பல்கலைகழகத்திற்கு பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் நியமனம் செய்ய ஆரம்பித்தனர்.

இந்த பணிகளை பல்கலைக்கழக பதிவாளர் ரத்தினசபாபதி கவனித்தார்.புகழ் பெற்ற அண்ணாமலை பல்கலையில் வேலை என்றதும் அதற்கு போட்டி ஏற்பட்டது.அதனால் தகுதி உடையவர்களோடு தகுதி இல்லாதவர்களும் களத்தில் இறங்கினார்கள். இருக்கும் வேலை கொஞ்சம் போட்டியோ அதிகம்.அதனால் பணம் கொடுத்தால் வேலை என்ற நிலைமை பல்கலை கழகத்தால் உருவாக்கப்பட்டது.

இன்று ஏற்பட்டிருக்கும் நிதிச் சிக்கலுக்கான அச்சாரம் அப்போதுதான் அதில் ஊழலும் லஞ்சமும் பெருத்த 2006 காலக்கட்டத்தில் பல்கலைகழகத்தில் துணைவேந்தராக இருந்தவர் வெங்கட்ரங்கன்.கல்வி விஷயத்தில் கவனம் செலுத்திய அவர்,மாணவர் சேர்க்கையில் அவ்வளவாக தலையிடவில்லை.அவருக்கு உதவியாக பல்வேறு ஆட்கள் இருந்தார்கள்.அவர்கள் செய்யும் சேவைக்கு பிரதிபலனாக அவ்ர்களுக்கெல்லாம் நல்ல பதவிகளை தருவார் வெங்கட்ரங்கன்.அவர்களும் அதை வைத்துக்கொண்டு சம்பாதிக்க ஆரம்பித்தனர்.

இவர் சேர்க்கையில் தலையிடாததால் பல்கலையை ஆட்டுவித்தவர் அப்போதைய பதிவாளரான ரத்தினசபாபதிதான் என்கிறார்கள்.ஒட்டுமொத்த பல்கலைகழகமும் இவரின் விரலசைவில்தான் இயங்கியதாம்.துணைவேந்தரை பார்ப்பதற்கு ஒரு சிலர் மட்டுமே வருவார்கள்.ஆனால் ரத்தினசபாபதியை பார்க்க கூட்டம் அலைமோதும்.வி.ஐ.பி.க்கள் கொடி கட்டிய கார்,ஒருநாளைக்கு பத்தாவது அவர் அலுவலக வாசலில் நிற்காமல் இருக்காது.

சீட் தருவதற்கான அதிகாரம் அவர் கையில் இருந்தது.இவரை வந்து சந்தித்து தொகை கொடுத்தால் சீட் உறுதியாக கிடைக்குமாம்.இதனால் இவரிடம் சீட்டுக்கு அலை மோதினார்கள்.ஒரு கட்டத்தில் இவரது மனைவியை சந்தித்தும் தொகை கொடுத்து சீட் வாங்கிக்கொண்டு போவார்களாம்.

இவர்களோடு இந்த நிலையில் புதிதாக இரண்டு அதிகாரமையங்களும் உருவானது.  அவர்கள் தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளாரான மீனாட்சி சுந்தரமும், துணைவேந்தரின் உதவியாளரான பாலசண்முகமும். மற்றவர்களை பார்ப்பது கொஞ்சம் சிரமம் என்பதால் காட்சிக்கு எளியவரானவர்களும், பழகுவதற்கு இனிமையானவர்களுமான இவர்களிடம் ஆட்கள் போக ஆரம்பித்தார்கள் வேலை வேண்டுகிறவர்கள்.

துணைவேந்தரின் உதவியாளர் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்று, ஒரு கட்டத்தில் துணைவேந்தரைவிட முக்கியமான ஆளாகிப்போனார் பாலசண்முகம்.
ஆக இணைவேந்தர் எம்.ஏ.எம்.முக்கு நேரடியான புரோக்கர்கள், எஸ்.ஆர் என்று அழைக்கப்படும் ராஜேந்திரனுக்கு நேரடி புரோக்கர்கள், பதிவாளர் ரத்தினசபாபதிக்கு நேரடி புரோக்கர்கள் என்று மூன்று அதிகார மையங்களூக்கும் புரோக்கர்கள் உருவானார்கள். சிவசாமி என்பவர் எம்.ஏ.எ.முக்கு புரோக்கர்.எம்.ஏ. எம். போன் செய்துவிட்டால் போதும் அவர் கேட்கும் கோடிகளை உடனடியாக கொண்டு சென்று கொடுக்கும் அளவுக்கு அதிகாரமாக வளர்ந்தார்.அதை விரும்பாத சிலரால்தான் அவர் கொலையும் செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். 2009க்கு பிறகு உடல்நலம் சரியில்லாத வெங்கட்ரங்கன்,இது எதையும் கண்டுகொள்ளாமல் அவருக்கு கிடைக்கும் சில சலுகைகளை மட்டும் பெற்றுக் கொண்டு எம்.ஏ.எம்மும், ரத்தினசபாபதியும் போடச் சொன்ன இடங்களில் கையெழுத்து போடுவதோடு தன் கடமையை நிறைவேற்றிக் கொண்டார்.உரியவர் சரியில்லாததால் அங்கு தவறுகள் தங்கு தடையின்றி பெருகின.போடப்பட்டது.
சீட் வாங்கித் தரும் புரோக்கர்கள் அத்தனை பேரும் வேலை வாங்கித்தரும் புரோக்கர்களாக மாறினார்கள்.நேரடியாக எம்.ஏ.எம்மை சந்திப்பவர்கள், ராஜேந்திரனை பார்ப்பவர்கள்,ரத்தினசபாபதியை பார்ப்பவர்கள் என்று அத்தனை பேருமே வேலை வாங்கித்தருவதிலும் மும்முரமானார்கள்.இவர்கள் எல்லோருமே தங்களிடம் வருகிறவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை வாங்கிக் கொண்டு அவர்களுக்கான பணிக்கான உத்தரவை வாங்கித் தந்தார்கள்.

வேலை கிடைக்கிறது என்பதால் எங்கிருந்தெல்லாமோ ஆட்கள் பல்கலைகழகத்தின் பக்கம் திரும்பினார்கள்.பணம்...பணம் என்று எல்லா பக்கமும் வேலைக்கு பணம் தலை விரித்தாடியது.இத்தனை பேர் இருக்க வேண்டிய இடத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற கணக்கு வழக்கே இல்லாமல் ஆட்கள் பெருகிக் கொண்டே போனார்கள்.அதன் விளைவுதான் சம்பளமே கொடுக்க முடியாத இன்றைய நிலைமைக்கு பல்கலை கழகம் தள்ளப்பட்டது.

எத்தனை பேர்தான் இங்கு வேலை பார்க்க வேண்டும்? ஆனால் எத்தனை பேர் இங்கு வேலை பார்த்தார்கள்? எந்த வேலைக்கு எவ்வளவு தொகை லஞ்சமாக தர வேண்டும்? இந்த பணமெல்லாம் யார் யாரிடம் போனது? அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 4 
 ல்கலைக்கழக மானியக்குழு அனுமதித்திருக்கும் ஊழியர்களின்  எண்ணிக்கையை முதலில் தெரிந்து கொள்வோம்.பலகலைக்கழக மானியக்குழு  விதிகளின் படி அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இருக்க வேண்டிய ஆசிரியர்கள்  எண்ணிக்கை 657. ஆனால் தற்போது அங்கிருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை  3000 பேர்.மானியக்குழு அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 1110  பேர்.ஆனால் இங்கு இருக்கும் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 9600 பேர்.    ஆக பல்கலைகழகம் நடத்த நிதி மானியம் அளிக்கும் பல்கலைகழக மானியக்குழு  அனுமதித்திருக்கும் எண்ணிக்கை 1767 பேர்தான். ஆனால் இருப்பதோ 12,600  பேர்.அதாவது கிட்டத்தட்ட 9 மடங்கு ஊழியர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு சம்பளம் எங்கிருந்து கொடுப்பது? என்பதில் இருந்துதான் சிக்கல் ஆரம்பித்தது. ஏன் அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டுதானே அவர்களுக்கு வேலை கொடுத்தார்கள்? அந்த பணத்தை வைத்து அவர்களுக்கு சம்பளம் கொடுத்துவிடலாமே என்று நீங்கள் கேட்பது புரிகிறது.அந்த பணம் யாரிடம் போனது? எப்படி முடங்கியது என்பதில்தானே சிக்கலின் ஆரம்பம் இருக்கிறது.

 ஆட்களை நியமனம் செய்வதில் எம்.ஏ.எம்.மிடம் விதவிதமாக  ஏமாற்றினார்கள் பல்கலைகழகத்தை அதிகாரம் செய்தவர்கள்.இரண்டு பேராசியர்  பணியிடங்களுக்கு அவரிடம் பணத்தை கொடுத்து அனுமதி பெறுவார்களாம்.  அவர்களுக்கு இரண்டு என்று சென்னையிலிருந்து இங்கு பேக்ஸ் வரும்.அதனை  எடுத்து முன்னால் ஒரு ஒன்றை சேர்த்து பணிரெண்டாக மாற்றி பைலை  உருவாக்கிவிடுவார்களாம்.பத்து புதிய நபர்களை  இவர்களே சேர்த்து அந்த  பணத்தை வாங்கிக் கொண்டார்கள்.எந்த நேரத்தில் எம்.ஏ.எம் முக்கு பணம்  தேவைப்பட்டாலும் அவருக்கு கொடுப்பதற்கு இவர்கள் தயாராக இருந்தார்கள்.  அவரிடம் காசை கொண்டுபோய் கொடுத்துவிட்டு புதிதாக பத்துபேரை பணி  நியமனம் செய்தார்கள்.அந்தத்துறை, இந்தத்துறை என்றில்லாமல் எல்லாத்  துறைகளிலும் இப்படி ஆட்களை புதிதாக சேர்த்துக் கொன்டே இருந்தார்கள்.

இதனால் தேவையேப்படாத இடங்களில் எல்லாம் ஆட்கள் அதிக அளவில் இருந்தார்கள். ஒரு துறையின் அலுவலகத்தில் புகுந்தால் அங்கு  உட்கார நாற்காலி கூட இல்லாமல் ஆட்கள் நின்று கொண்டிருப்பார்கள்.யாராவது எழுந்தால் அங்கு போய் உட்கார்ந்து கொள்வார்கள்.

யார் யாருக்கு என்ன ரேட்? ஆரம்பத்தில் துப்புரவு தொழிலாளி பணிக்கு இரண்டு  லட்சம், செக்யூரிட்டிக்கு மூன்று லட்சம் என்று வாங்கி, தாங்கள் பாதி எடுத்துக்  கொண்டு மீதி பாதியை எம்.ஏ.எம்முக்கு கொண்டு போய் கொடுத்தார்களாம்.அது  கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கடந்த வருட முடிவில் ஏழு முதல் எட்டு  லட்சங்களாக ஆனது.

 அலுவலக உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்கள்  முதலில் ஐந்து லட்சமாக இருந்தது.தற்போது அலுவலக உதவியாளருக்கு பத்து  லட்சமும்,இளநிலை உதவியாளருக்கு 17 லட்சமும் வாங்கப்பட்டது.  விரிவுரையாளர்களுக்கு முதலில் எட்டு லட்சம் ரூபாயாக இருந்தது.கடைசியாக  அது இருபத்தைந்திலிருந்து முப்பது லட்சமாக உயர்த்தப்பட்டது.ஒரு கட்டத்தில்  புதிதாக இனி விரிவுரையாளர்களை நியமிக்கக் கூடாது என்று ஊழியர்கள் நீதிமன்றம்  சென்று தடையானை வாங்கினார்கள்.

என்னடா இது வருமானத்துக்கு வந்த சோதனையாக இருக்கிறதே என்று யோசித்த ஊழல் பேர்வழிகள், விரிவுரையாளர்தானே போடக்கூடாது என்று முடிவெடுத்து அதே சம்பளம் கிடைக்கும்படியாக ஸ்பெசல் இண்ஸ்டெக்டர் என்ற புதிய பதவியை உருவாக்கினார்கள். அவர்களிடம் முப்பது லட்சத்தை வாங்கிக் கொண்டு பணியமர்த்தினார்கள். அப்படி ஒரு பணியிடத்தை அரசாங்கம் தடை செய்து பத்து வருடங்கள் ஆகிறதாம். அதைபற்றி கவலைப்படாமல் இவர்கள் அந்த பணியிடத்தில் கிட்டத்தட்ட 100 பேரை நியமனம் செய்திருக்கிறார்கள்.

 

முப்பது லட்சத்தை இன்னும் அதிகமாக உயர்த்த என்ன செய்யலாம் என்று ரூம்  போட்டு யோசித்தவர்கள் மேலும்  இரண்டு புதிய பணியிடங்களை  உருவாக்கினார்கள்.எல்.ஒ மற்றும் எஸ்.ஓ. இந்த இரண்டும் இதுவரை எந்த  பல்கலையிலும் இல்லாத பதவிகள்.எல்.ஓ என்றால் லைசன் ஆபீசர். எஸ்.ஓ  என்றால் ஸ்பெசல் ஆபீசர்.இதில் இந்த எஸ்.ஓ பணி என்பது கூட்டுறவு   சங்கங்களில் தான் இதுவரை இருக்கிறது.ஆனால் இவர்கள் பணத்துக்கு  ஆசைப்பட்டு இப்படி ஒரு பதவியை உருவாக்கினார்கள்.

900 பேர் வரை இப்படி சேர்த்திருக்கிறார்கள். அவர்களின் ஒரு மாத சம்பளம் தலா 40 ஆயிரம் ரூபாய். முப்பதாயித்துக்கும் மேல் சம்பளம் வாங்கும் பார்மசிஸ்ட்டுகள் இங்கு 180 பேர் இருக்கிறார்கள்.தமிழ்நாடு முழுவதும் இருக்கிற மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் எல்லா பார்மசிஸ்ட்டுகளையும் சேர்த்தால் கூட அது 160 பேரை தாண்டாது.

 25லட்சம் முதல் முப்பது லட்சம் வரை பனத்தை வாங்கிக் கொண்டு இத்தனை  பேருக்கு பணிஆனை வழங்கியிருக்கிறார்கள். இத்தனைக்கும் மருத்துவமனையில்  மருந்தகம் கிடையாது. இருந்த ஒரு மருந்தகத்தையும் தனியாருக்கு பலகோடி  ரூபாய் வாங்கிக் கொண்டு தாரை வார்த்துவிட்டார்கள்.

கோடிகோடியாக பணத்தை வாங்கித்தருவதால் பதிவாளர் ரத்தினசபாபதியை எழுபது  வயது வரை ஓய்வு கொடுக்காமல் பல்கலை கழகத்தின் பதிவாளராக கடந்த  ஆண்டுவரை பணி நீட்டிப்பு கொடுத்துக் கொண்டே இருந்தாராம் எம்.ஏ.எம்.  இப்பிரச்னையை சட்டசபை வரை சிதம்பரம் எம்.எல்.ஏ பாலகிருஷணன்  கொண்டுசெல்லவே, கடந்த ஆண்டுதான் ஒருவழியாக அவரை விடுவித்துவிட்டு  தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளாரான மீனாட்சிசுந்தரத்தை பதிவாளராக்கினார்.

ரத்தினசபாபதி அமெரிக்காவில் இருக்கும் மகள் வீட்டுக்கு போய் செட்டிலாகி  விட்டார்.அவருக்கு முன் வெங்கட்ரங்கன் ஓய்வு  பெற்றுவிட, அவருக்கு பதிலாக  துணைவேந்தரானார் ராமநாதன்.அதிர்ந்துகூட பேசத்தெரியாத அவர், எம்.ஏ.எம்  காலால் இட்ட வேலையை தலையால் செய்வதை மட்டுமே கடைபிடித்து அதன்  விளைவாக, இப்போது ஆளுனரால் சஸ்பெண்ட் ஆகி வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்.
 மீனாட்சிசுந்தரத்துக்கு ஓய்வுபெறும் வயது வந்தவுடன், அவரை கூப்பிட்ட நிர்வாக  அதிகாரி சிவதாஸ்மீனா, "நீங்கள் ராஜினாமா செய்துவிடுங்கள்!" என்று சொல்ல அவர் ராஜினாமா செய்துவிட்டு பழையபடி துறைத் தலைவராக மட்டும் தொடர்கிறார்.

பணியமர்த்தவும்,மாணவர் சேர்க்கைக்காகவும் வாங்கிய பணம் மட்டும்  ஏழாயிரம்கோடி ரூபாயை தாண்டியிருக்கிறது என்கிறார்கள் ஊழியர்கள் சங்கத்தின்  பிரதிநிதிகள். அது முழுவதும் அப்படியே எம்.ஏ.எம்மிடம் சென்று சேரவில்லை.  அதில் இடைத்தரகர்களுக்கு பாதித்தொகை போய் விட்டது.சரி கிடைத்த  மீதிப்பணத்தையாவது பல்கலைகழக நிதியில் கொண்டு சேர்த்தார்களா? இல்லை  என்ன செய்தார்கள்?இவ்வளவு பணம் புழங்கிய இடத்தில் ஏன் நிதிப்பற்றாக்குறை  வந்தது?அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 5

- கரு.முத்து
ஏழாயிரம் கோடியில் எம்.ஏ.எம்.முக்கு வந்தது எவ்வளவு என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். ஆனால் அவரோ ‘‘என்னிடம் யாரும் எந்த பணமும் தரவில்லை’’ என்று முன்பு ஒருமுறை நம்மிடம் ஒரே போடாக போட்டு எல்லாவற்றையும் மறுத்து விட்டார். ஆனால் புரோக்கர்கள் அவரிடம் கொண்டுபோய் பணம் கொட்டிய தகவல்கள் லாரி லாரியாய் ஏற்றலாம் போல அவ்வளவு கதை சொல்வார்கள்.
 
வேலைக்கு பணம் வாங்கிய அவர், அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமே என்ற கவலையெல்லாம் படவில்லை. சம்பளம் கொடுப்பது பல்கலையின் கடமை நமக்கென்ன வந்தது என்று கல்லாவை இருக மூடிக்கொண்டார். அதோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை. பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை மூலமும் மற்ற வகைகள் மூலமும்  எவ்வளவு  வருமானம் வருகிறதோ அதற்கும் செலவு வைக்க ஆரம்பித்தார்.

தேவையே இல்லாமல் புதிய புதிய கட்டிடங்களை கட்ட உத்தரவிட்டார். கட்டிடம் கட்டுவதற்கு என்ன அவசியம்? கட்டுமான நிறுவனம் அவருடையை செட்டிநாடு பில்டர்ஸ்  நிறுவனம். ஆவுடையார்கோவில் திருப்பணி போல எந்த நாளிலும் அவரது நிறுவனம் அங்கே கட்டிடம் கட்டி பல்கலைக்கழகத்தின் நிதியை அபேஸ் செய்து கொண்டது. பல்கலைக்கழகத்தின் நிதியை இன்னும் எப்படி லாவகமாக தங்கள் நிறுவனத்துக்கு திருப்பலாம் என்று யோசித்துப் பார்த்தார் எம்.ஏ.எம். அவராக யோசிப்பாரா இல்லை அவரது அடிவருடிகள் யோசனை சொல்வார்களா என்று தெரியவில்லை.

ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரியை வைத்து ஒரு திட்டம் போட்டார்கள். அது சுயநிதி மருத்துவக் கல்லூரி. மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து அதிலிருந்துதான் கல்லூரியை நடத்த வேண்டும். அப்படி கட்டணமும் வசூலிக்கப்பட்டது. அதுதவிர ஒரு சீட்டுக்கு நாற்பது லட்ச ரூபாய் அளவுக்கு நன்கொடையும் வாங்கப்பட்டது. ஆனால் அதையெல்லாம் வைத்து மருத்துவக் கல்லூரியை நடத்தாமல் அதை அப்படியே கல்லாவுக்குள் கொண்டு போய் பூட்டியவர் தனது மதுராகோட்ஸ் ஆலைக்கும், செட்டிநாடு சிமெண்ட்ஸ் ஆலைக்கும் அதனை முதலீடு செய்தார். நஷ்டத்தில் இயங்கிய அந்த ஆலைகள் இந்த முதலீட்டால் மெல்ல மெல்ல லாபத்திற்கு திரும்பியது. மருத்துவக்கல்லூரியின் ஒட்டுமொத்த செலவுகளையும் பல்கலைக்கழகத்தின் தலையில் கட்டினார்.
மருத்துவக் கல்லூரியின் மருத்துவர், செவிலியர் ஊதியங்கள், மாணவர்களின் படிப்பிற்காக அங்கு இயங்கும் மருத்துவமனையின் அத்தனை செலவினங்களும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிதியிலிருந்து எடுத்து செலவிடப்பட்டது. அதனால் தேவையே இல்லாமல் பல கோடி ரூபாய்கள் பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் செலவு பிடித்தது . இப்படி செலவுகளை செய்ததோடு மட்டும் விட்டு விடவில்லை. பல்கலைக்கழகத்தின் நிதியிலிருந்து இரண்டாயிரம் கோடி ரூபாயை மருத்துவக் கல்லூரிக்காக ஒதுக்கி எடுத்துக் கொண்டார்களாம். அதுவரை கொஞ்சம் கொஞ்சமாக நிதி தேய்ந்து வந்த பல்கலைக்கழகம் அதற்குபிறகு ஒட்டுமொத்தமாக திண்டாட ஆரம்பித்தது.

ஏற்கனவே அதிகப்படியான ஊழியர்களால் மாதம் 40 கோடி ரூபாய் அளவுக்கு ஊதியம் வழங்க வேண்டியிருந்தது. அதனால் கையிருப்பு எல்லாம் மெல்ல கரைந்து கொண்டே வந்தது. அந்த நேரத்தில் கை கொடுத்தது தொலைதூர கல்வி மையம். அங்கு வந்த வருமானம் முழுவதையும் சம்பளம் போடுவதற்காக எடுத்துக் கொண்டார்கள். அதனால் அங்கு 15000 ரூபாயாக இருந்த பி.எட் படிப்புக்கான கட்டணம்  சென்ற ஆண்டு ஐம்பதாயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. அந்த படிப்பிற்கு ஐநூறு பேருக்குத்தான் அனுமதி என்று சொல்லப்பட்ட நிலையில் பல ஆயிரம் பேர்வரை சேர்க்கப்பட்டார்கள். ஆனாலும் நிதி போதவில்லை. ஊழியர்களின் சேமநலநிதி, ஓய்வு ஊதிய நிதி என்று எல்லா நிதியிலிருந்தும் எடுத்து சம்பளம் போட்டார்கள். அப்படியும் போதவில்லை. இந்த நிலைமை எம்.ஏ.எம்.மின் வளர்ப்பு மகன் ஐயப்பனுக்கு தெரிய வந்தது. அவர் உடனடியாக பல்கலைக்கழகத்துக்கு வந்து ஒருவாரம் தங்கி ஆய்வு நடத்தினார்.

மேற்கண்ட எல்லா விஷயங்களும் அவருக்கு முழுமையாக தெரிய வந்தது. இனிமேல் பல்கலைக்கழகம் ஒழுங்காக நடக்க வேண்டும் என்றால் தாங்கள் எடுத்துச் சென்ற பல்லாயிரம் கோடி ரூபாயை திரும்ப பல்கலைபஙகழக நிதியில் சேர்த்தாலே போதும் என்று அவருக்கு தெளிவாக தெரிந்தது. ஆனால் முன்புபோல் அவர்கள் இப்போது கல்விச்சேவையா செய்கிறார்கள். கல்வி வணிகம்தானே செய்கிறார்கள். அதனால் ஊழியர்கள் தலையில் கை வைக்க முடிவெடுத்தார். இருப்பதில் பாதிப்பேரை வெளியில் அனுப்பினாலோ அல்லது எல்லோருக்கும் இப்போது வாங்குவதில் பாதிச் சம்பளமாக குறைத்தாலோதான் அடுத்தடுத்த மாதத்தில் சம்பளம் போடமுடியும், தொடர்ந்து பல்கலைக்கழகத்தை நடத்தவும் முடியும் என்று சொல்லி துணைவேந்தரை அதை செயல்படுத்தவும் உத்தரவிட்டார்.

துணைவேந்தர் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அழைத்து இதைப் பேசப்போய்த்தான் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. போராட்டங்களில் இறங்கினார்கள். அரசு இதில் தலையிட வேண்டும் என்று ஊழியர்கள் விரும்பினார்கள். அதனால் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட ஒரு தணிக்கைக்குழுவை அனுப்பி விசாரிக்க சொன்னது மாநில அரசு. அவர்கள் கொடுத்த விசாரணை அறிக்கையில் எம்.ஏ.எம்.முக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அதிகாரங்கள் தான் நிதி மோசடிக்களுக்கு காரணம் என்பதை  விளக்கப்பட்டது. அதன் விளைவாக முதலில் சிறப்பு நிர்வாக அதிகாரியாக சிவதாஸ்மீனா நியமிக்கப்பட்டார். துணைவேந்தர் பணிநீக்கம் செய்யப்பட்டார். சிவதாஸ்மீனாவின் வேகமான நடவடிக்கைகளின் விளைவாக பல்கலையை அரசு ஏற்கும் மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இனி அரசு எடுக்கும் தொடர் நடவடிக்கைகளின் விளைவாக அண்ணாமலை பல்கலைக்கழகம் நிமிரும் என்று அதன் மாணவர்களான லட்சக்கணக்கானோர் நம்புகிறார்கள்.

குறிப்பு; கடந்த ஐந்தாண்டுகளாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தள்ளாட்டங்களையும், அங்கு நடந்துவரும் குழப்பங்களையும் கோல்மால்களையும் நமது ஜூனியர்விகடன் மட்டுமே தொடர்ந்து கட்டுரைகள் வெளியிட்டு வந்தது. இப்போது அரசு ஏற்கும் முடிவுக்கு வந்ததற்கு ஜூனியர் விகடனும் ஒரு முக்கிய காரணம் என்று கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக் தனிப்பட்ட முறையில் விகடனுக்கு நன்றி சொல்லியிருக்கிறார்கள்.
thanx - vikatan

Sunday, April 21, 2013

உதயம் என்.ஹெச்-4 - சினிமா விமர்சனம் (தினமலர்)

"பொல்லாதவன்", "ஆடுகளம்" உள்ளிட்ட வெற்றி படைப்புகளை தந்த இயக்குநர் வெற்றிமாறனின் எழுத்து-படைப்பு வடிவமைப்பில், அவரது உதவியாளர் மணிமாறன் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் தான் "உதயம் என்.ஹெச்-4".


பெங்களூரூக்கு படிக்கப்போகும் சென்னை மாணவர் சித்தார்த், உடன் படிக்கும் பெங்களூரூ பெரும்புள்ளி அவினாஷின் மகள் அஷ்ரிதா ஷெட்டியை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் சென்னைக்கு அம்மணியை கல்யாணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் நண்பர்கள் உதவியுடன் கடத்துகிறார். விடுவாரா அவினாஷ்? தன் பண பலத்தையும், படை பலத்தையும் துஷ்பிரயோகம் செய்து சித்தார்த் - அஷ்ரிதா ஜோடியை துரத்துகிறார் பெங்களூரூ என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் மனோஜ் மேனன் எனும் கே.கே.மேனன். 


 

சட்டத்திற்கு அப்பால் சில விஷயங்களில் தனக்கு பெரும் உதவி செய்த அவினாஷூக்கு இவ்விஷயத்தில் சட்டத்திற்கு அப்பாற்பட்டு உதவ முன் வருகிறார். அப்புறம்? அப்புறமென்ன? அன்று இரவு 12 மணிக்கு மேல் 18வயது பூர்த்தியாகும் அஷ்ரிதா ஷெட்டியை, அதற்குள் சித்தகர்த் கையில் இருந்து மீட்டு விட வேண்டுமென்ற கட்டளைக்கு கட்டுப்பட்டு என்.ஹெச் 4 எனப்படும் பெங்களூரூ - சென்னை நேஷனல் ஹைவேஸில் அந்த ஜோடியை துரத்து துரத்தென்று துப்பாக்கியும் கையுமாக துரத்துகிறார்.


 இறுதியில் வென்றது சித்தார்த்தா? கே.கே.மேனனின் துப்பாக்கியா...? என்பது வித்தியாசமும் விறுவிறுப்புமான க்ளைமாக்ஸில், த‌ிகில்-சஸ்பென்ஸ் சரிவிகிதத்தில் கலந்து கலக்கலாக சொல்லப்பட்டிருக்கிறது.


 


"பாய்ஸ் சித்தார்த் தனக்கு இதுநாள் வரை இருந்த சாக்லெட் பாய் இமேஜை தகர்த்தெறிய "உதயம் என்.ஹெச்-4" படத்தை சரியான சந்தர்ப்பமாக்கிக் கொண்டிருக்கிறார். புத்திசாலித்தனமாக லீஸின் மூவ்களை முன்கூட்டியே கணித்து அவர் செய்யும் மூவ்மெண்ட்டுகள் பிரமாதம். பிரமாண்டம்! ஆக்ஷ்ன் அதிரடிகளும் சூப்பர்ப்!!

ரித்திகாவாகவே வாழ்ந்திருக்கும் அறிமுக நாயகி அஷ்ரிதா ஷெட்டியின் நடை, உடை, பாவனைகள், நிச்சயித்து திருமணம் செய்தவர்களையும் காதலிக்க வைக்கும்! அம்மணி அத்தனை ஹோம்லி குல்கந்து! பெங்களூரூ பெரும்புள்ளி அவினாஷ், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் கே.கே.மேனன், சித்தார்த்தின் நண்பர்களாக வரும் அஜெய், கலை, கார்த்தி, தீபக் மற்றும் சித்தார்த்தின் உறவினர்களாக வரும் வக்கீல் பாத்திரத்தில் வரும் ஆடுகளம் நரேன், ரம்யா உள்ளிட்டோரும் உதயத்தின் உருப்படியான உத்தரங்கள்! அதாங்க தூக்கி நிறுத்தும் தூண்கள்!!


 

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் "யாரோ இவன்..., "ஓரக்கண்ணாலே... உள்ளிட்ட பாடல்களும், வேல்ராஜின் ஒளிப்பதிவும், நடிப்பும்(ஒரு சில சீன்களில் மப்டி போலீஸ் கான்ஸ்டபிளாக மனிதர் கிடைத்த கேப்பில் புகுந்து விளையாடி இருக்கிறார் பலே... பலே!) சூப்பர்ப்!

ஹீரோவின் நண்பர், ஹீரோ சித்தார்த், ஹீரோயின் அஷ்ரிதா என ஆளாளுக்கு அவரவர் பாயிண்ட் ஆப் வியூவில் கதை சொல்வது ஓ.கே, சூப்பர்ப்! அதற்காக அஷ்ரிதா, சித்தார்த்தை துரத்தி அடித்துவிட்டு, தன்னை தூக்கி செல்லும் என்கவுன்டர் மேனனிடம் கதை சொல்வதும், அதற்கு காதலித்து திருமணம் செய்த அவர், அப்பா-அம்மா தான் முக்கியம் என அட்வைஸ் பண்ணுவதும் ரொம்ப ஓவர்! 



இதுமாதிரி ஒருசில குறைகள், க்ளைமாக்ஸ் நெருக்கும் போது ஹைவேஸில் நடைபெறும் இழுவையான ஆக்ஷ்ன் காட்சிகள் ஆகியவற்றை தவிர்த்துவிட்டுப்பார்த்தால், வெற்றிமாறனின் எழுத்திலும், தயாரிப்பிலும், மணிமாறனின் இயக்கத்திலும் "உதயம் என்.ஹெச்.4" அவர்களது விளம்பர வாசகங்களில் இடம் பெறும் டயலாக் மாதிரியே "செம ஸ்பீடு, ஹைஸ்பீடு" எனலாம்!

ஆகமொத்தத்தில், "உதயம்", தமிழ் சினிமாவுக்கு "புதிய உதயம்!"

நன்றி -   தினமலர்

diski - cps review will b posted  monday evening 6 pm