Showing posts with label விகடன் மேடை. Show all posts
Showing posts with label விகடன் மேடை. Show all posts

Thursday, May 16, 2013

விகடன் மேடை - சுப.உதயகுமாரன் பதில்கள்

எம்.நாகராஜன், பொள்ளாச்சி. 

''கூடங்குளம் அணு உலைக்கு எதிரான உங்கள் போராட்டத்துக்குப் பாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இனி, உங்கள் வியூகம் என்ன?''

''கூடங்குளம், கல்பாக்கம், நியூட்ரினோ போன்ற மக்களின் வாழ்வாதாரங்களை, வருங்காலத்தை அச்சுறுத்தும் திட்டங்களுக்கு நீதிமன்றங்களிலோ, நாடாளுமன்றங்களிலோ தீர்வு காண முடியாது. மக்கள் மன்றங்களில்தான் விடை காண வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதனால்தான் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், எந்த நீதிமன்றத்தையும் அணுகவில்லை. சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் மூன்று அம்சங்களான தூய்மை, பொறுமை மற்றும் உறுதியுடன் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் பணியாற்றுவோம்.‘Slow and steady wins the race’
 என்ற பழமொழி  இன்றும் செயல்பாட்டில்தான் இருக்கிறது!''


கபிலன், ஃபேஸ்புக்.

 ''இதுவரை அணுஉலை விபத்தால் மொத்தம் 50 பேர் மட்டுமே இறந்திருப்பதாகச் சொல்கிறது அணு அமைப்புகளின் அறிக்கை. சமீபகால உதாரணமாக நீங்கள் சுட்டிக்காட்டும் ஜப்பானின் ஃபுகுஷிமா விபத்தில் ஓர் உயிரிழப்புகூட இல்லை என்கிறார்கள். அணுஉலை விபத்தி னால் பல லட்சம் மக்கள் உயிர் இழந்திருக்கிறார்கள் என்று பிரசாரம் செய்கிறீர்களே... அதற்கான ஆதாரங்களை அடுக்க முடியுமா?''


''அணுஉலை விபத்துகளால் நேரடியாகக் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவு என்பது எல்லோருக்கும் தெரியும். மறைமுகமாகக் கொல்லப்பட்டவர்கள், கொல்லப்படுகிறவர்கள், இன்னும் கொல்லப்பட இருப்பவர்களின் எண்ணிக்கையை எந்த விஞ்ஞானமும், எந்தவிஞ்ஞானி யும் கணக்கிட முடியாது. விபத்துக்கு உள்ளாகாத நிலையிலும் அணுஉலை ஆபத்தானது என்பதுதான் எங்கள் வாதம். செர்னோஃபில், ஃபுகுஷிமா விபத்துகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்பற்றி ஐ.நா., உலக சுகாதார நிறுவனத்தின் பல அறிக்கைகளே உள்ளன. தயவுகூர்ந்து நீங்கள் அவற்றைப் படித்து நிதர்சனம் உணருங்கள்!''


பாலாஜி, தஞ்சாவூர்.

''உங்கள் போராட்டங்களில் ஏன் கம்யூனிஸ்ட் இயக்கங்களை அனுமதிக்க மறுக்கிறீர்கள்?''


''இது தவறான தகவல். உண்மையான பொதுவுடமைவாதிகள் அதிகம் கலந்துகொள்ளும் போராட்டம் எங்கள் போராட்டம். பல மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் இயக்கங்கள், சோஷலிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து கலந்துகொள்கின்றன, களமாடுகின்றன. சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த நல்லகண்ணு அய்யா, தோழர் சி.மகேந்திரன் கலந்துகொண்டிருக்கிறார்கள். சி.பி.எம். கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொண்டார்கள். பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தங்களை எதிர்க்கும் பெரிய கம்யூ னிஸ்ட் கட்சிகள், ரஷ்யா என்றதும் 
பழைய நினைப்பில் பதுங்குவதுதான் பிரச்னை!''


மா.மதிவாணன், திருவாரூர்.

''உங்கள் போராட்டத்தை வளர்த்தெடுக்க ஊடகங்களின் உதவி எந்த 
அளவுக்கு இருந்தது? இப்போது எந்த அளவுக்கு இருக்கிறது?''

''அச்சு ஊடகங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் உண்மையாக, உறுதியாக தமது கடமையைச் செய்தன, செய்கின்றன. சாதாரண மக்களாகிய எங்களின் உண்மைத்தன்மையை, வாழ்வாதாரத்துக்காக நாங்கள் போராடுவதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். தொடர்ந்து நியாயமாகவே செயல்படுகிறார்கள். ஒரு சில நாளிதழ்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் எங்களைக் கடுமையாக எதிர்க்கின்றன. அதனால் அவர்களின் நம்பகத்தன்மைதான் குறைந்திருக் கிறது!''


கி.சிவநாராயணன், மைசூர்.

''பெட்ரோல், நிலக்கரி, அணுஉலை என்று எல்லா எரிசக்திகளும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பவை என்றால், எதுதான் தீங்கு விளைவிக்காத மாற்று எரிபொருள்? அதன் பயன்பாடு தமிழகத்தில் சாத்தியமா?''  


''காற்றும், கடல் அலையும், கதிரவன் ஒளியும், கழிவுகளும் என எத்தனையோ வழிகள் இருக்கின்றன. மையப்படுத்தப்படாத, தேவையின் அடிப்படையில் இயங்கும் (decentralized and demand - based) சிறு சிறு மின் நிலையங்களை நாடெங்கும் அமைப்பதுதான் நமக்கும், இயற்கைக்கும், எதிர்காலத்துக்கும் நன்மை பயக்கும். மையப்படுத்தப்பட்ட, விநியோகத் தின் அடிப்படையில் இயங்கும் (centralized and supply-based) மெகா மின் நிலையங்கள் ஊழலின் ஊற்றுக்கண்களாக, முறைகேடுகளின் முகாம்களாக, அழிவின் ஆதாரங்களாக விளங்கும். கூடங்குளம், இடிந்தகரை பகுதிக்கு ஒரு முறை வாருங்கள்; மேற்கண்ட இரண்டுக்குமே எடுத்துக்காட்டுகளைப் பார்ப்பீர்கள்!''


மெ.திலீப், சிதம்பரம்.

''துரதிர்ஷ்டவசமாக பிரதான அரசியல் கட்சிகள் எல்லாமே அணுஉலை தேவை என்று சொல்கின்றனவே? இதன் பின்னணி அரசியல் என்ன?''


''இது முழு உண்மையல்ல சகோதரா! மேற்கு வங்காள மாநிலம் புர்பா மேதினிப்பூர் மாவட்டம் ஹரிப்பூர் என்னும் இடத்தில் வரஇருந்த கூடங்குளம் போன்ற ரஷ்ய அணு உலைப் பூங்கா திட்டத்தை, திரிணமுல் காங்கிரஸ் கட்சிக் கடுமையாக எதிர்த்து முற்றிலுமாக நிறுத்திஇருக்கிறது. அதே போல, மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ள பிரெஞ்சு அணுஉலையை சிவசேனா கட்சியும், சி.பி.ஐ., சி.பி.எம். போன்ற கட்சிகளும் கடுமையாக எதிர்க்கின்றன. கூடங்குளம் அணுக் கழிவு கர்நாடக மாநிலம் கோலார் சுரங்கங்களில் புதைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்த தும் காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற 'தேச பக்தர்கள்’ அதைக் கடுமையாக எதிர்த்துப் போராடினர். தேசத் துரோகிகளான எங்களை இரும்புக் கரம்கொண்டு அடக்க வேண்டும் என தமிழக மத்திய அமைச்சர் திரு. ஜி.கே.வாசன் கொக்கரித்துக்கொண்டிருக்கும்போது, கர்நாடக மத்திய அமைச்சர் திரு.வீரப்ப மொய்லி அந்த மாநில மக்களின் நலனுக்காக வாதிட்டுக்கொண்டிருந்தார். 'அணு சக்திதான் இந்திய எதிர்காலத்தின் ஒரே வழி’ என்று கூறித் திரியும் பிரதமர், தனது காங்கிரஸ் கட்சி ஆளும் கேரள மாநிலத்தில் ஓர் அணுமின் நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிடட்டுமே பார்ப்போம்! ஊருக்கு இளைத்த தமிழன் பிள்ளையார் கோயில் ஆண்டியாக்கப்படு கிறான். இதுதான் நிதர்சனம்!''

பி.கேசவன், சென்னை-91. 

''கடற்கரைப் பகுதிகளில் கடந்த 200 ஆண்டுகளாக பாதிரியார்களாலும், சர்ச்களாலும் செய்ய முடியாத ஒரு சீர்திருத்தத்தை இரண்டே ஆண்டுகளில் உங்களால் சாதிக்க முடிந்தது எப்படி?'' 


''மனதுக்கு உகந்தவரின் நிறைகளை மிகைப்படுத்துவதும், குறைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும், அவர் செய்யாத விஷயங்களைச் சாதனைகள் எனப் போற்றுவதும், செய்த சிறு செயல்களை அற்புதங்கள் என்று புளகாங்கிதமடைவதும் தமிழராகிய நமக்கே உரித்தான தனிநபர் துதியின் அம்சங்கள். சீர்திருத்தம் செய்ய வந்த தேவதூதன் அல்ல நான்; மகாகவி பாரதியார் சொன்னதுபோல, எனக்குத் தொழில் எழுத்து, கவிதை, நாட்டுக்கு உழைத்தல். அவ்வளவுதான்!''

புகழ்மணி, ஃபேஸ்புக்.

''ஓர் அரசாங்கம் என்பது அனைத்து மக்களின் நலன் சார்ந்துதானே செயல்பட வேண்டும். அப்படி இருக்கும்போது, நீங்கள் குறிப்பிட்ட பகுதி மக்களுக்காக ஒட்டுமொத்தமாக அரசை எதிர்ப்பது என்ன நியாயம்?'' 


''சரி... உங்கள் போக்கிலேயே வருகிறேன். நம் தமிழக அரசாங்கம் தமிழர்களின் நலன் சார்ந்துதானே இயங்க வேண்டும். இப்போது தமிழக மீனவ மக்களின் நலனை மட்டும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வோம். சுமார் 600 தமிழக மீனவர்கள் இதுவரை சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் ஊனமுற்றிருக்கிறார்கள் கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்களால், ஏராளமான அனல் மின் நிலையங்களால், உண்டுறை இல்லங் களால், உல்லாச விடுதிகளால், லட்சக்கணக்கான மீனவர்கள் தொழில் இழப்பு, வருமான இழப்பு, நோய் நொடி எனத் துன்புறுவார்கள். இதுதான் அரசாங்கத்தின் மீனவர் நலன் சார்ந்த செயல் பாடா? தமிழக் கடற்கரையோரம் முழுக்க வசிக் கும் மீனவர்களின் உயிருக்கே இந்த அளவுதான் மதிப்பு என்றால், இடிந்தகரை என்ற சிறு நிலப் பகுதியில் வசிக்கும் மக்களின் நலனுக்கு என்ன மரியாதை இருந்துவிட முடியும்? கூடங்குளம் பகுதி மக்களுக்கு 500 கோடி ரூபாயில் ஊருக்கு வெளியே வீடு கட்டித் தருவார்களாம், நான்கு வழிச் சாலை அமைப்பார்களாம், உயர்தர மருத்துவமனை கட்டுவார்களாம். 'தின்று விளையாடி இன்புற்றி ருப்பவன்’ வாயில் மண்ணை வாரிப் போட்டுவிட்டு, ஓடுவதற்கு ரோடும், ஆசுவாசப்படுத்த ஆஸ்பத்திரியும் தருவது ஏற்றுக்கொள்ளத்தக்கதா? அதனால்தான் போராடுகிறோம்!''



அடுத்த வாரம்...

'' 'எங்கள் போராட்டச் செலவுகளுக்கு வெளிநாட்டில் இருந்து பண உதவி எதுவும் வருவது இல்லை. மீனவ மற்றும் பீடித் தொழிலா ளர்கள் அளிக்கும் நன்கொடை மூலம் மட்டுமே எங்கள் போராட்டங்களை முன்னெடுக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் அளித்த வரவு-செலவு விவரங்களில் இருந்தே இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்... நன்கொடையாகப் பெற்ற பணம்: ரூபாய் 25,17,991. அதாவது மீனவ மற்றும் பீடித் தொழிலாளர் குடும்பங்கள் தலா 200 ரூபாய் கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறீர்கள். மொத்த செலவு: ரூபாய் 17,64,233. (டீசல், குடிநீர், ஒலிபெருக்கி வசதிகள் போன்ற செலவுகள்). இடிந்தகரையின் மொத்த மக்கள் தொகை 3,996. ஒரு குடும்பத்துக்கு மூன்று உறுப்பினர்கள் சராசரி என்று வைத்துக்கொண்டால்கூட மொத்தம் 1,332 குடும்பங்கள். ஆக, நீங்கள் வசூலித்த நன்கொடை - 1,332x200 = 2,66,400 என்பதாக இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் வசூல் கணக்கு காட்டியிருப்பது ரூபாய் 25,17,991. வித்தியாசம் உள்ள 22,51,591 எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தது?''


''ரஷ்யாவின் VVER 1,000 ரியாக்டர் என்பது அமெரிக்காவின் GE நிறுவனத்தின் Advanced boiling water reactor-க்கு இணையானது. இந்த இரு தொழில்நுட்பங்களுக்கு இடையில்தான் உலக அளவில் போட்டி நிலவுகிறது. இந்தியா நிறைய அணு உலைகளை நிறுவவிருக்கும் நாடு. ஆகையால், ஒரு VVER 1,000 வெற்றிபெற்றால், உலகச் சந்தையில் அமெரிக்காவின் அணு உலை வியாபாரம் பாதிக்கப்படும் என்பதாலேயே உதயகுமாரன் மூலம் அணு உலைத் தரகு வேலை பார்க்கப்படுகிறது என்கிறேன் நான். இந்தச் சந்தேகத்துக்கு உங்கள் விளக்கம் என்ன?''


''சார்... தமிழீழப் பிரச்னையாகட்டும்... நக்சலைட்கள் போராட்டமாகட்டும்... அஹிம்சை வழியில் ஆரம்பித்து ஒரு கட்டத்துக்குப் பிறகு ஆயுதப் போராட்டமாக மாறியது... அந்த நிலை கூடங்குளம் போராட்டத்துக்கும் ஏற்படுமா?''
                                                                                                                     - போராடுவோம்...


நன்றி - ஆனந்த விகடன்