Showing posts with label சுப.உதயகுமாரன். Show all posts
Showing posts with label சுப.உதயகுமாரன். Show all posts

Thursday, May 16, 2013

விகடன் மேடை - சுப.உதயகுமாரன் பதில்கள்

எம்.நாகராஜன், பொள்ளாச்சி. 

''கூடங்குளம் அணு உலைக்கு எதிரான உங்கள் போராட்டத்துக்குப் பாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இனி, உங்கள் வியூகம் என்ன?''

''கூடங்குளம், கல்பாக்கம், நியூட்ரினோ போன்ற மக்களின் வாழ்வாதாரங்களை, வருங்காலத்தை அச்சுறுத்தும் திட்டங்களுக்கு நீதிமன்றங்களிலோ, நாடாளுமன்றங்களிலோ தீர்வு காண முடியாது. மக்கள் மன்றங்களில்தான் விடை காண வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதனால்தான் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், எந்த நீதிமன்றத்தையும் அணுகவில்லை. சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் மூன்று அம்சங்களான தூய்மை, பொறுமை மற்றும் உறுதியுடன் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் பணியாற்றுவோம்.‘Slow and steady wins the race’
 என்ற பழமொழி  இன்றும் செயல்பாட்டில்தான் இருக்கிறது!''


கபிலன், ஃபேஸ்புக்.

 ''இதுவரை அணுஉலை விபத்தால் மொத்தம் 50 பேர் மட்டுமே இறந்திருப்பதாகச் சொல்கிறது அணு அமைப்புகளின் அறிக்கை. சமீபகால உதாரணமாக நீங்கள் சுட்டிக்காட்டும் ஜப்பானின் ஃபுகுஷிமா விபத்தில் ஓர் உயிரிழப்புகூட இல்லை என்கிறார்கள். அணுஉலை விபத்தி னால் பல லட்சம் மக்கள் உயிர் இழந்திருக்கிறார்கள் என்று பிரசாரம் செய்கிறீர்களே... அதற்கான ஆதாரங்களை அடுக்க முடியுமா?''


''அணுஉலை விபத்துகளால் நேரடியாகக் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவு என்பது எல்லோருக்கும் தெரியும். மறைமுகமாகக் கொல்லப்பட்டவர்கள், கொல்லப்படுகிறவர்கள், இன்னும் கொல்லப்பட இருப்பவர்களின் எண்ணிக்கையை எந்த விஞ்ஞானமும், எந்தவிஞ்ஞானி யும் கணக்கிட முடியாது. விபத்துக்கு உள்ளாகாத நிலையிலும் அணுஉலை ஆபத்தானது என்பதுதான் எங்கள் வாதம். செர்னோஃபில், ஃபுகுஷிமா விபத்துகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்பற்றி ஐ.நா., உலக சுகாதார நிறுவனத்தின் பல அறிக்கைகளே உள்ளன. தயவுகூர்ந்து நீங்கள் அவற்றைப் படித்து நிதர்சனம் உணருங்கள்!''


பாலாஜி, தஞ்சாவூர்.

''உங்கள் போராட்டங்களில் ஏன் கம்யூனிஸ்ட் இயக்கங்களை அனுமதிக்க மறுக்கிறீர்கள்?''


''இது தவறான தகவல். உண்மையான பொதுவுடமைவாதிகள் அதிகம் கலந்துகொள்ளும் போராட்டம் எங்கள் போராட்டம். பல மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் இயக்கங்கள், சோஷலிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து கலந்துகொள்கின்றன, களமாடுகின்றன. சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த நல்லகண்ணு அய்யா, தோழர் சி.மகேந்திரன் கலந்துகொண்டிருக்கிறார்கள். சி.பி.எம். கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொண்டார்கள். பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தங்களை எதிர்க்கும் பெரிய கம்யூ னிஸ்ட் கட்சிகள், ரஷ்யா என்றதும் 
பழைய நினைப்பில் பதுங்குவதுதான் பிரச்னை!''


மா.மதிவாணன், திருவாரூர்.

''உங்கள் போராட்டத்தை வளர்த்தெடுக்க ஊடகங்களின் உதவி எந்த 
அளவுக்கு இருந்தது? இப்போது எந்த அளவுக்கு இருக்கிறது?''

''அச்சு ஊடகங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் உண்மையாக, உறுதியாக தமது கடமையைச் செய்தன, செய்கின்றன. சாதாரண மக்களாகிய எங்களின் உண்மைத்தன்மையை, வாழ்வாதாரத்துக்காக நாங்கள் போராடுவதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். தொடர்ந்து நியாயமாகவே செயல்படுகிறார்கள். ஒரு சில நாளிதழ்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் எங்களைக் கடுமையாக எதிர்க்கின்றன. அதனால் அவர்களின் நம்பகத்தன்மைதான் குறைந்திருக் கிறது!''


கி.சிவநாராயணன், மைசூர்.

''பெட்ரோல், நிலக்கரி, அணுஉலை என்று எல்லா எரிசக்திகளும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பவை என்றால், எதுதான் தீங்கு விளைவிக்காத மாற்று எரிபொருள்? அதன் பயன்பாடு தமிழகத்தில் சாத்தியமா?''  


''காற்றும், கடல் அலையும், கதிரவன் ஒளியும், கழிவுகளும் என எத்தனையோ வழிகள் இருக்கின்றன. மையப்படுத்தப்படாத, தேவையின் அடிப்படையில் இயங்கும் (decentralized and demand - based) சிறு சிறு மின் நிலையங்களை நாடெங்கும் அமைப்பதுதான் நமக்கும், இயற்கைக்கும், எதிர்காலத்துக்கும் நன்மை பயக்கும். மையப்படுத்தப்பட்ட, விநியோகத் தின் அடிப்படையில் இயங்கும் (centralized and supply-based) மெகா மின் நிலையங்கள் ஊழலின் ஊற்றுக்கண்களாக, முறைகேடுகளின் முகாம்களாக, அழிவின் ஆதாரங்களாக விளங்கும். கூடங்குளம், இடிந்தகரை பகுதிக்கு ஒரு முறை வாருங்கள்; மேற்கண்ட இரண்டுக்குமே எடுத்துக்காட்டுகளைப் பார்ப்பீர்கள்!''


மெ.திலீப், சிதம்பரம்.

''துரதிர்ஷ்டவசமாக பிரதான அரசியல் கட்சிகள் எல்லாமே அணுஉலை தேவை என்று சொல்கின்றனவே? இதன் பின்னணி அரசியல் என்ன?''


''இது முழு உண்மையல்ல சகோதரா! மேற்கு வங்காள மாநிலம் புர்பா மேதினிப்பூர் மாவட்டம் ஹரிப்பூர் என்னும் இடத்தில் வரஇருந்த கூடங்குளம் போன்ற ரஷ்ய அணு உலைப் பூங்கா திட்டத்தை, திரிணமுல் காங்கிரஸ் கட்சிக் கடுமையாக எதிர்த்து முற்றிலுமாக நிறுத்திஇருக்கிறது. அதே போல, மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ள பிரெஞ்சு அணுஉலையை சிவசேனா கட்சியும், சி.பி.ஐ., சி.பி.எம். போன்ற கட்சிகளும் கடுமையாக எதிர்க்கின்றன. கூடங்குளம் அணுக் கழிவு கர்நாடக மாநிலம் கோலார் சுரங்கங்களில் புதைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்த தும் காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற 'தேச பக்தர்கள்’ அதைக் கடுமையாக எதிர்த்துப் போராடினர். தேசத் துரோகிகளான எங்களை இரும்புக் கரம்கொண்டு அடக்க வேண்டும் என தமிழக மத்திய அமைச்சர் திரு. ஜி.கே.வாசன் கொக்கரித்துக்கொண்டிருக்கும்போது, கர்நாடக மத்திய அமைச்சர் திரு.வீரப்ப மொய்லி அந்த மாநில மக்களின் நலனுக்காக வாதிட்டுக்கொண்டிருந்தார். 'அணு சக்திதான் இந்திய எதிர்காலத்தின் ஒரே வழி’ என்று கூறித் திரியும் பிரதமர், தனது காங்கிரஸ் கட்சி ஆளும் கேரள மாநிலத்தில் ஓர் அணுமின் நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிடட்டுமே பார்ப்போம்! ஊருக்கு இளைத்த தமிழன் பிள்ளையார் கோயில் ஆண்டியாக்கப்படு கிறான். இதுதான் நிதர்சனம்!''

பி.கேசவன், சென்னை-91. 

''கடற்கரைப் பகுதிகளில் கடந்த 200 ஆண்டுகளாக பாதிரியார்களாலும், சர்ச்களாலும் செய்ய முடியாத ஒரு சீர்திருத்தத்தை இரண்டே ஆண்டுகளில் உங்களால் சாதிக்க முடிந்தது எப்படி?'' 


''மனதுக்கு உகந்தவரின் நிறைகளை மிகைப்படுத்துவதும், குறைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும், அவர் செய்யாத விஷயங்களைச் சாதனைகள் எனப் போற்றுவதும், செய்த சிறு செயல்களை அற்புதங்கள் என்று புளகாங்கிதமடைவதும் தமிழராகிய நமக்கே உரித்தான தனிநபர் துதியின் அம்சங்கள். சீர்திருத்தம் செய்ய வந்த தேவதூதன் அல்ல நான்; மகாகவி பாரதியார் சொன்னதுபோல, எனக்குத் தொழில் எழுத்து, கவிதை, நாட்டுக்கு உழைத்தல். அவ்வளவுதான்!''

புகழ்மணி, ஃபேஸ்புக்.

''ஓர் அரசாங்கம் என்பது அனைத்து மக்களின் நலன் சார்ந்துதானே செயல்பட வேண்டும். அப்படி இருக்கும்போது, நீங்கள் குறிப்பிட்ட பகுதி மக்களுக்காக ஒட்டுமொத்தமாக அரசை எதிர்ப்பது என்ன நியாயம்?'' 


''சரி... உங்கள் போக்கிலேயே வருகிறேன். நம் தமிழக அரசாங்கம் தமிழர்களின் நலன் சார்ந்துதானே இயங்க வேண்டும். இப்போது தமிழக மீனவ மக்களின் நலனை மட்டும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வோம். சுமார் 600 தமிழக மீனவர்கள் இதுவரை சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் ஊனமுற்றிருக்கிறார்கள் கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்களால், ஏராளமான அனல் மின் நிலையங்களால், உண்டுறை இல்லங் களால், உல்லாச விடுதிகளால், லட்சக்கணக்கான மீனவர்கள் தொழில் இழப்பு, வருமான இழப்பு, நோய் நொடி எனத் துன்புறுவார்கள். இதுதான் அரசாங்கத்தின் மீனவர் நலன் சார்ந்த செயல் பாடா? தமிழக் கடற்கரையோரம் முழுக்க வசிக் கும் மீனவர்களின் உயிருக்கே இந்த அளவுதான் மதிப்பு என்றால், இடிந்தகரை என்ற சிறு நிலப் பகுதியில் வசிக்கும் மக்களின் நலனுக்கு என்ன மரியாதை இருந்துவிட முடியும்? கூடங்குளம் பகுதி மக்களுக்கு 500 கோடி ரூபாயில் ஊருக்கு வெளியே வீடு கட்டித் தருவார்களாம், நான்கு வழிச் சாலை அமைப்பார்களாம், உயர்தர மருத்துவமனை கட்டுவார்களாம். 'தின்று விளையாடி இன்புற்றி ருப்பவன்’ வாயில் மண்ணை வாரிப் போட்டுவிட்டு, ஓடுவதற்கு ரோடும், ஆசுவாசப்படுத்த ஆஸ்பத்திரியும் தருவது ஏற்றுக்கொள்ளத்தக்கதா? அதனால்தான் போராடுகிறோம்!''அடுத்த வாரம்...

'' 'எங்கள் போராட்டச் செலவுகளுக்கு வெளிநாட்டில் இருந்து பண உதவி எதுவும் வருவது இல்லை. மீனவ மற்றும் பீடித் தொழிலா ளர்கள் அளிக்கும் நன்கொடை மூலம் மட்டுமே எங்கள் போராட்டங்களை முன்னெடுக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் அளித்த வரவு-செலவு விவரங்களில் இருந்தே இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்... நன்கொடையாகப் பெற்ற பணம்: ரூபாய் 25,17,991. அதாவது மீனவ மற்றும் பீடித் தொழிலாளர் குடும்பங்கள் தலா 200 ரூபாய் கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறீர்கள். மொத்த செலவு: ரூபாய் 17,64,233. (டீசல், குடிநீர், ஒலிபெருக்கி வசதிகள் போன்ற செலவுகள்). இடிந்தகரையின் மொத்த மக்கள் தொகை 3,996. ஒரு குடும்பத்துக்கு மூன்று உறுப்பினர்கள் சராசரி என்று வைத்துக்கொண்டால்கூட மொத்தம் 1,332 குடும்பங்கள். ஆக, நீங்கள் வசூலித்த நன்கொடை - 1,332x200 = 2,66,400 என்பதாக இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் வசூல் கணக்கு காட்டியிருப்பது ரூபாய் 25,17,991. வித்தியாசம் உள்ள 22,51,591 எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தது?''


''ரஷ்யாவின் VVER 1,000 ரியாக்டர் என்பது அமெரிக்காவின் GE நிறுவனத்தின் Advanced boiling water reactor-க்கு இணையானது. இந்த இரு தொழில்நுட்பங்களுக்கு இடையில்தான் உலக அளவில் போட்டி நிலவுகிறது. இந்தியா நிறைய அணு உலைகளை நிறுவவிருக்கும் நாடு. ஆகையால், ஒரு VVER 1,000 வெற்றிபெற்றால், உலகச் சந்தையில் அமெரிக்காவின் அணு உலை வியாபாரம் பாதிக்கப்படும் என்பதாலேயே உதயகுமாரன் மூலம் அணு உலைத் தரகு வேலை பார்க்கப்படுகிறது என்கிறேன் நான். இந்தச் சந்தேகத்துக்கு உங்கள் விளக்கம் என்ன?''


''சார்... தமிழீழப் பிரச்னையாகட்டும்... நக்சலைட்கள் போராட்டமாகட்டும்... அஹிம்சை வழியில் ஆரம்பித்து ஒரு கட்டத்துக்குப் பிறகு ஆயுதப் போராட்டமாக மாறியது... அந்த நிலை கூடங்குளம் போராட்டத்துக்கும் ஏற்படுமா?''
                                                                                                                     - போராடுவோம்...


நன்றி - ஆனந்த விகடன்


Wednesday, May 15, 2013

இடிந்தகரை பெண்களும் போராட்டக் களத்தில் குதித்தது எப்படி? சுப.உதயகுமாரன் பேட்டி

விகடன் மேடை - சுப.உதயகுமாரன் பதில்கள்
வாசகர் கேள்விகள்... படம்: எல்.ராஜேந்திரன்
எஸ்.ரகுபதி, குரோம்பேட்டை. 


''உங்கள் அடுத்த நடவடிக்கை அரசியலா?''

 
''இப்போதே நாங்கள் அரசியலில்தான் இருக்கிறோம். மக்களின் வாழ்வுரிமைகளை, வாழ்வாதார உரிமைகளை, வருங்காலச் சந்ததிகளைக் காக்கும் அரசியலைவிட மேலான அரசியல் வேறென்ன இருக்கிறது?''


க.நாராயணன், செய்யாறு. 


''ஏதோ ஒரு நாட்டுக்குச் சென்று நீங்கள் வாழ்வதற்கு உங்களுக்கு அனுமதி அளித் தால், எந்த நாட்டைத் தேர்வு செய்வீர்கள்? ஏன்?''


''நார்வே. இயற்கையும், இனிமையும், ஜனநாயகமும், சமூக நீதியும் போற்றப்படும் நாடு. 1987-ம் ஆண்டு நான் அங்கே படித்த போது அப்போதைய பிரதமரின் கணவர் ஆஸ்லோ பல்கலைக்கழக வகுப்பில் எனக்கு ஆசிரியராக இருந்தார்.


 வெளியுறவுத் துறை அமைச்சரோடு மெட்ரோ ரயிலில் அரட்டை அடித்தபடியே பயணம் செய்ய முடிந்தது. அங்கு இருக்கும் ஒரே பிரச்னை என்ன வென்றால், கோடைக் காலத்தில் இருட்டே வராது. குளிர் காலத்தில் சூரியனே வராது. அதனால் என்ன, அங்குதான் ஈழத் தமிழர்கள் நிறையப் பேர் இருக்கிறார்களே... அது போதாதா?''


ம.ராஜா, கோயம்புத்தூர். 


''நீங்கள் வேண்டுமானால் நேரடியாக என்.ஜி.ஓ-க்களுடன் (அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்) தொடர்பு வைத் திருக்காமல் இருக்கலாம். ஆனால், கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதில் கணிசமானோர் என்.ஜி.ஓ-க்களாக இருக்கிறார்களே..?'' 


''எங்கள் போராட்டத்துக்கு எந்த உள் நாட்டு, வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமும் பணமோ, பொருட்களோ, வேறுவிதமான உதவி களோ செய்யவில்லை. நாங்களும் பெற முயற் சிக்கவில்லை. போராடும் மீனவ மக்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், பெண்கள் தரும் நன்கொடையில்தான் போராட்டம் நடக்கிறது. மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் பல தொண்டு நிறுவனங்கள் கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாகச் சிந்திப்பதில், அவர்கள் பகுதிகளில் அணுசக்திக்கு எதிராகப் பரப்புரை செய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?''


எஸ்.ராதாகிருஷ்ணன், திண்டிவனம். 


''போராட்டத்தை வாபஸ் வாங்கவைக்க மறைமுகமான பேரங்கள் எதுவும் வந்தனவா?'' 


''விரும்பிய நாட்டுக்குச் சென்று பெரு வாழ்வு வாழ ஆவன செய்வதாக ஒரு நண்பர் மூலம் ஆசை காட்டப்பட்டது. 'என்ன வேண்டும் என்று கேட்டுச் சொல்லுங்கள்... நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்’ என்று பலர் என்

பெற்றோரிடமும் மனைவியிடமும் சென்று கேட்டார்கள். தூது வந்தவர்கள் விரும்பாத பதிலைத் 'தூ’வென்று வீட்டாரே சொல்லி அனுப்பிவிட்டதால், நான் தலையிட வேண்டிய நிலை எழவில்லை!''


இரா.அரி, கண்ணமங்கலம். 


''நீங்கள் இடிந்தகரை மக்களுக்காகப் போராடுவது நல்ல விஷயம். இதே போல தமிழ கத்தின் பிற பகுதி மக்களும் மின்வெட்டு, ஊழல், ஆற்று மணல் கொள்ளை என்று பலப்பல விதங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் இப்படியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதை உணர்கிறீர்களா?'' 


''தங்களின் வாழ்வுரிமைகளும், வாழ்வாதார உரிமைகளும், வருங்காலச் சந்ததிகளும் பாதிக்கப்படும் அபாயத்தை உணர்ந்த எங்கள் பகுதி மீனவ மக்களும், மற்றவர் களும் போராடுகிறார்கள். நானும், நண்பர்களும் அவர்கள் சேவகர்களாகப் பணியாற்றுகிறோம். எங்கெல்லாம் மேற் கண்ட ஆபத்து எழுகிறதோ, அங்கெல்லாம் மக்கள் தன்னெழுச்சி யோடு முனைப்பாகப் போராடியே தீர வேண்டும். அப்படியான தருணங்களில் அவர்களுக்காக ஆதரவுக் குரல்களும் கரங்களும் இயல்பாகவே எழும்!''


கே.கலைவாணி, திருத்தணி. 


''அணு உலை பாதிப்பு உண்டாக்கும் என்பது உண்மைதான்... ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், வளர்ச்சி கொடுக்கும் வசதிகளை அனுபவிக்க, ஏதோ ஒரு வகையில் இழப்பு இருக்கத்தானே செய்யும். இப்போது நீங்களே கடைக்கோடி கிராமத்தில் அமர்ந்துகொண்டு சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரங்கள் செய்துவருகிறீர்கள். அந்த இணைய இணைப்பு களுக்காக ஆழ்கடல் கேபிள்களைப் பதிப்பதால் கடல் சூழல் மாசுபடத்தானே செய்கிறது?''  ''கற்காலத்துக்குத் திரும்பச் செல்ல முடியாது என்பதை நானும் உணர்ந்தே இருக்கிறேன். எனவே, இழப்புகளை நம்மால் முடிந்த வரை குறைத்து... நீடித்த, நிலைத்த வளர்ச்சியை அடைய முயற்சிக்கலாமே? 'கடலில் கேபிள் போடுவதா, அணுக்கழிவைக் கொட்டுவதா?’ என்றால், கேபிள் போடுவோம் என்பதுதான் என் கட்சி. வாழ்க்கையின் விளிம்புநிலையில் நின்று உழலும் மீனவர்கள், விவசாயிகள், தலித் தொழிலாளர்கள் போன்றோர் இழப்புகளைச் சந்திக்க வேண்டும், டாட்டாக்களும், மிட்டல்களும், அம்பானிகளும் கோடி கோடியாகக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை அனுமதிக்கவே முடியாது. ஏனெனில், சொற்ப ஆயிரங்களில் இருக்கும் பணக்காரர்களுக்காக கோடிக்கணக்கான மக்கள்தொகையின் நலனை நாம் விட்டுக்கொடுக்க முடியாது!''


இராம.பாலசுப்ரமணியன், கொடுங்காலூர். 


''இந்தியாவில் பாலிதீன் பயன்பாடு அதிகம், அணைகள் ஏகம், மணல் வளம் சகட்டுமேனிக்குக் கொள்ளை அடிக்கப்படுகிறது, காற்று மாசுபடுதல் அதீதம், காடுகள் அழிக்கப்படுகின்றன... திரும்பிய திக்கெல்லாம் இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன அல்லது மாசுபடுத்தப்படுகின்றன. இந்த நிலையில், அதிஅவசரமாக இயற்கையின் எந்த வளத்தைப் பாதுகாக்க நாம் போராட வேண்டும்... ஏன்?'' 


''நாம் வாழும் பகுதியின் இயற்கை வளங்கள்பற்றிய முழுத் தகவல்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நமது பகுதியில் நடக்கும் இயற்கை வாழ்வாதாரச் சிதைப்பை, சீரழிப்பை, திருட்டை, வியாபாரத்தைத் தடுத்து நிறுத்த அணி திரள வேண்டும். அரசியல் கட்சிகளின், அரசியல்வாதிகளின் இயற்கை பாதுகாப்புக் கொள்கைகள்குறித்துக் கேள்விகள் எழுப்ப வேண்டும். அதிகாரிகளின் இயற்கைப் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வேண்டும்.


 தகவல் அறியும் உரிமைச் சட்டம், பொதுநல வழக்கு, கருத்தரங்குகள், துண்டுப் பிரசுர விநியோகம், பொதுக் கூட்டங்கள், போராட்டங்கள் எனப் பல வழிகளில் தொடர்ந்து உழைக்க வேண்டும். பெண்கள், இளையோர், குழந்தைகள் மத்தியில் பரப்புரை செய்ய வேண்டும். இது நம் அனைவரின் தலையாய கடமையாகும்!''


எஸ்.ஏழுமலை, திருச்சி-3. 


''இடிந்தகரை பெண்களும் போராட்டக் களத்தில் மிகவும் தீவிரமாக நிற்கிறார்கள். அவர்களுக்குள் அந்தத் தீவிரத்தை எப்படி உண்டாக்கினீர்கள்?'' 


''அவர்கள்தான் என்னையும், நண்பர்களையும் தீவிரமிக்கவர்களாக மாற்றியிருக்கிறார்கள்!''


வா.இரவிச்சந்திரன், கோவிலூர். 


''அருந்ததி ராய், மேதா பட்கர் போன்றவர்களுடன் உங்கள் அமைப்புக்குத் தொடர்பு இருக்கிறதா? போராட்டத் திசைகுறித்த தகவல் தொடர்பு உரையாடல்கள் உங்களிடையே நிகழுமா?'' 


''இருவரோடும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. 2003-ம் ஆண்டு முதல் மேதா பட்கர் அவர்களை நாகர்கோவில் பொதுக்கூட்டம், கூடங்குளம் மாநாடு, இடிந்தகரைப் போராட்டம் எனப் பல முறை அழைத்து வந்திருக்கிறோம். அமெரிக்காவில் இருந்தபோதே அருந்ததி எனக்குப் பரிச்சயம். அவரும் எங்கள் போராட்டத்தின் போக்கைக் கவனித்தபடிதான் இருக்கிறார்!''


அந்தோணிசாமி பாட்ரி, ஃபேஸ்புக்.   


''வேறுபட்ட சிந்தனைகொண்ட மனிதர்களை, சுயநல எண்ணம் மிகுந்தவர் களை இந்தப் போராட்டத்தின் பொருட்டு எப்படி உங்களால் ஒருங் கிணைக்க முடிந்தது. அதன் ரகசியம் என்ன?''

 
''கோஷ்டி சண்டைக்கும், வேஷ்டிக் கிழிப்புக்கும் பெயர்போன வேறு யாரிடமோ கேட்க வேண்டிய கேள்வியை எனக்கு அனுப்பிவிட்டீர்களோ? எங்கள் மீனவர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் அனைவரும் ஒருமித்த சிந்தனையுடன் பொதுநல எண்ணம் மிகுந்தவர்களாக, சாதி, மதம், ஊர், தொழில், அரசியல் கடந்த ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். இது ஒன்றிணைந்து வந்த தமிழர் கூட்டம்; யாராலும் ஒருங்கிணைக்கப்பட்டது அல்ல!''


சு.அருளாளன், ஆரணி. 


''உங்கள் போராட்டத்தின் முடிவு என்னவாக இருக்கும்? உங்கள் மனதில் ஒரு எண்ணம் இருக்குமே... அதைச் சொல்லுங்கள்?'' 


''உண்மையைச் சொல்லட்டுமா? கூடங்குளம் அணுமின் நிலையம் நிரந்தரமாக இழுத்து மூடப்படும். இது உறுதி!''


- அடுத்த வாரம்...''அணுசக்தியின் முக்கியத்துவம் பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய கனிமொழி கூட, கூடங்குளம் அணுஉலைகுறித்து வாய் திறக்க மறுக்கிறாரே?''


''நடுநிசியில் சாலையில் நடந்து வந்தாலே ஓர் இளைஞனைக் கைது செய்யும் நம் தமிழகக் காவல் துறை. ஆனால், எண்ணற்ற வழக்குகள் பதியப்பெற்ற உங்களை மட்டும் இத்தனை மாதங்களாகச் சுதந்திரமாக நடமாட விட்டிருப்பதன் மர்மம் என்ன?''


''தமிழகத்தில் சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் நிலவும் 16 மணி நேர மின்வெட்டுபற்றி தங்களுக்குக் கவலைஇல்லையா?''


- போராடுவோம்

நன்றி - விகடன் 

Thursday, March 28, 2013

ஈழ நலனுக்கு நாம் செய்ய வேண்டியது என்ன? பிரபல எழுத்தாளர்கள் பேட்டி

ஈழ நலனுக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?
டி.அருள் எழிலன், ஓவியம்: மருது
இலங்கையைப் பாதுகாக்கும் அமெரிக்கத் தீர்மானத்தை ஒரு சடங்காக நிறைவேற்றிவிட்டது ஐ.நா. ஆனாலும், உலகத் தமிழர்களுக்கு இப்போது உற்சாகம் அளிக்கும் ஒரே விஷயம்... தமிழகம். இப்போது ஈழ மக்களும் நம்பியிருப்பது தமிழர்களின் அழுத்தங்களைத்தான். உலகத்தின் மனசாட்சியை உலுக்கியெடுக்க, வீதி வீதியாகக் களம் இறங்கி இருக்கிறார்கள் தமிழக மாணவர்கள்.


இந்த நிலையில் தமிழ்ச் சமூகத்தின் முக்கியமான ஆளுமைகள் சிலரிடம் ஈழத் தமிழர்களின் நலனுக்காக இனி என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை முன்வைத்தோம்.


புனிதப்பாண்டியன், ஆசிரியர், தலித் முரசு


''இனப் படுகொலைக்கு ஆளான போஸ்னிய மக்களுக்கு நியாயம் கிடைக்கப் பெரும் பங்காற்றிய பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல் மிக முக்கியமான கருத்து ஒன்றைச் சொன்னார். உலக அளவில் இனப் படுகொலை ஒப்பந்தம் ஒன்று உள்ளது. உலகெங்கிலும் சுமார் 140 அரசுகள் அந்தச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு கையெழுத்திட்டிருக்கின்றன. அதில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் இனப் படுகொலை எங்காவது நடந்தால், ஹேக் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும். அந்த வகையில் ஹேக் நீதிமன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடு ஒன்று, இலங்கைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால், அது ஈழப் பிரச்னையில் முக்கியமானதொரு நகர்வாக இருக்கும். அந்த வழக்கின் அடிப்படையில், ஈழ மக்களுக்கான சில உரிமைகளை நாம் கோர முடியும். இனப் படுகொலைக் குற்றவாளிகளைத் தண்டிக்கும் வகையில் சட்ட விசாரணை நடத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனக் கோரலாம். காணாமல்போதல், கொலைகள் என்று இனப் பாகுபாடு தொடர்ந்து நீடிக்கும் நிலையில், தற்காலிகத் தடுப்பு ஆணையம் ஒன்றை உருவாக்கும் அதிகாரம் இந்தச் சட்டத்துக்கு உண்டு. கம்போடியா, ருவாண்டா, கொசாவா போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தச் சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்கப்பட்டிருக்கிறது!''  சுப.உதயகுமாரன்- ஒருங்கிணைப்பாளர், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்''ஈழப் படுகொலைகள் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போதுதான் அது முழுமையான மக்கள் போராட்டமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஐ.நா-வில் மனித உரிமை அமர்வுகள் முடிந்துவிட்ட நிலையில், போராட்டங்களும் முடிந்துபோனால் அது பின்னடைவாகிவிடும் என்னும் நிலையில், மாணவர்கள் ஈழ மக்களுக்காகக் கிராமங் களுக்குச் செல்ல வேண்டும். ஈழ மக்களின் விடிவுக்காகச் சர்வதேசச் சமூகத்தை நம்பியிருக்கும் நிலையில், தமிழகத்தில் இருந்து உருவாகும் அழுத்தங்களே இந்திய அரசுக்கு நெருக்கடியை உருவாக்கும். இது ஒரு தொடக்கம்தான். இன்னும் எட்ட வேண்டிய இலக்கை மனதில் வைத்துக்கொண்டு, சாத்வீகமான போராட்டங்களை மாணவர்கள் தொடர வேண்டும்!''


திருமுருகன்- ஒருங்கிணைப்பாளர், மே-17 இயக்கம்


''இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் சர்வதேசச் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகி, அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்தபோது, புலிகளின் ஆளுகைக்குள் இருந்த பிரதேசங்களைத் தமிழர்களின் நிர்வாக சபையாக இலங்கை அரசும் சர்வதேசச் சமூகங்களும் ஏற்றுக்கொண்டு தான் பேச்சுவார்த்தைக்கு வந்தன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தமிழீழக் குடிமக்கள் அல்லாத பிறர் அனுமதி இன்றி நுழைய முடியாது என்பதைச் சர்வதேசச் சமூகம் ஏற்றுக்கொண்டுஇருந்தது.


 இன்னமும் அந்த அங்கீகாரம் அப்படியேதான் இருக்கிறது. மூன்று தரப்பினர் ஈடுபட்ட அந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து இலங்கை விலகி, போர் தொடுத்து இனப் படுகொலையை நடத்தி முடித்துவிட்டது. போருக்குப் பின்னர், டப்ளின் தீர்ப்பாயம் 2010 ஜனவரி 15-ல் சொன்னது மிக முக்கியமான விஷயம். பேச்சுவார்த்தை மேஜையில் அமர்ந்திருக்கும் ஒரு குழுவை எப்படிப் பயங்கரவாத இயக்கம் என்று தடை செய்யலாம் என அமெரிக் காவை நோக்கியும், ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கியும் கேள்வி எழுப்பியது டப்ளின் தீர்ப்பாயம். ஆக, பயங்கரவாதம் என்ற பொருந்தாத ஒன்றைச் சொல்லி புலிகள் அமைப்பினரை அழித்திருக்கும் நிலையில்... நார்வே, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடக்குப் பகுதி நிர்வாக சபைக்கான உரிமையைச் சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் தற்காலிகத் தீர்வாகவும், தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு என்னும் நிரந்தரத் தீர்வை நோக்கிய தொடக்கமாகவும் நமது போராட்டப் பாதையை அமைத்துக்கொள்ளலாம்!''


சரஸ்வதி- அமைப்பாளர், நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தோழமை மையம்''குறிப்பிட்ட ஓர் இனத்தைச் சார்ந்த மக்களை ஓர் அரசு கூட்டுக் கொலை செய்யும்போது, அந்த மக்கள் தங்களுக்கான ஓர் அரசை அமைத்துக்கொள்வதற்கான சுதந்திரத்தை, உரிமையைச் சர்வதேசச் சட்டங்கள் வழங்கிஉள்ளன. இந்தச் சட்டத்தின் உதவியோடு இதற்கு முன் பல நாடுகளும் பொது வாக்கெடுப்பு உரிமையின் கீழ் சுதந்திரமான நாடுகளாகவும் ஆகியுள்ளன. ஆனால், தொடர்ச்சியான போராட்டங்களும் அழுத்தங்களும் மட்டுமே இதைச் சாதிக்கும்.


 ஐ.நா-வில் பொது வாக்கெடுப்பு, இனப் படுகொலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னெ டுப்பது உலகின் வேறெந்த நாடுகளைவிடவும் இந்தியாவுக்கே அதிக உரிமையுள்ளது. ஆக, இந்திய அரசாங்கத்தை அந்தத் திருப்பத்தை நோக்கி நகர்த்துவதே நமது போராட்டங்களின் நோக்கமாக இருக்க வேண்டும்!''சுரேஷ், பொதுச் செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்


''தமிழகத்தில் இருந்து இலங்கைக்குச் சென்றவர்கள் அங்கு சென்று தனி நாடு கேட்கிறார்கள் என்றுதான் தமிழகத்துக்கு வெளியில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள். தமிழகத் துக்கு என்று சில பிரச்னைகள் இருக்கின்றன என்று ஆங்கில ஊடகங்களோ, வட இந்திய அரசியல்வாதிகளோ நினைப்ப தில்லை. அவர்களுக்கு நமது நியாயங்கள் புரியும் வகையில் தமிழகம் தொடங்கி டெல்லி வரை அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஈழத் தமிழர்களின் நியாயங்களைப் பேச வேண்டும். இன்று தமிழகத்தில் உருவான அழுத்தம் வட இந்தியாவிலும் உருவானால் மட்டுமே, இந்திய அரசு இந்தப் பிரச்னையைக் காது கொடுத்துக் கேட்கும். இப்போது நமது போராட்டம் இந்திய அரசோடு அல்ல, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையோடு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்!''


புகழேந்தி - செயலாளர், தமிழக மக்கள் உரிமைக் கழகம்


''ராஜபக்ஷேவைத் தண்டிக்க வேண்டும் என்பது ஒரு கோரிக்கைதான். ஆனால், இனி மேல் இலங்கையில் தமிழ் மக்கள் சுதந்திரம் பெற்ற குடிமக்களாக இருக்க வேண்டும் என்ற முடிவுதான் அரசியல்ரீதியாக அந்த மக்களைப் பாதுகாக்கும். இனப் படுகொலை முடிந்து இந்த நான்கு ஆண்டுகளில் இப்போதுதான் முதன்முதலாக தமிழக மக்களிடம் ஈழப் பிரச்னை அதன் வீரியத்துடன் கொண்டுசேர்க்கப்பட்டு இருக்கிறது. இதுதான் இந்தத் தருணத்தில் மிகவும் சாதகமான அம்சம். தேர்தல் அரசியல் கட்சிகளைப் புறந்தள்ளிவிட்டு, மாணவர்கள் தலைமையில் திட்டமிட்டு இந்திய அளவிலான அழுத்தம் ஏற்படுத்த வேண்டும். அதே நேரத்தில், புகலிடத் தமிழர்கள் உலகளாவிய அளவில் இதற்கான அழுத்தங்களை ஏற்படுத்தினால், நிச்சயம் அரசியல்ரீதியாக ஈழத் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கும். ஆனால், அது தொடர்ச்சியான போராட்டங்களாலும் அழுத்தங்களாலும் மட்டுமே கிடைக்கும்!''


மனுஷ்யபுத்திரன் - எழுத்தாளர்


''இனப் படுகொலை என்பது ஒரு கூட்டுக் கொலை என்கிற நிலையில், அந்த நினைவுகளில் இருந்தும் பாதிப்புகளில் இருந்தும் ஒரு சமூகம் மீண்டு வரப் பல ஆண்டுகள் ஆகும். சில தலைமுறைகள் கடந்தும்கூட அந்த நினைவுகள் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், நேரடி யாக ஈழ மக்களும் அதன் பண்பாட்டுத் தொடர் புகளால் தமிழக மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். இவற்றைக் கணக்கில்கொண்டு ஈழத் தமிழர் குழந்தைகள் மற்றும் இளந் தலைமுறையினருக்கு மன நிலையைச் சாந்தப்படுத்தும் பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். இப்போது எழுச்சியோடு நடைபெறும் மாணவர் போராட்டங்கள் எந்த அரசியல் அமைப்பாலும் கைப்பற்ற முடியாத போராட்டமாக உள்ளதோடு, அரசியல் கட்சிகளுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தவும் செய்திருக்கிறது. ஆகவே, இப்போது தமிழகத்தில் உடனடித் தேவை ஈழ மக்களுக்கான அரசியல் முன்னெடுப்புகளைச் சீராய்ந்து செய்யும் ஓர் ஒருங்கிணைப்பு!''


ஜோதிமணி - காங்கிரஸ் கட்சி


''சமீபத்தில் தனிப்பட்ட முறையில் இலங்கை சென்று போரால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து வந்தேன். கடந்த 30 ஆண்டு காலப் போரால் ஈழத் தமிழர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். போர்த் தாக்குதலில் உயிர் மட்டுமே மிஞ்சியிருக்கும் மக்களை ராணுவத்தின் இறுக்கமான கண்ணிகள் இறுக்கியபடியே இருக்கின்றன. வட இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களுமே முழுமையான ராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதால்,  பொதுமக்கள் ஒரு வார்த்தை நலம் விசாரிக்கக்கூட அஞ்சுகிறார்கள்.


 உடனடியாக யாழ்ப்பாணத்தில் இருந்து ராணுவத்தை வெளி யேற்ற வேண்டும். போரில் சிதிலம் அடைந்த பாடசாலைகளைப் புதுப்பித்து நல்ல கல்வியை அந்தக் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். இழந்த நிலங்களை மீட்டுக்கொடுப்பதும், பொருளாதாரரீதியாக அந்த மக்களை முன்னேற்று வதும், இயல்பு வாழ்வை அங்கு கொண்டுவருவதும் ஈழத்தின் உடனடித் தேவை கள். நிச்சயமாக ஈழப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு ஒன்றே இறுதித் தீர்வாக இருக்க முடியும். ஆனால், அது  தமிழீழமா, அதிகாரப் பகிர்வா அல்லது பொது வாக்கெடுப்பா... எது என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் நாம் அல்ல... ஈழத் தமிழர்கள். ஆனால், அந்தத் தெளிவை அவர்கள் எட்டுவதற்கான புனரமைப்புகளும் இழந்த வாழ்க்கைக்கான நிவாரணங்களையும் அவர்களுக்கு அளிக்கச் செய்ய வேண்டியது நமது கடமையாகும்!''


அ.மார்க்ஸ் - அமைப்பாளர், மனித உரிமைக்கான மக்கள் கழகம்


''ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை மனித உரிமை கவுன்சிலுக்கு அளித்த அறிக்கையில், சுதந்திரமான பன்னாட்டு விசாரணை, ராணுவ நீக்கம், அதிகாரப் பகிர்வு முதலியன பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.


ராஜபக்ஷேக்களின் குடும்ப சர்வாதிகாரத்தைக் கண்டித்து, இன்று குமார் டேவிட், திசராணி குணரத்ன முதலிய சிங்கள அறிவு ஜீவிகளும் பேசத் தொடங்கிஉள்ளனர். இந்தப் பின்னணியில் இருந்துதான் நாம் எதிர்கால நடவடிக்கைகளை அமைக்க வேண்டும். போர்க் குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான பன்னாட்டு விசாரணை, வடக்கு, கிழக்கில் ராணுவ நீக்கம், முறையான அதிகாரப் பகிர்வு ஆகியவற்றை உடனடிக் கோரிக்கைகளாக முன்வைத்துப் போராட்டங்களைத் தொடர்வதும், பொது வாக்கெடுப்பு என்பதை நோக்கி இந்திய அளவிலும், உலக அளவிலும் ஆதரவைத் திரட்டுவதும்தான் ஈழத் தமிழரின் எதிர்காலத்துக்கான சீரிய செயற்பாடுகளாக அமையும்!''

 நன்றி - விகடன்