Showing posts with label மூடு டாஸ்மாக்கை மூடு’ / பாடகர் கோவன் /ஆவேச பேட்டி!. Show all posts
Showing posts with label மூடு டாஸ்மாக்கை மூடு’ / பாடகர் கோவன் /ஆவேச பேட்டி!. Show all posts

Thursday, November 05, 2015

மூடு டாஸ்மாக்கை மூடு’ பாடலைப் பாடியதற்காககைது செய்யப்பட்ட பாடகர் கோவன் ஆவேச பேட்டி!

"மூடு டாஸ்மாக்கை மூடு" என்ற மது ஒழிப்பு பாடலைப்போல இன்னும் நிறைய பாட வேண்டியுள்ளது என்றும், மக்களின் விடியலுக்காகத் தொடர்ந்து பாடுவேன் என்றும் பாடகர் கோவன் கூறியுள்ளார். 

முதல்வர் ஜெயலலிதா மற்றும் தமிழக அரசை விமர்சித்து பாடல்கள் பாடியதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பின் பாடகர் கோவன் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணை செய்த போலீசார் ,சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பாடகர் கோவனை போலீசார், எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (புதன்) மீண்டும் ஆஜர்படுத்தினர்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு கோவன் அளித்த பேட்டியில், " ஒரு ரூபாய்க்கு இட்லி. ஐந்து ரூபாய்க்கு கழிப்பறை கட்டணம். நூறு ரூபாய்க்கு பருப்பு. லட்ச ரூபாய் தாண்டுகிற கல்விக் கட்டணம் என்று மக்களின் உணர்வுகளைத்தான் பாடலாக்கினேன். இன்னும் பாடவேண்டியவை  நிறைய உள்ளன. என் பாட்டில் குற்றமில்லை. மக்கள் விடியலுக்காகப் பாடிக் கொண்டே இருப்பேன்" என்று கூறினார். 

மேலும் அவர், " டாஸ்மாக் கொடுமையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை, பெண்களை கேட்டால் அவர்களின் உணர்ச்சியின் வெளிப்பாடு அதீதமான மொழியாகவே கேட்கிறது. இந்த அரசு மக்களுக்கான அரசாகவே இருக்கிறது என்று சொல்கிறவர்களை,  'டாஸ்மாக் என்று ஒன்று தேவையா?' என பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களைப் போய் கேட்டுப் பார்க்க சொல்லுங்கள். அப்போதுதான் உண்மை தெரியும். இது ஒரு பொதுவான எல்லோருக்குமான கோபம். மக்களின் உணர்வுகளைத்தான் நான் வெளிக்கொண்டு வந்திருக்கிறேன்" என்று கூறினார் கொந்தளிப்பாக. 

பின்னர் பாடகர் கோவனை போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் கோவன் , "என்னை முழுமையாக போலீசார் விசாரித்து விட்டனர். பாடல், குறுந்தகடு குறித்தெல்லாம் தகவலை கேட்டு வாங்கி விட்டனர். புதிதாக விசாரிக்க தேவை ஒன்றும் இல்லை ஐயா " என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

போலீஸ் காவலில் மீண்டும் விசாரிக்க  மாஜிஸ்திரேட் அனுமதி தரவில்லை என்பதால் அவர்  மீண்டும்  புழல் சிறைக்குக்  கொண்டு செல்லப்பட்டார். கோவனின் ஜாமீனுக்கான மனுவை அவரின் வழக்கறிஞர் நாளை தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.

செய்தியாளர்களை தடுத்து நிறுத்திய  போலீசார்  

இதனிடையே  எழும்பூர் நீதிமன்றத்தில் மக்கள் பாடகர் கோவன் ஆஜர்படுத்தப்படுகிறார் என்ற செய்தியறிந்த பத்திரிக்கையாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் செய்தி சேகரிக்க காத்திருந்தனர்.

அப்போது, சென்னை ரவுடிகள் ஒழிப்புப் பிரிவு போலீசார்,  செய்தியாளர்களை கோவனிடம் பேட்டி எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை செய்தி சேகரிக்க அனுமதிக்க கோரி மாஜிஸ்திரேட் கணேசனிடம் முறையிட்டனர். அதன்பின்னரே போலீசார்  அங்கிருந்து நகர்ந்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
(’மூடு டாஸ்மாக்கை மூடு’ பாடலைப் பாடியதற்காக பாடகர் கோவன் கைது செய்யப்பட்ட விதம் நிச்சயம் ஜனநாயக விரோதமான, கருத்து சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கை. அதற்கான கண்டனத்தை கடுமையாகப் பதிவு செய்ய வேண்டியது ஊடகம் மற்றும் பொதுமக்களின் கடமை.  கருத்துரிமை என்பது எல்லை மீறிய தனிமனித தாக்குதலாக மாறிவிடக்கூடாது.)


-விகடன்