Showing posts with label நளனும் நந்தினியும் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label நளனும் நந்தினியும் - சினிமா விமர்சனம். Show all posts

Friday, July 11, 2014

நளனும் நந்தினியும் - சினிமா விமர்சனம்

தினமலர் விமர்சனம்

தமிழ் சினிமாவில் முதல் படத்தை இயக்கி அறிமுகமாக வரும் பெரும்பாலான இயக்குனர்களின் முதல் படக் கதை அவர்களின் சொந்த வாழ்க்கையாகவோ, அல்லது நண்பர்களின் வாழ்க்கையாகவோ, அவர்கள் ஊரில் பார்த்த விஷயங்களாகவேதான் இருக்கும். அதில் கொஞ்சம் கற்பனையைக் கலந்து சுவாரசியமாகக் கொடுக்க முயற்சிப்பார்கள். முதல் படத்தை எப்படியாவது உணர்வு பூர்வமாகக் கொடுத்து ரசிகர்களின் மனதைக் கவர முயற்சிப்பார்கள். சிலர் அதில் வெற்றியும் பெற்று விடுவார்கள். காரணம், அவர்கள் அனுபவித்ததை படம் பார்க்கும் ரசிகர்களும் அனுபவித்திருப்பார்கள்.

அப்படி ரசிகர்களுக்கு நெருக்கமான ஒரு படத்தைக் கொடுக்கும் அறிமுக இயக்குனர்களே இங்கு வெற்றி பெறுகிறார்கள். ஆனால், இந்தப் படத்தை இயக்கியுள்ள ஆர்.வெங்கடேசன் அவருடைய சொந்த வாழ்க்கையை படமாக்கினாலும் ரசிகர்களை எந்த விதத்திலும் நெருங்கவில்லை. அந்த சொந்தக் கதை சோகக் கதையாகவும் இல்லை, சுவாரசியமான கதையாகவும் இல்லை. வெட்டியாகத் திரியும் ஒரு கணவனை காதல் மணம் புரிந்த மனைவி அவனை சாதனையாளனாக மாற்றுகிறார். இதுதான் படத்தின் ஒரு வரிக் கதை. இதை எப்படி சொல்லியிருக்க வேண்டும் ?. நாம் கடந்து வந்த பாதையை கொஞ்சம் கூர்ந்து நினைவு படுத்திப் பார்த்தாலே பல நெகிழ்ச்சியான சம்பவங்களும், சுவாரசியமான சம்பவங்களும் நினைவுக்கு வரும். ஆனால், வெங்கடேசனுக்கு நினைவுக்கு வந்த காட்சிகள் எல்லாமே சற்றும் சுவாரசியமில்லாத காட்சிகள்தான்.

ஒரு காட்சியில் மனைவி வேலைக்காக காத்திருக்கும் போது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு இவர் தன்னுடைய மூக்கை நோண்டுவது போல் ஒரு காட்சியமைத்திருக்கிறார். அவருடைய கற்பனை வறட்சியின் ஒரே ஒரு எடுத்துக்காட்டுதான் இந்தக் காட்சி. எப்படி ஒரு தயாரிப்பாளர் இந்தக் காட்சியையெல்லாம் கேட்டு, இந்தக் கதையையும் கேட்டு ஒரு படமாக எடுக்க சம்மதித்தாரோ ? சொந்தமாக கதை எழுத வரவில்லையென்றால் மற்றவர்களைப் போல் நாலு சிடியைப் பார்த்தாவது, நாலு பழைய படங்களைப் பார்த்தாவது காட்சியைப் பிடித்திருக்கலாமே.

மைக்கேல் இஞ்சினியரிங் படித்து முடித்தவர். நந்திதா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். இருவரும் சொந்தக்காரர்கள்தான். சிறு வயதிலேயே இவருக்கு அவர் என இருவரது அம்மாக்களும் முடிவெடுக்கிறார்கள். ஆனால், இரண்டு குடும்பங்களுக்கும் பகை உண்டு. வாலிப வயதை அடைந்ததும் இருவரும் காதலிக்கிறார்கள். திருமணத்துக்கு பெரியவர்கள் சம்மதிக்க மாட்டார்கள் எனத் தெரிந்ததும், இவர்களே கோயிலில் திருமணம் செய்து கொண்டு வீட்டுக்குச் செல்கிறார்கள். இருவர் வீட்டிலும் விரட்டியடிக்கிறார்கள். அதன் பின் கிளம்பி சென்னைக்குச் செல்கிறார்கள். அங்கு நந்திதா ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலைக்குச் சேர்கிறார். மைக்கேல், வீட்டிலேயே சும்மா இருக்கிறார். ஒரு கட்டத்தில் நந்திதா, கணவனுக்கு ஊக்கமளித்து திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என்ற லட்சியத்திற்கு செயல்வடிவம் கொடுக்கிறார். மைக்கேல் திரைப்பட இயக்குனர் ஆனாரா, இவர்களை அவர்களது குடும்பம் சேர்த்துக் கொண்டதா என்பதுதான் படத்தின் கதை.

படத்தில் சூரி இருக்கிறார், ஆனால் நகைச்சுவை இல்லை, ஜெயப்பிரகாஷ் இருக்கிறார் ஆனால் குணச்சித்திரம் இல்லை, ரேணுகா இருக்கிறார் ஆனால் கண்கலங்கும் காட்சிகள் இல்லை. இப்படி எத்தனையோ இல்லை. படத்துக்குள் படமாக உதவி இயக்குனராக மைக்கேல் துடிப்பாக செயல்படுவதில் ஒரு பத்து சதவீமாவது இந்தப் படத்தின் இயக்குனர் உழைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். முதல் பட வாய்ப்பு கிடைத்தும், அதைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் என்ன சொல்வது.

மைக்கேல், நாயகனுக்குரிய முகம் இல்லையென்றாலும் நன்றாக நடனமாடுகிறார். நடிக்கிறாரா என்று கேட்டால் முயற்சி செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அனைத்து முகபாவங்களும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. ஒருவேளை இந்தப் படத்திற்கு இது போதும் என முதல் படத்திலேயே நினைத்து விட்டாரோ என்னமோ.

இரண்டு, மூன்று படங்களே நடித்திருந்தாலும் அட, நம்ம பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கிறாரே என நினைத்து நந்திதாவை ரசிக்க ஆரம்பித்தவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் அந்த நினைப்பை கை விட்டு விடுவார்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் என்பதை உணர்த்தும் கதாபாத்திரம்தான் நந்திதாவுக்கு. பாவம், அவர்தான் என்ன செய்வார் வலுவான காட்சிகள் இருந்திருந்திருந்தால் நடித்திருக்க மாட்டாரா என்ன ?

ஜெயப்பிரகாஷும், ரேணுகாவும் படத்தில் அண்ணன் தங்கைகள். ஆனால், இவர்களிருவருவரையும் கணவன், மனைவி போலவே உலவ விட்டிருக்கிறார் இயக்குனர். மொத்தமாக நான்கு காட்சியில்தான் வருகிறார் சூரி. ஆனால், எதிலும் சிரிப்பு வரவில்லை. ஒரே ஒரு காட்சியில் மட்டுமே அழ வைக்கிறார். 'மாமன்காரன் 50 ரூபாதான் குழந்தைக்கு கொடுத்தன்னு நினைச்சிக்காத மாப்பிள்ளை' என்கிறாரே இந்த ஒரே ஒரு காட்சிதான் படத்தில் உயிர்ப்பான காட்சியாக நமக்குத் தோன்றியது. இம்மாதிரி உறவுகள்தான் இன்னும் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. அடுத்த படத்திலாவது இம்மாதிரியான காட்சிகளை யோசியுங்கள் இயக்குனரே.

அஸ்வத் இசையமைப்பில் 'வாடகைக்கு கூடு...' பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையைப் பற்றியெல்லாம் கேட்கவே கூடாது. வாசித்துத் தள்ளியிருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் தேறிவிட வாய்ப்புண்டு. முதல் பட வாய்ப்பு என்பது எவ்வளவு பெரிய விஷயம் என இந்தப் படக் கலைஞர்கள் போகப் போக உணருவார்கள்.

நளனும் நந்தினியும் - தலைப்பை மட்டும் அழகாக வைத்தால் போதாது... 
thanx - dinamalar 


diski -பப்பாளி - சினிமா விமர்சனம் -http://www.adrasaka.com/2014/07/blog-post_13.html 




ராமானுஜன் - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2014/07/blog-post_218.html