Showing posts with label கேரியர். Show all posts
Showing posts with label கேரியர். Show all posts

Thursday, February 12, 2015

தமிழ் சினிமா நாயகிகள் - கிளாமர்- கவர்ச்சி-நடிப்பு - யார் டாப்?ஒரு அலசல்

a
கதாநாயகிகளின் பேட்டி என்றால் எப்போதுமே ஒரு கவனம் கிடைக்கிறது. அதற்குக் காரணம் அவர்களது நடிப்புத்திறனை மீறி அவர்கள் மீது படிந்திருக்கும் கிளாமர் பிம்பம்.
நம்பர் ஒன் நடிகை ஆக வேண்டும் என்று அறிமுக நடிகைகள் பேட்டிகள் கொடுத்த காலம் ஒன்றிருந்தது. ஆனால், தற்போது அதையே கொஞ்சம் திருத்தி ரஜினி, கமல், அஜித், விஜயுடன் நடிக்க வேண்டும். அல்லது அவர்களது படங்களில் தலைகாட்டினால்கூடப் போதும் என்பார்கள்.
முன்பெல்லாம் படம் முழுக்க கதாநாயகிகள் வருவார்கள். அவர்கள் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்குப் போதிய முக்கியத்துவம் இருக்கும். ராதிகா, குஷ்பூ காலகட்டத்தில் ஒரு கதாநாயகிக்கு ஒரே நடிகருடன் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது.
அதற்குப் பிறகு சிம்ரன், ஜோதிகா நடிக்க வந்த தருணத்தில் கதாநாயகியே கவர்ச்சிப் பொருள் ஆனார். இப்போது அதில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு நான்கு காட்சிகள், மூன்று பாடல்கள்தான் கதாநாயகிக்கு என்ற நிலை வந்துவிட்டது.
கதாநாயகிக்கென்று கஷ்டங்கள் இருக்கின்றன. அதனால்தான் ஒரு கட்டத்தில் பணம் மட்டுமே குறிக்கோள் என்று கிடைத்த படங்களில் கவர்ச்சிக்குக்கூட மறுப்பு சொல்லாமல் தாராளம் காட்டி நடிக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். இப்போது கதாநாயகி பாத்திரங்களுக்கான ஆயுள் குறைவு. மூன்று வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக நீடிப்பது கடினம் என்று சொல்லப்படுகிறது.
காத்திருப்பு அவசியம்
இந்தச் சவாலை மீறி கதாநாயகிகள் பயணிக்கக் காத்திருப்பு அவசியமாகிறது. ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, எங்கேயும் எப்போதும் ஆகிய மூன்று படங்கள் அஞ்சலியின் சினிமா வாழ்க் கையில் மைல்கற்களாக அமைந்தன.
ஒரு நாயகிக்கு மிகச் சில வருடங்களில் இப்படிப்பட்ட அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைப்பது அபூர்வம். வழக்கமான கதாபாத்திரங்களுக்கிடையில், இப்படிக் கிடைக்கும் வாய்ப்பை அஞ்சலி மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்.
பூ படத்துக்குப் பிறகு நல்ல கதாபாத்திரத்துக்காகக் காத்திருந்த பார்வதி ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகே மீண்டும் தமிழில் நடித்தார். ‘சென்னையில் ஒரு நாள்’, ‘மரியான்’ படங்களில் நடித்த பார்வதி இப்போது கமலுடன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடித்துள்ளார். திறமையிருந்தாலும் கதாநாயகிகளுக்குக் காத்திருப்பு அவசியம் என்பதை அஞ்சலியும் பார்வதியும் நமக்கு உணர்த்துகிறார்கள்.
இந்தத் தருணத்தில் கிளாமர் என்பது ஒரு கட்டத்தில் போரடித்துவிடும். ஆனால், நடிப்பு என்பது எப்போதும் போரடிக்காது. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால் காலத்துக்கும் கதாநாயகியை யாரும் மறக்க முடியாது.
அதனால்தான் த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, ஜோதிகா என அனைவரும் பெண்களை மையப்படுத்தும் படங்கள் கிடைத்தால் இறுக்கமாகப் பிடித்துக்கொள்கிறார்கள். ‘நீ எங்கே என் அன்பே’ படத்தில் கர்ப்பிணியாக நடிக்காத நயன்தாரா ‘மாயா’ படத்தில் ஒரு குழந்தைக்குத் தாயாக நடிக்கிறார்.
‘ராணி ருத்ரம்மா தேவி’ சரித்திரப் படத்தில் தன் நடிப்புத் திறமையை நிரூபிக்க உள்ளார் அனுஷ்கா. நல்ல படத்தில் நடிப்புக்குத் திரும்ப வேண்டும் என்று காத்திருந்த ஜோதிகா ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ மலையாளப் பட மறு ஆக்கத்தில் நடித்து முடித்திருக்கிறார். த்ரிஷா மூன்று பெண்களை மையமாகக் கொண்ட ‘போகி’ படத்தில் நடிக்கிறார்.
விருது நடிகை பட்டம்
இவர்களது அழுத்தமான பாதை ஒருபுறம் இருக்க, இன்னும் சில கதாநாயகிகள் விநோதமாகத் திரையை அணுகுகிறார்கள்.
தேசிய விருது வாங்கி விட்டால் “விருது நடிகை” என்று பெயர் வந்துவிடுமாம். அதன் பிறகு வணிகப் பட வாய்ப்புகள் வராதாம். இப்படிக் கருதுபவர்களும் உண்டு.
பருத்தி வீரன் படத்தில் நடித்ததற்காகத் தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியாமணி. கருத்த முகம், அசாதாரண உடல் மொழி, கண்களால் பேசும் அழகு என நடிப்பில் ஜொலித்தார். ஆனால் தேசிய விருது வாங்கியவுடன் மளமளவென கிளாமராக நடித்துத் தன்னை கிளாமர் நடிகை என நிரூபித்துக்கொண்டார். ஆனால் இப்போதும் பிரியாமணியைப் பருத்தி வீரன் படத்தைச் சொல்லித்தான் அடையாளம் கண்டுகொள்கிறோம்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீ திவ்யா கிராமத்துப் பெண்ணாக நடித்து, ஒரே படத்தில் ஓஹோ என வளர்ந்தார். நகரத்துப் பெண்ணாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காததால் வாய்ப்புகள் அவரைத் தேடி வருகின்றன.
பிம்பத்தைத் தாண்டி
நடிகைக்கான அடையாளம் என்பது நடிப்புதானே தவிர கவர்ச்சி இல்லை என்பதைச் சொல்லும் நடிகைகள் இங்கே வெகு சிலரே. ‘யுத்தம் செய்' படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனும், ‘நந்தலாலா’ படத்தில் ரோகிணியும் மொட்டை போட்டு நடித்தார்கள். ஆனால், கதாநாயகிகள் அப்படித் தங்களை மாற்றிக்கொள்வதில்லை.
ஒரு படம் தயாரித்து முடித்து வெளியிடத் தடுமாறும்போது அந்தப் படத்தில் நடித்த சில கதாநாயகர்கள் பணம் கொடுத்து உதவுகிறார்கள். சம்பள பாக்கி இருந்தால் சில நேரம் விட்டுக் கொடுக்கிறார்கள். படம் நஷ்டம் அடைந்தால்கூடத் திருப்பித் தர நடிகர்கள் தயாராக இருக்கிறார்கள்.
இந்த வரிசையில் ஒரு கதாநாயகியைக் காட்ட முடியுமா? பாடல் வெளியீட்டு விழாக்கள் உள்ளிட்ட படத்தின் விளம்பர நிகழ்வுகள் நடிகைகள் இல்லாமலே நடக்கின்றன. ஆனால் இதற்கு நடிகைகள் மட்டும்தான் காரணமா என்பதையும் யோசிக்க வேண்டும்.
இந்தியில் ‘குயின்’ படத்தில் நடித்த கங்கணா ரணவத் அந்தப் படத்துக்கான கூடுதல் வசனங்களை எழுதியிருக்கிறார். ஆனால், தமிழில் அப்படியொரு மாற்றம் இன்னும் வரவில்லை என்பது கவனிக்க கூடிய உண்மை. சினிமா பற்றிய அக்கறையோ, அர்ப்பணிப்பு உணர்வோ பல நடிகைகளுக்கு இல்லை.
அபூர்வமாக ஒரு சில நடிகைகள் சினிமாவை நேசிக்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடியது. மற்ற நடிகைகள் எப்போது இதைப் புரிந்துகொள்வார்கள்?

thanx - the hindu