Showing posts with label குபேர ராசி (2015)-சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label குபேர ராசி (2015)-சினிமா விமர்சனம். Show all posts

Friday, October 30, 2015

குபேர ராசி (2015)-சினிமா விமர்சனம்

நடிகர் : ரோஷன் பசீர்
நடிகை :அபிராமி சுரேஷ்
இயக்குனர் :ராதாகிருஷ்ணன்
இசை :கணேஷ் ராகவேந்திரா
ஓளிப்பதிவு :தில்ராஜ்
கும்பகோணம் பகுதியில் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் ரோஷன். இவருடைய அப்பாவான தலைவாசல் விஜய், தன்னுடைய நண்பனான காதல் தண்டபாணியுடன் சேர்ந்து பைனான்ஸ் கம்பெனி நடத்தி வந்திருக்கிறார். இதில் காதல் தண்டபாணி தலைவாசல் விஜய்யை ஏமாற்றிவிட்டு பணத்தை எடுத்துச் சென்று விடுகிறார். இதனால் பணத்தை பறிகொடுத்தவர்களிடம் தலைவாசல் விஜய் மாட்டிக்கொள்கிறார்.

பணத்தை இழந்தவர்கள் தலைவாசல் விஜய்யிடம் பணத்தைக் கேட்டு வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்கிறார்கள். பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் தலைவாசல் விஜய்க்கு அவருடைய மகன் ரோஷன் உதவி செய்ய முயல்கிறார். பணத்தை இழந்தவர்கள் ரோஷன் அலுவலகத்திற்கும் வந்து தொந்தரவு செய்கிறார்கள். இதனால் ரோஷனுக்கு வேலையும் போகிறது.

இந்நிலையில், பணத்தை இழந்தவர்களில் ஒருவர் தன்னுடைய பெண்ணின் திருமணத்திற்கு பணம் தேவை என்று கேட்கிறார். மேலும் திருமணம் நடக்காவிட்டால் குடும்பத்துடன் இறந்து விடுவதாக கூறுகிறார். இதையறிந்த ரோஷன் பணத்தை எப்படியாவது கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பனைத் தேடி சென்னைக்கு செல்கிறார்.

சென்னை வந்த ரோஷன் தன்னுடைய நண்பனுக்கு போன் செய்ய, அது தவறான அழைப்பாக பிஜோ ஐசக்கிற்கு செல்கிறது. அவரிடம் தன்னுடைய குடும்ப சூழ்நிலையை சொல்கிறார் ரோஷன். பிஜோ ஐசக்கும் நான் பணமும் தரேன், உனக்கு வேலையும் தருகிறேன் என்று கூறுகிறார். முதலில் பணத்தை பெற்றுக் கொண்ட ரோஷன் ஊருக்குச் சென்று பணத்தை கொடுத்து விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்புகிறார்.

சென்னையில் பிஜோ ஐசக்கை சந்திக்கும் ரோஷன், ஒரு வங்கியில் கொள்ளை அடிக்க வேண்டும் என்று சொல்கிறார். இதற்கு ரோஷன் மறுக்கிறார். பின்பு குடும்ப சூழ்நிலை காரணமாக கொள்ளையடிக்க சம்மதிக்கிறார். அதன்படி இருவரும் கொள்ளையடித்து விட்டு செல்லும் வழியில் கொஞ்ச பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பித்து செல்கிறார் ரோஷன்.

இறுதியில் ரோஷன், பிஜோ ஐசக் இருவரும் போலீஸிடம் சிக்கினார்களா? ரோஷன் முயற்சி என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

பாபநாசம் படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடித்த ரோஷன், இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். குடும்பப் பிரச்சனையை கண்டு வருந்துவதும், அதற்காக திருடனாக மாறி சிக்கலில் சிக்குவதாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அபிராமி சுரேஷ் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் பிஜோ ஐசக், பணத்தை திருடும் காட்சிகளிலும், ரோஷனுக்கு கட்டளையிடும் காட்சிகளிலும் வில்லத்தனத்தில் மிரட்ட முயற்சித்திருக்கிறார். ரோஷனுக்கு அப்பாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய், அவருக்கே உரிய பாணியில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வங்கி கொள்ளையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராதா கிருஷ்ணன். ஏற்கனவே வங்கி கொள்ளையை பற்றி பல படங்கள் வெளிவந்திருக்னிற்ன. எனவே, இப்படத்தில் எதாவது வித்தியாசத்தை புகுத்தியிருப்பார் என்று நினைத்தால் அது ஏமாற்றமே. தேவையற்ற காட்சிகள், லாஜிக் மீறல்கள் ஆகியவற்றை சரி செய்திருக்கலாம்.

கணேஷ் ராகவேந்திரா இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் இசையும் பெரிதாக எடுபடவில்லை. தில்ராஜ் ஒளிப்பதிவில் தெளிவு இல்லாமல் இருக்கிறது.

மொத்தத்தில் ‘குபேர ராசி’ நேரம் சரியில்லை.

-மாலைமலர்