Showing posts with label அக்ஷ்ரா. Show all posts
Showing posts with label அக்ஷ்ரா. Show all posts

Tuesday, April 02, 2013

சென்னையில் ஒரு நாள் - சினிமா விமர்சனம்

 
தினமலர் விமர்சனம்


சில வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்த இ‌தயேந்திரன் எனும் இளைஞனின் இதயத்தை, சிறுமி அபிராமிக்கு பொருத்தி, அச்சிறு‌மியை உயிர் பிழைக்க செய்த சென்னையில் நிஜமான சாதனை கதை தான் "சென்னையில் ஒரு நாள்" மொத்தபடமும்!
 சரத்குமார், ‌பிரசன்னா, பிரகாஷ்ராஜ், சச்சின், ஜெயபிரகாஷ், சந்தானபாரதி, பார்வதி, இனியா, மல்லிகா, லட்சுமி ராமகிருஷ்ணன், அக்ஷ்ரா, காப்பிரில்லா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பது "சென்னையில் ஒரு நாள்" படத்தின் பெரும் பலம்!

ஜெபி-லட்சுமி ராமகிருஷ்ணன் ஜோடியின் வாரிசு கார்த்திக் எனும் சச்சின். டி.வி.சேனல் நிருபராகி நிறையவே சாதிக்க வேண்டும் எனும் கனவில் இருக்கிறார். அவரது லட்சியப்படியே ஒருநாள் டி.வி. நிருபராகும் சச்சின், முதல்நாளே பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ்ஜை லைவ் பேட்டி எடுக்கும் வாய்ப்பை பெறுகிறார். 
 
அதற்காக நிறைய ஹோம் ஒர்க்குகளுடன் நண்பனின் பைக்கில் பேட்டி எடுக்க கிளம்புகிறார். வழியில் விபத்தில் சிக்கும் சச்சினுக்கு, மூளைச்சாவு ஏற்படுகிறது. உயிர் இருந்தும் பிரதேமாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சச்சினின் இதயத்தை, வேலூரில் உயிருக்கு போராடும் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் - ராதிகா தம்பதிகளின் மகளுக்கு பொருத்துவதற்கு திட்டமிடுகின்றனர் மருத்துவர்கள்! முதலில் அதற்கு மறுக்கும் சச்சினின் பெற்றோர் பிறகு ஒருவழியாக மனதை தேற்றிக் கொண்டு சம்மதம் தெரிவிக்கின்றனர்.


சென்னை ஒய்.எம்.ஆரில் இருக்கும் அந்த பிரபல மருத்துவமனையில் இருந்து வேலூர் மருத்துவமனைக்கு 170 கிலோ மீட்டர் தூரம். அந்த தூரத்தை ஒன்றரை மணி ‌நேரத்தில் கடந்தாக வேண்டும். அப்பொழுதுதான் சிறுமிக்கு மாற்று இதயத்தை பொருத்தி அவரை உயிர் பிழைக்க செய்ய முடியும் எனும் நிலை! நகரத்திற்குள் நெரிசலான போக்குவத்து, நெடுஞ்சாலைகளில் சீறும் வாகனங்கள்... சிக்னல்கள், சிக்கல்கள் இதையெல்லாம் தாண்டி, சவாலை எதிர்கொள்ளும் போலீஸ் அதிகாரி சரத்குமார் தலைமையிலான டீம் சாதித்து காட்டியதா...? என்பது, எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!

சென்னை போலீஸ் கமிஷ்னராக சரத்குமார், முதலில் முடியாது முடியாது.... என்று மறுத்தாலும், முடிவில் 170 கி.மீ தூரத்தை ஒன்றரை மணிநேர பிராயாணம் எனும் சவாலுக்கு சம்மதிக்கும் இடத்தில் சபாஷ் போட வைக்கிறார். 
 
தன் மீது விழுந்த 15 ஆயிரம் ரூபாய் லஞ்சப்பழியை சமாளித்து அவப்பெயரை துடைக்க, உயிரை துச்சமென மதித்து அந்த சவாலான காரியத்தில் காரோட்டியாக களம் இறங்கும் டிராபிக் கான்ஸ்டபிள் சேரனை தவிர்த்து, டாக்டராக உடன் வரும் பிரசன்னா, அலட்டல் ஆக்டர் பிரகாஷ்ராஜ், அவரது யதார்த்த மனைவி ராதிகா, கொஞ்ச நேரமே வந்து இறந்து போகும் கார்த்திக்-சச்சின், அவரது காதலி பார்வதி, பிரசன்னாவிற்கு துரோகம் பண்ணும் இனியா, மல்லிகா, கார்த்திக்கின் நண்பர் மித்துன் எனும் அஜ்மல், டாக்டர் விஸ்வநாதன், ஜெயபிரகாஷ், அவரது மனைவி நிர்மலாவாக வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், எம்.பி.மணிமாறனாக வரும் சந்தான பாரதி உள்ளிட்ட அனைவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

காசு கொடுத்து டிராபிக் கான்ஸ்டபிள் வேலைக்கு வந்தவர் மாதிரி அந்த பாத்திரத்தில் முரண் இயக்குனர் பொருந்தாமல் தெரிவது மைனஸ்! ஆனால் அந்த பலவீனத்தையும் பிரகாஷ்ராஜின் பில்-டப் காட்சிகளும், அவர் யதார்த்தம் புரியாமல் முன்னணி நடிகர் என்ற செல்வாக்கு இருப்பதால் எதையும் சாதிக்க முடியும் என பண்ணும் சேட்டைகளும், முரண் இயக்குனரின் மைனஸ்களை மழுங்கடிக்க செய்து, படத்திற்கு ப்ளஸை கூட்டுகின்றன! அதே மாதிரி நடிகர் எனும் பந்தாவில் மகளின் உயிருக்கு முடியாத உடல் நிலையையும் கருத்தில் கொள்ளாது அலப்பறை பண்ணும் பிரகாஷ்ராஜ்க்கு யதார்த்தத்தை புரிய வைக்கும் ராதிகாவின் நடிப்பு சூப்பர்ப்!

மெஜோ ஜோசப்பின் இனிய இசை, ஹேஹநாத் ஜே.ஜலாலின் அழகிய ஒளிப்பதிவும், மகேஷ் நாராயணின் படத்தொகுப்பு, அஜயன் பாலாவின், "எல்லா நாளும் போல் இல்லாமல் இந்த நாள் சரித்திரமாகும்..." உள்ளிட்ட வசனங்கள், மேலும் பல ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், "சென்னையில் ஒரு நாள்", மலையாள "டிராபிக்" படத்தின் ரீ-மேக் என்பதே தெரியாத விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது. பலே, பலே!


டாக்டர் பிரசன்னா, சச்சினின் இதயத்திற்கு பாதுகாப்பாக காரில் போகும்போது, அவரது மனைவிக்கு விபத்து என்று கமிஷனர் சரத் கூறுவதும், அதை பிரசன்னா தவறாக புரிந்து கொண்டு போலீஸ்க்கு பயந்து, துடிக்கும் இதயத்துடன் காரை கடத்துவதும், என்னதான் இண்டர்வெல் சஸ்பென்ஸ் பிரேக் என்றாலும் டிராமாவாக தெரிகிறது.
 அதேமாதிரி காருக்கு வழிவிடச் சொல்லி கெஸ்ட் ரோலில் நடிகர் சூர்யா நடிகராகவே வருவது, அதுவரை படத்தில் பிரபல ஸ்டாராகவே வரும் பிரகாஷ்ராஜ் என்ன பவர்ஸ்டாரா...? எனக் ‌கேட்க வைக்கிறது! இதுமாதிரி ஒரு சில குறைகளை தவிர்த்து விட்டு பார்த்தால் ஷஹித் காதரின் இயக்கத்தில், "சென்னையில் ஒரு நாள்", "சிறப்பான ஒரு நாள்!"
நன்றி - தினமலர்