Sunday, March 17, 2013

தமிழகத்தின் மாணவர்கள் நடத்திய போராட்டங்களின் லைவ் ரிப்போர்ட்!

திரும்பிய பக்கமெல்லாம் தமிழ் ஈழத் தீ
ழத்தில் நடந்த இனப் படுகொலைக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டங்களை மிஞ்சிவிட்டது கல்லூரி மாணவர்கள் நடத்திவரும் போராட்டங்கள். கோயம்பேடு பகுதியில் உள்ள செங்கொடி அரங்கத்​தில், லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளில் வாபஸ் வாங்கப்பட்டாலும், அவர்கள் ஆரம்பித்துவைத்த தூண்டுதல் தமிழக மாணவர்கள் அனைவரையும் வீறுகொண்டு வீதிக்கு வரவைக்கக் காரணமாகிவிட்டது.
இதோ... தமிழகத்தின் பல இடங்களிலும் மாணவர்கள் நடத்திய போராட்டங்களின் லைவ் ரிப்போர்ட்!


சென்னை: அப்புறப்படுத்த நினைத்த போலீஸ்!


சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 11-ம் தேதி தொடங்கிய தொடர் உண்ணாவிரதப் போராட்டம், இன்னும் நீடிக்கிறது. மற்ற கல்லூரி மாணவர்களின் போராட்டத்தைவிட சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் அதிக ஆபத்து மிகுந்தது என்று காவல் துறை கருதியதோ என்னவோ... 'நீதிமன்ற வளாகத்தின் உள்ளே வெடிகுண்டு இருக்கிறது. அதனால், சோதனை நடத்த வேண்டும்’ என்று, நீதிமன்ற வளாகத்தைவிட்டு அவர்களை வெளியேற்றினர். அவர்களை வெளியேற்ற மட்டும்தான் காவல் துறையால் முடிந்தது. ஆனால், போராட்டம் தொடர்கிறது. சென்னை சட்டப் பல்கலைக்கழக மாணவர்களும் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில், ஆந்திராவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதத்தில் பங்கேற்று வருகிறார். சென்னைப் பல்கலைக்கழக மாணவிகள் விடுதிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி தங்களின் ஆதரவைப் பதிவுசெய்தனர்.
உண்ணாவிரத்தை நிறுத்தினாலும் லயோலா கல்லூரி மாணவர்கள், கையெழுத்து இயக்கம் தொடங்கி உள்ளனர். மாநிலக் கல்லூரி, மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி, வேளச்சேரி குருநானக் கல்லூரி, துரைப்பாக்கம் டி.பி.ஜெயின் கல்லூரி என்று சென்னையில் உள்ள பல கல்லூரி மாணவர்களும் உணர்வுப்பூர்வமாகப் போராட்டத்தில் குதித்துள்​ளனர்.


செங்கல்பட்டு: 'இதயத்துடிப்பு குறைந்தது’


செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 11 பேர் கல்லூரி வாசலில் பந்தல் அமைத்து உண்ணாவிரதத்தில் அமர்ந்துள்ளனர். கல்லூரி மாணவர்கள் பலரும் வகுப்புகளைப் புறக்கணித்து​விட்டு அவர்களுக்கு ஆதர​வளிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் சித்திரசேனன் வந்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டும், மாணவர்கள் மசியவில்லை. 13-ம் தேதி... மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் இருந்த மாணவர்களில் சிலருக்கு உடல்நிலை மோசமானதை அறிந்த ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மருத்துவக் குழு ஒன்றை அழைத்துவந்தார். 


மாணவர்களை பரிசோதனை செய்த மருத்துவக் குழு, 'மாணவர்களின் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் குறைந்துவிட்டது. உடனே சிகிச்சை அளிக்க வேண்டும்’ என்று எச்சரிக்கை செய்தனர். கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் போலீஸார் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதை அடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்ட மூவரை மட்டும் மருத்துவச் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர் மாணவர்கள். மற்றவர்கள் தொடர்கின்றனர்.  


கோவை: விமான நிலையத்துக்குள் நுழைந்தனர்


கடந்த 11-ம் தேதி முதல் கோவை சட்டக் கல்லூரி மற்றும் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் 22 பேர், ம.தி.மு.க. அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் எட்டுப் பேரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்து இருக்கின்றனர். கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், இலங்கையில் தனித் தமிழ் ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதிக்கத் தயாராகி வருகின்றனர்.


13-ம் தேதி மதியம் சட்டக் கல்லூரி மாணவர்கள் 28 பேர் கோவை விமான நிலையத்துக்கு வந்தனர். காவல் துறையினர் அவர்களிடம் சமாதானம் பேசியும் கலைந்து செல்லாமல், மூன்று அடுக்குப் பாதுகாப்பையும் மீறி உள்ளே சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேறு வழி இல்லாமல் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.


இதே போல், காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரி, சேலம் சட்டக் கல்லூரி , தேனி கம்மவார் கல்வியியல் கல்லூரி,  கடலூர் அரசுக் கலைக் கல்லூரி, செயின்ட் ஜோசப், கிருஷ்ணசாமி கல்லூரி, புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரி ஆகியவற்றிலும் மாணவர் போராட்டம் தொடங்கியுள்ளது.


தமிழக மாணவர்களின் போராட்டங்களாவது மத்திய அரசை உலுக்குமா?


- ஜூ.வி. டீம்

 மாணவர் போராட்டக்குழு அமைப்பு


இலங்கைக்கு எதிரான அனைத்துக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில், 'தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழு’ ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 14-ம் தேதி சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்தக் குழுவினர், ''ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை நாங்கள் ஏற்கவில்லை. வல்லாதிக்க நாடான அமெரிக்கா நினைத்திருந்தால் ஈழத்தில் இனப்படுகொலை நடந்த நேரத்தில் அதைத் தட்டிக் கேட்டு தடுத்திருக்கலாம். அப்போது சில லாபங்களுக்காக அமைதியாக வேடிக்கை பார்த்த அமெரிக்காவுக்கு, இப்போது அந்தக் கேள்வி கேட்கும் உரிமையே கிடையாது. எங்கள் போராட்டம் விடாது தொடரும். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களும் வரும் 18-ம் தேதி ஒரே நேரத்தில் ராஜபக்ஷே, மன்மோகன்சிங் உருவ பொம்மைகளை எரித்துப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்த உள்ளோம்'’ என்று கொந்தளித்தனர்.


 வேலூர்: 'டி.சியைக் கொடுத்திடுவோம்!’


வேலூர் ஊரீசு கல்லூரியில் கடந்த 11-ம் தேதி காலை 10 மணிக்கே 50 மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உண்ணாவிரதம் தொடங்கினார்கள். கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியும் யாரும் கலைந்து செல்லவில்லை. வேலூர் தெற்கு காவல் நிலைய அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்விதான்.


'போராட்டங்களில் கலந்துகொள்பவர்கள் அனைவருக்கும் டி.சி. தரப்படும்’ என்று மிரட்டியும் அவர்கள் மசியவில்லை. ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள், 3 மணி அளவில் கலைந்தனர். திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி மாணவர்கள் 12-ம் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். குடியாத்தம் திருமகள் ஆலைக் கல்லூரி மாணவர்களும் அன்றைய தினம் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 14-ம் தேதியில் இருந்து வேலூர் சட்டக் கல்லூரி மாணவர்கள் 18 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.



 திருச்சி: தாக்கப்பட்ட போலீஸ் வாகனம்!


திருச்சியில் கடந்த 12-ம் தேதி முதல் சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். கல்லூரி வளாகத்தில் தொடங்கிய உண்ணாவிரதத்தில், நாளுக்கு நாள் மாணவர்களின் எண்ணிக்கை கூடியது.


13-ம் தேதி புரட்சிகர மாணவர்கள் இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் 35 பேர் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே ராஜபக்ஷே, மன்மோகன் சிங் ஆகியோரது கொடும்பாவியை எரித்தனர். அப்போது காவல் துறையினர் அவர்களில் எட்டு பேரை கைது செய்தனர். அதனைக் கண்டித்து மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். போலீஸ் துணை கமிஷனர் செல்வகுமார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த, எட்டு பேரும் விடுவிக்கப்பட்டனர். 


அப்போது கூட்டத்தில் இருந்த மாணவர் ஒருவர் போலீஸ் வாகனத்தை ஓங்கி அடித்தார். இதனால் கோபம் அடைந்த காவலர் ஒருவர் அந்த மாணவரை அடிக்க... மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால், திருச்சியில் இருந்து செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சட்டக் கல்லூரி முதல்வர், ம.தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் சீனியர் வழக்கறிஞர்கள், 'பொதுமக்களுக்கு இடையூறாக மாற்றிவிடாதீர்கள்’ என்று மாணவர்களிடம் எடுத்துச் சொன்ன பிறகே, அவர்கள் அமைதியானார்கள். இந்தப் போராட்டத்தால் மூன்று மணி நேரத்துக்கும் மேல் திருச்சி ஸ்தம்பித்தது.


 மதுரை: பூட்டப்பட்ட தபால் நிலையம்!

மதுரையில் பெரும்பாலும் அனைத்து கல்லூரி மாணவர்​களும் உள்ளிருப்பு, ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 11-ம் தேதி ஸ்டேட் பேங்க் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அடுத்த நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருக்கும் தபால் நிலையத்தைப் பூட்டினர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட... காவல் துறையினர் 17 மாணவர்​களை கைதுசெய்தது. 13-ம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்கள் ஒருநாள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் மூவர் கல்லூரி வளாகத்தில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.


 நெல்லை: மிரட்டிய கல்லூரி நிர்வாகம்!


நெல்லையில் கடந்த 11-ம் தேதியில் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் தீவிரமாக இருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். பல மாணவர்களின் பெற்றோர்கள் வந்து சமாதானப்படுத்தியதில் அவர்கள் உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.


பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மாணவர்கள் 11 பேர் கல்லூரியில் உண்ணாவிரதம் மேற்கொண்​டனர். கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு அனுமதி மறுக்கவே, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான கடை அருகே உண்ணா​விரதம் மேற்கொண்டனர். இருந்தும் கல்லூரி நிர்வாகமும் போலீஸ் தரப்பும் தொடர்ந்து மாணவர்களை மிரட்டி வருவதாக குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நிலையில் மாணவர்களுக்கு ஆதரவாக ம.தி.தா. இந்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் போராட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது என்றாலும், உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் பல்வேறு மாணவர்களின் உடல்நிலை மோசமான நிலையை எட்டி உள்ளது. காவல் துறையினால் மாணவர்கள் எப்போதும் கைது செய்யப்​படலாம்.


thanx - ju vi 

பரதேசி -எஸ். ராமகிருஷ்ணன் விமர்சனம்

பாலாவின் பரதேசி

 

பாலாவின் பரதேசி திரைப்படத்தை சற்றுமுன்பு பார்த்துவிட்டு திரும்பினேன், தமிழ் சினிமா பெருமைப்படக்கூடிய உன்னதமான திரைப்படமது, உலக சினிமா அரங்கில் தனிப்பெரும் இயக்குனராக பாலா ஒளிர்கிறார், இந்திய சினிமாவில் இது போல ஒரு திரைப்படம் இதுவரை வந்ததில்லை, பாலாவின் சினிமா பயணத்தில் இது ஒரு மைல்கல்


நாம் அன்றாடம் குடிக்கும் தேநீருக்குப் பின்னே எத்தனையோ மனிதர்களின் கண்ணீர் கலந்துள்ளது என்ற உண்மையை முகத்தில் அறைவது போல காட்சிபடுத்தியுள்ளது பரதேசி,


தேயிலைதோட்டங்களில் புதையுண்டு போன மனிதர்களின் வாழ்க்கையை அதன் சகல அவலங்களுடன், கண்ணீருடன் நிஜமாக சித்தரிப்பு செய்திருப்பதே இதன் வெற்றிக்கு முக்கியக் காரணம்


சாளுர் என்ற எளிய, சிறிய கிராமம், அந்த கிராம வாழ்க்கைக்குள் தான் எத்தனை விதமான மனிதர்கள், உணர்ச்சிகள், ஒட்டுபொறுக்கி எனும் ராசா கதாபாத்திரமாக அதர்வா வாழ்ந்திருக்கிறார், அடிபட்டு கால் நரம்பு துண்டிக்கபட்டு, எல்லாவற்றையும் இழந்து குழந்தையுடன் வெறுமை தோய்ந்த கண்களுடன் அவர் திரும்பி பார்க்கும் ஒரு பார்வை போதும் அவருக்குத் தான் இந்த ஆண்டின் தேசிய விருது என்பதற்கு, அதர்வா உங்கள் சினிமா வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி கொண்டீர்கள்,


வாழ்க்கைக்கு உண்மையாக உள்ள கலை எப்படி இருக்கும் என்பதற்கு பரதேசி ஒரு உதாரணம், டேனியலின் எரியும்பனிக்காடு நாவலின் உந்துதலில் உருவாக்கபட்டிருக்கும் இப்படம் உலகத்தரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது,
சாலூர் என்ற சிறிய கிராமத்தில் துவங்கி பச்சைமலையின் மொட்டை பாறை ஒன்றில் கைவிடப்பட்டவனாக உட்கார்ந்து கொண்டு நியாயமாரே என்று அலறும் அதர்வாவின் குரல் இதுவரையான வணிகரீதியான தமிழ்சினிமாவின் மனசாட்சியைக் கேள்விக்கு உள்ளாக கூடியது,


அதர்வாவின் ஆகச்சிறந்த நடிப்பு , தன்ஷிகா, வேதிகா இருவரின் உணர்ச்சிமயமான தேர்ந்த நடிப்பு, கங்காணியாக வரும் ஜெரி, ராசாவின் பாட்டி, கிராமத்து குடிகார கதாபாத்திரமாக நடித்துள்ள கவிஞர் விக்ரமாதித்யன் என்று அத்தனை கதாபாத்திரங்களும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள், சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.


கிராமத்து திருமண நிகழ்வு, கங்காணி ஊர் மக்களை நைச்சியம் பேசி அழைத்துப்போவது, 48 நாட்கள் நடந்து செல்லும் மக்களின் வழித்துயரம், கங்காணி தனது கல்லாபெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு கணக்கு முடிக்கும் காட்சி, விஷக்காய்ச்சலில் கொத்து கொத்தாக செத்துவிழும் மனிதர்கள் என்று இதுவரை தமிழ்சினிமா பார்த்தறியாத காட்சிகள் படத்தை வலிமையுள்ளதாக்குகின்றன, மனதை துவளச்செய்கின்றன


முற்பகுதி கிராமப்புற நிகழ்வை சித்தரிக்கும் தனியான ஒரு நிறம், பிற்பகுதி தேயிலை தோட்ட வாழ்வை சித்தரிக்கும் தனி நிறம் என்று அந்த வாழ்வின் யதார்த்தத்தை தனது ஒளிப்பதிவின் மூலம் சிறப்புறச்செய்திருக்கிறார் செழியன், அவரது பங்களிப்பு மிகவும் பாராட்டிற்குரியது,  கேமிரா எளிய மக்களின் கூடவே நகர்ந்து பார்வையாளனை இன்னொரு உலகிற்கு அழைத்துப் போகிறது, கிஷோரின் நேர்த்தியான படத்தொகுப்பு, ஜிவிபிரகாஷின் சிறந்த பின்னணி இசை, இரண்டும் படத்திற்கு தனிப்பெரும் பலம்,


இயக்குனர் பாலா பஞ்சம் பிழைக்கப் போய் அகதியான மக்களின் வாழ்க்கையில் புதையுண்டு கிடந்த  உண்மையான, துணிச்சலுடன், அசாத்தியமான கலைநேர்த்தியுடன் படமாக்கியிருக்கிறார்


பச்சைமலைக்கு மட்டுமில்லை, இலங்கைக்கும் தேயிலை தோட்டவேலைக்கு தென்தமிழக மக்கள் சென்றார்கள், இது போல சொல்ல முடியாத கொடுமைகளை அனுபவித்து இன்று அநாதரவான நிலையில் அகதிகளாக அலைகிறார்கள் என்ற சமகால உண்மை படத்தை மேலும் வலியுடையதாக்குகிறது


கிரேட் வொர்க் .பாலா சார்

தமிழ்சினிமாவின் பெருமைக்குரிய நாயகர் நீங்கள்

thanx - http://www.sramakrishnan.com/?p=3297

Saturday, March 16, 2013

66ஏ எது சரி... எது தப்பு? -ஃபேஸ்புக், ட்விட்டர் - 140 பேர் மீது வழக்கு

66ஏ எது சரி... எது தப்பு?
பாரதி தம்பி

ஃபேஸ்புக்கில் யாரோ போட்ட ஸ்டேட்டஸுக்கு லைக் போட்டுவிட்டு ஒரு டீ குடிக்க வந்திருக்கிறீர்களா? எச்சரிக்கை... திரும்பிச் செல்லும்போது உங்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு இருக்கலாம். 'ஒரு லைக் போடுறது குத்தமாய்யா?’ என்று நீங்கள் அலறினாலும், இந்தியாவில் இப்போது இதுவே யதார்த்தம். 

கேரளா-சூரியநெல்லி பெண் பாலியல் பலாத்கார வழக்கில் பி.ஜே.குரியனுக்கு ஆதரவாக இருக்கும் மகளிர் காங்கிரஸ் தலைவி பிந்து கிருஷ்ணாவை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து எழுதிய; அதை ஷேர் செய்துகொண்ட 140 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது கேரளக் காவல் துறை. சமூக இணையதளத்தில் சொன்ன கருத்துக்காக இத்தனை அதிகம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவது இந்தியாவில் இதுவே முதல்முறை. 


 இந்தியாவில் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்களும், பொதுச் சொத்தைச் சூறையாடியவர்களும் எந்த வம்பு வழக்கும் இல்லாமல் சொகுசாக இருக்க... ஃபேஸ்புக்கில் தனது கருத்தை வெளியிட்ட ஒரே காரணத்துக்காக வழக்குப் போட்டிருப்பது இணைய உலகை அதிரவைத்திருக்கிறது.


''கருத்துச் சுதந்திரத்துக்கு இதைவிட நெருக்கடியான காலம் இருக்க முடியாது'' என்று ஒரு சாரார் சொல்லிவரும் நிலையில், சமூக வலைதளங்களில் சொல்லப்படும் பொறுப்பற்ற கருத்துகள்குறித்த விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. இரண்டையும் இணைத்து இங்கே விவாதிப்போம்...


முதலில் ஃபேஸ்புக் கருத்துக்குச் சட்டப்பூர்வ நடவடிக்கை என்பது இது முதல்முறை அல்ல; சில மாதங்களுக்கு முன்பு தமிழ் சினிமா பின்னணிப் பாடகி சின்மயி, ட்விட்டரில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் சிலர் சின்மயியை விமர் சித்தனர். இதற்காக சின்மயி போலீஸில் புகார் கொடுக்க, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். 


இதன் பிறகு, புதுச்சேரியைச் சேர்ந்த ரவி சீனிவாசன் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்பற்றி விமர்சிக்க... அதிரடியாக அவரும் கைது செய்யப்பட்டார். இவை மாநில அளவில் நடந்ததால் தேசிய கவனத்தைப் பெறவில்லை. அதன் பிறகு, பால் தாக்கரே மரணம் அடைந்தார். மும்பையே ஸ்தம்பித்தது. இதை விமர்சித்து, ''ஒருவரின் மரணம்குறித்து நமக்கு எழும் மரியாதை இயல்பானதாக இருக்க வேண்டும். கட்டாயப்படுத்திப் பெறக் கூடாது'' என ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் இட்டார் கள் இரு மாணவிகள். கடும் எதிர்ப்புகள் எழுந்ததும் இருவரும் கைது செய்யப்பட்டனர். 



சம்பவம் நிகழ்ந்தது மும்பை என்பதால், இது தேசியச் செய்தியானது. எக்கச் சக்கக் கண்டனங்கள் எழவே, கைது உத்தரவு பிறப்பித்த மாஜிஸ்திரேட் இடமாற்றம் செய்யப்பட்டார். கைது செய்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப் பட்டனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மகாராஷ்டிர அரசைக் கடுமையாகக் கண்டித்ததோடு, இதுவரை இணையதளக் கருத்துகளுக்காக நடவடிக்கை எடுத்திருக்கும் மேற்கு வங்காளம், புதுச்சேரி, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதன் பிறகு, இந்த வழக்கின் நிலவரம் என்ன ஆனது என்று தெரியவில்லை; இப்போது கேரளாவில் 140 பேர் மீது வழக்கு பாய்ந்து இருக்கிறது.


இந்த வழக்குகள் அனைத்தும் 66ஏ என்ற சட்டப்பிரிவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இணையதளம் வழியாக வெளியிடப்படும் கருத்து ஒருவரை அச்சுறுத்தினால்; தொந்தரவு செய்தால்; சங்கடம் ஏற்படுத்தினால், புகார் அளிப்பதற்கு இந்தச் சட்டம் இடம் அளிக்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படலாம். இந்தச் சட்டம் அரசியல் சட்டம் வழங்கும் சுதந்திரக் கருத்துரிமைக்கு எதிரானதாக இருப்பதால், இதை சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார் மனித உரிமை செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ். அந்த வழக்கு நடந்துகொண்டு இருக்கிறது. அரசின் நடவடிக்கைகளும் தொடர்கின்றன.



ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் முன்னெப்போதும் இல்லாத வாசலை மக்களுக்குத் திறந்துவிட்டிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு சமூகப் பிரச்னைகுறித்த தனது கருத்தை ஒருவர் உலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் எனில், பத்திரிகைகளும் தொலைக் காட்சிகளும் மட்டுமே ஒரே வழி. அதேபோல 'கருத்து சொல்வதற்கு’ நீங்கள் 'வி.ஐ.பி’-யாக அல்லது குறிப்பிட்ட விஷயத்தில் நிபுணராக இருக்க வேண்டும். சமூக வலைதளங்கள் இந்த இரண்டு எல்லைகளையும் உடைத்துவிட்டன. யாரும், எதைப் பற்றியும் கருத்து வெளியிடலாம். அந்தக் கருத்து சரியானதாகவோ, தவறானதாகவோ, முட்டாள்தனமாகவோ, விஷமத்தனம்கொண்டதாகவோ இருக்கலாம். ஆனால், உங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் அதை எழுத முடியும். பல்லாயிரம் பேர் அதைப் படிக்க; பகிர முடியும். புகழுக்கும் அங்கீகாரத்துக்கும் ஏங்கும் மனித மனதின் ஆசைகளுக்கு மேடை அமைத்துத் தந்து 'நீங்களும் வி.ஐ.பி-தான்’ என்று ஒவ்வொருவரையும் திருப்தியடையவைக்கின்றன சமூக இணையதளங்கள்.



குறிப்பாக, அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதமும், காரியவாதமும் ஃபேஸ்புக்கில் தயவுதாட்சண்யம் இன்றி விமர்சிக்கப்படுகிறது. அதை எல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் படித்தால் வெட்கித் தலைகுனிய வேண்டும். இப்படி செல்வாக்கு மிக்கவர் களைத் துணிவுடன் விமர்சிப்பது, இப்போது உள்ள சூழலில் சமூக இணையதளங்களில் மட்டுமே சாத்தியம். மன்மோகன் சிங் பற்றிய ட்விட்டர், ஃபேஸ்புக் விமர்சனங்களைத் தொகுத்தால், நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளியிடலாம்.



உண்மையில் சமூக வலைதளங்கள் மனிதகுலத்தின் மகத்தான வரம். இவை மாபெரும் அறிவுச் சுரங்கத்தைத் திறந்துவிட்டிருக்கின்றன. ஆனால், இன்னொருபுறம் இந்தக் 'கட்டற்ற வெளி’ பொறுப்பின்மையைப் பொதுப் பண்பாக வளர்க்கிறது. மனதின் வக்கிரங்களுக்கு வடிகால் அமைத்துத் தருகிறது. விலைவாசி உயர்வு முதல் விலைஇல்லா அரிசி வரை; காஷ்மீர் அடக்குமுறை முதல் காவி பயங்கரவாதம் வரை பற்றி எரியும் மக்கள் பிரச்னைகள்குறித்து எந்தத் தெளிவும் அக்கறையும் இல்லாமல் மேலோட்டமாகக் கிண்டல் செய்து நகர்ந்து செல்வதற்கு சமூக இணையதளங்கள் கற்றுத்தருகின்றன.


 இதன் மூலம், ஆளும் சக்திகள் செலுத்தும் அடக்குமுறையை ஏற்றுக்கொள்வதற்கு மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பயிற்றுவிக்கின்றன. ஃபேஸ்புக்கில் இரண்டு வரி ஸ்டேட்டஸ் எழுதிவிட்டு, சமூகத்துக்காகப் போராடிவிட்டதாகத் திருப்திப்பட்டுக்கொள்பவர்கள் அநேகம் பேர். இது அரசாங்கத்துக்கு வசதியானது. நாட்டைச் சுரண்டு பவர்களுக்கு எதிராகப் பெரும் எண்ணிக்கையில் திரண்டு போராடாமல், பெயருக்கு நாலு வரி எழுதிவிட்டு ஒதுங்கிக்கொள்வது அரசுக்குத் தொந்தரவு இல்லாத அம்சம்தானே?



''அப்படி முழுக்கவே ஒதுக்கிவிட முடியாது. சமூக இணையதளங்கள் என்ற நவீன தொழில்நுட்பத்தை நியாயம் பெறுவதற்கான கருவியாகவும் பயன்படுத்த முடியும். 'மல்லிகைப் புரட்சி’ என்று அழைக்கப்பட்ட துனிஷிய மக்கள் புரட்சிக்கு ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாகவே மக்கள் திரண்டனர். எகிப்து நாட்டின் மக்கள் புரட்சி அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்டபோது, சமூக இணையதளங்கள்தான் மக்களுக்கான ஒரே ஊடகமாக இருந்தன. இன்றைய நிலையில் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு நிறையக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவற்றால் ஓர் அளவுக்கு மேல் அரசுக்கு எதிராகச் செயல்பட முடியாது. சமூக இணையதளங்கள் அப்படி இல்லை. இங்கு சுதந்திரமாகச் செயல்பட முடியும். அதனால்தான் உலகின் பல நாடுகள் சமூக இணையதளங்களைக் கட்டுப்படுத்தத் துடிக்கின்றன!'' என்கிறார் கள் இவற்றின் ஆதரவாளர்கள்.



ஆனால், சமூக இணையதளங்களின் நோக்கம் எல்லோரது கருத்தையும் உலகத்துக்குக் கொண்டு சேர்ப்பது அல்ல. அவை இதை ஒரு வியாபாரமாகவே பார்க்கின்றன என்பதோடு, அந்தந்த நாட்டின் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டே சமூக இணையதளங்கள் இயங்கு கின்றன. தன்னால் கண்காணிக்க முடியாத எந்த ஒன்றை யும் அரசாங்கம் செயல்பட அனுமதிப்பது இல்லை. ஆகவே, இதை ஒரு நிபந்தனையற்ற சுதந்திரமாகப் புரிந்துகொள்வது சரியானது ஆகாது.



குறிப்பாக, இணையதளக் கருத்துக்காக வழக்கு; கைது என்ற அரசின் நடவடிக்கையை எடுத்துக்கொள்வோம். 'கருத்துக்குக் கைது’ என்பதை யாரும் ஆதரிக்கப்போவது இல்லை. ஆனால், ஃபேஸ்புக்கில் எழுதலாம் என்பதற்காக எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுத முடியுமா? அதற்கு என்ன வரம்பு? முதலில், தான் வெளியிடும் கருத்து பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்குச் சென்று சேரப்போகிறது என்ற பொறுப்பு உணர்ச்சி அதை வெளியிடுபவர்களுக்கு வர வேண்டும். எழுதியதை வெளியிடும் முன்பு சுய தணிக்கை செய்து கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலா னோரிடம் அது இல்லை.



இதற்கு முன்பு சீரியஸான கட்டுரைகள் சில இணையதளங்களில் எழுதப்படும். அரட்டைத் தளங்கள் தனியே இருக்கும். புகைப்படங்கள்; வீடியோக்கள் வெளியிடும் தளங்கள் தனியே செயல்படும். ஃபேஸ்புக் வந்து இவை அனைத்தையும் ஒரே இடத்துக்குக் கொண்டுவந்துவிட்டது. இது ஒரு டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர். இங்கு புரட்சியும் கிடைக்கும்; புடலங்காய் கூட்டு செய்முறையும் கிடைக்கும். போர்க் குற்றம்பற்றியும் படிக்கலாம்; போர்னோகிராஃபியும் பார்க்கலாம். 'அனைத்தும் ஒரே இடத்தில்’ என்ற இந்த உத்தி அந்தத் தளத்தின் வியாபார வெற்றிக்கு வழிவகுத்திருக்கலாம். ஆனால், அவற்றைப் பயன்படுத்தும் மக்களின் மனதில் 'அனைத்தும் ஒன்றே’ என்ற மனநிலையை இது உருவாக்குகிறது. தனித்தனியே பிரித்துப் பகுத்துப் பார்க்கும் ஆய்வு மனப்பான்மை பலருக்கும் இல்லாத நிலையில் இதன் ஜிகினாத்தன்மையில் மனதைப் பறிகொடுக்கின்றனர். இதன் உண்மையான ஆபத்து இதுவே.




'அவன் ஒரு பட்டு வேட்டிபற்றிய கனவில் இருந்தபோது, கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது’ என்று எழுதியிருப்பார் வைரமுத்து. ஃபேஸ்புக் என்ற பட்டு வேட்டிக் கனவில் இருப்பவர்கள் உஷாராக வேண்டிய தருணம் இது!
thanx - vikatan

Friday, March 15, 2013

பரதேசி - திரைவிமர்சனம் ( twitter review)


பரதேசி - திரைவிமர்சனம்

பாலாவின் ரசிகர்கள் தாராளமாக காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்..
பாலா எடுத்ததிலயே மிகச்சிறந்த படம் இதுதான். பாலாவிற்கு மற்றும் ஒரு மைல்கல், இந்த பரதேசி. என்னடா உலகத்திரைப்படங்கள் பற்றி எழுதுபவன், தமிழ் பட விமர்சனம் எழுதுகிறேன் என்று பார்க்கிறீர்களா? இந்த படம் நிச்சயமாக ஒரு உலகத்திரைப்படம் தான். பாலாவிற்கு மற்றுமொரு மணிமகுடம்.
 தமிழ் சினிமாவில் மகேந்திரன் விட்டு போன இடத்தை பாலாவால் மட்டுமே நிரப்ப முடியும். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மூன்று படங்களில் இந்த படம் கண்டிப்பாக இடம் பிடிக்கும்.
 
 
படம் பார்த்துவிட்டு வெளியே வந்த எனக்கு அந்த பாதிப்பு இன்னும் போகவில்லை.கண்டிப்பாக சில வாரங்கள் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இந்த படத்தை மகா கலைஞன் பாலாவால் மட்டுமே செய்யமுடியும்.
 1939- ல் சாலூர் என்ற கிராமத்தில் துவங்கும் கதை அங்கு உள்ள மக்களின் எதார்த்தமான வாழ்க்கை, பழக்கவழக்கங்கள்  மற்றும் திருமணமுறை போன்றவற்றை சொல்லியவாரே அழகான நதி போல பிரயாணிக்கிறது. தண்டோரா  போடுபவனாக அதர்வா (ஒட்டு பொறுக்கி () ராசா) , வெகுளியான அதர்வாவை காதலிக்கும் வேதிகா(அங்கம்மா). பாலாவின் பாத்திரப்படைப்புகளை பற்றி சொல்லவே வேண்டாம், மிகவும் நேர்த்தியானவை. அதர்வாவின் பாட்டி தான்  படத்தில் சந்தானம், பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்.
 நாஞ்சில் நாடன் எழுதிய இடலாக்குடி ராசா சிறுகதையின் பாதிப்பு என்னை போலவே பாலாவிற்கும் அதிகம் உண்டு என நினைக்கிறேன். கல்லூரி செல்லும் நாட்களில் படித்த சிறுகதை அது, இந்நாள்  வரை அந்த கதை என் நெஞ்சை விட்டு அகலவில்லை.
 
 
ராசா வண்டிய விட்டுடுவேன்என்ற வரி படிக்கும் போது நம்மை அறியாமல் நம் கண்கள் குளமாவதை, கதையை படித்தவர்கள் அறிவார்கள். அதர்வாவின் கதாபாத்திரம் "இடலாக்குடி ராசாவை" பிரதிபலிப்பது போலவே இருக்கும். ராசா வண்டிய விட்டுடுவேன் என்ற அதே வரியை பாலா உபயோகப்படுத்தி இருக்கிறார்.
 
 ஊரில் வறட்சி காரணமாக பக்கத்து ஊருக்கு செல்லும் அதர்வாவை ஒரு கங்காணி சந்திக்கிறான். ஊர் மக்களிடம் தனக்கு சொந்தமாக ஒரு தேயிலை தோட்டம் உள்ளதாகவும், தோட்டத்தில் தேயிலை பறித்தல், தேயிலை மரங்களை கவாத்து செய்தல்  மற்றும் களை எடுத்தல் போன்ற வேலைகளை செய்ய வேண்டும் என்றும் தக்க கூலி கொடுப்பதாகவும் சொல்கின்றான். மனைவி  மற்றும் பிள்ளைகளை உடன் அழைத்து வரலாம் என்றும் அவர்களுக்கும் கூலி கொடுப்பதாகவும் வருடம் ஒரு முறை விடுப்பு கொடுப்பதாகவும் மிக இனிமையாக பேசுகிறான். அவர்களிடம் வெத்து  பேப்பரில் கைநாட்டு வாங்கிக்கொண்டு அவர்களுக்கு முன்பணம் கொடுத்து அவர்களை தேயிலை  தோட்டத்திற்கு அழைத்து செல்கிறான். ஊரில் உள்ள நிறைய மக்கள் அவனுடன் செல்கின்றனர். 48 நாட்கள் நடை பயணமாக மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வழியாக அந்த தேயிலை தோட்டத்திற்கு வந்து சேர்கின்றனர்.
 இதற்கிடையில் அதர்வாவுடன் நெருங்கி பழகியதால் அங்கம்மா கர்ப்பம்  அடைகிறாள். அது தெரிந்து அவளை அவளின் தாய் வீட்டை விட்டு அனுப்பி விடுவதால் அதர்வாவின் பாட்டியுடன் வந்துவிடுகிறாள். தேயிலை தோட்டத்தில் தன்ஷிகாவை(மரகதம்) சந்திக்கிறான் ராசா . அவளின் கணவன் 2 வயது பெண் குழந்தையுடன் அவளை தோட்டத்தில் விட்டுவிட்டு தப்பி ஓடிவிடுவதால் தனியாக வசிக்கிறாள்.  தேயிலை தோட்டத்தை கண்காணிக்கும் ஆங்கிலேய பிரபு அங்கு உள்ள பெண்களை தவறாக நடத்துகிறான்.  கடுமையான வேலை காரணமாக நிறைய பேருக்கு உடல்நல குறைவு ஏற்படுகிறது. அதர்வாவிற்கு தன்  பாட்டியிடம்  இருந்து அங்கம்மா கர்ப்பமாக உள்ள செய்தி கடிதம் மூலமாக தெரிய வருகிறது.
விடுப்பு தருவதாக கூறி அனைவரையும் அழைத்து அவர்கள் சம்பள பணத்தை  பிடித்துக்கொண்டு மீண்டும் சில வருடங்கள் வேலை செய்ய சொல்லி ஏமாற்றுகிறான் அந்த கங்காணி. அங்கம்மாவை பார்க்க  துடிக்கும் ராசா காட்டை விட்டு தப்பி ஓட முயலும் போது  அடியாட்களிடம் மாட்டி கொள்கிறான். அதனால் அவன் மறுபடியும் தப்பி ஓடாதபடிக்கு அவனின் கால் நரம்பை துண்டித்து விடுகிறார்கள். அங்கம்மாவிற்கு ஒரு ஆண்  குழந்தை  பிறக்கிறது, சரியான மருத்துவ வசதி மற்றும் சுகாதாரம் இல்லாத காரணத்தால் விஷ காய்ச்சல் வந்து  நிறைய மக்கள் இறக்க நேரிடுகிறது. அந்த  காய்ச்சலில் மரகதமும் இறக்க நேரிடுகிறது. அந்த மக்களை விடுவித்தார்களா? ராசா தன்  மகனையும் மனைவியையும் சந்தித்தானா? முடிவை திரையில் கண்டு ரசியுங்கள் , ஆனால்  ப்படி ஒரு முடிவை பாலாவினால் மட்டும் தான் யோசிக்க முடியும் !!!
 படம் நெடுகிலும் சாட்டையடி வசனங்கள், சோகம் கலந்த நகைச்சுவை, நெஞ்சை அதிர வைக்கும் க்ளைமாக்ஸ், இப்படி படம் முழுவதும் பட்டாசு கிளப்பியிருக்கிறார் பாலா. இவர் தான் இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர் என்று மீண்டும் ஒரு முறை நிருபித்து இருக்கிறார்.
நியாயமாரேஎன்று அதர்வா தேயிலை தோட்டத்து கங்காணியிடம் கதறும் காட்சி, அய்யோ நம் நெஞ்சில் இடியயே இறக்கியிருப்பார்  பாலா, அவரால்  மட்டுமே இப்படி ஒரு காட்சியை வைக்கமுடியும். 
இந்த படத்தை பார்த்த பிறகு நாம் டீ குடிக்கும் போதெல்லாம், இதற்காக தேயிலை தொழிலாளர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் மற்றும் கஷ்டங்கள் நமது கண் முன் ஒருமுறை வந்து போவது உறுதி.
இனிமேல் என்னால் டீயே குடிக்க முடியாது என்று தான் நினைக்கிறேன்.
ஆங்கிலேயர் நமது இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில், தேயிலை தோட்டத்து அடிமை தொழிலாளர்கள்  அனுபவித்த கொடுமைகளுக்கு ஆங்கிலயேர்கள் மட்டும் காரணமில்லை, காட்டி மற்றும் கூட்டி கொடுத்த வேலையை செய்ததது நமது இன மக்களும் தான் என  கிழி கிழி என்று கிழித்திருக்கிறார் பாலா. இது ஒரு உண்மையான கலைஞனிடம்  வந்து இருக்கும் உண்மையான திரைப்படம்.
 அதர்வா, வேதிகா மற்றும் தன்ஷிகா ஆகியோரின் நடிப்பு, என்ன சொல்றது? அவர்கள்  கதாப்பத்திரங்களாகவே வாழ்ந்து இருக்கிறார்கள், பிரமாதம்.
தேசிய விருது குழுவினர் அனைத்து விருதகளையும்  இந்த வருடத்திற்கு இப்போதே எடுத்து வைத்துக்கொள்ளலாம், பரதேசி படக்குழுவினருக்காக. 
 
thanx - http://dohatalkies.blogspot.in/2013/03/blog-post.html