Showing posts with label ஸ்ரீகண்ணன் டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸ். Show all posts
Showing posts with label ஸ்ரீகண்ணன் டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸ். Show all posts

Monday, April 25, 2011

ஈரோடு ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் - வெளி வராதமர்மங்கள் , ரகசியங்கள்.......



காலத்தை வென்றவர்கள்...


'''சர்வீஸைத்தான் விற்கிறோம்...''


இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டில் சாதாரண மளிகைக் கடையாக ஆரம்பமானதுதான் ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர். இன்று ஈரோட்டிலேயே ஐந்து, கோவையில் ஒன்பது, மதுரையில் மூன்று என தமிழகம் முழுக்க 35 கிளைகளைத் திறந்து வெற்றிகரமாக நடத்தும் அளவுக்கு பெரும் வளர்ச்சி கண்டிருக்கிறது.

ந்த மிகப் பெரிய வளர்ச்சிக்கு காரணம் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் நவநீத கிருஷ்ணனும், தலைவராக இருக்கும் தனுஷ்கரனும்தான். நாமக்கல் - சேலம் சாலையில் இருக்கும் ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரில் நவநீத கிருஷ்ணனை சந்தித்தோம். கடந்த 22 ஆண்டுகளாக தாங்கள் கடந்து வந்த பிஸினஸ் வாழ்க்கைப் பயணத்தை நமக்கு எடுத்துச் சொன்னார் அவர்.


சாம்பார் செய்வதில் சாமர்த்தியம்!''தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்துக்குப் பக்கத்தில் இருக்கிற கருவேலம்பாடு என்கிற சிறிய கிராமத்தில்தான் நான் பிறந்தேன். விவசாயக் குடும்பம்தான். தவிர, சின்ன வயதிலேயே என் அப்பாவையும் பறிகொடுத்தேன். சாத்தான்குளத்திலேயே எஸ்.எஸ்.எல்.சி. வரை கஷ்டப்பட்டு படித்தேன்.

 குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக மேற்கொண்டு படிப்பைத் தொடர முடியவில்லை. எனவே, படிப்பை மூட்டைகட்டிவிட்டு, 1971-ல் சென்னைக்கு பஸ் ஏறினேன், மயிலாப்பூரில் இருந்த மளிகைக் கடையில் வேலை பார்க்க.அந்தக் காலத்தில் கிராமங்களிலிருந்து நகரத்திற்கு அநாதரவாக வந்து சேருகிறவர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பவை ஹோட்டல்களும் மளிகைக் கடைகளும்தான்.

 எனக்கு ஹோட்டல் வேலைக்குப் போக இஷ்டமில்லை. காரணம், எங்கள் கிராமத்திலிருந்து ஏற்கெனவே சிலர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளில் வேலை பார்த்ததுதான். நானும் அவர்களோடு சேர்ந்து கொண்டேன்.


ஆரம்பத்தில் விதிவிட்ட வழியாகத்தான் வாழ்க்கை போனது. ஆனால், அப்படியே வாழ்ந்து வாழ்க்கையை முடித்துவிட எனக்கு விருப்பமில்லை. முன்னேற வேண்டும்; நிறைய சம்பாதிக்க வேண்டும்; கௌரவம் நிறைந்த ஒரு வாழ்க்கையை நாமும் வாழ வேண்டும் என்று நினைத்தேன். இந்த எண்ணம் வந்தபிறகு, நான் செய்த வேலையின் தன்மை மாறியது. ஒவ்வொரு வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய ஆரம்பித்தேன்.
 அப்போதுதான் பொருட்களை ஸ்டாக் செய்வது, சிந்தாமல் சிதறாமல் அதை பாதுகாப்பது, கஸ்டமர்கள் கேட்கிற பொருட்களை எடுத்துக் கொடுப்பது, பில்லிங், பொருட்களைக் கொடுக்கிற வியாபாரிகளுக்கு ஆர்டரும் பணமும் கொடுப்பது, இப்படி பல வேலைகளை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டேன். வேறு எந்தத் தொழிலிலும் இப்படி படிப்படியாக பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமே!


அந்தக் காலத்தில் கடை வேலைபோக எனக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு சமையல்தான். நான் நன்றாகச் சமைப்பேன். நான் சாம்பார் வைத்தால், எனது நண்பர்கள் போட்டிபோட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள். எந்த வேலையைச் செய்தாலும் அதன் மூலம் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு அப்போதே இருந்தது.

நண்பனுடன் தனிக்கடை!

இப்படி போய்க்கொண்டிருந்த என் வாழ்க்கையில் ஒரு  திருப்பம் வந்தது 1985-ல். பதினைந்து ஆண்டு கால அனுபவம் எனக்கு பக்கபலமாக இருக்க, சொந்தத் தொழிலைத் தொடங்க நினைத்து வேலையை விட்டு நின்றேன். இந்த நேரத்தில் என் கிராமத்தைச் சேர்ந்தவரும் எனது சொந்தக்காரரும் நண்பருமான தனுஷ்கரன் ஈரோட்டில் வசித்து வந்தார்.

 அவரும் என்னைப்போல சாதாரணமாக வாழ்க்கையைத் தொடங்கி, பிற்பாடு பிஸினஸ்மேனாக மாறியிருந்தார். அவரோடு சேர்ந்து ஒரு சிறிய மளிகைக் கடையை ஆரம்பிப்பதற்காக நான் சென்னையிலிருந்து ஈரோட்டிற்குச் சென்றேன்.



அந்த நேரத்தில் எங்களிடம் பெரிய அளவில் பணம் எதுவுமில்லை. ஆனால், பணமிருந்தால் மட்டும்தான் பிஸினஸ் தொடங்க முடியும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

கடனில் பொருட்களைக் கொடுக்கும் வியாபாரிகள் எங்களுக்கு ஏற்கெனவே தெரியும். தவிர, எங்கள் சொந்தப் பணம் கொஞ்சம், நண்பர்களிடமிருந்து கடனாக வாங்கியது கொஞ்சம் என கையிலிருந்த பணத்தை வைத்து சின்னக் கடையைத் தொடங்கினோம்.

சின்னக் கடை என்றாலும் எங்கள் வாழ்க்கையை ஓட்டு வதற்கான லாபம் அதிலிருந்து கிடைத்தது. தவிர, சொந்தமாக ஒரு கடையை நடத்தும்போது ஏற்படுகிற பிரச்னைகளை சமாளிப்பது எப்படி என்பதை அந்த நிலையிலேயே தெரிந்து கொள்ள முடிந்தது.

 பிஸினஸை நன்றாக விஸ்தரித்த பிறகு செய்யக்கூடாத பல தவறுகளைச் செய்து நாங்கள் பாடம் கற்றோம். முதல் நான்காண்டுகளில் பரவாயில்லை என்கிற அளவில் சென்று கொண்டிருந்த எங்கள் கடை, 1995-க்குப் பிறகு வேகமெடுக்க ஆரம்பித்தது. சின்னக் கடை கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து சூப்பர் மார்க்கெட் ஆனது.

 ஒரு கிளை போதாது என்கிற நிலையில் ஈரோட்டிலேயே இன்னொன்றையும் திறந்தோம். ஈரோட்டில் எங்கள் சர்வீஸை பார்த்த கோவை மக்கள், அங்கும் ஒரு கிளை திறக்க அழைப்பு விடுக்க, 1999-ல் கோவையில் முதல் கடையைத் திறந்தோம். இன்று கோவையில் மட்டுமே ஒன்பது இடங்களில் எங்கள் கிளை இருக்கிறது. இவை தவிர, நாமக்கல், திருச்செங்கோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல், மதுரை என 35 இடங்களில் கிளைகளைத் திறந்து விட்டோம்.
நான்கு விதிகள்!

இருபதாண்டு காலத்தில் நாங்கள் பெரிய வளர்ச்சி கண்டதற்கு காரணம், இந்த தொழிலில் நாங்கள் கடைப்பிடித்த நான்கு விதிகள்தான். ஈரோட்டில் சிறிய அளவில் நாங்கள் கடை ஆரம்பித்த காலத்திலேயே இந்த விதிகளை நாங்கள் ஏற்றுக் கொண்டு விட்டோம். இன்று வரை அந்த விதியிலிருந்து தவறி வெளியே வந்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறோம்.

நிரந்தரம்!

எந்த ஒரு தொழிலையும் நிரந்தர மாகச் செய்ய நினைக்கிறவர்கள் தரமான பொருட்களையே தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும். எங்கள் கடைகளில் துவரம் பருப்பு என்றால் முதல் குவாலிட்டி பருப்பையே வாங்கி வைப்போம். எல்லாப் பொருட்களிலும் முதல் குவாலிட்டி அல்லது பெஸ்ட் குவாலிட்டி பொருட்களே எங்கள் கடையில் இருக்கும்.


சில கடைகளில் குறைந்த விலைக்கு பொருட்களை கொடுக்க நினைத்து இரண்டாவது, மூன்றாவது குவாலிட்டி பொருட் களை வாங்கி விற்கிறார்கள். அல்லது தரம் குறைந்த பொருட்களை வாங்கி, தரமானதாகச் சொல்லி விற்று விடுகிறார்கள். ஆனால், விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் முதல் குவாலிட்டிக்கு குறைவான பொருட்களை வாங்கி விற்க எங்களுக்கு இஷ்டமில்லை.

தரமான பொருள்தான் வேண்டும் என்றால் நிறைய அலைய வேண்டியிருக்கும். உதாரணமாக, முதல் குவாலிட்டி துவரம் பருப்பு வாங்க குஜராத் துக்குப் போக வேண்டும்; மிளகு, கடுகு போன்றவற்றை வாங்க ஊஞ்சா; நல்ல பிளாஸ்ட்டிக் பொருட்கள் என்றால் மும்பை; நல்ல செருப்பு என்றால் டெல்லி என இந்தியா முழுவதும் அலைய வேண்டியதிருக்கும்.

நியாயமான லாபம்!

தரமான பொருளை அதிக விலை கொடுத்து வாங்கிய பிறகு எங்களுக்கான லாபத்தையும் அதிக அளவில் வைத்தால் அதன் விலை ஏகத்துக்கும் உயர்ந்துவிடும். எந்த பொருளானாலும் அதை நியாயமான விலைக்கு விற்க வேண்டுமென்றால் நமது லாபம் நியாயமானதாக இருக்க வேண்டும். நியாயமான விலை என்பதை எல்லோரும் வாங்கக்கூடிய சகாயமான விலை என பலரும் நினைக்கிறார்கள்.

 இது தவறு. பொருளின் தரத்துக்கு ஏற்ப அதன் விலை மாறும். ஆனால், நாம் சொல்லும் விலை நியாயமாக இருக்கும் என மக்கள் ஒப்புக் கொண்டாலே போதும், நம்மை விட்டு வேறு ஒரு கடைக்குப் போக மாட்டார்கள்.

தட்டுப்பாடு கூடாது!

நம் கடைக்கு பொருள் வாங்க வருகிறவர்களிடம் அவர்கள் கேட்கும் பொருள் இல்லை என்று சொல்லி போகக்கூடாது. எந்தப் பொருளானாலும் சரி, அது இந்தியாவின் எந்த பகுதி யில் கிடைத்தாலும் சரி, அதை எப்படியாவது எங்கள் கடைகளில் கொண்டு வந்து சேர்த்து விடுவோம்.

சர்வீஸ்தான் பிஸினஸ்!

எங்கள் கடைகள் மூலம் நாங்கள் பொருட்களை விற்கிறோம் என்பதைவிட சர்வீஸைத்தான் விற்கிறோம். எங்களைப் பொறுத்தவரை எங்கள் கஸ்டமர்கள்தான் எங்கள் முதலாளிகள். அவர்களுக்கு சரியாக சேவை செய்தால் எங்களை விட்டு விலகிச் செல்லவே மாட்டார்கள் என்பதை எங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அத்தனை ஊழியர்களுக்கும் சொல்லி இருக்கிறோம். 

ஒரு கஸ்டமர் கடைக்குள் நுழைந்தவுடன் அவரை வணங்கி வரவேற்பதில் ஆரம்பித்து, அவருக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கொடுத்து, திருப்திகரமாக கடையை விட்டுச் செல்கிற வரை ஒரு ஊழியர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பயிற்சி வகுப்பின் மூலம் கற்றுத் தருகிறோம். பத்து, பதினைந்து ஆண்டு கால அனுபவம் கொண்ட மூத்த ஊழியர்களைக் கொண்டே நாங்கள் இந்த பயிற்சியைத் தருவதால், புதிய ஊழியர்களுக்கு கிடைக்கும் பயிற்சி வெறும் தியரியாக இல்லாமல் பிராக்டிகலாக இருக்கிறது.

கவனமாக இருக்கிறோம்!

லோக்கல் மக்களின் தேவையை அறிந்து, அவர்களை திருப்திப்படுத்தினாலே போதும், வளர்ச்சி என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த துறையில் சில நிறுவனங்கள் வீழ்ந்ததற்கு காரணம், சொற்ப காலத்தில் அகலக்கால் விரித்து பணத்தைக் குவித்துவிட வேண்டும் என்று நினைத்ததால்தான். இந்தத் தவறை மட்டும் செய்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

நன்றி - நாணயம் விகடன்

டிஸ்கி - எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தி என்பதால் டைட்டிலில்  வெற்றி என்ற வார்த்தை விடு பட்டது.. அதாவது டைட்டில் 

ஈரோடு ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் - வெளி வராத வெற்றி ரகசியங்கள்.......


என திருத்தி படிக்கவும் ஹி ஹி