Showing posts with label மண்ணுளி முதல் ஈமு வரை...!- மிரள வைக்கும் கொங்கு மண்டலமோசடிகள் -பாகம் 6. Show all posts
Showing posts with label மண்ணுளி முதல் ஈமு வரை...!- மிரள வைக்கும் கொங்கு மண்டலமோசடிகள் -பாகம் 6. Show all posts

Sunday, September 20, 2015

மண்ணுளி முதல் ஈமு வரை...!- மிரள வைக்கும் கொங்கு மண்டலமோசடிகள் -பாகம் 6

குறி வைக்கப்படும் விவசாயிகள்

ஈமு கோழி வளர்ப்பு மோசடி நடந்து முடிந்த நேரம்... அதே இடம்... அதே விவசாயிகள்... அதே போன்றதொரு மோசடி... ஒரே ஒரு வித்தியாசம்தான். ஈமு கோழிக்கு பதில் நாட்டுக்கோழி. ஈமு பண்ணைகளுக்கு பதில் நாட்டுக்கோழிப் பண்ணைகள். வெளிநாட்டு பறவையான ஈமு கோழியை வைத்து மட்டுமல்ல, நாட்டுக்கோழியை காட்டியும் ஏமாற்ற முடியும் என மோசடியாளர்கள் சவால் விடாத குறையாக அரங்கேற்றியதுதான் இந்த நாட்டுக்கோழி வளர்ப்பு மோசடி. 

"பணத்தை முதலீடு செய்யுங்கள் நாட்டுக்கோழி பண்ணை வைத்துத் தருகிறோம்... தீவனம் தருகிறோம்... மாதந்தோறும் போனஸ் தருகிறோம் என்று கூறி பணத்தை வசூல் செய்து, ஈமுவை மாதிரி இல்லாமல், துவங்கிய ஓரிரு மாதங்களிலேயே ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஏமாற்றி, இழுத்து மூடி விட்டு தலைமறைவாகினர் மோசடியாளர்கள்.

மோசடி நடந்தது எப்படி?

ஈமுவுக்கான அதே மோசடி ஃபார்முலாதான் நாட்டுக்கோழி மோசடிக்கும். என்ன.. கோழிகளின் எண்ணிக்கை மட்டும் அதிகம். அதாவது ஒரு லட்சம் முதல் எத்தனை லட்சம் வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். முதலீடு செய்த உடன், முதலீட்டாளர்கள் இடத்தில் ஷெட் அமைத்து கொடுத்து, அங்கு சில நூறு நாட்டுக்கோழி குஞ்சுகள் விடப்படும். அதற்கான தீவனத்தை கொடுத்து விடுவார்கள். 

அவற்றை பராமரித்து வளர்த்தால், ஒரு லட்சம் முதலீடு செய்தவர்களுக்கு மாதம் 10 ஆயிரம். ஒன்றரை லட்சம் என்றால், 15 ஆயிரம் ரூபாய். அதுவே 2 லட்சம் என்றால் 20 ஆயிரம் வழங்கப்படும். ஒரு ஆண்டுகள் கோழியை வளர்த்து ஒப்படைத்தால், இறுதியில் முதலீடு பணம் திரும்ப வழங்கப்படும் என ஈமு ஃபார்முலாவில் கவர்ச்சிகரமாக அமலாக்கப்பட்டது நாட்டுக்கோழி மோசடி. மோசடி அறிவிப்பு துவங்கிய உடன், விவசாயிகள் ஏராளமானோர் முதலீடு செய்ய, ஓரிரு மாதங்களில் முதலீடு பணத்தை ஆட்டையப்போட்டு தலைமறைவானது மோசடி கும்பல். 

ஈமு அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரிரு மாதங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பிலும் பல கோடியை இழந்தனர் விவசாயிகள்.

'அது ஈமு சார்... இது நாட்டுக்கோழி...'

நாட்டுக்கோழி வளர்ப்பு மோசடி நடந்த காலகட்டம் என்பது கொங்கு மண்டலத்தில் பரபரப்பாக இருந்த காலகட்டம். வெளிநாட்டு பறவையான ஈமுவை காட்டி கோடிக்கணக்கில் சுருட்டியது பெரும் சர்ச்சையாகி, பணத்தை முதலீடு செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் வீட்டுக்கும் நடந்து கொண்டிருந்த நேரம்.  இந்த நேரத்தில் ஈமு பாணியில் நாட்டுக்கோழியை வைத்து எப்படி ஒரு பெரிய மோசடி நடந்தது என்பது மிகப்பெரிய ஆச்சரியம் தான். இப்படியெல்லாம் ஏமாற்ற முடியுமா என்பது தானே  கொங்கு மண்டல ஸ்பெஷல். 

அதேதான் இங்கேயும். நாட்டுக்கோழியை மார்க்கெட் செய்ததே ஈமுவை வைத்துதான். "இது ஈமு மாதிரி இல்லை சார். இது நம்ம நாட்டுக்கோழி. நாட்டுக்கோழிக்கு இருக்குற டிமாண்ட் உங்களுக்கே தெரியும். ஈமு மாதிரி வெளிநாட்டு கோழியை கொண்டு வந்து உங்களை ஏமாத்தலை. 500 குஞ்சை நீங்க வளர்த்து கொடுத்தா, அதை மார்க்கெட்ல விக்கும் போது நல்ல வருமானம் வருது. அதுல ஒரு பங்குதான் உங்களுக்கு.

இந்த பிசினஸில் நீங்களும் ஒரு பார்ட்னர். அதனாலதான் உங்க கிட்ட இருந்து ஒரு முதலீடு பணம் வாங்குறோம். நீங்களே பாருங்க. கோழி வளர வளர உங்களுக்கு பணம் கொட்டப்போகுது. ஈமுல ஏமாந்திருக்கலாம்.. அது ஈமு சார். இது நம்ம நாட்டுக்கோழி.  ஏமாத்தாது. உங்களுக்கு வித்தியாசம் புரியுதா இல்லையா?" என நாட்டுக்கோழி வளர்ப்பில் புரட்சி (?) செய்தார்கள் மோசடியாளர்கள்.

ஓரிரு மாதங்களில் தலைமறைவு

'அட.. இது தெரியாம ஈமுவுல பணத்தை போட்டு ஏமாந்துட்டேனே...!' என ஈமுவில் பணத்தை இழந்தவர்களும், மீண்டும் கடனை உடனை வாங்கி, நாட்டுக்கோழியில் இன்வெஸ்ட் செய்தார்கள். ஈமுவுல விட்டதை நாட்டுக்கோழியில புடிச்சிரணும் என இருந்த விவசாயிகளுக்கு, இதிலும் அதிர்ச்சிதான். நாட்டுக்கோழி வளர்ப்புக்காக துவங்கப்பட்ட அலுவலகம் அடுத்தடுத்து மூடப்பட்டது. முதலீடு பணத்துடன் எஸ்கேப் ஆனது மோசடி கும்பல். 

அப்புறம் என்ன, நாட்டுக்கோழியிலும் விவசாயிகளுக்கு நாமம்தான். ஈமு மோசடியோடு, நாட்டுக்கோழி மோசடி தொடர்பான புகார்களையும் பெற்றது காவல்துறை. சில லட்சங்களை கொடுத்து சில நூறு கோழிக்குஞ்சுகளை வைத்து, கோழிக்குஞ்சாவது மிச்சம் என ஒரு சிலரும், எங்களுக்கு கோழிக்குஞ்சுகளை கூட கொடுக்கலையே என பலரும் காவல்நிலையத்துக்கும், வீட்டுக்கும் நடையாய் நடந்த கதை அரங்கேறியது. குறுகிய கால மோசடி என்றாலும், வெகு வேகமாய் ஆயிரக்கணக்கான விவசாயிகள், சில கோடிகளை இழந்தனர்.

நாட்டுக்கோழியோடு முடியவில்லை... 

ஈமு, நாட்டுக்கோழினு ரெண்டு தடவை ஏமாந்துட்டாங்களா? ரெண்டு தடவை அடிபட்டாதான் தெரியும் என்கிறீர்களா? ஆனால் அதோடு நின்று விடவில்லை என்பதுதான் அதிர்ச்சி. இதே பாணியில் ஆடு வளர்ப்பை அறிமுகப்படுத்தி காசு பார்த்தது மோசடி கும்பல். கோழி காலை வாரலாம். ஆடு காலை வாராது' எனும் கதையாக ஆசையை தூண்டி வலையில் சிக்க வைத்து ஏமாற்றத் துவங்கினர். பெரிய அளவில் ஆடு வளர்ப்பு மோசடி கை கொடுக்கவில்லை என்றாலும், சில கோடிகள் இதிலும் விவசாயிகள் ஏமாந்தனர்.

அட ஆட்டோடு முடியவில்லை. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் என்ற கதையாய், ஆடு, கோழிக்கு பதில் தேங்காயை வைத்து மோசடி செய்யப்பட்டதுதான் உச்சம். ஒரு லட்சம் முதலீடு செஞ்சா, தேங்காய்களை கொடுப்போம். அதை நீங்க கொப்பரையா மாத்தி தரணும். சிம்பிளான வேலை மாசம் உங்களுக்கு பணம் வரும், போனஸ் வரும்" எனச்சொல்ல இதிலும் சில ஆயிரம் விவசாயிகள், முதலீடை கொட்டினர். அதோடு சரி.. அந்த கும்பலும் எஸ்கேப். 

கோழி, ஆட்டோடு, கொப்பரை மோசடியும் சேர்ந்து கொண்டது. இப்படி விவசாயிகளை மையப்படுத்தி நடந்த மோசடிகள் நீண்டது. இதை மற்ற மோசடிகளோடு ஒப்பிடமுடியாது.

அரசின் அலட்சியமும் காரணம்

விவசாயிகளை மையப்படுத்திய இந்த மோசடி குறித்து  பொருளாதார நிபுணர் ஒருவரிடம் பேசினோம். 

"இவையெல்லாம் மிகப்பெரிய மோசடிகள். இது பணத்தை போட்டு, உழைக்காமல் வட்டியை எதிர்நோக்கும் சிட்பண்ட் மோசடியோ, நிதி நிறுவன மோசடியோ, ஆன்லைன் மோசடியோ இல்லை. ஏதாவது வேலை செய்து சம்பாதிக்க மாட்டோமா என நினைத்தவர்கள்தான் இதில் முதலீடு செய்தார்கள். கோழி வளர்த்து சம்பாதிக்கலாம் என்றுதான் விவசாயிகள் நினைத்தார்களே தவிர, ஒன்றுமே செய்யாமல் பணம் கிடைக்க வேண்டும் என நினைக்கவில்லை. எனவே இதை மற்ற மோசடிகளுடன் ஒப்பிட முடியாது.

விவசாயம் அழிந்து வரும் நிலையில், வேறு வழியில்லாமல்தான் விவசாயிகள் இதை நோக்கிச் சென்றனர். விவசாயிகள் செய்த தவறு, ஒரு பக்கம் பணத்தை இழந்த பின்னரும், மீண்டும் அதேபோன்ற மோசடியில் சிக்கியதுதான். இதில் விவசாயிகள் விழிப்புணர்வோடு இருக்கவில்லை என்பதை விட, அரசு இதில் கவனம் செலுத்தவில்லை என்பதும் முக்கிய காரணம்.

விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்க வேண்டிய அரசு, இப்படி பகிரங்கமாய் விளம்பரம் செய்து ஏமாற்றும் நிறுவனங்களை கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை ஊட்டக்கூட முயற்சிக்கவில்லை. அதனால்தான் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, இந்த வாரம் மோசடி வாரம் என தினம் ஒரு மோசடி அரங்கேறியது. இந்த மோசடிகளுக்கு விவசாய அழிவும் ஒரு காரணம். 

விவசாயத்தில் லாபம் கிடைக்காது என்றால், வேறு எதில் கிடைக்கும் என எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற கதையாக சுற்றிக்கொண்டிருந்த விவசாயிகள்தான் இந்த மோசடியில் சிக்கினர்.  தவிர, இந்த மோசடிகள் ரகசியமாக நடக்கவில்லை. மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட விவசாயமும், அரசின் அலட்சியமும்தான் இது போன்ற மோசடிகள் பெருக காரணமாக அமைந்தது," என்றனர்.

'மலைமுழுங்கி மகாதேவன்கள்'

இதேபோல் கொங்கு மண்டலத்தில் பல மோசடிகள் அடுத்தடுத்து விவசாயிகளை மையப்படுத்தி நடந்தது. ஈமு பாணியில் தேக்கு மரம் வளர்ப்பு, கான்ட்ராக்ட் பார்மிங் என பல மோசடிகள் விவசாயம் சார்ந்த தொழிலை மையம்படுத்தி மோசடியாளர்களால் அரங்கேற்றப்பட்டன. இவை இல்லாமலும் சில மோசடிகள் அரங்கேறின. அவற்றில் பிரதானமானவை நில மோசடிகள். நிலமே இல்லாமல், ப்ளாட் போட்டு விற்பது, கிரானைட் இருப்பதாக சொல்லி ஒன்றுக்கும் பயனளிக்காத இடத்தை பல கோடிக்கு விற்பது, தங்கப்புதையல் இருப்பதாக சொல்லி ஏமாற்றுவது என  விவசாயிகள் ஏமாந்த கதை சொல்லி மாளாது.

வெறுங்கையால் முழம் போடும் இந்த நில மோசடிகளையும், அதில் ஈடுபடும் மலை முழுங்கி மகாதேவன்களின் ஏமாற்று வித்தை பற்றியும் அடுத்த வாரம் பார்க்கலாம்...

                                                                                                                                                                                   - ச.ஜெ.ரவி

நன்றி-விகடன்