Showing posts with label துல்ஹர் சல்மான். Show all posts
Showing posts with label துல்ஹர் சல்மான். Show all posts

Monday, April 20, 2015

திரை விமர்சனம்: ஓ காதல் கண்மணி ( the hindu)

இன்றைய வாழ்வு தரும் பார்வை, சுதந்திர உணர்வு ஆகியவற்றால் உறவின் வரையறைகளை மாற்றத் துடிக்கிறது இளைஞர்களின் மனம். இதைப் பற்றிப் பேசும் படமான ‘ஓ காதல் கண்மணி’ கல்யாணம் என்னும் கால்கட்டு இல்லாமலேயே காதல் வளர்ந்து நிலைக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது.
ஆதி (துல்கர் சல்மான்), தாரா (நித்யா மேனன்) இருவரும் தனித்தன்மையை யும் சுதந்திர உணர்வையும் இழக்க விரும்பாத காதலர்கள். முதிய ஜோடியான கணபதி (பிரகாஷ் ராஜ்), பவானி (லீலா சாம்சன்) வீட்டில் தங்கியிருக்கும் துல்கர், அங்கேயே நித்யாவையும் கூட்டிவந்துவிடுகிறார்.
மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள லீலாவைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறார் பிரகாஷ் ராஜ். இளம் ஜோடியின் வாழ்வில் ஏற்படும் சலனங்களில் இவர்களும் பங்கெடுத்துக்கொள்கிறார்கள்.
திருமணம் தவிர்த்த வாழ்க்கையை விரும்பும் காதலர்களைத் திருமணத்தை நோக்கித் தள்ள அவர்களது குடும்பங் கள் செய்யும் முயற்சிகள் தோல்வி யடைகின்றன. ஆனால் தொழில் நிமித்தமாக ஏற்படும் பிரிவால் வரும் வேதனை அவர்கள் முடிவை மறு பரிசீலனை செய்யவைக்கிறது. அதீத மான அன்புக்கும் சுதந்திர உணர்வுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் எது வெல்கிறது என்ற கேள்விக்கான பதிலாக விரிகிறது படம்.
படம் முழுவதும் இளமைத் துள்ள லின் உற்சாக அதிர்வை உணர முடி கிறது. ஏ.ஆர். ரஹ்மானின் இசை, மணிரத்னத்தின் வசனங்கள், காட்சி யமைப்புகள், பி.சி. ராம் செதுக்கி யுள்ள ஒளி-நிழல் சித்திரங்கள் ஆகியவை இளமையின் உற்சாகத்தையும் அனை வருக்குமான அழகியலையும் ரசனை யோடு முன்வைக்கின்றன. லீலா சாம்சனிடம் நித்யா மேனன் பாடிக் காட்டும் இடத்தில் இயக்குநர், இசை யமைப்பாளர், பாடலாசிரியர் வைர முத்து ஆகிய மூவரும் இணைந்து இனிமை யான அனுபவத்தை நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள். நாடகத்தன்மை யைத் தாண்டியும் அந்தக் காட்சி நம்மை ரசிக்கவைக்கிறது. பாடல்களிலும் பின்னணி இசையிலும் ரஹ்மான் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியின் உணர்ச்சியையும் பின்னணி இசை கச்சிதமாகப் பிரதிபலிக்கிறது.
அகமதாபாதில் இஸ்லாமியக் கட்டிடக் கலையைப் பார்வையிடும் காட்சி அற்புதமானது. கம்பீரமான அந்தக் கட்டிடம் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதமும் பின்னணியில் ஒலிக்கும் பாடலும் மனதில் ஆழமான சலனங்களை ஏற்படுத்துகின்றன.
காதலை வெளிப்படுத்தும் காட்சி களில் இளமையும் ரசனையும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஊரி லிருந்து அண்ணன் குடும்பம் வரும் சமயத்தில் துல்கருக்கு ஏற்படும் பதற்றத்தை வைத்து நித்யா மேனன் விளையாடும் இடம் அழகு. பேருந்து, ரயில் பயணங்களில் பொங்கி வழியும் காதல் உணர்வுகளும் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சின்னச் சின்னச் சண்டைகளும் சமாதானங்களும் ரசனையோடு படமாக்கப்பட்டுள்ளன. காதல் வளரும் விதம் இயல்பாக இல்லை என்றாலும் இன்றைய இளைஞர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் விதத்தில் காதல் காட்சிகள் உள்ளன.
காதலர்களின் பிரிவுக்கான கார ணம், மனம் மாறுவதற்கான சூழல் ஆகியவற்றில் புதிதாக எதுவும் இல்லை. முக்கியப் பிரச்சினைக்கு வருவதற்குத் திரைக்கதை ரொம்ப நேரம் எடுத்துக்கொள்வதில் இரண்டாம் பாதியில் படம் மந்தமாகிறது. காதலின் ஈரத்தையும் காதலுக்குள் முளைக்கும் சண்டையையும் சமாதானத்தையும் சொல்லும் காட்சிகள் கடைசிவரை திரும்பத் திரும்ப இடம்பெறுகின்றன.
படத்தின் முக்கியமான பிரச்சினைகள் இவை அல்ல. மணிரத்னம் சமகாலப் பிரச்சினை ஒன்றைக் கையில் எடுக் கிறார். அதைப் பெருமளவில் ஒரு பெண்ணின் கண்ணோட்டத்துடன் சித் தரிக்கிறார். முரண்பாட்டை உருவாக்கி, வலுவான கதை முடிச்சாக மாற்றுகிறார். இந்த முடிச்சை அவிழ்க்கும் சவாலை எதிர்கொள்வதில் பலவீனமாக வெளிப் படுகிறார். புதியதொரு கேள்விக்குப் புதியதொரு பதில் இல்லை. பார்வை யாளர்களின் கற்பனைக்கு இடம் தரும் முடிவாகவும் அமையவில்லை. பழைய பதிலைத் தருவதில் தவ றில்லை. அந்தப் பதில் பாத்திரங்களின் அனுபவம் மூலம் வெளிப்படும் பதிலாக இருக்க வேண்டும். மாறாக, செயற்கையாக முன்வைக்கப்படும் பதிலாக இருக்கிறது. இதுதான் படத்தின் பலவீனம்.
மணிரத்னத்துக்கே உரிய ஒப்பனை களை மீறி வசனங்கள் பல இடங்களில் இயல்பாக இருக்கின்றன. “ஒரு சர்டிஃபிகேட் இருந்தா எல்லாம் சரியாயிடுமா?” என்பன போன்ற கூர்மையான வசனங்களும் உள்ளன. திருமண பந்தத்தைத் தவிர்ப்பதற்கான காரணங்களைச் சொல்லியிருப்பது போலவே, திருமணம் தவிர்த்த வாழ்க்கை யில் இருவரும் ஏற்க வேண்டிய கட்டுப்பாடுகளையும் வசனங்கள் சொல்கின்றன.
ரசனையும் அலட்டிக்கொள்ளாத தன்மையும் கொண்ட பாத்திரத்தில் துல்கர் சல்மான் கச்சிதமாகப் பொருந்து கிறார். படம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரே விதமான உணர்ச்சிகளைக் காட்ட வேண்டிய பாத்திரம் இவருக்கு. கடைசிக் காட்சியில் மட்டும் மாறுபட்ட நடிப்புக்கான வாய்ப்பு கிடைக்கிறது. நித்யா மேனனின் ‘துறுதுறு’ தோற்றமும் துள்ளல் நடிப்பும் படத்தின் சிறப்பம்சம். காதலின் வேகம், செல்லக் கோபம், சோகம் என எல்லா உணர்ச்சிகளையும் அழகாக வெளிப்படுத்துகிறார். பிரகாஷ் ராஜும், லீலா சாம்சனும் படத் துக்குக் கூடுதல் பரிமாணத்தை வழங்குகிறார்கள்.
இளமைத் துள்ளல் படத்தின் மிகப் பெரிய பலம். எடுத்துக்கொண்ட பிரச்சினையைக் கையாளும் விதம் பலவீனம்.


Sunday, April 12, 2015

ஓ காதல் கண்மணி' - கலாச்சார சீர்கேட்டுக்கதையா?- வைரமுத்து பேச்சால் சர்ச்சை

'ஓ காதல் கண்மணி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், பாடலாசிரியர் வைரமுத்து, துல்ஹர் சல்மான், ரம்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாயகி நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் படப்பிடிப்பு இருந்ததால் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.
இச்சந்திப்பில் பாடலாசிரியர் வைரமுத்து பேசியது:
நான் ஊரில் இல்லாத போது, இரண்டு கவிஞர்கள் உருவாகிவிட்டார்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் இனிமேல் ஊருக்கு செல்லக் கூடாது என்று நினைக்கிறேன் என்றேன். இப்படத்தின் கதையைப் பொறுத்தவரை இந்திய சமூகத்தில் ஒரு கலாச்சார அதிர்ச்சியை உண்டாக்குகிற கதை. இந்த கலாச்சார அதிர்ச்சியை கலைஞர்கள் உண்டாக்குகிறார்களா, சமூகம் உருவாக்குகிறதா என்பது மிகப்பெரிய கேள்வி.
ஒரு திரைக்கலைஞன் கலாச்சார அதிர்ச்சியை உண்டாக்க முடியும். ஆனால், ஒரு வணிக எல்லைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறான். என்னைப் போல ஒரு படைப்பாளி, கலாச்சார அதிர்ச்சியை எழுத்தில் உண்டாக்கி விடமுடியும். ஆனால், ஒரு திரைக்கலைஞன் கலாச்சார அதிர்ச்சியை திரையில் கொண்டு வருவதற்கு பல கோடிகளை முதலீடு செய்ய வேண்டும். அந்த கலாச்சார அதிர்ச்சி வணிக ரீதியிலும் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும்.
ஒரு பரிசோதனை முயற்சியாக இப்படத்தை மணிரத்னம் செய்திருக்கிறார். இன்னும் 50 ஆண்டுகளில் திருமணம் என்கிற நிறுவனம் இருக்குமா என்ற ஒரு பெரிய கேள்வி இந்திய சமூகத்தில் நிலவுகிறது. உலகமயமாக்குதல் என்கிற ஒரு பெரிய ராட்சத அலையில் வட்டார கலாச்சாரங்களும், மொழிகளும், பண்பாடுகளும் மெல்ல மெல்ல அதிர்வுகள் காணக்கூடிய நிலையில் இந்த படம் வெளிவருகிறது. இந்த அடித்தளத்தை நினைத்துக் கொண்டு இந்தப்படத்தை நீங்கள் துய்த்தால் உண்மை நம் கண்களுக்கு பிரகாசம் ஆகுமென்றே நினைக்கிறேன்.
ஏ.ஆர்.ரஹ்மான் பேசியது:
எவ்வளவு தான் இசையமைத்தாலும், அடுத்த படம் பண்ணும் போது ஒரு தடுமாற்றம் வரும். பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் சொன்னார்கள், ஏன் நல்லாத்தானே போய்க் கொண்டிருக்கிறது என்று. நீங்கள் பண்ணுவது எல்லாருக்கும் தான் பிடிக்கிறதே என்றார்கள். நமக்கு எப்போது அப்படித் தோன்றுகிறதோ, அப்போது ஒரு அழுத்தம் வரும். அது மிகவும் மோசமானது. இருக்கிறவரைக்கும் முதலில் என்ன உற்சாகத்தோடு செய்தேனோ அதே போல் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு ஏற்றார்போல் மணி சார் எனக்கு ஒரு அடித்தளம் கொடுப்பார். 23 வருடங்களாக கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு நான் நன்றி சொல்கிறேன்.
துல்ஹர் சல்மான் பேசியது:
சில கனவுகள் காணும் போது, நமக்கு அதிலேயே இருக்கலாம், வாழ்ந்து விடலாம் என்று தோன்றும். எனக்கு கடந்த ஒரு வருடமாக அப்படித் தான் இருந்தது. எனக்கு இந்தப் படக்குழுவோடு இருக்க வேண்டும் போல் இருக்கிறது. படம் வெளியாகும்போது நான் மிகவும் கவலை அடைவேன் என்று நினைக்கிறேன். குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இந்திய திரையுலக திறமையாளர்கள் இப்படத்தில் இருக்கிறார்கள். பள்ளியில் படிக்கும் போது நான் ஒரு சாதாரண மாணவன் தான். இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்த போது எனக்கு என்னவோ ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்-ல் படிக்க வாய்ப்பு கிடைத்த மாதிரி இருந்தது. இந்த படத்தின் அனுபவமே எனக்கு ஒரு பல்கலைக்கழகம் போன மாதிரி தான் இருந்தது. இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு மணி சாருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் 17ம் தேதி என்னுடைய அக்காவுக்கு பிறந்த நாள். அந்த தேதியில் படம் வெளியாகிறது எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.
இயக்குநர் மணிரத்னம் பேசியது:
(படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளார் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த பதில்கள் வருமாறு) திருமணம் ஆகாமல் இணைந்து வாழ்வது தான் கதையா என்று கேட்டால் அதற்கு சில நாட்கள் பொறுத்திருந்தால் பதில் கிடைக்கும். வைரமுத்து சார் எல்லாருக்குமே படத்தைப் பற்றி புரியுற மாதிரி ஒன்று சொல்லிவிட்டார். அவரிடம் நான் 'சொல்ல வேண்டாம்’ என்று சொல்லாமல் போய்விட்டேன். சமூகத்தில் நடப்பது சரியா, தவறா என்று சொல்வதற்கு இரண்டரை மணி நேரம் படம் எடுக்க மாட்டோம். நீங்கள் அனுபவித்து பார்த்து, இந்த பாத்திரம் செய்தது சரியா என முடிவெடுங்கள். இது எப்படி இந்த சமூகத்தை பார்க்கிறது என்பது தான் படம்.
நீங்கள் பேனா, பேப்பரை விட்டுவிட்டு வந்தால் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். ஏதாவது விஷயம் இருந்தால் அதைப் பற்றி பேசலாம். இந்தியாவில் நடக்கும் விஷயத்துக்கு எல்லாம் நான் கருத்து சொல்ல முடியாது இல்லையா. ஒரு இயக்குநர் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் கருத்து சொல்ல முடியாது. என்னுடைய களம் படம் இயக்குவது, அதில் எனது கருத்துக்கள் வெளிப்படும்.


நன்றி  -த இந்து


ஓ காதல் கண்மணி யில் ரைட்டர் ஜெயமோகனை சேர்க்காததற்கு கடல் டப்பா ஆனதுதான் காரணமா?- மணிரத்னம் ஓப்பன் டாக் பேட்டி

இயக்குநர் மணிரத்னம், படம்: உதயா
இயக்குநர் மணிரத்னம், படம்: உதயா
இந்தியத் திரையுலகின் ஈர்ப்பு சக்தி குறையாத இயக்குநர் மணிரத்னம். ‘கடல்’ படத்தை முடித்துச் சற்றே இளைப்பாறிய மணிரத்னம் மீண்டும் இளமை குறையாமல் ‘ஓ காதல் கண்மணி’ படத்தோடு ரசிகர்களைச் சந்திக்கிறார். இந்தச் சூழலில் அவரைச் சந்தித்தோம்.
‘ஓ காதல் கண்மணி’ படம் ‘அலை பாயுதே’ படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லலாமா?
சொல்லலாம். ஆனால் அதே சமயம் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் கதையின் போக்கும், கதாபாத்திரங்களும் வித்தியாசமாக இருக்கும். தற்போது இருக்கும் காலகட்டத்தில் இளைய சமுதாயத்துக்கு மத்தியில் இருக்கும் உறவுகளைப் பற்றி இப்படம் பேசும்.
இந்த படம் முழுக்க மும்பையை பின்னணியாகக் கொண்டது. இப்படத் தில் பாடல்கள் அதிகம். இருப்பினும் கதாபாத்திரங்கள் வாயை அசைத்து பாடும் பாடல்கள் இரண்டுதான். மற்றவை யெல்லாம் படத்தின் பின்னணியோடு இணைந்து வருகிறது. வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் உழைப்பு இதில் அதிகம்.
முன்னணி நடிகர்கள் பலரும் உங் களுடன் பணிபுரிய ஆவலுடன் இருக் கும்போது துல்ஹரை ஏன் இப் படத்தின் நாயகனாக தேர்வு செய்தீர்கள்?
‘வாயை மூடி பேசவும்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் துல்ஹரை முதலில் பார்த்தேன். மிகவும் இளமைத் துடிப்புடன் இருந்தார். அது எனக்கு பிடித்துப் போனது. இப்படத்தின் கதையை எழுதும் போது அவரை அழைத்து பேசினேன். பேசும்போதே மிகவும் எதார்த்தமான இளைஞராக அவர் எனக்கு தெரிந்தார். அதையும் மீறி அவர் ஒரு அற்புதமான நடிகர். இப்படத்தின் படப்பிடிப்பின்போதே ஒலிப்பதிவும் செய்திருக்கிறோம். துல்ஹர், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன் என அனைவருமே படப்பிடிப்பின்போது பேசியதுதான் படத்தில் இருக்கும். துல்ஹர் சென்னையில் இருந்தவர் என்பது இந்த விஷயத்தில் எங்களுக்கு உதவியது.
இப்படத்தில் நீங்கள் ஒரு கவிஞராகவும் வெளிப்பட்டிருக்கிறீர்களே?
கவிஞர் ஆக வேண்டும் என்பதற் காக இப்படத்தில் நான் பாடல் எழுதவில்லை. அந்தப் பாடலின்போது வைரமுத்து ஊரில் இல்லை. எங்களுக்கோ உடனடியாக ஒரு பாடல் தேவைப்பட்டது. உடனே நானும், ஏ.ஆர்.ரஹ்மானும் அமர்ந்து இப்பாடலை எழுதினோம். அவ்வளவு தான். இதற்கு முன்பே ‘அலைபாயுதே’ படத்தில் ‘என்றென்றும் புன்னகை’ பாடலையும், ‘ராவணன்’ படத்தில் ‘வீரா’ பாடலையும் நாங்கள் இதேபோல் சேர்ந்து எழுதியிருக்கிறோம்.
15 வருடங்களுக்கு பிறகு பி.சி.ஸ்ரீரா முடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் எப்படி இருக்கிறது?
15 வருடங்கள் இணைந்து பணி யாற்றாத உணர்வே இப்படத்தின்போது எங்களுக்கு ஏற்படவில்லை. பி.சி.ஸ்ரீராம் என்னுடைய படங்களுக்கு ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல, ஆலோ சகரும் கூட. அவருடைய எதிர் வினைகளை வைத்து நான் சொன்னது எப்படியிருந்தது என்பதை தெரிந்து கொள்வேன்.
காதல் என் பது தற்போது எப்படி மாறி இருப்பதாக நினைக்கிறீர் கள்?
காதல் அப்படியேதான் இருக்கிறது. ஆட்கள்தான் மாறியிருக்கிறார் கள். அபத்தமான காதல் என்பது பழைய காலத்திலும் இருந்தது, இப்போ தும் இருக்கிறது. அசாதாரணமான காத லும் அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது. அதில் எந்த வித்தியாசமும் இல்லை. காதலை வெளிப்படுத்தும் தன்மை என்பது இப்போது மாறி இருக் கிறது. பழைய காலங்களில் சமுதாயத் தில் இருந்த சூழ்நிலையால் காதலை வெளியே சொல்ல முடியாது. இப்போது அப்படியில்லை. மனதில் தோன்றியதை வெளியே சொல்ல முடிகிறது.
என்னுடைய காலத்தில் என் அப்பா ஒரு வார்த்தைச் சொன்னால் நான் மறு வார்த்தை பேச மாட்டேன். இப்போது குழந்தைகளை சொந்தமாக யோசிக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கிறோம். ஆகையால், அவர்களுக்கு தோன்றும் கருத்துகளை வெளிப்படையாக தெரி விக்கிறார்கள்.
உங்கள் படங்களுக்கு உரிய வர வேற்பு கிடைக்காதபோது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
வரவேற்பு பெறும்போது ஏற்றுக் கொள்வது போல, வரவேற்பைப் பெறாதபோதும் ஏற்கத்தான் வேண்டும். ரசிகர்களுக்கு பிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் படம் பண்ணுகிறோம். ஆனால் அதற்கு நேர்மாறாக படம் தோல்வியடைந்தால் அதை ஒப்புக்கொண்டுதானே ஆகவேண்டும்.
படத்தில் தப்பு இருக்கலாம், ஆனால் நான் என்ன நினைத்தேனோ அதை அடைந்திருக்கிறேனா என்பதுதான் முக் கியம். தப்பு செய்வதற்கு பயப்படாமல் தான் படம் பண்ணுகிறோம். தப்பு பண்ணி னாலும் மீண்டும் எழுந்து நடக்க வேண்டும்.
அனைவருக்குமே இறங்கு முகம் வரும், அதைப் பார்த்து பயப்படாமல் இருக்கவேண்டும். ஒரு படம் சரியாகப் போகவில்லை என்றால், எதனால் என்று கற்றுக் கொண்டு அதை அடுத்த படத்தில் திருத்திக்கொள்வேன் அவ்வளவுதான்.
காதலை மையமாக வைத்து இன்னும் எத்தனை படங்களை எடுக்கப் போகி றீர்கள்?
உலகத்தில் காதல் இல்லாமல் எதுவுமே இல்லை. கணவன் - மனைவி, அம்மா - மகன், அப்பா - மகன் என நிறைய பரிணாமங்களில் காதல் இருக்கிறது. ஆகையால், காதலை படமாக பண்ணுவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.
‘கடல்’ படத்தில் எழுத்தாளர் ஜெய மோகனோடு பணியாற்றினீர்கள். இந்த படத்தில் அவருடன் ஏன் பணியாற்ற வில்லை?
சில படங்களுக்கு எழுத்தாளர்கள் தேவைப்பட மாட்டார்கள். ‘கடல்’ படம் கடற்கரையோர மக்களின் வாழ்க்கை யைச் சார்ந்த படம். அவர்களின் மொழி எனக்கு பழக்கம் இல்லை என்பதால் அவருடன் இணைந்து அப்படத்தை பண்ணினேன். ‘ஓ காதல் கண்மணி’ எனக்குத் தெரிந்த உலகம். அதனால் எனக்கு மற்றவர் உதவி தேவைப்படவில்லை.
தற்போது சமூக வலைதளத்தில் யார் வேண்டுமானாலும் படங்களை விமர்சனம் செய்யலாம் என்ற சூழ் நிலை வந்துவிட்டதே..?
வலைதளங்களில் வரும் விமர் சனங்களையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதுதான் இன்றைய சமூகம். முன்பு இந்த விமர்சனங்கள் டீக்கடையில் இருந்து வந்தன. ஏன் நானும், பி.சி-யும்கூட ஒரு குட்டிச்சுவரில் அமர்ந்து ‘யாருக்குமே சினிமா எடுக்க தெரியல. நாங்க எடுக்கிறோம்’ என்று பேசியிருக்கிறோம்.
இப்போது அதையே ட்விட்டர் தளத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான். முன்பு கருத்து சொல்வதற்கு எந்த வழிமுறையும் கிடையாது. இப்போது அதற்கு ஒரு தளம் கிடைத்திருக்கிறது.
சில இயக்குநர்கள் ஒரு படத்தின் காட் சியை அப்படியே தனது படத்திலும் உப யோகப்படுத்திக் கொள்கிறார்களே. இதைப் பற்றி தங்களுடைய கருத்து என்ன?
மற்றொரு படத்தின் காட்சிகளை அப்படியே தனது படத்தில் உபயோகிப்பது ஒரு மடத்தனம். ஒரு படத்தை பார்த்து, அப்படியே என் படத்தில் வைத்தால் நான் இதுவரை கற்றதே இல்லை என அர்த்தம்.
சினிமா வியாபாரம் இப்போது நிறைய மாறிவிட்டதே?
சினிமா வியாபாரம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. மாறி வருகிறது. இன்னும் மாறும். கொஞ்சம் கொஞ்சமாக தொழில்முறை மாறும் என தோன்றுகிறது. இன்றைக்கு சினிமா தொழில்நுட்பத்தில் நிறைய மாற் றங்கள் வந்துவிட்டன. அதேபோல தொழில்முறையும் மாறும். நானும், நீங்களும் படம் பார்க்கும் விதம் மாறிக் கொண்டிருக்கிறது. மொபைல் போனில் படம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். திரையரங்குக்கு வந்து படம் பார்க்க சிலர் விருப்பப்படுவதில்லை. இப்போது மக்களிடம் படத்தை எப்படி கொண்டு போய் சேர்ப்பது என்று நாங்கள் கற் றுக் கொள்ள வேண்டும். பெரிய தொழில் முறை மாற்றத்தின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
உங்கள் வீட்டில் இருக்கும் கதா நாயகன் என்ன சொல்கிறார்..?
(சிரித்துக் கொண்டே) ஐயோ வேண்டாம்.. நீங்கள் கேட்பவர் படித்துக் கொண்டிருக்கிறார்.

நன்றி - த  இந்து
ந்

Thursday, April 09, 2015

ஓ காதல் கண்மணி - மெகா ஹிட் பாடல்கள் உருவான விதம் - ஏ ஆர் ரஹ்மான் பேட்டி

ஏ.ஆர்.ரஹ்மான் | கோப்பு படம்
ஏ.ஆர்.ரஹ்மான் | கோப்பு படம்
'ஓ காதல் கண்மணி' படத்தின் ஒவ்வொரு பாடலும் எப்படி உருவானது என்று அப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஓ காதல் கண்மணி' திரைப்படம் ஏப்ரல் 17ம் தேதி வெளியாக உள்ளது. துல்ஹர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
'ஓ காதல் கண்மணி' படத்தின் பாடல்கள் உருவான விதம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பேசியிருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த வீடியோவில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியது:
"ஓகே கண்மணி ஒரு இளமையான திரைப்படம். எனவே படத்தின் இசையும் அதற்கு ஏற்றார்போல உற்சாகமானதாக இருக்க வேண்டும். மணிரத்னம் எப்போதும் எனக்கு ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்துவிடுவார். எனக்கு முழு சுதந்திரம் தந்துவிடுவார். இந்தப் படத்தைப் பொருத்தவரையில், அதன் அலைவரிசைக்கு நெருக்கமாக இசை இருக்க வேண்டும் என நினைத்தேன். அவரது எண்ணங்களில் இளமை இன்னும் மாறவில்லை என்பதை நீங்கள் காணலாம்.
அதே போல வைரமுத்து அவர்களும். அவரது எழுத்தில் பாரம்பரியம் தெரியும், அதே நேரத்தில் தனக்கே உரிய தனித்துவ பாணியில் அவர் பல நிலைகளில் முன்னால் உள்ளார்.
இசையில் வரிகள் எப்படி வந்து உட்காரும் எனத் தெரியாது. ரசாயன மாற்றம் போல நிகழும். இன்றுவரை நாங்கள் மூவரும் இணையும்போது, எப்போதும் போல உற்சாகம் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம்.
மென்டல் மனதில்
எப்போதுமே இந்த மாதிரியான பாடல் வேண்டும் என்ற நிலையில் நாங்கள் மூவரும் உட்கார்ந்து விவாதிப்போம். ஆனால் இந்தப் பாடல் விவாதத்தின்போது வைரமுத்து சென்னையில் இல்லை. எனக்கும் வெளிநாடு போக வேண்டிய வேலை இருந்தது. அதற்குள் கண்டிப்பாக இந்தப் பாடலை முடித்துவிட வேண்டும் என்று நானும், மணிரத்னமும் நினைத்தோம். படப்பிடிப்பும் இருந்ததால், நாங்களே எழுதிவிடலாம் என்று உட்கார்ந்தோம். முதலில் முழுமையான வரிகள் இல்லை. இசைக்கு ஏற்றவாரு அவர் ஒரு வார்த்தை நான் ஒரு வார்த்தை என சொல்ல, கடைசியில் அவற்றை ஒழுங்குபடுத்தி பாடலை முடித்தோம்.
மன மன மன என மீண்டும் மீண்டும் வரும் வார்த்தைகளை வைத்துக் கொள்ளலாம் என்று நான் உத்தேசித்தேன். மென்டல் என்ற வார்த்தையை மணி தான் சொன்னார். அதை முன்னால் இருக்கட்டும் என்று மாற்றினோம். இன்று மட்டும் ராஜா ராணி என முதலில் இருந்தது. முதலில் மென்டல் என்ற ஆங்கில வார்த்தை வந்துவிட்டதால், இதுவும் ஆங்கிலத்திலேயே இருக்கட்டும் என கிங் அண்ட் குயினா என மாற்றினோம்.
மலர்கள் கேட்டேன்
பாட்டுக்காக மெட்டமைத்தேன். 3 வகையான வரிகளைத் தந்தார். அதில் எனக்கு மலர்கள் கேட்டேன் பிடித்திருந்தது. கர்னாடக இசைப் பாடகி பாத்திரம் ஒன்று பாடுவது போல சூழல். சித்ரா மிக அருமையாக பாடியிருந்தார். பாடலின் முடிவில் ஒரு ஆண் குரல் இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. நான் டிராக் பாடியிருந்தேன். அதுவே நன்றாக இருந்ததால், அப்படியே பாடலிலும் சேர்த்து விட்டோம்.
சினாமிகா
ஒரு மெட்டைத் தந்திருந்தேன். மணிரத்னமுக்கு அது பிடித்திருந்தது. எனவே அதை வைத்து வரிகள் உருவானது. புதிதாக ஒரு வார்த்தையை உருவாக்கலாம் என நினைத்தோம். சினம் கொண்ட ஒரு பெண், என சினாமிச்கா என்ற வார்த்தையை உருவாக்கினோம். அப்படியே அனாதிகா என்ற வார்த்தையும் உருவானது. அந்தப் பாடலை முடிக்கதான் நிறைய நேரம் ஆனது. பாடல் மிகவும் மென்மையாக இருந்ததால், பாடலில் இன்னும் உற்சாகம் தேவை, என்றென்றும் புன்னகை பாடலைப் போல இருக்கலாம் என மணிரத்னம் விரும்பினார். அப்படியே பாப் பாடல்களைப் போன்ற அம்சங்களை சேர்த்தோம். பாடலை முடிக்க 2 மாதங்கள் ஆனது. ஒரு குறிப்பிட்ட டிரம்ஸ் ஒலி வரவேண்டும் என மெனக்கெட்டதில் அதற்கே 5 நாட்கள் ஆனது. டிரம்ஸ் ஒலிக்காக மட்டும், தென் ஆப்பிரிக்காவிலிருந்து வின்சென்ட் என்ற கலைஞர் வாசித்து அனுப்பினார்.
ஆட்டக்காரா
இந்தப் படத்துக்காக நாங்கள் உட்கார்ந்தபோது, முதல் ஒரு சில மாதங்களில் வந்த மெட்டு அது. வழக்கமான பாடலைப் போல் இருக்கக் கூடாது என்பதால் நிறைய யோசனைகள் இருந்தன. ஒரு 15 நிமிட பாடலை சுருக்க வேண்டும். பாடலில் ராப் பகுதி முதலிலேயே முடிந்துவிட்டது. மணிரத்னம் ஆட்டக்காரா என எழுதினார், காரா என நான் முன்னால் ஒரு வார்த்தையை சேர்த்தேன்.
தீரா உலா
படப்பிடிப்பு முடிந்தவுடன் காட்சிகளைப் பார்த்து இசையமைத்த பாட்டு இது.
பறந்து செல்ல வா
ஒரு அறையில் இருவரும் பாடுவது போல் இருக்கவேண்டும் என்பதால் வெறும் குரல்கள் மட்டும் போதும் என சொன்னார். அப்போது, ஐ பேடில் ஒரு செயலி இருப்பதைப் பற்றி சொன்னேன். நாம் என்ன பேசினாலும், பாடினாலும், இசைத்தாலும், அது பதிவாகி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும். இந்தியா, மேற்க்கத்திய நாடுகள் என பல இசைக் கலைஞர்கள் இதை பயன்படுத்துகிறார்கள். ஒரு புதிய ட்ரெண்ட் போல. அதை முயற்சி செய்யலாமா என யோசனை சொன்னேன். பாடகர் கார்த்திக்கை பாடவைத்தோம். என்னிடம் சில வார்த்தைகளின் பட்டியல் இருந்தது, அதை வைத்து அப்படியே பாடி பாடி இதை உருவாக்கினோம். பாடலை கேட்ட பிறகு மணிரத்னம் சில திருத்தங்களைச் சொன்னார். அதை வைத்து மீண்டும் ஒரு முறை ஒலிப்பதிவு செய்து பாடலை முடித்தோம்.
மவுலா
என் மகன் பாடியது. தனிப்பட்ட உபயோகத்துக்காக மகன் அமீனை வைத்து இந்தப் பாடலை ஏற்கன்வே ஒலிப்பதிவு செய்திருந்தேன். மணிரத்னம் ஒருநாள் எதேச்சையாக அதைக் கேட்டார். யார் குரல் இது எனக் கேட்டார். எனது மகன் என்று கூறினேன். எனக்கு இந்தப் பாடல் வேண்டும் என்றார். முதலில் தனியாக அந்தப் பாடலை வெளியிடலாம் என்ற யோசனை எனக்கிருந்தது. நண்பர்களுக்குள் மட்டும் பகிர்ந்திருந்தேன். இவர் கேட்டவுடன் என்னால் மறுக்க முடியவில்லை. எப்படி இதை பயன்படுத்துவீர்கள் எனக் கேட்டேன். நான் அதை பார்த்துக் கொள்கிறேன். என்றார். என்னை அறிமுகம் செய்தது போல மவுலாவில் மணிரத்னமே என் மகனையும் அறிமுகம் செய்கிறார். வாழ்க்கை ஒரு முழு சுற்று வந்தது போல.
தமிழில் சரியான வரிகள் பொருந்திப் போக அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கும். தெலுங்கில் டப்பிங் செய்யப்படும்போது அவர்களுக்கு அந்தப் பிரச்சினை இருக்காது. முழு பாடலும் கைவசம் இருக்கும். ஓகே கண்மணியைப் பொருத்தவரை சில பாடல் வரிகள் தமிழை விட தெலுங்கில் நன்றாக இருக்கிறது. குறிப்பாக நானே வருகிறேன் பாடல்." என்று பேசியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்


நன்றி  -த இந்து