மலையாளத்தில் கிடைத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு மொழிகளில் உடனுக்குடன் மறுஆக்கம் செய்யப்பட்டு வெற்றிகளைக் குவித்தது த்ரிஷ்யம்.
அந்தப் படத்தின் இந்தி, தமிழ் மறுஆக்கங்கள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டன. 39 நாட்களில் தமிழ் மறுஆக்கத்தை இயக்கி முடித்திருக்கிறார் அதன் இயக்குநர் ஜித்து ஜோசப். ‘தி இந்து’ தமிழுக்காக அவர் அளித்த பேட்டியிலிருந்து...
மலையாளத்தில் 'த்ரிஷ்யம்', தமிழில் 'பாபநாசம்' என்ன மாற்றம் செய்திருக்கிறீர்கள்?
கதையில் பெரிய மாற்றங்கள் எதுவுமே செய்யவில்லை, செய்யவும் முடியாது. படத்தில் வரும் குடும்பம் சம்பந்தமான காட்சிகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்திருக்கிறோம். மலையாளத்தில் கிறித்துவ மதப் பின்னணியில் அமைந்திருந்தது. தமிழில் வேறொரு சமுதாயத்தின் பின்னணியில் அமைத்திருக்கிறோம். அவ்வளவுதான்.
தமிழ்நாட்டில் இவ்வளவு ஊர்கள் இருக்கும்போது 'பாபநாசம்' பின்னணியில் இப்படத்தை இயக்கக் காரணம் என்ன?
கமல்ஹாசன் நூற்றுக்கணக்கான படங்களில் பல்வேறு வட்டார மொழிகளில் பேசி நடித்திருக்கிறார். ஆனால், திருநெல்வேலி வட்டார மொழி பேசி அவர் நடித்ததில்லை. அதுமட்டுமன்றி, ‘த்ரிஷ்யம்' என்ற பெயரில்தான் மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் தயாராகியிருக்கிறது.
அவ்வாறு விவாதித்துக்கொண்டிருக்கும்போது ‘பாபநாசம்' ஊரைப் பற்றிச் சொன்னார்கள். ‘பாவத்தைத் தொலைக்கும் இடம் - பாபநாசம்' என்றார்கள். அந்தப் பெயருக்கும் கதையின் கருவுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதால் ‘பாபநாசம்' என்ற தலைப்பை உடனே வைத்து, அங்கு படப்பிடிப்பு நடத்தினோம்.
மோகன்லால், கமல் ஹாசன் எப்படி ஒப்பீடு செய்வீர்கள்?
இரண்டு மொழிகளிலும் இரண்டு ஜாம்பவான்கள். இருவரையும் ஓப்பீடு செய்வதே தவறு. இருவருக்குமே தனித்துவம் உள்ளது. ஜார்ஜ் குட்டி என்ற வேடத்துக்கு ஏற்ப மோகன்லாலும், சுயம்புலிங்கம் என்ற வேடத்துக்கேற்ப கமலும் அவர்கள் பாணியில் நடித்திருக்கிறார்கள். தமிழ் மக்களுக்கு ஏற்றவாறு கொஞ்சம் உணர்ச்சிமிகு காட்சியை சேர்த்திருக்கிறேன். அது தமிழ் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் என நம்புகிறேன்.
தமிழில் ‘த்ரிஷ்யம்' என்கிற கதையை கமல்ஹாசன் இல்லாமல் இயக்கியிருக்க முடியுமா?
இப்படத்தின் தமிழ் மறுஆக்கத்துக்கு என்னுடைய முதல் தேர்வு கமல்ஹாசன்தான். இப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்றபோது தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி என்னிடம் “இப்படத்தைத் தமிழில் யாரை வைத்து எடுப்பீர்கள்?” எனக் கேட்டார். உடனே “கமல்ஹாசன் இல்லை என்றால் ரஜினிகாந்த் ” என பல நடிகர்களைச் சொன்னேன். கமலின் நடிப்பு, தோற்றம், செயல்திறன் அனைத்துமே இப்படத்தின் கதைக்குப் பெரிய பக்கபலமாக இருக்கும். படம் பார்க்கும்போது அதை நீங்கள் உணர்வீர்கள்.
தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகள் நீங்கள் இயக்காமல் தமிழில் மட்டும் இயக்கக் காரணம் என்ன?
இந்தியில் இயக்க வேண்டும் என எண்ணியது உண்மைதான். அவர்கள் என்னிடம் கேட்கும்போது எனக்கு ஏற்கெனவே ஒப்புக்கொண்ட வேலைகள் இருந்தன. அதனால் என்னால் இயக்க இயலாமல் போய்விட்டது. தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் எனக்கு பரிச்சயம் இருக்கிறது. தெலுங்கு, கன்னடம் எனக்கு தெரியாது. இந்தியில் அமையவில்லை என்பதால் தமிழில் இயக்கினேன்.
'த்ரிஷ்யம்' வெற்றிக்குக் காரணம் எதுவென்று நினைக்கிறீர்கள்?
அழுத்தமான கதைக்களமும் திரைக்கதையும்தான். ‘த்ரிஷ்யம்' திரைக்கதையில் நாயகனுக்கு மட்டுமே முக்கியத்துவம் வைத்து நான் எழுதவில்லை. அக்கதையில் வரும் சிறு சிறு பாத்திரங்களுக்குக்கூடத் தனித்துவமான அடையாளம் இருக்கிறது.
'பாபநாசம்' படத்தில் ஜெயமோகன், சுகா, கமல்ஹாசன் போன்ற எழுத்தாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?
நானும் ஒரு திரைக்கதை எழுத்தாளன் என்ற முறையில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். எனக்குத் தமிழில் நிறைய வார்த்தைகள் தெரியாது. தமிழ்க் கலாச்சாரம் எப்படி இருக்கும், ஒரு காட்சி பண்ணும்போது தமிழில் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் நிறையக் கற்றுக்கொண்டேன்.
கமல்ஹாசன் ஒரு இயக்குநர். நீங்கள் இயக்கும்போது இயக்குநர் கமல்ஹாசன் வெளியே வந்தாரா?
நான் இப்படம் தொடங்கும்போதே என்னிடம் பலர், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்; கதையில் கமல் தலையீடு செய்வார் என்றெல்லாம் சொன்னார்கள். முதல் நாள் படப்பிடிப்பின்போது மானிட்டர் பக்கம்கூட கமல் வரவில்லை. மூன்றாவது நாள் “இந்தக் காட்சி எப்படி வந்திருக்கிறது எனப் பாருங்கள் சார்” என கேட்டேன். அப்போது கமல் சார் “நீங்கள் இயக்குநர். அது உங்களுடைய வேலை” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். இதற்கு மேல் நான் என்ன சொல்ல வேண்டும்? இந்தக் கேள்விக்கு இதுவே பதிலாக இருக்கும்.
அதே போல, இந்தக் காட்சியில் இப்படிப் பண்ணலாமா என்று கேட்பார். நான் வேண்டாம் சார், சரியாக இருக்காது என்று சொன்னால், நீங்கள் சொன்னால் சரி என்று கூறிவிடுவார்.
மலையாளத்தில் தற்போது புதுமுக இயக்குநர்கள், நடிகர்கள் அசத்திவருவதைக் கவனிக்கிறீர்களா?
கண்டிப்பாக. ஒவ்வொரு 15 ஆண்டுக்கும் ஒரு மாற்றம் வரும். திறமையுள்ள நிறைய புதுமுக இயக்குநர்கள் வர வேண்டும் என நினைக்கிறேன். அப்போதுதான் வலுவான போட்டி இருக்கும். மலையாளத்தில் ஒரு காலகட்டத்தில் நல்ல படங்களின் எண்ணிக்கை வருவது மிகவும் குறைவாக இருந்தது. அப்போது மக்கள் திரையரங்குக்கு வருவது மிகவும் குறைவு. இப்போது நல்ல படங்கள் நிறைய வருகின்றன. நல்ல படங்கள் அதிகரித்தால், மக்கள் திரையரங்குக்கு வந்து பார்ப்பதும் அதிகரிக்கும் என்பது என் கருத்து.]
நன்றி - த இந்து
- பல வருடங்களுக்கு முன்னால் இதே மாதிரி (Sexual harassment thro ' landline போன்)ஒரு தொடர்கதை(?).'சுஜாதா" எழுதியுள்ளது நினைவுக்கு வருகிறது. (அதன்" கிளைமாக்ஸ்"வேறு.)ஒரு தாயின் மனநிலையை மிக சிறப்பாக வெளி கொனர்ந்த படம்.தமிழில் , ஆவலுடன் எதிர்பார்கிறேன்.a day agoPoints790(0) · (0)reply (0)
Kriti Janarthanan
இதே இந்துவில் படித்து விட்டுதான் படம் பார்க்க சென்றோம்..இப்படத்தின் இரண்டு கருத்துக்கள் வலிமையானது..ஒன்று-குற்றம் செய்பவர் கண்டிப்பாக தண்டனை பெற வேண்டும்;சட்டத்தால் சாத்தியம் இல்லையென்றாலும் ஏதோ ஒரு ஒரு வகையில் தண்டனை கிடைத்தே தீரும்.இன்னொன்று மிகுந்த சர்ச்சையை உண்டாக்கியது(படத்தை பார்த்தீர்கள் என்றால் புரியும்)-வள்ளுவர் சொன்னார் பொய்மையும் வாய்மையிடத்து; ஆனால் ஜார்ஜ்குட்டி மிக மிக நல்ல மனிதராக இருந்ததால் தான் அது சாத்தியமாயிற்று..மிக நல்ல, சுவாரஸ்யமான படம். தொழில்நுட்ப வளர்ச்சியினால் பெண்களுக்கு உண்டாகும் பற்பல தீமைகளில் ஒன்றை இப்படம் உறைக்கும்படி சொல்லியுள்ளது.a day agoPoints2030Mannan Mannen
இது போன்ற ஒரு திரைகதை அமைவது மிகவும் rare என்று தான் சொல்ல வேண்டும் .....அத்தனை கதாபத்திரங்களும் மிக மிக சிறப்பாக தங்கள் நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்கள் மலையாளத்தில் மற்றும் தெலுங்கில் பார்த்தேன் ......தமிழில் அதே போல வரும் என்று நம்புகிறேன் ......இவ்வளவு பெரிய hit கொடுத்த இயக்குனர் இவர் தான இது என்று இன்று தான் இவர் புகை படத்தை பார்கிறேன் .........மலையாளம் மோகன்லால் நடித்து மிக சிறப்பாக வந்து collection அள்ளியது அதே போல தெலுங்கில் venketsh நடித்து சிறப்பாக வந்தது ....தமிழில் அதை விட சிறப்பான collection வரும் என்று எதிர்பார்கிறேன் .....அடுத்த வாரம் தெரிந்து விடும் தமிழக மக்கள் எப்படி இதை எடுத்து கொள்கிறார்கள் என்று ....All the best to this director ஜித்து ஜோசப்


