Showing posts with label கீற்று. Show all posts
Showing posts with label கீற்று. Show all posts

Thursday, March 01, 2012

கூடங்குளம் கட்டுரையால் முடக்கப்படும் அபாயத்தில் கீற்று இணையதளம்?

 http://natpu.in/wp-content/uploads/2011/03/keetru-ramesh-bala-cartoons.jpg

'ஜெயலலிதா ஆட்சியில் கருத்துரிமைக்கு இடம் இல்லையா?’ என்று கொதிக்கிறார்கள், சட்ட உரிமை ஆர்வலர்கள். 'கீற்று’ இணையதள ஆசிரியரிடம் நடத்தப்பட்ட விசாரணைதான் இந்தக் கொதிப்புக்குக் காரணம். 


சிறு வட்டாரத்தில் மட்டுமே அறியப்பட்ட சமூக அக்கறையுள்ள சிறு பத்திரிகைகளை, தனது இணையதளத்தில் வெளியிட்டதன் மூலம், உலக அளவிலான கவனத்தைப் பெற்றது 'கீற்று’. இட ஒதுக்கீடு, தலித்மக்கள் மீதான வன்கொடுமைகள், கல்வி, சுற்றுச்சூழல் பிரச்னைகள் தொடர்பான கட்டுரைகள் இதில்அதிகம் வெளியிடப்பட்டன. சூடு கிளப்பும் சர்ச்சையான விவாதங்களும் அவ்வப்போது  இதில் இடம்பெறும்.


அண்மையில், 'அணுஉலைப் பிரச்னை’ தொடர்பாக விஞ்ஞானி​கள், சூழலியலாளர்கள், படைப்பாளிகள் என பல தரப்பினரும் எழுதிய 200 கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில்தான், கடந்த 8-ம் தேதியன்று, 'கீற்று’ இணைய​தளத்தின் ஆசிரியரும் உரிமையாளருமான ரமேஷிடம், க்யூ பிராஞ்ச் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கு, சமூக இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் சட்ட உரிமை ஆர்வலர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


கீற்று நந்தன் என்ற ரமேஷ் கூறியது''-கடந்த 7-ம் தேதி மதியம் வீட்டுக்கு வந்தபோது, 'கீற்று இணைய தளம் பற்றி விசாரிக்க வேண்டும். க்யூ பிராஞ்ச் அலுவலகத்துக்கு நாளை வாருங்கள்’ என்று, அங்கு காத்திருந்த போலீஸ்காரர்  சொன்னார். மயிலாப்பூரில் உள்ள க்யூ பிராஞ்ச் அலுவலகத்துக்குச் சென்றேன். அங்கு, டி.எஸ்.பி. நிலையில் உள்ள ஓர் அதிகாரி, கீற்று தளம் பற்றி விசாரித்தார். 'பல இயக்கங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடுகிறீர்கள். நீங்கள் எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்? 

நெடுமாறன், வைகோ, சீமான் போன்றவர்கள் உங்களுக்கு உதவி செய்கிறார்களா? வேறு யாராவது நிதிஉதவி செய்கிறார்களா?’ என்று இரண்டு மணி நேரம் பல விவரங்களைக் கேட்டார். என்னுடைய வங்கிக் கணக்கு விவரங்களையும் விசாரித்தார்கள். சமூகநீதி, முற்போக்குக் கருத்துக்களை வெளியிட்டு வரும் என்னுடைய இந்த முயற்சி முழுவதும் என்னுடைய சொந்த செலவில் நடக்கிறது. 

பொருளாதாரப் பிரச்னை வரும்போது, கீற்று வாச​கர்கள் உதவுகின்றனர். எங்கள் தளத்தின் செயல்​பாடுகள் முழு​வதும் வெளிப்படையானது. சமூக அக்கறையுடன் கருத்துகளை வெளியிடுவதைத் தடுப்பது, அடிப்படை சுதந்திரத்தை மறுப்பதாகும்'' என்று அழுத்தமாகச் சொன்னார் ரமேஷ்.


தீவிர அரசியல் தளமான 'வினவு’ இணையதள செய்தித் தொடர்பாளரான பாண்டியன், ''கீற்று ஆசிரியரிடம் க்யூ பிராஞ்ச் போலீஸார் விசாரணை நடத்தியதை, கருத்துரிமை பேசும் அனைவரும் கண்டிக்க வேண்டும். இது ஒரு வகை மிரட்டலும்கூட. இதை இப்படியே விட்டுவிட்டால், மக்கள் நலன் சார்ந்து எழுதுவதே தடைசெய்யப்படும் நிலை உருவாகும். எனவே, இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்'' என்றார் ஆவேசத்துடன்.


இது ஒரு புறம் இருக்க... சென்னையைத் தலை​மை இடமாகக்கொண்ட 'தி வீக் எண்ட் லீடர்’ ஆங்கில இணையதளம் திடீரென முடக்கப்பட்டது, கருத்துரிமையாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியாறு அணை விவகாரத்தில், தமிழ்நாட்டில் இருந்துகொண்டே தமிழகத்துக்கு எதிராக கேரளத்தினர் தகவல்களைப் பரப்புவது தொடர்பாக, இந்த இணையதளத்தில் கடுமையான விமர்சனக் கட்டுரை ஒன்று வெளியானது. இதனால், ஆத்திரமடைந்த மலையாள ஆதரவுத் தரப்பினர் பிரச்னையைக் கிளப்பினார்கள். அது பின்னர் அமுங்கிப்போனது. விமர்சனங்கள், மிரட்டல்கள் எனத் தொடர்ந்த எதிர்வினைகள், இணையதளத்தை முடக்கிப்போடும் அளவுக்குப் போனது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcZSfMkd-GDEqsKQP8BjtOWdXYFvy3tX9gmtYPXjuD6Ovjfly8qFjrfEkhL3gBBgTPfhIor2DOw_6WYdz7uib-t4RK64WgsTWrMhDh0Qm7cxlG3m1ftOoGaYtpWuxMEl1r8U6SD-y0Oy4/s640/keetru.jpg


இது பற்றிப் பேசும் 'தி வீக் எண்ட் லீடர்’ஆசிரியர் வினோஜ் குமார், ''எங்கள் இணையதளத்தின் பெயரைப் பதிவு செய்த நிறுவனம், இந்த மாதத் தொடக்​கத்திலேயே தளத்தை முடக்கிப்போட்டது. 15 நாட்களுக்​கும் மேல், தளத்தை வழக்கம்போல பார்வை​யிட முடியாதபடி சிக்கல் உண்டானது. பெரியாறு அணை விவகாரத்தில், மலையாள இனவெறி​யுடன் தமிழகத்தில் செயல்படுபவர்கள், எங்களின் கட்டுரைக்குப் பழி வாங்கும் விதத்தில் இதைச் செய்திருக்கலாம் என்று நம்புகிறோம்'' என்கிறார்.


இது, இணையத் தளங்களுக்குச் சோதனைக் காலமோ?