Tuesday, May 26, 2020

ஒரு “மே”ஜிக் ஜாக் கொலை-சென்னிமலை சி.பி. செந்தில் குமார் ( படம் பார்த்து கதை சொல் சிறுகதைப்போட்டி )


ஈரோட்டில் இருக்கும் முன்னணி டெக்ஸ்டைல் நிறுவனமான  ஏபிசி  டெக்ஸ்  பன்னீர் செல்வம் பார்க் அருகே மணிக்கூண்டில் கம்பீரமாக  நின்றிருந்தது.  அப்பா, மகன் இருவரும் அதன் ஓனர்கள். எம் ஜி ஆர் காலத்தில்  எம் ஜி ஆர் அண்ணன்  எம்.ஜி சக்ரபாணியை  பெரியவரு எனவும் , எம் ஜி ஆரை சின்னவர் எனவும் தோட்டத்தில் அழைப்பார்கள். அது மாதிரி இங்கேயும்  அப்பா பெரியவர் , மகன் சின்னவர் . பெரியவர் சிறந்த  உழைப்பாளி , சின்னவர் ஷோக்காளி, அப்பா கஷ்டப்பட்டு  குருவி மாதிரி சேர்த்த பணத்தை மகன் அருவி மாதிரி அள்ளிக்கொட்டி செலவு பண்ணுவார் , ரஜினி பல வருசங்களா  நடிச்சு சேர்த்த பணத்தை  அவரு பொண்ணு கோச்சடையான் எடுத்து  செலவு பண்ண மாதிரி 

இப்போ சொல்லப்போற ஒரு விஷயம் நம்ப முடியாததா இருக்கும், ஆனா  நிஜம். அந்தக்காலத்துல ராஜாக்கள் வரும்போது வர்றார் மன்னர் பராக் பராக்  எல்லாம் சொல்வாங்க இல்லையா? தெரியாத இந்தக்கால தலைமுறைகள்  இம்சை அரசன்  23ம் புலிகேசி பார்த்து தெரிந்து கொள்ளலாம். அந்த மாதிரி கம்பெனி கேட் முன்னால்  செக்யூரிட்டி  நிப்பார். அய்யா ( பெரியவர் ) கார் வந்து நின்னதும்  செக்யூரிட்டி  ஒரு பெல் அடிப்பார் . உடனே அனைவரும் எந்திரிச்சு  நிப்பாங்க . கார் டிரைவர் காரை பார்க்கிங்  பண்ணிட்டு கார் கதவை திறந்து விட்டு  அய்யா கம்பெனிக்குள் எண்ட்டராக 10 நிமிசம் ஆகும். அந்த 10 நிமிசம் வரை எல்லாருமே அப்படியே நின்னுட்டு இருப்பாங்க .அய்யா உள்ளே நுழைஞ்சு அவர்  ரூம் போய் உக்கார்ற வரை யாரும் உக்காரவே மாட்டாங்க. 2020 ல கூட இப்படி ஆளுங்க இருப்பாங்களா?னு முதல்ல ஆச்சரியப்பட்டவங்க பலர் 


அய்யா அந்தக்காலத்துலயே அதாவது சிலோன் என இலங்கைக்குப்பேர் இருந்தப்போ , கள்ளத்தோணில லுங்கி கொண்டு போய் வித்து செம காசு பார்த்தவர் . கேரளா, ஆந்திரா, கர்நாடகா,  தமிழ்நாடு என  பல மாநிலங்களில் அவரது  லுங்கி தயாரிப்பு பிரபலம். மார்க்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவ் சம்பளம் எல்லாம் பிரமாதமா இருக்கும். 40,000   ,  50,000  ரூபாய் சம்பளம் அசால்ட்டா வாங்குவாங்க  டெக்ஸ்டைல்ஸ் கம்பெனிக்காரங்க தர வேண்டிய  பாக்கித்தொகைகள் கொண்ட லிஸ்ட்க்கு டாப் என்று பெயர்.  15 நாட்கள் அல்லது 20 நாட்கள் லைன் பார்த்துட்டு வந்து கலெக்சனை ஒப்படைத்து ( கேஷ்/டிடி/செக்)  டாப் செக் பண்ணும்போது டோட்டல் அவுட்ஸ்டேண்டிங்கில் மினிமம் 20% ஆவது கலெக்சன் பண்ணி இருக்கனும் , இல்லைன்னா கண்ட படி கத்துவார். 

 20 நாட்கள் லைன் பார்த்துட்டு வந்து மீதி 10 நாட்களுக்கு கம்பெனிலயே இருந்து எந்த எந்த  கடைக்கு என்ன  என்ன ஆர்டர் போடனும் என லிஸ்ட் அவுட் எடுத்து பேல் போடுவதும் எக்ஸ்க்யூட்டிவ் வேலையே! அந்த எக்ஸ்க்யூட்டிவ்ஸ்  தங்கள் ஓவர் ட்யூ லிஸ்ட் எனபப்டும் டாப் பேப்பர்சுடன் அய்யா ரூமுக்குள் போகும்போது  ஜெகஜோதியா இருக்கும். அப்படியே குனிஞ்ச வாக்குலயே உடம்பு முன் பக்கம் பெண்ட் பண்ணி அவ்ளோ பணிவா போவாங்க அவரு திறமைசாலிகளை மதிப்பார். ஆர்டர் சரியா எடுக்கலை , கலெக்சன் நல்லா பண்ணலைன்னா டாப் பேப்பரை தூக்கி எறிவார். அதே நல்லாருந்தா கொஞ்சுவார். வெரிகுட் பாய்  அப்டினு மனம் விட்டு பாராட்டுவார்


 சின்னவர் அவருக்கு நேர் எதிர் . அவர் சிரிச்சே யாரும் பார்த்ததில்லை .  எல்லாரையும் மட்டம் தட்டுவார். யாரையும் மதிக்க மாட்டார். ஒரு ஆயுத பூஜை தினத்தன்று ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது மறக்க முடியாதது. கம்பெனி கேஷியர்  ரொம்ப சாது, அப்பாவி , வயசு 60 இருக்கும். பணியாளர்களுக்கு சம்பளம் போட , பேங்க் போக வர அக்கவுண்ட்ஸ் டீலிங் எல்லாம் அவர் தான். பெரியவர் , சின்னவர் இருவரிடமும் சைன்  வாங்கனும்.அதுக்கு அவர் படும் பாடு சொல்லி மாளாது. பரிதாபமாக இருக்கும். அக்கவுண்ட்சில் ஒரு 20,000 ரூபாய் டேலி ஆகவில்லை . எல்லார் முன்பும் “ ஏண்டா டேய் , அதைக்கூட ஒழுங்கா கவனிக்க முடியாதா? இங்கே புடுங்கறக்காடா ஆஃபீஸ்க்கு வர்றீங்க?


 அந்தக்குரலைக்கேட்டதும்  கம்பெனியே ஸ்டன் ஆனது, எல்லோர் ,முன்பும் எவ்ளோ பெரிய அவமானம் ?  கேஷியர் கூனிக்குறுகிப்போனார். எதுவும் சொல்லாமல் தலை குனிந்திருந்தார்  இவ்ளோ அவமானப்பட்டு இப்படி ஒரு ஆளிடம் வேலை பார்க்கனுமா? ஏன் அடிமை மாதிரி இப்படி இருக்காரு? என  விசாரித்ததில் ஒரு முறை அக்கவுண்ட்டில் ஒரு லட்சம் ரூபாய் ஷார்ட்டேஜ். அவர் தான் கட்டி ஆகனும். அவர் பரம ஏழை. வேற வழி இல்லாம வெத்து பாண்ட் பேப்பர்ல சைன் பண்ணிக்குடுத்து மாசாமாசம் அவர் சம்பளத்துல  கொஞ்சம் கொஞச்மா பிடிச்ட்டு வர்றாங்களாம். அதனால தான் அவர் படும் அவமானங்களை எல்லாம் சகித்துக்கொண்டு அங்கேயே காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கார்


கலெக்சன் எக்ஸ்க்யூட்டிவ்ஸ் பல டைம் பல இடங்கள் ல தப்பு பண்றதுண்டு. கலெக்சன் ஆன பணத்தை ரோலிங்ல விடறது, பணம் வசூல் ஆனதை ஃபுல்லா கட்டாம பகுதி தொகையை  எடுத்துட்டு கம்மியா கட்றது இதெல்லாம் நடக்கும். ஆனா மாசா ,மாசம் பார்ட்டிகளுக்கு பெண்டிங் தொகை லிஸ்ட் கூரியர் போகும்போது அவர்கள் தகவல் சொல்லிடுவாங்க. இன்ன தேதில இன்ன தொகை கட்டிட்டோம்  என. ரசீது ல ஃபிராடுத்தனம் பண்ணி டேக்கா கொடுத்த ஆளுங்களை அடி விளாசுவார் , பெல்ட்டால  அடிப்பார் . அவன் போலீஸ்க்கும் போக முடியாது, மீடியா கிட்டேயும் சொல்ல முடியாது . அடிமை மாதிரி பாண்ட் பேப்பரில் சைன் பண்ணி உழைச்சுட்டே இருக்கனும்


இப்படிப்பட்ட சின்னவர் பெண்கள் விஷயத்தில்   வீக். அரசல் புரசலா கம்பெனில பேசிக்குவாங்க  சின்னவருக்கு ஒரு பி ஏ  உண்டு. அவனுக்கு சம்பளமே 25,000 ரூபாய் தான் , ஆனா சமீபத்துல ஒரு பங்களா கட்டி கிரஹப்பிரவேசம் எல்லாம் பண்ணிட்டான் . எல்லாம்  சின்னவருக்கு மாமா வேலை பார்த்ததில் சேர்த்த தொகை மற்றும் கம்பெனியில் சில பல கணக்கு வழக்குகளில் , பர்ச்சேஷ் டிபார்ட்மெண்ட்டில்  கமிசன் வாங்கியது என கேள்வி . சின்னவர் ரூட் போடும் விதமே தனி . லைனுக்குப்போகும் எக்ஸ்க்யூட்டிவ்கள் 15 நாட்கள் , 20 நாட்கள் வெளி மாநிலத்தில் தங்கி இருக்க வேண்டி இருப்பதால் குடும்பத்தை விட்டுப்பிரிந்து இருக்க நேரிடும். அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்கிக்கொள்வதாக பேச்சு உண்டு


 இந்த விஷயம் சின்னவரின் மனைவிக்கு தெரிய வந்தது. வீட்டில் பெரிய களேபரம் வெடித்தது, சின்னவரின் மனைவியும் பெரிய இடத்துப்பெண் தான். மன்னன் விஜயசாந்தி மாதிரி  போல்டான கேரக்டர். அவர் வீட்டில் இருந்து கார் எடுத்துட்டு கம்பெனிக்கே வந்து எல்லார் முன்பும் மாமனாரை ( பெரியவரை மிரட்டி விட்டார். கையில் லைசென்ஸ் உள்ள துப்பாக்கியுடன் அவர் வந்ததும் அனைவரும் அரண்டு போனார்கள் . பெரியவ்ரின்  ரூமிற்குள்
பம்மிக்கொண்டே போனவங்களைப்பார்த்து பழக்கப்பட்டவங்க பத்ரகாளியாய் போய் தில்லாக மிரட்டியதைப்பார்த்து  மிரண்டனர். வீட்டிலேயே புருசனிடம் பேசித்தீர்க்காமல் கம்பெனிக்கு வந்தது , மிரட்டியது எல்லாமே அவரை ,  அவமானப்படுத்தவே என்று புரிந்தது


 தசரத சக்ரவர்த்திக்கு 60,000 மனைவிகள் எனக்கேள்வி. மன்னர்கள் காலத்தில் அந்தப்புரத்தில் பல அழகிகளோடு மன்னர் இருக்கும்போது , பிறகு 6 மாசம் 7 மாசம் என போருக்குப்போய்விடும்போது மகாராணிகள் என்ன செய்வார்கள்? எனற கேள்வி மன்னர்கள் மனதில் இருக்கும் தானே? பெரிய மனிதர்கள், அரசியல்  தலைவர்கள் அவங்கவங்க  சக்திக்கு தக்கபடி 3 சம்சாரம் 4 சமாச்சாரம் என வாழும்போது அவங்க டைம் டேபிள் படி  வாரத்துக்கு இரு நாட்கள் ஒரு சம்சாரம் வீட்டில் என ட்யூட்டி பார்க்கிறார் எனில் மீதி 5 நாட்கள் அவர் சம்சாரம் என்ன செய்யும்? என்ற கேள்வி , சந்தேகம் வருவது இயல்புதானே? அந்த சந்தேகம் சின்னவர் மனதில் ஒரு நாள் வந்தது


தன் கார் டிரைவர் சாவியை வீட்டில் தந்து விட்டுப்போகும்போது தன் மனைவியிடம் சிரித்துப்பேசுவதை பார்த்து விட்டார். தன் பணியாட்களை எல்லாம் ஆடு மாடு போல் கேவலமாக நடத்தும் சின்னவருக்கு அந்தக்காட்சி பெரிய அடியாக இருந்தது. மனைவியிடம் ஏதும் விசாரிக்கவில்லை. டிரைவரிடம் மூச்சுக்கூட விட வில்லை காரை திண்டல் நோக்கி விடச்சொன்னார்.  அந்த ஏரியாவுக்கு இதுவரை போனதே இல்லை , திண்டல் மலையில் முருகன் கோவில் உண்டு ஆனா  சாமிக்கும் சின்னவருக்கும் சம்பந்தமே இல்லை. டிரைவரின் மனதில் சந்தேகக்கேள்விகள்.  ஆனால் எதுவும் பேசாமல்  வண்டியை ஓட்டினான். திண்டல் தாண்டியதும் ரைட் சைடில் ஒரு கட் போகும் . அதில் திரும்பச்சொன்னார்.


 ஆள் அரவம் இல்லாத பகுதி வந்ததும் காரை நிறுத்தச்சொன்னார் சின்னவர். வண்டி நின்றதும் சின்னவர் தன் கையில் வைத்திருந்த மயக்க மருந்து தெளிக்கப்பட்ட கர்ச்சீஃபை டிரைவரின்  முகத்தில் அழுத்தினார், சில நொடிகள் போராட்டத்துக்குப்பின்  டிரைவர் மயக்கம் ஆனான். அங்கே ஒரு மரம் அறுப்பு மில் இருந்தது. லாக்டவுனால்  யாரும் இல்லை . ஓப்பன் பிளேஸ்  அங்கே டிரைவரை தூக்கிப்போய்  உடலைக்கிடத்தினார். சரக் சரக் என ரம்பத்தால் அறுத்தார். தலை தனியே வந்து விழுந்தது. அதை பத்திரமாக ஒரு கட்டைப்பையில் போட்டுக்கொண்டார் . ஜவுளிக்கடைல தர்றாங்களே அந்தக்கட்டைப்பை . , பக்கத்தில் இருந்த செங்கல் சூளையில் பாடியை போட்டு விட்டு  எரித்தார்.


 பின்  முகத்தில் மாஸ்க் கட்டிக்கொண்டு ஈரோடு பஸ் ஸ்டேண்ட் அருகே உள்ள ஆக்ஸ்ஃபோர்டு ஹோட்டலுக்கு காரை விட்டார். ரூம் எடுத்தார்.  கட்டைப்பையுடன் கோட் சூட் உடன் வந்தவரை ரிசப்ஷனிஸ்ட் விசித்திரமாக பார்த்தாள் , ஆனால் கேள் வி ஏதும் கேட்காமல்  ரூம் கீ குடுத்தாள்: ரூமிற்குள்: சென்றதும் கதவை சாத்தி வந்து கட்டிலில் அமர்ந்தார். கட்டைப்பையில் இருந்து அந்த தலையை எடுத்து டீப்பாய் மீது வைத்தார். அதையே வெறித்துப்பார்த்தவர்  ரூம் பாய் குரல் கேட்டு எஸ் கம் இன் என்றார். உள்ளே வந்த சர்வர் கம் ரூம் பாய் காபியை அவரிடம்  தந்து அந்தத்தலையை அதிர்ச்சியாகப்பார்த்தான். சின்னவர் அவனை இளக்காரமாகப்பார்த்துக்கொண்டே  என்னப்பா பார்க்கறே?  சிகப்பு ரோஜாக்கள் சர்வர் மாதிரி  என்னை மிரட்டி பணம் பறிக்கலாம்னு பிளானா?


   நக்கலாகக்கேட்டவர் காபியை குடித்தார்.. பண பல,ம் ஆள் பலம் அரசியல் பலம் இருக்கறவன் யாருக்கும் , எப்பவும் எதுக்கும் பயப்பட வேண்டாம். ஏழை சொல் அம்பலம் ஏறாது. அப்படி ஏறுச்சுன்னா அதுக்குப்பின் உன் கால்கள் உன் வீட்டுப்படி ஏறாது   என்றவன் தன் நெஞ்சை ஏதோ அடைப்பது போல், இருக்கவே தண்ணி தண்ணி என்றார். இதுவரை பம்மியது மாதிரி இருந்த சர்வர் இப்போது  குரல் உயர்த்திப்பேசினான்


 “ சார். என்னை யாரு?னு தெரியுதா? உங்க கம்பெனில ஒர்க்  பண்ற  கேஷியர் மகன் . அநியாயமா அப்பா மேல திருட்டுப்பழி போட்டீங்க . ஆனா உண்மையை உங்க ,மனைவி சொல்லிட்டாங்க . அந்த ஷார்ட்டேஜ் ஆன பணம் கிடைச்சிடுச்சு . அதை சொன்னா அவரை பயமுறுத்த முடியாது , அடிமையா நடத்த முடியாதுனு மறைச்சுட்டீங்க . அவங்க போட்டுக்குடுத்த பிளான் தான் எல்லாம். டிரைவரா உங்க கிட்டே சேர்ந்தது மேஜிக் நிபுணர், உங்க மனைவியோட கிளாஸ் மேட். இப்போ நீங்க கொலை பண்ணதா நினைச்சது எல்லாம் கற்பனை. உங்களை தன் மேஜிக்கால அப்படி நம்ப வெச்சிருக்கான். வெறும் காலி கட்டப்பை அது.


 இப்ப நீங்க குடிச்சீங்களே காபி அதுல விஷம் கலந்திருக்கு. ஊரடங்கு முடிய எப்படியும் செப்டம்பர் ஆகிடும். போலீஸ் இந்தப்பக்கம் வர வாய்ப்பே இல்லை . உங்க டெட் பாடி அதுக்குள்ள அழுகிப்போய்டும் . நான் எஸ் ஆகிடுவேன். டிரைவரா நடிச்ச மேஜிக் நிபுணர்  இந்த ஹோட்டலுக்கு தான் நீங்க ரெகுலரா பொண்ணுங்களை கூட்டிட்டு வருவீங்கனு சொன்னார். நான் சர்வரா ரெடியா காத்திருந்தேன். குட் பை... 

0 comments: